ஸ்டேட் பாங்க் ஆப்
இந்துத்துவா
(SBH) -மு.சிவகுருநாதன்
பாரத ஸ்டேட் வங்கி இவ்வாண்டு எப்போதும்போல் மாத காலாண்டர்
வெளியிட்டுள்ளது. இது வழக்கமான ஒன்று என்றாலும் இந்த ஆண்டு 12 மாதங்களின் பின்புபுறம் காஷ்யபன் என்பவரைக் கொண்டு கேடுகெட்ட இந்துமத புராணக் குப்பைகளை வரலாறு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் இந்நிறுவனம் அயோக்கியத்தனம் புரிந்துள்ளது. மதச்சார்பற்ற இந்த தேசத்தில் நாட்டுடைமையான ஓர் வங்கி காவிபுராணம் பாடுவதற்கு எப்படி அனுமதிக்கப்படுகிறது?
காலண்டர் என்றதும் நம் நினைவுக்கு வருபவர்கள் மல்லையாக்கள்தான். கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வக்கில்லை என்று சொல்லிக்கொண்டு அப்பனும் மகனும் பிகினி அழகிகளுடன் வலம் வருவார்கள். இதையும் ஒரு தனிச்சொத்தாகப் பார்க்கமுடியாது. மத்திய அரசின் சலுகைகளையும் அரசுடைமை வங்கிகளின் வாராக் கடன்களில் கொழிக்கும் இவர்கள் மக்களுக்குப் பதில் சொல்ல கடமைபட்டவர்கள். அதையும்விட பாரத ஸ்டேட் வங்கிக்குக் கூடுதல் பொறுப்புணர்வு இருக்கவேண்டும்.
காலண்டர்
போட வந்தவர்கள் அத்துடன் நிறுத்திகொண்டிருக்கவேண்டும். அதன் பின்புறத்தில் இந்துத்துவ புராணம் பாடவேண்டிய அவசியமென்ன என்பதை உரியவர்கள் விளக்கவேண்டும். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இவைகளுக்கு சமூகப் பொறுப்புணர்வு இருக்கவேண்டுமல்லவா? இத்தகைய முறைகேடுகளை இங்கு யாரும் கண்டுகொள்வதில்லை என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
பாரத
ஸ்டேட் வங்கியின் மாத காலண்டரின் பின்புறம் காஷ்யபன் எழுதியுள்ள 12 தலைப்புச் சுருக்கத்தைக் காண்போம்.
01.ஆனந்தம் தரும் அற்புதக்கலைகள் (யஷ்ய கானம்)
02.உடல்நலம் காப்போம். ஒரு நாளும் ஓய்வறியா சிறுநீரகம்.
03.கோயில் நகரம். வாரணாசி என்னும் காசி.
04.நளபாகம் – வங்காள உணவு (இங்கும் துர்கா பூஜை பற்றித்தான் பேசப்படுகிறது)
05.பக்தி வித்த்கர்கள் குலசேகர ஆழ்வார்
06.தெய்வக்குழந்தைகள். அற்புதங்கள் ஆற்றிய திருஞான சம்மந்தர்.
07.விந்தை புரிந்த விஞ்ஞானம். விண்கதிர்களை வெற்றிகொண்ட விக்ரம் சாராபாய். (விஞ்ஞானிகளில் கூட விக்ரம் சாரபாயை தேர்வு
செய்த அரசியல் கேள்விக்குரியது.)
08.இறை அறிவித்த சித்தர்கள் – கருணைப்பெருங்கடல் – காஞ்சி மாமுனிவர்.
09.ஞாலத்தை வளர்க்கும் நதிகள் – கேடில் செல்வம் கிருஷ்ணா.
10.ஆனந்தத் திருவிழாக்கள் – ஓணம்.
11.மாதர் குல மாணிக்கம் – சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்.
12.உன்னதக் கலாச்சாரங்கள் – பயன் தரும் பல்சுவை – சிந்து சமவெளி நாகரிகம்.
இந்தத் தலைப்புக்களே போதும். இதை மேலும் விரித்து விளக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.
சிந்து சமவெளி நாகரிகத்தில் ஸ்வஸ்திக், லிங்க முத்திரைகள் கிடைத்துள்ளதால் இந்து மதத்தாக்கம் இருந்ததாக இதில் வரலாறு எழுதுகிறார்கள். வங்காள உணவில்கூட துர்கா பூசை பற்றித்தான் பேசப்படுகிறது. திருஞான சம்மந்தர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள் பற்றி விலாவாரியான புராணக்குப்பைகளுடன் காஞ்சி மாகாபெரியவர் (?!) பெருமை பேசப்படுகிறது.
இந்த மாதிரியான இந்து மத வெறியர்களைக் கொண்டு குறிப்பு எழுதி காலண்டர் வெளியிடவேண்டிய அவசியமென்ன? வெறும் காலண்டர் வெளியிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்துத்துவக் காலண்டர் வெளியிடும்போதுதான் சிக்கல் எழுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) இதன்மூலம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்துத்துவா (SBH) ஆகியுள்ளது. எனவே இனி பெயரை மாற்றிக் கொள்வது நல்லது.
பன்மைக்
கலாச்சரங்கள் நிறைந்த இந்திய நாட்டில் ஒற்றை இந்துக் கலாச்சார மேன்மை பேசும் காலண்டரை வெளியிடும் அரசுத்துறை வங்கியை அனைவரும் கண்டிக்கவேண்டும். இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும். இனிவரும் காலங்களில் இம்மாதியான நிகழ்வுகள் நிகழாவண்ணம் முன்கூட்டியே தடுக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக