செவ்வாய், நவம்பர் 22, 2011

தலித் விடுதலைக்கான வழக்கு ஆவணங்கள்

தலித் விடுதலைக்கான வழக்கு ஆவணங்கள்
 
 - மு. சிவகுருநாதன்
 
 
 
(வழக்குரைஞர் பொ. இரத்தினம் தொடுத்த ‘சென்னகரம்பட்டி கொலை வழக்கு’ வழக்கு மன்ற ஆவணத் தொகுப்பு குறித்த பதிவு)

மதுரை மாவட்டம் மேலூர் சென்னகரம்பட்டியில் அம்மாசி, வேலு என்ற இரு தலித்கள் 05.07.1992 இல் ஆதிக்க சாதி வெறியர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.  அப்போது தமிழகத்தின் அதிகாரத்திலிருந்த அ.இ.அ.தி.மு.க.வின் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காமல் தன்னுடைய தலித் விரோதப் போக்கை வெளிப்படுத்தியது.

வழக்குரைஞர் பொ. இரத்தினம், வழக்கறிஞர் ப.பா. மோகன் போன்ற பல வழக்குரைஞர்கள் மிகுந்த போராட்டத்திற்கிடையே இவ்வழக்க நடத்தியுள்ளனர்.  அரசு, காவல்துறை, நீதிமன்றம் போன்ற அமைப்புகள் ஒவ்வொன்றும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தலித் மக்களின் நெஞ்சில் குத்துவதை வழக்கமானக் கொண்டுள்ளதற்கு இவ்வழக்கு ஓர் சிறந்த உதாரணமாகும்.

இவ்வழக்கின் நெடுகிலும் தலித் மக்களின் வாதைகளும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களும் காணக் கிடைக்கின்றன.  காவல்துறை மற்றும் நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு விவரங்கள் தொகுக்கப்பட்டு இந்நூல் சமூகவியல் ஆவணமாக மாறியுள்ளது.  

இந்த இரட்டைக் கொலை வழக்கில் 147, 148, 351, 506(III) மற்றும் 302 உடன் கூடிய 149 ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இந்திய தண்டனைச் சட்டம் 307, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989இன் பிரிவுகளைச் சேர்ப்பதற்கு வழக்கு தொடுத்து நீண்ட நீதிமன்றப் போர் புரிய வேண்டி வந்தது.

தலித் மக்கள் சார்பில் திரு. கே.ஜி. கண்ணபிரான் அவர்களை அரசுத் தரப்பு வழக்குரைஞராக நியமிக்க, வன்கொடுமைச் சட்டப் பிரிவைச் சேர்க்க, திரு. ப.பா. மோகன் அவர்களை சிறப்பு வழக்குரைஞராக நியமிக்க, வழக்கை கரூர் நீதிமன்றத்திற்கு மாற்ற என ஒவ்வொரு நிலையிலும் பல கட்டங்களைத் தாண்டியுள்ள இவ்வழக்கு பொ. இரத்தினம் போன்றவர்களின் உழைப்பு இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது.

சென்னகரம்பட்டி கொலைகளை அரசு எந்திரம் சரிவர கையாண்டிருந்தால் இதற்கு மிக அருகிலுள்ள மேலவளவில் அடுத்த கொலைகள் அரங்கேற்றப்பட்டிருக்காது என்பதைப் படிக்கும்போது தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிகளாக இருந்த இருபெரும் திராவிடக் கட்சிகளும் தலித் மக்களுக்கு தொடர்ந்து செய்து வரும் துரோகங்கள் வெளிப்படுகிறது. 
 
இந்த இரண்டு கொலையைச் செய்த ஆதிக்க சாதி வெறியர்கள் சட்டத்தை வளைத்து தப்புவதற்கு அரசு எந்திரம் முற்றாக உதவி செய்யும் போது சாதி வெறியர்கள் தொடர் கொலைகளில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிடுகிறது.  சென்னகரம்பட்டி, மேலவளவு கொலைகளில் வழக்குரைஞர் பொ. இரத்தினம் போன்றவர்களின் சட்டப் போராட்டங்களில்தான் கொஞ்சமாவது நீதியின் கருணை கிடைத்திருக்கிறது.  இந்தியாவில் தலித்களுக்கு எதிரான பல்வேறு வழக்குகளில் இந்நிலை இல்லாதது வேதனைக்குரிய ஒன்றாகும்.

பொ. இரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவினரின் செயல்பாட்டை, உழைப்பை பாராட்ட வார்த்தைகளில்லை.  இதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கும் வழக்குரைஞர் பொ. இரத்தினம் அவர்களின் பணிகளுக்கு உரிய மதிப்பு கிடைக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

இவ்வழக்கு குறித்த காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் முறையாக தொகுக்கப்பட்டு ஒரு சிறந்த சமூகவியல் ஆவணமாக விடியல் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.  தலித் விடுதலைக்கான பாதையில் இம்மாதிரியான நூற்களும் அணி வகுக்க வேண்டும்.

சென்னகரம்பட்டி கொலை வழக்கு
      (தொ) வழக்குரைஞர் பொ. இரத்தினம்
பக். 292.  விலை ரூ. 150
வெளியீடு:
விடியல் பதிப்பகம் & புத்தா வெளியீட்டகம்,
88, இந்திரா கார்டன் 4வது வீதி,
உப்பிலிபாளையம் - அஞ்சல்,
கோயம்புத்தூர் - 641 015,
தொலைபேசி: 0422 2576772, 94434 68758.
 

மின்னஞ்சல்:

2 கருத்துகள்:

ஓசூர் ராஜன் சொன்னது…

தலித்துகள் தாக்கபடுவதற்கு காரணம், அவர்களது சுயசார்பற்ற சமூக நிலைதான்! பொருளாதார,அரசியல்,தளங்களில் அவர்கள் இன்னும் வலுவான நிலையை அடையவேண்டியுள்ளது!

மு.சிவகுருநாதன் சொன்னது…

நன்றி! திரு.ஓசூர் ராஜன்.

தென் மாவட்டங்களில் தேவேந்திரர்கள் ஓரளவு பொருளாதாரத் தன்னிறைவு பெற்றிருந்தும் அவர்கள் மீதான ஆதிக்க சக்திகளின் தாக்குதல்கள் இன்னும் நின்றபாடில்லை. அரசியல் தளங்களில் தலித் தலைவர்களின் செயல்பாடு பல நேரங்களில் மோசமாகவே உள்ளது.இவை எல்லாவற்றையும் நாம் கடந்தாகவேண்டும்.

தோழமையுடன்...

மு.சிவகுருநாதன்

கருத்துரையிடுக