03. உணவுப் பண்பாட்டரசியல் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)
- மு.சிவகுருநாதன்
(எழுத்தாளரும் நாவலாசிரியருமான தோழர் சோலை சுந்தரபெருமாள் அவர்கள் அண்மையில் வெளியான இரு நூற்களை என்னிடம் அளித்தார். ஒன்று பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘பால்கட்டு’ நாவல்; மற்றொன்று பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள ‘வண்டல் உணவுகள்’ கட்டுரைத் தொகுப்பு. நாவலை இன்னும் படிக்கவில்லை. இது ‘வண்டல் உணவுகள்’ பற்றிய விமர்சனக் குறிப்பு.)
பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்வதைப்போல உணவில் என்ன இருக்கிறது என்றும் சிலர் கேட்கக்கூடும். பெயரிலும் உணவிலும் அரசியல் கலந்திருக்கிறது என்பதே உண்மை. சோலையின் இந்நூல் உணவுடன் சேர்த்து அரசியலையும் இணைத்துப் பரிமாறுகிறது.
வழக்கமாக நாள்தோறும் தேநீர் அருந்தும் வீடாக இருக்கும். ஆனால் வரும் விருந்தாளிக்குக் காபி அளிப்பார்கள்; தேநீர் அளிக்கமாட்டார்கள். இதில் மதிப்புக் குறைவு இருப்பதான பாவனை இருக்கிறது. ஒப்பீட்டளவில் காபியை விட தேநீர் பரவாயில்லை என்றே அறிவியல் சொல்கிறது.
அரிசி உணவை சோறு என்று சொல்வது கூட நாகரிகம் இல்லை என்று பலர் சாதம் என்கின்றனர். மேலும் பச்சரிசி, புழுங்கலரிசி பற்றியும் தப்பெண்ணங்கள் நம்மிடம் உண்டு. சத்துக் குறைந்த பச்சரிசி உணவை நாகரிகமாக நம்பும் அறிவீனம் பலரிடம் உள்ளது.
சிறுதானிய உணவுகளைவிட அரிசி உணவே உயர்வானது என்கிற மனப்போக்கை அண்மைக்காலத்தில் நீரிழிவு நோய் மாற்றியுள்ளது! கார் நெல் போன்ற ‘மோட்டா’ ரகமாக இல்லாமல் பொன்னி, பாசுமதி போன்ற அதி சன்னரகமாக இருக்கவேண்டும். இவற்றிற்குள் இருப்பதும் அரசியல்தான். இந்நூல் வெறும் உணவு வகைகளை மட்டும் பேசாமல் அவற்றின் பின்னாலிருக்கும் வர்க்க அரசியலையும் பேசுகிறது. இவற்றில் அவரது நாவல்களைப் போலவே முரண்பாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
உழைக்கும் மக்களிடமிருந்து நெல்லரிசி உணவும் பறிக்கப்பட்டது. சுவைமிக்க நெல், மீன்வகைகளைக்கூட ஆண்டைகளிடம் கொடுத்துவிட்டு சாதாரண உணவை உண்ண வேண்டிய கட்டாயமும் உழைக்கும் வர்க்கத்திற்கு இருந்த (பக். 05) நிலையும் சொல்லப்படுகிறது.
ஒன்பது கட்டுரைகளாக (பகுதி) உள்ள இந்நூலின் முதல் பகுதியில் வண்டல் உணவு குறித்து 35 பக்கங்கள் நீண்ட வரலாறு சொல்லப்படுகிறது. ஏனைய பகுதிகளிலும் தானிய, பருப்பு, கீரை வகைகள் உள்ளிட்ட தாவர, விலங்கு உணவு வகைகள் பற்றியும் அவற்றின் தன்மைகள், அரசியல், சமூக, பொருளாதாரப் பின்புலம் குறித்தும் சோலை எழுதிச் செல்கிறார். சோலையின் நாவல் ஒன்றை படிக்கும் மனநிலை ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
அவரது நாவல், கதைகளைவிட இக்கட்டுரைகளில் அதிகமான சொலவடைகளைப் பயன்படுத்துகிறார். எடுத்துக்காட்டிற்கு ஒன்றிரண்டு மட்டும். “தின்னு ருசி கண்டவனும் பொண்டு ருசி கண்டவனும் ஒரு எடத்துல தரிச்சி நிக்க மாட்டான்.” (முன்னுரை), “தின்ன வீட்டுக்கு ரெண்டகம் பண்ணாதே.” (பக். 01), “திங்கிறதிலயும் உங்கிறதிலயும் (உடலுறவு) தான் செல்வம்.” (பக். 03), “தின்னதுக்கு தினவு; தின்ன மண்ணுக்கு சோவை.” (பக்.05), “வைத்தியனிடம் கொடுக்கிறத வாணியனிடம் கொடு.” (பக். 06), “ஊரு பெருமைக்கு ஆட்டை அடிச்சி புள்ளக் கையில புடுக்கை தூக்கிக் கொடுத்தாற் போல.” (பக். 109), “முட்டை போடும் பொட்டைக் கோழிக்கில்ல சூத்தெரிச்சல் தெரியும். (பக். 41)”, “வாக்கப்பட்டுப் போனவ வாய்க் கொழுப்பெடுத்து திரிஞ்சா மானம் (வானம்) கீழவா வரும்.” (பக். 109), “மழையும் பெய்யுது வெயிலும் எரிக்குது, தாத்தா புடுக்கு தம்பட்டம் போடுது.” (பக். 41), “குப்புறப்படுத்தா குண்டி, மல்லாக்கப்படுத்தா மானி போறீயா.” (பக். 41), “அண்டங்காக்காவுக்கு மண்டை பெரிசு, அடுத்தவீட்டு அக்காவுக்கு ...... சிறிசு.” (பக். 108) . உணவின் பின்னாலிருக்கும் அரசியலைப்போலவே சொலவடைகளின் அரசியலும் கட்டுடைக்கத்தக்கது. இதிலுள்ள ஆதிக்க மற்றும் சாதீய சொல்லாடல்கள் கவனிக்கப்பட வேண்டியது.
“காவிரிக்கரை வண்டல் மண்ணில் அறுதிப் பெரும்பான்மையாக வாழ்ந்தோர் சிவமதத்தைப் பின்பற்றிவருவோராக இருந்தார்கள். இவர்களில் உழுவித்து உண்பவர்களும், உழுதுண்பவர்களும் அடங்கி இருந்தார்கள். ஆதி சிவமதம் ஒருபோதும் உண்ணும் உணவில் வேற்றுமைப் பாராட்டவில்லை. இந்த ஆதி சிவ மக்கள் தமிழையே தங்கள் தாய்மொழியாகக் கொண்டு வாழ்ந்தார்கள்.” (பக்.05,06) மேற்கண்ட சூழல் எந்தக் காலகட்டம் என்பதைக் குறிப்பிடவில்லை. இதில் சைவப்பற்றும் தமிழ்ப்பற்றும் மேலோங்கியிருப்பதைக் காணமுடிகிறது. உணவில் வேற்றுமை பார்க்காத சிவமதம் சாதி ரீதியாக வேற்றுமை காட்டாமல் இருந்ததாக சொல்லமுடியுமா? ஆண்டானுக்கும் அடிமைக்கும் ஒரே மாதிரியான உணவு இங்கு சாத்தியமாயிருந்ததா? மிகவும் வியப்பாக உள்ளது. இந்த நூலிலேயே இது முரண்படுகிறது.
“இம்மண்ணில் புத்தமும் சமணமும் வேர் ஊன்ற, அவை அதிகாரம் பெற்றதும் இந்த மண்ணைப் பூர்வீகமாகக் கொண்ட சிவமதமும், வைணவ மதமும் அவற்றுடன் போட்டிப் போட, கொல்லாமைப் பண்பாட்டை நடைமுறைப் படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயின. (பக். 06) புத்தம், சமணம் மட்டுமல்ல; இங்கு சைவமும் அரச மதமாக இருந்ததுதானே! எது நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்தது என்று வேண்டுமானால் பிரித்துப் பார்க்கலாம்.
பவுத்தம் கொல்லாமையை பெரிதும் வலியுறுத்தியதில்லை. புத்தரே மாமிச உணவுகளை உட்கொண்டுள்ளார். சைவத்திற்கு அளிக்கும் சலுகையை ஏன் பவுத்தத்திற்கு அளிக்க தயாராக இல்லை? சைவம்தான் இம்மண்ணின் பூர்வ மதம் என்றால், அப்பூர்வகுடிகளில் ஒரு பிரிவினர்தானே, தமிழ் பவுத்தம், தமிழ் சமணம், ஆசிவகம் போன்ற கோட்பாட்டில் இயங்கினர். அவர்கள் எப்படி அந்நியர் ஆயினர்? உணவுப் பண்பாட்டிலும் பவுத்த, சமண எதிர்ப்பை வலியுறுத்துவது ஆபத்தானது. இப்போது வைணவமும் மண்ணின் பூர்வகுடி மதமாகிவிட்டது. ஆனால் பவுத்தம், சமணம் ஆகிய மதத்தையும் அதைப் பின்பற்றியவர்களையும் எதிரியாக கட்டமைப்பது வேதனை. சைவத்தை பார்ப்பனியத்திற்கு மாற்றாகவும் பவுத்த – சமண அவைதீக மதங்களுக்கு எதிராகவும் பார்க்கும் கண்ணோட்டம் சோலையிடம் உள்ளது. சைவத்தை ஒன்றும் அப்படியெல்லாம் நேர்மறையாக அணுக இயலாது என்பதே பல ஆய்வாளர்களின் கருத்து. (எ.கா. பொ.வேல்சாமியின் ‘பொய்யும் வழுவும்’ நூலிலுள்ள ‘பார்ப்பனியம் – பார்ப்பனர் = சைவ சித்தாந்தம்’ என்கிற கட்டுரை.)
“தமிழ்ச்சைவமதம் உள்ளடக்கி வைத்திருந்த பெருவாரியான உழைப்பாளி மக்கள், நாட்டார் தெய்வ – சிறுதெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தார்கள். அதனை தமிழ்ச்சைவமும் புறந்தள்ளிடவில்லை.” (பக். 07) “சிவமதம், பெருவாரியான உழைக்கும் மக்களையும் வேளாண்மையைக் கொண்டிருந்த சிறு நிலவுடைமையாளர்களையும் நிராகரிக்க விரும்பவில்லை.” (பக். 07 இதே மாதிரியான கருத்தைத்தான் இந்துத்துவவாதிகளும் சொல்லி வருகிறார்கள். நாட்டார் வழிபாட்டை அங்கிகரிப்பது, அதை வைதீகமயப்படுத்துவது இரண்டிற்குமுள்ள பாரிய வேறுபாட்டை உணர்தல் அவசியம்.
“இம்மண்ணில் பாதிக்கும் மேலாக உள்ள வெள்ளாண்மை (வெள்ளாமையை அழுத்திச் சொல்வதன் நோக்கம் வேறோ?) செய்யப்படும் சாகுபடி நிலங்கள் கோவில்களுக்கும் மடங்களுக்கும் ‘பட்டா’ உரிமையோடு இருந்தன. தவிரவும் நிலவுடைமையுடன் வேளாண்மையைத் தொழிலாகக் கொள்ளாதவர்கள் இம்மண்ணில் வேர் கொண்டிருந்த பண்பாட்டில் புரோகிதர்களாக இருந்த பார்ப்பனர்களே!” (பக். 07) இதிலிருந்து பார்ப்பனர்களும் இம்மண்ணில் வேர்கொண்டவர்கள் என்பது புலனாகிறது. சமணர், பவுத்தர், ஆசிவகர் போன்றோர்களை இங்கு ஏன் வேரோடியவர்களாகப் பார்க்க முடியவில்லை என்பதை சோலை விளக்கவேண்டும். வேளாண்மையை ஓர் குறிப்பிட்ட சாதியினரின் தொழிலாகக் கட்டமைக்கும் போக்கு உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.
“இவர்களைத் தவிர்த்து, பெரியளவில் இல்லாமல் சிறியதாகவும் இல்லாத நிலவுடைமையைக் கொண்டவர்கள் உடையார்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள், நாயுடுமார்கள், நாடார்கள் என்ற நடுத்தட்டு சாதியினர் தங்களை உயர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்.” (பக் 08) இந்தச் சாதியினர் அனைவரும் நிலவுடைமையாளர்களாக இருந்தனர் என்று பொதுவாக வரையறுப்பது எந்தளவிற்கு சரியாக இருக்கும் என்பது விளங்கவில்லை.
“குறிப்பாய் மகாசனங்களில் அடங்காத பிள்ளைமார்களில் இம்மண்ணில் பெரும்பிரிவாக இருக்கும் சோழிய வெள்ளாளர்கள் பெரும் நிலவுடைமையாளராக இல்லை.” (பக். 08) இந்த நிலை உண்மையானல் அது மேலே குறித்த சாதிக்கும் பொருந்துமல்லவா?
“மேற்கண்ட வடிவத்தில் தாழ்த்தப்பட்ட பறையர், பள்ளர்களில் உழைப்பாளிகளாக, அடக்கப்பட்டவர்களும் மற்றைய அனைத்துச் சாதியினரும் அன்றாடம் காய்ச்சிகளே, பண்ணை அடிமைகளே!” (பக். 10) என்று நிலவுடைமைக் கலாச்சாரம் குறித்து பதிவிடுகிறார்.
வண்டல் உணவில் வர்க்க பேதங்கள் இருப்பினும் அரிசிக்கு முதன்மையான இடமுண்டு. இங்கு பயிரிடப்பட்ட பழமையான நெல் ரகங்களான கிச்சடிச் சம்பா, தங்கச்சம்பா, கட்டச்சம்பா, வெள்ளைச் சம்பா, சேப்புச் சம்பா, கார், தொங்கட்டான், ஒட்டடை, குடவாலை, எட்டாம் படி, பதினெட்டாம் படி, மட்டக்குறுவை, கொத்தமல்லி ஆகியன பற்றிய செய்திகள், சாகுபடித் தொழில்நுட்பம், சிறப்புகள் விரிவாகப் பட்டியிலிடப் படுகின்றன.
அடுத்து முக்கனிகள், நாவல், நெல்லி பற்றிய பகுதி உள்ளது. தேன் காய்ச்சி, பச்சரிசி காய்ச்சி, சிப்பிலி காய்ச்சி, மாவு காய்ச்சி, களி காய்ச்சி, குங்குமக் காய்ச்சி, சாம்பல் காய்ச்சி, தேங்காய் காய்ச்சி, இலந்தை காய்ச்சி ஆகிய மாவினங்கள் சொல்லப்படுகின்றன. பலாச் சுளையின் சுவையை நாவூறச் சொல்லிப் போகிறார். வாழையில் பூவன், மொந்தன் ரகத்தைத்தவிர பிறவற்றைப் பற்றிய குறிப்புகள் இல்லை.
கள் உணவின் ஓர் பகுதி என்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது. நிலவுடைமையாளர்கள் தென்னங்கள் உண்ணுவதும் தாழ்த்தப்பட்ட பண்ணையடிமைகள் பனங்கள், ஈச்சங்கள்ளை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உண்ணுவதையும் சொல்கிறது. கள் இறக்கும் சாணர்களிடம் மேல் கீழ் வேறுபாடு இருந்ததும் குறிப்பிடப்படுகிறது. வேளாண் பணிகள் நிறைவடைந்த பங்குனி, சித்திரை மாதங்களில் பனை வெல்லம் காய்ச்சப்பட்டது. மேலும் கசகசவிலிருந்து எடுக்கப்படும் ராஜபோதை தரும் ‘போசுக்கோ நீர்’ பற்றியும் சொல்கிறார். ‘சுண்ட கஞ்சி’ என்று சொல்லப்படும் மோட்டா ரக கார் நெல்லரிசியிலிருந்து வடிக்கப்படும் ‘கள்’ இனிப்பு கலந்த புளிப்புச் சுவையுடையது என்றும் சொல்லப்படுகிறது.
ஆடு, கோழி, மீன், நண்டு, நத்தை, எலி , உடும்பு, கொக்கு, மடையான், வாத்து, காடை, கவுதாரி, மைனா, பழந்தின்னி வவ்வால் என மாமிச உணவிற்கான விலங்குகளின் நீண்ட பட்டியல் உள்ளது. பன்றி, ஆமை போன்றவை கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளன. “தாழ்த்தப்பட்டப் பண்ணையடிமைகளில் குறிப்பிடுபடியாக சிறு பகுதியினர் மட்டும் மாடுகளை உணவாகக்கொண்டு இருந்திருக்கின்றனர்,” என்று சொல்லப்படுகிறது. பன்றி, ஆமை போன்றவற்றை வந்தேறிகள் மட்டுமே உணவாகக் கொண்டனரோ என்னவோ!
காரக்குழம்பு, பொரிச்சக் குழம்பு, பருப்புக் குழம்பு, சாறு ஆகிய சைவக் குழம்பு வகைகளும் கறி, மீன் கொதி, எலிக்கறிக் கொதி போன்ற அசைவக் குழம்புகளும் இங்கே விவரிக்கப்படுகின்றன.
வெண்டை, கத்தரி, பூசணி, வெள்ளரி, புடலை, அவரை, சுரை, பரங்கி, பீர்க்கங்காய், கொத்தவரை ஆகிய காய்கறி வகைகளும் மரவள்ளி, சர்க்கரைவள்ளி, கருணைக்கிழங்கு, அல்லிக்கிழங்கு, தாமரைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும் வண்டல் உணவில் அறுசுவையூட்டியதை சோலை நினைவூட்டுகிறார். சோளம் போன்ற தானியங்கள், உளுந்து, பயறு போன்ற பருப்பு வகைகள், பல்வேறுபட்ட கீரை ரகங்கள் என வண்டல் உணவுப் பண்பாடு அமைந்திருந்ததை சுவையாகக் கூறுகிறார். ஆனால் இவையெல்லாம் அனைவருக்கும் சமமாக இடைத்ததா என்பதெல்லாம் இங்கு ஆராயப்படவில்லை. இந்நூலைப் படிக்கும்போது வண்டல் பூமி ஏதோ வளமாக இருந்ததுபோல ஒரு சித்தரிப்பு கிடைக்கிறது. இருந்திருக்கலாம்; பங்கீடு எல்லாருக்குமானதாக இருந்ததா என்பது கேள்விக்குரியது.
பொங்கல், தீபாவளி ஆகிய பண்டிகை கால பலகாரங்களும் பிற பலகாரங்களும் இங்கு பட்டியலிடப்படுகிறது. குழாய்ப் புட்டு, சத்துமாவு உருண்டை, அதிரசம், முறுக்கு, கெட்டி உருண்டை, கூழ் வடகம், பொரிச்ச முறுக்கு, அரிசிப் பாயாசம், பயிறு கஞ்சி, பதனிப் பொங்கல், காப்புச் சோறு, அவல் பொங்கல் என சுவை சத்து மற்றும் மிகுந்த உணவுகள் மக்களது உணவுப் பழக்கத்தில் இருந்தது சொல்லப்படுகிறது. ஆடு,மாடு மேய்ப்பவர்கள் பாலைக்கொண்டு உறைகூழும் தேங்காய் கொண்டு சுடு தேங்காய் தயாரிக்கும் முறை வித்தியாசமானது. அவற்றை சோலை இங்கு குறிப்பிடத் தவறவில்லை.
சிறிய சார்முட்டிப் பொடி மீனின் செதில்களைச் சுத்தம் செய்ய வெறுமனே அளைஞ்சி எடுக்கமாட்டார்கள். (பக். 112) உப்பிட்டு செய்தால்தான் செதில்கள் சுத்தமாகும்.
செவ்வாய்ப் பிள்ளையார் வழிபாட்டில் செய்யப்படும் ஆவியில் வேகவைக்கும் கொளுக்கட்டை (பக். 127) பற்றி கொஞ்சம் கூடுதல் தகவல்கள். ஆடி மற்றும் தை மாத செவ்வாய்க் கிழமை இரவுகளில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் இந்நிகழ்வில் திருமணமாகாத இளம்பெண்களுக்கு முதிர்ந்த பெண்கள் பாலியல் செய்திகளைக் கதையாகக் கூறி அவற்றைப் பல்வேறு வடிங்களில் கொளுக்கட்டை போலச் செய்து ஆவியில் வேகவைத்து அவர்கள் மட்டும் உண்ணும் வழக்கமாகும். இது அக்காலப் பெண்களுக்கான பாலியல் கல்வியாகும்.
அவர்களது பாலியல் கற்பனையில் செய்த உருவங்களை ஆண்கள் பார்க்கக் கூடாது என்பதாலே அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தின்றால் ஆண்கள் பலமிழப்பார்கள் என்பதெல்லாம் சாக்குபோக்கு. பாலியல் கல்வி வேண்டவே வேண்டாம் என்று கூச்சலிடும் அடிப்படைவாதிகள் இவற்றைக் கவனிப்பதில்லை.
அக்கார அடிசில், புளிச்சோறு, சர்க்கரைப் பொங்கல் வழி பார்ப்பன உணவுப்பண்பாடும் விளக்கம் பெறுகிறது. பவுத்தர்கள் இன்று இங்கில்லை. தீபங்குடியில் சில திகம்பர சமணக் குடும்பங்கள் இருக்கின்றன. வண்டல் மண்ணில் வசிக்கும் இஸ்லாமியர்களின் உணவுப்பண்பாடு வண்டலில் அடங்காதா? பிரியாணியைப் பற்றி இல்லையென்றாலும் அனைவரும் விரும்பியுண்ணும் ரமலான் மாத நோன்புக் கஞ்சியையாவது குறிப்பிட்டிருக்கலாமே! வண்டல் பூர்வ குடிகள் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லையோ?
வட்டார வழக்குச் சொற்களுக்கு சோலையிம் நூற்களில் விளக்கக் குறி்ப்புகள் இருப்பதில்லை. இந்நூலிலும் அப்படியே. அரி, கடாவடி, புதிர் போன்ற வட்டார வழக்குச் சொற்களுக்கு விளக்கத்தை இணைத்தால் நன்றாக இருக்கும்.
இறுதியாக, உலகமயமாக்கலால் பன்னாட்டுக் கம்பெனிகள் விவசாயத்தை அழித்து வருவது பேசப்படுகிறது. வேளாண்மையில் தங்களது உழைப்பு முழுதும் செலுத்தி அதன் பலன் எதையும் அனுபவிக்காத அடித்தட்டு மக்கள் அதைவிட்டு வெளியேறுதைத் தவிர வேறு என்ன வழி இருக்க முடியும்? உலகமயத்திற்கு ஆதரவாக இல்லை என்றாலும்கூட அடித்தட்டு மக்கள் வழியாக இப்படியும் யோசிக்கவேண்டிய அவசியத்தையும் மறுக்கமுடியாது.
வண்டல் உணவுகள் – சோலை சுந்தரபெருமாள்,
முதல் பதிப்பு: டிசம்பர் 2014, விலை: ரூ. 90, பக். 144.
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்,
16 ஜானி கான் கான் சாலை. ராயப்பேட்டை,
சென்னை 600014.
பேச: 044-28482441, 42155309
மின்னஞ்சல்: pavai123@yahoo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக