வியாழன், ஜனவரி 31, 2013

இவர்களை என்ன செய்யலாம்?


இவர்களை என்ன செய்யலாம்?        -மு.சிவகுருநாதன்

       06.12.2011 எனது வலைப்பூவில் இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை முன்னகர்த்திய தலைவர் - என்ற தலைப்பில் அண்ணல் அம்பேத்கர் பற்றிய குறிப்பொன்றை எழுதியிருந்தேன். அதில் தமிழக அரசின் பத்தாம்வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் (பதிப்பு – 2011, பக். 72) அம்பேத்கர் தொடங்கிய இயக்கமான பஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (Bahishkrit Hitaharini Sabha) என்பதை பாசிகிருத்கிக்காரணி சபா (Outcastes Welfare Association) என்று தவறாக சுட்டப்பட்டிருப்பதை அக்கட்டுரையில் சொல்லியிருந்தேன்.
     மோசமான இந்தப் பிழையை 2012 மறுபதிப்பில் பகிஷ்கிருத்திகாராணிசபா (மறுபதிப்பு – 2012, பக். 72) என்று திருத்தியுள்ளனர். பாசி, காரணி என்று எள்ளல் செய்தவர்கள் தற்போது கிருத்திகா, ராணி என சொல்வதை எப்படி பொறுப்பது?  என்ன கொடுமை இது! இவ்வளவு கேவலமாக பாடத்திட்டம் எழுதுபவர்களை என்ன செய்வது? அக்கட்டுரையின் இணைப்பு இதோ.

செவ்வாய், ஜனவரி 29, 2013

தமிழ்வழிக் கல்வியை என்ன செய்வது?


தமிழ்வழிக் கல்வியை என்ன செய்வது?         -மு.சிவகுருநாதன்

(தமிழ்வழிக் கல்விக்கு ஆபத்து – என்ற அ.மார்க்ஸ் – ன் இணையக்கட்டுரையை ஒட்டிய எனது கருத்துக்கள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.)

   தமிழ்வழிக் கல்விக்கு ஆபத்து – என்ற கட்டுரையில் அ.மார்க்ஸ் குறிப்பிட்டுள்ள இன்றைய நிதர்சனத்தை வெளிக்கொணர்பவை. இதுபற்றி முக்கிய அரசியல் கட்சிகள், ஆசிரிய இயக்கங்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கவனம் குவிக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது. இரண்டாண்டுகளுக்கு முன்பு சமச்சீர்கல்விக்கெதிரான நிலைப்பாட்டை ஜெ. ஜெயலலிதாவின் அஇஅதிமுக அரசு மேற்கொண்டபோது கல்வி பற்றிய ஓர் பொதுவிவாதம் இங்கு சாத்தியமாயிற்று. ஆனால் இது தொடராமற்போனது கல்விக்கு இழப்பு.
  
 பெருநகரம், நகரங்களில் சில உயர்நிலை, மேனிலை வகுப்புகளில் அரசு பல ஆண்டுகளாக ஆங்கில வழி வகுப்புகளை நடத்திவருகிறது. சுயநிதிப்பிரிவாக ஆங்கில வழி வகுப்புகளை நடத்த அரசுப்பள்ளிகளுக்கும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கும் எவ்விதத் தடைகளுமில்லை. இன்றும்கூட தமிழகமெங்கும் பரவலாக  அரசுப்பள்ளிகளில் சுயநிதி ஆங்கில வழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பெற்றோர் ஆசிரியர் கழகம் முகவர்களாக செயல்பட்டு இதற்கென மாணவர்களிடம் பெருந்தொகை வசூல் செய்கிறது. ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் இவ்வமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

  அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் இந்த சுயநிதிப்பிரிவுகளை வைத்துத்தான் பெரும் கொள்ளையடிக்கின்றன. இதற்கு அரசு நிர்வாகம் சேவகம் செய்கிறது. தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப அகக்கட்டுமான வசதிகளைப் பெற்ற இந்தப்பள்ளிகள் பல்லாயிரம் மாணவர்களை ஆங்கில வழியில் சேர்த்து தமிழ்வழி மாணவர்களுக்குண்டான வசதிகளை அபகரித்துக் கொள்கின்றனர். தமிழ்வழியில் பயிலும் மாணவர்களைக் கொண்டு அங்கீகாரம் பெறும் இப்பள்ளிகள் அவர்களை இரண்டாந்தரமாக நடத்துவது வேதனை தரும் உண்மை.

   இந்த நிலையை அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் வேலையைத்தான் அரசு தற்போது செய்கிறது. இங்கு இவை சுயநிதிப்பிரிவாக வேண்டுமானால் இல்லாமலிருக்கலாம். ஆனால் தமிழ்வழிக் கல்வியையும் அக்குழந்தைகளுக்குண்டான கட்டுமான வசதிகளையும் இவர்கள் அபகரிக்கப்போவதென்னவோ உண்மை. இவ்வாங்கில வழி வகுப்புகள் இன்னும் 5, 8 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் இருக்கும் தமிழ் வழி வகுப்புகளை முற்றிலும் விழுங்கிவிடும் அபாயம் மறுப்பதற்கில்லை.

    அரைகுறை ஆங்கில வழிக் கல்விக்கு இன்று சமூகத்தில் பெருத்த ஆதரவு உள்ளது உண்மையான நிலவரம். சாதாரண கூலித்தொழிலாளிகூட தனது குழந்தைகளை ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிக்கவைப்பதை பெருமையாகக் கருதும் போக்கு உள்ளது. இது உண்மையான ஆங்கிலவழியா என்பது வேறு விஷயம். அரசுப்பள்ளிகளில் மாணவர்களைத் தக்கவைக்க தமிழக அரசு எடுக்கும் இம்முடிவுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எவ்வித எதிர்ப்பும் இருக்கப்போவதில்லை. 

    பெரும்பாலான ஆசிரியர்கள் ஆங்கிலவழியில்தான் தங்களது குழந்தைகளைப் படிக்கவைக்கின்றனர். ஆகவே தற்போது தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கவேண்டியுள்ளது. அரசுப்பள்ளிகளில் இவ்வகுப்புகள் தொடங்கப்பட்டால் அதில் அவர்களைச் சேர்க்கலாம் என்ற எண்ணத்தால் ஆசிரியர்கள் இம்முடிவை எதிர்க்கவில்லை என்கிற தப்பெண்ணம் யாருக்கும் வேண்டாம். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால்தான் தங்கள் பணிக்குப் பாதுகாப்பு என்ற சுயநலநோக்கைத்தவிர வேறு நோக்கங்கள் இல்லை. எனவே அரசின் இத்தகைய நடவடிக்கையை ஆசிரியர் இயக்கங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.

    ஆங்கிலவழிக் கல்வி குறித்தான மாயை முதலில் உடைபடவேண்டும். ஆங்கிலத்தை ஓர் மொழியாகக் கற்பது, ஆங்கில மொழியில் பிற பாடங்களைக் கற்பது இவையிரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கூட இன்றைய சமூகம் விளங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.

   முதல் வகுப்பு தொடங்கி கல்லூரி வரை 15 ஆண்டுகள் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டுவந்தும் மொழியறிவை அடையவில்லை என்பதற்கான காரணத்தை அரசும் சமூகமும் உணர்ந்து கொள்ளவில்லை. ஆங்கில மொழியறிவைப் பெறாமல் ஆங்கில வழியில் பிற பாடங்களை கற்பது எப்படி சாத்தியம் என்பதை சமூகம் உணர மறுக்கிறது.

   இங்கு ஆங்கிலத்தை மொழிபெயர்த்துச் சொல்லிக்கொடுக்கும் முறை பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது. இதனால் ஆங்கில மொழியை சுயமாகப் பேச, எழுத முடிவதில்லை. இந்நிலையில் பிற பாடங்களையும் மொழிபெயர்த்துச் சொல்லிக்கொடுப்பதால் மாணவர்களுக்கு ஆங்கில அறிவோ, சுயசிந்தனையோ வளர வாய்ப்பின்றிப் போகிறது.

  ஆங்கில மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் மொழியறிவு இங்கு கேள்விக்குரியது. ஆங்கிலத்தை முறையாகப் பயிலாமல் பதவி உயர்விற்காக ஆங்கில ஆசிரியர்களாக அவதாரமெடுப்பவர்களில் பலர் மொழியறிவைப் பெற்றவர்களில்லை. கல்லூரிகளில் ஆங்கிலம் படித்து வந்தவர்கள் நிரம்ப மொழியறிவு உடையவர்கள் என்று கருதவும் இங்கு இடமில்லை. ஆங்கில ஆசிரியர்கள் எத்தனை பேர் ஆங்கில தினசரிகளை வாசித்து தங்களது மொழியறிவை மேம்படுத்திக் கொள்கிறார்கள்? இதர பாடங்களுக்கும் இதனை விரிவுபடுத்திப் பார்க்கலாம். ஆசிரியர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஆய்வு செய்தால் உண்மை புலப்படும்.

   இளங்கலையில் ஆங்கிலத்தை முதன்மைப்பாடமாக எடுக்காமல் கணிதம், அறிவியல், வரலாறு, பொருளியல் என்று வேறு எந்தப் பாடங்களையும் பயின்ற பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவிஉயர்வு பெறும் நிலை உள்ளது. எது எப்படியிருப்பினும் ஆசிரியர்களுக்கு சுயகல்வி அவசியம் என்பதை நாம் வலியுறுத்தவேண்டிய தேவையிருக்கிறது.  ஆங்கிலம் மட்டுமல்ல, தமிழும் செழுமைப்படுத்தபடவேண்டியது இன்றைய காலத் தேவையாகும்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிக்கல்வியைச் செம்மைப்படுத்த எனக்குத் தோன்றும் சில ஆலோசனைகள்:

01.பாடத்திட்ட சீரமைப்பு: ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் வரை மொழிப்பாடங்களை உரிய கல்வியாளர்களைக் கொண்டு சீராய்வு செய்யவேண்டும். சமச்சீர்கல்வி பாடத்திட்ட மறு ஆய்வு போலில்லாமல் நடுநிலையான ஆய்வாக இது இருக்கவேண்டும். நடைமுறைப் பொருத்தப்பாடில்லாதவை நீக்கப்பட்டு மொழியின் நவீன சிந்தனைகளை உள்வாங்கப் பெற்றதாக மொழிப்பாடநூல் அமையவேண்டும். பிற பாடங்கள் மிகவும் நவீனமயமாகிவிட்டதாக இதற்கு பொருளல்ல. அவையும் சரிசெய்யப்பட  வேண்டியவையே.

02.ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்ட சீரமைப்பு: கற்றல் – கற்பித்தலில் எவ்வளவோ நவீன உத்திகள் வந்துவிட்ட பிறகும் இளநிலைக் கல்வியியல் மற்றும் இடைநிலை ஆசிரியப் பயிற்சிப் பாடத்திட்டங்கள், கற்பிக்கும் முறைகள் ஆகியன் மிகவும் அரதப் பழசானவை. இவற்றை முறைப்படுத்தி தொலைநோக்கான பார்வையோடு பாடநூற்கள் தயாரிக்கப்படவேண்டும். முறையான பயிற்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும். இதற்கு மாறாக மத்திய, மாநில அரசுகள் தகுதித் தேர்வு ஒன்றை மட்டும் கொண்டும் ஆசிரியரின் திறமையை மதிப்பிடும் பெருந்தவற்றைச் செய்கின்றன. முற்றிலும் தனியார் மயமாகிப்போன இப்படிப்புகள் இன்று சொல்லக் கூச வைக்கும் இழிநிலையை எய்துள்ளன.

03.அஞ்சல் வழி அல்லது தொலைதூரக்கல்விப் பாடத்திட்டத்திலுள்ள குறைகளைக் களைதல்:  தொலைதூரக் கல்வியின் பாடத்திட்டங்கள் மிகுந்த குறைபாடுடையவை. குறிப்பாக மொழிப்பாடங்கள் மிக மோசமான தரத்திலுள்ளன. தொலைதூரக் கல்வியில் இளங்கலைக் கல்வியியல் பட்டபடிப்பிற்காக காலம் இரண்டாண்டாக ஆக்கப்பட்ட்டதே தவிர முறையான ஆசிரியர்களை உருவாக்குவதாக அமையவில்லை. இத்தகையப் பாடத்திட்டங்கள் யாரைக் கருத்தில் கொண்டு எதற்காக உருவாக்கப்படுகின்றன என்பதே விளங்கவில்லை.

04.கற்பித்தல் உத்திகள் – தேர்வு முறைகளில் மாற்றம்: ஆசிரியர் கல்வி பாடத்திட்டங்களை மாற்றவேண்டும் என்று சொல்லும்போது இப்போதுள்ள கற்பித்தல் முறைகளிலுள்ள குறைபாடுகள் எளிதில் விளங்கும். இவற்றை சரிசெய்து அறிவியல்பூர்வமான சாத்தியப்பாடுகள் முன்மொழியப்படவேண்டும். மனப்பாடத்திறனை மட்டும் சோதிக்கின்ற இன்றையத் தேர்வு முறை அடியோடு மாற்றம் பெறவேண்டும்.

04.மொழி ஆய்வகங்கள்: அனைத்துப் பள்ளிகளிலும் செயலூக்கமுள்ள மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படவேண்டும். தற்போது ஆங்கில மொழி ஆய்வகங்கள் சில பள்ளிகளில் பெயருக்குத்தான் செயல்படுகின்றன. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிற்கும் மொழி ஆய்வகங்கள் அமைந்து உச்சரிப்பு, பேச்சுப் பயிற்சிகள் முறையாக வழங்கப்படுதல் அவசியம்.

05.பயன்பாட்டு மொழியியலுக்கான உரிய பயிற்சிகள்: விண்ணப்பங்கள் (applications), வங்கி செலுத்துச் சீட்டு (challan), பணவிடைப் படிவம் (money order form) ஆகிய எந்த ஒன்றையும் தயக்கமின்றிச் செய்ய வழிகோலுவதாக இன்றைய சூழல் இல்லை. பத்தாம் வகுப்பில் தமிழ் இரண்டாம் தாளுக்கென வங்கி செலுத்துச் சீட்டு பூர்த்தி செய்யும் வினா ஒன்று இருக்கிறது. அந்த மாதியான செலானை நாம் எந்த வங்கியிலும் காணமுடியாது.

06.ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிகள்: மொழித்திறன்களை வளர்க்க ஆசிரியர்களுக்கு உரிய பணியிடைப் பயிற்சி அளிக்கப்படல் அவசியமானது. குறிப்பிட்ட மொழியில் சரளமாக உரையாடத் தெரியாத ஆசிரியருக்கு அம்மொழிக் கற்பிக்கும் வாய்ப்பை வழங்கக்கூடாது. இன்றைய நிலையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பல பணியிடைப்பயிற்சிகள் காலவிரையம். பொழுதுபோக்குதல், ஒதுக்கப்பட்ட நிதியைக் காலி செய்தல் போன்ற நோக்கங்களுக்காக நடத்தப்படுபவை என்பதையும் இங்கு சொல்லியாகவேண்டும்.

07.அரசுப்பள்ளிகள் மேம்பட: அரசுப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு மத்திய மாநில அரசுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்தல் வேண்டும். இதில் எந்த விதிவிலக்கும் வழங்கக்கூடாது. ஆசிரியர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று மட்டும் சொல்வது சமூகப் பொருத்தமுடைமை ஆகாது. இதில் அரசு ஊழியர்களுக்கு விதிவிலக்குத் தேவையில்லை.

08.தனியார் பள்ளிகள் அரசுடைமை: இது ஒன்றுதான் முடிவான தீர்வு. அதை நோக்கிப் பயணிப்பதுதான் உரிய வழியாக இருக்கமுடியும். வல்லாதிக்கனவில் ராணுவத்திற்கு செலவிடும் பெருந்தொகை, பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு சலுகைகள், மானியங்கள் போன்றவற்றைத் நிறுத்தினால் இந்திய மக்களுக்கு கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவது ஒன்றும் இயலாத காரியமல்ல.

புதன், ஜனவரி 09, 2013

காவிரி டெல்டா மாவட்டங்களில் CPI(M) –ன் மூன்று நாள் போராட்டம்


காவிரி டெல்டா மாவட்டங்களில் CPI(M) –ன் மூன்று நாள் போராட்டம்
                                                         -மு.சிவகுருநாதன்

    இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் விவசாய அமைப்பான தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் ஜனவரி 7,8,9 என மூன்று நாட்கள் இரவு பகலாகத் தொடர்ந்தது. மூன்றாவது நாளாகிய இன்று மதியம் முற்றுகைப்போராட்டம் சாலை மறியல் போராட்டமாக மாறிப்போனது.
   சாலை மறியல் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் பெரும் இன்னலுக்குள்ளாயினர். இரண்டு நாள்களாக சிலரின் கவனத்தப் பெறாத இப்போராட்டம் இன்றைய சாலை மறியலால் பலரின் கவனிப்பை பெற்றதையும் நாம் மறுக்கமுடியாது. கொடநாடு அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஜெ.ஜெயலலிதா விவசாயிகளின் இழப்பை அரசு முற்றிலுமாக ஏற்கும் என்ற உறுதியை நம்பி இப்போராட்டம் இன்றுடன் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
   இத்தகைய நிகழ்வுகள் இந்த மாதிரியான போராட்டங்களின் தேவையை மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகின்றன. மக்கள் போராடாமல் எதுவுமில்லை என்கிற நிலையை நமது ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். இப்போராட்டங்களிலிருந்து நாம் வேறொன்றையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது. பொதுவாக இம்மாதிரியான போராட்டங்கள் அனைத்தும் ஒரு நாள் அடையாளப் போராட்டங்களாகவே நடத்தப்படுவதுண்டு. மூன்று பகல்கள், இரண்டு இரவுகள் தங்கி சமைத்து சாப்பிட்டுப் போராட்டம் நடத்துவது  இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சிக்குகூட புதுமையானதுதான் என்று நினைக்கிறேன்.
  இப்போராட்டத்திற்கு ஓர் உந்துசக்தியாக 500 நாட்களுக்கு மேலாக நீளும் கூடங்குளம் போராட்டம் உந்துசக்தியாக இருக்கலாம் என்பது என் நம்பிக்கை. இதை மார்க்சிஸ்ட் தோழர்கள் ஏற்க மறுக்கலாம். ஏனெனில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் மார்க்சிஸ்ட்களுக்கு எதிரானதாக இவர்கள் நம்புகிறார்கள். ரஷ்ய அணு உலைக்கு எதிராக போராடுவது தங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு ஒப்பானது என்று இவர்கள் நினைக்கலாம். இதற்காக அமெரிக்க அணு உலை வரும்வரை கூடங்குளம் மக்கள் பொறுத்திருக்க முடியாது. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் போல் வெளிப்படையான அணு உலை எதிர்ப்பை தமிழகத்தில் கணமுடியவில்லை. ஆதவன் தீட்சன்யா போன்ற தமுஎகச தோழர்களின் கருத்தை கட்சியின் கருத்தாக கருத இடமில்லை என்றே நான் கருதுகிறேன்.
   மக்கள் போராட்டங்கள் அனைத்தும் இம்மாதிரியான பிளவுகள் மூலமாகவே தோல்வியில் முடிகின்றன. ஆளும் வர்க்கம் வெற்றியடைவது தொடர்கதையாகிறது. உண்மையில் இதுதான் மக்களின் ஜனநாயகத்தின் தோல்வியாக இருக்கமுடியும். மீனவர்களின் வாழ்வாதாரப் போராட்டமும் விவசாயிகளின் இத்தகையப் போராட்டங்களும் ஓர் புள்ளியில் இணையமுடியாமல் தடுப்பது எது என்பதை நாம் யோசிக்கவேண்டும். விவசாயிகளின் போராட்டத்திற்கு கூடங்குள மக்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். ஆனால் அவர்களுக்கு விவசாயிகளின் ஆதரவுக்கரம் நீளாமல் போனதற்கு யார் காரணம்? மின்தேவை மட்டும் நம் கண்ணை மறைப்பது ஏன்? அரசு - அணு சக்தித் துறையின் போலியான கணக்குகளை நம்பி நாம் ஒற்றுமையற்றுப் போகிறோமே. இந்நிலை என்று தொலையும்? நாம் எப்போது  விழிக்கப்போகிறோம்? 

திங்கள், ஜனவரி 07, 2013

பள்ளிக்கல்வித்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது?


பள்ளிக்கல்வித்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது?
                                                 -மு.சிவகுருநாதன்

   வழக்கம்போல ஜனவரி 07, 2013 நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு அரையாண்டுத்தேர்வு சமூக அறிவியல் வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து வெளியானதாக முன்கூட்டியே வெளியாகிவிட்டது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தொகுதித்தேர்வுகள், ஆசிரியர் தகுதித்தேர்வுகள், காவலர் தேர்வுகள், மாவட்ட அளவில் நடைபெறும் 11 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் என பல்வேறு  தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகிறபோது 10 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியாவது ஒன்றும் வியப்படையக்கூடிய செய்தியல்ல. இதனால் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு பின்னொரு நாளில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

  அரையாண்டுத்தேர்வை தமிழகம் முழுவதும் பொதுவாக நடத்தவேண்டும் என்று யார் கோரிக்கை வைத்தார்கள்? யாருடைய பரிந்துரை ஏற்கப்பட்டது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. தேர்வுக்குப் பின் விடுமுறை விடாமல் தேர்வுகளுக்கு இடையே விடுமுறை விடும் புரட்சிகரமான திட்டம் யாருடைய கற்பனையில் உதித்ததென்று தெரியவில்லை?

  12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத்தேர்வு 10.01.2013 அன்றுதான் முடிகிறது. அதன் பிறகு பொங்கல் விடுமுறைகளுக்குப் பிறகு ஒர் வாரத்திற்குப் பின்பு பிப்ரவரி முதல் வாரம் முதல் செய்முறைத்தேர்வுகள் தொடங்கப்படவுள்ளன. எனவே திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட வாய்ப்பின்றிப் போகிறது. மார்ச் 01 முதல் அவர்கள் அரசுப்பொதுத்தேர்வை சந்திக்கவேண்டும். யாருடனும் கலந்தாலோசிக்காமல் குறிப்பாக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என யாருடைய ஒப்புதலில்லாமல் இத்தகைய திட்டத்தை யாரால் அமல்படுத்தப்பட்டது என்பதை உரியவர்கள் விளக்கவேண்டும்.

   ஒரே நாளில் இரு அரசு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்ட காலங்கள் கூட உண்டு. அது ஒரு நாளில் ஓர் தேர்வு என்ற நிலையைக்கடந்து ஓர் வாரத்திற்கு ஓர் தேர்வு கட்டத்தை எட்டியிருக்கிறது. இது நியாயமானதா? தேர்வுகள் மாணவர்களை இம்சிக்கின்றன என்பது உண்மைதான். அதற்கு தேர்வுகளை ஒழித்துக்கட்டுவதை விட்டுவிட்டு இடையிடையே விடுமுறை விடுவதால் என்ன பலனும் விளையப்போவதில்லை. அடிப்படையை மாற்றாமல் மேல்பூச்சு வேலைகளில் ஈடுபடுவது நமது ஆட்சியாளர்களின் வாடிக்கைதானே.

   மாவட்ட அளவில் 11 ஆம் வகுப்பு வினாத்தாள்கள் வெளியானதால் இம்மாதிரி மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் ஏற்கக்கூடியதாக இல்லை. மாநிலம் முழுவதற்குமான பொதுவான வினாத்தாள்களை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்தான் விநியோகிக்கின்றனர். இப்போதுமட்டும் தவறு நடக்காது என் எப்படிச் சொல்லமுடியும்? மாவட்ட அளவில் வினாத்தாள்கள் வெளியானதற்கு இதுவரை எந்த அதிகாரி, ஊழியர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்?

  11 ஆம் வகுப்பில் 12 ஆம் வகுப்புப் பாடங்களைப் போதித்து 12 இல் அதிகத் தேர்ச்சி காட்டும் தனியார் பள்ளிகளுக்கு இதில் பெரும்பங்கு உண்டு. அவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தது உண்டா? சென்ற மார்ச்சில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கணித விடைகளை நகலெடுத்து தேர்வறையில் மாணவர்களுக்கு விநியோகித்த திருவண்ணாமலை தனியார் பள்ளிக்கு என்ன தண்டனை? தேர்வு மையம் ரத்து மட்டுமே! சில ஆண்டுகளில் இப்பள்ளி மீண்டும் தேர்வுமையமாக மாறிவிடும். இதைக் கையும் களவுமாக பிடித்த மாவட்ட ஆட்சியர் திரு. அன்சுல் மிஸ்ராவுக்கு உடன் பணிமாறுதல்.

   இதில் குறிப்பிடத்தகுந்த விடயம் புத்தகம், குறிப்பேடு, மதிய உணவு, சீருடை, காலணி, அட்லஸ், சைக்கிள், மடிகணினி, கணிதவியல் பெட்டி, ரூ 1500, ரூ 2000 என ஊக்கத்தொகை வழங்கும் அரசு வினாத்தாளுக்கு விடைத்தாளுக்கு மாணவர்களிடம் கணிசமான தொகை வசூலிக்கிறது. இவற்றில் இதுவரை பெருந்தொகை மாவட்ட அளவில் பங்கிடப்பட்டு வந்தது.  இந்நிலையில் மாநில அளவில் உள்ள அதிகாரிகளும் தற்போது 32 மாவட்டங்களையும் சேர்த்துப் பெரும்தொகை அடைவதற்கான முன்னேற்பாடுதான் இந்த பொதுத்தேர்வுத் திட்டம் என்று ஐயுறவேண்டியுள்ளது.

   சென்னையில் படியில் பயணம் செய்து மாணவர்கள் உயிர் இழந்ததையெடுத்து காலை 7:30 மணிக்கு பள்ளிகளையும் 8:00 மணிக்குக் கல்லூரிகளையும் திறக்கப் போவதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. விலையில்லாத பேருந்து பயண அட்டைகளை கணக்கின்றி வழங்கும் அரசு பேருந்துகளை மட்டும் போதுமான அளவில் இயக்குவதில்லை. தானே முன்வந்து வழக்காக இந்நிகழ்வை எடுத்துக்கொண்ட நீதிமன்றம் அரசுக்கு எந்த ஆணையும் பிறப்பிக்காமல் மாணவர்களை பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து நீக்க பரிந்துரை செய்கிறது.

  கூட்ட  நெரிசலைக் காரணம்காட்டி பள்ளி, கல்லூரிகளை முன்கூட்டியே திறக்க ஆலோசனை சொல்பவர்கள் அரசு அலுவலகங்களை முன்கூட்டியே திறக்க மட்டும் சொல்ல மறுப்பதேன்? அரசும் ஆளும்வர்க்கமும் மாணவர்களை கிள்ளுக்கீரையாக மதிப்பது கண்டிக்கபடவேண்டிய ஒன்றாகும். முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் இதேபோல் பள்ளி, கல்லூரி நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அவை தற்போது ஓரளவு சரிசெய்யப்பட்டுள்ளன. மீண்டும் பழையபடி மாற்றம் செய்வதையும் பொதுமக்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டிக்க முன்வரவேண்டும்.  

   நெரிசலைக் கட்டுப்படுத்த நேரமாற்றம் தவிர்த்த மாற்று வழிகளை யோசிக்கவேண்டும். அதிக பேருந்துகளை இயக்குதல், இலவச பேருந்து பயண அட்டைக்கு கி.மீ. உச்சவரம்பு நிர்ணயம் செய்தல், கட்டாய கல்வி உரிமைச்சட்டம்-2009 ஐ முறையாக அமல்படுத்தி அருகிலுள்ள பள்ளிகளில் அம்மாணவர்கள் படிக்க வழிவகை செய்தல், 11, 12 வகுப்புகளில் அரசின் இட ஒதுக்கீட்டை சரிவர அமல்படுத்துதல் போன்ற பல்வேறு காரியங்களைச் செய்யவேண்டியுள்ளது.

   கடந்த இரு ஆண்டுகளாக சமச்சீர்கல்வி மறுப்பிலிருந்து தொடங்கி பள்ளிக்கல்வித்துறை மிகவும் மோசமான நிலையில் இயங்கிவருகிறது. இது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை. இந்நிலை நீடிப்பது வருங்கால தமிழகத்திற்கு நல்லதல்ல.