வெள்ளி, ஜனவரி 08, 2016

29. இந்துத்துவம் கட்டமைக்கும் வரலாற்றை எதிர்கொள்ளல்



29.  இந்துத்துவம் கட்டமைக்கும் வரலாற்றை எதிர்கொள்ளல்


(இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)


மு.சிவகுருநாதன்

நூலட்டைப்படம்



     (மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட கோவிந்த் பன்சாரே  எழுதிய ‘மாவீரன் சிவாஜி – காவித் தலைவனல்ல, காவியத் தலைவன்’  என்ற நூலின் தமிழாக்கத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்த்தவர் செ.நடேசன். இந்நூல் குறித்த  அறிமுகப் பதிவு இது.) 


    மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மராத்தி எழுத்தாளரும் சிந்தனையாளருமான கோவிந்த் பன்சாரே  ‘சிவாஜி கோன் ஹோடா’ (யார் அந்த சிவாஜி? - 1988) என்னும் மராத்தி நூலின் ஆங்கில வழி மொழிபெயர்ப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் செ.நடேசன் அவர்களால் செய்யப்பட்டுள்ளது. அரசுப்பள்ளித் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இவர் திருப்பூர் மாவட்ட தமுஎகச துணைத்தலைவராகவும் ‘இடது’ ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார். 

   மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த பன்சாரே, வீடு வீடாக பத்தரிக்கை போடும் இளைஞனாக வாழ்வைத் தொடங்கி நகராட்சி அலுவலக உதவியாளர், பள்ளி ஆசிரியர், சிவாஜி பல்கலைக் கழக இணைப்பேராசிரியர், வழக்கறிஞர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில முன்னாள் செயலாளர்,  போராளி, கோவா சுதந்திரப் போராட்ட வீரர் என பல்வேறு களங்களில் செயலாற்றிய இவர் 2015 பிப்ரவரி 16 இல் இந்துத்துவ வெறியர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

    மதவாத அரசியல், மூடநம்பிக்கைகள், போலிச்சாமியார்கள், ஜாட் சமூக கட்டப் பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு எதிராக ‘அந்தஸ்ரதா நிர்மூலன் சமிதி’ என்ற அமைப்பின் மூலம் வலதுசாரி அரசியலுக்கு  சிம்ம சொப்பனமாக விளங்கிய நரேந்திர தபோல்கர் படுகொலையில் தொடங்கி கோவிந்த் பன்சாரே, பேரா.கல்புர்கி (கர்நாடகா) என நீளும் இந்துத்துவாவின் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப் (!?) படவில்லை. 

கோவிந்த் பன்சாரே


   பன்சாரே மதவாத அரசியலிருந்து சிவாஜியை மீட்டெடுத்தார். தனது 75 வது பிறந்த நாளை கொண்டாட கட்சித் தோழர்கள் விரும்பிய நிலையில் அதை ஏற்க மறுத்து தனக்கு அளிக்கப்பட்ட  சிறுசிறு நிதியின் மூலம் 150 மராத்திய சமூகப் போராளிகள் குறைத்த குறுநூல்களை வெளியிடக் காரணமானார். மகாத்மா ஜோதி ராவ் பூலே, அம்பேத்கர், ஷாகு மகராஜ் ஆகியோர் பணிகள் குறித்த நூறு வகுப்புகள் நடத்த களமிறங்கினார். ‘ஷ்ரமிக் பிரதிஸ்தான்’ என்னும் பன்மைக் கலாச்சார  அமைப்பை உருவாக்கினார். இவற்றை எதிர்கொள்ள இயலாத இந்துத்துவா இவரை படுகொலை செய்யத் துணிந்தது.

    இந்திய வரலாற்றில் வேறெந்த மன்னரும் இவ்வாறாக சித்தரிக்கப் பட்டதில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம். சிவாஜி முஸ்லீம்களுக்கு எதிரானவர், முஸ்லீக் மதத்தை எதிர்ப்பதுதான் அவரது வாழ்க்கையின் நோக்கம், அவர் ஒரு இந்துப் பேரரசர் (ஹிந்து பத்பாட்ஷா), இந்து மதத்தின் பாதுகாவலர், பசுக்கள் மற்றும் பிராமணர்களின் பாதுகாவலர் (கோ – பிராமின் ப்ரதி பாலகா), சிவனின் அவதாரம், விஷ்ணுவின் அவதாரம், இந்து மதத்தைக் காக்க கடவுள் எடுத்த அவதாரம், இந்து மதத்தைக் காப்பற்ற அன்னை பவானி வாளை அளித்தாள் என்று கற்பிதங்கள் நீள்கின்றன. ஆனால் உண்மை வரலாறு என்ன? இந்துத்துவம் கட்டமைக்கும் வரலாற்றிற்கு எதிராகவே உண்மை நிலை உள்ளது. 

     இந்து மதம் சிவாஜியை எப்படி நடத்தியது என்பது நாடறிந்தது தானே! சத்திரியக் குலத்தில் பிறக்கவில்லை, சூத்திரனுக்கு முடிசூட மராட்டிய பிராமணர்கள் அனைவரும் மறுத்துவிட, காசியிலிருந்து காகபட்டர் வரவழைக்கப்பட்டு முடிசூடுகிறார் சிவாஜி. முகலாய மன்னர் அவுரங்கசீப் சிவாஜிக்கு அளித்த மரியாதையில் சிறிய அளவைக்கூட இந்து மதம் அவருக்கு வழங்கவில்லை என்பதுதானே உண்மை.

   ஏற்கனவே உருவாக்கப்பட்ட அரசில் வாரிசு உரிமையின் மூலம் சிவாஜி அரசராகவில்லை. சொந்த முயற்சியால் ஓர் அரசை நிர்மாணித்தவர். அன்றைய அடித்தட்டு மற்றும் விவசாய வர்க்கம் மன்னர் சிவாஜியோடு தங்களை அடையாளம் கண்டது. அவருக்காக எதையும் செய்ய சித்தமாயிருந்தது.  சிவாஜியை தப்பிக்க உதவியாக போலி சிவாஜியாக நடித்து சாவை எதிர்கொண்ட நாவிதர் சிவா, சிறையிலிருப்பதான பாவனையில் ஈடுபட்ட மாதார் மெஹ்டர் மற்றும் ஹிரோஷி பர்ஜான்ட், சிவாஜிக்காக சண்டையிட்டு மடிந்த பாஜி பிரபு மற்றும் பெயர் தெரியாத மாவ்லாக்கள் போன்ற பலர் எண்ணற்ற தியாகங்களைச் செய்யத் தயாராக இருந்தனர். போர்வீரர்கள் மட்டுமல்லாது சாதாரண சிறு குடிகள், விவசாயிகள் சிவாஜியின் லட்சியத்தில் பங்கேற்றதை பன்சாரே உதாரணங்களோடு விளக்குகிறார்.

  நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பில் அரசனுக்கும் விவசாயிகளுக்கும் உயிரோட்டமான உறவுகள் இருப்பதில்லை. இந்த மன்னர்களிடம் சிவாஜி வேறுபடும் புள்ளிகளை விரிவாக எடுத்துக்காட்டுகிறார். 

கோவிந்த் பன்சாரே


   நிலங்களை அளந்து, சட்டப்பூர்வமாக வரி நிர்ணயம் செய்து வரிவசூலிப்பவர்கலின் கொடுமைகளுக்கு முடிவு கட்டினார். உத்தரவு அமலாவதைக் கண்காணித்தார். வறட்சிகாலங்களில் வரிவிலக்கு மட்டுமின்றி மேலதிக உதவிகளையும் நிவாரணங்களையும் அளித்தார். தேஷ்முக், தேஷ்பாண்டே, தேசாய், பாட்டீல், குல்கர்னி, கோட், மிராஸ்தார் போன்றவர்கள் கிராமத்தலைவர்களாக இருந்து வரி வசூல் செய்தனர். அதிக வரி வசூலித்து மன்னனையும் மக்களையும் ஒருசேர ஏமாற்றி அதிகார மையங்களாக உருவெடுத்தனர். நில அளவை, வரி வசூல் முறைகளை ஒழுங்குபடுத்தி இவர்களிடமிருந்து விவசாயிகளை விடுதலை செய்தார். வரி வசூலிக்கும் சமூகங்களின் கோட்டை-கொத்தளங்களை அழித்து விவசாயிகளைப் போல சாதாரணமாக வாழவேண்டுமென உத்தரவிட்டார். 

   நிலப்பிரபுக்கள் ஏழை எளியவர்களின் மகள்கள் மற்றும் மருமகள்களை விரும்பும்போது அனுபவிக்கும் நிலை இருந்தது. இந்த பாலியல் வல்லுறவை எவரும் கண்டிக்கவில்லை; நியாயம் வழங்கவில்லை. ஆனால் சிவாஜி அதைச் செய்தார். பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட பாட்டீல் ஒருவனுக்கு கை, கால்கள் வெட்டப்பட்டன. தளபதி சுகுஜி 1678 –ல் போலவாடி கோட்டை முற்றுகையின்போது அக்கோட்டையின் தலைமைப் பொறுப்பிலிருந்த சாவித்திரி தேசாய் என்னும் வீரப்பெண் 27 நாட்கள் விடாமல் கோட்டையைப் பாதுகாத்தார். இறுதியில் கோட்டையைக் கைப்பற்றிய சுகிஜி சாவித்திரி தேசாயை  பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தினார். இதை அறிந்து கடுங்கோபமுற்ற சிவாஜி, கண்களைக் குருடாக்கி வாழ்நாள் முழுதும் சிறைப்படுத்தினார்.

   அழகிய ஓர் முஸ்லீம் பெண்ணை தர்பார் மண்டபத்திற்கு அழைத்து வந்து சிவாஜிக்குப் பரிசாக அளிக்கப்பட்டபோது, “என் தாயார்தான் இவ்வளவு அழகாக இருந்தாரோ”, எனச் சொன்ன பெருந்தன்மை மிக்க மன்னர் வேறுயார் இருக்கமுடியும்? “எந்த ஒரு பெண்ணும் முஸ்லீமோ அல்லது இந்துவோ போர்க்களங்களில் துன்புறுத்தக்கூடாது”, என தனது தளபதி மற்றும் படைவீரர்களுக்குக் கட்டளையிட்டு, அதனைத் தொடர்ந்து கண்காணிக்கச் செய்தார். 

கோவிந்த் பன்சாரே


   அக்காலத்தில் ராணுவ முகாம்களில் வைப்பாட்டிகள், விலை மகளிர், தேவதாசிகள் ஆகியோரைக் கொண்டு சென்று காமக் களியாட்டங்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாக இருந்த நிலையில், இவர்கள் யாரையும் பெண் வேலையாட்களைக்கூட ராணுவ முகாமில் அனுமதிக்கக் கூடாது என்ற கடுமையான உத்தரவிட்டிருந்தார். 

   பெர்சிய மொழியில் நடைபெற்ற நிர்வாகம் சாமான்ய விவசாயக் குடிகளுக்கு அந்நியப்பட்டிருந்த நிலையை மாற்ற, நிர்வாக மொழியாக மராத்தியைக் கொண்டுவந்தார். 

   படையெடுப்புக்களின்போது எதிரி நாட்டு மன்னர், மக்கள் மட்டுமா பாதிக்கப்படுவார்கள்? ராணுவம் செல்லும் வழியெங்கும் சொத்துகள், பயிர்கள் பாழடிக்கப்படுவது இயல்பான நிலையில் அதை மாற்றிக் காட்டி விவசாயிகள் மனத்தில் நீங்கா இடம் பெறுகிறார். “காய்கறிகளின் ஓர் இலைகூட தொடப்படக் கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருங்கள். குதிரைகளுக்குத் தேவையான வைக்கோல் பணம் கொடுத்து வாங்கப்படவேண்டும். எந்த வகையிலும் விவசாயிகளுக்கு ஒரு தொந்தரவும் ஏற்பட்டுவிடக்கூடாது”. (பக். 33) நவீன கால ஜனநாயக மன்னர்களிடம்கூட இந்நிலை இல்லாது கார்கள் அணிவகுப்புகள் நடத்தப்படுவதை இதனோடு இணைத்துச் சிந்திக்கிறார்.

   சிவாஜியின் குதிரைப்படை சிப்லன் அருகே முகாமிட்டபோது அதிகாரிகளுக்கு பின்வருமாறு உத்தரவிட்டார். “மழைக்காலங்களில் பயன்படுத்துவதற்காக மக்கள் வைக்கோலை இருப்பு வைத்திருப்பார்கள், அது கீழே கிடக்கும். இதைக் கவனிக்காமல் யாரவது ஒருவர் சொக்கப்பனை கொளுத்தினாலோ அல்லது குளிருக்குப் புகை பிடித்தாலோ வைக்கோல் தீப்பற்றி ஒவ்வொருவருக்கும் பெரும்துன்பம் இழைத்துவிடும். ஒட்டுமொத்த குதிரைப்படையும் அழிக்கப்பட்டுவிடும்; குதிரைகளின் இறப்புக்கு நீங்கள்தான் பொறுப்பாளியாக்கப்படுவீர்கள்”. (பக். 35)

    பணம் கொடுத்துப் பொருள்கள் வாங்க வலியுறுத்தியதையும் பாருங்கள். தற்போதைய அரசுகள் தனது காவல் மற்றும் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகளுக்கு இவ்வாறு உத்தரவிடுமா? “உங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எது தேவைப்பட்டாலும் சந்தையிலிருந்து பணம் கொடுத்தே வாங்கப்படவேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால், மக்களுக்குத் தீங்கு செய்தால் அவர்கள் முகலாயர்களே மேல் என்று உணர்வார்கள்…”. (அதே பக்கம்)

     சிவாஜி தனது ராணுவத்தில் இப்படியான மாற்றத்தை எப்படி சாத்தியமாக்கினார். அதற்கான பதிலையும் பன்சாரே விளக்குகிறார். சிவாஜியின் ராணுவம், விவசாயக்குடிகளைக் கொண்ட தற்காலிக ராணுவமாகும். போர் தவிர்த்த இதர நாள்களில் இவர்கள் வழக்கம்போல் விவசாயப்பணிகளில் ஈடுபடுவர். 

     ராமச்சந்திரபந்த் அமார்த்தியா பிறப்பித்த நீதி உத்தரவுகளிலிருந்து மன்னருக்கு மக்கள் மீதுள்ள பாசம் வெளிப்படுவதைச் சுட்டுகிறார். கடற்படைக்குத் தேவையான மா, பலா மரங்களை விவசாயிகளின் ஒப்புதலைப் பெற்று விலைக்கு வாங்கி, அவர்களது முழுத்திருப்திக்குப் பின்னர் அவர்கள் கைகளால் வெட்டித்தரவேண்டும் என்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. சமூகத்தில் எப்பரிவிலிருந்து எந்த வர்க்கத்திலிருந்து போர்வீரன் வருகிறான் என்பது இங்கு முக்கியம் என்கிறார்.

    பிற அரசர்கள் படைவீரர்களுக்கு ஊதியம் வழங்கியதில்லை. அவர்கள் கொள்ளையிட்டதில் ஓர் பகுதி சம்பளமாக அளிக்கப்பட்டது. எனவே அவர்கள் கொள்ளையிடத் தூண்டப்பட்டனர். சிவாஜியின் ராணுவத்தில் கொள்ளையிடப்பட்ட செல்வங்கள் அரசின் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டு, வீரர்களுக்கு நிலையான ஊதியம் வழங்கப்பட்டது. எனவே கொள்ளையிடல் என்பது தொழிலாக அல்லாமல் போர்க்கால நிகழ்வாக மட்டும் இருந்தது. 

    இந்த ராணுவம் பெண்கள் மீதான் வல்லுறவில் ஈடுபடவில்லை. போர்களின்போது ஆண்களும் பெண்களும் கைப்பற்றப்பட்டு வலுக்கட்டாயமாக அடிமைகளாக விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்பட்டது. எனவே அவர் உழவர் குடிமக்களின் அரசர் என்கிறார் பன்சாரே.

   பாமனி அரசைத் தோற்றுவித்த ஹசன் கங்கு. இப்பெயர் இருமதங்களின் நல்லிணக்கத்தைக் காட்டுவதாகச் சொல்கிறார். இந்துக்களும், இந்திய நிலப்பிரபுக்களும் முஸ்லீம் மன்னர்களுக்கு விசுவாசமாக இருந்தவ்ரை அவர் சகிப்புத்தன்மையுடன் இருந்தார். அரசுக்கு ஆபத்து வந்தபோது சகிப்புத்தன்மையற்றோர் ஆனார்கள். எனவே இங்கு மதம் முக்கியமல்ல; அரசே முக்கியம் என்கிறார். 

   டெல்லி பேரரசர்கள் அனைவரும் அடிப்படைவாத முஸ்லீம்களாக இருந்தார்கள் என்றும் சொல்லமுடியாது. அக்பர் தீன் இலாஹி என்ற அனைவரையும் உள்ளடக்கிய மதத்தைக் கட்டினார். வருவாய்துறை அமைச்சராக இருந்த ராஜா தோடர்மாலின் அறிவாற்றலைப் பயன்படுத்திக் கொண்டார். ஷாஜஹான் அரசவையில் பிராமணரான ஜகநாத் பண்டிட் சமஸ்கிருத கவிதைகள் இயற்றினார். இவரை தன் ஆளுகைக்குக் கொண்டுவர முயன்று ஜெய்ப்பூர் இந்து அரசர் தோற்றுப்போனார். ஷாஜஹானின் மகன் தாராவும் ஓர் சமஸ்கிருத அறிஞர். 

   அக்பர் ஆட்சியில் சுமார் 500 சர்தார்கள் இருந்தனர். அவர்களில் 22.4% இந்துக்கள். முஸ்லீம் அடைப்படைவாதியாக வரலாற்றில் சொல்லப்படுகிற அவுரங்கசீப் ஆட்சியில் இது 21.6% லிருந்து 31.6% என்று உயர்ந்தது. அவுரங்கசீப் தக்காண கவர்னராக ராஜபுத்திரர் ராஜா ஜஸ்வந்த்சிங்கை நியமித்தார். அவரது முதல்மைச்சர் ரகுநாத் தாஸ் ஓர் இந்து. இவர்கள் ராஜபுத்திரர்களாக இருந்தும் அவுரங்கசீப்பிற்காக ராஜபுத்திரர்களுடன் போரிட்டனர். 

   மறுபக்கம் ராணா பிரதாப் சிங்கின் படைத்தளபதி ஹக்கீம் கான் ஓர் முஸ்லீம். முஸ்லீம் அரசர்களுக்கு விசுவாசத்தோடு சேவை செய்த இந்துக்கள் அவ்வப்போது இந்துக்களை எதிர்த்துப் போரில் ஈடுபட்டனர் என்பதையும் விளக்குகிறார். 

    “இந்து தேசியமோ, இஸ்லாத்தைப் பரப்பும் நோக்கமோ நிலப்பிரபுத்துவ காலத்தின் படைகளிடையே எவ்வித கிளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. தங்களை எவ்வளவு காலம் வாழ்விக்கிறதோ, அவ்வளவு காலமும் தங்கள் தலைமைக்குச் சேவை செய்வதே பொதுவான சமூக நடைமுறையாக இருந்தது”. (பக். 51)

   “சொத்துக்களைக் கொள்ளையடிப்பது முதன்மையான குறியாக இருந்தது; மதம் என்பது இரண்டாம் பட்சமே. இந்த நோக்கத்தை நிறைவேற்றக் கோவில்களை அழிப்பது ஒரு வழியாக இருந்தது. இந்தக் கொள்ளையின் பெரும்பகுதி அரசனுக்கும் சென்றது. அரசனின் நிதி வருவாய்க்கு இது தலையாய வாய்ப்பாக இருந்தது”, (பக். 52) என்று சொல்லி, கடவுளைக் கொள்ளையடித்தவர்கள் தங்களையும் கொள்ளையிடுவார்கள் என்று மக்களை எண்ண வைக்க இது பயன்பட்டது என்றும் சொல்கிறார். 

    கடுமையான மதவாதி என்று அறியப்பட்ட அவுரங்கசீப் பல் கோயில்களை அழித்தார். ஆனால் அகமதாபாத் ஜெகநாதர் கோயிலுக்கு 200 கிராமங்களைப் பரிசளித்தார். காசியில் உள்ள பல இந்துக் கோயில்களுக்கு நன்கொடைகள் தந்தார். 

   பவானி கோயிலை அப்சல்கான் அழித்தபோது உடனிருந்த இந்துக்களின் நீண்ட பட்டியல் அளிக்கப்படுகிறது. மராட்டியர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சிருங்கேரி சாரதா கோயில் முஸ்லீம் மன்னரான திப்பு சுல்தானால் மீண்டும் நிறுவப்பட்டது. ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதே கோயில்களை அழிப்பதற்குக் காரணமாக இருந்தது. அதே அதிகாரமே நன்கொடை அளிக்கவும், புதுப்பிக்கவும் உந்துசக்தியாக இருந்தது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். 

   சிவாஜி இந்துமதப் பாதுகாவலர் என்றால் உயர்த்தப்பட்ட குடிகள் ஏன் எதிராக இருந்தனர்? இந்த உயர்குடிகளுக்கும் நிலப்பிரபுகளுக்கும் குறுநிலமே பிரதானமாக இருந்தது. அவர்களிடமிருந்த வெறித்தனம் நிலத்திற்கானது அன்றி மதத்திற்கானது அல்ல, என்றும் குறிப்பிடுகிறார்.

        டெல்லி பேரரசில் சேவை புரிந்த ராஜபுத்திர ராஜா ஜெய்சிங் சிவாஜியைப் பணிய வைக்க, ஒரு கோடி அர்ச்சனைகளும் பதினோரு கோடி லிங்க பூசையும் 400 பிரமாணர்களைக் கொண்டு நடத்தினார். பிராமண – இந்து மதப் பாதுகாவலரைப் பணியவைக்க ஏன் யாகம் நடத்தப்பட்டது என்று வினா எழுப்புகிறார்.

    சிவாஜி இந்து மதத்தில் நம்பிக்கை கொண்ட ஓர் அரசர். அரசர் என்ற வகையில் தனது மக்களை இந்து – முஸ்லீம் என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை; பாரபட்சம் காட்டவில்லை. இதை இரு சமூகங்களும் உணரவேண்டும் என்று வேண்டுகிறார்.

     மத உணர்வு நிரம்ப உடைய சிவாஜி இந்துவாக இருப்பதில் பெருமிதம் கொண்டவர். அந்தப் பெருமிதம் பிறமத வெறுப்பை அடைப்படையாகக் கொண்டதல்ல. அவரது மத நம்பிக்கை அறிவுப்பூர்வமானது என்றும் விளக்குகிறார். 

    சிவாஜி சத்திரியர் இல்லை என அவருக்கு முடிசூட மராத்திப் பிராமணர்கள் மறுத்துவிட்டனர். அவர் தீட்டுப்பட்டவர், தோஷம் கழிக்காதவர், முறையான சடங்குகளின்படி திருமணம் செய்யாதவர், பிறகெப்படி அரசராக முடியும் என்று கேள்வி எழுப்பினர். 44 வயதில் தனது மனைவியை யாகம் நடத்தி மீண்டும் திருமணம் செய்து கொண்டார். ஏராளமான தங்கத்தைப் பிராமணர்களுக்குக் கொட்டிக் கொடுத்து மீண்டும் மகுடம் சூடினார். 

  சிந்தே ராஜே, மூர் ராஜே என 96 குடும்பங்களைச் சேர்ந்த உயர்த்த்தப்பட்ட சாதியினரும் மராத்தி பிராமணர்களும் சிவாஜியை தங்களது அரசராக ஏற்கத் தயாராக இல்லை. மகாத்மா ஜோதிராவ் பூலே சிவாஜி பற்றிய கதைப்பாடலில் ‘குலவாடி பூஷண்’ என்கிறார். “விவசாயிகள் மகுடத்தில் பதித்த வைரமணி”, என்பது இதன் பொருள். சூத்திரனின் மகனை ஜோதிராவ் பூலே பாடுகிறேன் என்று முடிக்கிறார். 

    சிவாஜியுடன் இணைந்து செயல்பட்டவர்கள் யார்? தப்பிச் செல்ல உதவிய சிவா ஓர் நாவிதர். அப்சல் கானை கொலை செய்தபோது உடன் சென்றவர் மின்னல் வேகப்போராளியும் நம்பிக்கைக்குரிய படைவீரனுமான ஜீவா மஹாலாவும் ஓர் நாவிதர். புலனாய்வுத் தளபதி பகிர்ஜி நாயக் ரமோஷி சாதியைச் சார்ந்த விவசாயி. இதுவும் ஓர் சூத்திரப்பிரிவாகும். பெராத், ரமோஷி, அதேகாரி போன்ற குற்றப்பரம்பரைச் சாதியினர் தங்களது திறமைகளையும் வீரத்தையும் வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டனர். 

    சிவாஜியின் பணியாளர்களில் ஒருவரான காஸி ஹைதர் அவுரங்கசீப்பிடம் தூதுவராகச் சென்றார். இந்து மன்னனிடம் முஸ்லீக் தூதுவர்களும் முஸ்லீம் அரசனிடம் இந்து தூதுவர்களும் இருந்தனர். இரு சமூகங்களும் செங்குத்தாக பிளவு பட்டிருந்தால் இது நடந்திருக்குமா என்று கேள்வி கேட்கிறார். 

    கடற்படைத் தளபதி ஓர் முஸல்மான். மாலுமிகள் கப்பற்படை வீரர்கள் அனைவரும் கோலி, சன்கோலி, பந்தாரி மற்றும் முஸ்லீம்களாகவே இருந்தனர். அடித்தட்டு மக்களைக் கொண்டே அப்படை கட்டப்பட்டது. எனவேதான் சிவாஜி சாமான்யர்களின் மகத்தான அரசராகக் கொண்டாடப்படுகிறார்.

    சிவாஜியின் இந்து மதமும் பின்னாளில் ஆண்ட பேஷ்வாக்களின் இந்து மதமும் ஒன்றா என்று வினா எழுப்புகிறார். தீண்டத்தகாதவர்கள் தங்களது இடுப்பில் விளக்குமாற்றைக் கட்டிக்கொண்டும், கழுத்தில் மண் கலயத்தையும் கட்டிக்கொண்டு நடக்க நிர்ப்பந்திக்கபட்டார்களே. ஆனால் சிவாஜி இந்த அனைவரும் அரவணைத்து தனது ராஜ்யத்தை நடத்தினார். 

    தியானேஷ்வர், துக்காராம், மகாத்மா காந்தி போன்ற பலரை துன்புறுத்தியும் கொலை செய்தும் உள்ள இந்துத்துவம் அவர்களை முழுதும் அழிக்க முடியாமல் தனது தேவைகளுக்கு பயன்படுத்தவும் செய்கிறது. மக்களை அணிதிரட்டவும் தங்களது எல்லைகளை விரிவாக்க இது உதவுகிறது. இதுதான் சிவாஜிக்கும் நேர்ந்தது.  

   இந்த சிறிய ஆய்வு நூல் புதிய திறப்புகளை சாத்தியமாக்குகிறது. மகாத்மா ஜோதிராவ் பூலே, பாபாசாகேப் அம்பேத்கர், நேதாஜி, வள்ளலார், வைகுண்டசாமி, ஶ்ரீ நாராயண குரு, அய்யன் காளி போன்ற பலரையும் இதைப் போலவே தனது நீட்சிக்காக இவ்வாறு அணுகுகிறது. இவற்றை முறியடிக்க இந்துத்துவத்திற்கு எதிரான மாற்று வரலாற்றை கண்டடைய வேண்டிய தேவை இருக்கிறது இம்மாதிரியான நூற்கள் அதற்கு பெரிதும் உதவும். அப்படி மாற்றுக்களைக் கட்டும்போது மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படவேண்டும். இதுவே இந்துத்துவத்தால் கொலையுண்ட  நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோருக்கு செய்யும் வீரவணக்கமாக அமையும்.


மாவீரன் சிவாஜி – காவித் தலைவனல்ல, காவியத் தலைவன்

(சிவாஜி கோன் ஹோடா – மராத்தி) - யார் அந்த சிவாஜி?

கோவிந்த் பன்சாரே (1988)
ஆங்கிலத்தில்: உதய் நர்கர்
 தமிழில்:  செ.நடேசன்  

பாரதி புத்தகாலய வெளியீடு, 

பாரதி புத்தகாலய முதல் பதிப்பு: அக்டோபர்  2015
பக்கங்கள்: 96
விலை: ரூ. 60

வெளியீடு:

பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.
பேச: 044 – 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com

1 கருத்து:

Dr T MURUGESAN சொன்னது…

சிறந்த பதிவு

கருத்துரையிடுக