சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு:
காங்கிரஸ், பா.ஜ.க.வின் பொய் முகங்கள்
- மு. சிவகுருநாதன்
சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை (FDI) 51 சதவீதமாக அதிகரிக்க ஐக்கிய முன்னணி அமைச்சரவை முடிவு செய்தது. இதனை எதிர்த்து சென்ற டிசம்பர 01, 2011 தேசியஅளவில் மிகப் பெரிய கடையடைப்பை வணிகர்கள் நடத்தியிருக்கிறார்கள். சுமார் 10 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிப் போன பிற்பாடு இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது. திருணாமூல் காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. தி.மு.க. காங்கிரசின் எந்தத் திட்டத்தையும் எதிர்க்கப்போவதில்லை. கனிமொழியை வழக்குகளிலிருந்து விடுதலை செய்து விடும் ஒரம்சத் திட்டம் மட்டுமே நிறைவேற வேண்டும் என்பது தி.மு.க.வின் எதிர்பார்ப்பு.
அணு உலை இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற குதிரை பேரங்களை நடத்திய பிரதமர் மன்மோகன்சிங் இதிலும் வீராவேசமாகப் பேசி முடிவிலிருந்து பின் வாங்க முடியாது என்றார். மீண்டும் குதிரைபேரம் நடத்த சாத்தியமில்லையோ என்னவோ! திடீரென்று அரசு தற்காலிமாக பின் வாங்கியிருக்கிறது. மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது இதை நிறைவேற்றத்தான் போகிறார்கள்.
இடதுசாரிகளுக்கென்று தனித்த பொருளாதாரக் கொள்கை உள்ளது. அவர்கள் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதில் அர்த்தமுண்டு. ஏற்கனவே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்த போது, காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்ததால் இம்முடிவு கைவிடப்பட்டது. இப்போது பா.ஜ.க.வின் காலம் அவ்வளவே.
நேரடி அந்நிய முதலீட்டை ஆதரித்தால் பன்னாட்டுக் கம்பெனிகள் இதற்கு பிரதியுபகாரமாக அக்கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக பணத்தைக் கொட்டுகின்றன. எதிர்க்கின்ற அரசியல் கட்சிகள் உள்நாட்டு வணிகர்களிடம் பெருமளவு பணத்தை தேர்தல் நிதியாக வசூல் செய்து விடுகின்றனர். பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இரு தரப்பிலிருந்தும் நிதி வந்து விடுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் இவர்கள் வசூல்வேட்டையில் ஈடுபடுவார்கள். பாதிக்கப்படப் போவது அப்பாவி பொதுமக்களும் வணிகர்களுந்தான். விலைவாசி உயர்வை எதிர்த்துப் பேசிவிட்டு, இடதுசாரிகள் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பா.ஜ.க. கட்சி வாக்களித்தது நினைவிருக்கலாம். இவற்றிலிருந்து
பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் இரட்டை வேடம் அம்பலமாகும்.
சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தால் கீழ்க்கண்ட நன்மைகள் ஏற்படுமென பரப்புரை செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக சிலவற்றைப் பார்ப்போம்.
01. இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதால் வேளாண் விளை பொருட்களின் விலை குறையும்.
தற்போது online வர்த்தகம், யூக வர்த்தகம் போன்றவை நடைபெறுகிறது. இதனால்தான் விலைவாசி உயர்ந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனவே அந்நிய முதலீடு வந்தால் விலை குறையும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல. மக்களைக் கவர்வதற்கு முதலில் விலைகள் குறைக்கப்பட்டாலும் பிறகு எவ்வளவு உயரும் என்பது யாருக்கும் தெரியாது.
02. கூடுதல் வேலை வாய்ப்பு உருவாகும்
இப்போது இருக்கும் பல லட்சம் வேலை வாய்ப்புக்களைப் பறித்து விட்டு புதிய சில லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று சொல்வது பித்தலாட்டம். அதுவும் கல்வித் தகுதியுயைவர்க்கே கிடைக்கும். சாதாரணமாக அனுபவத்தில் பணியாற்றிக் கூடியவர்களுக்கு என்ன மாற்று வழி? இதனால் சமூகத்தில் பல்வேறு குழப்பங்கள் உண்டாகும்.
03. இது அவசரப்பட்டு எடுத்த முடிவல்ல. இது நாட்டுக்கு நல்லது.
பாரம்பரிய விவசாயத்தில் பாதியை பசுமைப்புரட்சி அழித்து விட்டது. மீதியை இந்த அந்நிய முதலீடு அழித்து விடும். என்ன பயிரைச் சாகுபடி செய்வதென்ற விவசாயிகளின் உரிமை பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் போய்விடும். ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி இங்கே அவுரி சாகுபடி செய்ய கட்டாயப்படுத்திய பழைய வரலாறு மீண்டும் திரும்பும். மன்மோகன்சிங் போன்ற பன்னாட்டு கைகூலி கும்பல்களுக்கு வேண்டுமானால் இது நன்மையாக இருக்கலாம்.
04. உள்ளூர் மளிகைக் கடைகளுக்கு எவ்வித பாதிப்பும் வராது.
பன்னாட்டுக் கம்பெனிகள் கடனும், வீடு தேடிச் செல்லும் சேவையும் (door delivery) செய்யாது. இவற்றைச் செய்கின்ற காரணத்தால் உள்ளூர் மளிகைக் கடைகள் தொடர்வதில் எவ்வித சிக்கலும் இல்லை என்கிறார்கள். கடன் கொடுத்த காரணத்தினாலேயே பல முதலீட்டை இழந்து தெருவில் நிற்கிறார்கள். பன்னாட்டுக் கடைகள் வரும்போது சிறிய கடைகள் தானாகவே மறைந்து போகும்.
மையப்படுத்தப்பட்ட பல்நோக்கு மருத்துவமனைகள், பெரிய துணிக்கடைகள், பெரிய நகைக்கடைகள் வந்த பிறகு குறைந்த முதலீட்டுக் கடைகள் எல்லாம் ஈயோட்டிக் கொண்டுதான் உள்ளன. இந்த விளம்பர யுகத்தில் இவற்றால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கொக்கோ கோலா, பெப்ஸி வந்த பிறகு இங்கிருந்து உள்ளூர் குளிர்பானங்கள் என்னவாயின என்பது நாமனைவருக்கும் தெரியும்தானே!
05. கொள்முதலில் 30 சதவீதத்தை சிறு, நடுத்தர நிறுவனங்களிடமிருந்துதான் வாங்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்திருப்பதால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நெருக்கடி வராது.
பெருகியுள்ள இன்றைய கார்ப்பரேட் ஊழல் கலாச்சாரத்தில் இந்த நிபந்தனைகளை யார் மேற்பார்வையிட்டு சரியானவற்றை கண்டுபிடிப்பது? யாரிடம்முறையிட்டு நிவாரணம் பெறுவது? இவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது விவசாயிகளுக்கு இதனால் பெரிய பாதிப்புகள் உண்டாகும். இந்த கார்ப்பரேட்களிடம் லாபி செய்யும் புதிய இடைத்தரகர்கள் உருவாகி விடுவார்கள். இந்த நல்வாய்ப்பு நமது அரசியல்வாதிக்குத்தான் கிடைக்கும் என்பதில் அய்யமில்லை.
இவை உதாரணத்திற்கு மட்டுமே. இவர்கள் சொல்லும் எந்த வாதங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. பணவீக்கம், விலைவாசி ஆகியன இதன் மூலம் குறையும் என்று ஓயாது கூப்பாடு போடுகிறார்கள் மெத்தப்படித்த பொருளாதார மேதைகள். இதுவரை அவர்கள் கொண்டுவந்த எந்தத் திட்டம் மற்றும் நடவடிக்கைகளினால் சிறிதும் குறையாத விலைவாசி இதனால் மட்டும் குறையும் என்பது கேப்பையில் நெய் வடியும் கதைதான்.
அமெரிக்காவில் இந்த முதலாளிகளுக்கு எதிராக 'வால் ஸ்ட்ரீட்' போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற வேளையில் அந்த முதலாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் வேலையைச் செய்யும் மன்மோகன்சிங் வகையறாக்களை வரலாறு மன்னிக்காது. அமெரிக்கர்களே இவற்றிற்கு எதிராக கிளர்ந்தெழும்போது நாம் ஏன் இவர்களை சுமக்க வேண்டும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக