புதன், பிப்ரவரி 13, 2013

பெண்கள் மீதான வன்கொடுமைகளில் இரட்டை நிலைப்பாடு


பெண்கள் மீதான வன்கொடுமைகளில் இரட்டை நிலைப்பாடு
                                                மு.சிவகுருநாதன்

    தில்லி துணை மருத்துவப்படிப்பு மாணவி பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பல நாட்கள் உயிருக்குப் போராடி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த நிகழ்விற்குப் பிறகு ஊடகங்களும் பொதுமக்களும் கிளர்ந்தெழுந்து பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டனர். இது ஒரு வகையில் பாராட்டிற்குரியது என்றாலும் இதன் மறுபக்கத்தையும் நாம் விமர்சிக்கவேண்டியுள்ளது.

    மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கைகள் எடுப்பதாக நாடகமாடின. இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஏதோ ஓர் வகையில் காரணமாக இருக்க்க்கூடிய பலர் இவ்விஷயத்தில் தங்களது சமூக அக்கறையை வெளிப்படுத்தியதுதான்  நமது சமூக அவலம். இம்மாதிரியான வக்கிரகங்களுக்கு ஊடகங்களே பெரும்பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் அவர்களது சமூக அக்கறை (!?) நம்மையெல்லாம் புல்லரிக்கவைக்கிறது.

   பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளைத் தடுக்க வர்மா ஆணையம் அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு வழக்கம்போல் குப்பைக்கூடைக்கு அனுப்பிவிட்டது. ஆனால் இவர்கள் அடிக்கும் பம்மாத்துகளுக்கு அளவில்லை. இம்மாதிரியான வன்கொடுமைகள் நடைபெறும்போது உயர்த்தப்பட்ட சாதிதாழ்த்தப்பட்ட சாதி, பணக்காரன்ஏழை, நகரம்கிராமம் என்கிற முரண் எதிர்வுகள் உருவாக்கப்பட்டு அதற்குகேற்றவாறு இங்கு எதிர்வினைகள்  ஆற்றப்படுகின்றன. இவற்றை வெளிப்படையாக ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் செய்கின்றன.

   தில்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபடுவதற்கு முன்பே காரைக்கால் வினோதினி அமில வீச்சுக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். ஆனால் இந்நிகழ்வு அரசு, ஊடகம், சமூகம் ஆகிய எத்தரப்பு மனச்சாட்சியை உலுக்கவில்லை. தில்லி நிகழ்வுக்குப் பின்பும்கூட எவரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

   பின்னர் விழித்துக் கொண்ட புதுவை அரசு நிவாரணம் அளிக்க முன்வந்தது. சமூக வலைத்தளங்களில் கோ.சுகுமாரன் உள்ளிட்ட பலர் விடுத்த வேண்டுகோள்களின் அடிப்படையில் சிலர் மருத்துவ உதவி செய்ய முன்வந்தனர். இதை அரசே செய்திருக்கவேண்டும். ஆனால் நடக்கவில்லை. சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து ஆதித்யா மருத்துவ மனைக்கு மாற்றப்பட்ட இளம்பெண் வினோதினி சில மாதங்கள் போராட்டத்திற்குப் பிறகு 11.02.2013 அன்று உயிரிழந்தார்.

    பள்ளிக்கூட மாணவி புனிதா பாலியல் கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்டார். தமிழக அரசு அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. திருவாரூருக்கு அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்காட்பட்டு தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டார். தமிழக காவல்துறை இவ்வழக்கை தற்கொலை வழக்காகப் பதிவு செய்தது. இதை கொலை வழக்காக மாற்ற கீழ் வேளூர் மார்க்சிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி வீதியில் இறங்கிப் போராடவேண்டி வந்தது. 

   சென்ற ஆண்டில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவியும் அவரது சகோதரரும் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யபட்ட சம்பவத்திற்கு மட்டுந்தான் ஊடக வெளிச்சம் கிடைத்தது. இதன் பின்னர் தமிழக காவல்துறை செய்த போலி மோதல் படுகொலையை ஊடகங்களும் சமூகமும் ஆதரிக்கச் செய்தன. நான் முன்பே சொன்னதுபோல் வர்க்க வேறுபாட்டினடிப்படையில்தான் பொதுச்சமூகம் இவற்றை அணுகுகிறது. இந்த மாதிரியான பல்வேறு எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகமுடியும்.

    தில்லி மாணவிக்கு செய்த செலவில் துளியளவு செய்திருந்தால்கூட வினோதினியை காப்பாற்றியிருக்கமுடியும். ஆனால் எதையும் செய்யாத அரசும் சமூகமும் இப்போது இரங்கல் தெரிவிப்பது மிகவும் மோசமானதாகும். குற்றங்களின் வேரை ஆராயாமல் மரண தண்டனை என்று கூக்குரலிடுவதும் பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பைப் பெற்றுத்தராது என்பதே உண்மை.

  ஒவ்வொரு ஆண் குழந்தைகளையும் நாம் வளர்க்கும் முறையிலிருந்தே பாலியல் வன்கொடுமைகளுக்கு வித்திடுகிறோம். மாறாக பெண் குழந்தைகளை இவற்றை சகித்துக்கொள்ள நாம் கற்றுத்தருகிறோம். பிறகெப்படி சமூகத்தில் பாலியல் வன்கொடுமை ஒழியும்?

   பல வன்கொடுமைகள் அப்பெண்குழந்தைக்கு பழக்கமானவர்கள், நெருங்கிய உறவினர்கள், அண்டை வீடுகளில் வசிப்போரால்தான் பெருமளவு நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இவற்றைத் தடுக்க என்ன செய்யலாம் சமூகம் யோசிக்கவேண்டும். வினோதினி விவகாரத்தில் அமிலம் வீசிய பாதகன் அவரது குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்ததாகவும் அவ்வப்போது பண உதவி செய்ததாகவும் செய்திகள் வருகின்றன. குழந்தைகளுக்கு குட் டச்பேட் டச் மட்டுமல்ல. இந்தமாதியான நணபர்களையும் வேறுபடுத்தி அணுக அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும்.

   குற்றவாளி மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இக்கொடுமைக்கு உரிய தண்டனைப் பெற்றுத் தருவதோடு பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு இனியாவது அரசுகள் உதவ முன்வரவேண்டும். மத்திய மாநில அரசுகள் நீதிபதி வர்மா ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும். அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், சின்னத் திரை, சினிமா போன்றவற்றில் இயங்கும் அனைவரும் கொஞ்சமாவது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். சமூகம் தனது பொதுப்புத்தியை முதலில் கேள்விக்குள்படுத்தவேண்டும். அப்போதுதான் இங்கு காணப்படும் இரட்டை நிலைப்பாடு முடிவுக்கு வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக