ஆசிரியர்கள்
மற்றும் இயக்கங்களின் சமூகப்பொறுப்பு
- மு.சிவகுருநாதன்
(அக்டோபர்
08, 2015 வியாழன் அன்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு
(JACTTO) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யவிருக்கிறது.
அனைவருக்கும் போராட்ட வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
நான் பலமுறை ஆசிரியர் போராட்டங்கள் குறித்து
எழுதி கடும் வசவுகளை எதிர்கொண்டுள்ளேன். என்ன செய்வது? மீண்டும் சிலவற்றை பேசித்தான்
ஆகவேண்டும். திட்டுவோர் இன்னும் நன்றாக திட்டட்டும்.)
அரசுகள், கொள்கைகள், நடைமுறைகள் தேசிய அளவிலும் உலக அளவிலும் பெருத்த மாற்றத்தை
எதிர்கொண்டுள்ளன. ஆனால் நமது போராட்ட வடிவங்கள், கோரிக்கைகள், வழிமுறைகளில் எவ்வித
மாற்றமும் இருப்பதில்லை. இங்கு நாமறிந்த வகையில் வங்கிகள் வேலை நிறுத்தத்தின்போது மட்டும்
வாசலில் பூட்டுகள் நம்மை வரவேற்கும்.
பிற போராட்டங்கள் கால்பங்கு ‘இளிச்சவாய்’ ஊழியர்களால்
நடத்தப்படுவது. இவர்கள் நடத்தும் வேலைநிறுத்தங்களின் போது ‘பணியின்றேல் ஊதியமில்லை’
(‘No Work, No Pay’) என்கிற அடிப்படையில் ஒருநாள்
ஊதியத்தை இழப்பார்கள். பள்ளிகளைப் பூட்டமுடியாது. அப்படியே பூட்டினாலும் சுவர் ஏறிக்குதித்து
கல்விப்பணியாற்றும் (?!) பல புத்திசாலி ஆசிரியர்கள்
இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் பங்கேற்கும் இத்தகைய போராட்ட வடிவங்கள் மாறவேண்டும்.
இதைப்பற்றிய மறுபரிசீலனை அவசியம்.
“ஒருநாள்தானே லீவு எழுதிக்கொடுங்கள்,
முழுச்சம்பளம் போட்டுவிடலாம்”, என்று கேட்கும் தலைமையாசிரியர்கள் இருந்தார்கள், இன்னும்
இருக்கிறார்கள். ‘பிழைக்கத் தெரியாத இளிச்சவாய்’ ஆசிரியர்களில் ஒருவனாய் நானும் இருக்கப்போவது
வேறு கதை. இருப்பினும் கோரிக்கைகளைப் பார்க்கும்போது நமக்கு தோன்றியவற்றை இங்கு குறிப்பிடாமல்
இருக்க முடியவில்லை.
15 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த
வேலைநிறுத்தம் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. 10 கோரிக்கைகளை விட்டுவிடுவோம். இவற்றைப்
பற்றி இயக்கத் தலைவர்கள் விண்டுரைப்பர். நான் இங்கு 5 கோரிக்கைகளை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.
கோரிக்கை
எண்: 07
அண்மையில் நடந்த சில நிகழ்வுகளின்
அடைப்படையில் ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு இல்லை. மருத்துவப்பணி சார்ந்த பாதுகாப்புச்
சட்டத்தைப் போன்று ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
இந்தப் போராட்டங்களுக்கு முற்றிலும்
வெகுமக்கள் ஆதரவில்லை என்பதை நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். ஊதியப் பாதுகாப்பை
வேண்டுமானால் அரசிடம் கோரலாமே தவிர உண்மையான பணிப்பாதுகாப்பை நமக்கு பொதுமக்கள்தான்
தரவேண்டும். கல்வி, மாணவர்கள், சமூகம் குறித்த எவ்விதக் கோரிக்கைகளும் இல்லாமல் ஆசிரியர்கள்
பாதுகாப்புச் சட்டம் இயற்றச் சொல்வது அபத்தத்தின் உச்சம். ஏதோ ஓர் வகையில் சமூக விலக்கம்
செய்யப்பட்டுள்ள ஆசிரியர் இனத்திற்கு அரசு சட்டமோ, காவல்துறையோ பாதுகாப்பு வழங்கிட
இயலாது.
இன்று மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு
பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பினும் கல்வி தொடர்பானவற்றிலும் அவ்வாறு இருக்கக்
கூடாது. நாம் தொடர்புடைய கல்வியில் தனியார்
மயம், வணிக மயம், கல்விக்கொள்ளைகள், இவற்றிற்கு ஆதரவான மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள்
போன்றவற்றை இந்த சமூகத்துடன் இணைந்து போராட வேண்டிய தேவை ஆசிரியர் சமுதாயத்திற்கு நிரம்ப
உண்டு.
சிற்சில நிகழ்வுகளின் காரணமாக சமூகத்தோடு
உள்ள தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொள்ள நினைப்பது அறிவீனம். இந்நிகழ்வுகளுக்குக்கூட
வணிகக்கல்வி, அரசின் கொள்கைகள், கல்வி பற்றிய புரிதலின்மை போன்றவற்றால் ஏற்படுபவை.
இவற்றைச் சரிசெய்ய ஆசிரியர் இயக்கங்கள் சிறுதுரும்பையாவது அசைத்தால் தேவலாம். எனவே
ஆசிரியர்கள் கல்விக்காகவும் ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் போராட முன்வரும்போது அவர்களுக்கு
யாரும் பாதுகாப்பு அளிக்கத் தேவையில்லை.
கோரிக்கை எண்கள்: 5, 14
தமிழ் மொழிப்பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை
எண்: 266 ஐ திருத்தம் செய்து தமிழ்ப் பாடத்தை முதல் பாடமாக்குதல் (5), தொடக்கப்பள்ளி
முதல் மேனிலைக்கல்வி முடிய தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப்படுத்துதல் (14) ஆகிய இரண்டைப்
படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது
குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க,
தமிழாசிரியர்கள் உள்ளிட்ட எவரும் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் படிப்பதில்லை.
90 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்களின் நிலை இதுதான் என்றபோதும் பிறகேன் இந்த கபட நாடகம்?
எங்கள் குழந்தைகளுக்கு தனியார் சுயநிதிப்
பள்ளிகளில், ஆங்கில வழியில் தரமான கல்வியைத் தருவோம். (இந்தத் தரம் கேள்விக்குரியது.)
எவ்வித வாய்ப்பு, வசதிகளுமற்ற அடித்தட்டு மக்களின் குழந்தைகளை மட்டும் தமிழில் படிக்க
வலியுறுத்துவதன் சூட்சுமம்தான் இங்கு நமக்கு விளங்கவில்லை.
கொஞ்சம் விவரமறிந்த பொதுமக்கள் இந்த
நாடகங்களை நம்பத் தயாரில்லை. கல்வியின் தரம் ஆங்கில வழியிலோ, 9, 11 ஆகிய வகுப்புப்
பாடங்களை முற்றிலும் கற்காமல் 10, 12 வகுப்புப் பாடங்களை மட்டும் நான்கு ஆண்டுகள் படிப்பதில்
இல்லை என்பது முதலில் ஆசிரிய சமூகத்திற்கு யாரவது விளக்கினால் நல்லது.
ஜெ.ஜெயலலிதா, மு.கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளுக்கு
தமிழ்மொழி வாக்குகளை அள்ளித்தரும் அமுதசுரபி. ஆகவே அரசியல்வாதிகள் இங்கு மொழி தொடர்பான
சொல்லாடல்களை தேர்தல் காலங்களில் நிறைய உற்பத்தி செய்வார்கள். இங்கு தமிழ் தேர்தல்
முழக்கமாக மாறும், டாஸ்மாக் போல. ஆசிரிய இயக்கங்களுக்கு இத்தகைய தேர்தல் சொல்லாடல்
தேவைதானா என்பதைத் தோழர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
கோரிக்கை எண்: 13
மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை
மூடக்கூடாது. வேறு என்னதான் செய்வது? ஒற்றை இலக்க எண்ணிக்கையில் செயல்படும் தொடக்கப்பள்ளியை
மிக அருகிலுள்ள பள்ளியுடன் இணைப்பதைத் தவிர வேறு வழியில்லை. மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க
மழலையர் வகுப்புகளை அனைத்துத் தொடக்கப்பள்ளியிலும் தொடங்குதல் போன்ற மாற்று வழிகளை
யோசிக்கலாம். ஆனால் மாற்று வழிகளைக் கோரமால், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க எதுவும்
செய்யாமல், மாணவர்கள் இல்லாமல் பள்ளை நடத்த முயல்வது அநியாயமல்லவா?
இத்தகைய வழிகளில் ஒன்றாகவே அரசுப்பள்ளிகளில்
ஆங்கில வகுப்புகள் தொடங்கப்பட்டதை நாம் பார்க்கவேண்டும். இங்கு மொழிவெறி பம்மாத்துகள்
ஒன்றும் எடுபடாது. மொழி பற்றி பேச்சில் ஒன்றாகவும் செயலில் வேறாகவும் இரண்டக நிலையை
கடைபிடிக்கும் நிலையை அரசியல்வாதிகளைப்போல நாம் மாற்றிக் கொள்ளப்போவதில்லை.
வெற்று முழக்கங்களையும் அதீத கனவுலக
சஞ்சாரத்தையும் விட்டுவிட்டு நடைமுறை வாழ்வுக்குத்
திரும்புவது பற்றி ஆசிரியர்கள் கொஞ்சம் யோசிப்பது நல்லது. ஆசிரியர் வீட்டுக் குழந்தைகள் எல்லாம் ஆங்கில வழியில்
படிக்க பொதுமக்கள் மட்டும் தமிழ் வழியில் எப்படி சேர்ப்பார்கள்? மாணவர்களே இல்லாமல்
பள்ளி நடத்துவோம் என்று சொல்லலாமா?
இந்தியாவில் திட்டங்கள் உள்ளூர் அளவில்
திட்டமிடவேண்டும் என மகாத்மா கனவு கண்டார். ஆனால் இன்று மாநில அளவில் கூட இல்லாமல்
தேசிய அளவில் கொண்டுவரப்படும் திட்டங்களால் இம்மாதிரியான குளறுபடிகள் பெருமளவு அரங்கேறுகிறது.
SSA, RMSA போன்ற கல்வித்திட்டங்களின்படி மத்திய அரசிலிருந்து நிதி வருகிறது என்ற ஒரே
காரணத்திற்காக அருகருகே பள்ளிகளைத் தொடங்கியது முதல்குற்றம். இவற்றை ஆசிரியர்கள், இயக்கங்கள்
கண்டுகொள்ளவில்லை.
NCTE –ன் செயல்பாடுகள் இன்னும் மோசம்.
பல மாநிலங்களில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்குதல் என்கிற பெயரில் தேவையில்லாத
தமிழ்நாட்டிற்கு நூற்றுக்கணக்கான பி.எட். மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்க
அனுமதியளித்தது. இதன் மூலம் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்ததுதான் மிச்சம்; கூடவே
கல்வி வியாபாரிகள் கொளுத்து போனதும்.
வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு
இங்கு கல்விக் கொள்ளையர்கள் அதிகரித்தனர். அரசியல்வாதிகள் அனைவரும் பள்ளிகள், கல்லூரிகள்
தொடங்கி கல்விக்கொள்ளையில் பங்குபெற்றனர். அரசு டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்யத்
தொடங்கியதும் தமிழகத்தில் அரசியல்வாதிகளில் மது தொழிற்சாலைகள் அதிகரித்தது போலவே இதுவும்
நடந்தது.
இப்போது மத்திய அரசின் கல்வித்திட்டங்களுக்கு
நிதி குறைக்கப்படுகிறது. மாணவர்கள் எண்ணிக்கையும் இல்லை. எனவே மூடுவது அல்லது அருகேயுள்ள
பள்ளியுடன் இணைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த நிதியை கல்வி மேம்பாட்டிற்கு பயன்படுத்தியிருக்கலாம்.
இங்கு திட்டங்கள் மேலிருந்துதான் திணிக்கப்படும். எதில் கமிஷன் கிடைக்குமோ அத்திட்டமே
செயல்பாட்டுக்கு வரும் என்பதே எழுதாத விதி. பள்ளிகள் மூடுவதற்குக் காரணமான அரசின் கொள்கைகள்,
செயல்பாடுகள், வணிகமாகும் கல்வி குறித்துக் கேள்வி எழுப்பினால் பள்ளி மூடுவதற்கும்
விடை கிடைக்கும்.
தமிழகம் முழுதும் தொடக்கப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள்
தொடங்க தடையாக இருப்பது எது? இதை ஏன் ஆசிரிய இயக்கங்கள் ஏன் வலியுறுத்தக்கூடாது? இவர்கள்
வாய்மூடி மெளனியாக இருப்பது ஏன்?
இன்று கல்வி வணிகமயமானதில் ஆசிரியர்கள்,
கல்வித்துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பெரும்பங்கு உள்ளது. நாமக்கல்,
திருச்செங்கோடு, ராசிபுரம் ‘கோழிப்பண்ணைப் பள்ளிகள்’ உருவாகக் காரணமாக இருந்தவர்கள்
முன்னாள், இந்நாள் அரசுப்பள்ளி ஆசிரியர்களே. இப்போது இந்த ‘கோழிப் பண்ணைகளை’ தமிழகமெங்கும்
விரிவாக்கியிருப்பவர்களும், இங்கு லட்சக்கணக்கில் பணம் கொட்டிப் படிக்க வைப்பவர்களும்
அவர்களே. பிறகு எப்படி இவர்களால் கல்வி வணிகமயமாவது குறித்துப் போராட முடியும் அல்லது
கேள்வி எழுப்பமுடியும்?
கோரிக்கை எண்: 12
ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்க வேண்டும்
என்ற கோரிக்கை ஒன்றும் புரட்சிகரமானது என்றெல்லாம் சொல்லமுடியாது. இவை ஒன்றும் தேர்வுகள் பற்றிய நவீன
புரிதல்களின் அடிப்படையில் உருவானதல்ல. அப்படி என்றால் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து
செய்ய குரலெழுப்பியிருக்கவேண்டும். இல்லையே!
ஒன்று முதல் ஒன்பது முடிய உள்ள வகுப்புகளுக்கு
முப்பருவத்தேர்வு முறை அமல் செய்யப்பட்டது கல்வியில் ஓர் பெரிய மாற்றம். இதை ஏன் பத்தாம்
வகுப்பிற்கு அமல்படுத்தவில்லை? இதற்காக ஆசிரியர்கள், இயக்கங்கள் ஏன் கோரிக்கை வைக்கவில்லை?
பொதுத்தேர்வை இவர்கள் ரத்து செய்ய விரும்பவில்லை என்றுதானே பொருள். பிறகு ஏன் ஆசிரியர்களுக்குத்
தேர்வு வைப்பதை எதிர்க்கவேண்டும்?
பத்தாம் வகுப்பிற்கு பருவமுறை அமல்படுத்தாதைப்
போலவே மேனிலை முதல் மற்றும் இரண்டாமாண்டு ஒருங்கிணைந்த பாடத்தை ஓராண்டுக்கு மட்டும்
பொதுத்தேர்வு நடத்தி 1200 மதிப்பெண்ணுக்கான மோசடி மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்து
யாராவது கவலைப்பட்டதுண்டா? முதல் மற்றும் இரண்டாமாண்டுகளுக்குத் தனித்தனியே கல்லூரிபோல
இரு பருவத்தேர்வுகள் நடத்தி ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கவேண்டும் என ஏன்
இவர்களால் கேட்க முடியவில்லை? இதை ஆந்திர மாநிலம் செய்வதால் தேசிய அளவிலான தேர்வுகளில்
சாதிக்கிறது.
இங்கோ அண்ணா பல்கலைக்கழகம் மேனிலை
முதலாண்டுப் பாடங்களை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்கிறது. அப்புறம் எதற்கு மேனிலை
முதலாமாண்டு வகுப்பு? அந்த வகுப்புக்கே ஓராண்டு விடுமுறை விட்டால் அரசுக்கு செலவு மிச்சமாகுமே!
பத்தாம் வகுப்பிறகுப் பிறகு மாணவர்களுக்கு ஓராண்டு விடுப்பு அளித்து நேரடியாக மேனிலை
இரண்டாம் ஆண்டில் சேர்த்துக்கொண்டுவிடலாம்.
9,11ஆகிய வகுப்புகளில் அந்தந்த வகுப்புக்குரிய பாடங்களைக்
கற்பிக்காமல் 10. 12 பாடங்களைக் கற்பிக்கும் உத்தியை கண்டுபிடித்தவர்கள் ‘கோழிப்பண்ணைப்
பள்ளிக்’ கல்விக்கொள்ளையர்கள். இது அரசு, அதிகாரிகள் அனைவருக்கும் தெரிந்தே நடக்கும்
மோசடி. இதற்கு ஆசிரியர்களும் உடந்தை. தங்களது பிள்ளைகள் குறுக்குவழியில் மருத்துவம்
மற்றும் பொறியியல் இடங்களைப் பெறுவதற்கு இம்மோசடி உதவியாக இருக்கிறதல்லவா?
10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பருவமுறைத்
தேர்வு அமல் செய்யப்பட்டால் தங்களது பகற்கொள்ளை பறிபோகும் என்பதால் இவர்கள் அதிகார
வர்க்க ‘லாபி’யின் உதவியால் இத்தகைய முயற்சிகளைத் தடுத்துவருகிறார்கள். முதுகலைப் பட்டதாரி
ஆசிரியர் சங்கத்தினர் 11, 12 வகுப்புகளுக்கு இரு பருவமுறையை வலியுறுத்தித் தீர்மானம்
போட்டனர். அந்தக் கோரிக்கையை பொதுவில் வைப்பதில் என்ன சிக்கல்?
இந்த வியாதி தற்போது அரசுப்பள்ளிகளையும்
தொற்றத் தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் கொடுக்கும்
அழுத்தங்கள் காரணமாக 9, 11 வகுப்புக்களைக் கவனிக்காமல், பாடம் நடத்தாமல் 10, 12 ஐ மட்டும்
கவனிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. ஆசிரியர்களும் “35 மதிப்பெண்ணுக்கு வழி சொல்லுங்க”,
என்று தெருவில் போவோர், வருவோரைப் பிடித்துக் கேட்காததுதான் பாக்கி.
மாணவர்களின் தேர்வை ஒழிக்க விரும்பாதவர்கள்
தங்களுக்கான தேர்வை ரத்து செய்யச் சொல்லும் தார்மீக உரிமையை இழக்கின்றனர். தகுதித்தேர்வைமட்டும்
ஒழித்தால் போதுமா? முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியப் (TRB)
போட்டித்தேர்வை என்ன செய்வது?
தேர்வுகளை ஒழிக்கவேண்டும் என்றால்
பாரபட்சமின்றி அனைத்தையும் ஒழிக்கத்தான் வேண்டும். பொதுத்தேர்வுகள் ஒழிப்பிலிருந்து
கல்விச் சீர்திருத்தம் தொடங்கினால் நல்லதுதானே.
மாறிவரும் இன்றைய சூழலில் எந்தப்
பணிக்கும் தகுதிதேர்வு என்பது ஓர் நடைமுறையாகவே மாறிவிட்டது. தனியார்மயத்தை விரும்பி
வரவேற்றும் பலர் நம்மில் இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் பணித்திறன்களைக் கணக்கிட்டு
ஊதிய உயர்வு, பணிநீக்கம் போன்றவற்றை மேற்கொள்வதைப் போன்ற நிலை அரசுத்துறைகளிலும் வந்தாலும்
வியப்படைய ஒன்றுமில்லை.
இங்கு தேர்வு என்பது ஓர் சாபக்கேடு.
மனப்படத்திறனை மட்டும் சோதித்தறிவது, நமது தேர்வுமுறையின் மாபெரும் தோல்வி. நமது கல்வி
முறையிலும் தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வர குரல் எழுப்பவேண்டிய கடமையும் பொறுப்பும்
ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களுக்கு உண்டு. ஆனால் கல்வியில் எவ்வித மாற்றத்தையும் விரும்பாத,
மிகவும் பிற்போக்கான குருகுலக் கல்வி மதிப்பீட்டுடன் பெரும்பாலும் செயல்படும் ஆசிரியர்கள் கல்வியில்
மாற்றங்கள் கொண்டுவர போராடுவார்கள் என்று எதிர்பார்ப்பதைத் தவிர வேறு மூடநம்பிக்கை
இருக்கமுடியாது என்றே கருதவேண்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக