வியாழன், ஜூன் 07, 2012

தமிழகத்தில் நிழல் மாஃபியாக்களின் ஆட்சியும் ஜனநாயகத்தின் தோல்வியும்


தமிழகத்தில் நிழல் மாஃபியாக்களின் ஆட்சியும் ஜனநாயகத்தின் தோல்வியும்
                                             -மு.சிவகுருநாதன்

   நாட்டு விடுதலைக்குப்பின் தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி தமிழகத்தை இருண்ட பாதைக்குச் செலுத்தியதால் இங்கே திராவிட இயக்கம் ஆட்சிக்கு வர முடிந்தது. 1960 களின் இறுதியில் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த அண்ணாவின் தி.மு.க. பின்னாளில் மு.கருணாநிதியின் தி.மு.க. வாக ஆன பிறகு பெரும் சீரழிவைச் சந்தித்து இன்று மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. திராவிட இயக்கம் என்ன நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அந்தநிலையும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

  சமீப காலங்களில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என எந்த ஆட்சியாக இருந்தாலும் உண்மையில் ஆட்சி – அதிகார மையம் பிறிதோரிடத்தில் இருப்பது வழக்கமாகவேயுள்ளது. இது வாக்களிக்கும் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்த ரகசியமாக உள்ளது. எனவே இதற்கு பேரளவில் எதிர்ப்பு இல்லை என்பதோடு மட்டுமில்லாமல் இந்த முறைகளுக்கேற்ப மக்கள் வாழப்பழகிக் கொண்டுள்ளார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

  மு.கருணாநிதியின் ஆட்சியில் அவரது பல்வேறு குடும்பங்களின் நிழல் அதிகார மைய மாஃபியாக்களின் கொட்டம் தாங்கமுடியாத அளவிற்கு அதிகரித்தது. ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சியில் சசிகலாவின் குடும்ப வகையறாக்களின் மன்னார்குடி மாஃபியாக்களின் கொள்ளைகள் நடைபெறும். இந்த நிலை மாறி மாறி அரங்கேறிவருகிறது. அவ்வப்போது இந்த மாஃபியாக் குடும்பங்களில் சிற்சில உரசல்கள் எற்படும்போது இவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது, கட்சியைவிட்டு நீக்கம் என்றெல்லாம் அறிவிப்புகள் வரும். ஆனால் பிறகு இவையெல்லாம் புஸ்வாணமாகிப்போகும். நமக்கும் ஞாபக மறதி ஏற்பட்டுவிடும்.

  ஜெ.ஜெயலலிதா தன் உடன்பிறவாத் தோழி சசிகலா மற்றும் குடும்பத்தினரை கட்சியைவிட்டு வெளியேற்றிய உடன் ஊடகங்கள் அதைப்பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதின. பிறகு ஜெ.ஜெயலலிதா-சசிகலா இணைப்பு நடந்துவிட்டது. ஆனால் ஊடகங்களுக்கு நித்தியானந்தா விவகாரங்கள் போன்று அதிமுக்கியமான விஷயங்கள் வந்துவிட்டபடியால் ஜெ.ஜெயலலிதா-சசிகலா பற்றி எழத இடமோ, நேரமோ அவர்களுக்கு இல்லாமற்போய்விட்டது.

  ஜெ.ஜெயலலிதாவை தெய்வமாக வழிபடும் அவரது கட்சித்தொண்டர்கள் இதைப்பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை. வாக்களிக்கும் பொதுஜனம் கூட கவலைப்படாத நிலையில் கட்சிக்காரர்களிடம் அதிகம் எதிர்பார்க்கமுடியாதுதான். இதைப்போலவே தி.மு.க. விலும் மு.கருணாநிதியின் குடும்பங்களில் பலர் அதிகாரமையங்களாக உருவாகிறபோது கட்சிக்குள் பெரிய எதிர்ப்பு கிளம்புவதில்லை. அதற்கு மாறாக அடுத்தகட்டத் தலைவர்கள் தொடங்கி உள்ளுர்த்தலைவர்கள் வரை தங்களுடைய வாரிசுகளை சுறுசுறுப்பாக களமிறக்கிவிடுகிறனர். கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம் பொன்ற பலர் இதைத்தான் செய்துகொன்டுள்ளனர்.

    அண்ணா கட்சியே குடும்பம் என்றார். மு.கருணாநிதியோ குடும்பமே கட்சி என்ற நிலையை உருவாக்கிவிட்டார். இதற்குப் பின்னால் வந்த எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா ஆகியோர் மு.கருணாநிதியின் நடவடிக்கைகளை அப்படியே பின்பற்றத்தொடங்கிவிட்டனர். இதுவே தமிழகத்தின் தலைவிதியாக இன்றும் தொடர்கிறது.

  நிழல் அதிகார மையங்களாக இருக்கின்ற இந்த மாஃபியாக் கும்பல்கள் அரசதிகாரத்தின் அனைத்து நிலைகளிலும் தலையிடுகின்றன. இந்தத் தலைவர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று சாதிக்கின்றனர். அதை நாமும் கேட்டு அமைதியாகிவிடுகிறோம்.

  ஜெ.ஜெயலலிதாவும் சசிகலாவும்  ஒரே வீட்டில் குடியிருக்கிறபோது ஜெ.ஜெயலலிதா சசிகலா தனக்கெதிராக சதிச் செயலில் ஈடுபட்டார் என்கிறார். உடன் கட்சியை விட்டும் தனது வீட்டைவிட்டு சசிகலா வெளியேற்றப்படுகிறார். அரசின் காவல்துறை மற்றும் உளவுத்துறைகள் ஜெ.ஜெயலலிதாவிற்காக சேவகம் செய்கிறது. சசிகலா குடும்பத்தினர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ராவணன், ம.நடராஜன், திவாகரன் போன்ற பலர் கைது செய்யபட்டனர். மீண்டும் சில நாட்களிலேயே சசிகலா, இளவரசி போன்றவர்கள் போயஸ் கார்டனுக்கு பூர்ணகும்ப மரியாதை உடன்  அழைத்துவரப்பட்டனர். ஊடகங்களும் பொதுஜனமும் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க சபிக்கப்பட்டோம்.

   ஜெ.ஜெயலலிதா ஒரு சாதாரண பெண்மணி என்றால் நாம் சசிகலா விவகாரம் பற்றி கேள்வி கேட்கமுடியாது. ஜெ.ஜெயலலிதா தமிழக முதல்வர் என்பதால் கேள்வி கேட்க மக்களுக்கும் உரிய பதிலளிக்கவேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவிற்கும் உண்டு. எனக்கு எதிராக சதியில் ஈடுபட்டார்கள் என்று புகார் சொல்லி கட்சியை விட்டும் வீட்டை விட்டும் வெளியெற்றிய சில நாட்களில் மீண்டும் தனது வீட்டில் வைத்துக்கொண்டு, சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையிலடைக்கும்போது பொறுப்பான பதவியிலிருக்கும் ஒருவர் எவ்வித விளக்கமும் சொல்லாமல் இருக்கக்கூடிய அவலம் இந்தியா போன்ற எண்ணிக்கை அடிப்படையிலான ஜனநாயகத்தில்தான் நடக்கும்.

    சசிகலா கும்பலை எல்லா அரசதிகார ஆதிக்கங்களையும் செய்ய அனுமதித்துவிட்டு, இப்போது தனக்கு எதுவும் தெரியாதென்றும் அரசின் காவல்துறையை தன்னுடைய ஏவல்துறையாக மாற்றி, மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை இதற்காக விரயமாக்குவதும் எந்தவகையான ஜனநாயகம் என்பதை இங்கு யாரும் கேள்வி கேட்கமுடியாத நிலையுள்ளது. இது மிகவும் அபாயகரமான போக்காகும்.

   வாரிசு அரசியல் இந்தியாவின் சாபக்கேடாகும். மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் இது இல்லாத இடமேயில்லை. காங்கிரஸ், பா.ஜ.க., மாநிலக்கட்சிகள் எவற்றிலும் விதிவிலக்கு இல்லாத நிலையே நீடிக்கிறது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சி அதிகார மைய மாஃபியாக்களின் உருவாக்கமாக நிலைபெறுகிறது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ராஜ்ஜியங்கள் இவ்வாறு விரிவடைந்தவையே.

 வாரிசு அரசியலை காங்கிரஸ் பழங்காலம் முதற்கொண்டு திறமையாக கையாண்டுவருகிறது! இதை அடியொற்றி அனைத்து மாநிலக்கட்சிகளும் பின்பற்றிவருகின்றன. இதன் மூலம் குடும்ப மாஃபியாக்கள் அரசுப் பணத்தை கொள்ளையிடத் தொடங்குகின்றன. 2 ஜி அலைக்கற்றை உரிமம், கனிம வளங்கள், அரசின் உரிமங்கள், டெண்டர்கள், சுரங்க உரிமங்கள் போன்று எதுவானாலும் இவர்களுக்கு உடனே கிடைக்கும்.

   ஜனநாயகம் என்ற பெயரில் இந்த அநியாயக் கூத்துகளை வெறும் பார்வையாளர்களாக எதிர்கொண்டுள்ள இந்தியக் குடிமக்களின் நிலைதான் மிகவும் பரிதாபமானது. குடும்ப-வாரிசு அரசியலின் கொடுமையை அனுபவிக்கும் பொதுஜனங்களின் அன்றாட வாழ்வே பெருஞ்சிரமாக இருக்கிறபோது இதையெல்லாம் கண்டுகொள்ள நேரமேது?
 
  ஜனநாயகம் இவ்வாறாக தழைக்கட்டும். நாம் இன்னும் மன்னராட்சியின் மிச்ச சொச்சங்களிலிருந்து விடுபடவில்லை. என்வேதான் இவற்றை நாம் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. ஜனநாயகம் என்ற போர்வையில் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் மாஃபியாக்களின் பிடியிலிருந்து நாடு விடுதலை பெறவேண்டும். இல்லாவிட்டால் ஜனநாயகம் தோற்றுக்கொண்டேயிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக