திங்கள், அக்டோபர் 12, 2015

கல்விக் குழப்பங்கள் - தொடர் - பகுதி 31 முதல் 35 முடிய. கல்விக் குழப்பங்கள் - தொடர்  - பகுதி 31 முதல் 35 முடிய. 

                                                                                           - மு.சிவகுருநாதன்

31. கவிதையும் உரைநடையும்                         

                                                          
      “தீ சுடும்” என்றால் அது உரைநடை. ஆனால் பாரதி “தீ இனிது” என்கிறார். இதுவே கவிதை எனப்படுகிறது.  இதை யாராவது தமிழாசிரியர்களுக்கும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் எடுத்துச் சொன்னால் தேவலாம். இந்நோய் இன்று தமிழ் என்று பேசும் அனைவரிடமும் பரவலாகக் காணப்படுகிறது. நமது கல்விமுறையும் பாடநூற்களும் இத்தகைய வகைமாதிரிகளையே உருவாக்குகின்றன. 

      நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை உப்பு சத்தியாகிரக நடைபயணப் பாடலாக கீழ்க்கண்ட பாடலை எழுதினார்.

கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்

            மகாத்மா காந்தியை அறிமுகம் செய்யும்போது இப்பாடல் வரிகளை உரைநடையாக்கி “கத்தியின்றி ரத்தமின்றி நமது நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்தவர் என்று எழுதும்போக்கு உள்ளது. கவிதைக்கும் (செய்யுள்) உரைநடைக்கும் உள்ள வேறுபாட்டை இவர்கள் புரிந்து கொள்ளப் போவது எந்நாளோ?

    கவிதைக்கு பொய் அழகு” என்று  வைரமுத்து (படம்: புதிய முகம்) திரைப்படப் பாடலில் எழுதுகிறார். இந்தப் பொய்கள் உரைநடைக்கு வரும்போது உண்மைகளாக மாற்றமடைகின்றன.

   “திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம்  என்ற பாரதிதாசன் கவிதை வரிகளையும் அப்படியே உரைநடைக்குப் பயன்படுத்த இங்கு யாரும் வெட்கப்படுவதில்லை. 

    இங்கு ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். செய்யுள், பாடல், கவிதை வரிகளை மேற்கோளாகப் பயன்படுத்துவது வேறு. நான் சொல்ல வருவது அந்த வரிகளை உரைநடையாக மாற்றுவதைத்தான். 

   இந்த வகையில் தமிழும் சமூக அறிவியலும் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதை முன்பே குறிப்பிட்டோம். “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி” என்கிற வாசகங்களை குமரிக் (லெமூரியா) கண்டம், தமிழ்த் தொன்மை மற்றும் தமிழர்களின் சிறப்பு என்பதாக திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதை எப்படிப் புரிந்து கொள்வது? இதேபோல் எடுத்துக்காட்டுக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    தமிழ் மொழி ஒன்றை மட்டும் அதுவும் அரைகுறையாக அறிந்துவிட்டு, “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் இல்லை”, என்று முழங்குவது இங்கு மிகவும் இயல்பாக, எவ்வித குற்றவுணர்ச்சியின்றி நடக்கிறது.

    புறவயமான, அறிவியல் அணுகுமுறையுடன் கூடிய  ஆய்வுகள் அனைத்துக் களங்களிலும் தேவைப்படுவதை இவை நமக்கு மீண்டும் வலியுறுத்துகின்றன. நாம் என்ன செய்யப் போகிறோம்?

32. ஏனிந்த அதீத கிரந்த வெறுப்பு?

        ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரையுள்ள தமிழ்ப்பாடநூல்களைப் புரட்டிக்கொண்டுள்ளேன். தமிழ்ப் பாடநூற்கள் பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் ‘காலச்சுவடு’ இதழில் முன்பொருமுறை எழுதியிருந்தார்.  தமிழ் இங்கு எப்படி வெற்று முழக்கமாகி இருக்கிறது என்பதற்கு இப்பாடநூற்களே சான்று. வேறு ஆதாரங்கள் தேவையில்லை.

    கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதில் இவர்களுக்கு ஒவ்வாமைப் பிரச்சினை உள்ளது. இவற்றை எவ்வாறு மாற்றிப் பயன்படுத்துவது என்பதில் தெளிவான வரையறையோ புரிதலோ தமிழ் ஆசிரியர்களுக்கும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் கொஞ்சங்கூட இல்லை. கம்பன் தனது ராமாயணத்தில் கிரந்த ஒலியன்களை முற்றிலும் தவிர்த்து அதைத் தமிழுக்குத் தகுந்த மாதிரி பயன்படுத்தியதாக பெருமை பொங்கும் இவர்கள் தமிழ்ப் பாடநூற்களில் எவ்வித வரம்புமின்றி ஏன் கொலைவெறியில் ஈடுபடவேண்டும்?

    மொழிக்கு முதலில் வராத உயிர்மெய் எழுத்துக்கள் பற்றிய தெளிவும் இவர்களிடத்தில் இருப்பதில்லை. அதிலும் பெருங்குழப்பம். மொழித்தூய்மை என்கிற பெயரில் இங்கு மொழிக்கொலைதான் நடக்கிறது. 

  இராஜாஜி, இலத்தீன், இலட்சுமி, இராமலிங்கர், இராசாராம், சீ.இரா.அரங்கநாதன், எம்.ஜி.இராமச்சந்திரன், உரோமாபுரி என்று எழுதுபவர்கள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை ஏன் செ.செயலலிதா எனக் குறிப்பிடுவதில்லை என்று கேட்க விரும்புகிறேன். (ஆங்கிலத்தில் J.Jayalalithaa  என்று மாற்றியிருப்பது வேறு கதை.) மு.க.ஸ்டாலினை எப்படி எழுதுவார்கள் என்று அறிய ஆசை. 

  ரூபாவதி என்று அப்படியே குறிப்பிட்டு ஜனவரி, ஜானகிராமன் ஆகியவற்றை சனவரி, சானகிராமன் என்கின்றனர். இவைகள் மொழிக்கு முதலில் வருமோ?

  செகப்பிரியர், மாக்சுமுல்லர், சமற்கிருதம், ஆக்சுபோர்டு, கிருத்து, காங்கிரசு, மொரிசியசு, தால்சுதாய், டென்னிசன், எட்வர்டு மைபிரிட்சு, கபில்சுவலபில் என்று சில கிரந்த ஒலியன்களை மட்டும் தவிர்த்து எழுத முற்படும் இவர்கள் செய்யும் அபத்தங்கள் ஏராளம். பிரான்சிஸ் சென்கின்சு என்ற பெயரில்  என்ன பாதி மாற்றம்; மீதி? புத்த விகாரை, புத்த விகார் என்று சொல்வதைத் தவிர்த்து புத்த விஹாரம் என்று குறிப்பிடுவதையும் இங்கு கவனிக்கவேண்டும்
.
   வால்ட் டிஸ்னி, ஈஸ்ட்மன், கிரீஸ், ஸ்மட்ஸ், ஜி.யு.போப். ஜி.குப்புசாமி, ஆர்க்கியாலஜி, மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி, திராவிட சாஸ்திரி என்று அப்படியே குறிக்கும்போது இவர்களது தூய்மைவாதம் எங்கே காணமற்போகிறது. 

    ஏனிந்த அதீத கிரந்த வெறுப்பு? கொஞ்சம் முன்கதை சுருக்கம். தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை தமிழர்கள் நான்கு வகையான எழுத்துக்களைப் பயன்படுத்தி வந்தனர். சங்க கால பழந்தமிழ் எழுத்து, பிராமி எழுத்து, பிராமிலிருந்து வந்த வட்டெழுத்து, தற்கால எழுத்து என்பவை அவை. (மயிலை சீனி. வேங்கடசாமி)

   அசோகர் காலத்தில் அதாவது கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பவுத்த, சமண முனிவர்கள் பிராமி எழுத்தைப் பரப்பினர். கி.பி.நான்காம் நூற்றாண்டில் பிராமி எழுத்துமுறை அழிந்துபோனது. பிராகிருதம், பாலி (மாகதி மொழி), சூரசேனி (அர்த்த மாகதி), சமஸ்கிருதம் ஆகிய வடமொழிகளை எழுத பிராமி எழுத்துமுறை பயன்பட்டது.  சமஸ்கிருதம் ஆரியர்களின் தெய்வபாஷை. பிராகிருதம், பாலி, சூரசேனி ஆகியன சமண, பவுத்தர்களின் தெய்வபாஷை. 

   தென்னிந்தியாவில் பிராகிருதம், பாலி, சூரசேனி, சமஸ்கிருதம் ஆகிய வடமொழிகளை எழுதப் பயன்பட்ட வரி வடிவமே (லிபி) கிரந்தம் ஆகும். கிரந்தம் என்றால் நூல் என்று பொருள். கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பன்னெடுங்காலம் புழக்கத்திலிருந்தது கிரந்தம். சமஸ்கிருதம் தேவநாகரி லிபியில் எழுதப்பட்டதும்,  இதர வடமொழிகள் வழக்கழிந்ததும் பிறகு நடந்தவை. பல்லவர் ஆட்சியில் கிரந்தம் அதிகளவில் பயன்பாட்டில் இருந்தது. இதைப் பல்லவக் கிரந்தம் என்றும் கூறுவர்.

  குறிப்பாக பிறமொழிப் பெயர்ச்சொற்களை ஒலிபெயர்த்து எழுதவேண்டிய இடங்களில் இன்றும் கிரந்த எழுத்துக்கள்  பயன்படுத்தப்படுகின்றன. அதற்காக தொடக்க வகுப்புக்களிலேயே ஜ, ஸ, ஹ, ஷ, ஶ்ரீ போன்ற சில எழுத்துக்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. முதல் வகுப்பில் ரோஜா என்று சொல்லிவிட்டு மேல்வகுப்பில் ‘உரோசா’ என்று சொல்லவேண்டிய தேவையென்ன?

   இன்று தமிழகத்தில் வாழும் ‘ஒரிஜினல்’ தமிழர்கள் வைக்கும் 99 விழுக்காடு பெயர்களை கிரந்த எழுத்துக்கள் இல்லாமல் எழுத இயலாது. பெரிய யுகப்புரட்சி வந்து அனைவரும் தமிழில் பெயரிடுவதாக வைத்துக்கொண்டாலும் பிறமொழிப்பெயரை சரியான உச்சரிப்பில் எழுத கிரந்த எழுத்து அவசியம். (கிரந்த யூனிகோடு பிரச்சினையையும் இதையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளவேண்டாம்.)

   இவ்வாறு சொல்வது, செய்வது தமிழின் பெருமையை குறைப்பதாகாது. இது எல்லா மொழிகளுக்கும் உள்ள சிக்கல்தான். உண்மையான பெருமை எதில் என்பதில் குழப்பம் தீரும் வரையில் இம்மாதிரியான அபத்தங்கள் குறையப் போவதில்லை.

33. இந்தியாவில் இரும்புக் காலம்  (Iron Age) எப்போது?                      

      ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவ அறிவியலில் (பக்.96) ‘வியக்க வைக்கும் உண்மை’ என்ற தலைப்பில் புது தில்லியில் உள்ள இரும்புத்தூண் பற்றிய குறிப்பு வருகிறது. அறிவியலில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அது போகட்டும். 

     “புது டெல்லியில் உள்ள குதுப்மினார் அருகில் அமைந்துள்ள இரும்புத்தூண் 7 மீட்டருக்கு மேல் உயரமும் 6000 கி.கி. எடையும் கொண்டது. இது 1600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இவ்வளவு காலம் கடந்தும் கூட, இந்த இரும்புத்தூண் இன்றும் துருப்பிடிக்கவில்லை. உலகின் பல பகுதியில் உள்ள ஆய்வாளர்கள் இதன் தன்மையைப் பற்றி ஆய்வு செய்துள்ளனர். இதன் மூலம், இந்தியர்கள் 1600 ஆண்டுளுக்கு முன்பிருந்தே உலோகத் தொழில்நுட்பத்தைத் தெரிந்து வைத்துள்ளதைக் காட்டுகிறது.” என்று பாடநூல் சொல்கிறது. 

   இந்தியாவில் இரும்புக் காலம் (Iron Age) கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது.  கி.மு. 1300 முதல் கி.பி. 500 வரை இரும்புக் காலம் வரையறுக்கப்படுகிறது. சிந்து சமவெளி (கி.மு. 3250 – கி.மு. 2750)  மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை.

    தில்லி இரும்புத்தூணைக் கொண்டு இரும்பைப் பயன்படுத்தும் உலோகத் தொழில்நுட்பம் 1600 ஆண்டுகள் முன்பு இருந்தது என்று சொல்வது சரியாகுமா? பழமை, தொன்மை என்று காலத்தைப் பின்னோக்கித் தள்ளுவதும் தங்களுக்குத் தேவைப்படும்போது காலத்தை முன் நகர்த்திக் கொள்வதும் மொழியியலில் அடிக்கடி நடக்கும் புரட்டு வேலை. இதை அறிவியலிலுமா செய்யவேண்டும்? 

  அறிவியலில் மிகைபடுத்தல்கள், விந்தைகள் – வியப்பிற்கும் இடமில்லை என்றே கருதுகிறேன். அறிவியல் அதிசயங்கள், அறிவியல் விந்தைகள் என்றெல்லாம் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. வணிக உத்தியாக செய்யப்படும் இம்முயற்சிகளை பாடநூற்களிலுமா மேற்கொள்ளவேண்டும்?

  அந்த காலத்தில் இருந்த உலோக வார்ப்புத் தொழில்நுட்பம், பாஸ்பரஸ் கலப்பு, துருப்பிடிக்காத கனமான மேற்பூச்சு குறித்து பல்வேறு ஆய்வுகள் வெளியாகியுள்ளன. வேண்டுமானால் அவற்றைப் பற்றிச் சுருக்கமாக குறிப்பிட்டிருக்கலாம். இதிலுள்ள தேசப்பெருமையும் பூடகத் தன்மை கூட அறிவியலுக்கு எதிரானதுதான்.  

   இந்த இரும்புத்தூண் எக்கால கட்டத்தில் உருவாக்கப் பட்டது என்பதில் கூட கருத்து மாறுபாடு உண்டு. விக்ரமாதித்யன் என்ற பட்டப்பெயரில் அழைக்கப்படும் குப்த மன்னர் இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி. 380 – கி.பி. 415) காலத்தில் அதாவது கி.பி. நான்காம் நூற்றாண்டில் இந்த இரும்புத்தூண் அமைக்கப்பட்டதாகக் கொண்டு இதன்காலம் 1600 ஆண்டுகள் என்று கணக்கிடப்படுகிறது. 

  மவுரியப் பேரரசர்களில் சந்திரகுப்தர் மவுரியர் என்றொரு பேரரசர் இருந்தார். இவரது காலம் கி.மு. 322 முதல்  கி.மு. 298 முடிய. இவர் மாமன்னர் அசோகரின் தாத்தா ஆவார். மேலும் இவர்களது கட்டிட கலை பாணியில் தூண், ஸ்தூபிகளுக்கு முதன்மையான இடமுண்டு. சாரநாத் கற்றூண், வைஷாலி கற்றூண், சாஞ்சி ஸ்தூபி போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். 

   எது எப்படியிருப்பினும் இந்தியாவில் இரும்பின் பயன்பாட்டை வெறும் 1600 ஆண்டுகள் என்கிற அளவில் குறுக்குவது வரலாற்றுப் பிழையாகும். 

34. அறிவியல் அணுகுமுறை வேண்டும்.                      

    எட்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் (இரண்டாம் பருவம்) ‘காட்டுயிரிகள்’ பற்றிய உரையாடல் பகுதி ஒன்றுள்ளது. பரவாயில்லையே தமிழில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கிறார்களே என மகிழ்ந்து உள்ளே படிக்கும்போது நமக்கு அபத்தங்களும் அதிர்ச்சிகளும் காத்திருக்கின்றன. 

   இதைப் படிக்கும்போது இவர்கள் அறிவியலைப் பேசாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. இதற்குப் பதிலாக தமிழின் பெருமை, தொன்மை, லெமூரியாக் கண்டம் என கதைக்க நிறைய புனைவுகள் இருக்கின்றனவே!

  இவ்வுலகில் “ஐம்பூதங்களும் உயிருள்ள, உயிரற்ற பொருள்களும் இருக்கின்றன”வாம். ஐம்பூதங்கள் பற்றி அறிவியல் பாடநூற்கள் பேசுவதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன் (கல்விக்குழப்பங்கள்: 29). உயிருள்ள, உயிரற்றப் பொருள்கள் என்று சொன்னால் மட்டும் போதாதா? மூன்றாவதாக ஐம்பூதங்கள் ஏன்?

     உணவு வலை, உணவுச் சங்கிலி குறித்தெல்லாம் பேசப்படுகிறது. நல்லது. உணவு வலைக்கான படத்தைப் போட்டு அதை உணவுச்சங்கிலி என்கிறார்கள். உணவுச் சங்கிலிக்கும் உணவு வலைக்கு வேறுபாடு உண்டு. இதாவது பரவாயில்லை; விட்டுவிடுவோம். இனிமேல்தான் அதிர்ச்சிகள் நம்மை வரவேற்கின்றன.

   “உணவுச் சங்கிலி தாவரங்களிலிருந்தே தொடங்குகின்றது. எனவே, உயிரிகளின் ஆற்றலுக்கு அடிப்படையாக விளங்குவன தாவரங்களே.” இது எப்படி இருக்கு? 

  உணவுச் சங்கிலி தாவரங்களில் தொடங்குவதால் அவையே ஆற்றலுக்கு அடிப்படை எனலாமா? தாவரங்களுக்கு ஆற்றல் எப்படி கிடைக்கிறது என்று பார்க்க வேண்டாமா? சூரியனிடமிருந்துதானே தாவரங்கள் ஆற்றலை அல்லது உணவைப் பெறுகின்றன. ஆற்றலுக்கு அடிப்படை சூரியன் என்றல்லவா சொல்லவேண்டும்?

  ஒன்றை உயர்த்த அல்லது உன்னதப்படுத்த பிறிதொன்றை மட்டம் தட்டுவது அல்லது தாழ்த்துவது தமிழ் மொழியில் பொதுவான நடைமுறையாக்கி வைத்திருக்கிறார்கள் நமது தமிழ்ப் பண்டிதர்கள். அறிவியல் கருத்து சொல்லும்போதும் இந்நிலை நீடிப்பது வேடிக்கை. 

  தாவரங்கள் இல்லாமல் மனிதர்கள் இல்லை; சூழலியலில் இவை முதன்மைப் பங்காற்றுகின்றன என்பதெல்லாம் உண்மையே. அதற்காக ஆற்றலின் அடிப்படையே தாவரங்கள் என முரண்டு பிடிக்கமுடியுமா என்ன? இத்தகைய மிகைப்படுத்தல்கள் மொழியைச் சீரழிக்கின்றன என்பதை இவர்கள் உணர்வதேயில்லை. மொழிப்பாடங்களை அறிவியல் அணுகுமுறையில் தயாரிக்க வலியுறுத்தும்  நிலையில் அறிவியல் பாடங்களை மொழியடிப்படையில் தயாரிப்பதன் விளைவு இது. 

  “அசாமில் மரங்கள் அடர்ந்துள்ள சிரபுஞ்சிதான் உலகிலேயே அதிக மழைபெறும் இடம்.” என்று கூசாமல் சொல்கிறார்கள். மேகலாயா மாநிலத்தில்தான் சிரபுஞ்சி உள்ளது; அசாமில் அல்ல. 

     உணவிற்காக ஓர் விலங்கு பிறிதொரு விலங்கை வேட்டையாடுவது இயல்பானது; இயற்கையான ஒன்று. இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. பூச்சிகள், தவளை, பாம்பு, எலி, முயல், ஆடு, நரி போன்ற விலங்குகள் கொல்லப்பட்டால் வருத்தமில்லை. மானை சிங்கம் கொல்லலாமா? அதுவும் ‘தீதறியா  மானை’. 

     இங்கு  மான் மீது பரிதாபத்தையும் சிங்கம் மீது வெறுப்பையும் விதைக்கிறார்கள். இதே போலத்தான் பிற மொழிகள், மதங்கள், இனங்கள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் குறித்தும் காழ்ப்பை உமிழும் வகையில் பாடங்கள் எழுதப்படுகின்றன. பள்ளிக்கல்வியிலேயே வெறுப்பு அரசியலுக்கான விதை தூவப்படுகிறது. 

   உணவுக்கொலையில் இவர்கள் மாட்டை சேர்க்கவில்லை. புலி, சிங்கம், சிறுத்தை போன்ற கொன்று தின்னிகளுக்கு தனியே பசுவதைச் சட்டம் கொண்டுவர எண்ணமோ? 

  தன்னை மட்டும்  உயர்த்துவதும் மற்றமையை தாழ்த்துவதும் மொழிப்பாடம் எழுதுவதன் அரசியலாக இங்கு நிறுவப்பட்டுள்ளது. எனவே அறிவியல் பேசும்போதும் மொழிநடையின் சுயம் வெளிப்படுகிறது. வெறும் உணர்வுப்பூர்வமாக மட்டும் சிந்திக்காமல் கொஞ்சம் அறிவுப்பூர்வமாகவும் சிந்தித்துச் செயல்பட்டால் அது மொழியை மட்டுமல்ல இந்த சமூகத்தையும் பாதுகாக்கும். 


35. அடிப்படைவாத பழமொழிகள் தேவைதானா?                      
 

      பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் (?!) திருக்குறள் மற்றும் பழமொழிகள் சொல்லுவது என்றொரு சடங்கு இருக்கிறது. ஒரு நாள் “தாயைப்போல பிள்ளை; நூலைப்போல சேலை. (As is the mother, so is her daughter.) என்ற பழமொழியைச் சொன்னபோது இது மிகவும் மோசமான கருத்து என தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். அந்த நண்பர் மரபு, கலாச்சாரம் போன்றவற்றில் ஆழ்ந்த பற்று கொண்டவர். அவரால்கூட இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்கிறபோது நமது நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. 

    திருக்குறள் மற்றும் பழமொழிகள் ஆகிய இரண்டிலும் இக்காலத்திற்கு ஒவ்வாத பல கருத்துகள் உண்டு. அவற்றை வேத வாக்காக ஒப்பித்துக் கொண்டிருப்பது அறிவீனம். ஒப்பீட்டளவில் பழமொழிகளைவிட  சொலவடைகள் ஜனநாயகத் தன்மை மிக்கவை எனலாம். இவற்றில் சமூக அமைப்பைக் கேள்விகுட்படுத்தும், விமர்சிக்கும் தன்மை கொஞ்சமாவது உண்டு. சொலவடைகளில் கூர்மையான அரசியல், சமூக விமர்சனத்தையும்  பகடி செய்தலையும்  காணலாம். பேரா.ச.மாடசாமி அவர்கள் சொலவடைகளைத் தொகுத்திருக்கிறார். கழனியூரான் உள்ளிட்ட பலர் பழமொழிகளைத் தொகுத்துள்ளனர்.

   பழமொழிகளுக்கும் சொலவடைகளுக்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. இவை இரண்டையும் ஒன்று என குழப்புவோரும் உண்டு. உதாரணத்திற்கு சொலவடைகள் சில.


 •   கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த சொல்லு எத்தின நாளக்கி?
 • கூரையேறி கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் போனானாம்!
 • அறுக்க முடியாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அறுவாளாம்!


    அனுபவ மொழிகள் என்று பாராட்டப்படும் பழமொழிகள் பெரும்பாலும் ஆதிக்க சமூகத்தில் கருத்தியலைக் கொண்டது. இருப்பினும் நாட்டார் மொழிக் கூறுகளை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் கையாளவேண்டியது அவசியமானது. 

    அறிவே ஆற்றல் (Knowledge is power.) என்றொரு பழமொழி சொல்லப்படுகிறது. இதை “அறிவே அதிகாரம்.” என்றால் சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    பழமொழிகளில் காலந்தோறும் திரிபடைந்துள்ளன என்று கூறி அவற்றின் உண்மைப்பொருளைக் விண்டுரைக்கும் ஓர் போக்கு உள்ளது. எ.கா. ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன் (ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்).

   சில பழமொழிகளில் திரிபு இல்லாவிட்டாலும் தவறான பொருள் கொள்ளப்படுவதும் நடக்கிறது. உ.ம். ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி. வேல் என்பது இங்கு கருவேல மரத்தைக் குறித்தாலும் வேப்பமரமாகவே பெரும்பாலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    மொத்தத்தில் பழமொழிகள் அனுபவம் என்ற பெயரில் யாருடைய கருத்துகளை எடுத்து வைக்கிறது என்பது விமர்சனத்திற்குரியது. ஆதிக்க சாதி, இனத்தின் சொல்லாடல்கள் அனைவர் மனத்திலும் பதிய வைக்கப்படுகின்றன. மத, மொழி, இன, சாதி, ஆண், வட்டாரங்களை முதன்மைப் படுத்தும் அடிப்படைவாதம் இதில் மேலோங்கியுள்ளதையும் நாம் பார்க்க முடியும். 

   பழமையான, இன்றைய காலத்திற்குப் பொருந்தாத  சமூக மதிப்பீடுகளையும் அவற்றை உயர்த்திப் பிடிக்கும் வேலைகளைத்தான் இவைகள் செய்கின்றன. இங்கு 9 மற்றும் 10 வகுப்புப் புத்தகங்களில் உள்ள சில பழமொழிகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 

   9,10 பாடநூற்களிலிருந்து குருகுலக்கல்வியை புகழவும் கல்வி பற்றிய பழங்கால சாதியச் சமூக மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிக்கும் சில பழமொழிகளைக் காண்போம். (அடைப்புக் குறிக்குள் அதற்கு இணையாக ஆங்கிலத்தில்…)


 • ·        ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? (Bend the tree while it is young.)
 • ·        தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில். (What comes from the cradle goes to the grave.)
 • ·        குறைகுடம் கூத்தாடும். (Empty vessels make the great sound.)
 • ·        முதற்கோணல் முற்றிலும் கோணல். (All is well that ends well.)
 • ·        ஆனைக்கும் அடி சறுக்கும். (A good marksman may miss.)
 • ·        அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். (Little strokes fell   great oaks.)
 • ·        முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? (First deserve, then desire.)


     வெளிப்படையாக சாதிய, வருண மனோபாவம், ஆணாதிக்கம், அடிப்படைவாதம் ஆகியவற்றை  உண்டுபண்ணும் பழமொழிகள் நமது பாடநூற்களில் இருக்கின்றன. அவற்றில் சில.


 •         இனம் இனத்தோடு சேரும். (Birds of the same feather flock. The wise and the fool have their follows.)
 •       தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும். (Blood is thicker than water.)
 •        பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும். (Misfortunes never come single.)
 •       புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.  (Eagles don’t catch flies.)
 •        எரிவதனைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும். (Take away the fuel, the boiling will cease.)


பாடப்புத்தகத்திலிருந்து மேலும் சில உதாரணங்கள்.


 •      பணம் பத்தும் செய்யும். (Money makes many things.)
 •        எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது. (East or west, home is the best.)
 •         நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். (Man proposes; God disposes.)
 •        அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். (The mills of God grind slow but sure.)
 •         குரைக்கிற நாய் கடிக்காது. (Barking dog seldom bite.)
 •       காற்றுள்ளபோதே தூற்றிக் கொள். (Make hay while Sun shines.)
 •         வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். (Command your man and do it yourself.)
 •       பழி ஓரிடம், பாவம் ஓரிடம். (One doth the act, another hath the blow.)

    இவைகளின் பொருள் குறித்து சற்று ஆழமாக சிந்திப்பது நல்லது. பழைய அனுபவ மொழிகள் என்ற ஒரே கண்ணோட்டத்தைத் தவிர்த்து இளம் பிஞ்சுகளின் உள்ளத்தில் இவை  எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்க வேண்டும். நீதிக்கதைகள், பீர்பால், தெனாலிராமன் கதைகள் ஆகியவற்றையும் இதனோடு இணைத்துப் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக