வெள்ளி, ஜூன் 08, 2012

யோக்கியர் வர்றார், சொம்பை எடுத்து உள்ளே வையுங்கள்!


யோக்கியர் வர்றார், சொம்பை எடுத்து உள்ளே வையுங்கள்!
                                              
                                               -மு.சிவகுருநாதன்

  பிரதமர் மன்மோகன்சிங் மிக மிக நேர்மையானவர், தூய்மையானவர். அவர் திருவாளர் பரிசுத்தம் (Mr.Clean). எனவே அவர் மீது ஊழல் புகார் சொல்லக்கூடாது. அவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் என்று பல ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் ஓயாது அலறி வருகின்றன. இவர்களைத் தவிர அன்னா ஹசாரே போன்றவர்கள் மன்மோகன் சிங்கிற்கு சான்றிதழ் வழங்கத்தவறவில்லை. சமீபத்தில்தான் CAG அறிக்கையைப் படித்த பிறகு நான் பிரதமர் மீது சந்தேகப்படுகிறேன் என்று  சொல்லியுள்ளார்.

  பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இப்படி அமோக அதரவு இருப்பதற்காக காரணம் முதலாளித்துவமும் பன்னாட்டு கம்பெனிகளும் எற்படித்தியுள்ள பிம்பமே. இந்த பிம்பத்தை பலர் அப்படியே வழிமொழிகின்றனர். இந்த நிலை பல விஷயங்களிலும் தொடர்கிறது. இந்தியாவில் வேறெந்த பிரதமருக்கும் இல்லாத பெருமை மன்மோகன்சிங்கிற்கு உண்டு. பல லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது, அம்பலத்திற்கு வந்தது, கைதுகள் நடந்தது என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது இவரது ஆட்சியில்தான்.

   2 ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்,  இஸ்ரோவின் எஸ் பாண்ட் ஊழல், நிலக்கரி சுரங்க முறைகேடுகள், ராணுவத்தில் பல்வேறு ஊழல்கள் என அனைத்து வகையான ஊழல்களுக்கும் அமைச்சரவைத் தலைவர் என்கிற வகையில் பிரதமரே முழுப்பொறுப்பு. ஆனால் இந்த நிலையிலும் அவர் பரிசுத்தமானவர் என்று லாவணி பாடுவது ஊழலைவிட மோசமானது.

  2 ஜி அலைக்கற்றை ஊழலில் பிரதமருக்குள்ள பொறுப்பை யாரும் கேள்விக்குட்படுத்தவில்லை. அதுவாவது போகட்டும். பிரதமரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயல்படும் இஸ்ரோ நிறுவன எஸ் பாண்ட் ஊழலில் பிரதமரின் பங்கு மூடி மறைக்கப்பட்டது. இதுகுறித்து இவ்வலைப்பதிவில் எழுதியுள்ளேன்.


 அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை எற்க மறுக்கும் பிரதமரின் போக்கையே நாம் மன்னிக்கமுடியாது. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தான் பொறுப்பு வகிக்கும் துறைகளுக்குகூட பொறுப்பேற்க மறுப்பது எவ்வகையான தூய்மைவாதம் என்பது விளங்கவில்லை. இதற்கு பின்பாட்டுப் பாட ஒரு பெரிய கும்பல் கிளம்புவதுதான் வருத்தமாக உள்ளது.

  இஸ்ரோ பிரதமரின் கட்டுப்பாட்டில்லுள்ள ஓர் நிறுவனம். இதில் நடக்கும் பரிவர்த்தனையில் தமக்குத் தொடர்பில்லை என்று மன்மோகன் சிங் வாய்கூசாமல் பொய் சொல்கிறார். இந்த சட்டவிரோத ஒப்பந்தம் பின்னர் ரத்து செய்யப்பட்டது. நாட்டிற்கு ஏற்படவிருந்த இழப்புத் தடுக்கப்பட்டபோதிலும் இந்த விஷயம் வெளியாகாமல் இருந்திருந்தால் நாட்டின் பணம் கொள்ளை பொயிருக்கும். இந்த முறைகேட்டிற்கு பிரதமர் மன்மோகன் சிங்தான் முழுப்பொறுப்பேற்கவேண்டும்.

  2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கூட உச்சநீதிமன்றம்உரிமங்களை ரத்து செய்திருக்கிறது. எனவே ஆ.ராசாவை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துவிடலாமா? ஜெ.ஜெயலலிதா டான்சி நிலத்தை வாங்கிவிட்டு நீதிமன்றத்தில் வழக்கு வருகிறபோது மீண்டும் திரும்ப அரசுக்கு ஒப்படைத்தால் எப்படி குற்றமில்லாமற்போகும்? இந்தமாதிரி இவர்கள் ஊழல் வழக்குகளில் தப்பித்துக்கொள்ள அனுமதிக்கும்போது ஊழல் எவ்வாறு ஒழியும்?

  ஒருவேளை காங்கிரஸ் அமைச்சர் தொலைதொடர்புத் துறையில் இருந்திருந்தால் 2 ஜி அலைக்கற்றை ஊழலில் கைதுகள் இவ்வளவு விரைவாக நடந்துருக்குமா என்பது சந்தேகமே. சுரேஷ் கல்மாடி மீது உடன் நடவடிக்கை எடுக்கவும் பதவியை பறிக்கவும் மிகவும் காலதாமதம் ஆனது நினைவிருக்கலாம்.

   2 ஜி அலைக்கற்றை ஊழலில் ஆ.ராசா மட்டும் பலிகடா ஆக்கப்பட்டு பலர் பாதுகாக்கப்படும் நிலை தொடர்கின்ற நிலையிலும் தி.மு.க. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை கைவிடத் தயாராக இல்லை. தனது குடும்பம், சொத்துக்கள் மற்றும் ஜெ.ஜெயலலிதாவின் அடக்குமுறைகளிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மு.கருணாநிதிக்குக் கேடயமாக உள்ளது.

 இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஊழல் புரிந்தவரும் ஊழல் செய்தவர்களைப் பாதுகாத்தவரும் எது நடந்தாலும் தனக்கு எதுவும் தெரியாதெனச் சொல்லி பிரதமர் பதவிக்குரிய மாண்பை சிதைத்தவருமான மன்மோகன்சிங் தூய்மையானவர் என்று சொல்வது யோக்கியர் வர்றார், சொம்பை எடுத்து உள்ளே வையுங்கள் என்பது போலத்தான்.

ஓர் பின் குறிப்பு:-

  இதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் அன்னா ஹசாரே, பிரதமர் மன்மோகன்சிங் ஊழல் செய்யாத அற்புதமான மனிதர் என நற்சான்று வழங்கியிருக்கிறார். ஊழலுக்கு உறுதுணையாக இருக்கும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் ஊழல் எதிர்ப்புப் போராளியாக போலி வேடம் புனையும் அன்னா ஹசாரேவிற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே பன்னாட்டுக் கைகூலிகள். முன்னவர் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து கைகட்டிச் சேவகம் செய்பவர். பின்னவரோ கார்ப்பரேட்களின் ஊழல்களையும் அத்துமீறல்களையும் கண்டுகொள்ள விரும்பாதவர். அப்புறமென்ன மாறிமாறி சொறிந்துகொள்ள வேண்டியதுதானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக