செவ்வாய், டிசம்பர் 06, 2011

இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை முன்னகர்த்திய தலைவர்

இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை முன்னகர்த்திய தலைவர்
                                                                         - மு. சிவகுருநாதன்


'உன்னதம்' இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான கெளதம சித்தார்த்தன் இன்றைய கல்வி முறையிலுள்ள குறைபாடுகளைச் சுட்ட, இன்று பள்ளியில் படிக்கும் மாணவியொருத்திக்கு விவேகானந்தரைப் பற்றி தெரிந்திருக்கவில்லை என்று அங்கலாய்த்திருக்கிறார்.   இதற்கு வேறு எந்த அர்த்தமிருப்பினும் விவேகானந்தரை நமது பாடத்திட்டம் உரிய முறையில் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவில்லை என்ற ஆதங்கமும் உண்டு தானே!  
        பத்தாம் வகுப்பு  சமச்சீர் கல்வி சமூக அறிவியலில் '19ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்தங்கள்' என்ற பாடத்தில் ராஜாராம் மோகன்ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி, அன்னிபெசன்ட், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் பற்றி பக்கம் பக்கமாக எழுதிவிட்டு இப்பாடத்தில் அம்பேத்கருக்கு இரு பத்தியும் பெரியாருக்கு ஒரு பத்தியும் ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் மாறி மாறி ஆளும் இரு திராவிட கட்சிகளின் தலித் விரோதப் போக்கு புரிந்து கொள்ளக்கூடியது.  பெரியாரையும் முழுவதுமாக இருட்டடிப்பு செய்ய இப்பக்கத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.  அம்பேத்கர் என்ற பெயரை நமது பாடநூற்கள் அம்பேத்கார் என்றே தொடர்ந்து எழுதுகின்றன.  இதுவும் கண்டிக்க வேண்டிய போக்கு ஆகும்.

டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தலித் மக்களின் கடவுளாகக் கருதப்படுகிறார் என்று சொல்லும் இப்பத்தியில் 1990 ஆம் ஆண்டில் 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டதையும் தெரிவிக்கிறது.  அவருடைய விலக்கப்பட்டோர் நலச்சங்கம் -பாசிகிருகித் காரணி சபா என்றும் குறிப்பிடப்படுகிறது.

புத்தர், மகாவீரர் போல டாக்டர் அம்பேத்கர் இங்கு எப்போதும் கடவுளாகக் கருதப்பட்டதில்லை.  தலித் மக்கள் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்டோர் அனைவரின் உரிமைக் குரலாகவும் அவர்கள் கிளர்ந்தெழ ஆதர்சமாகவும் விளங்கியவர் அவர்.  புத்தர், மகாவீரர் போன்றவர்களை கடவுளாகவும் அவதாரமாகவும் மாற்றியதைப் போல் அம்பேத்கரையும் சிமிழுக்குள் அடைக்க முயல்வது ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட தொண்ணூறுகளில்தான் அவருடைய எழுத்துகள் தமிழகத்தில் அதிகம் வாசிக்கப்பட்டும் இங்கு தலித் இயக்கங்கள் கட்டப்பட்டும் தலித் மக்கள் மத்தியில் போராட்ட உணர்வு வெளிப்பட்டது.  இங்கோ அல்லது இந்தியாவில் எங்கும் அவர் கடவுளாக வழிபடப்படுவதில்லை.  ஒடுக்கப்பட்ட தலித்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவே இது போன்ற கூற்றுகள் பயன்படும்.


தலித்களுக்காக மட்டுமல்லாது இந்து மத சாதிக்கொடுமைகைள அனுபவித்த அனைத்து  ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் உழைத்த அண்ணலுக்கு 1990இல் அதாவது 1988-ல் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு 'பாரத ரத்னா' வழங்கப்பட்டதற்கு பிறகு வழங்கப்பட்டது.  இத்தகைய விருதுகளில் அண்ணல் புகழடையவில்லை என்பது முதற்கண் இவர்கள் உணர வேண்டும்.  அம்பேத்கர் பற்றி கூறுவதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்க அதைச் சொல்லாமல் விட்டு விட்டு இதை மட்டும் கூறுவது ஏன்?

அம்பேத்கரின் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை இயக்கத்தை 'பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா' (Bahishkrit Hitaharini Sabha) என்பதைக் கூட ஏதோ பாசி, காரணி என தாவரவியல், கணிதவியல் சொற்களைச் சேர்த்து 'பாசிகிருகித் காரணி சபா'   என்று பாடநூல் எழுதும் மடையர்களை என்ன செய்வது?  தலித்கள், ஒடுக்கப்பட்டோர் பற்றிய எவ்வித புரிதல்கள் அற்ற இந்த செத்த மூளைகள் எதிர்கால சந்ததியினருக்கு அம்பேத்கர், பெரியார் போன்றோரை எப்படி அறிமுகம் செய்வார்கள் என்பதற்கு இதுவோர் உதாரணம் மட்டுமே.  விவேகானந்தரை எழுத மட்டும் இவர்களது பேனா  நீள்வது ஏன்?  இந்துத்துவா அரசுகள் தயாரித்த பாடநூற்களில் இவ்வாறு இருந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை.  ஆனால் திராவிட இயக்க ஆட்சியில் நடப்பதுதான் வேதனை.

இந்து மத சாதிவெறி தீண்டாமைக் கொடுமைகளால் பிறப்பு முதல் பாதிக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களுக்கிடையே தம்முடய உயர்கல்வியை முடித்தவர் அம்பேத்கர்.   தன் குடும்ப வாழ்வில் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கங்கள், உரிமைகளுக்கான போராட்டங்கள், படிப்பு, ஆய்வுகள், எழுத்துகள், அரசியல் சட்டம் எழுதும் பணி, சட்ட அமைச்சர் என்ற பல்வேறு பரிமாணங்களில் தம் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தவர் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க தம் பதவி துணை புரியாது என்ற நிலை ஏற்பட்ட போது அதை தூக்கியெறிந்த உத்தமர் இவர்.

நான் இந்துவாகப் பிறந்து இங்குள்ள சாதிக் கொடுமைகளை அனுபவித்தேன்.  இதிலிருந்து இன்று வரை விடுதலை கிடைக்காதபோது இந்துவாக சாகமாட்டேன் என்று சொல்லி ஆயிரக்கணக்கானோர்களுடன் பவுத்த மதத்தில் அய்க்கியமானதை இங்கு குறிப்பிட்டிருக்க வேண்டுமல்லவா! அப்போதுதான்  ராஜாராம் மோகன்ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்றோர் தீண்டாமையை ஒழிக்க என்ன செய்தார்கள் என்பதை வருங்கால சந்ததி உணர்ந்து கொள்ளும் என்பதால் இந்த மறைப்பு வேலை இவர்களுக்குத் தேவைப்படுகிறது.

அம்பேத்கர் தலித் விடுதலைக்கு மட்டும் போராடவில்லை.  அப்படியிருந்தால் 'சூத்திரர்கள் யார்?' எனும் ஆய்வு நூலை அவர் வெளியிட்டிருக்க வேண்டியதில்லை.  அவர் பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா, சுதந்திரத் தொழிலாளர் கட்சி, அட்டவணை சாதி கூட்டமைப்பு, குடியரசுக் கட்சி என ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையைத் தரக்கூடிய அனைத்து வகையான சாத்தியங்களையும் முயன்று பார்த்தவர். இதில் வெற்றி - தோல்வி என்று கட்சி கட்ட வேண்டிய அவசியமில்லை.  சில வெற்றிகளும் பல தோல்விகளும் இருந்த போதிலும் இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையை முன்னகர்த்திய ஒரு தலைவராகவே அம்பேத்கர் என்றும் நினைக்கப்படுவார்.  அம்பேத்கரை விக்ரகமாக்கி பூட்டி வைக்கும் இந்துத்துவா முயற்சிகள்  இங்கு எடுபடாது என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.  ஒரு விடுதலைப் போராளியை கடவுளாக மாற்றும் கைங்கர்யம் ஒருவகையான  பார்ப்பனத் தந்திரமே.

(டிசம்பர் 06, 2011 அண்ணல் அம்பேத்கரின் 55-வது நினைவு தினம்.  இதையொட்டி இப்பதிவு வெளியாகிறது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக