சனி, நவம்பர் 26, 2011

மீண்டும் வரும் மற்றொரு திரைப்பட இதழ்

மீண்டும் வரும் மற்றொரு திரைப்பட இதழ்
 
(சிற்றிதழ் அறிமுகம்: 'படப்பெட்டி'- திரைப்பட இதழ்)
 
 -மு. சிவகுருநாதன்
 
 
 
2004இல் தொடங்கப்பட்ட மக்கள் திரைப்பட இயக்கத்தின் பகுதியாக வெளியான 'படப்பெட்டி' இதழ் 3 இதழ்களில் தனது முதல் சுற்றை முடித்துக் கொண்டது.  தற்போது 4-வது இதழ் வெளிவந்துள்ளது.

இசைக் கலைஞர் எம்.பி. சீனிவாசனின் அட்டைப்படத்துடன் வெளியாகியுள்ள இந்த இதழ் அவரின் திரைஇசை  மற்றும் தொழிற்சங்கப் பணிகளை விளக்கும் ஆர்.ஆர். சீனிவாசனின் 'கேனான் 5டி கேமாராவும் எம்.பி. சீனிவாசனும்' என்ற கட்டுரை அலங்கரிக்கிறது.  பெரும் பொருட்செலவில் முதலாளித்துவ திரைப்படங்கள் எடுக்கப்படுவதை எதிர்த்து குறைந்த செலவில் கோட்டுபாட்டுடன் கவித்துவமான அழகியலுடன் படங்களை உருவாக்கிய எம்.பி. சீனிவாசனை நாம் மறக்கவில்லை தொலைத்து விட்டோம் என்ற வேதனையுடன் கட்டுரை நிறைவு பெறுகிறது.

விவி­யன் மையரின் புகைப்படக்கலை குறித்து டிராட்ஸ்கி மருதுவின் கட்டுரை அவர் எடுத்த  புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளது.   மையரின் Street Photography புகைப்படங்களை ஜான் மல்லோப் ஏலமெடுத்து பத்திரப்படுத்தியதையும் பிரெஞ்சு அகதியாக அமெரிக்கா வந்த விவி­யன் மையர் வீட்டு வேலைக்குச் செல்லும்போது கூட கழுத்தில் Twin Lens மாட்டியபடி நுழைந்ததையும் இக்கட்டுரை விவரிக்கிறது.

இந்தியாவை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களின் பொதுத்தன்மைகளை விவரிக்கும் எஸ். ராமகிருஷ்ணனின் 'முதல் இந்திய நடிகன் சாபு தஸ்தகீர்' பற்றியும் அவரது நடிப்பு படங்களை எடுத்துக்காட்டி 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஹாலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டிய சாபுவை இந்திய சினிமா மறந்து போனது சாபமெனச் சொல்லி முடிக்கிறார்.

'The Other side' என்ற மெக்சிகோ திரைப்படத்தை அறிமுகம் செய்யும் பால்நிலவனின் கட்டுரை பிழைப்பு தேடி தூர தேசம் சென்று விட்டதாகக் கூறப்படும் தங்களது தந்தையர்களைத் தேடித் தவித்தலையும் குழந்தைகளின் கதைத் தொகுப்பான இப்படத்தின் கதைகளை விவரிக்கிறது.  குழந்தைகளின் வலியை உணர்வுகளை வாழ்வியல் பிரச்சினைகளை சிக்கலாக இருந்தாலும் நேரடியான மொழியில் கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் தன்மை பேசப்படுகிறது.  இங்கு விருதுகளை வாங்கிக் குவிக்கும் 'பசங்க' போன்ற திரைப்படங்களில் குழந்தைகள் பெரியவர்களளாகத்தான் பேசி வலம் வருகிறார்கள்.  தமிழ் சினிமா என்றைக்கு இவற்றையெல்லாம் களைந்து உண்மையான சினிமாவை உருவாக்கும் என்பது கனவாகவே உள்ளது.

தமிழ் திரைப்பட வரலாற்றை பாதுகாத்தல் - ஆவணப்படுத்துதல் தொடர்பான மில்லரின் கட்டுரை, இதுவரை தமிழில் பிலிம் நியூஸ் ஆனந்தன் போன்ற தனிப்பட்ட ஆர்வலர்கள் மூலமே திரைப்பட நினைவுகள் பாதுகாக்கப்பட்டு வருவதையும் அவருக்குப் பிறகு காதலுடன் இப்பணியைச் செய்ய யாரும் இல்லை என்பது ஒரு துன்பியல் செய்தி என்று குறிப்பிட்டு, சாமிக்கண்ணு  வின்சென்ட்  ஆவணக் காப்பகத்தில் அமைக்கப்பட வேண்டியவற்றை அரசுக்கு பட்டியலிட்டுக் காட்டுகிறது. 

     கா. சிவத்தம்பிக்கு எழுதப்பட்ட கோ. இரவீந்திரனின் அஞ்சலிக் கட்டுரை தமிழ் திரைப்பட ஆய்வில் அவரின் பங்கை மதிப்பிடுகிறது. தார்க்கோவ்ஸ்கியின் Sculpting in time நூலில் Time Rhythm and Editing என்ற அத்தியாயத்தின் ஒரு பகுதியை செழியன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். படத்தொகுப்பு ஒரு பாணியாக இருக்க முடியுமே தவிர அது லயத்தைத் தீர்மானிப்பதில்லை. உண்மையில் காலத்தின் இயக்கம் படத்தொகுப்பில் அல்ல படத்தில்தான் இயங்குகிறது என்று படத்தொகுப்பின் காலம் - லயம் பற்றிய விரிவான பார்வையை இம்மொழி பெயர்ப்பு நமக்குத் தருகிறது. 

            வணிக சினிமாவின் புரையோடிப் போன சூத்திரங்களுக்கு தன்னை  ஒப்புவிக்காமல் தான் விரும்பும் சினிமாவை சமரசமின்றி படைத்திருக்கும் குமாரராஜா 'ஆரண்யகாண்ட'ம் படத்திற்காக பாராட்டப்படுகிறார். (மாமல்லன் கார்த்தியின் கட்டுரை). 

                இயக்குநர் சத்யஜித்ராயின் இன்னொரு முகமான அவரது ஓவியக்கலை குறித்து ஒரு கட்டுரை பேசுகிறது. அயலகத் தமிழ் சினிமா பகுதியில் ஈழத்திரை என்ற கட்டுரை உள்ளது. மீனவர் வாழ்வைப் பேசும் செ.தெ. இமயவரம்பன் இயக்கிய 'துயரம் படிந்த கரைகள்' என்ற ஆவணப்படம் பற்றிய கட்டுரை ஒன்றும் உள்ளது. 

          கட்டியக்காரி குழு நடத்திய பாமாவின் சிறுகதையான 'மொளகாப்பொடி' நாடக நிகழ்வு குறித்த பதிவு அதன் நிறைகுறைகளை மதிப்பிடுகிறது. ஓவியர் ஜீவா, சி.டி. விற்பனையாளர் அப்சல் ஆகியோரது நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. 

         தமிழ் திரைமுகங்கள் பகுதி ராஜா சாண்டோவை அறிமுகம் செய்கிறது. ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்த ஆவணப் பட இயக்குநர் மற்றும் களப்பணியாளர் கலகக்காரன் சரத் சந்திரனுக்கு எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரை அவரது பங்களிப்புகள் பற்றிப் பேசுகிறது. 

     மொத்தத்தில் 'படப்பெட்டி' இதழ் அன்றிலிருந்து இன்று வரையுள்ள அனைத்துத் தரப்பு சினிமாக்கள் பற்றியும் பேசுகிறது. பழைய சினிமாக்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். புதிய நல்ல முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டும். தமிழ் சினிமாவின் வரலாறு காலத்தால் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்ற தன்மை மேலோங்கி இருப்பதை இதழின் மூலம் அறிய முடிகிறது. 

        திரைப்படக் கலையையும் அதன் பல்வேறு கூறுகளையும் விவரிக்கும் / விமர்சிக்கும் இம்மாதிரியான இதழ்களின் வருகை பாழாய்ப் போன தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவினால் மிகவும் நன்றாகயிருக்கும்.   

 படப்பெட்டி திரைப்பட இதழ்,
  இதழ் - 4, ஆகஸ்டு - 2011 
 விலை ரூ. 40/-  ஐந்து  இதழ் சந்தா ரூ. 200/- 
 வெளியீடு: 
 பரிசல் புத்தக நிலையம், 
 ப.எண்: 96, ஜெ பிளாக், 
 நல்வரவுத் தெரு, 
 எம்.எம்.டி.ஏ. காலனி, 
 அரும்பாக்கம், 
 சென்னை - 600 106 
 செல்: 9382853646 
மின்னஞ்சல்: padapetti@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக