செவ்வாய், ஜனவரி 29, 2013

தமிழ்வழிக் கல்வியை என்ன செய்வது?


தமிழ்வழிக் கல்வியை என்ன செய்வது?         -மு.சிவகுருநாதன்

(தமிழ்வழிக் கல்விக்கு ஆபத்து – என்ற அ.மார்க்ஸ் – ன் இணையக்கட்டுரையை ஒட்டிய எனது கருத்துக்கள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.)

   தமிழ்வழிக் கல்விக்கு ஆபத்து – என்ற கட்டுரையில் அ.மார்க்ஸ் குறிப்பிட்டுள்ள இன்றைய நிதர்சனத்தை வெளிக்கொணர்பவை. இதுபற்றி முக்கிய அரசியல் கட்சிகள், ஆசிரிய இயக்கங்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கவனம் குவிக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது. இரண்டாண்டுகளுக்கு முன்பு சமச்சீர்கல்விக்கெதிரான நிலைப்பாட்டை ஜெ. ஜெயலலிதாவின் அஇஅதிமுக அரசு மேற்கொண்டபோது கல்வி பற்றிய ஓர் பொதுவிவாதம் இங்கு சாத்தியமாயிற்று. ஆனால் இது தொடராமற்போனது கல்விக்கு இழப்பு.
  
 பெருநகரம், நகரங்களில் சில உயர்நிலை, மேனிலை வகுப்புகளில் அரசு பல ஆண்டுகளாக ஆங்கில வழி வகுப்புகளை நடத்திவருகிறது. சுயநிதிப்பிரிவாக ஆங்கில வழி வகுப்புகளை நடத்த அரசுப்பள்ளிகளுக்கும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கும் எவ்விதத் தடைகளுமில்லை. இன்றும்கூட தமிழகமெங்கும் பரவலாக  அரசுப்பள்ளிகளில் சுயநிதி ஆங்கில வழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பெற்றோர் ஆசிரியர் கழகம் முகவர்களாக செயல்பட்டு இதற்கென மாணவர்களிடம் பெருந்தொகை வசூல் செய்கிறது. ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் இவ்வமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

  அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் இந்த சுயநிதிப்பிரிவுகளை வைத்துத்தான் பெரும் கொள்ளையடிக்கின்றன. இதற்கு அரசு நிர்வாகம் சேவகம் செய்கிறது. தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப அகக்கட்டுமான வசதிகளைப் பெற்ற இந்தப்பள்ளிகள் பல்லாயிரம் மாணவர்களை ஆங்கில வழியில் சேர்த்து தமிழ்வழி மாணவர்களுக்குண்டான வசதிகளை அபகரித்துக் கொள்கின்றனர். தமிழ்வழியில் பயிலும் மாணவர்களைக் கொண்டு அங்கீகாரம் பெறும் இப்பள்ளிகள் அவர்களை இரண்டாந்தரமாக நடத்துவது வேதனை தரும் உண்மை.

   இந்த நிலையை அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் வேலையைத்தான் அரசு தற்போது செய்கிறது. இங்கு இவை சுயநிதிப்பிரிவாக வேண்டுமானால் இல்லாமலிருக்கலாம். ஆனால் தமிழ்வழிக் கல்வியையும் அக்குழந்தைகளுக்குண்டான கட்டுமான வசதிகளையும் இவர்கள் அபகரிக்கப்போவதென்னவோ உண்மை. இவ்வாங்கில வழி வகுப்புகள் இன்னும் 5, 8 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் இருக்கும் தமிழ் வழி வகுப்புகளை முற்றிலும் விழுங்கிவிடும் அபாயம் மறுப்பதற்கில்லை.

    அரைகுறை ஆங்கில வழிக் கல்விக்கு இன்று சமூகத்தில் பெருத்த ஆதரவு உள்ளது உண்மையான நிலவரம். சாதாரண கூலித்தொழிலாளிகூட தனது குழந்தைகளை ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிக்கவைப்பதை பெருமையாகக் கருதும் போக்கு உள்ளது. இது உண்மையான ஆங்கிலவழியா என்பது வேறு விஷயம். அரசுப்பள்ளிகளில் மாணவர்களைத் தக்கவைக்க தமிழக அரசு எடுக்கும் இம்முடிவுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எவ்வித எதிர்ப்பும் இருக்கப்போவதில்லை. 

    பெரும்பாலான ஆசிரியர்கள் ஆங்கிலவழியில்தான் தங்களது குழந்தைகளைப் படிக்கவைக்கின்றனர். ஆகவே தற்போது தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கவேண்டியுள்ளது. அரசுப்பள்ளிகளில் இவ்வகுப்புகள் தொடங்கப்பட்டால் அதில் அவர்களைச் சேர்க்கலாம் என்ற எண்ணத்தால் ஆசிரியர்கள் இம்முடிவை எதிர்க்கவில்லை என்கிற தப்பெண்ணம் யாருக்கும் வேண்டாம். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால்தான் தங்கள் பணிக்குப் பாதுகாப்பு என்ற சுயநலநோக்கைத்தவிர வேறு நோக்கங்கள் இல்லை. எனவே அரசின் இத்தகைய நடவடிக்கையை ஆசிரியர் இயக்கங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.

    ஆங்கிலவழிக் கல்வி குறித்தான மாயை முதலில் உடைபடவேண்டும். ஆங்கிலத்தை ஓர் மொழியாகக் கற்பது, ஆங்கில மொழியில் பிற பாடங்களைக் கற்பது இவையிரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கூட இன்றைய சமூகம் விளங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.

   முதல் வகுப்பு தொடங்கி கல்லூரி வரை 15 ஆண்டுகள் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டுவந்தும் மொழியறிவை அடையவில்லை என்பதற்கான காரணத்தை அரசும் சமூகமும் உணர்ந்து கொள்ளவில்லை. ஆங்கில மொழியறிவைப் பெறாமல் ஆங்கில வழியில் பிற பாடங்களை கற்பது எப்படி சாத்தியம் என்பதை சமூகம் உணர மறுக்கிறது.

   இங்கு ஆங்கிலத்தை மொழிபெயர்த்துச் சொல்லிக்கொடுக்கும் முறை பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது. இதனால் ஆங்கில மொழியை சுயமாகப் பேச, எழுத முடிவதில்லை. இந்நிலையில் பிற பாடங்களையும் மொழிபெயர்த்துச் சொல்லிக்கொடுப்பதால் மாணவர்களுக்கு ஆங்கில அறிவோ, சுயசிந்தனையோ வளர வாய்ப்பின்றிப் போகிறது.

  ஆங்கில மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் மொழியறிவு இங்கு கேள்விக்குரியது. ஆங்கிலத்தை முறையாகப் பயிலாமல் பதவி உயர்விற்காக ஆங்கில ஆசிரியர்களாக அவதாரமெடுப்பவர்களில் பலர் மொழியறிவைப் பெற்றவர்களில்லை. கல்லூரிகளில் ஆங்கிலம் படித்து வந்தவர்கள் நிரம்ப மொழியறிவு உடையவர்கள் என்று கருதவும் இங்கு இடமில்லை. ஆங்கில ஆசிரியர்கள் எத்தனை பேர் ஆங்கில தினசரிகளை வாசித்து தங்களது மொழியறிவை மேம்படுத்திக் கொள்கிறார்கள்? இதர பாடங்களுக்கும் இதனை விரிவுபடுத்திப் பார்க்கலாம். ஆசிரியர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஆய்வு செய்தால் உண்மை புலப்படும்.

   இளங்கலையில் ஆங்கிலத்தை முதன்மைப்பாடமாக எடுக்காமல் கணிதம், அறிவியல், வரலாறு, பொருளியல் என்று வேறு எந்தப் பாடங்களையும் பயின்ற பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவிஉயர்வு பெறும் நிலை உள்ளது. எது எப்படியிருப்பினும் ஆசிரியர்களுக்கு சுயகல்வி அவசியம் என்பதை நாம் வலியுறுத்தவேண்டிய தேவையிருக்கிறது.  ஆங்கிலம் மட்டுமல்ல, தமிழும் செழுமைப்படுத்தபடவேண்டியது இன்றைய காலத் தேவையாகும்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிக்கல்வியைச் செம்மைப்படுத்த எனக்குத் தோன்றும் சில ஆலோசனைகள்:

01.பாடத்திட்ட சீரமைப்பு: ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் வரை மொழிப்பாடங்களை உரிய கல்வியாளர்களைக் கொண்டு சீராய்வு செய்யவேண்டும். சமச்சீர்கல்வி பாடத்திட்ட மறு ஆய்வு போலில்லாமல் நடுநிலையான ஆய்வாக இது இருக்கவேண்டும். நடைமுறைப் பொருத்தப்பாடில்லாதவை நீக்கப்பட்டு மொழியின் நவீன சிந்தனைகளை உள்வாங்கப் பெற்றதாக மொழிப்பாடநூல் அமையவேண்டும். பிற பாடங்கள் மிகவும் நவீனமயமாகிவிட்டதாக இதற்கு பொருளல்ல. அவையும் சரிசெய்யப்பட  வேண்டியவையே.

02.ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்ட சீரமைப்பு: கற்றல் – கற்பித்தலில் எவ்வளவோ நவீன உத்திகள் வந்துவிட்ட பிறகும் இளநிலைக் கல்வியியல் மற்றும் இடைநிலை ஆசிரியப் பயிற்சிப் பாடத்திட்டங்கள், கற்பிக்கும் முறைகள் ஆகியன் மிகவும் அரதப் பழசானவை. இவற்றை முறைப்படுத்தி தொலைநோக்கான பார்வையோடு பாடநூற்கள் தயாரிக்கப்படவேண்டும். முறையான பயிற்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும். இதற்கு மாறாக மத்திய, மாநில அரசுகள் தகுதித் தேர்வு ஒன்றை மட்டும் கொண்டும் ஆசிரியரின் திறமையை மதிப்பிடும் பெருந்தவற்றைச் செய்கின்றன. முற்றிலும் தனியார் மயமாகிப்போன இப்படிப்புகள் இன்று சொல்லக் கூச வைக்கும் இழிநிலையை எய்துள்ளன.

03.அஞ்சல் வழி அல்லது தொலைதூரக்கல்விப் பாடத்திட்டத்திலுள்ள குறைகளைக் களைதல்:  தொலைதூரக் கல்வியின் பாடத்திட்டங்கள் மிகுந்த குறைபாடுடையவை. குறிப்பாக மொழிப்பாடங்கள் மிக மோசமான தரத்திலுள்ளன. தொலைதூரக் கல்வியில் இளங்கலைக் கல்வியியல் பட்டபடிப்பிற்காக காலம் இரண்டாண்டாக ஆக்கப்பட்ட்டதே தவிர முறையான ஆசிரியர்களை உருவாக்குவதாக அமையவில்லை. இத்தகையப் பாடத்திட்டங்கள் யாரைக் கருத்தில் கொண்டு எதற்காக உருவாக்கப்படுகின்றன என்பதே விளங்கவில்லை.

04.கற்பித்தல் உத்திகள் – தேர்வு முறைகளில் மாற்றம்: ஆசிரியர் கல்வி பாடத்திட்டங்களை மாற்றவேண்டும் என்று சொல்லும்போது இப்போதுள்ள கற்பித்தல் முறைகளிலுள்ள குறைபாடுகள் எளிதில் விளங்கும். இவற்றை சரிசெய்து அறிவியல்பூர்வமான சாத்தியப்பாடுகள் முன்மொழியப்படவேண்டும். மனப்பாடத்திறனை மட்டும் சோதிக்கின்ற இன்றையத் தேர்வு முறை அடியோடு மாற்றம் பெறவேண்டும்.

04.மொழி ஆய்வகங்கள்: அனைத்துப் பள்ளிகளிலும் செயலூக்கமுள்ள மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படவேண்டும். தற்போது ஆங்கில மொழி ஆய்வகங்கள் சில பள்ளிகளில் பெயருக்குத்தான் செயல்படுகின்றன. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிற்கும் மொழி ஆய்வகங்கள் அமைந்து உச்சரிப்பு, பேச்சுப் பயிற்சிகள் முறையாக வழங்கப்படுதல் அவசியம்.

05.பயன்பாட்டு மொழியியலுக்கான உரிய பயிற்சிகள்: விண்ணப்பங்கள் (applications), வங்கி செலுத்துச் சீட்டு (challan), பணவிடைப் படிவம் (money order form) ஆகிய எந்த ஒன்றையும் தயக்கமின்றிச் செய்ய வழிகோலுவதாக இன்றைய சூழல் இல்லை. பத்தாம் வகுப்பில் தமிழ் இரண்டாம் தாளுக்கென வங்கி செலுத்துச் சீட்டு பூர்த்தி செய்யும் வினா ஒன்று இருக்கிறது. அந்த மாதியான செலானை நாம் எந்த வங்கியிலும் காணமுடியாது.

06.ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிகள்: மொழித்திறன்களை வளர்க்க ஆசிரியர்களுக்கு உரிய பணியிடைப் பயிற்சி அளிக்கப்படல் அவசியமானது. குறிப்பிட்ட மொழியில் சரளமாக உரையாடத் தெரியாத ஆசிரியருக்கு அம்மொழிக் கற்பிக்கும் வாய்ப்பை வழங்கக்கூடாது. இன்றைய நிலையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பல பணியிடைப்பயிற்சிகள் காலவிரையம். பொழுதுபோக்குதல், ஒதுக்கப்பட்ட நிதியைக் காலி செய்தல் போன்ற நோக்கங்களுக்காக நடத்தப்படுபவை என்பதையும் இங்கு சொல்லியாகவேண்டும்.

07.அரசுப்பள்ளிகள் மேம்பட: அரசுப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு மத்திய மாநில அரசுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்தல் வேண்டும். இதில் எந்த விதிவிலக்கும் வழங்கக்கூடாது. ஆசிரியர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று மட்டும் சொல்வது சமூகப் பொருத்தமுடைமை ஆகாது. இதில் அரசு ஊழியர்களுக்கு விதிவிலக்குத் தேவையில்லை.

08.தனியார் பள்ளிகள் அரசுடைமை: இது ஒன்றுதான் முடிவான தீர்வு. அதை நோக்கிப் பயணிப்பதுதான் உரிய வழியாக இருக்கமுடியும். வல்லாதிக்கனவில் ராணுவத்திற்கு செலவிடும் பெருந்தொகை, பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு சலுகைகள், மானியங்கள் போன்றவற்றைத் நிறுத்தினால் இந்திய மக்களுக்கு கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவது ஒன்றும் இயலாத காரியமல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக