வியாழன், டிசம்பர் 01, 2011

டேம் 999: - தடை தீர்வாகுமா....?

டேம் 999: - தடை தீர்வாகுமா....?
                                                                             -மு. சிவகுருநாதன்
 



 
 
 
மக்கள் எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரத்தை நமது ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தாங்களாகவே எடுத்துக் கொண்டுள்ளனர்.   நமது ஜனநாயக அமைப்பில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை இதன் மூலம் நிராகரிக்கப்படுகிறது.  சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போன்றோரது நூல்களும் டாவின்சி கோட் போன்ற திரைப்படங்களும் இங்கு தடை செய்யப்பட்டது பழங்கதை.   இப்போது டேம் 999 என்ற திரைப்படம் ஒட்டுமொத்த தமிழக அரசியல்வாதிகளால் எதிர்க்கப்பட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படத்தைத் தடை செய்வதற்கு வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியிருப்பவர்கள் 100 நாட்களைத் தாண்டும் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தை மட்டும் ஏன் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள்?  கேரள அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து பின்னும் இவர்கள் திருந்தாதது வருத்தமளிக்கக் கூடியது. 

முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கத்தால் உடைய வாய்ப்பு உள்ளதால் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் முடிவிற்கு பல்வேறு உள்நோக்கங்கள் உண்டென்றாலும் நிலநடுக்கம் குறித்த மக்களின் அச்சம் நியாயமானது.  கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போலவே இதையும் எதிர் கொள்ள வேண்டும். 

கேரளாவில் முன்பு இருந்த இடதுசாரி அரசும் தற்போதுள்ள காங்கிரஸ் அரசும் ஒரே கருத்தில் பெரியாறு அணைக்கெதிராக மக்களிடையே தீவிர பிரச்சாரம் செய்தும் மத்திய அரசில் லாபி செய்தும் காரியத்தை சாதிக்க முயலுகின்றன.  மத்திய அரசின் மறைமுக ஆதரவும் கேரள அரசுக்கு இருக்கிறது.

நவம்பர் 18, 2011 அன்று கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நிலநடுக்கம் 2.7 ரிக்டர் அளவே இருந்த போதிலும் கேரள அரசின் சார்பில் மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறை இயக்குநர் ஜான் மாத்யூ தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.  இடுக்கி மாவட்டம், நிலநடுக்க மாவட்டமாக உள்ளதால், இரண்டாவது அடுக்குப் பாறை நகரும் வாய்ப்பு உள்ளது.  இந்நகர்வின் மூலம் பழைமையான அணை உடைய வாய்ப்பு உள்ளது என்று ஜான் மாத்யூ கூறியுள்ளார்.  (தினமணி நவம்பர் 28, 2011)

கேரள அரசின் சுமார் ரூ. 600 கோடி செலவில் புதிய அணையை தாங்களே கட்டிக் கொள்கிறோம் என்றும் தமிழகத்திற்கு உரிய நீர் தருவதற்கு உத்திரவாதம் எழுதித் தரத் தயார் என்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.  அணை தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.  இது குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.  நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சினையைப் பேசித் தீர்க்க வேண்டுமென கேரள தரப்பு அவசரப்படுகிறது.   
 
காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் கர்நாடக அரசின் நடவடிக்கை தமிழகத்திற்கு எதிராக இருந்த அனுபவம், கேரள அரசு சொல்லும் எந்த உத்திரவாதத்தையும் நாம் நம்பக் கூடியதாக இருக்கவில்லை.  கர்நாடக அரசு காவிரிப் பிரச்சினையில் நடுவர் நீதி மன்றத் தீர்ப்பு உள்ளிட்ட எந்த நீதி மன்றத் தீர்ப்புகளுக்கும் கட்டுப்படவில்லை என்பது நாம் கண்ட பலன்.  மத்திய அரசோ, உச்ச நீதிமன்றமோ கர்நாடகத்தை பணிய வைக்க எதுவுமே செய்யவில்லை.   இதைப் போலவே கேரள அரசு, பிற்காலத்தில் தனது உறுதிமொழியை மதிக்கும் என்று நம்புவதற்கு இடமில்லை.  காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கேரளத்தை பணிய வைக்கும் என்றோ, தமிழகத்தின் நலன்களுக்கு ஆதரவாக செயல்படும் என்றோ துளியும் நம்பிக்கை கொள்ளவும் வாய்ப்பில்லை.

பிறகு இதற்குத் தீர்வுதான் என்ன?  இரு மாநில அரசுகளும் ஆய்வு என்ற பெயரில் தத்தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன.  இதில் எதில் உண்மையான ஆய்வு?  இரண்டும் பக்கச் சார்பு உடைய ஆய்வுகளாகத்தான் இருக்கின்றன.  கூடங்குளம் பிரச்சினையில் ஆய்வு செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, அணு சக்தி கமி­ஷனில் உள்ளவர்களையும் அணு சக்தி ஆதரவாளர்களையும் களமிறக்கி மக்களின் அச்சத்தைப் போக்குகிறேன் என்று திசை திருப்பியதைப் போலல்லாமல் நடுநிலையான பன்னாட்டு ஆய்வுக்குழுவைக் கொண்டு நேர்மையான ஆய்வை முல்லைப் பெரியாறு, கூடங்குளம் ஆகிய இரண்டுப் பிரச்சினைகளிலும் செய்ய வேண்டும்.  அப்போது நடுநிலையான உண்மை என்ன என்பது வெளிச்சத்திற்கு வரும்.  இதற்கு மத்திய - மாநில அரசுகள் தயாராக இல்லாதது வேதனையான உண்மை.  
 
          நடுநிலையான வெளிநாட்டு அறிஞர்கள் இடம் பெற வேண்டும் என்று கேட்பது இங்கு தேசத் துரோகமாக பார்க்கப்படுகிறது.  சிறப்புப் பொருளாதார மண்டலம், நேரடி அந்நிய முதலீடு, சில்லரை வணிகத்திலும்  அந்நிய முதலீடு, அரசுத் துறைகளை பன்னாட்டு முதலாளிகளிடம் விற்பது, இந்நாட்டின் கனிம வளத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது, அமெரிக்காவின் நலன்களுக்கு காவடி எடுப்பது போன்ற எச்செயலும் தேசப் பற்றாக மதிக்கப்படும் தேசத்தில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று கிளிப்பிள்ளை போல் மத்திய - மாநில அரசுகள் சொல்லிக் கொண்டிருப்பதைப் போல முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று சொல்வதில் அர்த்தமில்லை.  முறையான நடுநிலையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம்.

நிலநடுக்கம் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் பெரிய அணைகள் கட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.  இருக்கும் பழைய அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் பாதுகாப்பிற்கு உகந்ததாக இருக்க முடியாது.  அணையின் பலம் பற்றிய சர்ச்சை தீராத நிலையில் பெரியாறு அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து முறையான ஆய்வுக்குப் பிறகே இறுதி முடிவெடுக்க வேண்டும்.   மேலும் இவற்றை நீதிமன்றங்கள் முடிவு செய்வது வெறும் சட்ட விதிகளுக்கு உள்பட்டதே அன்றி பேரிடர்களின் பாதிப்பைக் கொண்டு அல்ல.  
 
முல்லைப் பெரியாறு அணை பலமிழந்திருந்தால் அதை வலுப்படுத்துவது அல்லது அதற்கு அருகில் புதிய அணையை நிர்மாணிப்பது என்பது பற்றி யோசிக்க வேண்டும்.   கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சிக்கும் இடமும் நிலநடுக்கப் பாதிப்புக்குட்பட்ட பகுதியில்தான் இருக்கிறது.  கட்டப்படும் புதிய அணையும் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் அம்முயற்சி உடன் நிறுத்தப்பட வேண்டும்.  பெரியாறு அணையில் உள்ள கசிவுகள் குறித்து தமிழக அரசு புது விளக்கம் அளிக்கிறது.   அது விரிசலால் ஏற்பட்டதா அல்லது அணையின் கட்டுமானம், வலுப்படுத்தியதன் கோளாறா என்பதை நடுநிலையான ஆய்வுகள்தான் முடிவு செய்ய வேண்டும்.  இதற்குத்தான் மூன்றாவது தரப்பு ஆய்வு தேவைப்படுகிறது.

ஆனால் இங்கு என்ன நடக்கிறது?  நில அதிர்வால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு இல்லை என்று தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவும் பாதிப்பு உண்டு என கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் சாதிக்கிறார்கள்.  தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் போன்றவை ஒரு சேர டேம் 999 படத்தைத் தடை செய்தால் மட்டுமே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நோக்கத்தில் செயல்படுவதாகத் தெரிகிறது.  டேம் 999 திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி திரையிடப்படவுள்ளது என்றவுடன் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்ற பலரும் தடை விதிக்க கோரிக்கை வைத்தனர்.   இப்பிரச்சினை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நவம்பர் 23 -ல் எழுப்பப்பட்டது.  

தமிழக அரசு நவம்பர் 24 -ல் டேம் 999 படத்தைத் திரையிட தடை விதித்தது.  இத்தடை அளிக்கப்படுவதற்கு முன்னதாகவே தமிழகத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இப்படத்தை திரையிடப் போவதில்லை என்று முடிவெடுத்தது.  இதற்குப் பிறகு தடை என்பதில் கூட அர்த்தமில்லை.

இப்படத்தை வெளியிட்டால் தங்களது திரையரங்குகள் சேதப்படுத்தப்படும் என்ற அச்சம் உரிமையாளர்களுக்கு இருந்தது.  அதை நிரூபிக்கும் விதத்தில் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பை அத்திரைப்படத்தின் பிரிமியர் காட்சி என நினைத்த ஒரு தரப்பினர் பிலிம் ரோல்களை உருவி எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் முதல்வர் ஜெ. ஜெயலலிதா ராஜூவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு ஆதரவாக சட்டசபையில் முதல் நாள் மறுத்துவிட்டு மறுநாள் தீர்மானம் போட்டது மற்றும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோரை திருப்திபடுத்துவதற்காக மக்களின் அச்சம் நீங்கும் வரையில் அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதைப் போலவே டேம் 999 படத்தை திரையிட தடை விதித்து தமிழ் உணர்வாளர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார்!.  இது அதிரடியாக சிலரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட முடிவு என்பதில் அய்யமில்லை.
மூவருக்குத் தூக்குத் தண்டனை, கூடங்குளம் அணு உலை ஆகிய பிரச்சினைகளில் அமைச்சரவைத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை கண்டு கொள்ளப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.  இதன் வழியாகவே இந்தத் தீர்மானங்கள், தடை பற்றிய உள்ளார்ந்த அக்கறை நமக்குப் புலப்படும்.  மூன்று பேரை மரணத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்கு ஈடாக இங்குள்ள தமிழர்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் சுட்டுக்கொல்ல தமிழ் தேசியர்கள் பலர் ஜெ. ஜெயலலிதாவிற்கு அனுமதி அளித்திருக்கிறார்கள்.

மரண தண்டனைக்கு எதிராகக் குரல்கொடுக்கும் தமிழ் தேசியர்கள் அப்சல் குரு, கஸாப் போன்றோரின் தூக்குத் தண்டனை குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள்.   மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத இவர்கள் இயக்கங்கள் அளிக்கும் மரண தண்டனை குறித்தும் பேச விரும்புவதில்லை.  பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு சீக்கியரின் உயிரைத் தவிர வேறு எந்த உயிரும் மன்மோகன் சிங் போன்றவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை.

ஸ்டெர்லைட், கூடங்குளம் போன்ற மக்களைப் பாதிக்கும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் நேர்மையான நிலைப்பாட்டை எடுக்கும் வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் கருத்துரிமை பற்றிய விஷ­யங்களில் சறுக்குகின்றனர்.   டேம் 999 படத்தை மக்கள் பார்த்துப் பீதியடைவார்கள் என்பது அறிவீனம்.  இப்படத்தால் கேரள அரசின் நிலை வலுவடையும் என்றும் தமிழக அரசின் நிலைப்பாடு பலவீனமடையும் என்றும் இவர்கள் எப்படி முடிவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை?  இந்தப்படம் பீதியைத் கிளப்பும் என்றால் தமிழக அரசு சொல்லி வரும் அணை பாதுகாப்பாக உள்ளது என்ற வாதம் பொய்யானது என்று ஒத்துக் கொள்கிறார்களா?

இப்படம் முல்லைப் பெரியாறு அணையைப் பற்றிய படமல்ல என்று சொல்லும் படத்தின் இயக்குநர் சோஹன்ராய் 1975இல் சீனாவில் நடந்த பான்கியோ அணை உடைந்த விபத்தைப் போன்று ஒன்று நடந்தால் செய்ய வேண்டியது என்ன என்பதை படம் வெளிப்படுத்துவதாகவும் இப்படத்தை பார்த்த பிறகு பெரியாறு அணையை உடைத்து புதிய அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்கும் என்று சொல்வதிலிருந்து அவரின் நிலைப்பாட்டை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அப்போதைய சென்னை மாகாண அரசும் திருவாங்கூர் சமஸ்தானமும் 1895இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்த அணையின் நிலை 999 ஆண்டுகள் தமிழகம் பயன்படுத்தலாம். இதை நினைவுப்படுத்தவே டேம் 999 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  இப்படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டின் பின்னணியில் கேரள அரசு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.  இது உண்மையாகக் கூட இருக்கலாம்.  இக்காரணங்களால் இப்படத்தைத் தடை செய்கிறோம் என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை.  வெறும் தீர்மானங்களை மட்டும் இயற்றிக் கொண்டிருக்கும் தமிழக அரசு பெரியாறு அணையின் பலம், கூடங்குளம் அணு உலையின் தீமைகள் குறித்துப் படம் எடுத்து தமிழ் மக்களுக்கு சேவை புரியலாமே!. 

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கத்தான் மிசா, தடா, பொடா போன்ற கொடிய சட்டங்கள் இங்கே பயன்படுத்தப்பட்டன.  வைகோ இந்த சட்டங்களின் கீழ் சுமார் 2 ஆண்டுகள் சிறைவாசம் செய்ய நேரிட்டது.  நமது நாட்டின் விடுதலைக்கு முன்னும் பின்னும் இதைப் போல பல்வேறு திரைப்படங்கள், புத்தகங்கள் தடை செய்யப்பட்ட நீண்ட வரலாறு உண்டு.

இந்தத் தடைகளின் மூலம் ஜனநாயக உரிமைகளை குழி தோண்டிப் புதைத்ததைத் தவிர வேறு எந்த பயனும் விளையவில்லை என்பதே கடந்த கால படிப்பினை.  தமிழக அரசியல் தலைவர்களுக்கு இப்படத்தை திரையிட்டுக் காட்டி ஆட்சேபத்திற்குரிய காட்சிகளோ வசனங்களோ இருந்தால் அவற்றை நீக்கி வெளியிட தயாராக இருப்பதாக சோஹன்ராய் அறிவித்துள்ளார்.  இந்தப் படத்தைப் பார்க்காமல் இவர்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பது வருத்தத்திற்குரியது.  இந்தப் படம் மோசமானதாக இருந்தால் அவற்றை மக்களே பார்த்து நிராகரிக்கட்டும்.  இப்படத்திற்கு வீணான விளம்பரத்தை தமிழ்நாட்டுக்காரர்கள் தேடிக் கொடுத்திருக்கிறார்கள்.

இன்றுள்ள நவீன வசதிகள் மிக்க உலகில் தமிழ்நாட்டில் மட்டும் திரையிடாமல் தடுக்கப்பட்டதால் மட்டும் இதை யாரும் பார்க்காமல் இருந்து விடப்போவதில்லை.  அண்டை மாநிலத்திலிருந்து திருட்டு வி.சி.டி. வடிவிலோ இணையத்திலோ இப்படம் கிடைப்பதை அரசு எவ்வாறு தடுக்கும் என்று தெரியவில்லை.  

ஒப்பீட்டளவில் இந்தப் படத்தைவிட ஒரு மோசமான தமிழ்ப்படம் ஒன்று எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியென கதையளக்கப்படுகிறது.  இந்தப் படத்திற்கு தமிழ் தேசியர்களும் தமிழ் உணர்வாளர்களும் வக்காலத்து வாங்கி தங்களது தமிழ் உணர்வு என்னும் வெறியை இன்னும் கூர் தீட்டிக் கொள்கிறார்கள்.

காஞ்சிபுரம் போதிதருமன் என்ற தமிழ் பவுத்தன் கதையின் மூலம் மொழி வெறி, இன வெறி ஊட்டப் பயன்படும் வசனங்கள் சிலவற்றைக் கொண்டுள்ளதால் இப்படம் உன்னதப் படமென கொண்டாடப்படுகிறது. ஆயிரத்தில் ஒருவனில் செல்வராகவன் கொஞ்சமாக பேசியதை ஏழாம் அறிவில் முருகதாஸ் அதிகமாகவேப் பேசுகிறார்.  (இது பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்).  இந்தப் போலியான தமிழ் உணர்வூட்டும் வசனங்களுக்குள் சரணடையும் நமது தமிழ் தேசியர்களின் நிலை மிகவும் பரிதாபமானது.  பவுத்தன் போதிதருமனுக்கு நாடு, மொழி, சாதி என்ற எல்லைக் கோட்டை வரையறுக்க முடியுமா?

மொத்தத்தில் தமிழக அரசின் டேம் 999 படத்தின் மீதான தடை கருத்துரிமையின் மீதான தாக்குதல்.  இதை எதிர்கொள்ள எவ்வளவோ வழிகள் இருக்க, இந்த வழியைத் தேர்வு செய்வது கண்டிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக