ஞாயிறு, ஜூன் 10, 2012

எனது முதல் வகுப்பு ஆசிரியருக்கு வயது 80


எனது முதல் வகுப்பு ஆசிரியருக்கு வயது 80
                                      
                         -மு.சிவகுருநாதன்



    முதல் வகுப்பாசிரியர் பெயர் நினைவிருக்கிறதா என்று கேட்டால் பலர் பதில் சொல்லமுடியாமல் திணறக்கூடும். அந்தவகையில் எனக்கு முழு மதிப்பெண் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இன்று (10.06.2012) எனது முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசிரியர் திரு.செ.வீராச்சாமி-சரோசா தம்பதிகளுக்கு எண்பதாவது அகவைக்கான விழா நடைபெற்றது. இந்த மாதிரியான சென்டிமெண்ட் சமாச்சாரங்கள் நமக்கு பிடிப்பதில்லை என்றாலும் கவிஞர் விக்கிரமாதித்யன் மணிவிழாவிற்கு திருக்கடையூர் சென்றதுபோல் இந்த 80 விழாவிற்கு வேதாரண்யம் அருகேயுள்ள குரவப்புலம் சென்று திரும்பினேன்.

  1977-1978, 1978-1979 ஆகிய கல்வியாண்டுகளில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் படித்தபோது எனக்கு ஆசிரியராக இருந்தவர் இவர். ஆசிரியராக மட்டுமில்லாமல் எங்களது குடும்ப நண்பராக இருந்தார். எங்கள் குடும்ப சுக, துக்கங்களில் பங்கெடுத்தவர்.

  எங்களது தந்தையார் திரு.ச.முனியப்பன் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் அண்ணாபேட்டை கிராமத்தில் 1952 இல் வ.உ.சி.உதவித்தொடக்கப்பள்ளியைத் தொடங்கி நடத்திவந்தார். இந்தப்பள்ளியில்தான் எங்களது குழந்தைப்பருவம் கழிந்தது. வீட்டிற்கும் பள்ளிக்கும் வித்தியாசமில்லாமல் வாழ்ந்த சூழலது.

  எங்களது தந்தையும் திரு.செ.வீராச்சாமியும் 1991 இல் ஒரே சமயத்தில் பணி ஓய்வு பெற்றனர். எனது வாசிப்பு பழக்கத்திற்கு முன்னோடியாக இருந்த எங்களது தந்தையார் திரு.ச.முனியப்பன் 19.11.2005 இல் மரணமடைந்துவிட்டார். இருந்திருந்தால் அவரும் 80 ஐ நிறைவு செய்திருப்பார். என் தந்தை எனக்கு மூன்றாம் வகுப்பாசிரியர். அவரை தந்தையாக எதிர்கொண்ட தருணங்களைவிட ஆசிரியராக எதிர்கொண்டவை அதிகம்.

  என் முதல் வகுப்பு ஆசிரியர் திரு.செ.வீராச்சாமி அவர்கள் ஆயக்காரன்புலம் அரசு மேனிலைப்பள்ளியிலிருந்து (பனிரண்டாம் வகுப்பு) வெளியேற்றப்பட்டபோது என் அப்பாவின் சார்பாக பள்ளிக்கு வந்து மீண்டும் என்னைப் பள்ளியில் சேர்த்துவிட்டவர். இதை கணையாழி புதுமலர் அனுபவச் சிறுகதையில் குறிப்பிட்டுள்ளேன்.

   என் அப்பா மட்டுமல்லாது தாத்தாவிடமும் (அம்மாவின் அப்பா) நட்பாக இருந்து எங்கள் குடும்பச் சிக்கல்கள் பலவற்றைத் தீர்த்துவைத்தவர். இன்று இந்த தம்பதிகளை வாழ்த்திவிட்டு திரும்பிய மகிழ்வு எனக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக