சனி, அக்டோபர் 24, 2015

கல்விக் குழப்பங்கள் தொடர் பகுதி 36 முதல் 40 முடிய.


கல்விக் குழப்பங்கள்  தொடர்  பகுதி 36 முதல் 40 முடிய. 
                                                                                    - மு.சிவகுருநாதன்


36. கதிர்வீச்சால் பதப்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்பானதா?                         

                                                        
       “X – கதிர்கள் அல்லது காமாக் கதிர்கள் அல்லது புற  ஊதாக்கதிர்கள் மூலம் உணவில் உள்ள பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகளைக் கொல்லும் முறை கதிர்வீச்சு முறைஆகும்.

     அக்கதிர்வீச்சு உணவின் சுவை மற்றும் உணவின் தரம் இவற்றை அழிக்கின்றதா? இல்லை. கதிர்வீச்சு உணவில் உள்ள சுவை மற்றும் தரத்தை அழிப்பதில்லை. வெங்காயம், உருளைக்கிழங்கு முளைவிட்ட பயறு வகைகள் போன்ற உணவுகள் கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்ட பின்பும் புதியதாகவே, தொடர்ந்து இருக்கும்.

     கதிர்வீச்சால் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நச்சுத்தன்மை கொண்டது எனச் சிலர் தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் அது தவறு. இது நச்சுத்தன்மை அற்றது.”  (பக். 72, ஏழாம் வகுப்பு அறிவியல் இண்டாம் பருவம்)

   சூரிய சக்தி, காற்று சக்தி, ஓத அலை சக்தி போன்ற அனைத்திற்கும் இடர்பாடுகளைப் பட்டியலிடும் நமது பாடநூற்கள் அணுசக்தி, கதிரியக்கம் என்று வரும்போது இல்லவே இல்லை என உரக்கக் கூவுவது ஏன்? இந்தியாவின் ஏன் உலகின் ‘அணுசக்தி லாபி’ அவ்வளவு வலிமையானது. அனைவரும் போற்றிக் கொண்டாடும் அப்துல் கலாமும் இந்தக் கூட்டத்தில் ஒருவரே.

   X – கதிர்கள், காமாக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று எப்படி சொல்லமுடியும்? குறைந்தபட்ச அளவு என்றால் அதை நிர்ணயிக்கின்ற, கண்காணிக்கும் அமைப்புக்கள் இங்கு முறையாக இயங்குகின்றனவா? இதை அறிவியல் மூடநம்பிக்கை என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இங்கு பழங்கள் அனைத்தும் முறைகேடான முறையில்தானே பழுக்க வைக்கப்படுகின்றன. (எ.கா. கார்பனேட் கொண்டு மாம்பழம் பழுக்க வைத்தல்.)

  X – கதிர்கள் புறஊதாக் கதிர்களைவிட அதிக ஆற்றலுடையது. பொருள்களை அயனியாக்கி அவற்றின் வேதிப்பிணைப்புகளை உடைக்கும் தன்மையுடையது. மென்மையான X – கதிர்களை அதிகம் பயன்படுத்துவதால் டி.என்.ஏ. மூலக்கூறுகள் பாதிப்படைந்து புற்றுநோய் உண்டாகிறது. வன்மையான X – கதிர்கள் ஊடுருவும் சக்தி மிக்கது. எனவேதான் மருத்துவத் துறையிலும் விமான நிலையப் பாதுகாப்புச் சோதனைகளிலும் இவை பயன்படுகிறது. அதனால்தான் இவை பயன்படுத்துமிடங்களில் எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்படுகின்றன.

   புற ஊதாக் கதிர்கள் சிறிய அளவில் நமது உடலில் பட்டால் கூட தோல் வெந்துபோகும். அயனியாக்கும் ஆற்றல் குறைவு என்றாலும் வேதிப்பிணைப்புகளை உடைக்கும். அதன் மூலம் புற்றுநோய் உண்டாக வாய்ப்புள்ளது. 

  காஸ்மிக் கதிர்களின் கதிர்வீச்சு அளவு மிகக்குறவு என்றபோதிலும் இதன் ஆற்றல் மிக அதிகமாக இருப்பதால் உயிரணுக்கள் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகி மிகுந்த பாதிப்படைகின்றன. 

   புற ஊதாக் கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்களின் கதிர்வீச்சு அளவை ஓசோன் படலம் பெருமளவு குறைக்கிறது. இதனால்தான் நாம் தப்பிக்கிறோம். இந்த ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் அதன் பாதிப்புக்களை மட்டும் சொல்லிவிட்டு இதே கதிர்களை உணவுப் பதப்படுத்தலில் பயன்படுத்தும்போது பக்க விளைவுகளே இல்லை என்று சொன்னால் எப்படி? 

  மருத்துவத் துறையில் கதிரியக்கத்தைக் குறைந்த அளவு பயன்படுத்தும்போதும் நீண்ட கால விளைவுகள் ஏற்படுகின்றன. ரேடியம் என்கிற கதிரியக்கத் தனிமத்தைப் புற்றுநோய்க்குப் பயன்படுத்திய மேடம் க்யூரி அம்மையார் புற்றுநோய்க்கு ஆளாகி இறந்தார் என்பது நாமனைவருக்கும் தெரிந்ததுதான். 

     கதிரியக்கம், மரபணு மாற்றம் ஆகியவற்றின் தீங்குகள் இங்கு வேண்டுமென்றே, திட்டமிட்டு மூடி மறைக்கப் படுகின்றன.  பாடநூல்கள் இத்தகைய பரப்புரைகளைத் தொடர்ந்து செய்வதால் இவை பற்றிய விழிப்புணர்வு உருவாகாமல் தடுக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு மட்டுமல்ல, அதிக கதிரியக்கம் உள்ள இடங்களில் பணி செய்வோருக்கும் இந்த விழிப்புணர்வு இல்லாமல் செய்வது மிகவும் ஆபத்தானது. அணு உலைகளில் சேமித்து வைக்கப்படுள்ள கதிரியக்கமுடைய கனநீரை   குளிக்கப் பயன்படுத்திய கதை எல்லாரும் அறிந்ததுதான். 

   இவ்வாறான மறைப்பு வேலைகள் இந்த சமூகத்திற்கு செய்யப்படும் மாபெரும் துரோகம். பாரபட்சம் காட்டாமல் அனைத்திற்கும் நன்மை தீமைகளைச் சொல்லிக்கொடுங்கள். அணுக்கதிர் வீச்சு குறித்த முன்முடிவுகளை வெளியிடாமல் மாணவர்களை கேள்வி கேட்க, சுயமாக சிந்திக்க விடுங்கள். மாறாக அவர்களது மூளைச் சலவை செய்யும் வேலைகளில் ஈடுபடவேண்டாம் என பாடநூல் குழுவினரை கேட்டுக்கொள்வோம்.

37. மொழியாக்கக் குளறுபடிகள்                         

       பல ஆண்டுகளுக்கு முன்னதாக மொழியாக்கத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. ஆனால் தற்காலத்தில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான இனிய தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்கு பல எடுத்துக்காட்டுக்களைக் குறிப்பிடமுடியும். 

     Apps என்ற நவீன அலைபேசிக் காலச் சொல்லுக்கு ‘செயலி’ என்பது பயன்பாட்டில் வந்துவிட்டது. தொடக்கத்தில் சில சொற்களுக்கான மொழியாக்கம் பின்னாளில் செம்மைப்படுத்தப்பட்டதும் உண்டு. இன்றைய LED உலகில் தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள பெட்டி காணாமற்போய்விட்டது!

  Computer முன்பு கணிபொறியாக இருந்தது. எலிப்பொறி போல் இருப்பதால் கணினி ஆனது. Computer Science கணினி அறிவியல் ஆவதுதானே சரி. ஆனால் நமது பாடநூற்களுக்கு இன்னும் கணிப்பொறியியல் தான். இதற்குள்ளே பொறியியல் வருகிறதே! Computer Engineering கணினிப் பொறியியலாகுமா? அல்லது அடுக்குத் தொடர் போல  கணிப்பொறிப் பொறியியலாகுமா?

   Blood ஐ குருதி என்றெல்லாம் மொழிபெயர்த்துக் குழப்பத்தில் ஆழ்த்துபவர்கள்,  Blood Circulation System ஐ ரத்த ஓட்ட மண்டலமாக்கி ஓடவிடுகிறார்கள். ஆற்றில் நீர் செல்வது ஓட்டமாகும். Circulation எப்படி ஓட்டமாகும்? இதை ரத்தச் சுழற்சி மண்டலம் என்று பழைய பாடநூற்களில் இருந்ததை கூட இவர்கள் கவனிப்பதில்லை. 

   தமிழில் வெளிவரும் பல்வேறு பருவ இதழ்கள், தினமணி, தி இந்து போன்ற நாளிதழ்களில் ஆங்கிலச் சொற்களுக்கு அருமையான சொல்லாக்கங்கள் கிடைக்கின்றன. மோசமான சொல்லாக்கங்கள் காலப்போக்கில் மறைந்து புதிய, இனிய சொற்கள் உருவாகின்றன. இவற்றைப் படிக்க வாய்ப்பற்றவர்கள் பாடநூல் எழுதுவதுதான் வேதனை. 

  Parliament, Lok Sabha, Rajya Sabha ஆகிய சொற்களுக்குத் தமிழில் முறையே நாடாளுமன்றம், மக்களவை, மாநிலங்களவை என்று அனைத்து இடங்களிலும் வழக்கில் வந்துவிட்டபிறகு இன்னும் கீழ் சபை, மேல் சபை மாறவேயில்லை.  Assembly, Legislative Council போன்றவை சட்டப்பேரவை, சட்டமேலவை ஆகி எத்தனை ஆண்டுகளாகிறது? இங்கும் கீழ் சபை, மேல் சபைதான். சர்க்கார், பாஷை என்றெல்லாம் விரைவில் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!

   மொழிக்கு முதலில் வராது என்று சில எழுத்துக்களுக்கு முன்னதாக இகரம் சேர்ப்பது, (எ.கா. ரத்தம் – இரத்தம்) பெயர்ச்சொற்களை மிக அபத்தமாக மொழியாக்கம் செய்வது என்று இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவேயில்லை. (எ.கா.  Coral Mills  - பவள ஆலை, Young India – இளம் இந்தியா)

         Painter, Tele printer, Transgender  ஆகிய சொற்களுக்கு ஓவியர், தொலை அச்சு, மாற்றுப் பாலினம் என்ற சொற்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்க, இவர்கள் பெயிண்டர் டெலிபிரிண்டர்,  டிரான்ஸ்ஜென்டர்  என்கிற ஒலிபெயர்ப்பையே நாடுகிறார்கள். Cartographers, Map-makers ஆகியவற்றிற்கு மேப்பியலாளர்கள் என்ற புதிய இருமொழிச்சொல்லை கூட (bi-lingual)  கண்டுபிடிக்கிறார்கள்!

      பாடநூல் மொழிபெயர்ப்பு அபத்தங்கள் சிலவற்றை இங்கு பட்டியலிட முயல்வோம். இப்பட்டியலை நீங்களும் விரிவாக்கலாம். (அடைப்புக்குறிக்குள் உள்ளது ஏற்கனவே வழக்கில் உள்ள சரியான மொழியாக்கம்.)

Remote sensing - தொலை நுண்ணுணர்வு  ((தொலை உணர்வு)
E commerce - மின் வர்த்தகம் (மின் வணிகம்)
Fax - தொலைதூர நகல்  (தொலை நகல்)
Voice mail - சொந்தக்குரல் செய்தி (குரல் செய்தி)
Pee nut – வேர்க்கடலை (நிலக்கடலை)
Other crops - மற்றைய பயிர்கள் (பிற பயிர்கள்)
Print media - செய்தி அச்சுத் துறை (அச்சு ஊடகம்)
e-mail மின்னணுச்செய்திகள் / மின்னணு அஞ்சல் (மின்னஞ்சல்)
Multi media - பல்வேறு ஊடகம் (பல் ஊடகம்)
Fast Breeder Reactor  - ஊது உலை (அதிவேக ஈனுலைகள்)
Input – இடுபொருள் (உள்ளீடு)
Electronics – மின்னியல்  (மின்னணுவியல்)
Sanctuary – சரணாலயம் (புகலிடம்)

38. சாலைகளைப் பராமரிப்பது யார்?                        

     சாலைகள்கிராமச்சாலைகள், மாவட்டச்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், தங்க நாற்கர உயர்தர நெடுஞ்சாலை, விரைவு நெடுஞ்சாலைகள், எல்லையோரச் சாலைகள் மற்றும் பன்னாட்டுச் சாலைகள் என வகைப்படுத்தப்படுகின்றன.”  

    “மாவட்டச் சாலைகள் கிராமங்களை மாவட்டத்தின் தலைநகரங்களுடன் இணைக்கின்றன. இவற்றை மாநகராட்சிகளும் நகராட்சிகளும் பராமரிக்கின்றன.”
(பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்)

   “சாலைப் போக்குவரத்து நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்டச் சாலைகள் மற்றும் கிராமச்சாலைகள்.” (ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல்)

   பத்தாம் வகுப்பு பொருத்துக வினாப்பகுதியில் மாவட்டச் சாலைகள் என்பதற்கு விடையாக மாநகராட்சி, நகராட்சி அளிக்கப்பட்டுள்ளது. 

   ஒன்பதாம் வகுப்புப் பாடநூலில் சாலைகளின் அளவு அட்டவணை ஒன்றுள்ளது. அதில் மாநகர, நகரச் சாலைகள், நகரப் பஞ்சாயத்து, கிராமப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், காட்டுவழிச் சாலைகள் என்கிற பட்டியல் இருக்கிறது. 

   இதிலிருந்து சாலைகளை அமைப்பது, பராமரிப்பது யாரென்ற பெருங்குழப்பம் பாடநூல் குழுவில் இருப்பதுத் தெரிகிறது. அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் பத்தாம் வகுப்பிலும் தவறான பதில் சொல்லப்படுகிறது. 

  மாவட்டம் முழுவதிலும் உள்ள சாலைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்படுவது சென்னையில் மட்டுமே. ஏனெனில் அங்கு ஊரகப் பகுதிகள் இல்லை. 32 மாவட்டங்களைக் கொண்ட தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த 31 மாவட்டங்களில் மட்டுமே மாவட்ட ஊராட்சி அமைப்புகள் உண்டு. இதை உதாரணமாகக் கொண்டு மாவட்டச் சாலைகளை நகராட்சி மற்றும் மாநகராட்சியால் பரமாரிக்கபடுவதாக சொல்வது நியாயமா? 

   பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி  அமைப்புகள் அவற்றின் எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை அமைத்துப் பராமரிக்கும் பணிகளை மட்டும் செய்யும். இதற்கே நிதிப் பற்றாக்குறை என்று சொல்லி சாலைகள் மிக மோசமான நிலையில் இருக்கக் காணலாம். மாவட்டம் முழுதும் இவற்றின் கட்டுப்பாட்டில் இல்லை; இருக்கவும் முடியாது. 

   நமது உள்ளாட்சி  அமைப்புகளின் அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல் இம்மாதிரியான  அபத்தப் பாடங்கள் எழுதப்படுகின்றன. ஆசிரியர்கள் இவற்றைக் கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்கின்றனர். இது தவறு என்பதைக் காட்டிலும் அத்தவற்றை நியாயப்படுத்தும் விளக்கங்களே ஆசிரியர்களிடம் கிடைக்கின்றன. இதுதான் நமது கல்வியமைப்பின் அவலம். 

   பேரூராட்சிகள் (Town Panchayats), நகராட்சிகள் (Municipalities), மாநகராட்சிகள் (Corporations) ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தத்தமது எல்லைகுட்பட்ட சாலைகளை அமைத்துப் பராமரிக்கும் என்று சொன்னோம். அதைப் போலவே ஊரகப்பகுதிகளுக்கு வேறுவிதமான நிர்வாக அமைப்பு உள்ளது. 

  தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகள் மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பால் நிர்வகிக்கப்படுகின்றன. சிற்றூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகள் முறையே ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியகுழுத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆகியோர் தலைமையில் உள்ள குழுவால் செயல்படுகின்றன. 

  சிற்றூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகிய ஒவ்வொன்றிற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் உள்ளன. ஊரகப்பகுதி சாலைகள் பராமரிப்பு இந்த மூன்று  அமைப்புகளின் பணியாகும். இவற்றின் அடிப்படையில் சிற்றூராட்சியின் பராமரிப்பில் உள்ளவை கிராமச்சாலைகள் என்றழைக்கப்படுகின்றன. ஊராட்சி ஒன்றியத்தில் கட்டுப்பாட்டில் இருப்பவை ஒன்றியச்சாலைகள் எனவும் மாவட்ட ஊராட்சியின் பராமரிப்பிலுள்ளவை மாவட்டச் சாலைகள் எனவும் சொல்லப்படுகின்றன.

     பத்தாம் வகுப்பில் ‘கட்டு, செயல்படுத்து, மாற்று’ (BOT - Build, Operate and Transfer) என்கிற தேசிய நெடுஞ்சாலைகளைத் தனியார்மயமாக்கும் ஒப்பந்தங்கள் குறித்தும் சொல்லப்படுகிறது. “தனியார் நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்த காலத்திற்குள் கட்டுமானச் செலவு செய்ததையும், லாபத்தையும் பெற்றபின் அரசிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விடுமாம்.”  (இதிலுள்ள மோசடிகள் வேறுகதை.) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  (National Highways Authority of India, NHAI) பல சாலைகளைத் தனியாரிடம் அளித்துள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது என்று இன்னும் எத்தனை காலம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம்?

   இறுதியாக ஓர் தகவல். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  (National Highways Authority of India, NHAI)   இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையச் சட்டம் - 1988 மூலம் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு 1995 முதல் தன்னாட்சி பெற்ற அமைப்பாக தேசிய நெடுஞ்சாலைகளை மேலாண்மை செய்கிறது. அதாவது தேசிய நெடுஞ்சாலைகளை  தனியாரிடம் விற்கிறது.  

   39. எது பெண்களுக்கு சமூக மதிப்பு?
                

     எந்த காலத்திலும் எல்லா இடங்களிலும் பெண்களின் நிலை சிறப்பாக இருந்ததாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது. அடுத்த வரி அல்லது பத்திகளில் உண்மை வெளிவந்துவிடுகிறது.  பாடநூல்களில் இவர்கள் சொல்லும் சமூக மதிப்பிற்கான அளவுகோல்கள் என்ன என்பதில் குழப்பமே நீடிக்கிறது. சில உதாரணங்களை மட்டும் பார்ப்போம்.

    சங்க காலத்தில், “பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாயிருந்தனர். பல பெண் கவிஞர்களின் (புலவர்கள்) பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றனர். ‘கற்பை’ பெண்கள் தங்கள் உயிருக்கு மேலாக மதித்தனர். அரச குடும்பங்களில் மட்டும் சதி என்னும் உடன்கட்டை ஏறிய ஒரு சில நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன.”  (9 ம் வகுப்பு சமூக அறிவியல்) 

    உடன்கட்டை ஏறுதல் குறித்து சர்ச்சையை தனியே பார்ப்போம். இங்கு பெண்களின் நிலை மட்டும். அனைத்துப் பெண்களும் கல்வியறிவு பெற்றிருந்ததாக சொல்லமுடியுமா? சமூகத்தில் பலதார மணம் இருந்தபோது பெண்கள் மட்டும் ‘கற்பை’ உயிரினும் மேலாக மதித்து ஏன் உடன்கட்டை ஏறவேண்டும்? 

    முன் வேதகாலம் அல்லது ரிக் வேத காலத்தில் (கி.மு.1500 – கி.மு.1000) பெண்களின் நிலை குறித்து 6 –ம் வகுப்பு சமூக அறிவியல், “தொடக்கத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் கல்வி கற்றனர். அவர்கள் ஆன்மீகம் போன்றவற்றில் திறம்பெற்று விளங்கினர். விஸ்வவாரா, அபலா, கோசா, லோபமுத்ரா போன்ற பெண் கவிஞர்களும் இருந்தனர். ஒருதார மணம், பலதார மணம் ஆகியவை நடைமுறையில் இருந்தன.” என்று சொல்கிறது. 

   கல்வியை விட்டுவிடுவோம். இன்று கூட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டமிருந்தும் ஆகமுடிய இயலாத நிலை உள்ளது. பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று இங்கு சட்டம்கூட இயற்றமுடியாது. ஆன்மீகத்தில் சிறந்த பெண்கள் ஆலயப்பணிகளில், பூசைகளில் ஈடுபட்டதற்கான சான்று இருக்கிறதா?

     பின் வேத (கி.மு.1000 – கி.மு.600) காலத்திலும் கல்வியில் சிறந்து விளங்கிய கார்கி, மைத்ரேயி போன்ற பெண்கள் இருந்தனர். ஆனால் “பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. குழந்தைத் திருமணம் வழக்கில் இருந்தது. கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இருந்தது”. (அதே பாடநூல்)

    ராஜபுத்திரர்களின் (கி.பி.647 – கி.பி.1200) காலகட்டத்தில், “பெண்கள் கற்பினை உயிராக மதித்து வாழ்ந்தார்கள். பெண்கள் கல்வி கற்றவர்களாக இருந்தனர். அவர்கள் சமூகத்தில் மதிப்புடன் நடத்தப்பட்டார்கள். பெண்கள் பொதுவாழ்விலும் போர் செய்வதிலும் ஈடுபட்டார்கள். குழந்தைத் திருமணமும் பலதார மணமும் நடைமுறையில் இருந்தது. எதிரிகளிடம் சிறைப்பட்டு களங்கம் ஏற்படுவதைவிட இறப்பதை மேலாகக் கருதியதால் ஜவ்ஹர் முறையும் உடன்கட்டை ஏறுதலும் வழக்கிலிருந்தன.” (7 –ம் வகுப்பு சமூக அறிவியல்) என்று பெண்களின் நிலை குறிக்கப்படுகிறது. 

    விஜய நகரப் பேரரசில், “பெண்களின் நிலை மேம்பட்டிருந்தது. அரசியல், சமுதாயம், இலக்கியம் போன்றவற்றில் பங்கு கொண்டனர். பெண்களில் சிலர் கல்வியில் தேர்ச்சி பெற்று விளங்கினர்.” என்று சொல்லிவிட்டு, அடுத்த பத்தியில், “ குழந்தைத் திருமணமும், வரதட்சணை முறை, பலதார மணமும் உடன்கட்டை ஏறுதலும் நடைமுறையில் இருந்தன.” என்று எழுதுகிறார்கள். (அதே பாடநூல்)

   குழந்தைத் திருமணம், வரதட்சணை முறை, பலதார மணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற பல்வேறு பெண்களுக்கு எதிரான சமூக அநீதிகளைப் பட்டியலிட்டுவிட்டு, அக்காலச் சமூகத்தில் பெண்களின் நிலை சிறப்பாக இருந்தது என எப்படி இவர்களால் எழுதமுடிகிறது? கல்வியிலும் கற்பிலும் மட்டுமே பெண்களின் சிறப்பு அடங்கியிருக்கிறதா? 

    உடன்கட்டை ஏற்றும் கொடுமைகூட இவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அரசனுக்கு மனைவியாக அந்தப்புறத்தில் இருந்த நூற்றுக்கணக்கானப் பெண்கள் கொல்லப்பட்டதை எப்படி விதிவிலக்காகக் கொள்ளமுடியும்? 60,000 மனைவிகள் தீக்குளித்ததாக எழுதிய கம்பனின் காவியச்சுவையில் மயங்கிக் கிடக்கும் நாம் சமூகத்திடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்?

   நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மூன்றில் இரண்டு பங்கு (33%) இடஒதுக்கீட்டை இன்னும் பெண்களுக்கு வழங்க முடியாத நிலைதான் இங்குள்ளது. அக்காலத்தில் பெண்களின் நிலை உயர்வாக இருந்ததாகச் சொல்வது கற்பிதமன்றி வேறில்லை. 

  அரசதிகாரத்தில் இருந்த உயர்த்தப்பட்ட குடிகளைத் தவிர சமூகத்தில் அனைத்து தரப்பினரும் ஒடுக்குதலுக்கு ஆளான காலகட்டங்களை பெண்களுக்கான பொற்காலங்களாகக் கட்டமைப்பது வேடிக்கை. கல்வி வாய்ப்பு பெற்ற அதிகார வர்க்கத்தில் சில பெண்களுக்கு அளிக்கப்பட்ட கல்வி பெண் சமூகத்திற்கு பொதுவானதல்ல. அவ்வாறு கல்வியறிவு பெற்ற ஒரு சிலரும் ஆட்சியதிகாரத்தில் அமர்த்தப்பட்டதில்லை. 

   இம்மாதிரியான வரலாற்றெழுதியல் மிகவும் அபாயகரமானது. மேலும் இருக்கின்ற சமூக ஒழுங்குகளைத் தக்கவைக்க ஆதிக்கவாதிகள் செய்த, செய்யும் சதியாகவே இதை நாம் அணுகவேண்டும்.

   40. தமிழகத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லையா?                        
 

        ஏழாம் வகுப்பு சமூக அறிவியலில் பட்டியலிடப்படும் ராஜபுத்திரர்கள் (கி.பி.647 – கி.பி.1200) பற்றிய பாடத்தில், “எதிரிகளிடம் சிறைப்பட்டு களங்கம் ஏற்படுவதைவிட இறப்பதை மேலாகக் கருதியதால் ஜவ்ஹர் முறையும் உடன்கட்டை ஏறுதலும் வழக்கிலிருந்தன.”, என்று சொல்லி இவற்றிற்கு பாட இறுதியில் பின்வருமாறு விளக்கமளிக்கப்படுகிறது. 

“சதி அல்லது உடன்கட்டை ஏறுதல்: கைம்பெண்கள் கணவன் சிதையில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் முறை.”

“ஜவ்ஹர்: எதிரிகளிடம் சிறைபட்டு களங்கம் ஏற்படுவதைத் தவிர்க்க பெண்கள் குழுவாக தற்கொலை செய்துகொள்ளுதல்.”

    “கி.பி. 1307 அலாவுதீன் கில்ஜியால் தோற்கடிக்கப்பட்ட இராணா ரத்தன் சிங்கின் மனைவி ராணி பத்மினி ஜவ்ஹர் என்ற வழக்கத்தின்படி தீக்குளித்து இறந்தார்.” (அதே பாடநூல்)

  ‘வீரப்பெண்மணிகள் தற்காப்பு’ என்கிற தலைப்பில், “சிந்துவின் மன்னர் தாகீர் தோற்றதால், ரேவார் கோட்டைக்குள் இருந்த அவரது மனைவி இராணிபாய் மற்றும் அரண்மணைப் பெண்களும் தற்காப்புப் போரில் இறங்கினர். அது தோல்வியடையவே ஜவ்ஹர் என்ற வழக்கப்படி, எதிரியிடம் அகப்படாமல் இருக்க, தீயை மீட்டி அதில் குதித்து உயிர் துறந்தனர்.” (7 –ம் வகுப்பு சமூக அறிவியல், 2 –ம் பருவம், பக். 139)  

    சதி அல்லது உடன்கட்டையேறுதல் ராஜபுத்திரர்களிடம் இருந்த பழக்கம், தமிழகத்தில் இது இல்லை என்றும், மேலும் அரசர்கள் குடும்பங்களில் மட்டுமே இம்முறை கடைபிடிக்கப்பட்டு வந்ததாக ஒரு தவறான நம்பிக்கை இங்குள்ளது. இது எந்த அளவிற்குச் சரியானது? எ.கா. “அரச குடும்பங்களில் மட்டும் சதி என்னும் உடன்கட்டை ஏறிய ஒரு சில நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.” (9 –ம் வகுப்பு சமூக அறிவியல்.)

   ‘சதி’ என்ற பெயர் எப்படி ஏற்பட்டது? சதி என்பதற்கு மனைவி என்று பொருள்; பதி என்றால் கணவன். சதி செய்து மனைவியைக் கொல்லுதல் என்றுகூட சொல்லலாம் என்று தோன்றுகிறது. ‘உடன்கட்டை ஏறுதல்’ என்பதைவிட ‘உடன்கட்டை ஏற்றுதல்’ என்பதே சரியாக இருக்கமுடியும். பெண்கள் தாமாகவே முன்வந்து தற்கொலை செய்துகொண்டனர் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாது. அதற்கான நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டு அந்நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதே உண்மை. 

    விளிம்பு நிலை மக்கள்,   நாட்டார் வழக்காற்றியல்  போன்ற துறைகளில் ஆய்வு செய்துவரும்  ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் ‘அடித்தள மக்கள் வரலாறு’ நூலில் (பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு) ‘எரிமூழ்கு பெண்டிர்’ கட்டுரையில் நிறைய தரவுகளும் விளக்கங்களும் கிடைக்கின்றன.

  காஞ்சித் திணையில்  பாலை நிலை என்றொரு துறை உள்ளது. இறந்த கணவன் உடலுடன் அவன் மனைவி நெருப்பில் விழும்போது, அதனைத் தடுப்பவர்களை நோக்கிக் கூறுவது பாலை நிலை என்னும் துறையாகும். 

  சங்க காலத்தில் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்தபோது அவன் மனைவி கோப்பெருந்தேவி தீப்பாயத் துணிந்தாள். அதனைத் தடுத்தவர்களிடம் கைம்பெண் நோன்பு நோற்கும் பெண்களை இழிவுபடுத்திப் பேசுவதை புறநானூற்றுப் பாடல் 240 நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

  கணவன் இறந்தவுடன் துயர் தாங்காது உடனே இறப்பது, நெருப்பில் புகுந்து இறப்பது, கைம்பெண் நோன்பு நோற்பது என மூன்று வகைப் பத்தினிப் பெண்களை சங்ககாலத்திற்குப் பிந்தைய நூலான மணிமேகலை தெரிவிக்கிறது. 

  மணிமேகலையில் வரும் ஆதிரையின் கணவன் சாதுவன் கடலில் மூழ்கி மாண்ட சேதி கேட்டு, ஆதிரை ஊராரை அழைத்து சுடுகாட்டில் நெருப்பை வளர்த்து தீப்பாய முயன்றதாகக் குறிப்பிடப்படுகிறது.

   வால்மீகி ராமாயணத்தில் உடன்கட்டை நிகழ்வு குறிப்பிடப்படவில்லை என்றபோதிலும், கம்பர் தனது ராமாயணத்தில் தசரதன் இறந்தபோது கோசலை, கைகேயி, சுமத்திரை தவிர 60,000 மனைவிகள் தீக்குளிக்க வைத்துள்ளார்.

  வால்மீகியின் காப்பியத்தில் கூறப்படாத செய்தி கம்பரில் சொல்லப்படக் காரணம், கம்பர் வாழ்ந்த தமிழகத்தில் உடன்கட்டை ஏறும் நிகழ்வு மதிப்பிற்குறிய ஒன்றாக இருந்திருக்கிறது என்றும், வால்மீகி காலத்தில் கற்பு பற்றிய இத்தகைய போலிக்கருத்துகள் தோன்றவில்லையாதலால் அவரது காப்பியத்தில் இடம்பெறவில்லை எனவும் ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். 

  முதலாம் ராஜராஜனின் தந்தை சுந்தரசோழன் கி.பி.969 –ல் இறந்தபோது அவன் மனைவிகளில் ஒருத்தி வானவன் மாதேவி தாய்ப்பால் உண்ணும் குழந்தையைப் பிரிந்து உடன்கட்டை ஏறிய நிகழ்வை திருக்கோவிலூர் கல்வெட்டும் திருவாலங்காட்டுச் செப்பேடும் தெரிவிக்கின்றன. 

  பாண்டியர், நாயக்கர் காலத்திலும் உடன்கட்டை ஏறும் நிகழ்வு இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. இப்பெண்கள் சமூகத்தால் புகழப்படுதலை மார்க்கோபோலோ குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1659 இல் திருமலை நாயக்கர் இறந்தபோது அவனது 200 மனைவிகள் உடன்கட்டை ஏறியதும், கி.பி.1710 இல் ராமநாதபுரம் கிழவன் சேதுபதி மரணமுற்றபோது அவனது 47 மனைவிகள் உடன்கட்டை ஏறியதும் யேசு சபைப் பாதிரியார்கள் மூலம் தெரியவருகிறது. 

  தஞ்சை மாராத்தியர்களிடம் இந்தப் பழக்கம் இருந்தது. அவர்கள் இதை ‘சதி’ அல்லது ‘சககமனம்’ என்று அழைக்கின்றனர். முதலாம் சரபோஜி, பிரதாப சிங், அமரசிங் ஆகியோரின் சில மனைவிகள் உடன்கட்டை ஏறிய குறிப்புகள் உள்ளன. 

  கி.பி.1794 தஞ்சை மாவட்டம் புதுப்பேட்டை கிராமம் கோமுட்டி குலத்தைச் சேர்ந்த ஒருவனது 30 வயது நிரம்பிய மனைவியொருத்தி உடன்கட்டை ஏறிய நிகழ்வை அவள் மயங்கிய நிலையில் அந்தணர்கள் நடத்தி வைத்ததை அறிய முடிகிறது. 

   உடன்கட்டை ஏறிய பெண்ணிற்கு நடுகல், கோயில் கட்டி வழிபடும் நிலை இருந்துள்ளது. தீப்பாஞ்ச அம்மன், தீப்பாஞ்சான் கோவில், தீப்பாஞ்ச மலை என்று இவை அழைக்கப்படுகின்றன. கொங்கு நாட்டில் தலித் பகுதிகளில் உள்ள வீரமாத்தி கோவில்களும்   இவற்றுள் அடக்கம். 

  கி.பி. 1829 இல் வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டை ஏறுதல் தடைச் சட்டம் கொண்டுவந்து, அச்சட்டம் 1830 இல் தமிழகப்பகுதிகளில் அமலாகும் வரையில் உடன்கட்டை ஏற்றப்படும் நிகழ்வு அரச குடும்பங்களில் மட்டுமல்லாது அனைத்து தரப்பிலும் நிகழ்த்தப்பட்டது.  ஒப்பீட்டளவில் வட இந்தியாவை போல் அதிகம் இல்லை என்றாலும் முற்றிலும் இல்லை என்பதோ, அரச குடும்ப விவகாரம் என்பதோ உண்மையல்ல. இதில் ஈடுபட்டப் பெண்களில் விருப்பம் என்பது விதவைகளுக்கு அக்காலத்தில் இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளிலிருந்து தப்பிக்க எடுத்த தற்கொலை முடிவு என்பதைத் தவிர வேறில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக