சனி, டிசம்பர் 24, 2011

கோயில் - மதம் - யானைகள்

கோயில் - மதம் - யானைகள்
 

                   - மு. சிவகுருநாதன்

              
    (ச. முகமது அலி, க. யோகானந்த் ஆகியோரின் அழியும் பேருயிர் : யானைகள் (இரண்டாம் பதிப்பு) நூல் குறித்த பதிவு)



           ஜெ. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் கோயிலுக்கு யானையைத் தானமாக அளிக்கும் படலம் தொடங்கிவிட்டது.  கூடவே இந்த யானைகளுக்கு முதுமலையில் புத்துணர்ச்சி முகாமும் நடத்துகிறார்கள்.  சிங்காரச் சென்னை என்று சொல்லி பிச்சைக்காரர்களை ஒழித்துக் கட்டும் இந்த ஆட்சியாளர்கள் கோயில், பக்தி என்ற பெயரால் யானைகளை பிச்சையெடுக்க அனுமதிப்பதுதான் வேதனை.

          வன விலங்காகிய யானையை முதல்வரே கோயிலுக்கு தானமாக வழங்குகிறார்.  தமிழகமெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான கோயில் யானைகள் அன்றாடம் தெருத் தெருவாக பிச்சையெடுக்க வைக்கப்படுகின்றன.  இந்த நாட்டில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், விலங்குவதை தடுப்புச்சட்டம் போன்றவை இருக்கின்றதா என்று கேள்வி எழுவது இயற்கை. பல்வேறு நோய்ப் பாதிப்பிற்குள்ளான இந்த கோயில் யானைகளை முதுமலை புத்துணர்ச்சி முகாமில் கொண்டுபோய் வைக்கும்போது அங்குள்ள காட்டு விலங்குகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.   இது குறித்து சூழியலாளர்களின் எச்சரிக்கையை அரசும், நீதிமன்றமும் புறக்கணித்து இந்த முகாமை நடத்துகின்றன.  பல்வேறு கொடுமைகளுக்கு இந்த யானைகள் மூலம் இயற்கையான சூழலில் வாழும் எண்ணற்ற கானுயிர்கள் பாதிக்கப்படுவது மிக மோசமான நிலையாகும்.

         ச. முகமது அலி, க. யோகானந்த ஆகியோர் இணைந்து எழுதிய அழியும் பேருயிர் : யானைகள் என்ற நூல் 2004-இல் பொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது.  அதன் அடுத்த பதிப்பு 2009இல் வெளியிடப்பட்டுள்ளது.  அதிகம் கவனிப்பைப் பெறாத இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நூல் யானைகள் பற்றிய பல்வேறு தகவல்களைத் தருகிறது.  இன்றைய இந்தியாவில் யானைகளின் நிலையைக் கூறும் இந்நூலில் யானை ஆய்வாளர்கள் சிலரைப் பற்றி குறிப்பு அளிக்கப்பட்டுள்ளது.   பின்னிணைப்பாக சில சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகளும் இதழ்களில் வெளியான முதல் பதிப்பின் விமர்சனங்கள் சிலவும் உள்ளது.  இவை ஒன்றும் அதிகம் விற்பனையாகும் வெகுஜன இதழ்களில் வெளியானவை அல்ல.  தீவிர வாசிப்பு, இலக்கியம் என்பவை சிறுபத்திரிகை சார்ந்தவை என்பதைப் போல சுற்றுச்சூழலும் வெகு சிறுபான்மையோரால் மட்டும்  பேசப்படும் விஷ­யமாக மாறிப் போனதுதான் இங்குள்ள கெட்ட சேதி.

         இன்றைய வளர்ச்சி சாமான்ய மக்களையும் இயற்கையையும் பெரிதும் பாதிக்கிறது.  காட்டின் பரப்பு சுருங்கிக் கொண்டே வருகிறது.  காட்டின் குறுக்கே தொடர் வண்டிப் பாதைகள் சுற்றுலாவை மேம்படுத்த அமைக்கப்படுகின்றன.  இங்கு யாருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் என்ன?  வருமானம் வந்தால் சரி என்ற கொள்கையில் நமது அரசுகள் பீடுநடை போடுகின்றன.  இவற்றில் முதல் பலி வன விலங்குகளே.

      யானைகளில் வாழிடப் பரப்பிலுள்ள காடுகள், மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்படுகின்றன.  இவற்றிற்கு மாற்றப்படுகின்றன.  இவற்றிற்கு மின்சார வேலியும் அமைக்கப்பட்டு விடும் போது பல யானைகள் ஆண்டு தோறும் மாண்டு போகிறது.  யானைகளின் இடங்களை நாம் கைப்பற்றிக் கொண்டு அவை விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்வதாக நாம் கூறிக் கொள்கிறோம்.  இது போன்ற மனிதர்களின் போலித் தனத்தை இந்நூல் வெளிப்படுத்துகிறது.

     இந்நூலில் ரேடியோ காலர் கருவி பொருத்தி யானைகளின் நடமாட்டத்தை ஆய்வு செய்வது குறித்து எழுதப்பட்டுள்ளது.  சமீபத்தில் ரேடியோ காலர் பொருத்த முயற்சிக்கையில் விபத்தில் சிக்கி ஒரு யானை சில நாட்கள் கழித்து மரணமடைந்தது நினைவிருக்கலாம்.  மேலும் தற்காலத்திலுள்ள அதி நவீன வசதிகள் மூலம் இந்த ரேடியோ காலர் சமிக்ஞைகளளை யானைகளை வேட்டையாடும் கும்பல்களும் பெற்று விடக் கூடிய வாய்ப்புள்ளது  என்பதையும் மறுப்பதற்கில்லை.

     முன்னுரையில் ஆசிரியர், ஆதிவாசிகளை காட்டை விட்டு வெளியேற்றி சமூக நீதியுடன் பகுத்தறிவு வழிகாட்டுதல்களோடு நம்முடன் குடியமர்த்தி கல்வி - வேலை வாய்ப்புகளில் முன்னுரிமையும்  வழங்க வேண்டும் என்கிறார்.  நல்ல கோரிக்கைதான்.  ஆனால் அரசு பழங்குடியினரை வெளியேற்றத் துடிப்பதும் அதற்குப் பல்வேறு சட்டங்களைப் போடுவதும் உண்மையில் அவர்கள் மீதான அக்கறையினால் அல்ல.  காட்டைவிட்டு பழங்குடியினரை வெளியேற்றுவதன் மூலம் காட்டிலுள்ள இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் வேலைதானே இங்கு நடக்கிறது.  அதற்குத் தடையாக இருக்கும் பழங்குடிகள்தான் அரசின் பார்வையில் தீவிரவாதிகளாகத் தெரிகிறார்கள்.  சுற்றுச்சூழலியர்கள் இப்பிரச்சினயை பரந்த கண்ணோட்டத்துடன் அணுக வேண்டிய தேவை இருக்கிறது. 

        புதிய வழிபாட்டுத் தலங்கள் உருவாக்கப்படுவதால் காடுகள் அழிந்த கதைகள் ஏராளம்.  சபரிமலை, திருப்பதி, திருவண்ணாமலை, அமர்நாத், பண்ணாரி, பத்ரகாளியம்மன், அனுபாவி கோயில் போன்ற இடங்கள் காடுகளை அழிக்க பெரும்பங்கு வகித்ததையும் ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாத கடப்பா நல்லமலைக் காட்டில் கோயில் ஒன்று கட்டப்பட்டு வருவதையும் குறிப்பிட்டு காட்டின் அழிவை கழிவிரக்கத்துடன் இந்நூல் நினைவுப்படுத்துகிறது.

        யானைகள் மட்டுமல்ல, காட்டுயிர்கள் அனைத்தும் பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம் அவற்றின் வாழிடப் பரப்பு சுருங்குவதேயாகும்.  நமது அரசியல்வாதிகள்தான் காட்டை அழிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.  ஆனால் பழியை பழங்குடியினர் மீது போடுகின்றனர்.  அரசு - அரசியல்வாதிகள், உள்நாட்டு,  வெளிநாட்டு முதலாளிகள், தரகர்கள், அதிகார வர்க்கத்தினர் என்ற பல்வேறு கண்ணிகளில் சிக்கிக் காடுகளும் காட்டுயிர்களும் அழிந்து வருகின்றன.  சுற்றுச்சூழல் பேசும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் வேறு பல மறைமுகக் கொள்கைகள் உண்டு.  இவற்றிலிருந்து மாறுபட்டு இயற்கையோடிணைந்த சுற்றுச்சூழல் கொள்கைகளை ஆர்வலர்கள் உருவாக்க வேண்டும்.

        யானைகள் இங்கே மதம், பக்தியோடு தொடர்புப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.  அப்போதுதான் அவைகளின் வாழ்க்கை நிலைபெறும்.  இங்கு புலிகளைப் பாதுகாப்பதற்கென இருக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், செயல் திட்டங்கள், விளம்பர உதவிகள் யானைகளைப் பாதுகாப்பதற்கு இல்லை.  இவற்றைப் போல அழிவுறும் அனைத்து காட்டுயிர்களும் பாதுகாப்பதற்கான நடைமுறைகள் உருப்பெற வேண்டும்.  அதற்கு இம்மாதிரியான நூற்கள் வழிவகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

        இந்த நூலைப் படிக்கும்போது நானறிந்த உண்மைச்சம்பவம் ஓன்று நினைவுக்கு வருகிறது. கோயில் யானையிடம் ஆசி பெறுவதற்கு தன்னுடைய பெண் குழந்தையை அளித்த எனது அண்டை ஊர்க்காரர் ஒருவரின் கதை மிகவும் துன்பகரமானது.  யானை அக்குழந்தையைத் தூக்கி வீசியடிக்க இன்னும் அக்குழந்தை நடைபிணமாகத்தான் வாழந்து கொண்டுள்ளது. இந்த மாதிரி பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தாலும் இன்னும் நூற்றுக்கணக்கான கோயில் யானைகளிடம் ஆசிபெற மக்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதத் தவற்றினால் ஏற்படும் இழப்புகளை யானை மீது சுமத்தி என்ன பலன்?

அழியும் பேருயிர் : யானைகள்

ச. முகமது அலி, க. யோகானந்த்
 
பக். 176.  விலை ரூ. 150. 


வெளியீடு
 
இயற்கை வரலாறு அறக்கட்டளை,
ஆல்வா மருத்துவமனை,
அம்பராம்பாளையம்,
பொள்ளாச்சி - 642 103.
 
தொலைபேசி: 04259 - 253252, 253303 
 செல்:- 9894140750 
 

வெள்ளி, டிசம்பர் 23, 2011

ஏனிந்த இன - மொழி (கொல) வெறி?

ஏனிந்த இன - மொழி (கொல) வெறி?
 

                                    - மு. சிவகுருநாதன்
       (கூடங்குளம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை போன்ற பிரச்சினைகளின் ஊடாக இங்கு நடக்கும் இரு வேறு கண்ணோட்டங்கள் மற்றும் வெறித்தனங்கள் பற்றி எனது பார்வை)

       "ஈடேற வழி: பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே"                       
                                                                                         - தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி.

      
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி  என்று சொன்னதோடு நில்லாது, இனவெறி, மொழி வெறி, தேச வெறி, சாதி வெறி உள்ளிட்ட அனைத்து வெறித்தனங்களுக்கு எதிராக நின்றவர் பெரியார்.   யாருக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடி மறைந்தாரோ, அந்தத்தமிழகத்தில் இன்றைய நிலைமை தலைகீழாகப் போயிருக்கிறது.  பெரியாரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் திராவிட இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள் ஆகியன இங்கு முரட்டுத்தனமான தமிழ் மொழி, தமிழின வெறிகளை உற்பத்தி செய்வதோடு அதனூடாக சாதி வெறியையும் வளர்த்தெடுக்கிறது. பரமக்குடி தலித்கள் படுகொலையை இவர்கள் எதிர்கொண்ட முறை சாதிவெறித்தனத்திற்கு  தகுந்த சாட்சியாகும்.

       பல மாதங்களாக நீளும் கூடங்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரப் போராட்டமான அணு உலை எதிர்ப்பை முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை பின்னுக்கு தள்ளிய அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளை நாம் விளங்கிக் கொண்டேயாக வேண்டும்  மக்களை ஒன்று திரட்டுவதற்கும் போராடுவதற்கும் இன்று மென்மையான இலக்கு (soft target)  ஒன்று தேவைப்படுகிறது.  அதற்கு மொழி, இன உணர்வுகள் மிகவும் வசதியாக உள்ளது.  உள்ளூர் தமிழன் அடிப்பட்டு சாகும்போது வாய் மூடி மெளனியாய் இருந்து விட்டு அயலகத் தமிழர்களின் பிரச்சினைகளை மட்டும் எதிர் கொள்வதை இந்த உளவியல் அடிப்படையில்தான் அணுக வேண்டியுள்ளது.

       இங்கொன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பது பற்றியோ உலகளவில் எந்தப் பகுதியில் தமிழர்கள்
பாதிக்கப்படும் போது  அவர்கள் சார்பாக பேசுவதையோ நாம் மறுக்கவில்லை.
பரமக்குடிப் படுகொலை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்கம், இருளர் இனப் பெண்கள் 4 பேரில் போலீஸ் அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு
உள்ளாக்கப்படுதல் போன்ற எவற்றிற்கும் கிளர்ந்தெழாத மொழி, இன உணர்வு
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மட்டும் பீறிட்டு கிளம்பும்போதுதான்
நமக்கு அய்யம் வருகிறது; கூடவே சில கேள்விகளும்.  கூடங்குளத்தில் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மீனவ மற்றும்தலித் மக்கள், பரமக்குடியில் சுடுபட்டு, அடிபட்டு இறந்த காயம்பட்ட தலித் மக்கள், பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்ட 4 இருளர் இனப்பெண்கள் என நாள்தோறும் வதைபடும் ஆயிரக்கணக்கானோர் தமிழர்களா அல்லது வேற்று மொழியினராஎன கேள்வி எழுவது இயல்பானது.

      மொழி - இன வெறியைத் தூண்டி விடுவதில் நமது சினிமாக்காரர்களின் பங்கு கணிசமானது. 'ஆயிரத்தில் ஒருவனி'ல் செல்வராகவன் fantasy-தனமாக செய்த சில பிரதியெடுத்தல்களை விரிவாக்கியவர் 'ஏழாம் அறிவு' ஏ.ஆர். முருகதாஸ். இதற்குப் போட்டியாக செந்தமிழனின் 'பாலை'யும் களத்தில் இறங்கியிருக்கிறது.  இவையனைத்தும் பாமரத்தனமான இன - மொழி வெறியை அடிப்படையாகக் கொண்டு காசு பண்ணுவதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவை.  இவர்களின் போலியான இன - மொழிவாதப் போக்கிற்கு தமிழ் தேசிய இயக்கங்களும் தமிழ் ஆர்வலர்கள் என்று
சொல்லிக் கொள்கிற ஒரு கூட்டம் பேராதரவு நல்குகிறது.

       இந்தியத் தண்ணீரில் தயாராகும் அமெரிக்க மூத்திரங்களான பெப்ஸி,
கோக்குகளைக் குடித்து உயிர் வாழும் (!?) கணினி நிறுவன, கார்ப்பரேட்
அம்பிகள் சிலர் சீனப் பொருட்களை வாங்க வேண்டாமென வலியுறுத்தி
குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (e-mail) பரப்புரையில்
ஈடுபடுவார்கள்.  இந்த வேலையைத் தான் ஏ.ஆர். முருகதாஸ், செந்தமிழன்
போன்றோர் 3 மணி நேரம் செய்திருக்கிறார்கள்.  இதே மாதிரியான ஒரு
கும்பல்தான் அன்னா ஹசாரே பின்னாலுள்ளது.

       நம்மவர்கள் சிலரும் இதை ஏகாதிபத்திய எதிர்ப்பாக கற்பனை செய்து
கொள்கிறார்கள்.  இவர்கள் என்றாவது பெப்ஸி, கோக் குடிக்காமல் இருந்தது
உண்டா?  அல்லது குடிக்க வேண்டாம் என்று பரப்புரை செய்ததுண்டா?  சீன
ஏகாதிபத்தியத்தைவிட அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வகையில் ஒஸ்தி என்பதை இவர்கள் விளக்க வேண்டும்.  விடுதலைப் புலிகளை / தமிழர்களை அழிக்க இலங்கைக்கு சீன வல்லாதிக்கம் உதவியது என்பதுதான் இவர்களது வாதம். இந்தியா, பாகிஸ்தான் கூடத்தான் இலங்கைக்கு உதவியது.  இந்திய
அரசுக்கெதிராக இவர்கள் ஏன் திரளவில்லை?  இத்தகைய கார்ப்பரேட்
ஆதரவாளர்கள்தான் அன்னா ஹசாரே பின்னால் அணி திரள்கிறார்கள்.  வார இறுதி (week end) கேளிக்கைகளில் திளைக்கும் இவர்களுக்கு ஆண்டு இறுதி (டிசம்பர் 31) கேளிக்கைகளில் கலந்து கொள்ள முடியாமல் செய்து விட்டதற்காக அன்னாஹசாரே மீது ஏற்பட்ட கோபம் டிசம்பர் 27 உண்ணாவிரதம் மும்பைக்கு மாற்றப்பட்டதால் கொஞ்சம் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு.  விரைவில் இவர்கள் அன்னா ஹசாரே முகாமை காலி செய்து விடுவார்கள்.

       முல்லைப் பெரியாற்று அணைப் பிரச்சினையில் தமிழகத்திலுள்ள மலையாளிகளின் வணிக நிறுவனங்களை உடைத்து நொறுக்கும் இந்த தமிழுணர்வாளர்கள் தமிழக பக்த கோடிகள் (!?) சபரிமலைக்குச் செல்ல வேண்டாம் என்று ஏன் பரப்புரையில் ஈடுபடவில்லை?  தமிழகத்திலும் கேரளத்திலும் மிகச் சிறிய இனவாத -மொழிவெறிக் கும்பல் தங்களது சுய ஆதாயங்களுக்காக வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிறது.  இதை இரு மாநில அரசுகளும் கண்டும் காணாமலும் இருப்பதுதான் அநியாயம்.

       முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினை தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.  இது தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.  வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேரள கட்சிகளும் அரசும் தொடர்ந்து இப்பிரச்சினையை எழுப்புகின்றன.  மத்திய அரசின் மறைமுக ஒத்துழைப்பும் கேரள அரசுக்கு இருக்கிறது. இப்பிரச்சினையில் கேரளா அரசின் நிலைப்பாடு நியாயமில்லை என்றபோதிலும் அவர்களின் வெற்றுக் கூச்சலுக்கும் ஆரவாரத்திற்கும் பதிலுக்குப் பதில் மல்லுக்கட்ட வேண்டிய அவசியம் நமக்கில்லை.  டேம் 999 என்ற திரைப்படம், கேரளத்தவர்களின் பரப்புரை போன்றவற்றால் மட்டுமே ஒரு அணைக்குப் பாதிப்பு வந்து விடும் என்று அப்பாவி பொதுமக்களை நம்ப வைத்து வீணான போராட்டத்திற்கு சில இயக்கங்களும் அரசும்
தூண்டியுள்ளது.

       அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரள அரசு சொல்கின்ற காரணத்தால் மட்டுமே உச்சநீதி மன்றம் அணையை உடன் உடைக்கவும், புதிய அணை கட்டவும் அனுமதி அளிக்கப் போவதில்லை.  இந்த பிரச்சாரத்தால் கேரள மக்கள் திரண்டு வந்து அணையை உடைத்து விடப் போவதில்லை.  பிறகு ஏனிந்த பதட்டம் உருவாக்கப்படுகிறது?  முழுக்க முழுக்க அரசியற் காரணங்களுக்காகவே இன்று இப்பிரச்சினை எழுப்பப்படுகிறது.

       தமிழகத்தில் திராவிட கட்சிகளும், தமிழ் தேசிய இயக்கங்களும் மொழி - இன வெறியைத் தூண்டி கேரளத்தவர்களின் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். கேரளாவிற்குச் செல்லும் 13 வழிகளை அடைக்கிறார்கள். காய்கறி, முட்டை, மீன், இறைச்சி போன்றவற்றை அனுப்பாமல் ஒரு பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்று கூவுகிறார்கள்.  எத்தனை நாட்களுக்கு அனுப்பாமல் இருப்பார்கள்?  வியாபாரம் நடக்க வேண்டுமல்லவா?  தமிழப்பெருமிதமும் மொழி - இன வெறியும் எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும்?

       இதே போல ஒரு சூழ்நிலை கேரளாவிலும் ஏற்படுத்தப்பட்டு எல்லையோர
கிராமங்களில் தமிழர்கள் மீது தாக்குதல், சபரிமலை செல்வோர் மீது தாக்குதல்
என பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.  கேரள காவல்துறையும் தமிழகக்
காவல்துறையைப் போன்று இச்சம்பவங்களை வேடிக்கை பார்க்கிறது.

       ஒப்பீட்டளவில் தமிழகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகம்
என்றேபடுகிறது.  இந்திரா காந்தி படுகொலையின் போது தில்லியில்
சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட கொடிய வன்முறைகள், ராஜுவ் காந்தி
படுகொலையின் போது கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் தமிழர்கள் மீது
தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் போன்றவற்றைச் செய்த சமூக விரோதிகளுக்கும் இவர்களுக்கும் ஏதேனும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.  மொழி - இனப்பெருமிதங்கள் வன்முறையை நோக்கித்தான் செல்லும் என்பது பாலபாடம்.சிங்கள இனவெறியை குறைசொல்லும் அருகதை இந்த தமிழ் வெறியர்களுக்கு கிடையாது.

               கேரளாவில் நூலிழை அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ் அரசு அங்கு நடைபெறப்போகும் ஒரு இடைத்தேர்தலை முன்னிட்டு இப்பிரச்சினையை எழுப்பி ஆதாயம் தேட முயற்சிப்பது எவ்வளவு உண்மையோ, தமிழகத்தின் ஜெயலலிதா அரசு பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துக்குவிப்பு வழக்கு,கூடங்குளம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை மறக்கடித்து அரசியல் ஆதாயம் தேடுவதும் உண்மையாகும்.  மத்தியஅரசும் கூடங்குளம் பிரச்சினையை மடை மாற்ற இப்புதிய சிக்கல் வந்தவுடன் மிக மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

       கூடங்குளம் முதலாவது அணு உலை இன்னும் இரு வாரங்களில் செயல்படத் தொடங்கும் என, இந்தியாவில் சொல்வதற்கு திராணியற்ற மன்மோகன் சிங், ரஷ்யாவை திருப்திப்படுத்துவதற்காக அங்கு சொல்லி விட்டு வந்திருக்கிறார்.கூடங்குளத்தில் தற்போது 2 அணு உலைகள் இயங்குவதாகச் சொன்னது ப. சிதம்பரத்தின் லேட்டஸ்ட் உளறல்.  தமிழகத்தைப் பொருத்தவரையில் உடனடியாகத் தீர்வு காண வேண்டியது கூடங்குளம் அணு உலைப் பிரச்சினைதான்.

         நடுவர் நீதிமன்றம், உச்சநீதி மன்றம் என்று பல்வேறு ஆணைகள், தீர்ப்புகள் பெற்ற பிறகு காவிரி நீரைத்   தமிழகம் பெறுவதற்கு எவ்வளவோ சிக்கல்கள் இன்னும் நீடித்துக் கொண்டுள்ளன.  அதைப் போலவே உச்சநீதிமன்றம் , மத்திய அரசு என எந்தத் தரப்புத் தீர்வையும் கேரள அரசு ஏற்கப் போவதில்லை.  எனவே காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையைப் போல முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்ந்து கொண்டேயிருக்கப் போகிறது.

       இது ஒன்றும் நமது விருப்பம் அல்ல.  இங்கு நடக்கும் முன்னுதாரணங்களைக்  கொண்டே இவ்வாறு அவதானிக்க முடிகிறது.  பொதுவாக அரசுகள் உடனடி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை ஒத்திப் போடுவதற்கு இம்மாதிரியான உத்திகளை கையாள்வது வாடிக்கையானது.  அன்னா ஹசாரேவின் கார்ப்பரேட் போராட்டங்களுக்கு பெருத்த விளம்பரம் தேடித் தந்தது மத்திய அரசுதான் என்றால் மிகையில்லை.  பின்னர் ஒரு கட்டத்தில் அன்னா ஹசாரேவை கட்டுக்குள் வைக்க யோகா குரு பாபா ராம்தேவை தூண்டி விட்டதும் இதே மத்திய அரசுதான். மீடியாக்களின் கவனம் ஒருபுறம் மட்டுமே குவிய விலைவாசி உயர்வு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, பணவீக்கம், பட்டினிச்சாவு, விவசாயிகள் தற்கொலைகள்,
ஊழல்கள் போன்ற அனைத்தையும் ஒரே குழியில் போட்டு புதைத்த திருப்தி மத்திய அரசுக்கு ஏற்பட்டது.  இப்போது கூடங்குளம் சிக்கல் பின்னுக்குத்
தள்ளப்பட்ட அதீத கொண்டாட்ட உணர்வினால்தான் ப.சிதம்பரம் போன்ற
அதிமேதாவிகள் (!?) கூட உளறிக் கொட்டி பின்பு தங்கள் நிலைப்பாட்டை
திரும்பப் பெறுகின்றனர்.

       நாடெங்கும் லோக்பால் புழுதியைக் கிளப்பி விட்டு சந்தடி சாக்கில் குறைபாடுகளுடன் உணவு பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றும் அவலத்தை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம்.  இரு வாரங்களில் அணு உலை இயங்கும் என்று சொல்லக் கூடிய துணிச்சலை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இத்தகைய பின்புலம்தான் கொடுத்திருக்க வேண்டும்.  அமைதி வழியில் அறப்போராட்டம் நடத்தும் கூடங்குளம் பகுதி மக்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரும் காங்கிரஸ் கத்துக்குட்டி யுவராஜா முதல் பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வரையிலான ஆட்கள் வன்முறையில் ஈடுபடும் முல்லைப் பெரியாறு அணை போராட்டக்காரர்களை (இரு தரப்பையும்) ஏன்கைது செய்யக் கூட கோரிக்கை விடுக்கவில்லை என்பதன் பின்னணி இதுதான்.

       காந்தியின் உழைப்பை அரை நூற்றாண்டுகளாக அறுவடை செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி காந்தீயக் கொள்கைகளுக்கு எதிராகவே வளர்ந்து நிற்பது இதற்குச் சான்று.  உண்மையில் கூடங்குளம் போராட்டம் போன்று முல்லைப் பெரியாறு அணை போராட்டங்கள் மத்திய அரசுக்கு எதிராகவே நடந்திருக்க வேண்டும்.  இது ஏன் நடக்கவில்லை?

       கேரள காங்கிரஸ் அரசின் அனைத்து செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு
அளிக்கும் ஐக்கிய முன்னணி அரசிலிருந்து தி.மு.க. தற்போதாவது விலகியிருக்க வேண்டாமா?  39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி பிரதமருக்கு நெருக்கடி அளித்திருக்கலாமே!  ஏன் செய்யவில்லை? இப்போது தத்துப்பித்தென உளறிக் கொட்டும் ப. சிதம்பரம் வாழப்பாடி ராமமூர்த்தி போல் பதவி விலகியிருக்கலாமே! ஏன் நடக்கவில்லை?

       கூடங்குளம் அணு உலை பிரச்சினைக்கான இவர்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை.ஏனெனில் காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிகள், திராவிட கட்சிகள் அனைத்துமேஅணு உலையை ஆதரிக்கும் கட்சிகள்  ஆனால் முல்லைப் பெரியாறு அணைக்காக உரத்துக் குரல் கொடுப்பதாக பம்மாத்து பண்ணும் இவர்கள், அப்பாவி மக்களையும் சில சமூக விரோத சக்திகளையும் தூண்டி வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்த்து வேறு உருப்படியாக ஏதேனும் ஏன் செய்ய முடியவில்லை?

       முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தும் ஜெயலலிதா அரசு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பிற்கு அமைச்சரவைத் தீர்மானம் மட்டும் போதுமானது என்று பாரபட்சம் காட்டுகிறது.  கூடங்குளம் அணு உலையை அதனால் பாதிப்படையும் கேரள மக்களும் எதிர்க்கிறார்கள்.  எனவே இங்கு மொழியுணர்வை தூண்டி விட முடியாமற் போய்விட்டது போலும்!

       கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வேறு எந்த தென்னிந்திய மாநிலங்களும் நிறுவ மறுக்கும் அணு உலைகளை தமிழக திராவிடக் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்ட தமிழகத்தில் நிர்மாணிக்கின்றன.   இதன் பின்னால் இருக்கும் தமிழ் மக்கள் மீதான பாசம், பொங்கும் இன - மொழி உணர்வு பிரதானமானது! இதற்குப் பதிலுதவியாக மத்திய அரசு இவர்களுக்கு பதவியும் ஊழல் புரிய வாய்ப்புக்களையும் நல்குகிறது.  ஆனால் தமிழகத்திற்கு என்ன கிடைக்கும்? தமிழ்நாட்டின் வடக்குப் பகுதி கல்பாக்கத்தாலும் தெற்குப் பகுதி
கூடங்குளத்தாலும் சுடுகாடாகப் போகும் அரிய பாக்கியம் கிடைக்கிறதே! அது
போதாதா?

       பயப்படாமல் அணு உலையை அமைக்க உதவும் தமிழகத்தின் துணிச்சலைப் பாராட்டி இங்கு தயாராகும் 2000 மெகாவாட் மின்சாரத்தில் பாதி வழங்கப்படும் என்று பிரதமரே அறிவித்திருக்கிறார்.  இவர்கள் 2000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் லட்சணத்தை நாம் பார்க்கத்தானே போகிறோம்.

               இந்த ஆயிரம் மெகாவாட் மின்சாரம் முழுக்க தங்களுக்கே கிடைக்கப் போகிறது என்ற நப்பாசையில் கோவை 'கொடீஸியா' முதலாளிகள் அணு உலைக்கு ஆதரவாக களம்இறங்கியிருக்கின்றனர்.  முதலாளிகளில் உள்நாடு, வெளிநாடு என்று பேதம் பார்ப்பது ரொம்பவும் அபத்தம். தமிழ் தேசியர்களுக்கு இது கைவந்த கலை. ஆனால் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அளித்தது போக  மிச்சமிருந்தால் மட்டுமே இவர்களுக்குக் கிடைக்கும் என இந்த குட்டி முதலாளிகளுக்கு யாரேனும் சொன்னால் நலம்!.

       அரசிடம் எண்ணற்ற சலுகைகள் பெற்றுக் கொண்டு வரி ஏய்ப்பு முதலான பல்வேறு முறைகேடுகளையும் செய்யும் இவர்கள்,  வீட்டுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை வாரத்தில் ஒரு நாள் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கின்றனர். தங்களது வீடுகளில் நவீன ஜெனரேட்டர்கள் அமைத்து மின்னுற்பத்தி செய்யும் இவர்களது பொருளாதார வலிமை இவ்வாறு பேச வைக்கிறது.

        ரூ.14000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு அணு உலைகளை அப்படியே விட்டு விட முடியாது என மன்மோகன் சிங் ரஷ்யாவில்
பேசியிருக்கிறார்.  ரூபாய் 5000 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்ட சேது
சமுத்திரத் திட்டம் மட்டும் நிறுத்தி வைக்கப்படவில்லையா?  அது மட்டும்
யாருடைய பணம்? சேது சமுத்திரத் திட்டத்தால் பவளப் பாறைகள் அழிந்து
இந்தியப் பெருங்கடலில் பல்லுயிர்ப் பெருக்கம் பாதிப்படையும்; சேது
கால்வாயில் சிறிய ரக கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும்; தற்போதுள்ள பெரிய கப்பல்கள் இதன் வழியே செல்ல வாய்ப்பில்லை என்ற பல உருப்படியான காரணங்கள் கூறப்பட்ட போது அதையெல்லாம் மீறி இத்திட்டம் தொடங்கப்பட்டு பல ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டது.  இந்துக்கடவுள் ராமன் கட்டிய பாலம் கடலுக்கடியில் இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தவுடன் உச்சநீதி மன்றத்தால் தடை அளிக்கப்பட்டது.  இப்படி எவ்வளவோ பணம் இந்தியாவில் விரயமாயிருக்க தமிழகம் அழிந்தாலும் பரவாயில்லை இதை நிறைவேற்றியே தீருவோம் என்ற மத்திய அரசின் முடிவை எதிர்க்க இங்குள்ளவர்களுக்கு துப்பில்லை.

       மாறாக பாமர மக்களை மொழி - இன வெறியூட்டி அதன் மூலம் சுய லாபங்கள் அடையவே இங்குள்ளவர்கள் விரும்புகின்றனர்.  இவர்களிடம் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெறியூட்டப்பட்ட இந்த முல்லைப் பெரியாறு அணை போராட்டக்காரர்கள் மத்தியில், பல மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கிடையில் நீண்ட போராட்டக் களத்தில் இருக்கும் கூடங்குளம் பகுதி அணு உலை எதிர்ப்பியக்க தலித், பிற்படுத்தப்பட்ட, மீனவ மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  இவர்களைப் பார்த்தாவது மொழி / மத / இன வெறியர்கள் குற்ற உணர்விற்கு ஆட்பட்டால் நல்லது.

       இவர்கள் தங்களுக்காகவும் தங்கள் சந்ததிகளுக்காகவும் மட்டும்
போராடவில்லை.  ஒட்டு மொத்த தமிழக மக்களுக்காகவும் ஏன் உலகிற்காகவும் போராடுகிறார்கள்.  இவர்களது போராட்டம் வென்றால் அது மனிதகுலத்திற்கு கிடைத்த வெற்றி.  தோற்றால் அது மனித குலத்திற்கே தோல்வி.  இவர்கள் சாதிக்க முடியாமற் போனாலும் இப்போராட்டம் இந்திய அணு உலைகள் எதிர்ப்பில் ஒரு மைல் கல்லாக இருக்கும். போலித்தனமான மத / இன / மொழி வெறிக் கிளர்ச்சியாளர்களால் எதையும் சாதிக்க முடியாதென்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் பாடம்.

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

எனது கவிதை முயற்சிகள் - தலைப்பிடப்படாத இரு கவிதைகள்

எனது கவிதை முயற்சிகள் 


தலைப்பிடப்படாத இரு கவிதைகள்   

                                   -மு.சிவகுருநாதன் 


01 

எவ்வளவோ வழிகள் 
சென்று திரும்ப 
அடைபட்டுப்போயினதென்றாலும்
கிடைத்துவிட்டதாக 
முடியாத ஒன்றை 
சொல்லியும் விடலாந்தான் 
வந்து விட்டதற்கான 
சுய அடையாளங்களைத் தவிர்த்து 
எஞ்சியதையும்  மாற்ற முடிந்தால்...
இருப்பினும் 
விட்டுவிடத் தோன்றுகிறது 
இதுவும் நடக்கக்கூடும் 
பிடிமானம் 
கூடியிருக்காத வரையில்...

02 

சாந்துப் பொட்டெடுத்து
தூணில் எதோ எழுதிப் பார்க்கிறாள்
தோளில் தொங்குகிற குழந்தையோடு 
எழுத்துக்கள் ஒன்றோடொன்று  
பிணைந்து 
குழந்தையைவிட வேகமாக
அலறுகின்றன 
அவள் எழுதுவது எவன் பெயரை 
அறியத்துடிக்கும் 
திடுக்கிடலில் பல முகங்கள் 
எதோ
முகமற்ற ஒன்றைத்தேடி 
சுயத்தை இழக்கும் 
மனித முகங்கள் 


ஒரு பின் குறிப்பு :- 

சி.சுப்ரமணிய பாரதியின் 130 - வது பிறந்த நாள் இன்று.  என்னுடைய கவிதை முயற்சிகள் இரண்டை இங்கு வெளியிட பாரதியின் கவிதைகள் தந்த துணிச்சல் முதன்மையானது.

சனி, டிசம்பர் 10, 2011

தமிழக காவல்துறையின் அட்டூழியங்கள்

தமிழக காவல்துறையின் அட்டூழியங்கள் 
                                               - மு. சிவகுருநாதன்
(இன்று டிசம்பர் 10, உலக மனித உரிமைகள் நாள்)

உலகம், இந்தியா, தமிழ்நாடு என எந்தப் பகுதியை எடுத்துக்கொண்டாலும் பேரளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது ராணுவமும் காவல்துறைகளும் என்பதை அன்றாட நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.  ஈராக் குடிமக்களை கொடுமைகளுக்குள்ளாக்கிய அபு கிரைப் சிறையில் அமெரிக்க ராணுவ வீரர்களின் வீடியோக்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.  இலங்கையில் நமது அமைதிப்படை வீரர்கள் பண்ணிய அக்கிரமங்கள் பழங்கதை.  ஆப்பிரிக்க - காங்கோ நாட்டில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றிய நமது ராணுவத்தினர் செய்த கொடுமைகளுக்காக ஐ.நா. சபையே தலைகுனிந்து நிற்கிறது.

உலகப் புகழ் பெற்ற காவல்துறை என வருணிக்கப்படுகின்ற (!?) தமிழக காவல்துறையின் அத்துமீறல்கள், பாலியல் வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் எண்ணிலடங்காதவை.  அ.இ.அ.தி.மு.க அரசாகட்டும், தி.மு.க. அரசாகட்டும் இந்த அத்துமீறல்களுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிக்கிறது.  எனவே இதில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் அரசால் ஏக மரியாதை.  அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தப்பித்துக் கொள்வதற்கு அனைத்து உதவிகளையும் அரசே செய்கிறது.  உரிய ஆதாரங்கள் இருந்தும் தொடக்க நடவடிக்கை எடுக்கக் கூட நீதிமன்றங்களில் மிக நீண்ட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

அண்ணாமலை நகர் பத்மினி (1992), அத்தியூர் விஜயா (1993), ரீட்டா மேரி (2001), வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையினரின் 'ஒர்க் ஷாப்' அட்டூழியங்கள் (1993), வாச்சாத்தி வன்கொடுமைகள் (1992), தாமிரபரணிப் படுகொலைகள் (1999 - 27பேர் மரணம்), பரமக்குடி படுகொலைகள் (2011 - 6 பேர் மரணம்) என காவல்துறையின் அயோக்கியத்தனங்கள் தொடர்கின்றன.

இத்தகைய வன்கொடுமைகள் ஒப்பீட்டளவில் தி.மு.க. ஆட்சியை விட அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்தான் அதிகளவில் நடைபெறுகின்றன.  ஜெயலலிதா காவல்துறைக்குக் கொடுக்கும் உச்சபட்ச அதிகாரமும், அத்துறையை செல்லமாக வளர்த்தெடுத்து தங்களது அடியாள் படையாக மாற்றும் முயற்சியினால்தான் இவ்வாறு நடக்கிறது.  காவல்துறையை தங்களது சுய லாபங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் மு.கருணாநிதியும் ஒன்றும் சளைத்தவரல்ல.  

இதனுடைய தொடர்ச்சியாகவே விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் லெட்சுமி (20), வைதேஸ்வரி (20), கார்த்திகா (18), ராதிகா (17) ஆகிய நான்கு இருளர் இனப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைப் பார்க்க முடிகிறது.

இருளர் இனப்பெண்கள் நால்வரையும் நள்ளிரவில் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது போன்றவற்றிற்காக அதற்குக் காரணமான காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது இடைநீக்கத்தைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இடைநீக்கம் தண்டனை அல்ல என்று சென்னை உயர்நீதி மன்றம் கூறிய பிறகும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் ஆபத்தானது.  காவல்துறையினரை மீண்டும் மீண்டும் இத்தகைய வன்கொடுமைகளில் ஈடுபடுவதற்கான உத்வேகத்தை தமிழக அரசு அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம்  இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. இது இழப்பீடா அல்லது காவல்துறையின் அத்துமீறல்களுக்கு விலையா என்ற கேள்வி எழுவதில் வியப்பில்லை.  குற்றம் செய்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இழப்பீட்டை மட்டும் அளிப்பது பாதிக்கப்பட்டோருக்கு நெருக்கடி ஏற்படுத்தி குற்றத்தை மறைக்கச் செய்யும் முயற்சியாகும்.

இப்பிரச்சினை பெரிய அளவில் உருவாகும் போது அதை கண்துடைப்பாக இது மேற்கொள்ளப்படுகிறது.  இழப்பீடு மட்டும் தீர்வாகி விட முடியாது.  இதுவும் ஒரு அம்சம்; அவ்வளவே.  குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், வெறும் இழப்பீடு மட்டும் அளிப்பது கிராமப்புற கட்ட பஞ்சாயத்தை நினைவூட்டுகிறது.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித் உயிர்கள் பலியானதும் இதில் தொடர்புடைய காவல்துறை உயர் அதிகாரிகள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விசாரணைக் கமிஷ­ன் என்ற பெயரில் தங்களுக்கு சாதகமான அறிக்கை பெறவே தமிழக அரசு முயற்சி செய்கிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட ரூபாய் 1 லட்சம் இழப்பீட்டை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தியும் அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படுவதாக தற்போது அரசு அறிவித்துள்ளது.  இது தேவையான நடவடிக்கைதான் என்ற போதிலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது இதுவரை சிறு துரும்பைக் கூட அசைக்காமல் இருப்பதை வேறு எப்படி புரிந்து கொள்வது?

தமிழக காவல்துறையினர் நடத்திய கொடுமைகளை அவர்களே விசாரிக்கும் போது உரிய நியாயம் எப்படி கிடைக்கும்?  இருளர் இனப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் உடனடியாக சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்.  உள்ளூர் போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவரவும், நீதி கிடைக்கவும் துளியில் வாய்ப்பில்லை.  இச்சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை வந்த பிறகு அதுபற்றி முடிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எஸ். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலமாவது உரிய நீதி கிடைக்கும் என்று நம்புவோம்.

வாச்சாத்தி வன்கொடுமைகளுக்கு நீண்ட வழக்குப் போராட்டத்திற்கு பிறகு அண்மையில்தான் தீர்ப்பு கிடைத்துள்ளது.  வீரப்பன் தேடுதல் வேட்டையில் வன்கொடுமைகளுக்கு நீதிபதி சதாசிவா, சி.வி.நரசிம்மன் ஆகிய விசாரணை ஆணையங்கள் அளித்துள்ள பரிந்துரைகள் நடைமுறைக்கு வரவில்லை.  ஆனால் குற்றச்சாட்டுகளுக்குள்ளான காவல் அதிகாரிகளுக்கு பாராட்டுப்பத்திரம், பதக்கங்கள், பண முடிப்பு, கோடிக்கணக்கான மதிப்பில் வீட்டு மனைகள், நேரடி பதவி உயர்வு போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

தாமிரபரணியில் நடந்த படுகொலையை விசாரித்த ஆணையம் பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சாட்டியது.  இதே போலத்தான் பரமக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையும் இருக்கும் என்பதால் பாதிக்கப்பட்டோர் விசாரணை ஆணையத்தை கருப்புக் கொடியேற்றி புறக்கணித்தனர்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுகள் நடத்தும் கொடுமைகள் எண்ணிலடங்காதவை.  சில சமயம் நீதித்துறையும் அரசுகளுடன் இணைந்து விடுவது வேதனையான உண்மையாகும்.

காவல்துறைக்கு இந்த மாதிரியான வானளாவிய அதிகாரங்கள் வழங்குவதும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட அனைத்து வகையான மனித உரிமை மீறல்களுக்கும் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் வழங்குவது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அதிகாரவர்க்கம் உணர்ந்து கொள்வதேயில்லை.

ஒடுக்கப்பட்டோரை வீழ்த்துவதற்கும், மக்கள் போராட்டங்களை ஒடுக்கவும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கவும் ஒவ்வொரு அரசும் காவல்துறையை தம் கைப்பாவையாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.  இந்நிலையைத் தடுக்க நீதிமன்றங்களுக்கு மட்டும் பதில் சொல்லக் கூடிய அமைப்பாக அரசியல் தலையீடின்றி காவல்துறை செயல்பட வழி வகுக்க வேண்டும்.

அரசின் அதிகாரத்தின் கீழ் மக்களுக்காக செயல்பட வேண்டிய ஒரு துறை தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை அரசு கண்டும் காணாமல் இருக்கும்போது நீதிமன்றங்கள் உரிய வழிகளில் நீதியை நிலைநாட்டுவது அவசியம்.

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு:- காங்கிரஸ், பா.ஜ.க.வின் பொய் முகங்கள்

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு:
காங்கிரஸ், பா.ஜ.க.வின் பொய் முகங்கள்                              
                                                               - மு. சிவகுருநாதன்
 
 
சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை (FDI)  51 சதவீதமாக அதிகரிக்க ஐக்கிய முன்னணி அமைச்சரவை முடிவு செய்தது.  இதனை எதிர்த்து சென்ற டிசம்பர 01, 2011 தேசியஅளவில் மிகப் பெரிய கடையடைப்பை வணிகர்கள் நடத்தியிருக்கிறார்கள்.  சுமார் 10 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிப் போன பிற்பாடு இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது. திருணாமூல் காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.   தி.மு.க. காங்கிரசின் எந்தத் திட்டத்தையும் எதிர்க்கப்போவதில்லை.  கனிமொழியை வழக்குகளிலிருந்து விடுதலை செய்து விடும் ஒரம்சத் திட்டம் மட்டுமே நிறைவேற வேண்டும் என்பது தி.மு.க.வின் எதிர்பார்ப்பு.

அணு உலை இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற குதிரை பேரங்களை நடத்திய பிரதமர் மன்மோகன்சிங் இதிலும் வீராவேசமாகப் பேசி முடிவிலிருந்து பின் வாங்க முடியாது என்றார்.  மீண்டும் குதிரைபேரம் நடத்த சாத்தியமில்லையோ என்னவோ! திடீரென்று அரசு தற்காலிமாக பின் வாங்கியிருக்கிறது.  மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது  இதை நிறைவேற்றத்தான் போகிறார்கள்.  

இடதுசாரிகளுக்கென்று தனித்த பொருளாதாரக் கொள்கை உள்ளது. அவர்கள் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதில் அர்த்தமுண்டு.  ஏற்கனவே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்த போது, காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்ததால் இம்முடிவு கைவிடப்பட்டது.  இப்போது பா.ஜ.க.வின் காலம் அவ்வளவே.

நேரடி அந்நிய முதலீட்டை ஆதரித்தால் பன்னாட்டுக் கம்பெனிகள் இதற்கு பிரதியுபகாரமாக அக்கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக பணத்தைக் கொட்டுகின்றன.   எதிர்க்கின்ற அரசியல் கட்சிகள் உள்நாட்டு வணிகர்களிடம் பெருமளவு பணத்தை தேர்தல் நிதியாக வசூல் செய்து விடுகின்றனர். பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இரு தரப்பிலிருந்தும் நிதி வந்து விடுகிறது.  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் இவர்கள் வசூல்வேட்டையில் ஈடுபடுவார்கள்.  பாதிக்கப்படப் போவது அப்பாவி பொதுமக்களும் வணிகர்களுந்தான்.  விலைவாசி உயர்வை எதிர்த்துப் பேசிவிட்டு, இடதுசாரிகள் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பா.ஜ.க. கட்சி வாக்களித்தது நினைவிருக்கலாம். இவற்றிலிருந்து
பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் இரட்டை வேடம் அம்பலமாகும்.
 
சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தால் கீழ்க்கண்ட நன்மைகள் ஏற்படுமென பரப்புரை செய்யப்படுகிறது.  எடுத்துக்காட்டாக சிலவற்றைப் பார்ப்போம்.

01. இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதால் வேளாண் விளை பொருட்களின் விலை குறையும்.

தற்போது online வர்த்தகம், யூக வர்த்தகம் போன்றவை நடைபெறுகிறது.  இதனால்தான் விலைவாசி உயர்ந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.  எனவே அந்நிய முதலீடு வந்தால் விலை குறையும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல.  மக்களைக் கவர்வதற்கு முதலில் விலைகள் குறைக்கப்பட்டாலும் பிறகு எவ்வளவு உயரும் என்பது யாருக்கும் தெரியாது.

02. கூடுதல் வேலை வாய்ப்பு உருவாகும்

இப்போது இருக்கும் பல லட்சம் வேலை வாய்ப்புக்களைப் பறித்து விட்டு புதிய சில லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று சொல்வது பித்தலாட்டம். அதுவும் கல்வித் தகுதியுயைவர்க்கே கிடைக்கும்.  சாதாரணமாக அனுபவத்தில் பணியாற்றிக் கூடியவர்களுக்கு என்ன மாற்று வழி?  இதனால் சமூகத்தில் பல்வேறு குழப்பங்கள் உண்டாகும்.

03. இது அவசரப்பட்டு எடுத்த முடிவல்ல.  இது நாட்டுக்கு நல்லது.

பாரம்பரிய விவசாயத்தில் பாதியை பசுமைப்புரட்சி அழித்து விட்டது.  மீதியை இந்த அந்நிய முதலீடு அழித்து விடும்.  என்ன பயிரைச் சாகுபடி செய்வதென்ற விவசாயிகளின் உரிமை பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் போய்விடும்.  ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி இங்கே அவுரி சாகுபடி செய்ய கட்டாயப்படுத்திய பழைய வரலாறு மீண்டும் திரும்பும்.  மன்மோகன்சிங் போன்ற பன்னாட்டு கைகூலி கும்பல்களுக்கு வேண்டுமானால் இது நன்மையாக இருக்கலாம்.

04. உள்ளூர் மளிகைக் கடைகளுக்கு எவ்வித பாதிப்பும் வராது.

பன்னாட்டுக் கம்பெனிகள் கடனும், வீடு தேடிச் செல்லும் சேவையும் (door delivery) செய்யாது.  இவற்றைச் செய்கின்ற காரணத்தால் உள்ளூர் மளிகைக் கடைகள் தொடர்வதில் எவ்வித சிக்கலும் இல்லை என்கிறார்கள்.  கடன் கொடுத்த காரணத்தினாலேயே பல முதலீட்டை இழந்து தெருவில் நிற்கிறார்கள்.  பன்னாட்டுக் கடைகள் வரும்போது சிறிய கடைகள் தானாகவே மறைந்து போகும்.

மையப்படுத்தப்பட்ட பல்நோக்கு மருத்துவமனைகள், பெரிய துணிக்கடைகள், பெரிய நகைக்கடைகள் வந்த பிறகு குறைந்த முதலீட்டுக் கடைகள் எல்லாம் ஈயோட்டிக் கொண்டுதான் உள்ளன.  இந்த விளம்பர யுகத்தில் இவற்றால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.  கொக்கோ கோலா, பெப்ஸி வந்த பிறகு இங்கிருந்து உள்ளூர் குளிர்பானங்கள் என்னவாயின என்பது நாமனைவருக்கும் தெரியும்தானே!

05. கொள்முதலில் 30 சதவீதத்தை சிறு, நடுத்தர நிறுவனங்களிடமிருந்துதான் வாங்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்திருப்பதால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நெருக்கடி வராது.

பெருகியுள்ள இன்றைய கார்ப்பரேட் ஊழல் கலாச்சாரத்தில் இந்த நிபந்தனைகளை யார் மேற்பார்வையிட்டு சரியானவற்றை கண்டுபிடிப்பது? யாரிடம்முறையிட்டு நிவாரணம் பெறுவது?  இவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது விவசாயிகளுக்கு இதனால் பெரிய பாதிப்புகள் உண்டாகும்.  இந்த கார்ப்பரேட்களிடம் லாபி செய்யும் புதிய இடைத்தரகர்கள் உருவாகி விடுவார்கள்.  இந்த நல்வாய்ப்பு நமது அரசியல்வாதிக்குத்தான் கிடைக்கும் என்பதில் அய்யமில்லை.

இவை உதாரணத்திற்கு மட்டுமே.  இவர்கள் சொல்லும் எந்த வாதங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.  பணவீக்கம், விலைவாசி ஆகியன இதன் மூலம் குறையும் என்று  ஓயாது கூப்பாடு போடுகிறார்கள் மெத்தப்படித்த பொருளாதார மேதைகள்.  இதுவரை அவர்கள்  கொண்டுவந்த  எந்தத் திட்டம் மற்றும் நடவடிக்கைகளினால் சிறிதும் குறையாத விலைவாசி இதனால் மட்டும் குறையும் என்பது கேப்பையில் நெய் வடியும் கதைதான்.

அமெரிக்காவில் இந்த முதலாளிகளுக்கு எதிராக 'வால் ஸ்ட்ரீட்' போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற வேளையில் அந்த முதலாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் வேலையைச் செய்யும் மன்மோகன்சிங் வகையறாக்களை வரலாறு மன்னிக்காது.  அமெரிக்கர்களே இவற்றிற்கு எதிராக கிளர்ந்தெழும்போது நாம் ஏன் இவர்களை சுமக்க வேண்டும்?

ஒத்திவைப்பு தீர்மானமும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்றதுதான்.  நாடாளுமன்ற பொதுத் தேர்தலை தவிர்க்கவே இந்த நிறுத்தி வைக்கும் முடிவெடுக்கப்பட்டதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சொல்லியுள்ளார்.  பணத்தை வாரி இறைத்தாவது பதவியில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் மன்மோகன்சிங்குகளுக்கு இந்தப் பயமாவது இருக்கிறதே எனும்போது மக்கள் சக்தியின் வலிமை புரிகிறது.

செவ்வாய், டிசம்பர் 06, 2011

பாம்புகளைப் புரிந்து கொள்வோம்!

பாம்புகளைப் புரிந்து கொள்வோம்!
 
                                 - மு. சிவகுருநாதன்

 
 
(பொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை வெளியிட்ட ச.முகமது அலியின் 'பாம்பு என்றால்?' என்ற நூல் குறித்த பதிவு)

நமது நாட்டில் பாம்புகளைப் பற்றிய புனைவுகளுக்கும் புராணங்களுக்கும் பஞ்சமில்லை.  உலகெங்கிலும் கூட இதே நிலைதான்.  இங்கு மண் புழுக்கள் மட்டுமே உழவனின் நண்பனாகப் போதிக்கப்பட்டு வந்துள்ளது. எலிகளைப் பெருமளவில் கட்டுப்படுத்துகின்ற காரணத்தால் பாம்புகளும் விவசாயிகளின் தோழனாக அறியப்பட்டிருக்க வேண்டும்.  இது ஏன் நடைபெறவில்லை என்பதை தனியே ஆய்வு செய்ய வேண்டும்.  இவற்றைப்போல எண்ணற்ற புழு, பூச்சியினங்கள் இன்று நாம் பயன்படுத்தும் வேதியுரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் மாண்டொழிகின்றன.


        பிரேம்:ரமேஷ் தங்களுடைய நாவலொன்றில் கிழக்குக்கடற்கரை சாலையை கடக்கும் எத்தனத்தில் மரவட்டைகள் அழிவது பற்றி சிலாகித்து எழுதி இருப்பார்கள். இதுதான் இன்றைய வளர்ச்சியின் பலன்!
நாள்தோறும்  சாலையைக் கடக்கும் எண்ணற்ற பாம்புகள் பாதியில் மரணமடைகின்றன.
 
கால்கள், கண் இமைகள், புறச்செவிகள் இல்லாத ஊனுண்ணியான ஊர்வன வகையைச் சேர்ந்த பாம்புகள் சுமார் 3000 வகைகள் இருப்பினும் அவற்றில் ஒரு சிலவே மனிதனைக் கொல்லும் தன்மையுடையது.  பெரும்பாலானவை உணவுக்காக மட்டுமே நஞ்சைப் பயன்படுத்துகின்றன.  மனிதர்களுக்குப் பயப்படும் இவை அவர்களால் தொல்லை ஏற்படும் போது மட்டுமே கடித்து வைக்கின்றன.

மனித இனத்தை விட நீண்ட பாரம்பரியம் கொண்ட பாம்பினங்கள் பற்றிய கட்டுக்கதைகளை உலவவிட்டதில் இராம.நாராயணன் போன்றவர்கள் எடுத்த நாலாம்தர தமிழ் சினிமாக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.  பாம்புகள் பழி வாங்கும், பால், முட்டைகளை அருந்தும் என்றெல்லாம் கிராபிக்ஸ் செய்து மக்களை மழுங்கடிக்கும் அன்றை புராண வேலைகளுக்கு இவர்கள் மெருகூட்டினார்கள்.
ச. முகமது அலியின் 'பாம்பு என்றால்?' என்ற இக்குறு நூல் 14 தலைப்புகளில் பாம்புகள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  விரிவாக இல்லாவிட்டாலும் பாம்புகளைப் பற்றி அறியாமைகளைப் போக்க இது தொடக்கநிலை நூலாக அமையக் கூடியது இந்நூல்.  பாம்புகளின் பற்கள் அமைப்பு, அதன் நச்சுத் தன்மை, கடித்த பின் செய்ய வேண்டிய முதலுதவி போன்றவற்றை இந்நூல் விளக்குகிறது.

இந்நூல் முழுவதும் பாம்புகள் பற்றிய படங்கள் நிறைந்துள்ளன.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருளர் பழங்குடியினர் பாம்புகளைப் பிடித்து நச்சை மட்டும் எடுத்துவிட்டு மீண்டும் உயிருடன் விட்டு விடும் முறை ரோமுலஸ் விட்டேகரின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்தை எடுத்துக்காட்டி பழங்குடியினப் பண்பாடுகளில் பாம்பு முக்கிய அங்கம் பெற்றிருப்பதையும் விளக்குகிறது.


       மக்களின் பொதுப்புத்தியில் கற்பிதங்களை உலவவிடுவதில் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.  சமூகத்தில் உள்ள பல்வேறு நோய்களைக் குறிக்க அவற்றை பாம்பாக உருவகம் செய்து தினமணியில் வெளியான மதியின் கேலிச் சித்திரம் மற்றும் இந்து கேசவ்-ன் கேலிச் சித்திரம் ஆகியவற்றை குறிப்பிட்டிருப்பது நன்று.

பாம்புக்கடியை ஒரு விபத்தாகக் கொள்ளாமல் மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் இதை அணுகுவதால் ஆண்டிற்கு லட்சக்கணக்கானோர் பாம்புக்கடியால் மடிய நேரிடுகிறது.

பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கைகளை அகற்றுதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.  பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் இத்தகைய பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும். 

தற்போதைய சமச்சீர் கல்வித் திட்ட பாடநூற்களில் ஊர்வன (பாம்புகள்) பற்றிக் குறிப்பிட வாய்ப்புகள் இருந்தும் அவ்விடங்கள் வெறுமையாகவே உள்ளன.   சிங்கம், புலி, ஆமை, பறவைகள் போன்றவையே பாதுகாக்கப்பட வேண்டியவையாக பட்டியலிடப்படுகின்றன.

ஆறாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் எச்சரிக்கை என்ற தலைப்பில் ராஜநாகம் படம் போட்டு பீதியூட்டப்பட்டு, இறுதியில் பாம்பைக் கண்டதும் கொல்லும் செயல் அந்த உயிரினத்தையே அழித்து விடும் என ஆதரவுக்கரம் நீட்டப்பட்டுள்ளது. 

மாறிவரும் நமது ஆட்சியாளர்கள் அனைவரும் அணுசக்தி, அணுகுண்டு ஆதரவாளர்கள் என்பது நாமனைவரும் அறிந்ததே.  ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் மரபு சார்ந்த, மரபு சாராத ஆற்றல் மூலங்கள் பற்றி பேசப்படுகிறது.  நீர் மின்சக்தி, அனல் மின்சக்தி, அணு மின்சக்தி ஆகியவற்றின் தீமைகள் எதையும் குறிப்பிடாமல் சூரிய சக்தி, ஓத அலை சக்தி, காற்றாடி சக்தி ஆகியவற்றின் இடர்பாடுகள் வண்ணத்தில் கட்டம் கட்டி கூறப்படுகிறது.  இதிலிருந்து இவர்களது நோக்கம் தெளிவாகப் புரிகிறது.

இப்படிப்பட்டவர்கள் இயற்கையின் மீதும் கானுயிர்கள் மீதும் பற்றுதல் ஏற்படுத்தக் கூடிய பாடங்கள் மூலம் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் என நம்ப இடமில்லை.  பள்ளி மாணவர்கள் தனிப்பட்ட முறையிலாவது இந்த மாதிரியான நூற்களைப் படிக்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் உதவ வேண்டும்.

பாம்பு என்றால்? - ச. முகமது அலி
 
பக். 72. விலை. ரூ. 50/-
 
வெளியீடு
 
இயற்கை வரலாறு அறக்கட்டளை,
மே/பா. ஆல்வா மருத்துவமனை வளாகம்,
அம்பராம்பாளையம்,
பொள்ளாச்சி - 642 103.
தொலைபேசி: 04259 - 253252, 253303 
 
 

இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை முன்னகர்த்திய தலைவர்

இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை முன்னகர்த்திய தலைவர்
                                                                         - மு. சிவகுருநாதன்


'உன்னதம்' இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான கெளதம சித்தார்த்தன் இன்றைய கல்வி முறையிலுள்ள குறைபாடுகளைச் சுட்ட, இன்று பள்ளியில் படிக்கும் மாணவியொருத்திக்கு விவேகானந்தரைப் பற்றி தெரிந்திருக்கவில்லை என்று அங்கலாய்த்திருக்கிறார்.   இதற்கு வேறு எந்த அர்த்தமிருப்பினும் விவேகானந்தரை நமது பாடத்திட்டம் உரிய முறையில் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவில்லை என்ற ஆதங்கமும் உண்டு தானே!  
        பத்தாம் வகுப்பு  சமச்சீர் கல்வி சமூக அறிவியலில் '19ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்தங்கள்' என்ற பாடத்தில் ராஜாராம் மோகன்ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி, அன்னிபெசன்ட், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் பற்றி பக்கம் பக்கமாக எழுதிவிட்டு இப்பாடத்தில் அம்பேத்கருக்கு இரு பத்தியும் பெரியாருக்கு ஒரு பத்தியும் ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் மாறி மாறி ஆளும் இரு திராவிட கட்சிகளின் தலித் விரோதப் போக்கு புரிந்து கொள்ளக்கூடியது.  பெரியாரையும் முழுவதுமாக இருட்டடிப்பு செய்ய இப்பக்கத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.  அம்பேத்கர் என்ற பெயரை நமது பாடநூற்கள் அம்பேத்கார் என்றே தொடர்ந்து எழுதுகின்றன.  இதுவும் கண்டிக்க வேண்டிய போக்கு ஆகும்.

டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தலித் மக்களின் கடவுளாகக் கருதப்படுகிறார் என்று சொல்லும் இப்பத்தியில் 1990 ஆம் ஆண்டில் 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டதையும் தெரிவிக்கிறது.  அவருடைய விலக்கப்பட்டோர் நலச்சங்கம் -பாசிகிருகித் காரணி சபா என்றும் குறிப்பிடப்படுகிறது.

புத்தர், மகாவீரர் போல டாக்டர் அம்பேத்கர் இங்கு எப்போதும் கடவுளாகக் கருதப்பட்டதில்லை.  தலித் மக்கள் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்டோர் அனைவரின் உரிமைக் குரலாகவும் அவர்கள் கிளர்ந்தெழ ஆதர்சமாகவும் விளங்கியவர் அவர்.  புத்தர், மகாவீரர் போன்றவர்களை கடவுளாகவும் அவதாரமாகவும் மாற்றியதைப் போல் அம்பேத்கரையும் சிமிழுக்குள் அடைக்க முயல்வது ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட தொண்ணூறுகளில்தான் அவருடைய எழுத்துகள் தமிழகத்தில் அதிகம் வாசிக்கப்பட்டும் இங்கு தலித் இயக்கங்கள் கட்டப்பட்டும் தலித் மக்கள் மத்தியில் போராட்ட உணர்வு வெளிப்பட்டது.  இங்கோ அல்லது இந்தியாவில் எங்கும் அவர் கடவுளாக வழிபடப்படுவதில்லை.  ஒடுக்கப்பட்ட தலித்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவே இது போன்ற கூற்றுகள் பயன்படும்.


தலித்களுக்காக மட்டுமல்லாது இந்து மத சாதிக்கொடுமைகைள அனுபவித்த அனைத்து  ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் உழைத்த அண்ணலுக்கு 1990இல் அதாவது 1988-ல் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு 'பாரத ரத்னா' வழங்கப்பட்டதற்கு பிறகு வழங்கப்பட்டது.  இத்தகைய விருதுகளில் அண்ணல் புகழடையவில்லை என்பது முதற்கண் இவர்கள் உணர வேண்டும்.  அம்பேத்கர் பற்றி கூறுவதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்க அதைச் சொல்லாமல் விட்டு விட்டு இதை மட்டும் கூறுவது ஏன்?

அம்பேத்கரின் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை இயக்கத்தை 'பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா' (Bahishkrit Hitaharini Sabha) என்பதைக் கூட ஏதோ பாசி, காரணி என தாவரவியல், கணிதவியல் சொற்களைச் சேர்த்து 'பாசிகிருகித் காரணி சபா'   என்று பாடநூல் எழுதும் மடையர்களை என்ன செய்வது?  தலித்கள், ஒடுக்கப்பட்டோர் பற்றிய எவ்வித புரிதல்கள் அற்ற இந்த செத்த மூளைகள் எதிர்கால சந்ததியினருக்கு அம்பேத்கர், பெரியார் போன்றோரை எப்படி அறிமுகம் செய்வார்கள் என்பதற்கு இதுவோர் உதாரணம் மட்டுமே.  விவேகானந்தரை எழுத மட்டும் இவர்களது பேனா  நீள்வது ஏன்?  இந்துத்துவா அரசுகள் தயாரித்த பாடநூற்களில் இவ்வாறு இருந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை.  ஆனால் திராவிட இயக்க ஆட்சியில் நடப்பதுதான் வேதனை.

இந்து மத சாதிவெறி தீண்டாமைக் கொடுமைகளால் பிறப்பு முதல் பாதிக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களுக்கிடையே தம்முடய உயர்கல்வியை முடித்தவர் அம்பேத்கர்.   தன் குடும்ப வாழ்வில் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கங்கள், உரிமைகளுக்கான போராட்டங்கள், படிப்பு, ஆய்வுகள், எழுத்துகள், அரசியல் சட்டம் எழுதும் பணி, சட்ட அமைச்சர் என்ற பல்வேறு பரிமாணங்களில் தம் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தவர் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க தம் பதவி துணை புரியாது என்ற நிலை ஏற்பட்ட போது அதை தூக்கியெறிந்த உத்தமர் இவர்.

நான் இந்துவாகப் பிறந்து இங்குள்ள சாதிக் கொடுமைகளை அனுபவித்தேன்.  இதிலிருந்து இன்று வரை விடுதலை கிடைக்காதபோது இந்துவாக சாகமாட்டேன் என்று சொல்லி ஆயிரக்கணக்கானோர்களுடன் பவுத்த மதத்தில் அய்க்கியமானதை இங்கு குறிப்பிட்டிருக்க வேண்டுமல்லவா! அப்போதுதான்  ராஜாராம் மோகன்ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்றோர் தீண்டாமையை ஒழிக்க என்ன செய்தார்கள் என்பதை வருங்கால சந்ததி உணர்ந்து கொள்ளும் என்பதால் இந்த மறைப்பு வேலை இவர்களுக்குத் தேவைப்படுகிறது.

அம்பேத்கர் தலித் விடுதலைக்கு மட்டும் போராடவில்லை.  அப்படியிருந்தால் 'சூத்திரர்கள் யார்?' எனும் ஆய்வு நூலை அவர் வெளியிட்டிருக்க வேண்டியதில்லை.  அவர் பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா, சுதந்திரத் தொழிலாளர் கட்சி, அட்டவணை சாதி கூட்டமைப்பு, குடியரசுக் கட்சி என ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையைத் தரக்கூடிய அனைத்து வகையான சாத்தியங்களையும் முயன்று பார்த்தவர். இதில் வெற்றி - தோல்வி என்று கட்சி கட்ட வேண்டிய அவசியமில்லை.  சில வெற்றிகளும் பல தோல்விகளும் இருந்த போதிலும் இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையை முன்னகர்த்திய ஒரு தலைவராகவே அம்பேத்கர் என்றும் நினைக்கப்படுவார்.  அம்பேத்கரை விக்ரகமாக்கி பூட்டி வைக்கும் இந்துத்துவா முயற்சிகள்  இங்கு எடுபடாது என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.  ஒரு விடுதலைப் போராளியை கடவுளாக மாற்றும் கைங்கர்யம் ஒருவகையான  பார்ப்பனத் தந்திரமே.

(டிசம்பர் 06, 2011 அண்ணல் அம்பேத்கரின் 55-வது நினைவு தினம்.  இதையொட்டி இப்பதிவு வெளியாகிறது)

வியாழன், டிசம்பர் 01, 2011

டேம் 999: - தடை தீர்வாகுமா....?

டேம் 999: - தடை தீர்வாகுமா....?
                                                                             -மு. சிவகுருநாதன்
 



 
 
 
மக்கள் எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரத்தை நமது ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தாங்களாகவே எடுத்துக் கொண்டுள்ளனர்.   நமது ஜனநாயக அமைப்பில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை இதன் மூலம் நிராகரிக்கப்படுகிறது.  சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போன்றோரது நூல்களும் டாவின்சி கோட் போன்ற திரைப்படங்களும் இங்கு தடை செய்யப்பட்டது பழங்கதை.   இப்போது டேம் 999 என்ற திரைப்படம் ஒட்டுமொத்த தமிழக அரசியல்வாதிகளால் எதிர்க்கப்பட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படத்தைத் தடை செய்வதற்கு வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியிருப்பவர்கள் 100 நாட்களைத் தாண்டும் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தை மட்டும் ஏன் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள்?  கேரள அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து பின்னும் இவர்கள் திருந்தாதது வருத்தமளிக்கக் கூடியது. 

முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கத்தால் உடைய வாய்ப்பு உள்ளதால் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் முடிவிற்கு பல்வேறு உள்நோக்கங்கள் உண்டென்றாலும் நிலநடுக்கம் குறித்த மக்களின் அச்சம் நியாயமானது.  கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போலவே இதையும் எதிர் கொள்ள வேண்டும். 

கேரளாவில் முன்பு இருந்த இடதுசாரி அரசும் தற்போதுள்ள காங்கிரஸ் அரசும் ஒரே கருத்தில் பெரியாறு அணைக்கெதிராக மக்களிடையே தீவிர பிரச்சாரம் செய்தும் மத்திய அரசில் லாபி செய்தும் காரியத்தை சாதிக்க முயலுகின்றன.  மத்திய அரசின் மறைமுக ஆதரவும் கேரள அரசுக்கு இருக்கிறது.

நவம்பர் 18, 2011 அன்று கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நிலநடுக்கம் 2.7 ரிக்டர் அளவே இருந்த போதிலும் கேரள அரசின் சார்பில் மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறை இயக்குநர் ஜான் மாத்யூ தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.  இடுக்கி மாவட்டம், நிலநடுக்க மாவட்டமாக உள்ளதால், இரண்டாவது அடுக்குப் பாறை நகரும் வாய்ப்பு உள்ளது.  இந்நகர்வின் மூலம் பழைமையான அணை உடைய வாய்ப்பு உள்ளது என்று ஜான் மாத்யூ கூறியுள்ளார்.  (தினமணி நவம்பர் 28, 2011)

கேரள அரசின் சுமார் ரூ. 600 கோடி செலவில் புதிய அணையை தாங்களே கட்டிக் கொள்கிறோம் என்றும் தமிழகத்திற்கு உரிய நீர் தருவதற்கு உத்திரவாதம் எழுதித் தரத் தயார் என்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.  அணை தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.  இது குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.  நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சினையைப் பேசித் தீர்க்க வேண்டுமென கேரள தரப்பு அவசரப்படுகிறது.   
 
காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் கர்நாடக அரசின் நடவடிக்கை தமிழகத்திற்கு எதிராக இருந்த அனுபவம், கேரள அரசு சொல்லும் எந்த உத்திரவாதத்தையும் நாம் நம்பக் கூடியதாக இருக்கவில்லை.  கர்நாடக அரசு காவிரிப் பிரச்சினையில் நடுவர் நீதி மன்றத் தீர்ப்பு உள்ளிட்ட எந்த நீதி மன்றத் தீர்ப்புகளுக்கும் கட்டுப்படவில்லை என்பது நாம் கண்ட பலன்.  மத்திய அரசோ, உச்ச நீதிமன்றமோ கர்நாடகத்தை பணிய வைக்க எதுவுமே செய்யவில்லை.   இதைப் போலவே கேரள அரசு, பிற்காலத்தில் தனது உறுதிமொழியை மதிக்கும் என்று நம்புவதற்கு இடமில்லை.  காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கேரளத்தை பணிய வைக்கும் என்றோ, தமிழகத்தின் நலன்களுக்கு ஆதரவாக செயல்படும் என்றோ துளியும் நம்பிக்கை கொள்ளவும் வாய்ப்பில்லை.

பிறகு இதற்குத் தீர்வுதான் என்ன?  இரு மாநில அரசுகளும் ஆய்வு என்ற பெயரில் தத்தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன.  இதில் எதில் உண்மையான ஆய்வு?  இரண்டும் பக்கச் சார்பு உடைய ஆய்வுகளாகத்தான் இருக்கின்றன.  கூடங்குளம் பிரச்சினையில் ஆய்வு செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, அணு சக்தி கமி­ஷனில் உள்ளவர்களையும் அணு சக்தி ஆதரவாளர்களையும் களமிறக்கி மக்களின் அச்சத்தைப் போக்குகிறேன் என்று திசை திருப்பியதைப் போலல்லாமல் நடுநிலையான பன்னாட்டு ஆய்வுக்குழுவைக் கொண்டு நேர்மையான ஆய்வை முல்லைப் பெரியாறு, கூடங்குளம் ஆகிய இரண்டுப் பிரச்சினைகளிலும் செய்ய வேண்டும்.  அப்போது நடுநிலையான உண்மை என்ன என்பது வெளிச்சத்திற்கு வரும்.  இதற்கு மத்திய - மாநில அரசுகள் தயாராக இல்லாதது வேதனையான உண்மை.  
 
          நடுநிலையான வெளிநாட்டு அறிஞர்கள் இடம் பெற வேண்டும் என்று கேட்பது இங்கு தேசத் துரோகமாக பார்க்கப்படுகிறது.  சிறப்புப் பொருளாதார மண்டலம், நேரடி அந்நிய முதலீடு, சில்லரை வணிகத்திலும்  அந்நிய முதலீடு, அரசுத் துறைகளை பன்னாட்டு முதலாளிகளிடம் விற்பது, இந்நாட்டின் கனிம வளத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது, அமெரிக்காவின் நலன்களுக்கு காவடி எடுப்பது போன்ற எச்செயலும் தேசப் பற்றாக மதிக்கப்படும் தேசத்தில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று கிளிப்பிள்ளை போல் மத்திய - மாநில அரசுகள் சொல்லிக் கொண்டிருப்பதைப் போல முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று சொல்வதில் அர்த்தமில்லை.  முறையான நடுநிலையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம்.

நிலநடுக்கம் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் பெரிய அணைகள் கட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.  இருக்கும் பழைய அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் பாதுகாப்பிற்கு உகந்ததாக இருக்க முடியாது.  அணையின் பலம் பற்றிய சர்ச்சை தீராத நிலையில் பெரியாறு அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து முறையான ஆய்வுக்குப் பிறகே இறுதி முடிவெடுக்க வேண்டும்.   மேலும் இவற்றை நீதிமன்றங்கள் முடிவு செய்வது வெறும் சட்ட விதிகளுக்கு உள்பட்டதே அன்றி பேரிடர்களின் பாதிப்பைக் கொண்டு அல்ல.  
 
முல்லைப் பெரியாறு அணை பலமிழந்திருந்தால் அதை வலுப்படுத்துவது அல்லது அதற்கு அருகில் புதிய அணையை நிர்மாணிப்பது என்பது பற்றி யோசிக்க வேண்டும்.   கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சிக்கும் இடமும் நிலநடுக்கப் பாதிப்புக்குட்பட்ட பகுதியில்தான் இருக்கிறது.  கட்டப்படும் புதிய அணையும் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் அம்முயற்சி உடன் நிறுத்தப்பட வேண்டும்.  பெரியாறு அணையில் உள்ள கசிவுகள் குறித்து தமிழக அரசு புது விளக்கம் அளிக்கிறது.   அது விரிசலால் ஏற்பட்டதா அல்லது அணையின் கட்டுமானம், வலுப்படுத்தியதன் கோளாறா என்பதை நடுநிலையான ஆய்வுகள்தான் முடிவு செய்ய வேண்டும்.  இதற்குத்தான் மூன்றாவது தரப்பு ஆய்வு தேவைப்படுகிறது.

ஆனால் இங்கு என்ன நடக்கிறது?  நில அதிர்வால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு இல்லை என்று தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவும் பாதிப்பு உண்டு என கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் சாதிக்கிறார்கள்.  தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் போன்றவை ஒரு சேர டேம் 999 படத்தைத் தடை செய்தால் மட்டுமே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நோக்கத்தில் செயல்படுவதாகத் தெரிகிறது.  டேம் 999 திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி திரையிடப்படவுள்ளது என்றவுடன் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்ற பலரும் தடை விதிக்க கோரிக்கை வைத்தனர்.   இப்பிரச்சினை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நவம்பர் 23 -ல் எழுப்பப்பட்டது.  

தமிழக அரசு நவம்பர் 24 -ல் டேம் 999 படத்தைத் திரையிட தடை விதித்தது.  இத்தடை அளிக்கப்படுவதற்கு முன்னதாகவே தமிழகத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இப்படத்தை திரையிடப் போவதில்லை என்று முடிவெடுத்தது.  இதற்குப் பிறகு தடை என்பதில் கூட அர்த்தமில்லை.

இப்படத்தை வெளியிட்டால் தங்களது திரையரங்குகள் சேதப்படுத்தப்படும் என்ற அச்சம் உரிமையாளர்களுக்கு இருந்தது.  அதை நிரூபிக்கும் விதத்தில் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பை அத்திரைப்படத்தின் பிரிமியர் காட்சி என நினைத்த ஒரு தரப்பினர் பிலிம் ரோல்களை உருவி எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் முதல்வர் ஜெ. ஜெயலலிதா ராஜூவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு ஆதரவாக சட்டசபையில் முதல் நாள் மறுத்துவிட்டு மறுநாள் தீர்மானம் போட்டது மற்றும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோரை திருப்திபடுத்துவதற்காக மக்களின் அச்சம் நீங்கும் வரையில் அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதைப் போலவே டேம் 999 படத்தை திரையிட தடை விதித்து தமிழ் உணர்வாளர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார்!.  இது அதிரடியாக சிலரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட முடிவு என்பதில் அய்யமில்லை.
மூவருக்குத் தூக்குத் தண்டனை, கூடங்குளம் அணு உலை ஆகிய பிரச்சினைகளில் அமைச்சரவைத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை கண்டு கொள்ளப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.  இதன் வழியாகவே இந்தத் தீர்மானங்கள், தடை பற்றிய உள்ளார்ந்த அக்கறை நமக்குப் புலப்படும்.  மூன்று பேரை மரணத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்கு ஈடாக இங்குள்ள தமிழர்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் சுட்டுக்கொல்ல தமிழ் தேசியர்கள் பலர் ஜெ. ஜெயலலிதாவிற்கு அனுமதி அளித்திருக்கிறார்கள்.

மரண தண்டனைக்கு எதிராகக் குரல்கொடுக்கும் தமிழ் தேசியர்கள் அப்சல் குரு, கஸாப் போன்றோரின் தூக்குத் தண்டனை குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள்.   மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத இவர்கள் இயக்கங்கள் அளிக்கும் மரண தண்டனை குறித்தும் பேச விரும்புவதில்லை.  பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு சீக்கியரின் உயிரைத் தவிர வேறு எந்த உயிரும் மன்மோகன் சிங் போன்றவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை.

ஸ்டெர்லைட், கூடங்குளம் போன்ற மக்களைப் பாதிக்கும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் நேர்மையான நிலைப்பாட்டை எடுக்கும் வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் கருத்துரிமை பற்றிய விஷ­யங்களில் சறுக்குகின்றனர்.   டேம் 999 படத்தை மக்கள் பார்த்துப் பீதியடைவார்கள் என்பது அறிவீனம்.  இப்படத்தால் கேரள அரசின் நிலை வலுவடையும் என்றும் தமிழக அரசின் நிலைப்பாடு பலவீனமடையும் என்றும் இவர்கள் எப்படி முடிவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை?  இந்தப்படம் பீதியைத் கிளப்பும் என்றால் தமிழக அரசு சொல்லி வரும் அணை பாதுகாப்பாக உள்ளது என்ற வாதம் பொய்யானது என்று ஒத்துக் கொள்கிறார்களா?

இப்படம் முல்லைப் பெரியாறு அணையைப் பற்றிய படமல்ல என்று சொல்லும் படத்தின் இயக்குநர் சோஹன்ராய் 1975இல் சீனாவில் நடந்த பான்கியோ அணை உடைந்த விபத்தைப் போன்று ஒன்று நடந்தால் செய்ய வேண்டியது என்ன என்பதை படம் வெளிப்படுத்துவதாகவும் இப்படத்தை பார்த்த பிறகு பெரியாறு அணையை உடைத்து புதிய அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்கும் என்று சொல்வதிலிருந்து அவரின் நிலைப்பாட்டை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அப்போதைய சென்னை மாகாண அரசும் திருவாங்கூர் சமஸ்தானமும் 1895இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்த அணையின் நிலை 999 ஆண்டுகள் தமிழகம் பயன்படுத்தலாம். இதை நினைவுப்படுத்தவே டேம் 999 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  இப்படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டின் பின்னணியில் கேரள அரசு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.  இது உண்மையாகக் கூட இருக்கலாம்.  இக்காரணங்களால் இப்படத்தைத் தடை செய்கிறோம் என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை.  வெறும் தீர்மானங்களை மட்டும் இயற்றிக் கொண்டிருக்கும் தமிழக அரசு பெரியாறு அணையின் பலம், கூடங்குளம் அணு உலையின் தீமைகள் குறித்துப் படம் எடுத்து தமிழ் மக்களுக்கு சேவை புரியலாமே!. 

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கத்தான் மிசா, தடா, பொடா போன்ற கொடிய சட்டங்கள் இங்கே பயன்படுத்தப்பட்டன.  வைகோ இந்த சட்டங்களின் கீழ் சுமார் 2 ஆண்டுகள் சிறைவாசம் செய்ய நேரிட்டது.  நமது நாட்டின் விடுதலைக்கு முன்னும் பின்னும் இதைப் போல பல்வேறு திரைப்படங்கள், புத்தகங்கள் தடை செய்யப்பட்ட நீண்ட வரலாறு உண்டு.

இந்தத் தடைகளின் மூலம் ஜனநாயக உரிமைகளை குழி தோண்டிப் புதைத்ததைத் தவிர வேறு எந்த பயனும் விளையவில்லை என்பதே கடந்த கால படிப்பினை.  தமிழக அரசியல் தலைவர்களுக்கு இப்படத்தை திரையிட்டுக் காட்டி ஆட்சேபத்திற்குரிய காட்சிகளோ வசனங்களோ இருந்தால் அவற்றை நீக்கி வெளியிட தயாராக இருப்பதாக சோஹன்ராய் அறிவித்துள்ளார்.  இந்தப் படத்தைப் பார்க்காமல் இவர்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பது வருத்தத்திற்குரியது.  இந்தப் படம் மோசமானதாக இருந்தால் அவற்றை மக்களே பார்த்து நிராகரிக்கட்டும்.  இப்படத்திற்கு வீணான விளம்பரத்தை தமிழ்நாட்டுக்காரர்கள் தேடிக் கொடுத்திருக்கிறார்கள்.

இன்றுள்ள நவீன வசதிகள் மிக்க உலகில் தமிழ்நாட்டில் மட்டும் திரையிடாமல் தடுக்கப்பட்டதால் மட்டும் இதை யாரும் பார்க்காமல் இருந்து விடப்போவதில்லை.  அண்டை மாநிலத்திலிருந்து திருட்டு வி.சி.டி. வடிவிலோ இணையத்திலோ இப்படம் கிடைப்பதை அரசு எவ்வாறு தடுக்கும் என்று தெரியவில்லை.  

ஒப்பீட்டளவில் இந்தப் படத்தைவிட ஒரு மோசமான தமிழ்ப்படம் ஒன்று எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியென கதையளக்கப்படுகிறது.  இந்தப் படத்திற்கு தமிழ் தேசியர்களும் தமிழ் உணர்வாளர்களும் வக்காலத்து வாங்கி தங்களது தமிழ் உணர்வு என்னும் வெறியை இன்னும் கூர் தீட்டிக் கொள்கிறார்கள்.

காஞ்சிபுரம் போதிதருமன் என்ற தமிழ் பவுத்தன் கதையின் மூலம் மொழி வெறி, இன வெறி ஊட்டப் பயன்படும் வசனங்கள் சிலவற்றைக் கொண்டுள்ளதால் இப்படம் உன்னதப் படமென கொண்டாடப்படுகிறது. ஆயிரத்தில் ஒருவனில் செல்வராகவன் கொஞ்சமாக பேசியதை ஏழாம் அறிவில் முருகதாஸ் அதிகமாகவேப் பேசுகிறார்.  (இது பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்).  இந்தப் போலியான தமிழ் உணர்வூட்டும் வசனங்களுக்குள் சரணடையும் நமது தமிழ் தேசியர்களின் நிலை மிகவும் பரிதாபமானது.  பவுத்தன் போதிதருமனுக்கு நாடு, மொழி, சாதி என்ற எல்லைக் கோட்டை வரையறுக்க முடியுமா?

மொத்தத்தில் தமிழக அரசின் டேம் 999 படத்தின் மீதான தடை கருத்துரிமையின் மீதான தாக்குதல்.  இதை எதிர்கொள்ள எவ்வளவோ வழிகள் இருக்க, இந்த வழியைத் தேர்வு செய்வது கண்டிக்கத்தக்கது.