செவ்வாய், நவம்பர் 22, 2011

ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கான போராட்டம்

ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கான போராட்டம்
 
 - மு. சிவகுருநாதன்
 
 
 
அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்களால் நடத்தப்பட்ட கார்ப்பரேட் உண்ணாவிரதப் போராட்டங்களை ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதியும் ஒளிபரப்பியும் இன்னமும் ஓயாமல் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.  இதுவரையில் அணு உலைக்கு எதிரான பல்வேறு  போராட்டங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் போராடுகிறார்கள் என்று வாய் கூசாமல் கேட்டும் பலரின் பேச்சுக்கனை செய்தியாக்கி மகிழ்கிறது.  மேலும் செப்டம்பர் 11, 2011  முதல் இடிந்தகரையில் தீவிரமாக தொடரும் அறப்போராட்டங்கள் பற்றி ஏதோ ஒப்புக்கு மட்டும் செய்திகள் வெளியிடுகின்றன.  ஊடகங்களின் இந்த ‘கார்ப்பரேட்’ தன்மைக்கு மக்கள் இவற்றை புறக்கணிக்கும்போதுதான் விடிவு கிடைக்கும். 

“கூடங்குளம் அணு உலை வேண்டாம்” என்பதே போராட்டக்காரர்களின் ஒரே கோரிக்கை.  ஆனால் இந்த ஒற்றைக் கோரிக்கையை திரித்து “மக்கள் அச்சப்படுகிறார்கள். அவற்றைப் போக்க வேண்டும்” என்று மத்திய மாநில அரசுகளும், ஊடகங்களும், அப்துல்கலாம் போன்ற அணு ஆயுத வல்லரசு விரும்பிகளும் மலிவான உத்திகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

இப்பிரச்சினையில் மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை பணிகளை நிறுத்தி வைக்குமாறு தமிழக அமைச்சரவை மத்திய அரசுக்குத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதும் இவற்றிற்கென மத்தியிலும் மாநிலத்தின் இருவேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதும் விஞ்ஞானி என்று ஊடகங்களால் நம்ப வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒரு மணி நேரத்தில் அணு உலையை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பு குறித்து திருப்தியடைந்து அறிக்கைகள் அளிப்பதும் பாதிக்கப்படும் மக்களின் அடிப்படைக் கோரிக்கையை நிராகரிப்பதாகவே உள்ளது.   மத்திய அரசு குழு அப்துல் கலாமின் அறிக்கை போன்ற முன்னமே தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையைத் தான் அளிக்கப் போகிறது என்பது உறுதி.  இக்குழுவில் அணுசக்தி ஆதரவாளர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்.  எனவே மாற்றுக் கருத்திற்கு வேலையில்லை.

மாநில அரசு அமைத்திருக்கும் குழுவில் அணு உலை எதிர்ப்பாளர்கள் இடம் பெற்றிருந்தாலும் அவர்களது கருத்துகளுக்கு உரிய மதிப்பு கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை.  போராட்டக்காரர்கள் அமைத்துள்ள 21 அறிஞர் குழு அளிக்கும் அறிக்கையையும் மாநில அரசு குழுவின் அறிக்கையையும் மத்திய அரசு ஏற்கப் போவதில்லை.  அப்துல் கலாம் சொன்னதையே மத்திய குழுவும் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றும் வேலையை மத்திய அரசு செய்யப்போகிறது. 

அணு உலை பாதுகாப்பு, கதிரியக்கம், கழிவுகள் போன்றவை குறித்த வினாக்கள் ஒரு புறம் இருக்கட்டும்.  காங்கிரஸ் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் ஏன் அணு உலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற போராட்டக்காரர்களின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.  மேற்கு வங்கம் ஹரிப்பூர் அணு உலை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் மம்தா பானர்ஜியின் துணிவு ஏன் ஜெ. ஜெயலலிதாவிற்கு வரவில்லை?

கூடங்குளம் அணு உலை பிரச்சினை தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு கேலிக்குரியதாக உள்ளது.  ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வும் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அணு உலை பிரச்சினையில் அப்துகலாம் நிலைப்பாட்டை வழிமொழிபவை.  ஜெயலலிதாவின் தீர்மானம் வேண்டா வெறுப்பாக வேறு வழியின்றி செய்யப்பட்டது.  தி.மு.க.வின் அணுசக்தி ஆதரவுக் குரல் அனைவரும் அறிந்த ஒன்று.  அணுசக்தியை ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழியின் முதல் உரை மிகவும் பிரசித்தம்.  தே.மு.தி.க.விற்கு எதைப்பற்றியும் கொள்கை ஒன்றும் கிடையாது.  உள்ளூர் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் தற்போது மக்கள் பக்கம் இருப்பதாகத் தெரிகிறது.  இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 

சோவியத் யூனியனிலிருந்து வரும் இந்த அணு உலைகளை இடது சாரிகள் எதிர்க்கத் தயாராக இல்லை.  அமெரிக்காவிலிருந்து அணு உலை வந்தால்தான் இவர்கள் எதிர்ப்பார்கள்.  அணு உலை பற்றிய இவர்களது நிலை மிகவும் கேவலமாக உள்ளது.  இந்த அணு உலை ஆதரவுக் கும்பலுக்கு லேட்டஸ்ட் வரவு புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் மக்களால் நடத்தப்படுவது அல்ல.   வெளிநாட்டினரின் தூண்டுதலின் பேரில் என்.ஜி.ஓ.க்களால் நடத்தப்படும் போராட்டம் என்ற அரிய கண்டுபிடிப்பை டாக்டர் கிருஷ்ணசாமி நிகழ்த்தியிருக்கிறார்.  மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கெதிரான இவரது தாமிரபரணி போராட்டம் யாருடைய தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்டது என்பதை இவர் விளக்கினால் நன்றாகயிருக்கும்.

கூடங்குளம் / இடிந்தகரை உண்ணாவிரதம் இருப்போர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் அல்லது குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்க வேண்டும் என்கிறார் சுப்பிரமணியம்  சுவாமி.  அணு மின் நிலையத்தை மூடக் கோருதல் தேச விரோதக் கோரிக்கையாம்!  சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்த கடலுக்கடியில் ராமர் பாலம்  என்று உச்சநீதிமன்றம் சென்ற இந்த சு. சுவாமி அணுமின் நிலையத்தை ஆதரிப்பதன் மூலம் தானொரு பன்னாட்டு கை கூலி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.  

மத்திய அரசும் இந்தியாவிற்கு அணு உலைகளை விற்கும் பன்னாட்டு கம்பெனிகளும் இப்போராட்டத்தை ஒடுக்க பல்வேறு தரப்பிலிருந்தும் லாபி செய்யும் வேலைகளை மேற்கொண்டுள்ளன.  அதில் அப்துல்கலாமின் ஆய்வு - அறிக்கை போன்ற அட்டூழியங்களும் ஒன்று.

நாட்டிலுள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தபோதிலும் இந்த இடங்களில் நில நடுக்கம் நிகழாது என்று கூறி விட முடியாது என்று சொல்லும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் சசிதர் ரெட்டி கூடங்குளம் அணு மின் நிலையத்தை மறு ஆய்வுக்குட்படுத்திய போது அங்க மிகச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதாகவும் முரண்படப் பேசுகிறார்.

ஐ.நா. சபையில் சர்வதேச அணுசக்தி முகçமையின் ஆண்டறிக்கை கூட்டத்தில் உரையாற்றிய ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம் சந்த் குப்தா, சர்வதேச அணுசக்தி முகமையின் செயல்பாடுகளை பாராட்டியதோடு அணு உலை பாதுகாப்பிற்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதையும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அணு உலை மற்றும் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அணு உலை ஆகியன அரசு வகுத்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்வதாக உள்ளன என்று பெருமை பொங்க குறிப்பிடுகிறார்.  மேலும் 2020-ல் 20000 மெகாவாட்டாக இருக்கும் இந்திய அணுமின் உற்பத்தி 2030-ல் 60000 மெகாவாட்டை எட்டும் என்று இந்திய அதிகாரிகள் எழுதிக் கொடுத்த உரையை வாசித்துள்ளார்.

இங்கு ஒரு இடையீடு.  இந்தியாவில் தற்போதுள்ள சுமார் 20 அணு உலைகளிலிருந்து உற்பத்தியாகிற அணு மின்சக்தி 4780 மெகாவாட் ஆகும்.  மொத்த இந்திய மின்னுற்பத்தியில் இது 2.7 விழுக்காடாகும்.  2030க்குள் இதை 9 விழுக்காடாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.  அப்படி பார்த்தாலும் சுமார் 14000 மெகாவாட் இலக்கு என்று வைத்துக் கொண்டாலும் இன்னும் 40 அணு உலைகளை அமைக்க வேண்டும்.  இதை எழுதிக் கொடுத்தவர்களுக்கும், வாசித்தவருக்கும் இதிலுள்ள என்ன உண்மைகள் தெரியும்?  அப்துல்கலாம் போன்ற ‘மாபெரும் விஞ்ஞானி’களும் அணுசக்தி ஆதரவாளர்களும் அளிக்கும் புள்ளிவிவரங்களின் கதை இப்படித்தான் இருக்கிறது!

இந்தியா போன்று அணு வெறி கொண்டலையும் ஒரு அண்டை நாட்டு உதாரணம்.  பாகிஸ்தான் அணு ஆயுத நிலைகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அமெரிக்க போன்ற நாடுகளோ தீவிரவாதிகளோ இவற்றை எளிதில் அணுக முடியாதென பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் மு­ராப் கருத்து தெரிவித்துள்ளார்.  நில நடுக்கம், சுனாமி போன்ற எவற்றாலும் கூடங்குளம் அணு உலை பாதிப்படையாது என்று சொல்லும் அப்துல்கலாமின் கூற்றுக்கு இணையாதுதான் இதுவும்.

அணுசக்தி தளவாடங்கள் தயாரிக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் மத்திய அரசிற்கும் முகவராக செயல்படும் ‘உலகப் பெரும் விஞ்ஞானி’ அப்துல்கலாமின் உளறல்களுக்கு வருவோம்.  சில மணி நேரங்களிலேயே கூடங்குளம் அணு உலையை ஆய்வு செய்து அப்துல்கலாம் வெளியிட்ட அறிக்கையை நவம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் நாளிதழ்களின் பக்கங்களை நிறைத்தன.  சுமார் 40  பக்கங்கள் கொண்ட அறிக்கை அவரது இணையதளத்தில் (www.abdulkalam.com) கிடைக்கிறது.  இதைப் படிக்கும் போது அப்துல்கலாம் மீது இதுவரையில் கட்டமைக்கப்பட்ட போலியான பிம்பங்கள் கழன்று விழ பன்னாட்டு கம்பெனிகளுக்கும் வல்லரசுகளுக்கும் கை கட்டி சேவகம் புரியும் முகவர் பொறுப்பு வெளிச்சத்தில் வந்ததில் இடிந்தகரை - கூடங்குளம் மக்களுக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

இந்தியாவில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள 20 அணு உலைகள் மூலம் 4780 மெகாவாட் மின்சாரம் மட்டுமே (இந்திய மொத்த மின் உற்பத்தியில் 2.7 விழுக்காடு)  உற்பத்தி செய்யப்படும் போது கூடங்குளத்தின் இரண்டு அணு உலைகள் மூலம் 2000 மெகாவாட்டும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின்சாரமும் உற்பத்திச் செய்யப்படும் என்ற பெரும் பொய்யிலிருந்து இந்த அறிக்கை தொடங்குகிறது.  அத்துடன் ரூ. 20,000 கோடி முதலீடு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரப்போகிறதாம்!  இது யாருடைய நலன்களுக்கு?  இதனால் அப்பகுதி மக்களுக்கு என்ன பயன்?

அணு சக்தி எதிர்ப்பை மூன்று விதமாகப் பார்க்கும் கலாம் பூகோள - அரசியல் சக்திகளின் வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளைந்த விளைவு என்கிறார்.  இந்த வர்த்தகப் போட்டியின் காரணமாகவே போராட்டக்காரர்களுக்கு வெளியிலிருந்து பணம் வருவதாக தங்கபாலு, நாராயணசாமி, ஞானதேசிகன், டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் குற்றம் சாட்டுகிறார்கள்.  வாதத்திற்காக இதை ஒத்துக்கொள்வோம்.  இதே வர்த்தகப் போட்டியின் மூலம் அணுசக்தி மற்றும் பன்னாட்டு மூலதன ஆதரவாளர்களாக பிரதமர் மன்மோகன் சிங், மான்டேக் சிங் அனுவாலியா, ப. சிதம்பரம், சோனியா காந்தி, அப்துல்கலாம் போன்றவர்கள் இதனால் அடைந்த ஆதாயங்கள், லாபங்கள் பற்றியும் நாம் பேசியாக வேண்டும்.

நம் நாடு, நம் மக்கள் நலன்களை விட பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களே முக்கியம் என வாதிடும் அப்துல்கலாம் போன்றவர்களின் தாக்கம் எவ்வளவு கேவலமானது என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.  சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் சுயமரியாதையோடு பாமர மக்களின் தேசப்பற்று குறித்து நாட்டை விலைபேசும் இவர்களுக்கு பேச அருகதையில்லை.

அணு சக்தி துறைக்கும் தனக்கும் இருக்கும் நீண்ட காலத் தொடர்பு பற்றி பேசும் கலாம் பல ஆண்டு அணு உலைகளை ஆய்வு செய்ததாக கூறுகிறார்.  அணுக் கதிர்வீச்சு, தொடர் கதிரியக்கப் பாதிப்புகள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.  போபால் யூனியன் கார்பைடு ஆலையில் மைத்தில் ஐசோ சயனைடு வி­ஷவாயு கசிவினால் ஏற்பட்ட பாதிப்பை இவர் ஆய்வு செய்ததுண்டா?  இன்று கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் போராட்ட உணர்வை அடக்க மறைமுக லஞ்சம் அளிக்கும் "கூடங்குளம் புரா திட்டம்" பற்றிப் பேசும் கலாம் போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேசியதுண்டா?  20 ஆண்டுகள் அப்பகுதிக்கு எதுவும் செய்யாமலிருந்து விட்டு போராட்டம் என்றதும் ரூ. 200 கோடியில் திட்டம் என்ற நரித்தந்திரம் ஏன்?  போபால் வி­ வாயுக் கசிவு போன்றவற்றையும் அணு உலைகளில் அடிக்கடி நிகழ்ந்த விபத்துக்களையும் மிகச் சாதாரணமானவை என்று ஒதுக்கிவிடும் மடமை கலாமுக்கு வேண்டுமானால் சாத்தியப்பட்டிருக்கலாம்.  அங்கு வாழும் அப்பாவி மக்களின் வாழ்வாதாரம்?

கரிகாலன் - கல்லணை, ராஜராஜன் - தஞ்சை பெரிய கோயில், நெல்லையப்பர் கோயில் போன்றவை நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்படவில்லை என்று பட்டியலிடும் கலாம் இவற்றின் அழிவும் கதிரியக்க / அணுக்கழிவு பாதிப்பையும் ஒன்றாகப் பார்ப்பது அவரது அறிவீனத்தைக் காட்டுகிறது.  பூகம்பப் பகுதி (Earthquake Zone) என்பதும் நிரந்தரமான ஒன்றல்ல.   நிலவியல் பலகைகளில் ஏற்படும் மாறுபாட்டால் மாறக்கூடியதுதான்.  அப்துல்கலாம் போன்ற பெரிசுகள் தனக்கு சம்பந்தமில்லா புவியியல் மற்றும் நிலவியல் துறைகள் மீது கருத்துகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.   நீண்ட நாட்களுக்கு முன்பு இப்படித்தான் கங்கையையும் காவிரியையும் இணைக்க வேண்டும் என்று சொல்லி வந்தார்.  இதிலிருந்தே இவரது புவியியல் அறிவு நன்கு புலப்படும்.

புற்று நோய்க்கான மருத்துவ சிகிச்சையைக் கண்டுபிடித்து இரண்டு நோபல் பரிசுகள் வென்ற மேரி கியூரியின் சாதனைகளை இங்குள்ள அணு உலை வேதனைகளுடன் ஒப்பிடுவது எவ்வளவு பெரிய அபத்தம்.  பயந்தால் வரலாறு படைக்க முடியாதாம்!.  மேடம் கியூரி தனது ஆராய்ச்சிகளின் போது ஏற்பட்ட கதிரியக்க பாதிப்புகளினால் புற்றுநோய் வந்து மாண்டு சாதித்ததைப் போல மன்மோகன் சிங், அப்துல்கலாம் உள்ளிட்ட அணுசக்தி ஆதரவாளர்களும் அணு உலைகள் இருக்கும் பகுதிக்கே தங்களது குடியிருப்பை மாற்றிக் கொண்டு சாதனை புரியலாமே!.  ஏன் மறுக்கிறார்கள்?

பூகம்பப் பகுதி 4 (Earthquake Zone4) தில்லியில் அணு உலை அமைக்க முடியாது என்ற கலாமின் வாதத்தை ஒத்துக் கொள்வோம்.  தாரப்பூர், நரோரா, கைகா, கூடங்குளம், கல்பாக்கம் போன்று ஏதேனும் ஒரு அணு உலைப் பகுதியில் அணு சக்தி ஆதரவாளர்கள் குடியிருப்பை மாற்றியமைத்துக் கொண்டு மேரி கியூரி போல் சாதனை புரியவிடாமல் இவர்களைத் தடுப்பது எது?  இவர்களும் பயந்தால் பிறகு யார்தான் வரலாறு படைப்பது?  போராட்டம் நடைபெறும் கூடங்குளத்தில் கூட அணுசக்தி அதிகார வர்க்கம் 12 கி.மீ. தள்ளி தங்களது குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு  உள்ளது கவனிக்கத்தக்கது.
(நன்றி: அ. மார்க்ஸ்) http://amarx.org/?p=187   இவர்கள்தான் பயப்பட்டால் வரலாறு படைக்க முடியாதென தத்துவம் பேசுகிறார்கள்.  கேவலமாக இல்லை?

அணு உலைக்கு 5 கி.மீ. சுற்றளவில் 20000 மக்கள் தொகைக்கு மேல் இருக்கக் கூடாது என்பது வழிகாட்டு நெறிமுறைதானே தவிர, கட்டாயம் இல்லையாம்!  எனவே நீங்கள் அந்தப் பகுதியில் பெரிய மாட மாளிகைகள் கூட அமைத்துத் தங்கலாம்தானே!  உடனே அதைச் செய்து விட்டு பிறகு உங்கள் வாய் வீச்சைத் தொடங்குங்கள்.   இது டான்சி வழக்கில் ஜெயலலிதாவிற்க நீதிமன்றம் சொன்னதை நினைவூட்டுகிறது.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட அணு உலை உலகில் வேறு எந்த முன்னணி அணு சக்தி உற்பத்தி நாடுகளிலும் இல்லாத உன்னத தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஒத்துக் கொள்ள நாம் கேனையர்களாக இருக்க வேண்டும்.

கூடங்குளம் அணு உலை 6 ரிக்டர் அளவுகோள் அளவு நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியதாம். இதற்கு மேல் வந்தால் என்ன செய்வதென்றால் வரவே வராதாம்.  இதைச் சொல்பவரை விஞ்ஞானி எனச் சொல்லலாமா?

அணுஉலைக் கழிவுகள் என்பவை கதிர்வீச்சை ஏற்படுத்தும் எரிபொருள் அல்ல.  இதை 7 ஆண்டுகள் பாதுகாத்து வைத்திருந்து மீண்டும் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.  இதற்கு ஆகக்கூடிய செலவுகள் எவ்வளவு? சுற்றுச் சூழலில் அணுக்கதிர் வீச்சு ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று சொல்லும் கலாம் இது குறித்து ஆய்வுகள் செய்ததுண்டா?  வெளியாகியிருக்கின்ற ஆய்வு முடிவுகளை படித்ததுண்டா?

அணு உலைகளை குளிர்விக்கப் பயன்படும் நீர் 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகம் இருக்கலாம்.  ஆனால் 5 டிகிரி செல்சியஸ் அளவிற்குதான் அதிகமாக உள்ளது. எனவே மீன் வளத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்கிறார்.   இந்தியாவில் கோடை காலங்களில் வெப்பம் தாங்காமல் பலர் இறப்பது அன்றாட நிகழ்வு.  கோடைகாலத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும்போது என்ன ஆகும் என்பது கூட தெரியாத ஒருவருக்கு எதற்கு விஞ்ஞானி பட்டம்?  ஊடகங்களால் வளர்த்து விடப்பட்ட கலாமின் பிம்பம் நொறுங்குவதற்கு கூடங்குளமே சிறந்த உதாரணம்.

இன்றைக்கு இந்தியாவில் 40 ஆண்டுகளாக 20 அணு உலைகள் மூலமாக சுத்தமான, சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் அணு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்று கலாம் சொல்வது எவ்வளவு பெரிய பொய் - பித்தலாட்டம்?  அணுகுண்டு வெடிப்பினால் ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்பு மரபணுவைப் பாதித்து அடுத்த தலைமுறையை பாதிக்காது எனவும் கட்டுப்படுத்தப்படாத அணுக்கதிர் வீச்சும் தலைமுறை தலைமுறையாக பாதிக்கும் என்ற கருத்திலும் உண்மையில்லை என்று அடம்பிடிக்கும் அப்துல்கலாமுக்கு கதிரியக்கத் தனிமங்களின் அரை ஆயுட்காலம் குறித்து எதுவும் தெரியவே தெரியாதா?  அணு ஆயுத - அணுசக்தி வெறியும் பன்னாட்டுக் கம்பெனிகளின் கை கூலிகளாக மாறிப் போன நிலையுமே இவர்களை இவ்வாறு பொய்யுரைக்க வைக்கிறது.

நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் போது கார்பன் - டை - ஆக்சைடு வெளியேறி சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.  அணுமின்சக்தியில் கார்பன் - டை - ஆக்சைடு வெளியேற்றப்படுவதில்லை.  எனவே இது சுத்தமானது என்பது கலாமின் வாதம்.  வளிமண்டலத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள கார்பன் - டை - ஆக்சைடை எடுத்துக் கொள்ள தாவரங்கள் அதிகம் இருந்தாலே போதும்.  ஆனால்  அணுக் கதிரியக்கத்தைத் தடுக்க யாராலும் முடியாது என்பது கலாமுக்குத் தெரியும்.  அவரது பன்னாட்டு கம்பெனிகளின் விசுவாசம் கண்ணை மறைக்கிறது.கதிரியக்கத்தை அப்படியே உறிஞ்சி கொள்ள ஏதேனும் புதிய தாவர வகையை கண்டுபிடித்து வைத்திருக்கிறீர்களா மிஸ்டர் கலாம்?

சூரிய ஒளி, காற்றாலை மின்னுற்பத்திக்கு ஆகும் செலவை விட குறைந்த செலவில் அணு மின்சாரம் கிடைக்கிறது என்பது அரை வேக்காட்டுத்தனமான வாதம்.  இந்தியாவில் இதுவரை 40 ஆண்டுகளில் 20 அணு உலைகளுக்கு எத்தனை லட்சம் கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளன?  இவர்கள் சொல்வது போல் யுரேனியத்தில் 75% உபயோகப்படுத்துவதாக வைத்துக் கொண்டாலும் மீதியுள்ள 25% கழிவுகளை பல்லாயிரம் ஆண்டுகள் சேமித்துப் பாதுகாக்க ஆகும் செலவுகள் எவ்வளவு?  இவற்றை யார் தலையில் சுமத்துவது?  இவை அனைத்தும் தெரிந்தும் தெரியாதது போல் ஏதோ அணு மின்சாரம் ஓசியில் கிடைப்பது போல் கதையளப்பது மிகவும் அபத்தம்.

ஜெர்மனி 2022க்குள் அணு மின் உலைகளை மூட முடிவு செய்திருப்பதன் உண்மைக் காரணத்தை கலாம் விண்டுரைக்கிறார்.  அந்த நாட்டில் யுரேனியம் தீர்ந்து விட்டதாம்.  இறக்குமதி செய்தால் விலை அதிகமாகுமாம்.  எனவேதான் இந்த முடிவு என்கிறார்.   நம்மிடம் மட்டும் போதுமான யுரேனியம் இருக்கிறதா என்ன?  யுரேனியத்திற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிடம் ஏன் கையேந்துகிறோம்.  அவர்கள் நமக்கு யுரேனியத்தை இலவசமாகவாகக் கொடுக்கிறார்கள்?  நமக்கு மட்டும் இறக்குமதி செய்தால் செலவே ஆகாதா?

ஜெர்மனியைப் போல் இந்தியாவும் அணு உலைகளை மூட வேண்டும் என்று சொல்வது இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்கிறார் கலாம்.  உண்மையில்  இதற்கெல்லாம் கமிஷ­ன் வாங்கி ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்குத் தான் உதவுகிறதே தவிர உண்மையான இந்தியாவின் வளர்ச்சிக்கு அல்ல என்பதை கலாம் எந்நாளும் உணரப் போவதில்லை.

அமைப்பாக திரளாத அணு உலை எதிர்ப்பு தொடக்கம் முதலே இருந்து வந்திருக்கிறது.  அணு உலை ஆதரவாளர்கள் இத்தனை ஆண்டுகளாக அணு உலையை ஏன் எதிர்க்கவில்லை?   ரூ. 15000 கோடி செலவாகிவிட்டது என்று கேட்கிறார்கள்.  அணுக் கழிவுகளுக்காக இனி செலவிடப் போகும் தொகையையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.  அதன் பிறகு மலிவு விலையில் அணுமின் சக்தி எப்படி வருமென கணக்குப் போட்டு பாருங்கள்.  மக்கள் திரண்டு பல மாதங்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்றவுடன் ரூ. 200 கோடி செலவில் 10 அம்சத் திட்டங்களை யோசனைகளாக முன் வைக்கும் கலாம் இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்?

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்குழுவிற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று கேள்வி கேட்டு விசாரிக்கப் போவதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் மிரட்டி வருகிறார்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள   ஞானதேசிகன் தன் பங்குக்கு இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.  அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரவும் சட்டமன்ற உறுப்பினர் பதவி நிலைக்கவும் பல தலித்துகளின் உயிரை பணயம் வைக்கத் துணிந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்று புகார் கூறியுள்ளார்.  இதைப் பற்றி விசாரிக்க வேண்டாமென்று நாம் சொல்லவில்லை.  அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்களுக்கும் அணு உலையை ஆதரித்துத் தீவிரமாக இயங்கி வருபவர்களுக்கும் பணம் எங்கிருந்து வருகிறது என்பதையும் சேர்த்து விசாரிக்க வேண்டியது அவசியமாகும்.

அணு ஆக்கப்பணிகளுக்கே என்பது இவர்களின் வெறும் வாய் வீச்சு என்பது நவம்பர் 17, 2011 தினமணியில் வெளியான எஸ். குருமூர்த்தியின் கட்டுரையைப் படித்தால் விளங்கும்.  அணு மின்சாரம் மட்டுமல்ல; அணு ஆயுதமும் தேவை என்கிறார் குருமூர்த்தி.  இவர் வெளிப்படையாகச் சொல்வதை கலாம் போன்ற பிறர் பூடகமாக சொல்கின்றனர்.  இங்கு அணுமின்சாரம் தயாரிக்கப்படுவதாகச் சொல்லிக் கொண்டு யுரேனியத்தை வாங்கிக் குவித்து அணு ஆயுத வல்லமையைப் பெருக்க மறைமுகமான செயல்களில் இந்திய அரசு ஈடுபடுகிறது என்பதே உண்மை.  எஸ். குருமூர்த்தியின் தினமணி கட்டுரையும் அப்துல் கலாமின் ஆய்வறிக்கையும் (!?) ஒரே விஷ­யத்தைத்தான் சொல்கின்றன.  இதுவே குருமூர்த்திகளும், கலாம்களும் இணையும் இடம்.  ஒரே வேறுபாடு கலாம் அணு எதிர்ப்பிற்கு மதச்சாயம் பூசவில்லை.  அவ்வளவுதான்.

மேகாலயா மாநிலம் காஸி மலைப் பகுதியில் யுரேனியம் வெட்டியயடுப்பதை எதிர்ப்பவர்கள், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் ஆகிய இரண்டின் பின்னணியில் கத்தோலிக்க கிருஸ்தவ மதம் இருக்கிறது என்று குருமூர்த்தி கண்டுபிடிக்கிறார்.  வடகிழக்கு மாநிலங்களில் அதிகப்படியான கிருஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.  அதைப் போலவே கூடங்குளம் அணு உலையால் பாதிக்கப்படும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களில் கிருஸ்தவர்கள் இருக்கிறார்கள்.   அம்மக்களிடமிருந்து வந்த பாதிரியார்கள் அம்மக்கள் பக்கம் இருப்பதை மதச்சாயம் பூசும் குருமூர்த்திகளின் மதவெறித்தனம் மிகவும் இழிவானது.  உங்களுக்கு யுரேனியம் விற்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் கிருத்தவம்தானே பெரும்பான்மையாக இருக்கிறது.  அணு உலைகளையும் யுரேனியத்தையும் கிருஸ்தவர்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்யலாம்.  அவர்களிடமிருந்து வாங்குவது குறித்து குருமூர்த்திகளுக்கு எவ்வித குற்ற உணர்வும் இல்லை.  ஆனால் இவற்றால் பாதிக்கப்படும் பழங்குடி, தலித், மீனவ மக்கள் கிளர்ந்து போராடும்போது இப்போராட்டத்தின் பின்னணியில் கிருஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்று கூக்குரல் எழுப்பி மதவெறியூட்டுவது மட்டுமே இவர்களுக்கு தெரிந்த கலை.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சாதி, மதம் பாராது தன்னெழுச்சியாக பாதிக்கப்படும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக இணைந்து பல மாதங்களாக மத்திய - மாநில் அரசுகளுக்கு சவாலாக இருந்து வருகிறார்கள்.  இந்த மக்கள் எழுச்சியை பிளவுபடுத்துவதற்காக இந்துத்துவா கையிலெடுக்கும் ஆயுதமே போராட்டத்தின் பின்னணியில் கிருஸ்தவம் இருப்பதைச் சொல்லும் குருமூர்த்தியின் கட்டுரை.

இப்போராட்டத்திற்கு வைகோ, இராமதாஸ், தொல். திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்களும் அவர்களது கட்சியும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.  இந்தியாவெங்கும் உள்ள மனித உரிமை சமூக ஆர்வலர்கள், படைப்பாளிகள் போராடும் இம்மக்களின் பக்கமே உள்ளனர்.  அணு சக்தி ஆதரவாக இருகும் கட்சிகளும் அதன் தலைவர்களும் இம்மக்களிடமிருந்து விரைவில் விரட்டப்படுவார்கள் என்பதில் அய்யமில்லை.

அணு உலை ஆதரவாளர்களுக்கு சாமரம் வீசும் ஊடகங்களுக்கு உதாரணமாக ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி மற்றும் மாலன் ஆசிரியராக இருக்கும் ‘புதிய தலைமுறை’ இதழைக் குறிப்பிடலாம்.  கல்பாக்கம் அணு உலை கதிர்வீச்சுப் பாதிப்பின் ஒரு விளைவாக பலருக்கும் ஆறாவது விரல் இருப்பதாக கல்பாக்கம் மரு. புகழேந்தியின் ஆய்வு சொல்கிறது.  புதிய தலைமுறை செப்டம்பர் 29, 2011 இதழில் விருந்தினர் பக்கத்தில் அணு உலையை ஆதரிக்கும் சி. ஜெயபாரதன் என்பவர் தான் இந்தியாவிலும், கனடாவிலும் 45 ஆண்டுகள் பணியாற்றியதாகவும் தன்னுடைய மகளும் மருமகனும் அணு உலைகளில்தான் பணி புரிகின்றனர்.  எனக்கோ, அவர்களுக்கோ, அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ ஏழாவது விரல் முளைக்கவில்லை என்று கிண்டல் செய்திருக்கிறார்.  இவர்களை எல்லாம் பாழாய்ப் போன அணு உலைக் கூடாரத்தில் வாழ்நாள் முழுவதும் சிறை வைக்க வேண்டும்.  ஜப்பான் புகுஷிமோ அணு உலை அதிகாரி விபத்திற்குப் பிறகு இங்கு பணியாற்றுவது மிகவும் சிக்கலானதாகவும் பாதிப்புகள் நிறைந்ததாகவும் இருப்பதாக குறிப்பிட்டது இங்கு நினைவு கூறத் தக்கது.

அணு விஞ்ஞானியான டாக்டர் வி. கண்ணன் நவம்பர் 03, 2011 புதிய தலைமுறை விவாதத்தில் பங்கு கொண்டார்.  இவருடன் சேர்ந்து மாலன் அணு உலைக்கு வக்காலத்து வாங்கினார்.  பிறகு அடிக்கடி அணு விஞ்ஞானியான கண்ணன் சுற்றுச் சூழல் விஞ்ஞானி என்ற போர்வையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டார்.  கல்பாக்கம் அணு உலையால் கதிரியக்கம் மற்றும் அணுக்கழிவுகளால் எந்த பாதிப்பும் இல்லை.  மீன் வளமும் பாதிப்படையாது என்று வாதம் செய்தார்.  

அப்துல்கலாமின் சில மணிநேர ஆய்வு அறிக்கை வெளியிட்டதையும் பத்திரிகையாளர் சந்திப்பு நேரடியாக ஒளிபரப்பப்பட்டதோடு அடிக்கடி திரும்பவும் ஒளிபரப்பப்பட்டது.  நடுநிலை என்று சொல்லிக் கொண்டு ஒரு தங்களது பக்கச் சார்பை ஊடகங்கள் இவ்வாறு வெளிப்படுத்துகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக