சனி, டிசம்பர் 10, 2011

தமிழக காவல்துறையின் அட்டூழியங்கள்

தமிழக காவல்துறையின் அட்டூழியங்கள் 
                                               - மு. சிவகுருநாதன்
(இன்று டிசம்பர் 10, உலக மனித உரிமைகள் நாள்)

உலகம், இந்தியா, தமிழ்நாடு என எந்தப் பகுதியை எடுத்துக்கொண்டாலும் பேரளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது ராணுவமும் காவல்துறைகளும் என்பதை அன்றாட நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.  ஈராக் குடிமக்களை கொடுமைகளுக்குள்ளாக்கிய அபு கிரைப் சிறையில் அமெரிக்க ராணுவ வீரர்களின் வீடியோக்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.  இலங்கையில் நமது அமைதிப்படை வீரர்கள் பண்ணிய அக்கிரமங்கள் பழங்கதை.  ஆப்பிரிக்க - காங்கோ நாட்டில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றிய நமது ராணுவத்தினர் செய்த கொடுமைகளுக்காக ஐ.நா. சபையே தலைகுனிந்து நிற்கிறது.

உலகப் புகழ் பெற்ற காவல்துறை என வருணிக்கப்படுகின்ற (!?) தமிழக காவல்துறையின் அத்துமீறல்கள், பாலியல் வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் எண்ணிலடங்காதவை.  அ.இ.அ.தி.மு.க அரசாகட்டும், தி.மு.க. அரசாகட்டும் இந்த அத்துமீறல்களுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிக்கிறது.  எனவே இதில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் அரசால் ஏக மரியாதை.  அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தப்பித்துக் கொள்வதற்கு அனைத்து உதவிகளையும் அரசே செய்கிறது.  உரிய ஆதாரங்கள் இருந்தும் தொடக்க நடவடிக்கை எடுக்கக் கூட நீதிமன்றங்களில் மிக நீண்ட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

அண்ணாமலை நகர் பத்மினி (1992), அத்தியூர் விஜயா (1993), ரீட்டா மேரி (2001), வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையினரின் 'ஒர்க் ஷாப்' அட்டூழியங்கள் (1993), வாச்சாத்தி வன்கொடுமைகள் (1992), தாமிரபரணிப் படுகொலைகள் (1999 - 27பேர் மரணம்), பரமக்குடி படுகொலைகள் (2011 - 6 பேர் மரணம்) என காவல்துறையின் அயோக்கியத்தனங்கள் தொடர்கின்றன.

இத்தகைய வன்கொடுமைகள் ஒப்பீட்டளவில் தி.மு.க. ஆட்சியை விட அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்தான் அதிகளவில் நடைபெறுகின்றன.  ஜெயலலிதா காவல்துறைக்குக் கொடுக்கும் உச்சபட்ச அதிகாரமும், அத்துறையை செல்லமாக வளர்த்தெடுத்து தங்களது அடியாள் படையாக மாற்றும் முயற்சியினால்தான் இவ்வாறு நடக்கிறது.  காவல்துறையை தங்களது சுய லாபங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் மு.கருணாநிதியும் ஒன்றும் சளைத்தவரல்ல.  

இதனுடைய தொடர்ச்சியாகவே விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் லெட்சுமி (20), வைதேஸ்வரி (20), கார்த்திகா (18), ராதிகா (17) ஆகிய நான்கு இருளர் இனப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைப் பார்க்க முடிகிறது.

இருளர் இனப்பெண்கள் நால்வரையும் நள்ளிரவில் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது போன்றவற்றிற்காக அதற்குக் காரணமான காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது இடைநீக்கத்தைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இடைநீக்கம் தண்டனை அல்ல என்று சென்னை உயர்நீதி மன்றம் கூறிய பிறகும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் ஆபத்தானது.  காவல்துறையினரை மீண்டும் மீண்டும் இத்தகைய வன்கொடுமைகளில் ஈடுபடுவதற்கான உத்வேகத்தை தமிழக அரசு அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம்  இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. இது இழப்பீடா அல்லது காவல்துறையின் அத்துமீறல்களுக்கு விலையா என்ற கேள்வி எழுவதில் வியப்பில்லை.  குற்றம் செய்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இழப்பீட்டை மட்டும் அளிப்பது பாதிக்கப்பட்டோருக்கு நெருக்கடி ஏற்படுத்தி குற்றத்தை மறைக்கச் செய்யும் முயற்சியாகும்.

இப்பிரச்சினை பெரிய அளவில் உருவாகும் போது அதை கண்துடைப்பாக இது மேற்கொள்ளப்படுகிறது.  இழப்பீடு மட்டும் தீர்வாகி விட முடியாது.  இதுவும் ஒரு அம்சம்; அவ்வளவே.  குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், வெறும் இழப்பீடு மட்டும் அளிப்பது கிராமப்புற கட்ட பஞ்சாயத்தை நினைவூட்டுகிறது.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித் உயிர்கள் பலியானதும் இதில் தொடர்புடைய காவல்துறை உயர் அதிகாரிகள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விசாரணைக் கமிஷ­ன் என்ற பெயரில் தங்களுக்கு சாதகமான அறிக்கை பெறவே தமிழக அரசு முயற்சி செய்கிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட ரூபாய் 1 லட்சம் இழப்பீட்டை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தியும் அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படுவதாக தற்போது அரசு அறிவித்துள்ளது.  இது தேவையான நடவடிக்கைதான் என்ற போதிலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது இதுவரை சிறு துரும்பைக் கூட அசைக்காமல் இருப்பதை வேறு எப்படி புரிந்து கொள்வது?

தமிழக காவல்துறையினர் நடத்திய கொடுமைகளை அவர்களே விசாரிக்கும் போது உரிய நியாயம் எப்படி கிடைக்கும்?  இருளர் இனப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் உடனடியாக சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்.  உள்ளூர் போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவரவும், நீதி கிடைக்கவும் துளியில் வாய்ப்பில்லை.  இச்சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை வந்த பிறகு அதுபற்றி முடிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எஸ். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலமாவது உரிய நீதி கிடைக்கும் என்று நம்புவோம்.

வாச்சாத்தி வன்கொடுமைகளுக்கு நீண்ட வழக்குப் போராட்டத்திற்கு பிறகு அண்மையில்தான் தீர்ப்பு கிடைத்துள்ளது.  வீரப்பன் தேடுதல் வேட்டையில் வன்கொடுமைகளுக்கு நீதிபதி சதாசிவா, சி.வி.நரசிம்மன் ஆகிய விசாரணை ஆணையங்கள் அளித்துள்ள பரிந்துரைகள் நடைமுறைக்கு வரவில்லை.  ஆனால் குற்றச்சாட்டுகளுக்குள்ளான காவல் அதிகாரிகளுக்கு பாராட்டுப்பத்திரம், பதக்கங்கள், பண முடிப்பு, கோடிக்கணக்கான மதிப்பில் வீட்டு மனைகள், நேரடி பதவி உயர்வு போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

தாமிரபரணியில் நடந்த படுகொலையை விசாரித்த ஆணையம் பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சாட்டியது.  இதே போலத்தான் பரமக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையும் இருக்கும் என்பதால் பாதிக்கப்பட்டோர் விசாரணை ஆணையத்தை கருப்புக் கொடியேற்றி புறக்கணித்தனர்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுகள் நடத்தும் கொடுமைகள் எண்ணிலடங்காதவை.  சில சமயம் நீதித்துறையும் அரசுகளுடன் இணைந்து விடுவது வேதனையான உண்மையாகும்.

காவல்துறைக்கு இந்த மாதிரியான வானளாவிய அதிகாரங்கள் வழங்குவதும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட அனைத்து வகையான மனித உரிமை மீறல்களுக்கும் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் வழங்குவது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அதிகாரவர்க்கம் உணர்ந்து கொள்வதேயில்லை.

ஒடுக்கப்பட்டோரை வீழ்த்துவதற்கும், மக்கள் போராட்டங்களை ஒடுக்கவும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கவும் ஒவ்வொரு அரசும் காவல்துறையை தம் கைப்பாவையாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.  இந்நிலையைத் தடுக்க நீதிமன்றங்களுக்கு மட்டும் பதில் சொல்லக் கூடிய அமைப்பாக அரசியல் தலையீடின்றி காவல்துறை செயல்பட வழி வகுக்க வேண்டும்.

அரசின் அதிகாரத்தின் கீழ் மக்களுக்காக செயல்பட வேண்டிய ஒரு துறை தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை அரசு கண்டும் காணாமல் இருக்கும்போது நீதிமன்றங்கள் உரிய வழிகளில் நீதியை நிலைநாட்டுவது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக