பள்ளிக்கல்வித்துறை
யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது?
-மு.சிவகுருநாதன்
வழக்கம்போல
ஜனவரி 07, 2013 நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு அரையாண்டுத்தேர்வு சமூக அறிவியல் வினாத்தாள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து வெளியானதாக முன்கூட்டியே வெளியாகிவிட்டது. தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையத் தொகுதித்தேர்வுகள், ஆசிரியர் தகுதித்தேர்வுகள், காவலர்
தேர்வுகள், மாவட்ட அளவில் நடைபெறும் 11 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் என பல்வேறு தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகிறபோது
10 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியாவது ஒன்றும் வியப்படையக்கூடிய செய்தியல்ல. இதனால்
இத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு பின்னொரு நாளில் நடத்தப்படலாம் எனத்
தெரிகிறது.
அரையாண்டுத்தேர்வை தமிழகம் முழுவதும் பொதுவாக நடத்தவேண்டும்
என்று யார் கோரிக்கை வைத்தார்கள்? யாருடைய பரிந்துரை ஏற்கப்பட்டது என்ற விவரம் இதுவரை
தெரியவில்லை. தேர்வுக்குப் பின் விடுமுறை விடாமல் தேர்வுகளுக்கு இடையே விடுமுறை விடும்
புரட்சிகரமான திட்டம் யாருடைய கற்பனையில் உதித்ததென்று தெரியவில்லை?
12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத்தேர்வு
10.01.2013 அன்றுதான் முடிகிறது. அதன் பிறகு பொங்கல் விடுமுறைகளுக்குப் பிறகு ஒர் வாரத்திற்குப்
பின்பு பிப்ரவரி முதல் வாரம் முதல் செய்முறைத்தேர்வுகள் தொடங்கப்படவுள்ளன. எனவே திருப்புதல்
தேர்வுகள் நடத்தப்பட வாய்ப்பின்றிப் போகிறது. மார்ச் 01 முதல் அவர்கள் அரசுப்பொதுத்தேர்வை
சந்திக்கவேண்டும். யாருடனும் கலந்தாலோசிக்காமல் குறிப்பாக மாணவர்கள், பெற்றோர்கள்,
ஆசிரியர்கள் என யாருடைய ஒப்புதலில்லாமல் இத்தகைய திட்டத்தை யாரால் அமல்படுத்தப்பட்டது
என்பதை உரியவர்கள் விளக்கவேண்டும்.
ஒரே நாளில் இரு அரசு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்ட
காலங்கள் கூட உண்டு. அது ஒரு நாளில் ஓர் தேர்வு என்ற நிலையைக்கடந்து ஓர் வாரத்திற்கு
ஓர் தேர்வு கட்டத்தை எட்டியிருக்கிறது. இது நியாயமானதா? தேர்வுகள் மாணவர்களை இம்சிக்கின்றன
என்பது உண்மைதான். அதற்கு தேர்வுகளை ஒழித்துக்கட்டுவதை விட்டுவிட்டு இடையிடையே விடுமுறை
விடுவதால் என்ன பலனும் விளையப்போவதில்லை. அடிப்படையை மாற்றாமல் மேல்பூச்சு வேலைகளில்
ஈடுபடுவது நமது ஆட்சியாளர்களின் வாடிக்கைதானே.
மாவட்ட அளவில் 11 ஆம் வகுப்பு வினாத்தாள்கள் வெளியானதால்
இம்மாதிரி மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதுவும் ஏற்கக்கூடியதாக இல்லை. மாநிலம் முழுவதற்குமான பொதுவான வினாத்தாள்களை மாவட்ட
கல்வித்துறை அதிகாரிகள்தான் விநியோகிக்கின்றனர். இப்போதுமட்டும் தவறு நடக்காது என்
எப்படிச் சொல்லமுடியும்? மாவட்ட அளவில் வினாத்தாள்கள் வெளியானதற்கு இதுவரை எந்த அதிகாரி,
ஊழியர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்?
11 ஆம் வகுப்பில் 12 ஆம் வகுப்புப் பாடங்களைப் போதித்து
12 இல் அதிகத் தேர்ச்சி காட்டும் தனியார் பள்ளிகளுக்கு இதில் பெரும்பங்கு உண்டு. அவர்கள்
மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தது உண்டா? சென்ற மார்ச்சில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்
கணித விடைகளை நகலெடுத்து தேர்வறையில் மாணவர்களுக்கு விநியோகித்த திருவண்ணாமலை தனியார்
பள்ளிக்கு என்ன தண்டனை? தேர்வு மையம் ரத்து மட்டுமே! சில ஆண்டுகளில் இப்பள்ளி மீண்டும்
தேர்வுமையமாக மாறிவிடும். இதைக் கையும் களவுமாக பிடித்த மாவட்ட ஆட்சியர் திரு. அன்சுல்
மிஸ்ராவுக்கு உடன் பணிமாறுதல்.
இதில் குறிப்பிடத்தகுந்த விடயம் புத்தகம், குறிப்பேடு,
மதிய உணவு, சீருடை, காலணி, அட்லஸ், சைக்கிள், மடிகணினி, கணிதவியல் பெட்டி, ரூ 1500,
ரூ 2000 என ஊக்கத்தொகை வழங்கும் அரசு வினாத்தாளுக்கு விடைத்தாளுக்கு மாணவர்களிடம் கணிசமான
தொகை வசூலிக்கிறது. இவற்றில் இதுவரை பெருந்தொகை மாவட்ட அளவில் பங்கிடப்பட்டு வந்தது.
இந்நிலையில் மாநில அளவில் உள்ள அதிகாரிகளும்
தற்போது 32 மாவட்டங்களையும் சேர்த்துப் பெரும்தொகை அடைவதற்கான முன்னேற்பாடுதான் இந்த
பொதுத்தேர்வுத் திட்டம் என்று ஐயுறவேண்டியுள்ளது.
சென்னையில் படியில் பயணம் செய்து மாணவர்கள் உயிர்
இழந்ததையெடுத்து காலை 7:30 மணிக்கு பள்ளிகளையும் 8:00 மணிக்குக் கல்லூரிகளையும் திறக்கப்
போவதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. விலையில்லாத பேருந்து பயண அட்டைகளை கணக்கின்றி
வழங்கும் அரசு பேருந்துகளை மட்டும் போதுமான அளவில் இயக்குவதில்லை. தானே முன்வந்து வழக்காக
இந்நிகழ்வை எடுத்துக்கொண்ட நீதிமன்றம் அரசுக்கு எந்த ஆணையும் பிறப்பிக்காமல் மாணவர்களை
பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து நீக்க பரிந்துரை செய்கிறது.
கூட்ட நெரிசலைக்
காரணம்காட்டி பள்ளி, கல்லூரிகளை முன்கூட்டியே திறக்க ஆலோசனை சொல்பவர்கள் அரசு அலுவலகங்களை
முன்கூட்டியே திறக்க மட்டும் சொல்ல மறுப்பதேன்? அரசும் ஆளும்வர்க்கமும் மாணவர்களை கிள்ளுக்கீரையாக
மதிப்பது கண்டிக்கபடவேண்டிய ஒன்றாகும். முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் இதேபோல் பள்ளி,
கல்லூரி நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அவை தற்போது ஓரளவு சரிசெய்யப்பட்டுள்ளன. மீண்டும்
பழையபடி மாற்றம் செய்வதையும் பொதுமக்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டிக்க
முன்வரவேண்டும்.
நெரிசலைக் கட்டுப்படுத்த நேரமாற்றம் தவிர்த்த மாற்று
வழிகளை யோசிக்கவேண்டும். அதிக பேருந்துகளை இயக்குதல், இலவச பேருந்து பயண அட்டைக்கு
கி.மீ. உச்சவரம்பு நிர்ணயம் செய்தல், கட்டாய கல்வி உரிமைச்சட்டம்-2009 ஐ முறையாக அமல்படுத்தி
அருகிலுள்ள பள்ளிகளில் அம்மாணவர்கள் படிக்க வழிவகை செய்தல், 11, 12 வகுப்புகளில் அரசின்
இட ஒதுக்கீட்டை சரிவர அமல்படுத்துதல் போன்ற பல்வேறு காரியங்களைச் செய்யவேண்டியுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக சமச்சீர்கல்வி மறுப்பிலிருந்து
தொடங்கி பள்ளிக்கல்வித்துறை மிகவும் மோசமான நிலையில் இயங்கிவருகிறது. இது யாருடைய கட்டுப்பாட்டில்
இருக்கிறது என்றே தெரியவில்லை. இந்நிலை நீடிப்பது வருங்கால தமிழகத்திற்கு நல்லதல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக