ஞாயிறு, மார்ச் 31, 2019

யாருக்காக இந்தத் தணிக்கை வேலைகள்?


யாருக்காக இந்தத் தணிக்கை வேலைகள்? 


(2019 -2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான ஒரு விமர்சன முன்னோட்டம் - 02) 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           
மு.சிவகுருநாதன்


(10 ஆம் வகுப்பு தமிழ்ப்  பாடநூல் பற்றிய சில கருத்துகள்.)



          பத்தாம் வகுப்பு புதிய தமிழ்ப் பாடநூலில் பெருஞ்சித்தரனார் பாடல் ஒன்று (தமிழ்த்தாய் வாழ்த்து) இடம்பெறுகிறது. ‘கனிச்சாறு’ (பக்.02) என்ற தொகுதியில் இடம்பெற்ற பாடல் என்பதால் இறுதியில் ‘கனிச்சாறு’ என்றே எழுதுகின்றனர். இதுவும் எட்டுத் தொகுதிகள் கொண்டது? இது சரியா? பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதால் இவை வேறு பெயர்களிலும் தொகுப்பாக வரக்கூடும்.


      விடுங்கள். அது போகட்டும். பெருஞ்சித்திரனாரின் ‘கனிச்சாறு’ தொகுதி-01 இல் உள்ள ‘தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலி’ன் ஒரு பகுதியும்  'முந்துற்றோம் யாண்டும்!’ பாடலும் இணைக்கப்பட்டு ‘அன்னை மொழியே’ எனும் தலைப்பில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.  தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை முழுதாக வைக்காமல்  பின் பகுதியை நீக்கி இதை இணைக்கக் காரணம் இருக்கிறது. நம்மவர்களுக்கு இந்த வெட்டல் – ஒட்டல் வேலைகள் அருமையாக வருகிறது. விலக்கப்பட்ட பாடலைக் காண்போம்.


“சிந்தா மணிச்சுடரே! செங்கைச் செறிவளையே!
தந்த வடமொழிக்கும் தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில் சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியார் மூத்த சுமேரியத்தார்
செந்திரு நாவில் சிரிந்த இளங்கன்னீ!
சிந்துக் கலைவடிவே! சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே! நாடகத்துப் பண்ணியலே!
வந்த குடிமரபோர் வாழ்த்தி வணங்குவமே!” 


     மேற்கண்ட பகுதிதான் தமிழத் தாய் வாழ்த்தில் நீக்கப்பட்ட பகுதி. இதற்குப் பதிலாக 'முந்துற்றோம் யாண்டும்!' (பக்.33, கனிச்சாறு, பாவலேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள், தொகுதி 1, தமிழ் - இந்தி எதிர்ப்பு) என்கிற தலைப்பில் உள்ள பாடல் இணைக்கப்பட்டுள்ளது.
    

    “தந்த வடமொழிக்கும் தாயாகி நின்றவளே!”, என்ற வரிக்காகவே இவை விலக்கப்பட்டன என்று சொன்னால் மிகையில்லை. இதுவும், இதன்  பின்னால் சொல்லப்படும் கருத்துகளும் யாரையோ மனவருத்தும் என்பதற்காக இந்தத் தணிக்கை வேலைகள் மிகக் கச்சிதமாகச் செய்து முடிக்கப்படுகின்றன? பெருஞ்சித்தரனாரின் அரசியல் நிலைப்பாடு அறிந்துதானே அவரது மரபுக்கவிதையை பாடமாக வைக்க முடிவு செய்கிறீர்கள். பிறகு அதிலுள்ள ஒரு வரி மட்டும் பிடிக்காமற்போவதேன்? அந்த வரி தவறென்றால் இது இன்னும் நிருபிக்கப்படாத கூற்று எனச் சுட்டிக்காட்டுங்கள்.  ஏன் கத்தரி தூக்கிறீர்கள்? வாய்ப்பு கிடைத்தால் மொழிப்பெருமை விதந்தோதுவதில் மட்டும் எவ்விதக் குறையுமில்லை. 


     நெடுவினாப் பகுதியில் “மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையும் பெருஞ்சித்தரனாரின் தமிழ் வாழ்த்துப்பாடலையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக”, (பக்.20) என்று வினாவும் கேட்கப்படுகிறது. நல்ல நகைச்சுவை! 


     இன்னும் எவ்வளவு நாளுக்குத்தான் சந்தி, சீர் பிரித்துப் பாடல்களைச் சொல்லிக் கொடுக்கப் போகிறீர்கள்? இதில் மொழியறிவு மேம்படவில்லை என்கிற புலம்பல் வேறு. உரைநடையில் மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு என இன்னமும் பிரித்துப் பிரித்துச் சொல்லிக்கொடுக்கும்போது செய்யுளைப்பற்றி கவலைப்பட்டு என்னவாகப் போகிறது? மேனிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு என பாடநூல்கள் இணைத்தெழுதுவதும் செய்யுள்களை 10, +1, +2 வகுப்புகளில் செய்யுளைச் சந்தி, சீர்,  பிரிக்காமல் அச்சிட்டு வழங்குவதும் ஒருவகை மொழிப்பயிற்சியே! 



      ‘கனிச்சாறு’ தொகுதியிலும் பாடல் சரியாகப் பதிப்பிக்கப் படவில்லை. 'முந்துற்றோம் யாண்டும்!' என்ற எட்டுவரிப் பாடலை 16 வரியாகப் போட்டுள்ளனர் தொகுப்பாளர்கள். பாடநூலும் எட்டுவரிப் பாடலை ஏன் நான்கு, நான்காக பகுப்பதேன்? ‘கொச்சகக் கலிப்பா’ என்னும் இப்பாவகை 4, 5, 8 அடிகளால் அமைவது. எட்டடியிலும் எதுகை ஒன்றித் தொடுப்பது. நமது பாடப்பகுதியில் எட்டடியால் அமைந்த இரு பாடல்கள் உள்ளன. எட்டு, எட்டு அடிகளாகவே இவையிரண்டும் அமையவேண்டும். நான்கு, நான்கடிகளாகப் பிரித்து அச்சிடுவது ஒன்றை வெட்டி பிறிதொன்றில் ஒட்டுவதும் தேவைதானா?  


   “சங்க இலக்கியம் நம் பாட்டனார் தோப்பு; இடைக்கால இலக்கியம் நம் தந்தையார் தோட்டம்; இக்கால இலக்கியம் நம் பூங்கா”, (பக்.11) எனும் பீடிகையுடன் எழில் முதல்வன் என்பவரின் ‘உரைநடையின் அணிகலன்கள்’ தலைப்பில் சங்கப்புலவர், இணையத் தமிழன் உரையாடல் இடம்பெறுகிறது. இந்த உரையாடலில் இணையத்தமிழன் குறிப்பிடும் இக்கால எழுத்தாளர்கள் எவரெனத் தெரிந்து கொள்வோமா? நா.பார்த்தசாரதி, அறிஞர் அண்ணா, திரு.வி.கலியாணசுந்தரனார், இரா.பி.சே,. ப.ஜீவானந்தம், வ.ராமசாமி, பெரியார் ஈ.வெ.ரா., பாரதியார். இணையத் தமிழன் எப்போது 21 ஆம் நூற்றாண்டிற்கு வருவான்? 


     வீரமாமுனிவரின் ‘தேம்பாவணி’ இடம்பெறுகிறது. ஆசிரியர் குறிப்பில் வீரமாமுனவரின் இயற்பெயர் ‘கான்சுடான்சு சோசப் பெசுகி’ (பக்.215) என்றுள்ளது. ஏனிந்த ‘கொல’வெறி?  


 (தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக