வியாழன், அக்டோபர் 22, 2015

04. ஆளும் வர்க்கம் புறக்கணித்த அறிஞர்கள் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)04. ஆளும் வர்க்கம் புறக்கணித்த அறிஞர்கள் 
       (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

           - மு.சிவகுருநாதன்
     (‘Books for Children’ வெளியிட்டுள்ள. ‘ஆயிஷா’ இரா.நடராசன் எழுதிய ‘இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்’ என்னும் குறுநூல் அறிமுகம்) 

    அண்மையில் சில தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் அஞ்சல்தலைகள் திரும்பப் பெறப்பட்டன. அதில் அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமன் அஞ்சல் தலையும் அடக்கம். ராமன் விளைவைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற சாதனையாளர் மீது இந்துத்துவாதிகளுக்கு அவ்வளவு வெறுப்பு. இவர் பல்வேறு எதிர்ப்புகள் வந்தபோதும் உண்மைகளின் பக்கம் நின்று மூடநம்பிக்கைகளை எதிர்த்ததே இதற்குக் காரணம். 

   இந்தியாவிற்கு அணு விஞ்ஞானிகள், ஏவுகணை விஞ்ஞானிகள் மட்டுமே தேவையானவர்கள். இவையிரண்டும் போர் ஆயுதங்கள் சார்ந்தவை. வல்லரசுக் கனவின் உச்சபட்ச வெறிக்கும் இவை மட்டுமே போதுமானதாக இருக்கிறது. 

  48 பக்கங்கள் நிரம்பிய இக்குறுநூல் 11 சிறு கட்டுரைகள் மூலம் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்ட அறிஞர்கள் பலரை அறிமுகம் செய்கிறது. இப்புறக்கணிப்பிற்குப் பின்னால் ஆளும் வர்க்க அரசியல் உள்ளது. புறக்கணிக்கப்பட்ட இவர்களின் சாதனைகள் வெளிநாட்டினரால் நினைவு கூரப்படும் நிலையில் நமது பாடநூல்கள் கள்ள மவுனம் காப்பது இவற்றை நிருபிக்கிறது. 

  அணுசக்தி, ஏவுகணை, விண்வெளி தொழிநுட்பங்களில் கூட ஆளும் அதிகார வர்க்கம் பாரபட்சமாக நடப்பதை இந்நூல் பதிவு செய்கிறது. அதிவேக நியூக்ளியர் ரியாக்டர் உருவாக்கத்தில் உலக அளவிலான தொழிநுட்பம் வழங்கிய சிவராம் போஜ், கனநீரை அணு உலைகளில்ப் பயன்படுத்தி மின்னாற்றல் பெறலாம் என்று கண்ட ரத்தன் குமார் சின்ஹா போன்றோர் கண்டுகொள்ளப்படாதோர் பட்டியலில் உள்ளனர். 

  நமது விண்வெளித்துறை வளர்ச்சியில் பங்காற்றிய ஏ.இ. முத்து நாயகம், ஹெச்.சி.எஸ்.மூர்த்தி, ஆராவமுதன், பவசார், குமாரசாமி, கர்த்தா என்று அதிகாரவர்க்கம் புறந்தள்ளிய பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. 

  இவர்களது உழைப்பிற்குத் தகுந்த அங்கீகாரம், பரிசுகள், விருதுகள் எதுவும் வழங்காத நிலை ஒருபுறமிருக்க, நமது பாடநூற்கள் இவர்களைக் கண்டுகொள்ள மறுப்பது ஏன்? கல்வித்துறையும் ஆளும் அதிகார வர்க்கத்தின் அங்கமாகவும் ஊதுகுழலாகவும் தானே  செயல்படுகின்றன?

  ஜெகதீஷ் சந்திரபோஸ், சுப்பிரமணிய சந்திரசேகர், மேகநாத் சாஹா, மதன்லால் குரானா, ஒய்.சுப்பாராவ் (‘தி இந்து’ கட்டுரை) போன்ற ஒரு சிலரைப் பற்றி ஏதேனும் ஓர் இதழ்களில் சில கட்டுரைகளாவது காணக் கிடைக்கிறது. 

   ஐந்தாம் வகுப்பைப் பூர்த்தி செய்யாத ஜி.துரைசாமி நாயுடுவின் கண்டுபிடிப்புக்கள் (ஜி.டி.நாயுடு) புறக்கணிக்கப்பட்டதால் நாடு இழந்தது ஏராளம். இதனால் பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகள் அடைந்த பலனுக்கும் லாபத்திற்கும் அளவில்லை. 

  குவாண்டம் இயற்பியலில் பல சாதனைகள் செய்த ஈ.சி.ஜி.சுதர்ஷன், மெக்சிகோ சோள உற்பத்தி முதலிடத்திற்குக் காரணமாக இருந்து, பின்னாளில் நாகபூரில் ஆரஞ்சு தோட்டங்களை உருவாக்கிய இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் பாண்டுரங்க சதாசிவ கங்கோஜி, போஸான்கள் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்த சத்யேந்திரநாத் போஸ் (ஜெகதீஷ் சந்திரபோஸின் மாணவர், மேகநாத் சாஹாவின் வகுப்புத்தோழர்.), மலிவான புதிய முறையில் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கிய டாக்டர் சுபாஷ் முகர்ஜி, சுவிட்சர்லாந்தில் மாசுக்கட்டுப்பாட்டை அளவிட புதிய முறை ஒன்றைக் கண்டறிந்த (Janaki Method Carbon Earthing) ஜானகி அம்மா, உணவுத்தரம் குறித்த கண்டுபிடிப்புகள், போராட்டங்கள் செய்த கமலா சொஹோனி என அறிவியல் அறிஞர்கள் பலரை இந்நூல் மிகச் சுருக்கமாக அறிமுகம் செய்கிறது. 

  இந்நூலில் 11 சிறிய கட்டுரைகள் உள்ளன. இறுதியாக 100 கண்டுபிடிப்புக்களின் பட்டியல் இருக்கிறது. இதிலுள்ள ஒவ்வொரு அறிவியல் அறிஞர்களது ஆய்வுகள் மற்றும் வாழக்கை வரலாற்றை நூலாகத் தொகுத்து வெளியிடவேண்டியது மிகவும் அவசரத் தேவையாகும். எதிலும் போலிகள் நிறைந்த சூழலில் ஆளும் வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்ட அறிவுஜீவிகளையும் புறக்கணிப்பின் காரணத்தையும் உலகமறியச் செய்யவேண்டும்.

இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்
- ஆயிஷா இரா.நடராசன்

வெளியீடு: Books for Children செப். 2014. விலை  ரூ. 30
விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம், 7 இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக