வெள்ளி, ஜூன் 01, 2012

பார்ப்பன தினமணியின் விஷமத்தனம்


பார்ப்பன தினமணியின் விஷமத்தனம்
                                           
                                             -மு.சிவகுருநாதன்

     31.05.2012 தினமணி தலையங்கத்தில் தமிழகத்தில் ஒழிக்கப்பட்ட நுழைவுத்தேர்வை மீண்டும் உயிர் கொடுக்க குரல் எழுப்பப்பட்டுள்ளது. பெரும் சமூகப் பொறுப்புணர்வு இருப்பதாக காட்டிக் கொள்ளும் தினமணி தனது தலையங்கங்களில் விஷமத்தனமான உயர்சாதி, மேல்தட்டு மனோபாவத்தை கக்கி வருகிறது.

   தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணி மற்றும் சமூகப்பின்புலம் ஆகியவற்றை உணராதது போல் எழுதப்பட்ட இத்தலையங்கம் தினமணியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகிறது.

  ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎஸ்இஆர் ஆகிய மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பொதுவான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்துள்ளதை வரவேற்று எழுதி, அத்துடன் தமிழகத்திலும் நுழைவுத்தேர்வு வேண்டுமென சொல்லுபவர்கள் அதற்கு நியாயமான காரணங்களைக் கூறவேண்டுமல்லவா. அதைவிடுத்து இதனால் தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்துவிட்டது என்கிற ரீதியில் விஷத்தை கக்குவதை நம்மால் ஏற்கமுடியாது.

  அரசியல்வாதிகள் கிராமப்புற மாணவர்கள் நுழைவுத்தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொன்ன காரணத்தால் இங்கு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக கதையளக்கிறார்கள். யார் அந்த அரசியல்வாதிகள் என்று தெரியவில்லை?

  நுழைவுத்தேர்வு இல்லாத காரணத்தால் தரமில்லாத மருத்துவ, பொறியியல் பட்டதாரிகள் உருவாகிவிட்டார்கள் என்று இவர்கள் சொல்லும் விளக்கம் மிகவும் கேவலமானது. இதை நிருபிக்கமுடியுமா? இதற்கு ஆதாரங்களைக் காட்டவேண்டுமல்லவா?

   ஆயிரக்கணக்கில் தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல் அனுமதியளிக்கும் மத்திய அரசும் இவர்களும் தரம் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

  நுழைவுத்தேர்வு அவசியமென்றும் வேண்டுமானால் கிராமப்புற மாணவர்களுக்கு 15% ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்ய இவர்கள் யார்?   கிராமப்புற மாணவர்களுக்குப் பிச்சை போடும் இவர்கள் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை தெரியுமா? எற்கனவே 15% ஒதுக்கீடு தொழிற்படிப்புகளுக்கு ஒருமுறை தி.மு.க., அரசு வழங்கியபோது பின்னர் வந்த அ.இ.அ.தி.மு.க., அரசு 25% ஆக உயர்த்தியது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் வந்தபோது இந்த ஒதுக்கீட்டை நீதிமன்றம் முழுவதுமாக ரத்து செய்தது.

    போட்டித்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே அவர்கள் ஒட்டுமொத்த திறன்களும் ஆளுமையும் சிறப்பாக இருக்கும் என்று எப்படி முடிவு செய்வது? மருத்துவர், பொறியாளர், ஆசிரியர், ஆட்சிப் பணியாளர்கள் ஆகியோரின் தகுதியை ஒரு சில மணித்துளிகளில் எழுதப்படும் தேர்வு எவ்வாறு முடிவு செய்யமுடியும்?

   தரம் என்பதற்கு இவர்களுடைய அளவுகோல்கள் தரமில்லாமல் இருப்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இந்த தர அளவுகோள்கள் ஆட்டம் காணக்கூடியவை. இத்தகையத் தேர்வுமுறைகளும் மதிப்பீட்டு முறைகளுமே நமது கல்விமுறையைச் சீரழித்துவருகின்றன.

  சமூகத்தின் அடித்தட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பலனடையும் சில ஏற்பாடுகள் செய்யப்படும்போது ஆதிக்கக் சக்திகள்  இம்மாதிரியான குயுக்தி வேலைகளில் ஈடுபடுகின்றன. இடஒதுக்கீடு, ஊரகப்பகுதி மாணவர்களுக்கான சில சலுகைகளை தரம் என்ற பெயரில் எதிர்க்குரல் கொடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

   கல்வி பற்றிய சிந்தனைகளும் முறைமைகளும் நாள்தோறும் மாறிவரும் வேளையில் இன்னும் பழமைவாத மதிப்பீடுகளை உயர்த்திப்பிடிப்பதும் சமூகநீதிக்கெதிராக குரல் கொடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டிக்க முன்வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக