காவிரி
டெல்டா மாவட்டங்களில் CPI(M) –ன் மூன்று நாள் போராட்டம்
-மு.சிவகுருநாதன்
இந்திய கம்யூனிஸ்ட்
(மார்க்சிஸ்ட்) கட்சியின் விவசாய அமைப்பான தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாயத்
தொழிலாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி டெல்டா
மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் ஜனவரி 7,8,9 என மூன்று நாட்கள்
இரவு பகலாகத் தொடர்ந்தது. மூன்றாவது நாளாகிய இன்று மதியம் முற்றுகைப்போராட்டம் சாலை
மறியல் போராட்டமாக மாறிப்போனது.
சாலை மறியல் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை
பாதிப்புக்குள்ளானது. குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் பெரும் இன்னலுக்குள்ளாயினர். இரண்டு
நாள்களாக சிலரின் கவனத்தப் பெறாத இப்போராட்டம் இன்றைய சாலை மறியலால் பலரின் கவனிப்பை
பெற்றதையும் நாம் மறுக்கமுடியாது. கொடநாடு அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஜெ.ஜெயலலிதா
விவசாயிகளின் இழப்பை அரசு முற்றிலுமாக ஏற்கும் என்ற உறுதியை நம்பி இப்போராட்டம் இன்றுடன்
விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய நிகழ்வுகள் இந்த மாதிரியான போராட்டங்களின்
தேவையை மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகின்றன. மக்கள் போராடாமல் எதுவுமில்லை என்கிற
நிலையை நமது ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். இப்போராட்டங்களிலிருந்து நாம் வேறொன்றையும்
உணர்ந்துகொள்ளமுடிகிறது. பொதுவாக இம்மாதிரியான போராட்டங்கள் அனைத்தும் ஒரு நாள் அடையாளப்
போராட்டங்களாகவே நடத்தப்படுவதுண்டு. மூன்று பகல்கள், இரண்டு இரவுகள் தங்கி சமைத்து
சாப்பிட்டுப் போராட்டம் நடத்துவது இந்திய கம்யூனிஸ்ட்
(மார்க்சிஸ்ட்) கட்சிக்குகூட புதுமையானதுதான் என்று நினைக்கிறேன்.
இப்போராட்டத்திற்கு ஓர் உந்துசக்தியாக 500 நாட்களுக்கு
மேலாக நீளும் கூடங்குளம் போராட்டம் உந்துசக்தியாக இருக்கலாம் என்பது என் நம்பிக்கை.
இதை மார்க்சிஸ்ட் தோழர்கள் ஏற்க மறுக்கலாம். ஏனெனில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான
போராட்டம் மார்க்சிஸ்ட்களுக்கு எதிரானதாக இவர்கள் நம்புகிறார்கள். ரஷ்ய அணு உலைக்கு
எதிராக போராடுவது தங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு ஒப்பானது என்று இவர்கள் நினைக்கலாம்.
இதற்காக அமெரிக்க அணு உலை வரும்வரை கூடங்குளம் மக்கள் பொறுத்திருக்க முடியாது. கேரள
முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் போல் வெளிப்படையான அணு உலை எதிர்ப்பை தமிழகத்தில்
கணமுடியவில்லை. ஆதவன் தீட்சன்யா போன்ற தமுஎகச தோழர்களின் கருத்தை கட்சியின் கருத்தாக
கருத இடமில்லை என்றே நான் கருதுகிறேன்.
மக்கள் போராட்டங்கள் அனைத்தும் இம்மாதிரியான பிளவுகள்
மூலமாகவே தோல்வியில் முடிகின்றன. ஆளும் வர்க்கம் வெற்றியடைவது தொடர்கதையாகிறது. உண்மையில்
இதுதான் மக்களின் ஜனநாயகத்தின் தோல்வியாக இருக்கமுடியும். மீனவர்களின் வாழ்வாதாரப்
போராட்டமும் விவசாயிகளின் இத்தகையப் போராட்டங்களும் ஓர் புள்ளியில் இணையமுடியாமல் தடுப்பது
எது என்பதை நாம் யோசிக்கவேண்டும். விவசாயிகளின் போராட்டத்திற்கு கூடங்குள மக்களின்
ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். ஆனால் அவர்களுக்கு விவசாயிகளின் ஆதரவுக்கரம் நீளாமல்
போனதற்கு யார் காரணம்? மின்தேவை மட்டும் நம் கண்ணை மறைப்பது ஏன்? அரசு - அணு சக்தித்
துறையின் போலியான கணக்குகளை நம்பி நாம் ஒற்றுமையற்றுப் போகிறோமே. இந்நிலை என்று தொலையும்?
நாம் எப்போது விழிக்கப்போகிறோம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக