41. சாதி முறையைக் காப்பாற்றிய பொற்காலம்!
ஒன்பதாம்
வகுப்பு சமூக அறிவியலில் ‘தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுகள்’ என்றொரு பாடம்
இருக்கிறது. இதிலுள்ள பல்வேறு கருத்துகளும் செய்திகளும் மிகவும் அபத்தம். இவற்றில்
சிலவற்றைப் பற்றி முன்பே எழுதியுள்ளேன்.
தமிழின் சங்ககாலம் குறித்த தொன்மம் இங்கே தொடர்ந்து பரப்பப்பட்டு
வந்துள்ளது.
தொல்காப்பியப் பொருளதிகாரம் காட்டும் சமூக
நிலைப்படி, “தமிழர்களிடம் பிறப்பை
அடிப்படையாகக் கொண்ட சாதிமுறை காணப்படவில்லை” என்று சொல்லப்படுகிறது. இது பற்றி
கொஞ்சம்.
சங்ககால
தமிழகத்தில் தொழில் அடிப்படையில் அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயினர்,
கடம்பர், கம்மியர், கிளைஞர், குயவர், குறவர், கறும்பர், கூத்தர், கொல்லர், கோசர்,
தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர், பரதவர், பறையர், பாணர், புலையர், பொருநர்,
மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் போன்ற சாதிகள் தோன்றியுள்ளன.
இச்சாதிகளுக்குள் உணவுக்கலப்போ, திருமணக்கலப்போ தடைசெய்யப்படவில்லை என்று கூறும்
டாக்டர் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்) அடுத்த பத்தியிலேயே
அதிர்ச்சியளிக்கிறார்.
பார்ப்பனர்கள் யாகம் செய்து, தமது மனைவியர்
துணைபுரிய அறவாழ்க்கை வாழ்ந்தனர் என்று சொல்லும்போது பிறர் அவ்வாறு இல்லை என்பது புலனாகிறது.
இங்கு உயர்வு – தாழ்வு கண்ணோட்டம் வந்துவிடுகிறது. மேலும் போர்க்காலங்களில்
பார்ப்பனர்களை மட்டும் ஊரைவிட்டு வெளியேற்றிப் பாதுகாக்கும் நடைமுறை
பின்பற்றப்பட்டது. தனது இடமுலை திருகி மதுரையை எரித்த கண்ணகி பார்ப்பனர்கள் மீது
செல்லவேண்டாம் என்று தீயிக்குக் கட்டளையிட்டதையும் இதனோடு இணைத்துப் பார்க்கலாம்.
பிறப்பின் அடிப்படையன்றி தொழில் அடிப்படையிலான சாதியிலும் மேல்-கீழ்,
புனிதம்-இழிவு என்ற பாகுபாடுகள் தோற்றங்கொண்டதும் கவனிக்கத்தக்கது.
“நாலடியார், திருக்குறள் போன்ற சங்க
இலக்கியங்கள் சாதியைக் குறிப்பிட்டப்போதிலும், அதனை ஏற்கவில்லை.” (அதே பாடநூல்).
இது என் புதுக்கூத்து? இலக்கியங்களில் சாதி பற்றிய பதிவுகள் இருந்தன, மக்களிடம்
சாதிகள் இல்லை. என்பதுதானே இதன் பொருள்? மக்களிடம் இல்லாத ஒன்றை இலக்கியங்கள்
புகுத்திவிட்டதாக சொல்வது அநியாயம்.
“பல்லவர்கள் காலத்தில் சாதி முறை
கடுமையாக்கப்பட்டது. பிராமணர்களுக்கு சமுதாயத்தில் உயர்ந்த இடம் அளிக்கப்பட்டது.
பிராமணர்கள் மதத்தலைவராகவும், அரசியல் மற்றும் சமூக ஆலோசகர்களாகவும்,
நீதிபதிகளாகவும் இருந்தனர். அவர்களுக்கு நிலங்கள் தானமாகவும், வரிவிலக்குடனும்
அளிக்கப்பட்டன. மற்ற அனைத்துப் பிரிவினரும் (அந்தணர் நீங்கலாக) சூத்திரர்கள் என்ற
பிரிவில் கொண்டுவரப்பட்டனர். தீண்டாமை கடுமையாக்கப்பட்டது. நிலமற்ற உழவர்கள் கல்வி
கற்பதிலும், கோவில் மற்றும் பொது நிகழ்வுகளிலும் ஒதுக்கப்பட்டனர்.” (அதே பாடநூல்).
பல்லவர் காலத்தை முதற்காலம், இடைக்காலம்,
பிற்காலம் என மூன்றாக வரலாற்றாசிரியர்கள் பிரிப்பர். இங்கு பொதுவாக பல்லவர் காலம்
என்று சொல்லப்படுகிறது. இதை நாம் பிற்காலப் பல்லவர்கள் (கி.பி. 575 – கி.பி. 900)
காலம் என்றே எடுத்துக்கொள்வோம்.
பிற்காலச் சோழர்கள் காலம் அதுவும் முதலாம்
ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் ஆட்சிக்காலம் (கி.பி.985 – கி.பி.1044) இங்கு
பொற்காலமாகத் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. அவர்களைக் காப்பற்ற
இம்மாதிரியான புனைவுகள் உற்பத்தியாகின்றன.
பிராமணர்களுக்கு சங்ககாலத்திலேயே உயர்ந்த
இடமளிக்கப்பட்டதை முன்பே பார்த்தோம். களப்பிரர் பற்றிய ஆதாரமான வேள்விக்குடி
சாசனம் ‘மகீதலம் பொதுநீக்கி’ என்று சொல்கிறது. களப்பிரர் காலத்திற்கு (கிபி. 250 –
கி.பி.575) முன்னதாகவே பிராமணர்களுக்கு நிலத்தை தானமளிக்கும் முறை
இருந்திருக்கிறது என்பதற்கு வேறு சான்று வேண்டுமோ!
தீண்டாமை, சாதி ஒதுக்கல் ஆகியன பிற்காலச்
சோழர் (கி.பி.850 – கி.பி.1279)
காலத்திலும் தொடர்ந்தன. இதை ஏன் மறைக்கவேண்டும்? குற்றம் முழுதையும் ஏன்
பல்லவர்கள் மீது சுமத்தவேண்டும்? சோழப்பொற்காலக் கற்பிதம் மற்றும் புனைவுகளுக்கு
எவ்வித ஊறும் நேர்ந்துவிடக்கூடாது என வரலாற்றெழுதிகள் மிகக் கவனமாக உள்ளனர்.
“சோழர்களின் ஆட்சியின் இறுதியில் சாதிமுறையில்
வலங்கை, இடங்கைப் பிரிவுகள் தோன்றியதால், சமூகத்தில் சண்டை, சச்சரவுகள்,
அமைதியின்மை போன்றவை அதிகரித்தன.” (அதே
பாடநூல்).
பிற்காலச் சோழர்களின் ஆட்சியின் இறுதியில்
அதாவது இவர்களது பொற்காலத்திற்குப் பிறகுதான் சாதியால் அமைதியின்மை ஏற்படுவதாகக்
காட்டுவது எவ்வளவு பெரிய வன்முறை?
சோழர் வரலாறு எழுதிய பேரா.கே.ஏ.நீலகண்ட
சாஸ்திரி இன்னும் ஒருபடி மேலே போகிறார்.
அவர் தனது நூலில் பின்வருமாறு எழுதுகிறார். “சமீப காலத்தில் எழுந்த
பிராமணர், பிராமணர் அல்லாதார் பூசலும், வலங்கை – இடங்கை போன்ற வகுப்பு வாதப்
பூசலும் அக்காலத்தில் இருந்ததற்குச் சான்று ஒன்றேனும் இல்லை எனலாம். வகுப்பு நலனை
மட்டும் வாழ்க்கைக் குறிக்கோளாகக்கொண்டு மூர்க்கத்தனமாக சாதிகள் இயங்கவில்லை.
அவற்றிடையே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நிலவின.” (சோழர்கள் தொகுதி இரண்டு)
இவர்களது வரலாற்றெழுதியல் இன்றைய அரசியலுக்கும்
மிகவும் பொருந்தி வருகிறது. பூர்வகுடித் தமிழர்கள் மிக உன்னதப் பாராம்பரியம்
கொண்டவர்கள். வந்தேறிகளான பிற மொழிக்காரர்களால்தான் இங்குள்ள அனைத்து சமூகக் கொடுமைகளும் ஏற்பட்டன என்று
சொல்லும் சீமான்களுக்கு இவர்கள் ஓர் வகையில் முன்னோடிகளே.
42.
படையெடுப்புகளின் நோக்குநிலை அரசியல்
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் உள்ள
‘அராபிய, துருக்கிய படையெடுப்பு’ என்ற பாடத்தில் முகமது பின் காசிம், முகமது
கஜினி, முகமது கோரி ஆகியோரின் இந்தியப்
படையெடுப்பு பற்றி விரிவாக விளக்கப்படுகிறது. அவற்றைத் தொகுத்துக்கொள்வோம்.
- கி.பி. 1025 இல் நடந்த சோமநாதபுரப் படையெடுப்பின்போது, மன்னர் ராஜ பீம தேவனும் அவனது அதிகாரிகளும் அரண்மனையைவிட்டு ஓடிவிட்டதால் இருபது லட்சம் தினார் மதிப்புள்ள விலையுயர்ந்த பொருள்கள் கொள்ளையிடப்பட்டன.
- முகமது கஜினியின் 17 படையெடுப்புகளில் பெருஞ்செல்வம் கொள்ளையடிக்கப்பட்டதற்கு ஆதாரமாக சர் ஹென்றி எலியட் நூல் மேற்கோள் காட்டப்படுகிறது.
- முல்தான், நாகர்கோட்டை, மதுரா, கன்னோஜ், குவாலியர் ஆகிய இடங்களை வெற்றிகொண்டு அளவிட முடியாத செல்வத்துடன் நாடு திரும்புவதை முகமது கஜினி வழக்கமாகக் கொண்டிருந்தான்.
- சிந்துவின் மன்னர் தாகீர் தோற்றதால் அவரது மனைவி ராணிபாய் மற்றும் அரண்மனைப் பெண்கள் தற்காப்புக் போரில் இறங்கினர். அதிலும் தோற்கவே ‘ஜவ்ஹர்’ வழக்கப்படி தீக்குளித்தனர்.
- முல்தான் நிறைய செல்வ வளங்களை பெற்றிருந்ததால் முகமது பின் காசிம் அதனைத் ‘தங்கநகரம்’ என்றழைத்தார்.
ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியலில் தமிழக மன்னர்களின் அந்நியப் படையெடுப்பு
பற்றி சொல்லப்படும் செய்திகள் கீழே தரப்படுகிறது.
- சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள்ளும் சிங்களர்கள், கடம்பர்கள், யவனர்கள், ஆரியர்கள் போன்ற அயலவர்களுடன் போரிட்டு வந்தனர்.
- பிற்காலச் சோழ அரசர்கள் வெங்கி சாளுக்கியர்களையும், சேரர், பாண்டியர் மற்றும் சிங்களர்களையும் வென்றனர்.
- முதலாம் ராஜேந்திரன் கடாரம் மற்றும் வங்கத்தின் மீது படையெடுத்தான்.
மேற்கண்ட இரண்டு வகையான படையெடுப்புகள் சொல்லப்படுகின்றன. ஒன்று பெருமிதம்
கொள்ளும் இந்து மன்னர்களின் அந்நியப் படையெடுப்பு, மற்றொன்று இஸ்லாமியப்
படையெடுப்பின் கொள்ளையிடல்கள் மற்றும் இழிவுகள். இம்மாதிரியான வரலாற்றெழுதியல்
வெறுப்பு அரசியலையும் போலிப் பெருமிதங்களையும்
பிஞ்சு உள்ளங்களில் விதைக்கின்றன.
ரொமிலா தாப்பரின் குறுநூல் ஒன்று (சோமநாதபுரம்: கதையும் வரலாறும் –
தமிழில்: கி.இரா.சங்கரன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு) முகமது கஜினியின் கொள்ளை குறித்து
துருக்கிய-பாரசீகச் சான்றுகள், அக்கால சமணச்சான்றுகள், சோமநாதபுர சமஸ்கிருத மொழிக்
கல்வெட்டுகள், பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாதங்கள், தேசியவாதிகளின் பார்வை ஆகிய
ஐந்து வகையான சான்றுகள் நோக்குநிலையைக் கொண்டு வரலாற்று ஆய்வை விளக்குகிறார். இந்நூலில்
கி.பி. 1026 என்று குறிப்பிடப்படுகிறது. இதில் எது சரி?
இங்கு சோழர்கள் படையெடுப்புகள் பற்றிய சில
தகவல்களை பகிர்வோம்.
கோயில்வெண்ணிப் போரில் கரிகாலனிடம் தோற்ற சேரமன்னன் தற்கொலை செய்துகொள்ள,
வெண்ணிக் குயத்தியார், “அவன் மானத்தைப் பெரிதாக எண்ணுகிறான். நீயோ வெற்றியை
பெரிதாக மதிக்கிறாய். நீ அடைந்த வெற்றியை
சீர்தூக்கிப்பார்.” என்ற புறநானுற்றுபாடலில் கூறுகிறார்.
முதலாம்
ராஜராஜன் மதுரையை அழித்தான். கொல்லத்தை வெற்றிகொண்டான். தன்னுடைய தூதன்
அவமதிக்கப்பட்டதற்காக 18 காடுகளைக் கடந்து
சென்று உதகை அழித்ததை ஒட்டக்கூத்தர் எழுதுகிறார்.
சோழ
இளவரசன் முதலாம் ராஜேந்திரன் வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக
அமர்த்தபட்டு ‘பஞ்சவன் மாராயன்’ என்கிற பட்டமளிக்கப்பட்டது. கொங்கணம், துளுவம்
ஆகிய நாடுகளை வென்றதோடு சேரரை அவர்களது மலை நாட்டிலிருந்து விரட்டியடித்தான்.
ஈழப்போரில் ஈழமண்டலம் முழுவதும் இவர்களது ஆளுகைக்கு வந்தது. ஈழத்தின்
தலைநகராக இருந்த அனுராதபுரம் முற்றிலும் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பொலனருவ
சோழர்களின் புதிய தலை நகரானது. இதற்கு ‘ஜனநாதமங்கலம்’ எனப் பெயரிட்டான்.
போரில் புத்த மத விகாரைகள் அழிக்கப்பட்டன. செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன. பொலனருவ
-ல் சிவன் கோயில் கட்டப்பட்டது. சிங்களத்துக் கிராமங்கள் தஞ்சைப்
பெரியகோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டன.
முதலாம் ராஜேந்திரன் ஈழமன்னனை வெற்றிகண்டு அவனது நாடு, முடி, பட்டத்தரசி,
மகள், செல்வம், தேர்கள், இந்திரனின் தூய மாலை, அவனிடத்தில் விட்டுச் செல்லப்பட்ட
பாண்டியனின் முடி ஆகியவற்றைக் கைப்பற்றினான் எனக் கரந்தைச் செப்பேடுகள்
குறிப்பிடுகிறது. இதைப்பற்றி மகாவம்சம் கூறுவதாவது.
“அரசன் ஐந்தாம் மகிந்தனின் 36 –ம் ஆட்சி
ஆண்டில், மகேசியையும் அவனுக்கு மரபு வழியாகக் கிடைத்த அரிய அணிகலன்களையும்,
பதக்கங்களையும், அரசர்க்குரிய ஆபரணங்கள், விலை மிக்க வைர அணிகலன்களையும் கடவுளால்
வழங்கப்பட்டதும் உடைக்க முடியாதுமான வாளையும், கிழிந்த துணி ஒன்றின் சிதைந்த
பகுதியையும் சோழர்கள் கைப்பற்றினர். ஆனால் அரசன் அஞ்சி காட்டுக்குள் ஓடிவிட்டான்.
உடன்பாடு செய்துகொள்ளுவதாகச்ச் சொல்லி அவனை அவர்கள் உயிருடன்
பிடித்துக்கொண்டார்கள். சோழப்படையினர் தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குச்
சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல
இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றில்
இருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண் பட்ட
இடங்களில் எல்லாம், பவுத்த சமயத்து மடங்களை அழித்து, இரத்தத்தை உறிஞ்சும்
அரக்கர்கள் போல, இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்.”
(கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி நூல் மேற்கோள்)
இந்த சோழமன்னர்கள் தமிழகத்தின் ஒருசில இடங்களில் பவுத்த, சமண மடங்கள் அமைக்க உதவி செய்த வரலாறும்
உண்டு. சோழர்களில் இலங்கைப் படையெடுப்பு, கொள்ளையிடல்களை பவுத்த மத எதிர்ப்பாக
சொல்வதில்லை என்பதையும் இங்கு கவனிக்கவேண்டும்.
இவர்களது போர்களின்போது பொன்னும் பொருள்களும் மட்டுமல்ல; பெண்களும்
கொள்ளையிடப்பட்டார்கள். ஆண்கள் அடிமைகளாக அழைத்துவரப்பட்டனர்.
இலங்கை வேந்தரை வென்ற ஜகதீபாலனை சோழர்கள் கொன்றனர். அவன் தமக்கை,
மனைவியரைச் சிறைகொண்டு, தாயை மூக்கரிந்து அவமானப்படுத்தினர்.
சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும் பாண்டிய நாட்டிலும் கேரள நாட்டிலும்
பழமையான பரம்பரையே தொடர்ந்து ஆளுகையில்
இருந்தது என்பது இங்கு சோழப்பேரரசின் கருணையாகப் பார்க்கப்படுகிறது. இதை ஏன்
கொள்ளையிடலுக்காக நடத்தப்பட்டது என்ற கோணத்தில் ஏன் பார்க்கக்கூடாது?
கங்கை நாட்டை வென்று கங்கைகொண்டான் என்ற பட்டப்பெயரைப் பெற்ற முதலாம்
ராஜேந்திரன் தான் வென்ற வட நாடுகளை ஆள விரும்பவில்லை. தான் புதிதாக நிர்மாணித்த
கங்கை கொண்ட சோழபுரத்தையும் ‘சோழகங்கம்’ என்கிற ஏரியையும் கங்கை நீரால்
தூய்மைப்படுத்த, கங்கை நீரைக் கொணர்வதற்காக இப்போர்கள் நடத்தப்பட்டன எனச் சொல்வது
நம்பும்படியாக இல்லை.
போர்கள் மற்றும் படையெடுப்புகளில் நல்ல போர்கள், கெட்ட படையெடுப்புகள்
என்று எதுவும் இருக்கமுடியாது. அன்றிலிருந்து இன்றுவரை போர்கள் அனைத்தும் மனித
குலத்திற்கு விரோதமானவையே. இதில் இந்து, இஸ்லாமியர் என்று வெறுப்பை விதைப்பதும்
அதன்மூலம் ஒன்றைப் புனிதமாக்குவதும் மற்றொன்றை இழிவாக்குவதும் வேண்டாத வேலை. இதன்
மூலம் இங்கு விதைக்கப்படும் வெறுப்பரசியலின் கொடூரம் சமூகத்தில் பாரதூரமான
விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
(இக்கட்டுரையிலுள்ள தகவல்கள், மேற்கோள்கள் பேரா.
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, டாக்டர் கே.கே.பிள்ளை. டாக்டர் மா.இராசமாணிக்கனார், தி.வை.சதாசிவ
பண்டாரத்தார் ஆகியோர்களின் நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.)
43.
அவுரங்கசீப்பும் வரிக்கொடுமைகளும்
அவுரங்கசீப்பின் படத்தை எனது மாணவர்களிடம்
காட்டினால் அவர்களை கையை உயர்த்திகொண்டு அப்படத்தை குத்த வருவார்கள் என பெருமை
பொங்க குறிப்பிட்டார். வெறுப்பு அரசியல் எப்படியெல்லாம் விதைக்கப்படுகிறது என்று
பாருங்கள். புதுதில்லியில் அவுரங்கசீப் மார்க் ‘அப்துல்காலம் மார்க்’ ஆக
மாற்றப்பட்டதை இப்பின்னணியில்தான் விளங்கிக் கொள்ளவேண்டும்.
“வரலாற்று
நாயகர்களில் அநியாயத்துக்கு தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்தான்”,
என்று ‘தி இந்து’ நேர்காணலில் (அக். 19, 2015) மதங்கள் தொடர்பான ஆய்வாளர் ஆட்ரே
டிரஷ்கே குறிப்பிடுகிறார். மேலும் அவரது ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருதம்
முக்கியத்துவம் இழந்தது தற்செயல் மற்றும் அரசியல் காரணங்களாலானது அன்றி மதமோ
கலாச்சாரமோ காரணமில்லை என்றும் விளக்குகிறார்.
“ஒளரங்கசீப் சமயப் பற்றுமிக்க ஒரு பேரரசராவார். இவர் ‘சன்னி’ முஸ்லீம்
பிரிவைச் சார்ந்தவர். இஸ்லாமின் புனித நூலான ‘குரானை’ தவறாமல் தினந்தோறும் படித்து
வந்தார். சன்னி பிரிவு அல்லாதவர்களை முற்றிலும் வெறுத்தார். முஸ்லீம் அல்லாதவர்கள்
மீது ‘ஜெசியா’ மற்றும் ‘புனிதப் பயண வரியினை’ விதித்தார். இந்துக்களை அரசப்
பதவியிலிருந்து அகற்றினார்.” என்று எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் சொல்கிறது.
முகலாய
அரசர்களில் அவுரங்கசீப் மட்டும் சமயப்பற்றுடையவர் என்று சொல்வது ரொம்ப அபத்தம்.
குரானை நாள்தோறும் படிப்பதுகூட மதவெறிச்செயலாகக் கட்டமைக்கப்படுவது அநியாயம்.
மன்னர்கள் அனைவரும் யோக்கியமானவர்கள் அல்ல. தனது ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்க எந்த
எல்லைக்கும் செல்லத் தயங்காதவர்கள் இவர்கள். தனக்கு எதிராக யாரும் செயல்படும்போது
அவர்களை பதவி நீக்கம் செய்ததை இந்து மத எதிர்ப்பு என்று சொல்லமுடியாது. தனது
சகோதரகளைக் கொன்று ஆட்சிக்கு வந்ததை இஸ்லாம் எதிர்ப்பு என்று சொல்லிவிட முடியுமா
என்ன? அதைப்போலத்தான் இதுவும்.
இந்துக்களுக்கு விதிக்கப்பட்ட ‘ஜெசியா’ வரி
அக்பருக்கு முன்னதாக நடைமுறையில் இருந்த ஒன்று. அக்பர் இவ்வரியை நீக்கினார். இவர்
மீண்டும் கொண்டுவந்தார். இந்த வரி இந்துக் கோயில்களை பராமரிப்பதற்காக என்று
சொல்லித்தான் வசூலிக்கப்பட்டது. இவ்வரி விதிப்பிலிருந்து பிராமணர்கள், பெண்கள்,
குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. முகலாயர் ஆட்சிக் காலத்தில்
சமஸ்கிருதம், பிராமணர்கள் பெற்றிருந்த செல்வாக்கு பற்றியும் ஆட்ரே டிரஷ்கே தனது
நேர்காணலில் (தி இந்து) பதிவு செய்கிறார். இஸ்லாமியர்கள் மீது விதிக்கப்பட்ட
‘சக்காத்’ என்ற வரிபற்றி யாரும் பேசுவதில்லை. இந்து மன்னர்கள் கூட யூதர்களிடம்
‘ஜெசியா’ வரியை விதித்ததாக ஓர் குறிப்பும் உள்ளது.
பொதுவாக எந்த மதத்தைச் சேர்ந்த மன்னரோ மக்களைப் பற்றி பெரும்பாலும் கவலை
கொண்டதில்லை. இந்து மன்னர்கள் சாமான்ய மக்களுக்கு அளித்த வரிக்கொடுமைகள் பற்றி
யாரும் வாய்திறப்பதில்லை. குறிப்பாக சோழர் கால ‘பொற்கால’ ஆட்சியிலும் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்
ஆட்சியிலும் விதிக்கப்பட்ட வரிகள் ஏராளம். மக்கள் அனுபவித்த கொடுமைகள் எண்ணிலடங்காதவை.
சோழர்கள்
கால ‘பொற்கால’ ஆட்சியில் 400 க்கும் மேற்பட்ட வரிகள் மற்றும் கட்டணங்கள் இருந்ததை
கல்வெட்டு ஆதாரங்கள் தெளிவு படுத்துகின்றன. விதிக்கப்பட்ட வரிகளைப் பார்க்கும்போது
அம்மக்கள் பட்டிருக்கும் கொடுமைகளைக் கற்பனை செய்து பார்ப்பதுகூட அரிது.
‘வெட்டி’ என்ற சொல் இன்றும் பரவலாகப்
பயன்படுத்தப்படுகிறது. சாதி மற்றும் இழிவுபடுத்தலுக்கும் இது பயன்படுகிறது. வெட்டி
வேலை என்பது ஊதியமில்லாத வேலைகளைக் குறிப்பதாகும். அக்காலத்தில் பிணம்
புதைத்தல்/எரித்தல், துணி வெளுத்தல், கழிவுகளை அகற்றுதல்/சுத்தம் செய்தல், முடி
திருத்துதல் ஆகிய வேலைகளுக்கு ஊதியம் வழங்கப்பட்டதில்லை. மாறாக உணவு, பழந்துணிகள்,
பொருள்கள், தானியங்கள் போன்றவையே வழங்கப்பட்டன. இவற்றைத்தான் நமது சமூகம்
வெட்டிவேலை என வரையறுத்துள்ளது. இத்தகைய பணிகளைச் செய்யும் மக்களுக்குக் கூட
வரிவிதித்தக் கொடுமையை என்ன சொல்வது? (எ.கா. வண்ணாரப் பாறை - வண்ணார் பயன்படுத்திய பாறைக்கு வரி)
- ஊர்க்கழஞ்சு (ஊரின் பொதுவான ஓடைக்கு வரி)
- குமரக் கச்சாணம் (முருகன் கோயில் வரி)
- மீன்பாட்டம் (மீன்பிடிக்கும் உரிமைக்கு)
- கீழிறைப்பாட்டம் (சிறுவரிகள்)
- முத்தாவணம் (அன்றைய விற்பனைவரி)
- திங்கள் மேரை (மாதவரி)
- ஈழப்பூட்சி (கள் இறக்க வரி)
- வேலிக்காசு (ஒரு வேலி நிலத்திற்கு என)
- நாடாட்சி (நாட்டு வரி)
- ஊராட்சி (கிராம நிர்வாக வரி)
- உல்கு (சுங்க வரி)
- ஓடக்கூலி (ஓடம்மீது ஏற வரி)
- வட்டி நாழி (கழனி வரி நாழிக்கணக்கில்)
- கண்ணாலக் காணம் (திருமணவரி)
- வண்ணாரப் பாறை (வண்ணார் பயன்படுத்திய பாறைக்கு வரி)
- மன்றுபாடு (நீதிமன்ற வரி)
- தீயெரி (கோயில் தீப்பந்தவரி
- தரகு பாட்டம் (தரகு வரி)
- குசக் காணம் (குயவர் வரி)
- நீர்க்கூலி (தண்ணீர் வரி)
- தறிக்கூறை அல்லது தறிப் புடவை (நெசவாளர் வரி)
- தட்டார் பாட்டம் (பொற்கொல்லர் வரி)
- ஆட்டுக்கிறை (ஆட்டுவரி)
- நல்லா, நல்லெருது (பசு, எருதுகளுக்கான வரிகள்)
- ஊடுபோக்கு (ஊடு பயிர் சாகுபடி செய்ய வரி)
- வாலாக்காணம் அல்லது வால மஞ்சாடி (மனை/வீட்டுவரி)
- மாடைக் கூலி (பொன்னை நாணயமாக்கும் கூலி)
- பிடா நாழி அல்லது பிதா நாழி (வீட்டு வாயில் நிலைகளுக்கு வரி)
- மாவிறை (அரச வரி)
வரி விலக்குகள் சில உண்டு.
ஊர் நத்தம், கோயில்கள், ஏரிகள், ஊருக்குள் ஓடும் வாய்க்கால்கள், பறைச்சேரி, கம்மாளச்
சேரி, சுடுகாடு ஆகியவற்றுக்கு வரிகள் கிடையாது என கே.கே.பிள்ளை குறிப்பிடுவார். இறையிலியாக
வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிகள் கிடையாது. இதில் பிரம்மதேயங்களும் அடக்கம்.
திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சிக்
காலத்தில் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டுப் பெண்களுக்கு தோள்சீலை அணியும் உரிமை மறுக்கப்பட்டது.
இங்கு பிற்படுத்தப்பட்ட, தாழத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலை இறை’ (தலை வரி) விதிக்கப்பட்டது.
ஆண்களின் மீசைக்கு வரி, பெண்களின் முலைகளுக்கு வரி, வளைந்த கைப்பிடிக் குடைக்கு வரி,
தாலி வரி என்று பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டது.
இவற்றை எல்லாம் கணக்கில்
கொள்ளாது இஸ்லாமிய அரசர்கள் மீது காழ்ப்பை உமிழும் பாடப்புத்தகங்கள் மாற்றப்பட வேண்டியவை.
இன்றைய மக்களாட்சி அரசுகள் கூட சாதாரண மக்களுக்கு வரிச்சுமையையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு
வரிச்சலுகைகளையும் தருகின்றன. இவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்?
44.
பொருள் இழந்த சொற்கள் மற்றும் சொற்றொடர்கள்
பழைய சொற்கள் மறைந்து புதிய சொற்கள்,
தொடர்கள் உருவாவது மொழிக்கு புதிதல்ல; வழக்கமான ஒன்றுதான். ஆனால் முற்றிலும் அதன்
பொருளை இழந்து நிற்கும் சொற்களை பற்றித்தான் இங்கு குறிப்பிடுகிறேன். நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி
வருவதும் வியப்பளிக்கக்கூடியது. (உம்) இறையாண்மை (Sovereignty), கலப்புப் பொருளாதாரம் (Mixed Economy)
நமது
அரசியல்வாதிகள் அடிக்கடி நாட்டின் இறையாண்மை பற்றிப் பேசக் காண்கிறோம். நமது
நாட்டின் இறையாண்மையுடன் கூடவே இலங்கை போன்ற அண்டை நாடுகளின் இறையாண்மை பற்றியும்
பேசுகிறார்கள். இன்று இந்தியா போன்ற நாடுகளுக்கு இறையாண்மை இருக்கிறதா?
இச்சொல்லுக்கு ஏதேனும் பொருளுண்டா?
ஈரானிலிருந்து குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டுவரும் திட்டத்தை
எடுத்துக்கொள்வோம். பாகிஸ்தான் வழியாக எரிவாயுக் குழாய்ப் பாதை அமைக்கப்பட
இருந்ததது. ஈரான், பாகிஸ்தான், இந்தியா எனத் தொடர்புடைய நாடுகள் இசைவளித்த
நிலையில் அமெரிக்காவின் தலையீட்டால் இத்திட்டம் முடக்கப்பட்டது. இதில் ஈடுபாடு
காட்டிய துறை அமைச்சர்களும் மாற்றப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது.
நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அமைச்சர்களையும் துறைகளையும் ஒதுக்கீடு
செய்வது பிரதமரின் பணி என்று பாடநூற்கள் (9 –ம் வகுப்பு சமூக அறிவியல்)
சொல்கின்றன. GATT ஒப்பந்தம், WTO ஆகிய
தாராளமய, தனியார்மய, உலகமயப் பொருளாதாரச் சூழலில் 1990 களுக்குப் பிறகு இவற்றை
நிர்ணயிக்கும் அதிகாரம் பிரதமரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. 1991 இல்
பி.வி.நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக முன்னாள் ரிசர்வ் வங்கி மற்றும்
உலக வங்கி அதிகாரியான டாக்டர் மன்மோகன்சிங் நியமிக்கப்பட்டது தற்செயலான நிகழ்வோ,
பிரதமரின் விருப்புறுதி தொடர்புடைய நிகழ்வோ மட்டுமல்ல. இதற்கு அளிக்கப்பட்ட புற
அழுத்தங்கள் முதன்மையானவை.
பின்னாட்களில் அதே மன்மோகன்சிங் இருமுறை (2004, 2009) பிரதமராக்கப்பட்டதும்
அவரது அமைச்சர்கள் நியமனம் மிகவும் வெளிப்படையாக கார்ப்பரேட்களின் கட்டுப்பாட்டில்
இருந்ததை நாம் கண்டுகளித்தோம். நிதி,
தொலைத்தொடர்பு, பெட்ரோலியம், சுரங்கம், வர்த்தகம் போன்ற பசையான துறைகளில்
தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் நபர்கள் இருக்குமாறு பன்னாட்டு, இந்நாடு
மூலதனம் பார்த்துக்கொண்டது. இதனால் பிரதமருக்கு வேலைப்பளு குறைந்ததென்னவோ உண்மை!
ஆனால் இந்திய இறையாண்மை எங்கே போயிற்று என்று தெரியவில்லை.
கடந்த பத்தாண்டு மன்மோகன் சிங் (2004-2014) ஆட்சியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு
நாடகம் நடத்தி வந்த பா.ஜ.க. வின் தற்போதைய ஆட்சியிலும் இந்நிலை மாறவில்லை; இனியும்
மாறப்போவதில்லை. இனி இறையான்மை என்பது ஆகஸ்ட் 15, ஜனவரி 26 ஆகிய நாட்களில் தேசியக்
கொடியேற்றிவிட்டு உணர்ச்சி ததும்ப பேசும் பொருள் மட்டுமே தவிர வேறொன்றுமில்லை.
2013
இல் இலங்கையில் நடந்த காமன்வெல்த்
மாநாட்டில் கலந்துகொள்ள வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் யாழ்ப்பாணம் சென்று
போர் பாதித்த தமிழர் பகுதிகளைப் பார்வையிட்டார். இதன்மூலம் இங்குள்ள தமிழ் தேசியர்களின்
உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். உலகளவில் மனித உரிமைகள் பற்றிய கரிசனம், அங்குள்ள
புலம் பெயர் ஈழத்தமிழர்களைத் திருப்திப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்கு மத்தியில்,
அவரது நாட்டு மூலதனமான வோடபோனுக்கு சலுகை கேட்பதற்காக இந்தியாவிற்கும் வருகை
புரிந்தார். இலங்கை இறுதிகட்டப்போரின் மனித உரிமை மீறல்கள் உலகளவில் கவனம் பெற்றதோ
இல்லையே, ஆனால் வோடபோனுக்கு பல்லாயிரம் கோடி சலுகை மட்டும் கிடைத்தது. இதுவே இறையாண்மையின் தற்போதைய நிலை.
இந்திய
விடுதலைக்குப் பிறகு நேருவால் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புப் பொருளாதாரத்தில்
இன்றைய நிலை கேள்விக்குறியானது. இதைப்போல நிலையே
நேருவின் அணிசேராக் கொள்கைக்கும். புதிய பொருளாதாரக் கொள்கையை
அமல்படுத்தும் போது அதில் தனியார்மயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இனி
புதிதாக அரசு நிறுவனங்கள் தொடங்கப் போவதில்லை. இருக்கின்ற நிறுவனங்களின் பங்குகள்
விற்பனையில் உள்ளன. எந்த அரசு நிறுவனத்தில் அரசின் பங்குகள் 49% அளவை எட்டும்போது
அந்நிறுவனம் தானாகவே தனியார் நிறுவனமாகிவிடும்.
‘நவரத்தினா’ என்றழைக்கப்படும்
பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மட்டுமே அரசின்
பங்கு அதிக அளவில் உள்ளது. எஞ்சியவற்றில் அரசின் பங்குகளின் விழுக்காடு 50 ஐ
நெருங்கி வருகிறது. ஆங்காங்கே சில எதிர்ப்புகள் இருப்பதால் பங்கு விற்பனை இன்னும்
முழுமையடையவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் ‘சுதேசி’ பேசியவர்களே முற்றாக
விற்றுவிடுவார்கள். இனியும் மாணவர்களுக்குக் கலப்புப் பொருளாதாரம் பற்றிச்
சொல்லிக்கொடுப்பதில் பொருள் இருக்கிறதா என்ன?
பழமொழிகளைப் போல சில சொற்றொடர்களைத் திரும்பத்
திரும்ப கிளிப்பிள்ளை போல் சொல்லிவருகிறோம். மாணவர்களும் பேச்சு, கட்டுரை என
எதிலும் இவற்றை முழங்குகிறார்கள். அவற்றின் பொருள் முற்றாக் அழிந்துவிட்டது.
அவற்றுள் இரண்டு மட்டும் இங்கே.
“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்,
ஒழுங்காய்ப் பாடுபடு வயற்காட்டில்,” என்னும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
அவர்களின் திரைப்படப் பாடல் வரிகள் மற்றும் “வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்,”
பொருளியலில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
(Current Account Deficit) என ஒன்றுண்டு. உற்பத்திப் பொருள்கள் மற்றும்
சேவைகளை ஏற்றுமதி செய்யும் மதிப்பைவிட இறக்குமதி மதிப்பு அதிகமானால் அது நடப்புக்
கணக்குப் பற்றாக்குறை எனப்படுகிறது. இந்தியாவில் இது அதிகமாக உள்ளது. ஏற்றுமதியின்
மதிப்பளவைவிட இறக்குமதி அதிகமாக இருப்பதே இதற்குக் காரணமாகும். இந்த பல்லாயிரம்
கோடி பற்றாக்குறையால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு போன்ற
இன்னல்கள் ஏற்படுகின்றன.
நமது இறக்குமதியில் பெரிய பங்கை பெட்ரோலியமும் தங்கமும் பிடித்துக்
கொள்கிறது. தங்கப் பதுக்கலையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்த முடியாத அரசு,
பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைக்க ஏகப்பட்ட வரிகளை பெட்ரோலியப் பொருட்கள் மீது
சுமத்துகிறது. நிறைய பன்னாட்டு வாகன நிறுவனங்கள், அப்பளம் போல் நொறுங்கி உயிரைப்
போக்கும் கார்கள், நடுத்தரவர்க்கத்திற்கு கார் கடன்கள் என ஒருபக்கமும், வரி
ஒருபக்கமும் என ஏகாதிபத்திய சேவை செய்யவே நமது அரசுகள் சித்தமாக இருகின்றன.
இங்கே மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி என்று சொல்வதைப்போல மத்திய அரசு
மாநிலந்தோறும் அணுஉலைகளை நிறுவி மின் பற்றாக்குறையை போக்குவதாக உறுதியெடுத்து (!?)
ஆஸ்ரேலியா போன்ற நாடுகளுடன் யுரேனிய இறக்குமதிக்கு ஒப்பந்தம் போடுகிறது.
மூன்றாவதாக யுரேனியமும் சேர்ந்துகொண்டால் நமது
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எக்காலமும் தீரப்போவதில்லை.
இருக்கின்ற இரும்பு, தாமிரம் போன்ற கனிம வளங்கள் பன்னாட்டு, இந்நாட்டு
மூலதனங்களுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. பீகார், ஜார்க்கண்ட், ஜட்டீஸ்கர்,
ஒரிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடங்கிய கனிமவள மண்டலம் கொள்ளையடிக்கப்
பட்டுக்கொண்டிருக்கிறது. காட்டையும் மலைகளையும் காக்கப் போராடும் பழங்குடிகளைத்
தேசத்துரோகிகளாக நமது அரசுகள் மாற்றியுள்ளன. தமிழ்நாட்டின் சேர்வராயன் மலை, வேடியப்பன்
மலை கூட தப்பப் போவதில்லை.
சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த எவ்வித அக்கறையும் இல்லாமல் வளர்ச்சி
என்ற பெயரில் இங்கு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நிலைப்படுத்தப்பட்ட வளர்ச்சி
நோக்கில் இங்கு சிறு துரும்பும் அசைக்கப்படவே இல்லை. ‘மறைநீர்’ (virtual water)
பற்றிய புரிதல் கொஞ்சங்கூட இல்லாமல் கார் தயாரிப்பு, பின்னலாடை, தோல் பதனிடுதல்
போன்றவை அதிகளவில் அனுமதிக்கப் படுகின்றன. இன்று அனைத்து வளங்களும் கொள்ளை
போகின்றன. இந்நிலையில் இன்னும் எத்தனை காலம் “என்ன வளம் இல்லை இந்தத்
திருநாட்டில்.” என்று சொல்லப்போகிறீர்கள்?
தமிழர்கள் சங்க காலம் தொடங்கி இன்றுவரை
உலகமெங்கும் சென்றுள்ளனர். ஆனால் இன்று தமிழர்கள் இருப்பதை உலகறியச் செய்தவர்கள்
ஈழத்திலிருந்து புலம் பெயர் தமிழர்கள்தான். இவர்கள் உலகமெங்கும் பரவியுள்ளனர்.
அவர்கள் இன்று அந்நாடுகளின் அரவணைப்பாலும்
உழைப்பாலும் உயர்ந்துள்ளனர்.
இன்னொரு பக்கம் தமிழகத்து அகதிகள் முகாமை சென்று பாருங்கள். இவை மனிதர்கள்
வசிக்க முடியாத வதை முகாம்கள். முதலாளிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கத்
துடிக்கும் அரசுகள் 30 ஆண்டுகளாக இங்கு வசிக்கும் இந்தத் தமிழர்களைப் பற்றிக் கவலை
கொள்வதில்லை. ஈழத்தமிழர்கள் பற்றி வாய் கிழிய பேசும் தமிழ் தேசியர்கள் மற்றும்
தமிழ் வெறியர்கள் கூட அகதிகள் நிலை குறித்து பேசுவதில்லை; எதுவும் செய்வதில்லை.
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று மத்திய தர வர்க்கம் இந்தி படிக்க
ஆளாய் பறக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ளவர்கள் லட்சக்கணக்கில்
தமிழ்நாட்டில் சொற்ப ஊதியம் பெறும் கூலிகளாக உள்ளனர். அதைப் போலவே தமிழர்கள்
பல்வேறு மாநிலங்களில் பணி நிமித்தம் பரவியுள்ளனர். மும்பை போன்ற இந்தியப் பெரு
நகரங்களில் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் இருக்கின்றனர்.
சில
இடங்களில் தமிழர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கலாம். தமிழகத்து ஈழ அகதிகளின்
நிலையை நோக்கும்போது அவை பிரச்சினையே
இல்லை எனலாம். பிற மாநிலங்களும் உலக நாடுகளும் இன்றும் தமிழர்களை வாழவைக்கும்போது,
வந்தாரை வாழ வைப்பதாக முழக்கமிடும் தமிழர்கள் தம் இனத்தையே வாழவைக்கவில்லையே! பிறகு
ஏனிந்த போலி முழக்கம்?
சுமார் 3000
உறுப்பினர்கள் கொண்ட தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலில்கூட தமிழன் மட்டுமே
வரவேண்டும் என்ற இனவாதப் பாசிசம் செயல்படுகிறது. தமிழ்நாட்டை தமிழனே ஆளவேண்டும்
என்று ஓவ்வொருத்தரின் பூர்வீகம் அலசி ஆராயப்படுகிறது. இனத்தூய்மைவாதம் என்கிற
அப்பட்டமான பாசிசம் தாய்மொழிப்பற்று என்ற போர்வையில் இயங்குகிறது. இத்தகைய போக்கு
இங்குள்ள மக்களுக்கும் பிற பகுதிகளில் குடியேறியிருக்கும் தமிழர்களுக்கும்
நெருக்கடிகளை உண்டு பண்ணும்.
உங்கள் சொந்தங்களை வாழவைக்காதவர்களா பிறரை வாழவிடுவீர்கள்? “வந்தாரை
வாழவைக்கும் தமிழகம்” என்கிற முழக்கம் “கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்து,
முந்தோன்றி மூத்தகுடி” போல மற்றொரு வெற்றுச் சவடாலன்றி வேறென்ன? இளம் பிஞ்சு
உள்ளங்களில் இத்தகைய சொல்லாடல்கள், முழக்கங்கள் பாதிப்புகள் ஏற்படுத்தாமலிருக்க கல்வித்துறையும்
ஆசிரியர்களும் உடனடியாக திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டும்.
45.
கொஞ்சம் நீதி போதனை வகுப்புகள் பற்றி...
அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்
பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு முடிய உள்ள மாணவர்களுக்கு நவம்பர் 2015 முதல்
நீதி போதனை (Moral Instruction) வகுப்புகள் தொடங்கவிருப்பதாக செய்திகள்
தெரிவிக்கின்றன. இதற்குக் கருத்தாளர்களாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான
பயிற்சி சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் மாவட்ட மற்றும் வட்டார அளவில்
ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்து அவர்கள் மூலம் நீதி போதனை வகுப்புகள்
நடத்தப்படும் என்று தெரிகிறது. இங்கு நீதி போதனை வகுப்புகள் குறித்து கொஞ்சம்
சொல்லவேண்டியுள்ளது.
பள்ளிகளில் பாலியல் கல்வி பற்றிப் பேசும்போது வேண்டவே வேண்டாம், கலாச்சாரம்
அது இது என ஒரு கூட்டம் காட்டுக் கூச்சல்
போடுவதை காட்சி ஊடகங்களில் நீங்களும் பார்த்திருக்கக்கூடும். இவர்கள் பாலியல்
கல்வி என்றால் ஏதோ திரையில் நீலப்படத்தைப் போட்டு உடலுறவு செய்யும் முறைகளைக்
கற்றுக் கொடுப்பதாக கற்பனை செய்துகொண்டு அட்டைக்கத்தி சுழற்றுகிறார்கள். மாறாக
இவர்கள் அனைவரும் நீதிபோதனை அல்லது நல்லொழுக்கக் கல்வியைத் தொடர்ந்து
வலியுறுத்துகிறார்கள். 90 வயது பெரியவர் ஏதேனும் குற்றம் செய்தால்கூட,
பார்த்தீர்களா பள்ளிக்கூடங்களில் நீதி போதனை வகுப்புகள் இல்லாதுதான்
காரணமென்பார்கள்.
சமூகத்தில் நடைபெறும் குற்றங்கள் அனைத்திற்கும் சர்வரோக நிவாரணியாக
ஒழுக்கக் கல்வியைக் கருதும் போக்கு உள்ளது. மருத்துவம் சார்ந்த படிப்பு,
விலங்கியல் தொடர்பான படிப்புகள் படித்தவர்கள் தவிர பிற பெரும்பாலானோர் பாலியல்
குறித்த அடிப்படைப் புரிதல் இல்லாத நிலை இருக்கிறது.
இந்நிலையை
மாற்றி பாலியல் குறித்த விழிப்புணர்வை உண்டாக்க, பாலியல் உறுப்புகளின் தூய்மை,
வளரிளம் பருவத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், நாளமில்லா சுரப்பிகளின்
செயல்பாடுகள், குழந்தைகள் பிறரது பாலியல் சீண்டல்களை அறிந்து கொண்டு தற்காத்துக்
கொள்ளுதல் போன்ற பல்வேறு வகையான ஒருங்கிணைக்கப்பட்ட பாடமே இங்கு பாலியல் கல்வி
என்று சொல்லப்படுகிறது. இவற்றை மறுத்துப் போலியான தூய்மைவாதம் வலியுறுத்தும்
இந்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுகின்றன.
நீதிபோதனை வகுப்புகள் ஏற்கனவே இருக்கத்தான் செய்கின்றன. உயர்நிலை
வகுப்புகளில் (6 - 10) முதன்மைப் பாடங்கள் போக வாரத்திற்கு ஏழு பாடவேளைகள்
உடற்கல்வி, ஓவியம், மதிப்புக்கல்வி (Value Education), இசை, கணினி போன்றவற்றிற்கு ஒதுக்கப்படவேண்டும். 6 முதல் 10
முடிய உள்ள வகுப்புகளுக்கு வாரம் இரண்டு மதிப்புக்கல்வி பாடவேளை உண்டு.
தேர்வு
முறைக் கல்வியால் இப்பாடவேளைகள் முதன்மைப் பாடங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன.
சமூக அறிவியலுக்கு மிகக்குறைவான 5 பாடவேளைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால்
இப்பாடவேளைகள் அவற்றிற்கு பதிலீடு செய்யப்படுவதும் உண்டு.
நீதிபோதனை வகுப்புகளைச் சொல்லிக்கொடுப்பதற்கு ஆர்வமும் விருப்பமும் கொண்ட
தமிழ், சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள்
தெரிவிக்கின்றன. இதையே பெருஞ்சிக்கலாக நான் பார்க்கிறேன்.
பெரும்பாலான தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் மத, மொழி, இன
அடிப்படைவாதிகளாகவே (fundamentalists) உள்ளனர். இதற்காக அவர்களைக் குறை சொல்வதில்
பொருளில்லை. பல்லாண்டுகளாக நமது பாடநூற்கள் அவர்களை இவ்வாறு மூளைச்சலவை
செய்துள்ளன. இவற்றை மாற்ற பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக சொல்வர்கள்
தமிழகத்தில் எதுவும் செய்யவில்லை.
மொழிப்பாடங்களில் தமிழும் கலைப்பாடங்களில் வரலாறும் மத, மொழி, இனவாதத்தைத்
தூண்டும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரையில்
இந்நிலைதான். அறிவியல் பார்வையோடு எவற்றையும் புறவயமாக அணுகும் முறை இத்தகைய பாடங்களிலும்
இல்லை, அவற்றைப் படித்த ஆசிரியர்களிடம் பெரும்பாலும் இல்லை.
வேறு
பாடங்களிலும் அவைகளைப் படித்தவர்களிடமும் மாறுபட்ட சிந்தனைப் போக்கு முழுமையாக
இருக்கும் என்று கூறமுடியாவிட்டாலும் புராண, இதிகாச, மதத்தமிழ், மொழி-இன மேன்மைக்
கருத்துகள் ஓரளவிற்கு அவர்களிடம் இருக்காது என்பதை நான் நேர்மறை அம்சமாக
எடுத்துக்கொள்கிறேன். அவ்வளவே.
இதற்கான
பாடத்திட்டத்தை ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
தயாரித்துள்ளதாம். எந்த அடிப்படைகள் இப்பாடம் வடிவமைக்கப்படுள்ளது என்று
தெரியவில்லை. பொதுவாக நீதி போதனைகள் என்றாலே நீதிக்கதைகள் என்கிற கருத்து உண்டு. இதற்கு
இவ்வகுப்புகள் இல்லாமலிருப்பதே நன்று.
6,7,8 வகுப்புகளுக்கு 20 வகையான நற்பண்புகள் குறித்து பயிற்சி
அளிக்கப்போவதாக செய்தி சொல்கிறது. இதிலும் எச்சரிக்கை உணர்வு அவசியம். பணிவு,
மரியாதை, கீழ்ப்படிதல் போன்ற பண்புகள் காலில் விழுதல், பெற்றோர்-ஆசிரியர்களுக்கு
பாதபூசை செய்தல், கைகட்டுதல் என்பதான புரிதலே இங்குள்ளது. அரசு உதவி பெறும்
பள்ளிகள் காலில் விழுதல் மற்றும் பாதபூசையைப் பள்ளிகளில் நடத்துகின்றன.
பலவகையான
நீதிக்கதைகள் உண்டு. பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள்,
புராண- இதிகாசக் கதைகள், ராமாயண-மகாபாரதக் கதைகள் ஆகியன அவற்றுள் சில. இவை
அனைத்திற்கும் பின்னால் அரசியல் நோக்கம் உண்டு. இக்கதைகள் போதிக்கும் நீதி
யாருக்கானது என்பதில் விமர்சனம் உண்டு. இவற்றை அப்படியே படியெடுத்துப்
பயன்படுத்தியதுதான் நமது கல்வி வரலாறு.
தந்திரம், சூழ்ச்சி என்றெல்லாம் காலம்காலமாகச் சொல்லப்படும் காகம், நரிக்
கதைகள் குழந்தைகளிடம் நற்பண்புகளை விடுத்து வேறுவகையான பண்புகளை வளர்ப்பதையும்
நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். பல ஆண்டுகளுக்கு தினமணி நாளிதழின் சிறுவர்
இணைப்பில் ஷாஜகான் என்ற எழுத்தாளர் இம்மாதிரியான சிறுவர் கதைகளை மறுவாசிப்பு –
மறுகட்டமைப்பு செய்து தொடராக எழுதிவந்தார். அவை நூலாக்கம் பெற்றதா என்று
தெரியவில்லை.
பீர்பால் கதைகள் அக்பர் அறிவார்ந்த, சகிப்புத்தன்மையுடைய முகலாயப் பேரரசரை
இழிவு படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. இங்கு கட்டமைக்கப்படும் மதம் சார்ந்த
முரண் எதிர்வு ஐந்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருவதற்கு நமது கல்விமுறை காரணமாக
அமைந்துவிட்டது. இதைப்போல தெனாலிராமன் கதைகள் தெலுங்கு, சமஸ்கிருத மொழியறிஞராகவும்
எழுத்தாளராகவும் இருந்த விஜய நகர அரசரான கிருஷ்ண தேவராயரை இழிவு படுத்தும்
நோக்கிலானவை.
இதர
புராண-இதிகாசக் கதைகள் அனைத்துமே ஏமாற்றுதல், சூழ்ச்சி, தந்திரம் ஆகிய
மற்றுமல்லாது வருணதர்மம், மனுதர்மம், இந்து மேன்மை, கடவுளர்களின்
திருவிளையாடல்கள், போர், கொலைகளை நியாயப்படுத்துதல், பிராமண அல்லது சத்திரியக்
குலமேன்மை என குழந்தைகளுக்கு ஒவ்வாத தீய சித்தரிப்புக்களைக் கொண்டவை. இவைகளைப்
பற்றி எழுதினால் பக்கங்கள் நீளும். இவற்றை ஆழ்ந்து படிக்கும்போது இதிலுள்ள அபாயங்கள்
புரியும்.
புத்த
ஜாதகக் கதைகள், முல்லா நஸ்ருத்தின் கதைகள் போன்றவற்றை மேலே கண்டவற்றிலிருந்து
வேறுபடுத்திப் பார்க்கலாம். போதி சத்துவர்களின் வாழ்வில் நடந்ததாக புத்தர்
சொல்லும் கதைகள் புத்த ஜாதகக் கதைகள் ஆகும். மேலே சொன்னவற்றுக்கு மாறாக
இக்கதைகளும் பவுத்தம் போல் அறத்தை வலியுறுத்துவதாக இருக்கின்றன. 500 க்கு மேற்பட்ட
இக்கதைகள் பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவற்றை
இதுவரை நமது நீதிபோதனை வகுப்புகளில் பயன்படுத்தியதே இல்லை. நமது முன்னுரிமை
தந்திரம், ஏமாற்றுதல், சூழ்ச்சி, இழிவு செய்தல் ஆகியவற்றில் மட்டுமே இருக்கிறது.
முல்லா கதைகள் வேறொரு பின்புலத்தில் இயங்குபவை. இதிலுள்ள தன்னைத்தானே பகடி
செய்துகொள்ளும் தன்மை குறிப்பிடத்தக்கது. இத்தகைய சுய எள்ளலை, கிண்டலை வேறெந்த
கதைகளிலும் காணமுடியாது. இது ஓர் வகையில் தமிழ்க் கோமாளி (விதூஷகன்) மரபுடன் ஒன்றியிருப்பதையும் உணரலாம்.
இன்று
காட்சி ஊடகங்களில் குழந்தைகள் அனுமான், கிருஷ்ணா, சக்திமான், ஸ்பைடர்மேன் போன்ற மத
அடையாளத்துடனான சாகச நாயகர்களின் பிடியில் சிக்கிச் சீரழியும் போக்கு உள்ளது. இவை
குழந்தைகளின் ஆழமனங்களில் வன்மம், பகை, வெறுப்பு போன்றவற்றை வளர்த்தெடுப்பவை.
நீதிபோதனைக் கதைகளும் இவற்றில் மறுபதிப்பாக இருப்பதை ஏற்கவே முடியாது. முல்லா
கதைகள் போன்றவை நமது குழந்தைகள் இழந்துபோன
குழந்தமையை மீட்டெடுக்க உதவும்.
நீதிபோதனை மற்றும் ஒழுக்க மதிப்பீடுகளை உருவாக்கும்போது நமது நாட்டின்
பன்மைத்துவத்தையும் குழந்தைகளின்
மனநிலையையும் சரியான புள்ளியில் இணைக்கவேண்டும் என்பதே நமது விருப்பம். இதுவரையில்
கல்வியில் அத்தகைய மாற்றங்கள் நடைபெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.