சிற்றிதழ் அறிமுகம்:
சுற்றுச்சூழலுடன் குழந்தைகளை இணைக்கும் முயற்சி
-மு.சிவகுருநாதன்
(மண்புழு – இயற்கை – குழந்தைகள் காலாண்டிதழ்)
ரெங்கையா முருகன், ராஜாராம், செரின் ஏஞ்சலா, ரமேஷ் கருப்பையா, லட்சுமி நரசிம்மன் ஆகியோரை ஆசிரியர் குழுவாகக் கொண்டு குக்கூ குழந்தைகள் வெளி இந்த சிற்றிதழை வெளியிட்டுள்ளது. முதல் இதழ்
கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர் என்ற நக்கீரன் கட்டுரை மற்றும் சில கவிதைகளுடன் மலர்ந்துள்ளது.
24 பக்கங்களில் அழகான அச்சு, வடிவமைப்பில் வந்துள்ள மண்புழு சுற்றுச்சூழலை மையப்படுத்தி வந்துள்ளது. நக்கீரனின் கட்டுரை மறைநீர் (virtual water) டோனி ஆலன் கருத்தாக்கத்தைக் கொண்டு இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் நீர்வளம் கபளிகரம் செய்யப்படுவதை குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.
மத்திய
அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள தேசிய நீர்க்கொள்கைக்கான வரைவு அறிக்கையை நாம் இத்துடன் இணைத்து விமர்சிக்கவேண்டிய தேவையிருக்கிறது. இக்கட்டுரையின் பின்பாதியாக அது அமையவேண்டும். அப்போதுதான் இக்கட்டுரை முழுமையடையும் என்று நினைக்கிறேன்.
தேசிய நீர்க்கொள்கை வரைவு 2012 (Draft National Water Policy 2012) என்ற வரைவு அறிக்கையை இந்திய அரசின்
நீர்வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குடிமக்களின் பிற அடிப்படை
உரிமைகளைப்போல குடிநீர் மற்றும் சுகாதாரமும் ஓர் அடிப்படை உரிமையே என்று அய்.நா. வின் உறுப்பான உலக
சுகாதார நிறுவனம் (WHO) ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இந்திய அரசு தண்ணீரை வியாபாரப் பண்டமாக வரையறுக்கிறது.
உலக வர்த்தக நிறுவன வழிகாட்டுதலின்படி செயல்படும் நமது மன்மோகன் சிங்,
ப.சிதம்பரம், மான்டேக் சிங் அனுவாலியா போன்றவர்கள் இந்த மாதிரியான காரியங்களை ரகசியமாய் செய்து முடிக்கின்றனர். நீர் விநியோகம், நீர் மேலாண்மை ஆகியவற்றை முழுவதுமாக தனியார்
மயமாக்குவதே இவர்களின் அடிப்படை கொள்கையாகும். வற்றிவரும்
நீராதாரங்களைப் பாதுகாக்கவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று இவர்கள்
வாய்கூசாமல் சொல்வதுதான் வேடிக்கை. எனவே அரசின் இந்த நிலையை
அம்பலப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
இதழின் அட்டை முதல் 13 ஒளிப்படங்கள்மெருகூட்டுகின்றன. சுற்றுச்சூழலை மையப்படுத்தி அமைந்த இப்படங்கள் கவிதையாய் மிளிர்கின்றன. அடோனிஸ் (மொ.எதிராஜ் அகிலன்), ஷன்டாரோ தனிக்காவா (மொ. பிரம்மராஜன்), எய்ஹெய் டோகன் ஆகியோரின் சுற்றுச்சூழல் கவிதைகள் இதழில் இடம்பெற்றுள்ளன.
எப்போதும் சொல்வதுபோல் வருங்காலத் தலைமுறைகளுக்கு நாம் வளமான வாழ்வை விட்டுச்செல்லப் போவதில்லை. எனவே குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வையாவது ஏற்படுத்துவது பெரும் நன்மை பயக்கும். அந்த வகையில் சுற்றுச்சூழலையும் குழந்தைகளையும் இணைக்கும் இம்முயற்சி வரவேற்கவேண்டிய ஒன்றாகும். இதில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
மண்புழு இயற்கை – குழந்தைகள் காலாண்டிதழ்
நன்கொடை:
ரூ. 50
தொடர்பு
முகவரி:
குக்கூ
குழந்தைகள் வெளி,
25 மாந்தோப்பு,
ப.உ.ச. நகர், போளூர் சாலை,
திருவண்ணாமலை
1.
பேச:
8056205053, 9965689020
facebook.com/cuchoochildren





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக