திங்கள், நவம்பர் 28, 2011

கனிமொழிக்கு பிணை:- 2G அலைக்கற்றை வழக்கின் எதிர்காலம்?

 கனிமொழிக்கு பிணை:- 2G அலைக்கற்றை வழக்கின் எதிர்காலம்?

                                                                                                       -மு.சிவகுருநாதன்

            2 G  அலைக்கற்றை  வழக்கில்  கனிமொழிக்கு தில்லி   உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கனிமொழிக்கு மட்டுமின்றி 2G  அலைக்கற்றை வழக்கில் தொடர்புடைய  கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார், பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கரீம் மொரானி, ஸ்வான் டெலிகாம் நிர்வாகி சாகித் உஸ்மான் பால்வா, குசேகான் புருட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குநர் ஆசிப் பால்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர்க்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.  முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுராவுக்கு பிணை  வழங்க சிபிஐ தரப்பு எதிர்ப்புத் தெரிவித்ததாலும் ,அவரது பிணை மனு மீதான விசாரணை நாளையும் தொடர்வதாலும் இன்று  பிணை கிடைக்கவில்லை. அவருக்கு பிணை கிடைக்குமா என்பது நாளைதான் தெரியவரும்.


       2 G  அலைக்கற்றை வழக்கில் கைது செய்யப்பட்ட யுனிடெக் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா உட்பட 5 பேருக்கு உச்ச நீதிமன்றம்  பிணை  வழங்கி உத்தரவிட்டது. இதையெடுத்து  கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் பிணை மனுக்கள் இன்று விசாரிக்கப்பட்டு  ஐந்து பேருக்கு பிணை வழங்கி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

       நீண்ட சங்கிலித் தொடரான இவ்வழக்கில் ஒரு துரும்பைத்தான் சிபிஐ கண்டுபிடித்துள்ளது. நான் ஏற்கனவே இந்த பகுதியில் குறிப்பிட்டதைப் போன்று பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ப.சிதம்பரம், முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்கள், இந்திய -பன்னாட்டுப் பெருமுதலாளிகள்,நீரா ராடியா போன்ற அரசியல் -கார்பொரேட் தரகர்கள் போன்ற பெரும்கூட்டம் இவ்வழக்கு விசாரணை வளையத்திற்குள் வராமல் இது முழுமையடையாது.   
                  2ஜி அலைக்கற்றை ஊழல் :  நடப்பது என்ன?                  http://musivagurunathan.blogspot.com/2010/12/2.html

   
       ஒரு   சிலரை காப்பாற்றுவதற்காக அரசும் சிபிஅய். யும் முயன்று வருகின்றன என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலில்லை என்பது சிபிஅய் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உறுதி செய்கின்றது. பிணை மனுக்கள் மீது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க தயாநிதிமாறன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை காப்பாற்ற பிரதமர் பெருமுயற்சி செய்வதும் அதற்கு சிபிஅய் ஒத்துழைப்பு வழங்குவதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.


       இவ்வாறு பிணை பெறுவதும் வழங்குவதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் என்றபோதும் நமது நாட்டில் நடைபெற்ற பல முன்னுதாரணங்களைக் கொண்டு பார்க்கும்போது இவ்வழக்கின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது. என்னதான் உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றாலும் புலன்விசாரணை,முதல் தகவல் அறிக்கை பதிவு போன்ற பல்வேறு விஷயங்களில் சிபிஅய் கோட்டை விடும்போது உச்சநீதிமன்றம் ஒன்றும் செய்யப்போவதில்லை.

         நம் கண்ணுக்கு தெரிந்தே நமது கனிம வளங்கள் அரசியல்வாதிகள், உள்ளூர் - வெளியூர் கார்பரேட்கள் போன்றவர்களால் கொள்ளை போகின்றன. இதைத் தடுப்பதற்கு இந்த ஜனநாயக அமைப்பில் உள்ள எந்த நிறுவனத்திற்கும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. நம் கண்ணுக்கு தெரியாத இந்த அலைக்கற்றை வளம் பல்லாண்டுகளாக ஆளும்கட்சி,எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி கொள்ளையடிக்கப்பட்டதை நாமும் சில ஆண்டுகளில் மறந்து போயிருப்போம். 

       இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் கேத்தன்  தேசாய்  வீடுகளில் 
1800 கோடி ரூபாய் ரொக்கப்பணம்,1500 கிலோ தங்கம் ஆகியன கைப்பற்றப்பட்டதே மறந்துபோன நமக்கு சுக்ராம் வீட்டில் எடுக்கப்பட்ட சில கொடிகள் எப்படி நினைவிருக்கும்? இன்னும் சில ஆண்டுகளில் கனிமொழி, ஆ.ராசா மட்டுமல்ல இதில் தொடர்புடைய அனைவரும் அதிகாரங்களை மீண்டும் சுவைப்பதை நாம் வேடிக்கை பார்க்கத்தான் போகிறோம்.

சனி, நவம்பர் 26, 2011

அணுசக்தி ஆண்குறிகள் நமக்கு வேண்டாம்!

அணுசக்தி ஆண்குறிகள் நமக்கு வேண்டாம்!
 
 - மு. சிவகுருநாதன்
(21.11.2011 தினமணியில் நெல்லை சு.முத்து எழுதிய   "அச்சம் தவிர்! ஆண்மை தவறேல்!"   என்ற கட்டுரைக்கான எதிர்வினை.)
 
ஒரு முன் குறிப்பு:-
 
அமெரிக்காவில் தகர்க்கப்பட்ட Twin Towers  முன்பு வல்லாதிக்கத்தின் ஆண்குறிகளாக வருணிக்கப்பட்டது உண்டு. கலாம் பயந்தால் வரலாறு படைக்கமுடியாது என்கிறார்.முத்து ஆண்மை பற்றியெல்லாம் எழுதி பீதியைக் கிளப்புகிறார். அணு உலை ஆதரவுக்கும்பல்களின் இந்த பேச்சுக்களைப்பார்க்கும்போது கூடங்குளம் அணு உலைகள் இரண்டும் உயரம் குறைவாக இருந்தாலும் அணு ஆதிக்க ஆண்குறிகளாகவே எனக்குத் தோன்றுகிறது.

 



 
 
 
தன்னெழுச்சியாக வீறு கொண்டெழுந்துள்ள அணு உலைக்கான எதிரான கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டத்திற்கு எதிராக அணு உலையை ஆதரிக்கும் அதிகார வர்க்கம் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது.  

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என்று சொல்லி பிரச்சினையை சற்று ஆறப்போடுவது, மறுபக்கம் அயல்நாட்டு சதி, தேசத் துரோகம், நிதி எங்கிருந்து வருகிறது என்றெல்லாம் சொல்லி விசாரணை என்ற பெயரில் மிரட்டுவது, வழக்குகள் போடுவது.

ஆய்வுக் குழுக்களில் அணுசக்தி விஞ்ஞானிகளையும் அணுசக்தி ஆதரவு விஞ்ஞானிகளை சுற்றுச்சூழல், நிலவியல், பொறியியல் என வேறு துறைகளின் சார்பில் களம் இறக்கி அணு உலைக்கு ஆதரவான ஆய்வறிக்கைகளை உருவாக்குவது ஒரு புறம் நடக்கிறது.  இதற்கிணையாக அப்துல்கலாம் போன்ற அணு உலை ஆதரவாளர்கள் மூலம் ஆய்வு (?!) 
என்ற பெயரில் போலியான ஆய்வு முடிவுகளை வெளியிட்டு மக்களின் மனத்தை திசை திருப்பி போராட்டக்காரர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்குவது  என்ற நிலையை மத்திய அரசு எடுத்துள்ளது.   இதற்கு மாநில அரசு மறைமுகமாக ஒத்துழைக்கிறது.

போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் உள்ளிட்ட பலர் மீது தமிழக அரசின் காவல்துறை பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது.  ஊடகங்களின் பெரும் ஒத்தழைப்புடன் அப்துல்கலாம் போன்றவர்களின் ஆய்வு (?!) புரட்டுப் பரப்புரைகள் முடக்கி விடப்பட்டுள்ளன.  அந்த வகையில் நெல்லை சு. முத்துவின் தினமணி கட்டுரை வெளிவந்துள்ளது.  இவர்களுக்கு அடுத்தபடியாக விரைவில் சினிமா நட்சத்திரங்கள் அணு உலையை ஆதரித்துப் பேசப் போவதையும் நாம் கண்டு களிக்கலாம்.

      அப்துல்கலாமின் கருத்துகளுக்கு தெளிவுரை எழுதும் நெல்லை சு. முத்துவின் கட்டுரை இந்துத்துவா எஸ். குருமூர்த்தியின் கட்டுரையை பிரதிபளிக்கிறது.  அணு விஞ்ஞானிகளின் உள்ளிருக்கும் இந்துத்துவா வெறி நம்மையெல்லாம் புல்லரிக்க வைக்கிறது.  தேசப்பற்று என்ற சொல்லாடல்களுக்குள்ளும் இந்து, ஆண், விஞ்ஞானி என்ற தன்னிலைகள் துருத்திக் கொண்டிருப்பதை கண்டு மனம் பதைக்கிறது. 


அறிவியலுக்கு இரண்டு முகங்கள் உண்டாம்! ஏன் பல முகங்களைக் காண முடிகிறதே! மன்மோகன்சிங், அப்துல்கலாம், சுப்பிரமணியன் சுவாமி, டாக்டர் கிருஷ்ணசாமி, புதுச்சேரி நாராயணசாமி, எஸ். குருமூர்த்தி, பொன். ராதாகிருஷ்ணன், மு. கருணாநிதி,கனிமொழி, ஜெ. ஜெயலலிதா, முத்துநாயகம், ஸ்ரீ குமார் பானர்ஜி, எஸ்.கே. ஜெயின், காசிநாத் பாலாஜி, நெல்லை சு. முத்து  போன்ற வீர வரலாறு படைக்கும் அணுசக்தி ஆண்மை முகங்களுக்கிடையேயும் சுப. உதயகுமாரன், புஷ்பராயன், மை.பா. ஜேசுராஜன், பி­ஷப் இவான் அம்புரோஸ், பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும் தளராத கூடங்குளம் பகுதி பொதுமக்கள் போன்ற எளிய, கோழையான பெண்மை முகங்களும் காணக் கிடைக்கின்றனவே.   இந்த ஆதிக்க, ஆண்மை, அணு வெறி பிடித்த முகங்கள் எதிர்கால சந்ததியை ஒட்டு மொத்தமாக பாழாக்கும் வேலையை மிகவும் சுறுசுறுப்பாக செய்கின்றன.  இவற்றை விட இன்றைய மக்களுக்காகவும் எதிர்கால சந்ததிக்காகவும் குரல் கொடுக்கும் வீர வரலாறு படைக்க முடியாத, கோழைத்தனம் மிகுந்த  பெண்மை முகங்கள்தான் இன்றையத் தேவை.

இந்தியாவில் ராக்கெட்டும், அணு குண்டும் இருந்தால் போதும் மக்களுக்கு சோறு கூட தேவையில்லையென ஆதிக்கக்கும்பல் கங்கணம் கட்டி செயல்படுகிறது.  ஹோமி ஜஹாங்கீர் பாபா, விக்ரம் சாராபாய், ராஜா ராமண்ணா, அப்துல்கலாம் போன்ற அணு விஞ்ஞானிகளும் அவர்கள் சொல்லி வருவதை கேட்டுத் தலையாட்டும் தேச விரோத இந்துத்துவா கும்பல்களின் கூட்டணைவு இன்று பெரியளவில் உருவாகியுள்ளது.  இவர்கள் அனைவரும் இன்று பெருகி வரும் கார்ப்பொரேட்களின் கைப்பாவையாக மாறிப் போயியுள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம், பன்னாட்டு திராவிட மொழியியல் நிறுவனம், குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் என எல்லாவற்றையும் அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்து விட்டதாக முத்து ரொம்பவும் வருத்தப்படுகிறார்.  இதே போல் கூடங்குளம் அணு உலை போய்விடும் என்று கதறும் இந்த அணு உலைக்காரர்கள் ஏன் கேரளாவில் அணு உலை அமைக்க திட்டமிடவில்லை என்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் செயற்கைக் கோள்களைச் செலுத்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்றவை வரிசையில் நிற்பதாகச் சொல்லும் முத்துவுக்கு `அவுட் சோர்சிங்` பற்றி தெரியாதா?  இதில் சில அறிவியல் காரணங்களும் உண்டு.  அணு உலைக்கான காரணங்கள் இதற்கு பொருந்தாது.  அணு ஆதரவாளர்கள் இப்படித்தான் தொடர்பில்லா விஷயங்களை ஒப்பிட்டுப் பேசுவதே  வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 

அணைக்கட்டுகள் அல்ல, அணு உலை மட்டுமே அபாயம் என இவரிடம் யார் சொன்னது?  அணைக்கட்டுகள் தொடர்பாக அண்டை அயலார் நம்மைக் கேட்டால் என்னாகும் என்று கேள்வி  கேட்கும் இவருக்கு முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளா இருப்பதை யார் சொல்லிக் கொடுப்பது? நர்மதை அணை, முல்லைப் பெரியாறு அணை என எந்த அணையாகட்டும் அவற்றின் உயரத்தை அதிகரிப்பதோ, பெரிய புதிய அணைகள் கட்டுவதோ பேரிடர்களை நாமே வரவழைத்துக் கொள்வதுதான்.  அணு உலை கதிரியக்க ஆபத்தைப் போலவே இந்த ஆபத்தையும் வீரமுள்ள ஆண்மைகள் மட்டுமே தாங்க முடியும்.  பிறர் சிறிய, உயரம் குறைவான அணைக்கட்டுகளை பல இடங்களில் அமைப்பது பற்றித் தான் யோசிக்க முடியும்.  அது பெண்மைத்தனமாகவோ அல்லது பேடித்தனமாகவோ இருந்து விட்டு போகட்டும். 
அறிவியலின் பணி மனித குலத்திற்கு மட்டுமல்லாது பூமிப்பந்தின் அனைத்துத் தரப்பிற்கும் சேவை புரிவது.  விஞ்ஞானிகள் என்ற போர்வையில் மதம், மொழி, இனம், சாதி, ஆண் என்று பல்வேறு பாகுபாடுகளை விதைக்கும் உங்களுக்கு, மாற்று மின்சாரம் பற்றி பேசுபவர்களை நோட்டுப் புத்தக ஆசிரியர்கள் என கேவலப்படும் திமிர் எங்கிருந்து வந்தது?  மாற்று ஆற்றல் மூலங்களை உங்களைப் போன்ற போலி விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.   மாற்று வழிகளைக் கண்டவர்கள் மனித நேயம் மிக்கவர்கள்.

சூரிய ஒளி, காற்று, கடலலை ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைவிட அணு மின்சாரம் சிக்கனம் என்று சொல்லியே  கடந்த 20 ஆண்டுகளுக்க மேலாக ரூ. 15000 கோடிகளை விழுங்கியிருக்கும் கூடங்குளம் அணு உலையிலிருந்து தயாரிக்கப் போகும் மின்சாரம் மட்டும் எப்படி மலிவானதாக  இருக்கும் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஆண்மை அதிகமாக இருக்கின்ற விஞ்ஞானிகள் காட்டு மிராண்டி, காட்டுவாசி என்றெல்லாம் கிண்டலடிப்பது மிகவும் மோசமானதாகும்.  நெருப்பைக் கையாளும் திறமை காட்டு வாசிக்கு வாய்த்தது.  அவன் அதை அழிவுக்குப் பயன்படுத்தியதில்லை.  ஆனால் உங்களுடைய அணுகுண்டுகள் எத்தகைய அமைதியை இங்கு ஏற்படுத்தியிருக்கின்றது?

அணு ஆதரவுக் கும்பல்களை 'அறிவியல் கோமாளிகள்' என்று சொல்வது கூட இவர்களின் அவதூறுப் பேச்சுக்களைவிட நாகரிகமானதுதான்.  நியாயமாகப் பார்த்தால் இவர்களை 'அறிவியல் தரகர்கள்' என்றுதான் அழைக்க வேண்டும்.

நிலநடுக்கத்தால் அதிராத பூமி அண்ட வெளியில் இல்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் இவர் அப்துல்கலாமின் திடீர் ஆய்வுக் கட்டுரையைப் படித்திருக்க வாய்ப்பில்லை போலும்! கூடங்குளம் பகுதியில் நில அதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 6 அளவிற்குதான் வரும், அதற்கு மேல் வராது என்று அப்துல்கலாம் போன்றவர்கள் எப்படி சத்திய வாக்குமூலம் தருகிறார்கள்?

அணுசக்திக்கு எதிரானவர்கள் அமைத்த குழுவில் பிரிட்டனைச் சேர்ந்தவர் இருப்பது துப்பறிய வேண்டிய அம்சம் என்று சொல்லும் இவர் நமது நாட்டு அணுகுண்டு, அணு உலை, ராக்கெட், கிரையோஜெனிக் தொழில் நுட்பம் உள்ளிட்ட பலவும் வெளிநாட்டிலிருந்து இரவல் பெறாமல் இந்துத்துவா சுதேசி தயாரிப்புக்களா என்பதை முதலில் விளக்க வேண்டும்.  ஐரோப்பாவிலிருந்து வந்த தடுப்பு மருந்துகள், தொழில் நுட்பங்கள் போன்றவற்றை இந்தியா பயன்படுத்துவதில்லை என்று இவரால் கூற முடியுமா?

அணு உலை பிரச்சினை ஒன்று உள்நாட்டு பிரச்சினை இல்லை.  இந்த அணு உலைகளை வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்கிறீர்கள்?   ஃபுகுஷிமா   அணு உலை கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டது ஜப்பான் மட்டுமா?  அணு உலைக்கு எதிரான அறிஞர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.   அவர்கள் அந்தந்த நாட்டிலும் அணு உலைக்கு எதிராக பேரராடி வருகிறார்கள்.  உங்களைப் போலல்லாமல் நடுநிலையான கருத்துக்கள் அவர்களிடம் உண்டு.  அணு உலைக்கு எதிரானவர்கள் இது ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் அணு உலைகள் என்று நாடுகளைப் பிரித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  இது ஒட்டு மொத்த அணு உலைகளுக்கான எதிர்ப்பு.  தேசப்பற்று, மதம், ஆண் போன்ற சொல்லாடல்களை எழுப்பும் எஸ். குருமூர்த்தி, சுப்பிரமணியன் சுவாமி, பொன். ராதாகிருஷ்ணன் போன்ற இந்துத்துவாவாதிகளும் விஞ்ஞானிகள் என்று சொல்லிக் கொள்ளும் அப்துல்கலாம், முத்து, முத்துநாயகம் போன்றவர்களும் மன்மோகன்,  ப. சிதம்பரம்,  நாராயணசாமி போன்ற ஆதிக்க-அதிகாரவர்க்கத்துடன் இணையும் புள்ளி இது.  இதிலிருந்தே இவர்களின் பின்னாலுள்ள அரசியலை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

சராசரி அரசியல்வாதிகளைப் போலவே  5 ஆண்டுகள் பதவியில் இருந்து விட்டு மீண்டும் அந்தப் பதவிக்கு ஆசைப்பட்ட அப்துல்கலாம் தனது பதவிக்காலத்தில்  நவீன பஞ்சசீலக் கொள்கைகளுக்காக சிறு துரும்பையாவது அசைத்ததுண்டா?  கே. ஆர். நாராயணன் போன்ற நேர்மையாளர்கள் மறுத்த சவார்க்கரின் உருவப் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்து வைத்த சாதனையைத் தவிர வேறு என்ன நடந்தது?

மாணவர்களை, இளைஞர்களை சந்திக்கிறேன் என்று போலியான சந்திப்புகளை நடத்தி பன்னாட்டு மூலதனத்திற்கும் வல்லரசுக் கொள்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க அவர்களை மூளைச் சலவை செய்ததுதான் இவரின் சாதனை.  வல்லரசு என்று வாய் கிழிய பேசிவிட்டு தற்போது உலகில் வல்லரசு என்ற கருத்தாக்கம் ஒழிந்து விட்டது என்று பேசும் கலாம் அணு உலையால் பாதிப்பு உண்டு என்று சொல்லும் நேரம் ஒன்று வரும்.  அப்போது எல்லாம் முடிந்து போயிருக்கும்.  

பிரம்மாண்டமான கற்கோயில்கள், கல்லணை போன்ற அணைகள் போன்றவற்றை அணு மின் உலைகள் மற்றும் அணுகுண்டுகளுடன்  ஒப்பீடு செய்யும் மடமையை என்னவென்பது?  அதைப் போல ராக்கெட்டுக்குத் தேவைப்படும் எரிபொருளையும், அணு குண்டு மற்றும் கதிரியக்கத்தையும் ஒப்பிட்டுப் பேசும் இவர்களிடம் பகுத்தறிவோ, பகுப்பாய்வோ இல்லை என்பது வெட்டவெளிச்சமாகிறது.  பிறகேன் நோட்டுப் புத்தகம் இல்லாத இந்த ஆசிரியர்கள் மற்றவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்?  அதனால் இவர்கள் அடையும் ஆதாயங்கள், பலன்கள் என்ன? இதற்கு தேசப்பற்று, தேச வளர்ச்சி என்றெல்லாம் சொல்லி எளிதில் தப்பிக்க முடியாது.

அணு உலை ஒன்றும் தீபாவளி வெடி அல்ல.  கொளுத்திப் போட்டுவிட்டு விஞ்ஞானிகள் ஓட முடியாது.  அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.  மிக்க சரி.  அதனால்தான் கூடங்குளம் அணு உலையைச் சுற்றி 5 கி.மீ.க்குள் அப்பாவி மீனவ, தலித், ஏழை மக்கள் குடியிருக்க, அவர்களுக்கு கதிரியக்கத்தால் எந்தப் பாதிப்பும் வராது என்று சொல்லும் விஞ்ஞானிகள் (?!) தங்கள் குடியிருப்புகளை 12 கி.மீ. தள்ளி அமைத்திருக்கிறார்கள்.  இவர்களது உண்மை முகம் இங்குதான் வெளிப்படத் தொடங்குகிறது.

மீண்டும் வரும் மற்றொரு திரைப்பட இதழ்

மீண்டும் வரும் மற்றொரு திரைப்பட இதழ்
 
(சிற்றிதழ் அறிமுகம்: 'படப்பெட்டி'- திரைப்பட இதழ்)
 
 -மு. சிவகுருநாதன்
 
 
 
2004இல் தொடங்கப்பட்ட மக்கள் திரைப்பட இயக்கத்தின் பகுதியாக வெளியான 'படப்பெட்டி' இதழ் 3 இதழ்களில் தனது முதல் சுற்றை முடித்துக் கொண்டது.  தற்போது 4-வது இதழ் வெளிவந்துள்ளது.

இசைக் கலைஞர் எம்.பி. சீனிவாசனின் அட்டைப்படத்துடன் வெளியாகியுள்ள இந்த இதழ் அவரின் திரைஇசை  மற்றும் தொழிற்சங்கப் பணிகளை விளக்கும் ஆர்.ஆர். சீனிவாசனின் 'கேனான் 5டி கேமாராவும் எம்.பி. சீனிவாசனும்' என்ற கட்டுரை அலங்கரிக்கிறது.  பெரும் பொருட்செலவில் முதலாளித்துவ திரைப்படங்கள் எடுக்கப்படுவதை எதிர்த்து குறைந்த செலவில் கோட்டுபாட்டுடன் கவித்துவமான அழகியலுடன் படங்களை உருவாக்கிய எம்.பி. சீனிவாசனை நாம் மறக்கவில்லை தொலைத்து விட்டோம் என்ற வேதனையுடன் கட்டுரை நிறைவு பெறுகிறது.

விவி­யன் மையரின் புகைப்படக்கலை குறித்து டிராட்ஸ்கி மருதுவின் கட்டுரை அவர் எடுத்த  புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளது.   மையரின் Street Photography புகைப்படங்களை ஜான் மல்லோப் ஏலமெடுத்து பத்திரப்படுத்தியதையும் பிரெஞ்சு அகதியாக அமெரிக்கா வந்த விவி­யன் மையர் வீட்டு வேலைக்குச் செல்லும்போது கூட கழுத்தில் Twin Lens மாட்டியபடி நுழைந்ததையும் இக்கட்டுரை விவரிக்கிறது.

இந்தியாவை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களின் பொதுத்தன்மைகளை விவரிக்கும் எஸ். ராமகிருஷ்ணனின் 'முதல் இந்திய நடிகன் சாபு தஸ்தகீர்' பற்றியும் அவரது நடிப்பு படங்களை எடுத்துக்காட்டி 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஹாலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டிய சாபுவை இந்திய சினிமா மறந்து போனது சாபமெனச் சொல்லி முடிக்கிறார்.

'The Other side' என்ற மெக்சிகோ திரைப்படத்தை அறிமுகம் செய்யும் பால்நிலவனின் கட்டுரை பிழைப்பு தேடி தூர தேசம் சென்று விட்டதாகக் கூறப்படும் தங்களது தந்தையர்களைத் தேடித் தவித்தலையும் குழந்தைகளின் கதைத் தொகுப்பான இப்படத்தின் கதைகளை விவரிக்கிறது.  குழந்தைகளின் வலியை உணர்வுகளை வாழ்வியல் பிரச்சினைகளை சிக்கலாக இருந்தாலும் நேரடியான மொழியில் கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் தன்மை பேசப்படுகிறது.  இங்கு விருதுகளை வாங்கிக் குவிக்கும் 'பசங்க' போன்ற திரைப்படங்களில் குழந்தைகள் பெரியவர்களளாகத்தான் பேசி வலம் வருகிறார்கள்.  தமிழ் சினிமா என்றைக்கு இவற்றையெல்லாம் களைந்து உண்மையான சினிமாவை உருவாக்கும் என்பது கனவாகவே உள்ளது.

தமிழ் திரைப்பட வரலாற்றை பாதுகாத்தல் - ஆவணப்படுத்துதல் தொடர்பான மில்லரின் கட்டுரை, இதுவரை தமிழில் பிலிம் நியூஸ் ஆனந்தன் போன்ற தனிப்பட்ட ஆர்வலர்கள் மூலமே திரைப்பட நினைவுகள் பாதுகாக்கப்பட்டு வருவதையும் அவருக்குப் பிறகு காதலுடன் இப்பணியைச் செய்ய யாரும் இல்லை என்பது ஒரு துன்பியல் செய்தி என்று குறிப்பிட்டு, சாமிக்கண்ணு  வின்சென்ட்  ஆவணக் காப்பகத்தில் அமைக்கப்பட வேண்டியவற்றை அரசுக்கு பட்டியலிட்டுக் காட்டுகிறது. 

     கா. சிவத்தம்பிக்கு எழுதப்பட்ட கோ. இரவீந்திரனின் அஞ்சலிக் கட்டுரை தமிழ் திரைப்பட ஆய்வில் அவரின் பங்கை மதிப்பிடுகிறது. தார்க்கோவ்ஸ்கியின் Sculpting in time நூலில் Time Rhythm and Editing என்ற அத்தியாயத்தின் ஒரு பகுதியை செழியன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். படத்தொகுப்பு ஒரு பாணியாக இருக்க முடியுமே தவிர அது லயத்தைத் தீர்மானிப்பதில்லை. உண்மையில் காலத்தின் இயக்கம் படத்தொகுப்பில் அல்ல படத்தில்தான் இயங்குகிறது என்று படத்தொகுப்பின் காலம் - லயம் பற்றிய விரிவான பார்வையை இம்மொழி பெயர்ப்பு நமக்குத் தருகிறது. 

            வணிக சினிமாவின் புரையோடிப் போன சூத்திரங்களுக்கு தன்னை  ஒப்புவிக்காமல் தான் விரும்பும் சினிமாவை சமரசமின்றி படைத்திருக்கும் குமாரராஜா 'ஆரண்யகாண்ட'ம் படத்திற்காக பாராட்டப்படுகிறார். (மாமல்லன் கார்த்தியின் கட்டுரை). 

                இயக்குநர் சத்யஜித்ராயின் இன்னொரு முகமான அவரது ஓவியக்கலை குறித்து ஒரு கட்டுரை பேசுகிறது. அயலகத் தமிழ் சினிமா பகுதியில் ஈழத்திரை என்ற கட்டுரை உள்ளது. மீனவர் வாழ்வைப் பேசும் செ.தெ. இமயவரம்பன் இயக்கிய 'துயரம் படிந்த கரைகள்' என்ற ஆவணப்படம் பற்றிய கட்டுரை ஒன்றும் உள்ளது. 

          கட்டியக்காரி குழு நடத்திய பாமாவின் சிறுகதையான 'மொளகாப்பொடி' நாடக நிகழ்வு குறித்த பதிவு அதன் நிறைகுறைகளை மதிப்பிடுகிறது. ஓவியர் ஜீவா, சி.டி. விற்பனையாளர் அப்சல் ஆகியோரது நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. 

         தமிழ் திரைமுகங்கள் பகுதி ராஜா சாண்டோவை அறிமுகம் செய்கிறது. ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்த ஆவணப் பட இயக்குநர் மற்றும் களப்பணியாளர் கலகக்காரன் சரத் சந்திரனுக்கு எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரை அவரது பங்களிப்புகள் பற்றிப் பேசுகிறது. 

     மொத்தத்தில் 'படப்பெட்டி' இதழ் அன்றிலிருந்து இன்று வரையுள்ள அனைத்துத் தரப்பு சினிமாக்கள் பற்றியும் பேசுகிறது. பழைய சினிமாக்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். புதிய நல்ல முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டும். தமிழ் சினிமாவின் வரலாறு காலத்தால் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்ற தன்மை மேலோங்கி இருப்பதை இதழின் மூலம் அறிய முடிகிறது. 

        திரைப்படக் கலையையும் அதன் பல்வேறு கூறுகளையும் விவரிக்கும் / விமர்சிக்கும் இம்மாதிரியான இதழ்களின் வருகை பாழாய்ப் போன தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவினால் மிகவும் நன்றாகயிருக்கும்.   

 படப்பெட்டி திரைப்பட இதழ்,
  இதழ் - 4, ஆகஸ்டு - 2011 
 விலை ரூ. 40/-  ஐந்து  இதழ் சந்தா ரூ. 200/- 
 வெளியீடு: 
 பரிசல் புத்தக நிலையம், 
 ப.எண்: 96, ஜெ பிளாக், 
 நல்வரவுத் தெரு, 
 எம்.எம்.டி.ஏ. காலனி, 
 அரும்பாக்கம், 
 சென்னை - 600 106 
 செல்: 9382853646 
மின்னஞ்சல்: padapetti@gmail.com

செவ்வாய், நவம்பர் 22, 2011

தலித் விடுதலைக்கான வழக்கு ஆவணங்கள்

தலித் விடுதலைக்கான வழக்கு ஆவணங்கள்
 
 - மு. சிவகுருநாதன்
 
 
 
(வழக்குரைஞர் பொ. இரத்தினம் தொடுத்த ‘சென்னகரம்பட்டி கொலை வழக்கு’ வழக்கு மன்ற ஆவணத் தொகுப்பு குறித்த பதிவு)

மதுரை மாவட்டம் மேலூர் சென்னகரம்பட்டியில் அம்மாசி, வேலு என்ற இரு தலித்கள் 05.07.1992 இல் ஆதிக்க சாதி வெறியர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.  அப்போது தமிழகத்தின் அதிகாரத்திலிருந்த அ.இ.அ.தி.மு.க.வின் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காமல் தன்னுடைய தலித் விரோதப் போக்கை வெளிப்படுத்தியது.

வழக்குரைஞர் பொ. இரத்தினம், வழக்கறிஞர் ப.பா. மோகன் போன்ற பல வழக்குரைஞர்கள் மிகுந்த போராட்டத்திற்கிடையே இவ்வழக்க நடத்தியுள்ளனர்.  அரசு, காவல்துறை, நீதிமன்றம் போன்ற அமைப்புகள் ஒவ்வொன்றும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தலித் மக்களின் நெஞ்சில் குத்துவதை வழக்கமானக் கொண்டுள்ளதற்கு இவ்வழக்கு ஓர் சிறந்த உதாரணமாகும்.

இவ்வழக்கின் நெடுகிலும் தலித் மக்களின் வாதைகளும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களும் காணக் கிடைக்கின்றன.  காவல்துறை மற்றும் நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு விவரங்கள் தொகுக்கப்பட்டு இந்நூல் சமூகவியல் ஆவணமாக மாறியுள்ளது.  

இந்த இரட்டைக் கொலை வழக்கில் 147, 148, 351, 506(III) மற்றும் 302 உடன் கூடிய 149 ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இந்திய தண்டனைச் சட்டம் 307, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989இன் பிரிவுகளைச் சேர்ப்பதற்கு வழக்கு தொடுத்து நீண்ட நீதிமன்றப் போர் புரிய வேண்டி வந்தது.

தலித் மக்கள் சார்பில் திரு. கே.ஜி. கண்ணபிரான் அவர்களை அரசுத் தரப்பு வழக்குரைஞராக நியமிக்க, வன்கொடுமைச் சட்டப் பிரிவைச் சேர்க்க, திரு. ப.பா. மோகன் அவர்களை சிறப்பு வழக்குரைஞராக நியமிக்க, வழக்கை கரூர் நீதிமன்றத்திற்கு மாற்ற என ஒவ்வொரு நிலையிலும் பல கட்டங்களைத் தாண்டியுள்ள இவ்வழக்கு பொ. இரத்தினம் போன்றவர்களின் உழைப்பு இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது.

சென்னகரம்பட்டி கொலைகளை அரசு எந்திரம் சரிவர கையாண்டிருந்தால் இதற்கு மிக அருகிலுள்ள மேலவளவில் அடுத்த கொலைகள் அரங்கேற்றப்பட்டிருக்காது என்பதைப் படிக்கும்போது தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிகளாக இருந்த இருபெரும் திராவிடக் கட்சிகளும் தலித் மக்களுக்கு தொடர்ந்து செய்து வரும் துரோகங்கள் வெளிப்படுகிறது. 
 
இந்த இரண்டு கொலையைச் செய்த ஆதிக்க சாதி வெறியர்கள் சட்டத்தை வளைத்து தப்புவதற்கு அரசு எந்திரம் முற்றாக உதவி செய்யும் போது சாதி வெறியர்கள் தொடர் கொலைகளில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிடுகிறது.  சென்னகரம்பட்டி, மேலவளவு கொலைகளில் வழக்குரைஞர் பொ. இரத்தினம் போன்றவர்களின் சட்டப் போராட்டங்களில்தான் கொஞ்சமாவது நீதியின் கருணை கிடைத்திருக்கிறது.  இந்தியாவில் தலித்களுக்கு எதிரான பல்வேறு வழக்குகளில் இந்நிலை இல்லாதது வேதனைக்குரிய ஒன்றாகும்.

பொ. இரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவினரின் செயல்பாட்டை, உழைப்பை பாராட்ட வார்த்தைகளில்லை.  இதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கும் வழக்குரைஞர் பொ. இரத்தினம் அவர்களின் பணிகளுக்கு உரிய மதிப்பு கிடைக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

இவ்வழக்கு குறித்த காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் முறையாக தொகுக்கப்பட்டு ஒரு சிறந்த சமூகவியல் ஆவணமாக விடியல் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.  தலித் விடுதலைக்கான பாதையில் இம்மாதிரியான நூற்களும் அணி வகுக்க வேண்டும்.

சென்னகரம்பட்டி கொலை வழக்கு
      (தொ) வழக்குரைஞர் பொ. இரத்தினம்
பக். 292.  விலை ரூ. 150
வெளியீடு:
விடியல் பதிப்பகம் & புத்தா வெளியீட்டகம்,
88, இந்திரா கார்டன் 4வது வீதி,
உப்பிலிபாளையம் - அஞ்சல்,
கோயம்புத்தூர் - 641 015,
தொலைபேசி: 0422 2576772, 94434 68758.
 

மின்னஞ்சல்:

ஜெ. ஜெயலலிதாவின் மற்றுமொரு பாசிச நடவடிக்கை

ஜெ. ஜெயலலிதாவின் மற்றுமொரு பாசிச நடவடிக்கை
- மு. சிவகுருநாதன்
 
 
 
அனைவரும் கற்பதை இந்தியாவில் வைதீகப் பார்ப்பனியம் ஏற்றுக் கொண்டதேயில்லை.  சமணமும் பவுத்தமும் கல்வியை வெகுசனமயப்படுத்தியதால் அவையிரண்டும் இந்திய மண்ணில் அழித்தொழிக்கப்பட்டன.   பிற்காலத்தில் ஐரோப்பிய கிருத்தவர்களால் இந்தியர்களுக்கு கல்வி வசப்பட்டது.  மெக்காலே கல்வித் திட்டத்தில் பல்வேறு குறைகள் இருந்தபோதும் சாமான்ய அடித்தட்டு மக்களுக்கு கல்வி என்ற வகையில் இவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

மனு, புஷ்யமித்திர சுங்கன் போன்ற வைதீகப் பார்ப்பனிய மற்றும் அருவடிக் கும்பல்களுக்கு இன்றைய அரசியலிலும் வாரிசுகள் உண்டு.   அத்தகைய வாரிசுதான் தான் என்பதை தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா பலமுறை நிருபித்து வந்திருக்கிறார்.  அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் நடவடிக்கை இதற்கோர் உதாரணமாகும்.

ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் அவர் மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகள் அவரது பாசிச மனநிலையை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துள்ளன.  பல கோடி மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றப் போவதாக அறிவித்தார்.  பழைய தலைமைச் செயலக கட்டடத்தில் இயங்கி வந்த செம்மொழி நூலகம் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கப்பட்டு விட்டது.  இங்குள்ள ஆயிரக்கணக்கான நூற்கள் பராமரிக்காமல் அழியப் போகின்றன.
சமச்சீர் கல்வியின் ஓரங்கமாக ரூ. 214 கோடி செலவில் அச்சிடப்பட்ட புத்தகங்களை முடிக்க அவசர சட்டம் இயற்றினார்.  சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என நீண்ட போராட்டம் நடத்தித்தான் சமச்சீர் கல்வி பாடநூற்களை பாதுகாக்க வேண்டி இருந்தது.  அப்போது நீதிமன்றங்கள் ஜெயலலிதாவிற்கு அறிவுரை வழங்கின.   இதில் எவற்றையும் கணக்கில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

சுமார் ரூ. 200 கோடி செலவில் சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டு தற்போது செயல்பாட்டிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உலகத்தரம் வாய்ந்த குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாக நவம்பர் 01, 2011-ல் நடந்த 11வது தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.   இந்நூலகம் சென்னை பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் (DPI) அமைக்கப்படும் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்காவிற்கு இடம் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அண்ணா நூலக இடமாற்றத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரடங்கிய முதன்மை அமர்வு தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்காலத் தடைவிதித்து நவம்பர் 03, 2011ல் உத்தரவிட்டது.                                                         
தரைத்தளத்துடன் சேர்த்து 9 தளங்களைக் கொண்ட அண்ணா நூலகக் கட்டிடத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நூற்களுடன் 1000 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் நூலகத்தைப் பயன்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.  மிகவும் பரந்த அளவில் அதிக வசதிகளுடன் இருக்கும் இந்நூலகம் சீரழிக்கப்படுவது குறித்து வேதனையடையும் உள்ளங்களுக்கு உயர்நீதி மன்றத் தடை மூலம் தற்காலிக நிம்மதி ஏற்பட்டுள்ளது.  

தனது அரசியல் எதிரி மு. கருணாநிதியால் கட்டப்பட்டது என்ற காழ்ப்புணர்ச்சி மட்டுமல்லாது அடித்தட்டு மக்களுக்கு கல்வி, படிப்பு வாய்ப்புக்களை பறிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தனது வைதீகப் பாசிசப் பண்பை வெளிப்படுத்துவதாகவே இதை எடுத்துக் கொள்ள முடிகிறது.  ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் பொறியியல் படிப்பிற்கு ஊரகப் பகுதி இட ஒதுக்கீட்டை 15 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காட்டாக உயர்த்தி இடஒதுக்கீட்டை காலி செய்தார்.  இது திட்டமிட்ட சதி.  

நூலகத்திற்கென்று தனிப்பட்ட வடிவமைப்பு கொண்ட ஒரு கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவது மக்கள் பணத்தை விரயமாக்கி கொள்ளையடிக்கும் முயற்சி என்பதில் அய்யமில்லை.  மருத்துவமனை அதுவும் குழந்தைகள் நல மருத்துவமனையை யாரும் கட்ட வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.  அதற்கு தமிழகத்தில் இடமே இல்லை என்பது போல அராஜகமாக செயல்படுவது வன்மையா கண்டிக்கத்தக்கது.   ஏற்கனவே ஒரு பயன்பாட்டிற்கென வடிவமைத்து கட்டப்பட்ட கட்டிடத்தை வேறு உபயோகத்திற்குப் பயன்படுத்துவது பல்வேறு இடையூறுகளுக்கும் செலவீனத்திற்கும் மட்டுமே வாய்ப்பாக அமையும்.

இவர்களுக்கு குழந்தைகள் மீது உண்மையான அக்கறை உண்டா என்பது நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி.  எழும்பூர் மருத்துவமனை உள்ளிட்ட எந்த அரசு மருத்துவமனைகளின் நிலையும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இங்கு அடிப்படை வசதிகள், உரிய ஆய்வு உபகரணங்கள், போதிய மருத்துவர்கள், பணியாளர்கள், மருந்துகள் என எதுவும் இல்லாத நிலை புதிதாக ஒரு மருத்துவமனையை சென்னையில் மட்டும் நிறுவி குழந்தைகளை காக்கிறோம் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை.தமிழகமெங்கும் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவமனைகளை வைத்துக்கொண்டு இம்மாதிரியான மையப்படுத்தப்பட்ட  மருத்துவமனைகளை உருவாக்குவது மிகவும் அநியாயமான செயலாகும்.
 
உண்மையில் இவர்களுக்கு அடித்தட்டு மக்கள் மற்றும் குழந்தைகள் மீது அக்கறை இருந்தால் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து அவற்றை முழு நேர மருத்துவமனையாக இயங்க நடவடிக்கை எடுக்கலாமே!  அதை விடுத்து வானுயர்ந்த கட்டிடம் மட்டும் எழுப்பி ISO 2000, ISO 2010 என்றெல்லாம் தரச்சான்று மட்டும் பெற்று உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்யாமல் உலகத்தரம் வாய்ந்த கட்டிடமாக மட்டுமே வைத்துக் கொள்ளலாமே தவிர உலகத்தரமான மருத்துவமனையாக ஒரு போதும் செயல்பட முடியாது.  முன்பு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிய வசதிகளும், பணியாளர்கள், மருத்துவப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாமல் போலியாக இடமாற்றம் செய்து கணக்கு காட்டிய நிகழ்வுகள் இவர்களால் செய்யப்பட்டது நாம் எளிதில் மறந்து விடக் கூடியதல்ல.
 
மேலும் மருத்துவமனை என்று சொன்னால்தான் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்ற மொண்ணையான புரிதல் மிகவும் அபத்தமானது.  அடுத்த குழந்தை பிறந்தால் முதல் குழந்தையே அக்குழந்தை பார்த்துக் கொள்ளும் நிலையில் இருக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் ஆடு, மாடுகள் வழங்கப்படும் போது அது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் என்ற எளிய அம்சம் இவர்களுக்கு தெரியாததல்ல.   அடித்தட்டு மக்கள் எந்நாளும் கல்வி பெற்று விடக்கூடாது என்ற கேவலமான எண்ணமே இதற்குக் காரணமாகும்.

சமச்சீர் கல்வி பாடநூற்கள் உயர் / உச்சநீதி மன்றங்களின் மூலம் உறுதியானதைப் போல அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நீதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.  இருப்பினும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், பொது நன்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய செயல்களுக்கு நீதிமன்றத்தை மட்டும் நம்பியிருப்பது சரியாக இருக்காது.  ஏற்கனவே பெற்ற பல படிப்பினைகளிலிருந்து இவர்கள் ஒரு போதும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் மக்கள் எழுச்சியே நிரந்தரத் தீர்வாக அமையும்.  அதன் மூலமே இவர்களின் அத்துமீறிய அதிகாரங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கான போராட்டம்

ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கான போராட்டம்
 
 - மு. சிவகுருநாதன்
 
 
 
அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்களால் நடத்தப்பட்ட கார்ப்பரேட் உண்ணாவிரதப் போராட்டங்களை ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதியும் ஒளிபரப்பியும் இன்னமும் ஓயாமல் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.  இதுவரையில் அணு உலைக்கு எதிரான பல்வேறு  போராட்டங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் போராடுகிறார்கள் என்று வாய் கூசாமல் கேட்டும் பலரின் பேச்சுக்கனை செய்தியாக்கி மகிழ்கிறது.  மேலும் செப்டம்பர் 11, 2011  முதல் இடிந்தகரையில் தீவிரமாக தொடரும் அறப்போராட்டங்கள் பற்றி ஏதோ ஒப்புக்கு மட்டும் செய்திகள் வெளியிடுகின்றன.  ஊடகங்களின் இந்த ‘கார்ப்பரேட்’ தன்மைக்கு மக்கள் இவற்றை புறக்கணிக்கும்போதுதான் விடிவு கிடைக்கும். 

“கூடங்குளம் அணு உலை வேண்டாம்” என்பதே போராட்டக்காரர்களின் ஒரே கோரிக்கை.  ஆனால் இந்த ஒற்றைக் கோரிக்கையை திரித்து “மக்கள் அச்சப்படுகிறார்கள். அவற்றைப் போக்க வேண்டும்” என்று மத்திய மாநில அரசுகளும், ஊடகங்களும், அப்துல்கலாம் போன்ற அணு ஆயுத வல்லரசு விரும்பிகளும் மலிவான உத்திகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

இப்பிரச்சினையில் மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை பணிகளை நிறுத்தி வைக்குமாறு தமிழக அமைச்சரவை மத்திய அரசுக்குத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதும் இவற்றிற்கென மத்தியிலும் மாநிலத்தின் இருவேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதும் விஞ்ஞானி என்று ஊடகங்களால் நம்ப வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒரு மணி நேரத்தில் அணு உலையை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பு குறித்து திருப்தியடைந்து அறிக்கைகள் அளிப்பதும் பாதிக்கப்படும் மக்களின் அடிப்படைக் கோரிக்கையை நிராகரிப்பதாகவே உள்ளது.   மத்திய அரசு குழு அப்துல் கலாமின் அறிக்கை போன்ற முன்னமே தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையைத் தான் அளிக்கப் போகிறது என்பது உறுதி.  இக்குழுவில் அணுசக்தி ஆதரவாளர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்.  எனவே மாற்றுக் கருத்திற்கு வேலையில்லை.

மாநில அரசு அமைத்திருக்கும் குழுவில் அணு உலை எதிர்ப்பாளர்கள் இடம் பெற்றிருந்தாலும் அவர்களது கருத்துகளுக்கு உரிய மதிப்பு கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை.  போராட்டக்காரர்கள் அமைத்துள்ள 21 அறிஞர் குழு அளிக்கும் அறிக்கையையும் மாநில அரசு குழுவின் அறிக்கையையும் மத்திய அரசு ஏற்கப் போவதில்லை.  அப்துல் கலாம் சொன்னதையே மத்திய குழுவும் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றும் வேலையை மத்திய அரசு செய்யப்போகிறது. 

அணு உலை பாதுகாப்பு, கதிரியக்கம், கழிவுகள் போன்றவை குறித்த வினாக்கள் ஒரு புறம் இருக்கட்டும்.  காங்கிரஸ் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் ஏன் அணு உலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற போராட்டக்காரர்களின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.  மேற்கு வங்கம் ஹரிப்பூர் அணு உலை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் மம்தா பானர்ஜியின் துணிவு ஏன் ஜெ. ஜெயலலிதாவிற்கு வரவில்லை?

கூடங்குளம் அணு உலை பிரச்சினை தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு கேலிக்குரியதாக உள்ளது.  ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வும் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அணு உலை பிரச்சினையில் அப்துகலாம் நிலைப்பாட்டை வழிமொழிபவை.  ஜெயலலிதாவின் தீர்மானம் வேண்டா வெறுப்பாக வேறு வழியின்றி செய்யப்பட்டது.  தி.மு.க.வின் அணுசக்தி ஆதரவுக் குரல் அனைவரும் அறிந்த ஒன்று.  அணுசக்தியை ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழியின் முதல் உரை மிகவும் பிரசித்தம்.  தே.மு.தி.க.விற்கு எதைப்பற்றியும் கொள்கை ஒன்றும் கிடையாது.  உள்ளூர் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் தற்போது மக்கள் பக்கம் இருப்பதாகத் தெரிகிறது.  இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 

சோவியத் யூனியனிலிருந்து வரும் இந்த அணு உலைகளை இடது சாரிகள் எதிர்க்கத் தயாராக இல்லை.  அமெரிக்காவிலிருந்து அணு உலை வந்தால்தான் இவர்கள் எதிர்ப்பார்கள்.  அணு உலை பற்றிய இவர்களது நிலை மிகவும் கேவலமாக உள்ளது.  இந்த அணு உலை ஆதரவுக் கும்பலுக்கு லேட்டஸ்ட் வரவு புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் மக்களால் நடத்தப்படுவது அல்ல.   வெளிநாட்டினரின் தூண்டுதலின் பேரில் என்.ஜி.ஓ.க்களால் நடத்தப்படும் போராட்டம் என்ற அரிய கண்டுபிடிப்பை டாக்டர் கிருஷ்ணசாமி நிகழ்த்தியிருக்கிறார்.  மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கெதிரான இவரது தாமிரபரணி போராட்டம் யாருடைய தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்டது என்பதை இவர் விளக்கினால் நன்றாகயிருக்கும்.

கூடங்குளம் / இடிந்தகரை உண்ணாவிரதம் இருப்போர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் அல்லது குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்க வேண்டும் என்கிறார் சுப்பிரமணியம்  சுவாமி.  அணு மின் நிலையத்தை மூடக் கோருதல் தேச விரோதக் கோரிக்கையாம்!  சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்த கடலுக்கடியில் ராமர் பாலம்  என்று உச்சநீதிமன்றம் சென்ற இந்த சு. சுவாமி அணுமின் நிலையத்தை ஆதரிப்பதன் மூலம் தானொரு பன்னாட்டு கை கூலி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.  

மத்திய அரசும் இந்தியாவிற்கு அணு உலைகளை விற்கும் பன்னாட்டு கம்பெனிகளும் இப்போராட்டத்தை ஒடுக்க பல்வேறு தரப்பிலிருந்தும் லாபி செய்யும் வேலைகளை மேற்கொண்டுள்ளன.  அதில் அப்துல்கலாமின் ஆய்வு - அறிக்கை போன்ற அட்டூழியங்களும் ஒன்று.

நாட்டிலுள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தபோதிலும் இந்த இடங்களில் நில நடுக்கம் நிகழாது என்று கூறி விட முடியாது என்று சொல்லும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் சசிதர் ரெட்டி கூடங்குளம் அணு மின் நிலையத்தை மறு ஆய்வுக்குட்படுத்திய போது அங்க மிகச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதாகவும் முரண்படப் பேசுகிறார்.

ஐ.நா. சபையில் சர்வதேச அணுசக்தி முகçமையின் ஆண்டறிக்கை கூட்டத்தில் உரையாற்றிய ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம் சந்த் குப்தா, சர்வதேச அணுசக்தி முகமையின் செயல்பாடுகளை பாராட்டியதோடு அணு உலை பாதுகாப்பிற்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதையும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அணு உலை மற்றும் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அணு உலை ஆகியன அரசு வகுத்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்வதாக உள்ளன என்று பெருமை பொங்க குறிப்பிடுகிறார்.  மேலும் 2020-ல் 20000 மெகாவாட்டாக இருக்கும் இந்திய அணுமின் உற்பத்தி 2030-ல் 60000 மெகாவாட்டை எட்டும் என்று இந்திய அதிகாரிகள் எழுதிக் கொடுத்த உரையை வாசித்துள்ளார்.

இங்கு ஒரு இடையீடு.  இந்தியாவில் தற்போதுள்ள சுமார் 20 அணு உலைகளிலிருந்து உற்பத்தியாகிற அணு மின்சக்தி 4780 மெகாவாட் ஆகும்.  மொத்த இந்திய மின்னுற்பத்தியில் இது 2.7 விழுக்காடாகும்.  2030க்குள் இதை 9 விழுக்காடாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.  அப்படி பார்த்தாலும் சுமார் 14000 மெகாவாட் இலக்கு என்று வைத்துக் கொண்டாலும் இன்னும் 40 அணு உலைகளை அமைக்க வேண்டும்.  இதை எழுதிக் கொடுத்தவர்களுக்கும், வாசித்தவருக்கும் இதிலுள்ள என்ன உண்மைகள் தெரியும்?  அப்துல்கலாம் போன்ற ‘மாபெரும் விஞ்ஞானி’களும் அணுசக்தி ஆதரவாளர்களும் அளிக்கும் புள்ளிவிவரங்களின் கதை இப்படித்தான் இருக்கிறது!

இந்தியா போன்று அணு வெறி கொண்டலையும் ஒரு அண்டை நாட்டு உதாரணம்.  பாகிஸ்தான் அணு ஆயுத நிலைகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அமெரிக்க போன்ற நாடுகளோ தீவிரவாதிகளோ இவற்றை எளிதில் அணுக முடியாதென பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் மு­ராப் கருத்து தெரிவித்துள்ளார்.  நில நடுக்கம், சுனாமி போன்ற எவற்றாலும் கூடங்குளம் அணு உலை பாதிப்படையாது என்று சொல்லும் அப்துல்கலாமின் கூற்றுக்கு இணையாதுதான் இதுவும்.

அணுசக்தி தளவாடங்கள் தயாரிக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் மத்திய அரசிற்கும் முகவராக செயல்படும் ‘உலகப் பெரும் விஞ்ஞானி’ அப்துல்கலாமின் உளறல்களுக்கு வருவோம்.  சில மணி நேரங்களிலேயே கூடங்குளம் அணு உலையை ஆய்வு செய்து அப்துல்கலாம் வெளியிட்ட அறிக்கையை நவம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் நாளிதழ்களின் பக்கங்களை நிறைத்தன.  சுமார் 40  பக்கங்கள் கொண்ட அறிக்கை அவரது இணையதளத்தில் (www.abdulkalam.com) கிடைக்கிறது.  இதைப் படிக்கும் போது அப்துல்கலாம் மீது இதுவரையில் கட்டமைக்கப்பட்ட போலியான பிம்பங்கள் கழன்று விழ பன்னாட்டு கம்பெனிகளுக்கும் வல்லரசுகளுக்கும் கை கட்டி சேவகம் புரியும் முகவர் பொறுப்பு வெளிச்சத்தில் வந்ததில் இடிந்தகரை - கூடங்குளம் மக்களுக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

இந்தியாவில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள 20 அணு உலைகள் மூலம் 4780 மெகாவாட் மின்சாரம் மட்டுமே (இந்திய மொத்த மின் உற்பத்தியில் 2.7 விழுக்காடு)  உற்பத்தி செய்யப்படும் போது கூடங்குளத்தின் இரண்டு அணு உலைகள் மூலம் 2000 மெகாவாட்டும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின்சாரமும் உற்பத்திச் செய்யப்படும் என்ற பெரும் பொய்யிலிருந்து இந்த அறிக்கை தொடங்குகிறது.  அத்துடன் ரூ. 20,000 கோடி முதலீடு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரப்போகிறதாம்!  இது யாருடைய நலன்களுக்கு?  இதனால் அப்பகுதி மக்களுக்கு என்ன பயன்?

அணு சக்தி எதிர்ப்பை மூன்று விதமாகப் பார்க்கும் கலாம் பூகோள - அரசியல் சக்திகளின் வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளைந்த விளைவு என்கிறார்.  இந்த வர்த்தகப் போட்டியின் காரணமாகவே போராட்டக்காரர்களுக்கு வெளியிலிருந்து பணம் வருவதாக தங்கபாலு, நாராயணசாமி, ஞானதேசிகன், டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் குற்றம் சாட்டுகிறார்கள்.  வாதத்திற்காக இதை ஒத்துக்கொள்வோம்.  இதே வர்த்தகப் போட்டியின் மூலம் அணுசக்தி மற்றும் பன்னாட்டு மூலதன ஆதரவாளர்களாக பிரதமர் மன்மோகன் சிங், மான்டேக் சிங் அனுவாலியா, ப. சிதம்பரம், சோனியா காந்தி, அப்துல்கலாம் போன்றவர்கள் இதனால் அடைந்த ஆதாயங்கள், லாபங்கள் பற்றியும் நாம் பேசியாக வேண்டும்.

நம் நாடு, நம் மக்கள் நலன்களை விட பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களே முக்கியம் என வாதிடும் அப்துல்கலாம் போன்றவர்களின் தாக்கம் எவ்வளவு கேவலமானது என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.  சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் சுயமரியாதையோடு பாமர மக்களின் தேசப்பற்று குறித்து நாட்டை விலைபேசும் இவர்களுக்கு பேச அருகதையில்லை.

அணு சக்தி துறைக்கும் தனக்கும் இருக்கும் நீண்ட காலத் தொடர்பு பற்றி பேசும் கலாம் பல ஆண்டு அணு உலைகளை ஆய்வு செய்ததாக கூறுகிறார்.  அணுக் கதிர்வீச்சு, தொடர் கதிரியக்கப் பாதிப்புகள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.  போபால் யூனியன் கார்பைடு ஆலையில் மைத்தில் ஐசோ சயனைடு வி­ஷவாயு கசிவினால் ஏற்பட்ட பாதிப்பை இவர் ஆய்வு செய்ததுண்டா?  இன்று கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் போராட்ட உணர்வை அடக்க மறைமுக லஞ்சம் அளிக்கும் "கூடங்குளம் புரா திட்டம்" பற்றிப் பேசும் கலாம் போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேசியதுண்டா?  20 ஆண்டுகள் அப்பகுதிக்கு எதுவும் செய்யாமலிருந்து விட்டு போராட்டம் என்றதும் ரூ. 200 கோடியில் திட்டம் என்ற நரித்தந்திரம் ஏன்?  போபால் வி­ வாயுக் கசிவு போன்றவற்றையும் அணு உலைகளில் அடிக்கடி நிகழ்ந்த விபத்துக்களையும் மிகச் சாதாரணமானவை என்று ஒதுக்கிவிடும் மடமை கலாமுக்கு வேண்டுமானால் சாத்தியப்பட்டிருக்கலாம்.  அங்கு வாழும் அப்பாவி மக்களின் வாழ்வாதாரம்?

கரிகாலன் - கல்லணை, ராஜராஜன் - தஞ்சை பெரிய கோயில், நெல்லையப்பர் கோயில் போன்றவை நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்படவில்லை என்று பட்டியலிடும் கலாம் இவற்றின் அழிவும் கதிரியக்க / அணுக்கழிவு பாதிப்பையும் ஒன்றாகப் பார்ப்பது அவரது அறிவீனத்தைக் காட்டுகிறது.  பூகம்பப் பகுதி (Earthquake Zone) என்பதும் நிரந்தரமான ஒன்றல்ல.   நிலவியல் பலகைகளில் ஏற்படும் மாறுபாட்டால் மாறக்கூடியதுதான்.  அப்துல்கலாம் போன்ற பெரிசுகள் தனக்கு சம்பந்தமில்லா புவியியல் மற்றும் நிலவியல் துறைகள் மீது கருத்துகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.   நீண்ட நாட்களுக்கு முன்பு இப்படித்தான் கங்கையையும் காவிரியையும் இணைக்க வேண்டும் என்று சொல்லி வந்தார்.  இதிலிருந்தே இவரது புவியியல் அறிவு நன்கு புலப்படும்.

புற்று நோய்க்கான மருத்துவ சிகிச்சையைக் கண்டுபிடித்து இரண்டு நோபல் பரிசுகள் வென்ற மேரி கியூரியின் சாதனைகளை இங்குள்ள அணு உலை வேதனைகளுடன் ஒப்பிடுவது எவ்வளவு பெரிய அபத்தம்.  பயந்தால் வரலாறு படைக்க முடியாதாம்!.  மேடம் கியூரி தனது ஆராய்ச்சிகளின் போது ஏற்பட்ட கதிரியக்க பாதிப்புகளினால் புற்றுநோய் வந்து மாண்டு சாதித்ததைப் போல மன்மோகன் சிங், அப்துல்கலாம் உள்ளிட்ட அணுசக்தி ஆதரவாளர்களும் அணு உலைகள் இருக்கும் பகுதிக்கே தங்களது குடியிருப்பை மாற்றிக் கொண்டு சாதனை புரியலாமே!.  ஏன் மறுக்கிறார்கள்?

பூகம்பப் பகுதி 4 (Earthquake Zone4) தில்லியில் அணு உலை அமைக்க முடியாது என்ற கலாமின் வாதத்தை ஒத்துக் கொள்வோம்.  தாரப்பூர், நரோரா, கைகா, கூடங்குளம், கல்பாக்கம் போன்று ஏதேனும் ஒரு அணு உலைப் பகுதியில் அணு சக்தி ஆதரவாளர்கள் குடியிருப்பை மாற்றியமைத்துக் கொண்டு மேரி கியூரி போல் சாதனை புரியவிடாமல் இவர்களைத் தடுப்பது எது?  இவர்களும் பயந்தால் பிறகு யார்தான் வரலாறு படைப்பது?  போராட்டம் நடைபெறும் கூடங்குளத்தில் கூட அணுசக்தி அதிகார வர்க்கம் 12 கி.மீ. தள்ளி தங்களது குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு  உள்ளது கவனிக்கத்தக்கது.
(நன்றி: அ. மார்க்ஸ்) http://amarx.org/?p=187   இவர்கள்தான் பயப்பட்டால் வரலாறு படைக்க முடியாதென தத்துவம் பேசுகிறார்கள்.  கேவலமாக இல்லை?

அணு உலைக்கு 5 கி.மீ. சுற்றளவில் 20000 மக்கள் தொகைக்கு மேல் இருக்கக் கூடாது என்பது வழிகாட்டு நெறிமுறைதானே தவிர, கட்டாயம் இல்லையாம்!  எனவே நீங்கள் அந்தப் பகுதியில் பெரிய மாட மாளிகைகள் கூட அமைத்துத் தங்கலாம்தானே!  உடனே அதைச் செய்து விட்டு பிறகு உங்கள் வாய் வீச்சைத் தொடங்குங்கள்.   இது டான்சி வழக்கில் ஜெயலலிதாவிற்க நீதிமன்றம் சொன்னதை நினைவூட்டுகிறது.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட அணு உலை உலகில் வேறு எந்த முன்னணி அணு சக்தி உற்பத்தி நாடுகளிலும் இல்லாத உன்னத தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஒத்துக் கொள்ள நாம் கேனையர்களாக இருக்க வேண்டும்.

கூடங்குளம் அணு உலை 6 ரிக்டர் அளவுகோள் அளவு நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியதாம். இதற்கு மேல் வந்தால் என்ன செய்வதென்றால் வரவே வராதாம்.  இதைச் சொல்பவரை விஞ்ஞானி எனச் சொல்லலாமா?

அணுஉலைக் கழிவுகள் என்பவை கதிர்வீச்சை ஏற்படுத்தும் எரிபொருள் அல்ல.  இதை 7 ஆண்டுகள் பாதுகாத்து வைத்திருந்து மீண்டும் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.  இதற்கு ஆகக்கூடிய செலவுகள் எவ்வளவு? சுற்றுச் சூழலில் அணுக்கதிர் வீச்சு ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று சொல்லும் கலாம் இது குறித்து ஆய்வுகள் செய்ததுண்டா?  வெளியாகியிருக்கின்ற ஆய்வு முடிவுகளை படித்ததுண்டா?

அணு உலைகளை குளிர்விக்கப் பயன்படும் நீர் 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகம் இருக்கலாம்.  ஆனால் 5 டிகிரி செல்சியஸ் அளவிற்குதான் அதிகமாக உள்ளது. எனவே மீன் வளத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்கிறார்.   இந்தியாவில் கோடை காலங்களில் வெப்பம் தாங்காமல் பலர் இறப்பது அன்றாட நிகழ்வு.  கோடைகாலத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும்போது என்ன ஆகும் என்பது கூட தெரியாத ஒருவருக்கு எதற்கு விஞ்ஞானி பட்டம்?  ஊடகங்களால் வளர்த்து விடப்பட்ட கலாமின் பிம்பம் நொறுங்குவதற்கு கூடங்குளமே சிறந்த உதாரணம்.

இன்றைக்கு இந்தியாவில் 40 ஆண்டுகளாக 20 அணு உலைகள் மூலமாக சுத்தமான, சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் அணு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்று கலாம் சொல்வது எவ்வளவு பெரிய பொய் - பித்தலாட்டம்?  அணுகுண்டு வெடிப்பினால் ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்பு மரபணுவைப் பாதித்து அடுத்த தலைமுறையை பாதிக்காது எனவும் கட்டுப்படுத்தப்படாத அணுக்கதிர் வீச்சும் தலைமுறை தலைமுறையாக பாதிக்கும் என்ற கருத்திலும் உண்மையில்லை என்று அடம்பிடிக்கும் அப்துல்கலாமுக்கு கதிரியக்கத் தனிமங்களின் அரை ஆயுட்காலம் குறித்து எதுவும் தெரியவே தெரியாதா?  அணு ஆயுத - அணுசக்தி வெறியும் பன்னாட்டுக் கம்பெனிகளின் கை கூலிகளாக மாறிப் போன நிலையுமே இவர்களை இவ்வாறு பொய்யுரைக்க வைக்கிறது.

நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் போது கார்பன் - டை - ஆக்சைடு வெளியேறி சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.  அணுமின்சக்தியில் கார்பன் - டை - ஆக்சைடு வெளியேற்றப்படுவதில்லை.  எனவே இது சுத்தமானது என்பது கலாமின் வாதம்.  வளிமண்டலத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள கார்பன் - டை - ஆக்சைடை எடுத்துக் கொள்ள தாவரங்கள் அதிகம் இருந்தாலே போதும்.  ஆனால்  அணுக் கதிரியக்கத்தைத் தடுக்க யாராலும் முடியாது என்பது கலாமுக்குத் தெரியும்.  அவரது பன்னாட்டு கம்பெனிகளின் விசுவாசம் கண்ணை மறைக்கிறது.கதிரியக்கத்தை அப்படியே உறிஞ்சி கொள்ள ஏதேனும் புதிய தாவர வகையை கண்டுபிடித்து வைத்திருக்கிறீர்களா மிஸ்டர் கலாம்?

சூரிய ஒளி, காற்றாலை மின்னுற்பத்திக்கு ஆகும் செலவை விட குறைந்த செலவில் அணு மின்சாரம் கிடைக்கிறது என்பது அரை வேக்காட்டுத்தனமான வாதம்.  இந்தியாவில் இதுவரை 40 ஆண்டுகளில் 20 அணு உலைகளுக்கு எத்தனை லட்சம் கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளன?  இவர்கள் சொல்வது போல் யுரேனியத்தில் 75% உபயோகப்படுத்துவதாக வைத்துக் கொண்டாலும் மீதியுள்ள 25% கழிவுகளை பல்லாயிரம் ஆண்டுகள் சேமித்துப் பாதுகாக்க ஆகும் செலவுகள் எவ்வளவு?  இவற்றை யார் தலையில் சுமத்துவது?  இவை அனைத்தும் தெரிந்தும் தெரியாதது போல் ஏதோ அணு மின்சாரம் ஓசியில் கிடைப்பது போல் கதையளப்பது மிகவும் அபத்தம்.

ஜெர்மனி 2022க்குள் அணு மின் உலைகளை மூட முடிவு செய்திருப்பதன் உண்மைக் காரணத்தை கலாம் விண்டுரைக்கிறார்.  அந்த நாட்டில் யுரேனியம் தீர்ந்து விட்டதாம்.  இறக்குமதி செய்தால் விலை அதிகமாகுமாம்.  எனவேதான் இந்த முடிவு என்கிறார்.   நம்மிடம் மட்டும் போதுமான யுரேனியம் இருக்கிறதா என்ன?  யுரேனியத்திற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிடம் ஏன் கையேந்துகிறோம்.  அவர்கள் நமக்கு யுரேனியத்தை இலவசமாகவாகக் கொடுக்கிறார்கள்?  நமக்கு மட்டும் இறக்குமதி செய்தால் செலவே ஆகாதா?

ஜெர்மனியைப் போல் இந்தியாவும் அணு உலைகளை மூட வேண்டும் என்று சொல்வது இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்கிறார் கலாம்.  உண்மையில்  இதற்கெல்லாம் கமிஷ­ன் வாங்கி ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்குத் தான் உதவுகிறதே தவிர உண்மையான இந்தியாவின் வளர்ச்சிக்கு அல்ல என்பதை கலாம் எந்நாளும் உணரப் போவதில்லை.

அமைப்பாக திரளாத அணு உலை எதிர்ப்பு தொடக்கம் முதலே இருந்து வந்திருக்கிறது.  அணு உலை ஆதரவாளர்கள் இத்தனை ஆண்டுகளாக அணு உலையை ஏன் எதிர்க்கவில்லை?   ரூ. 15000 கோடி செலவாகிவிட்டது என்று கேட்கிறார்கள்.  அணுக் கழிவுகளுக்காக இனி செலவிடப் போகும் தொகையையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.  அதன் பிறகு மலிவு விலையில் அணுமின் சக்தி எப்படி வருமென கணக்குப் போட்டு பாருங்கள்.  மக்கள் திரண்டு பல மாதங்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்றவுடன் ரூ. 200 கோடி செலவில் 10 அம்சத் திட்டங்களை யோசனைகளாக முன் வைக்கும் கலாம் இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்?

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்குழுவிற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று கேள்வி கேட்டு விசாரிக்கப் போவதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் மிரட்டி வருகிறார்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள   ஞானதேசிகன் தன் பங்குக்கு இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.  அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரவும் சட்டமன்ற உறுப்பினர் பதவி நிலைக்கவும் பல தலித்துகளின் உயிரை பணயம் வைக்கத் துணிந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்று புகார் கூறியுள்ளார்.  இதைப் பற்றி விசாரிக்க வேண்டாமென்று நாம் சொல்லவில்லை.  அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்களுக்கும் அணு உலையை ஆதரித்துத் தீவிரமாக இயங்கி வருபவர்களுக்கும் பணம் எங்கிருந்து வருகிறது என்பதையும் சேர்த்து விசாரிக்க வேண்டியது அவசியமாகும்.

அணு ஆக்கப்பணிகளுக்கே என்பது இவர்களின் வெறும் வாய் வீச்சு என்பது நவம்பர் 17, 2011 தினமணியில் வெளியான எஸ். குருமூர்த்தியின் கட்டுரையைப் படித்தால் விளங்கும்.  அணு மின்சாரம் மட்டுமல்ல; அணு ஆயுதமும் தேவை என்கிறார் குருமூர்த்தி.  இவர் வெளிப்படையாகச் சொல்வதை கலாம் போன்ற பிறர் பூடகமாக சொல்கின்றனர்.  இங்கு அணுமின்சாரம் தயாரிக்கப்படுவதாகச் சொல்லிக் கொண்டு யுரேனியத்தை வாங்கிக் குவித்து அணு ஆயுத வல்லமையைப் பெருக்க மறைமுகமான செயல்களில் இந்திய அரசு ஈடுபடுகிறது என்பதே உண்மை.  எஸ். குருமூர்த்தியின் தினமணி கட்டுரையும் அப்துல் கலாமின் ஆய்வறிக்கையும் (!?) ஒரே விஷ­யத்தைத்தான் சொல்கின்றன.  இதுவே குருமூர்த்திகளும், கலாம்களும் இணையும் இடம்.  ஒரே வேறுபாடு கலாம் அணு எதிர்ப்பிற்கு மதச்சாயம் பூசவில்லை.  அவ்வளவுதான்.

மேகாலயா மாநிலம் காஸி மலைப் பகுதியில் யுரேனியம் வெட்டியயடுப்பதை எதிர்ப்பவர்கள், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் ஆகிய இரண்டின் பின்னணியில் கத்தோலிக்க கிருஸ்தவ மதம் இருக்கிறது என்று குருமூர்த்தி கண்டுபிடிக்கிறார்.  வடகிழக்கு மாநிலங்களில் அதிகப்படியான கிருஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.  அதைப் போலவே கூடங்குளம் அணு உலையால் பாதிக்கப்படும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களில் கிருஸ்தவர்கள் இருக்கிறார்கள்.   அம்மக்களிடமிருந்து வந்த பாதிரியார்கள் அம்மக்கள் பக்கம் இருப்பதை மதச்சாயம் பூசும் குருமூர்த்திகளின் மதவெறித்தனம் மிகவும் இழிவானது.  உங்களுக்கு யுரேனியம் விற்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் கிருத்தவம்தானே பெரும்பான்மையாக இருக்கிறது.  அணு உலைகளையும் யுரேனியத்தையும் கிருஸ்தவர்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்யலாம்.  அவர்களிடமிருந்து வாங்குவது குறித்து குருமூர்த்திகளுக்கு எவ்வித குற்ற உணர்வும் இல்லை.  ஆனால் இவற்றால் பாதிக்கப்படும் பழங்குடி, தலித், மீனவ மக்கள் கிளர்ந்து போராடும்போது இப்போராட்டத்தின் பின்னணியில் கிருஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்று கூக்குரல் எழுப்பி மதவெறியூட்டுவது மட்டுமே இவர்களுக்கு தெரிந்த கலை.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சாதி, மதம் பாராது தன்னெழுச்சியாக பாதிக்கப்படும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக இணைந்து பல மாதங்களாக மத்திய - மாநில் அரசுகளுக்கு சவாலாக இருந்து வருகிறார்கள்.  இந்த மக்கள் எழுச்சியை பிளவுபடுத்துவதற்காக இந்துத்துவா கையிலெடுக்கும் ஆயுதமே போராட்டத்தின் பின்னணியில் கிருஸ்தவம் இருப்பதைச் சொல்லும் குருமூர்த்தியின் கட்டுரை.

இப்போராட்டத்திற்கு வைகோ, இராமதாஸ், தொல். திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்களும் அவர்களது கட்சியும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.  இந்தியாவெங்கும் உள்ள மனித உரிமை சமூக ஆர்வலர்கள், படைப்பாளிகள் போராடும் இம்மக்களின் பக்கமே உள்ளனர்.  அணு சக்தி ஆதரவாக இருகும் கட்சிகளும் அதன் தலைவர்களும் இம்மக்களிடமிருந்து விரைவில் விரட்டப்படுவார்கள் என்பதில் அய்யமில்லை.

அணு உலை ஆதரவாளர்களுக்கு சாமரம் வீசும் ஊடகங்களுக்கு உதாரணமாக ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி மற்றும் மாலன் ஆசிரியராக இருக்கும் ‘புதிய தலைமுறை’ இதழைக் குறிப்பிடலாம்.  கல்பாக்கம் அணு உலை கதிர்வீச்சுப் பாதிப்பின் ஒரு விளைவாக பலருக்கும் ஆறாவது விரல் இருப்பதாக கல்பாக்கம் மரு. புகழேந்தியின் ஆய்வு சொல்கிறது.  புதிய தலைமுறை செப்டம்பர் 29, 2011 இதழில் விருந்தினர் பக்கத்தில் அணு உலையை ஆதரிக்கும் சி. ஜெயபாரதன் என்பவர் தான் இந்தியாவிலும், கனடாவிலும் 45 ஆண்டுகள் பணியாற்றியதாகவும் தன்னுடைய மகளும் மருமகனும் அணு உலைகளில்தான் பணி புரிகின்றனர்.  எனக்கோ, அவர்களுக்கோ, அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ ஏழாவது விரல் முளைக்கவில்லை என்று கிண்டல் செய்திருக்கிறார்.  இவர்களை எல்லாம் பாழாய்ப் போன அணு உலைக் கூடாரத்தில் வாழ்நாள் முழுவதும் சிறை வைக்க வேண்டும்.  ஜப்பான் புகுஷிமோ அணு உலை அதிகாரி விபத்திற்குப் பிறகு இங்கு பணியாற்றுவது மிகவும் சிக்கலானதாகவும் பாதிப்புகள் நிறைந்ததாகவும் இருப்பதாக குறிப்பிட்டது இங்கு நினைவு கூறத் தக்கது.

அணு விஞ்ஞானியான டாக்டர் வி. கண்ணன் நவம்பர் 03, 2011 புதிய தலைமுறை விவாதத்தில் பங்கு கொண்டார்.  இவருடன் சேர்ந்து மாலன் அணு உலைக்கு வக்காலத்து வாங்கினார்.  பிறகு அடிக்கடி அணு விஞ்ஞானியான கண்ணன் சுற்றுச் சூழல் விஞ்ஞானி என்ற போர்வையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டார்.  கல்பாக்கம் அணு உலையால் கதிரியக்கம் மற்றும் அணுக்கழிவுகளால் எந்த பாதிப்பும் இல்லை.  மீன் வளமும் பாதிப்படையாது என்று வாதம் செய்தார்.  

அப்துல்கலாமின் சில மணிநேர ஆய்வு அறிக்கை வெளியிட்டதையும் பத்திரிகையாளர் சந்திப்பு நேரடியாக ஒளிபரப்பப்பட்டதோடு அடிக்கடி திரும்பவும் ஒளிபரப்பப்பட்டது.  நடுநிலை என்று சொல்லிக் கொண்டு ஒரு தங்களது பக்கச் சார்பை ஊடகங்கள் இவ்வாறு வெளிப்படுத்துகின்றன.