கல்விப்புல ஆய்வுகளின் அபத்தமும் அவலமும்
(மூன்றாம் பருவ புதிய
பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 04)
மு.சிவகுருநாதன்
(ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் - புவியியல் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)
உயர்கல்வியில் ஆய்வின் தரம் எப்படியுள்ளது என்பது
அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஓரளவுக்குச் சிறப்பாகச்
செயல்படும் பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் அரசால் முடக்கப்படுவது அன்றாட நிகழ்வு.
தங்களுக்கு ஏற்ற வகையிலான ஆய்வுகளை மட்டும் செய்ய இவைகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆய்வாளர்கள் மிரட்டப்படுகின்றனர்; தாக்கப்பட்டுகின்றனர்.
உயர்கல்வியின் நிலைமையே இதுவென்றால் பள்ளிக்கல்வியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
பள்ளிப் பாடநூல்கள், செயல்திட்டங்கள், ஒருங்கிணைந்த
பள்ளிக்கல்வியின் (சமக்ரா சிக்ஷா) செயல்திட்டவழிக்கற்றல் போன்ற திட்டங்கள் (IMPART
– IMproving PARTticipation) போன்ற யாவும் அறிவுக்குப் புறம்பாகவே இயங்குகின்றன. ஏதேனும் ஒன்றை நகலெடுத்தல், சுய சிந்தனையின்றி மாணவர்களை
மழுங்கடித்தல் என்கிற மனப்பான்மை கல்வித்துறை முழுதும் பரவியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்கள் ஏதேனும் அறிவு பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே
இவை வடிவமைக்கப்படுவதாகத் தோன்றுகின்றன. எதற்கும் தலையாட்டும் பொம்மைகளாகக் குழந்தைகளை
வார்த்தெடுக்கும் வேலையை கல்வித்துறை முதன்மைப்பணியாக மேற்கொண்டுவருகிறது. வருங்கால
ஆட்சியாளர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வருங்காலக் குடிமகன்களை உருவாக்க உறுதியேற்றுள்ளதாகப்படுகிறது.
மாணவர்களின் சிந்தனைத்திறன் , விழிப்புணர்வு, அறிதல் முறைகள் ஆகியவற்றைக் குலைத்துப்
பொதுப்புத்தி சார்ந்த மேம்போக்கு முடிவுகளை நகலெடுத்து இருக்கின்ற அமைப்பு மற்றும் சூழலுக்கு இடையூறில்லாத
நிலை தொடர்ந்துத் தக்கவைக்கப்படுகிறது. ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான, சாதகமான குடிமகன்களை
உற்பத்தி செய்வதுதான் கல்வியின் பணியா என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, கேள்வி
கேட்பதில்லை.
ஒன்பதாம்
வகுப்பு மூன்றாம் பருவம் சமூக அறிவியல் புவியியல் பாடப்பகுதி வளம் குன்றா வளர்ச்சி
(Sustainable Development) தலைப்பில் தனியாள் ஆய்வு (Case Study)
ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள சில பகுதிகளை முழுமையாகப் பார்த்துவிடலாம்.
தனியாள்
ஆய்வு (Case Study) வளம் குன்றா வளர்ச்சியில் பாக் வளைகுடாவின் மாங்குரோவ் காடுகள்
“கி.பி. (பொ.ஆ.) 2004 இல் ஏற்பட்ட
ஆழிப்பேரலையால், பாக் வளைகுடாவில் உள்ள மாங்குரோவ்காடுகள் பேரழிவைச் சந்தித்தன.
மேலும் நிலவிரிவாக்கம், நகரமயமயமாதல், கால்நடை மேய்ச்சல் மற்றும் வேளாண்மை
போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளன”, (பக்.87)
“இப்பகுதிகளில் வளரும் தாவர இனங்களின்
நாற்றுகளை நட்டு கவனமாக வளர்க்கப்படுகின்றன.
மன்னார் வளைகுடா பல்லுயிர்த்தொகுதியிலிருந்து
முருகைப் பாறைகளைக் கொண்டு வந்து பாக் வளைகுடாவில் வளர்த்து, இங்கு
எஞ்சியிருக்கும் மாங்குரோவ் காடுகளை வரைபடமாக்குவதோடு அதைச் சுற்றிய நிலப்பகுதி
எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கற்றறியப்படுகிறது”, (பக்.87)
“மாங்குரோவ் காடுகளைப் பாதுகாப்பது மற்றும்
மீட்டெடுப்பதில் உள்ளூர் அமைப்புகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். இக்காடுகளைப்
பற்றிய விழிப்புணர்வும் கல்வியறிவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன்
அவசியமும் அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இங்கு வாழும் உள்ளூர் மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு வாழ்வாதாரத்திற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதால்
அவர்கள் மீன்பிடித்தொழிலை மட்டும் சார்ந்திருக்காமல் பிற தொழில்கள் மூலம் தங்களின்
வாழ்வாதாரத்தைப் பெறுகின்றனர்”, (பக்.87)
ஆங்கில வழிப்பாடநூலில் பின்வருமாறு உள்ளது.
“In the recent decades, the mangroves of
Palk Bay have been heavily degraded due
to the Tsunami of 2004, land encroachment, rapid urbanisation, cattle grazing
and agriculture. The degradation of mangroves resulted in the reduction of
nursery space for juvenile fish, impacting
fish populations in the region and as a
result, the livelihood of the fishing communities of the region”. (page: 75)
“Along with awareness programmes, the
communities are also being provided With livelihood training, so they can earn
an income in more ways than just fishing”. (page: 75)
அலையாத்தியின் அழிவுக்கான பல காரணங்கள்
உள்ளன. ஆனால் இங்கு இவர்களது ஆய்வுக்களம் ‘சுனாமி,
நிலவிரிவாக்கம், நகரமயமயமாதல்,
கால்நடை மேய்ச்சல் மற்றும் வேளாண்மை’, என்கிற அளவில் சுருங்கிவிடுகிறது. மாங்குரோவ்
காடுகளின் அழிவிற்கான உண்மைக்காரணிகள் மறைக்கப்பட்டு, புதைக்கப்பட்டு மேம்போக்காக
உள்ளூர் மக்களும் மீனவர்களும் இதற்குக்
காரணமானவர்கள் என்று சொல்வது அபத்தமானது மட்டுமல்ல; அறிவுத்துறைப் பயங்கரவாதம். அதிலும்
வேளாண்மையில்
நடைபெறும் வேதியுரங்கள், பூச்சிக் கொல்லிப் பயன்பாடுகள் ஆகியன விளக்கமாகச் சொல்லப்படுவதில்லை.
இவை உலகமய, கார்ப்பரேட் ஆதரவுத் தன்னார்வலத் தொண்டு நிறுவனங்களில் (NGOs) ஆய்வாகவே
இருக்கின்றது. (எ.கா.) டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் (MSSRF). அரசின்
பொருளுதவியுடன் செயல்படும் இவர்களது ஆய்வுத்திட்டங்களின் நிலை இவ்வாறுதான் உள்ளது.
- இறால் மற்றும் மீன் பண்ணைக் கழிவுகள் மற்றும் இதன் சூழலியல் பாதிப்புகள்
- அனல் மின் நிலையக் கழிவுகள், அவற்றிலிருந்து கடலில் விடப்படும் உயர் வெப்ப நீர்.
- துறைமுகங்களில் நிலக்கரி இறக்குமதி (வடசென்னை - எண்ணூர், காரைக்கால் – வாஞ்சூர் – மார்க் -MARG தனியார் துறைமுகம்).
- அணு உலைக் கழிவுகள், அணு உலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கடலில் கலக்கும் உயர்வெப்ப நீர். (கல்பாக்கம், கூடங்குளம்)
- உப்புத் தொழிலகக் கழிவுகள்.
- வேதித் தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழிலகக் கழிவுகள்.
- கடல்நீரைக் குடிநீராக்கும் தொழிற்சாலைகளிருந்து வெளியேறும் அதிக உவர்ப்புத்தன்மை கொண்ட நீர்.
- கடலில் கலக்கும் நீரின் அளவு குறைதல் (வீணாகக் கடலில் கலக்கும் நீர் என்கிற சூழலியல் புரிதலற்ற மனிதனை முதன்மைப்படுத்தி இயற்கையைப் புரிந்துகொள்ளும் அபத்தங்கள் களையப்பட வேண்டும்.)
- நெகிழிப் பயன்பாடு.
- வளம் கெடுக்கும் வளர்ச்சித் திட்டங்கள்.
- வரம்பற்றச் சுற்றுலா. (முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகளுக்கு பாதுகாப்பற்ற, இயற்கையைச் சீரழிக்கும் கட்டுப்பாடற்றக் கேளிக்கைச் சுற்றுலா போன்றவை முறைப்படுத்தப்பட வேண்டும் அல்லது நிறுத்தப்பட வேண்டும். பிச்சாவரத்திலும் இதே நிலைதான்.)
என்று அலையாத்திக் காடுகளின் அழிவிற்குக் காரணங்கள்
பலவற்றைச் சொல்ல முடியும் கல்வித்துறையும் பாடம் எழுதுபவர்களும் உள்ளூர் மக்கள் மற்றும்
மீனவர்கள் இக்காடுகளை அழித்துவிட்டதாகப் பழிசுமத்தி, அவர்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க
வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்கள். எவ்வளவு அபத்துக் கூத்து பாருங்கள்! இதைப்போலவே
இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொள்ளும் வனவாசிகள் வனத்தை அழித்திவிட்டதாகக் கூக்குரலிட்டு
அவர்களையும் அவ்விடங்களைவிட்டு அகற்றும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. மேலும் மீனவர்கள்
மாற்றுவேலைகள் மூலம் வாழ்வாதாரம் பெறுகிறார்களாம்! அவர்களுக்கு எந்த மாற்றுப் பணிகள்
அளிக்கப்பட்டன என்பதை விளக்கிச் சொல்ல வேண்டாமா? எத்தகைய பயிற்சிகள் என்று ஏன் பட்டியலிடவில்லை?
கிளிஞ்சல் பொருள்கள் செய்வதன் மூலம் வாழ்வாதாரம் என்று சொல்வார்களோ? மீனவர்களால் சதுப்புநிலக்
காடுகள் பாதிக்கப்படுகின்றன. எனவே அவர்களை அப்பகுதியை விட்டு அப்புறப்படுத்தவேண்டும்
என்ற உலகமயக் குரலுக்குப் பின்னால் கல்வித்துறையும் செல்கிறது? சுய சிந்தனையும் தேடலும்
இல்லாத கல்வியின் பயனென்ன? மீனவர்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள் போன்றவை அமைக்கும்
மறைமுகத்திட்டந்தானே இது!
‘coral
reefs’ ஐ முதல் பருவப் பாடத்தில் ‘பவளப்பாறைகள்’ என்று மூன்றாம் பருவப் பாடத்தில்
‘முருகைப்பாறைகள்’ (9 சமூக அறிவியல், பருவம் 3, பக்.87) என்றும் மொழி பெயர்ப்பது
ஏன்? இதில் ஓர்மை வேண்டாமா? கலைச் சொற்கள் பட்டியலில் முருகைப் பாறை - coral reefs
என்றே உள்ளது (பக்.88). ஒருமை – பன்மைகளைக் கூடக் கண்டுகொள்ளத் தேவையில்லை போலும்!
இவ்வாண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் (சமக்ரா சிக்ஷா) செயல்திட்டவழிக்கற்றல்
ஆய்வாக, “விரிவும் ஆழமும் தேடி… நூல்கள் மற்றும்
இதழ்களிலிருந்து தகவல் திரட்டி பாடநூல்களைத் தாண்டி விரிவாக ஆய்வு செய்தல்”, என்ற தலைப்பில்
எமது மாணவர்கள் ஆய்வு செய்து இதன் காரணங்களைக் கண்டறிந்தனர். “முத்துப்பேட்டை அலையாத்திக்
காட்டிற்கு ஏன் செல்லவில்லை?”, என்று அங்கு வினவப்பட்டதாக மாணவர்கள் சொன்னார்கள். குரங்கணி
காட்டுத் தீ விபத்திற்குப் பிறகு முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளுக்கு சுற்றுலா
செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பற்ற சுற்றுலாதான் நடைமுறையில் இருந்தது.
வனத்துறை அனுமதியுடன் தனியார் படகுகளில் பாதுகாப்பு வசதிகள் ஏதுமின்றி பயணிப்பது சரியல்ல.
மேலும் அங்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது பிச்சாவரம் போன்று பாதுகாப்பானதல்ல என்பதை
முதலில் நமது கல்விப் பெருந்தகைகள் உணரவேண்டும். கல்விப்புலத்தில் இருப்போர் தங்களைச்
சுற்றி நடப்பதை முதலில் அறிந்துகொள்ள விரும்பாதது கல்வியின் அலங்கோலங்களுள் ஒன்று.
சூழலியல் மாசுகள் பற்றி இவர்கள் சொல்ல வருவது என்ன?
“அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சி மனித
குலத்திற்குப் பல வசதி வாய்ப்புகளைத் தந்திருக்கிறது. அதே சமயம், இயற்கை வளங்கள் குறைவதற்கும்
காரணமாகிறது. இதனால் பல சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சில சுற்றுச்சூழல்
பிரச்சினைகளைப் பற்றி நாம் அறிவோம்.
- காடுகளை அழித்தல் (Deforestation)
- காற்று, நிலம், நீர், ஒலி,ஒளி போன்றவை மாசடைதல் (Pollution)
- நகரமயமாதல் (Urbanaisation)
- நீர்ம விசையியல் முறிவு ((Fracking)
- கழிவு அகற்றுதல் (Waste disposal)
ஆங்கில
வழிப் பாடநூல் கீழ்க்கண்டவாறு செல்கிறது.
“Some of the environmental issues that we
are going to learn are: Deforestation Pollution such as air, water, noise, etc.
Urbanisation Frocking Waste disposal (page:68)
“There are many types of pollution
degrading the environment. They are a. Air pollution b. Water pollution c. Land
pollution d. Noise pollution e. Light pollution”, (page:69)
Some
of the environmental issues that we are going to learn are:
Deforestation
Pollution
such as air, water, noise, etc.
Urbanisation
Fracking
Waste
disposal (page:68)
There
are many types of pollution degrading the environment. They are
a.
Air pollution
b.
Water pollution
c.
Land pollution
d.
Noise pollution
e.
Light pollution (page:69)
வழக்கமான மாசுபாடுகளில் ஒளிமாசை மட்டும்
புதிதாக இணைத்திருக்கிறார்கள். கதிரியக்கம், அணுக்கழிவுகள் போன்றவற்றைப்
பாடநூல்கள் எந்நாளும் பேசியது கிடையாது. மருத்துவத்துறைக் கழிவுகளில் கதிரியக்கக்
கழிவுகளும் அடங்கும். அனு உலைகளை மறைக்கும் இவர்கள் இதையும் சேர்த்து மறைப்பதில் அதிகார
மனநிலையுடன் செயல்படுகின்றனர்.
‘நீர்ம
விசையியல் தொழில்நுட்பம்’ (Fracking) பற்றி பாடநூல் சொல்வதைப் பார்ப்போம்.
“செயற்கை முறைகளில் சில அழுத்தம் மிகுந்த
திரவக் கலவைகளைப் பயன்படுத்திப் பாறைகளை உடைத்து, எண்ணைய் மற்றும் இயற்கை வாயுவைப்
புவியிலிருந்து வெட்டியடுக்கும் தொழில் நுட்பத்திற்கு நீர்ம விசையியல் முறிவு
என்று பெயர். இம்முறையில் புவியைத் துளையிடுவதற்கு மிகவும் அழுத்தமிக்க கலவையாக
நீர், மணல் மற்றும் திடப்படுத்தும் பொருட்கள் சேர்ந்த கலவை பயன்படுத்தப்படுகிறது. இது
நீர்ம விசையியல் கூழ்மம் எனப்பெயரிடப்பட்டு கி.பி. 1950 ஆம் ஆண்டு முதல் பாறைகளைத்
துளையிடப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீர்ம விசையியல் தொழில்நுட்பத்தில்
அதிகளவில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்
மீத்தேன் ஆகும். அவ்வாறு பயன்படுத்தும்பொழுது நான்கு சதவிகிதம் அளவிற்கு மீத்தேன்
வளிமண்டலத்தில் கலந்துவிடுகிறது. மீத்தேன் கார்பன் –டை-ஆக்சைடைவிட இருபத்தைந்து
மடங்கு அதிக வலுவாக வெப்பத்தை ஈர்த்துக் கொள்ளக் கூடியது. ஆனால் இத்தொழில்நுட்பம்
பயன்படுத்தக் கூடிய பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகளவில் ஏற்படுகிறது. இதனால்
அங்குப் பணிபுரியும் பணியாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் தூய்மையான காற்று
கிடைப்பதில்லை.
பிற சுற்றுச்சூழல் பாதிப்புகள்
நீர்ம விசையியல் நீர் மற்றும் காற்றை
மட்டுமல்லாது மண்ணையும் மாசுறச் செய்கிறது. இச்செயலின் போது சிதறும் எண்ணெய்
மண்வளத்தை மட்டுமல்லாது தாவரங்களையும் பாதிக்கிறது. எண்ணெய் எடுப்பதற்குப்
பயன்படுத்தப்படும் உயர் அழுத்தமும் அங்கு சேர்ந்துள்ள நீர் சேகரிப்புப் பகுதிகளில்
புவி அதிர்வை ஏற்படுத்தலாம்”, (பக். 82, 9 சமூக அறிவியல்)
‘Fracking’ என்பதற்கு நீர்ம விசையியல்
தொழில்நுட்பம், நீர்ம விசையியல் முறிவு (பக்.82), பாறைகளை உடைக்க பயன்படுத்தும்
நவீன தொழில்நுட்பம் (கலைச்சொற்கள், பக்.91) என்று பல பெயர்களைப் பயன்படுத்துவது
ஏன்? Hydraulic Fracturing, Hydraulic Fracking ஆகிய சொற்களுக்கு ‘நீரியல்
விரிசல்’ என்ற சொல் புழக்கத்திலுள்ளது. ‘மீத்தேன்’ திட்ட எதிர்ப்பிற்குப் பிறகு
இச்சொல் பரவலாக கவனம் பெற்ற ஒன்று. இவற்றில் நீரியல் முறிவு, நீர்மப் பிரிப்பு
ஆகிவற்றைவிட ‘நீரியல் விரிசல்’ என்பது
பொருத்தமாக உள்ளது. ஆனால் பாடநூல் இவற்றைக் கண்டுகொள்ளாது. காவிரி டெல்டாவில்
பிரச்சினைக்குள்ளாகி இருக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டம் இவ்வகையானது என்பதைச்
சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள்.
மீத்தேன், இயற்கை எரிவாயு, ஹைட்ரோகார்பன்,
ஷேல் எரிவாயு (10,000 அடி ஆழல்) அல்லது
களிப்பாறை (2,000 அடி ஆழம்) மீத்தேன் (Shale Methane) , கோல் மீத்தேன் அல்லது நிலக்கரிப்படுகை
மீத்தேன் (Coal Bed Methane என்று நம்மை ஏமாற்றுவதற்காக வெவ்வேறு பெயர்கள்
சொல்லப்பட்டாலும் கிடைக்கும் மீத்தேன் ஒன்றுதான். இயற்கை எரிவாயு மரபு எரிவாயு
எனவும் ஷேல் எரிவாயு, கோல் மீத்தேன் ஆகியன மரபு சாராதவை எனவும்
பட்டியலிடப்படுகின்றன. அவை இருக்கும் ஆழமும் எடுக்கும் தொழில்நுட்பத்திலும்
மட்டுமே வேறுபாடு உள்ளது. இத்தகைய தொழில்நுட்பங்களினால் சூழல்கேடு மிகுதியாக
இருப்பதை சொன்னதற்காக பாராட்டலாம். ஆனால்
அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் நெருக்கமில்லாத இடங்களில் செய்யப்பட்ட
இவ்வேலைகளை நிலத்தடி நீர் மாசு போன்ற சூழல் பிரச்சினைகளைக் காரணம் காட்டித் தடை
செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீர்,
மணல் மற்றும் சோடியம் குளோரைடு, எத்திலின் கிளைக்கால், போரேட் உப்புகள், சோடியம் கார்பனேட்
பொட்டாசியம் கார்பனேட் பாலிசாக்கரைடுகள் போன்ற பல வேதிப் பொருட்கள் கலந்த கலவையே
இக்கூழ்மம். இப்பொருள்களில் பல சூழலுக்குக் கேடு செய்பவை. மேலும் இவை பூமிப்பாறைக்குள்ளிலிருந்து
மீத்தேனைக் கொண்டுவரும்போது சூழலுக்கும் மனிதனுக்கும் கேடுசெய்யக்கூடிய,
கதிரியக்கத்தன்மையுடைய பலபொருள்களையும் சேர்த்தேக் கொண்டுவருகிறது. இவற்றால் புவி அடையும்
சூழலியல் பாதிப்புகள் மிக அதிகம்.
“நீர்ம விசையியல் தொழில்நுட்பத்தில்
அதிகளவில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்
மீத்தேன் ஆகும். அவ்வாறு பயன்படுத்தும்பொழுது நான்கு சதவிகிதம் அளவிற்கு மீத்தேன்
வளிமண்டலத்தில் கலந்துவிடுகிறது.” (பக். 82) என்று சொல்லப்படுவதன் காரணம் என்ன? ‘நீர்ம விசையியல் கூழ்ம’த்தில் மீத்தேன் அதிக
அளவு மீத்தேன் உள்ளது என்பதுதான் இதன் பொருள்!
மீத்தேனைக் கொண்டு மீத்தேன்
எடுப்பதுதான் இத்தொழில்நுட்பமா?
“Methane
is one of the most important chemicals used in fracking process”, (page:71)
என்று ஆங்கில வழியில் இருக்கிறது. மீத்தேனைக் கொண்டு மீத்தேன் எடுக்கும் திட்டம்
தேவையா? மீத்தேன் எடுக்கும்போது உடன்
கழிவாக வெளியேற்றப்படும் பொருள்களில் எண்ணெய்க் கழிவுகள் மற்றும் நிலநடுக்கம்
பற்றி மட்டும் குறிப்பிடப்படுகிறது. பிறவற்றை மறைக்கும் பணி செவ்வனே நடைபெறுகிறது.
டீசல் மின்னாக்கிகள் மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தை அணுமின்சாரம் என்று
கணக்குக் காட்டுவதில் கைதேர்ந்தவர்களாயிற்றே!
(இன்னும் வரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக