வெள்ளி, மார்ச் 22, 2019

சாதிப்பெயர்களைப் பாடநூலில் பயன்படுத்துதல்: சில குறிப்புகள்


சாதிப்பெயர்களைப் பாடநூலில் பயன்படுத்துதல்: சில குறிப்புகள்


(மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 06)


மு.சிவகுருநாதன்


(ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் -  வரலாறு, தமிழ்ப்  பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)




       ஒரு முன் குறிப்பு:

     (2018-2019 ஆம் கல்வியாண்டில் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கும், 2019-2020 ஆம் கல்வியாண்டில் 2,7,10,12 ஆகிய வகுப்புகளுக்கும் எஞ்சிய 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கு 2020-2021 ஆம் கல்வியாண்டில் புதிய பாடநூல்கள் எனத் திட்டமிட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது அதனுடன் சேர்ந்து இக்கல்வியாண்டே 3,4,5,8 வகுப்புகளுக்கு புதிய பாடநூல் வழங்கப்படும் என்கிற அரசாணை வெளியானது. இதைத் தவறாகப் புரிந்துகொண்ட நமது ஆசிரியப் பெருந்தகைகள் 10, 12 வகுப்புகளுக்கு பழைய பாடநூல்தான் என்ற தவறான பரப்புரையில் ஈடுபட்டனர். அரசோ, கல்வித்துறையோ இதுகுறித்த உரிய விளக்கமளிக்க முயலவில்லை. 



     இந்நிலையில் சென்ற மாதமே 7 ஆம் வகுப்பு தமிழ்ப்பாடநூலின் ‘திருட்டுப் பிரதி’ சமூக ஊடகங்களில் வெளியானது. இது முப்பருவமாக இல்லாமல் ஒரே பாடநூலாக இருந்ததும் மீண்டும் குழப்பத்திற்கு வழிவகுத்தது. ஆனால் 9 ஆம் வகுப்பிற்கு மட்டும் முப்பருவமுறை நீக்கப்படுகிறதா, அல்லது எல்லா வகுப்புகளுக்குமா என்கிற புதுக்குழப்பம் உருவானது. இப்போது (21.03.2019 முதல்)  10 அறிவியல், கணிதம், அறிவியல், 12 தமிழ், ஆங்கிலம், கணிதவியல், கணினி அறிவியல், இயற்பியல் (தொகுதி 01) ஆகியவற்றில் ‘திருட்டுப் பிரதிகள்’ சமூக வலைத்தளங்களில் எளிமையாக கிடைக்கின்றன.  பாடநூலுக்கென உள்ள அதிகாரப்பூர்வ இணையத்தில் இவை இல்லை. 


    ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஐ விட இந்த ‘நோட்ஸ் ராக்கர்ஸ்’ மிக விரைவாக இருக்கிறார்கள். கல்வித்துறையோ, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமோ (SCERT) எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. இத்தகைய ‘திருட்டுப் பிரதிகள்’ நோட்ஸ் வியாபாரிகள் மற்றும் 10, 11 தேர்வுகள் முடிந்தவுடன், விடுமுறை விடாமல் குழந்தைகளை வதைக்கும் தனியார் பள்ளிகள் ஆகியோரை முன்னிறுத்தி வெளியாவது வெளிப்படையானது.  பல அரசுப்பள்ளிகளும் இந்த நகலெடுக்கும் வேலையைச் செய்கின்றன. 


    இது குறித்து விளக்கம் அளிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ விரும்பவில்லை எனில்   மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இணையதளத்தில் புதியப் பாடநூல்களைப் பதிவேற்றும் வேலையையாவது  உடனடியாகச் செய்யலாம். அதை ஜூன் மாதம் செய்வோம் என்றால் இத்திருட்டைத் தடுக்க முயற்சிக்காமல் இருப்பது ஏன்? சென்ற முறை சமச்சீர்க் கல்வி பாடநூல் உருவாக்கத்தின்போது இரண்டாம் ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கு ஒரே நேரத்தில் அவசர கோலத்தில் தயாரித்தது பாடநூலின் தரமின்மைக்கும் அரசுப்பள்ளிகளிலிருந்து பெருமளவு மாணவர்கள் வெளியேறுவதற்கு ஒரு காரணமாக அமைந்ததையும் இங்கு எச்சரிக்கையாகக் குறிப்பிட விரும்புகிறேன். (வேறு பல காரணங்களும் உண்டு.)  எது எப்படியிருப்பினும் நாம் பாடநூலைக் கவனிக்கும் வேலையைத் தொடர்வோம். பாடநூலைத் தாண்டிய சிந்தனைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட கல்விப்புலத்தில் இருக்கும் இந்த ஒரே கருவியின் தரத்தைப் பற்றிக் கவலைப்படுவது சமூக அக்கறையின் விளைவு என்பதையும் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.) 


     “பாடப்புத்தங்களின் அவசியத்தைக் குறித்துப் பிரமாதமாகக் கூறப்படுகிறது. ஆனால், அவை அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை. கிடைத்த பாடப் புத்தகங்களைக்கூட நான் அவ்வளவாகப் பயன்படுத்திக் கொண்டதாக எனக்கு நினைவு இல்லை. ஏராளமான புத்தகங்களைப் பிள்ளைகளின் மேல் சுமத்துவது அவசியம் என்பதையும் நான் காணவில்லை”. (பக்.424, மகாத்மா காந்தி படைப்புகள், முதல் தொகுதி, சுயசரிதம் அல்லது சத்திய சோதனை, அகமதாபாத் நவஜீவன் பிரசுராலயம் வெளியீடு, மார்ச் 2002, தமிழில்: ரா.வேங்கடராஜூலு, தமிழ்ப் பதிப்பு மற்றும் பொறுப்பாசிரியர்: லா.சு.ரங்கராஜன்)


   ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவ தமிழ்ப் பாடநூலில் ‘தமிழ்நாட்டில்  காந்தி’ என்னும் பாடம் உள்ளது. “பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் அவர் பாடுபட்டார்”, (பக்.05) எனும் அறிமுகத்துடன் பாடம் தொடங்குகிறது. 


    “காந்தியடிகள் ஒருமுறை மதுரையில் தங்கியிருந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வரலாம் என்று தலைவர்கள் அவரை அழைத்தனர். “அந்தக் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி உண்டா?” என்று காந்தியடிகள் கேட்டார். அங்கு இருந்தவர்கள் “இல்லை” என்றனர். “அப்படியானால் அங்கே வரமாட்டேன்” என்று கூறிவிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கோவிலுக்குள் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மதுரைக்கு வந்தபோதுதான் காந்தியடிகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார்”, (பக்.07) என்று பாடத்தில் பூடகமாகச் சொல்லப்படுகின்றது. யாருக்கு அனுமதியில்லை, எதன் பொருட்டு அனுமதி மறுக்கப்பட்டது என்கிற விவரம் மாணவர்களுக்குத் தெரிய வேண்டாமா? பிறகு தீண்டாமை, தீண்டாமை ஒழிப்பு பற்றி அவர்களிடம் எதை விளக்குவீர்கள்?


     தொடர்ந்து பாடம் இவ்வாறு செல்கிறது. எதையும் தெளிவின்றிச் சொல்வதுதான் இவர்களது தமிழ் மரபு போலும். நவீன எழுத்து புரியவில்லை என்று கதைப்பர், இவர்களது தமிழ் ஏன் புரிதலுக்குக் கடினமாக உள்ளது. 


    “குற்றால அருவியில் நீராட அனைவருக்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அருவிக்குச் செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தது. அதன் வழியாகச் செல்ல ஒரு சாராருக்குத் தடை இருந்தது. எனவே அனைவரும் அருவியில் நீராட முடியாத நிலை இருந்தது. அதனை அறிந்த காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட மறுத்துவிட்டார். மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்ததை இதன்மூலம் அறிய முடிகிறது”, (பக்.07)


     கோயில் வழியே செல்ல அனுமதி இல்லாததால் குளிக்க முடியாமற்போனதாம்! பிற அருவிகள் அனைத்து சாதியினரும் குளித்தனரா? குளிக்கும் உரிமையை வைத்துக்கொண்டு சிறிய விமானம் அல்லது ஹெலிகாப்டர் எடுத்துக்கொண்டுச் சென்று குளிக்க வேண்டுமா? இதுதான் உரிமையோ! 


     அருவியில் குளிக்கும் உரிமை அனைவருக்கும் இருந்ததாம்! இது பொய்யான செய்தி. ‘ஒரு சாரார்’ என்பதன் பொருள் என்ன? இங்கு தலித்கள் எனப்படும் பட்டியலினத்தவர் மூன்று வகையாக இருந்தனர், இருக்கின்றனர். மேலும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பாரும் ஒதுக்கி வைக்கப்பட்டதுண்டு. முதலில் ஆங்கிலேயர்கள் மட்டும் இங்கு குளித்தனர். அடுத்த நிலையில் உயர்த்தப்பட்ட சாதி இந்துக்கள் ஒடுக்கப்பட்டோரை குளிக்க விடவில்லை. நாடு விடுதலைக்குப் பிறகே இங்கு பெண்கள் குளிக்க முடிந்தது வரலாற்று உண்மை. இவற்றைத் திரித்து குழந்தைகளிடம் பொய்ச்செய்திகளைப் பரப்புவது பாடநூலுக்கு அழகா? குற்றாலத்தில் முதன்மை அருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என எத்தனையோ அருவிகள் உண்டு. இவர்கள் எதைச் சொல்கிறார்கள் என்கிறத் தெளிவும் பாடத்தில் இல்லை. 


    மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என்று யாரால் எப்போது அறிவிக்கப்பட்டது? சட்டம் கொண்டு வந்தது யார்? ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தியது எவர்? என்னதான் நடந்தது? ஏனிந்த வரலாற்றுத் திரிபு வேலைகள்? 


      1939 ஜூலை 08 அன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அ.வைத்தியநாத  அய்யர், பி.கக்கன்,  சுவாமி முருகானந்தம், ஆர்.பூவலிங்கம், சின்னய்யா, முத்து, எஸ்.எஸ்.சண்முகம்  என்ற அறுவருடன் ஆலய நுழைவு செய்தார். இவர்கள் அனைவரும் பட்டியலினத்தவர்களான பறையர், பள்ளர் (தேவேந்திரர்), அருந்ததியர் ஆகிய வகுப்பையும் மிகவும் புறக்கணிப்பிற்கு உள்ளான நாடார் (சாணார்) வகுப்பையும் சேர்ந்தவர்கள். இது தேர்தலைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் செய்த செயல் என்பதையும் நிரந்தரப் பலனளிக்கும் சட்டத்தை இயற்றவேண்டும் என்று பெரியார் கோரினார். 



    இந்நிகழ்விற்கு முன்னதாகவே பல இடங்களில் ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 1922 இல் தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவைக் கடுமையாக எதிர்த்த அ.வைத்தியநாத  அய்யர் காலச்சூழல், சுயமரியாதை இயக்கப் பாதிப்பு போன்றவற்றால் கருத்து மாற்றம் பெற்றதை இதிலிருந்து உணரமுடியும். அதுவும் இவர்கள் கருவறைக்குள் நுழையவில்லை. மிகவும் குயுக்தியாக ‘ஆலயநுழைவு என்கிற பாவனையை’, நிகழ்த்திக் காட்டினர். இதற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அடியாட்களை அனுப்பி உதவியதாக கிளைக்கதையும் உண்டு.


    1938 எம்.சி.ராஜா கொண்டுவந்த தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவு மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்த ராஜாஜி 1939 எத்தகைய சட்டம் கொண்டுவந்தார் என்பதையும் காண்பது அவசியம். இச்சட்டம் அனைவரையும் கோவிலில் நுழைய அனுமதிக்கும் சட்டமல்ல; சட்டத்தை மீறி கோவிலில் நுழைந்தவர்களை அரசு பாதுகாக்கும் என்பதே இச்சட்டத்தின் சாரமாகும். (Madras Temple Entry Authorization and Indemnity Act – 1939) 


     எல்லோரும் கோயிலுள் நுழையலாம் என்று சட்டமியற்றாமல் விரும்பியவர்கள் நுழைந்தால் அவர்களை அரசு பாதுகாக்கும் என்று என்ற சட்டம் கொண்டு வருவது சரியா எனக்கேட்டு பெரியார் எதிர்த்தார். அனைத்து சாதியினரும் கோயிலில் நுழையலாம் என்ற சட்டம் 1947 இல் தான் கொண்டுவரப்பட்டது. இதுதான் உண்மையான ஆலய நுழைவுச் சட்டமாகும்.  (The Tamil Nadu Temple Entry Authorization  Act – 1947) 

         இருப்பினும் தீண்டாமை, வருணாசிரமம் குறித்த காந்தியின் கருத்துகளை தமிழ்ச் சனாதனிகள் மிகக்கடுமையாக எதிர்கொண்டனர்.  'காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்' எனும் அ.மார்க்சின் நூலும் (ஆழி வெளியீடு, முதல்பதிப்பு: பிப்ரவரி: 2007)  அதன் பின்னிணைப்பாக உள்ள மா.நீலகண்ட சித்தாந்தி என்பவர் எழுதிய 'தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம் (தடை)'  என்னும் நூலும் (1932)  இதை நமக்கு உணர்த்துகின்றனர். அன்று காந்திக்கு இவற்றில் இருந்த ஈடுபாடு காங்கிரஸ் கட்சிக்கு இருந்ததா என்பதில் மாறுபட்ட கருத்துகள் உண்டு. 'சமபந்தி போஜனத்தை' மட்டும் அறிவித்துவிட்டு, அதைச் செயல்படுத்தும்போது ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தலித் மக்களைக் கைவிடும் போக்கை அன்றைய காங்கிரஸ் கையாண்டதை 'நீடாமங்கலம் - சாதிக்கொடுமையும் திராவிட இயக்கமும்'  என்ற ஆ.நீலகண்டனின் ஆய்வு நூல் வெளிப்படுத்துகிறது. (காலச்சுவடு வெளியீடு,  முதல்பதிப்பு: ஆகஸ்ட் 2017)  இந்தகைய செயலைகளில் ஈடுபடாததால் திராவிட இயக்கம் தனித்து நிற்கிறது; மக்களிடம் செல்வாக்குப் பெறுகிறது. 


   அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் உச்சநீதிமன்றத்தால் தடுக்கப்பட்டதை நாமறிவோம். இன்றுக்கூட கோயில் நுழைவு என்பது வெறும் கோவிலினுள் நுழைவது என்பதாக இருப்பது முறையல்ல. கோயில் கருவறை நுழைவு, அர்ச்சகர் ஆகும் உரிமை, இறைவனைத் தொட்டு வழிபடும் உரிமை போன்றவை இல்லாத நிலைதான் நீடிக்கிறது. 1990 களில் திருவரங்கம் கோயில் நுழைவுப் போராட்டத்தை ம.க.இ.க. அமைப்பு நடத்தியது. சட்டமேதை அம்பேத்கர்  படம் கருவறைக்குள் வைக்கப்பட்டது. அதன் பின்னர் தீட்டு கழிக்கும் சுத்திச் சடங்குகள் நடந்தேறின. இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலித் என்பதால் வட இந்தியக் கோயில் ஒன்றில் நுழையவிடாமல் வாசற்படியுடன் திருப்பியனுப்படுகிறார். இதில் சாமன்ய மனிதனின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. 


   தேர்த்திருவிழா போன்றவற்றிற்காக வீதிக்கு வரும் கடவுள்கள் தீட்டுப்பட்டுவிடுவதால் சுத்தி சடங்குகள் செய்யப்பட்டே உள்ளே கொண்டு செல்லப்படுகின்றனர். ஒவ்வொரு அரசுப்பள்ளிகள், அரசு அலுவலகங்கள், வீடுகள், கோயில்கள் அனைத்தும் ‘கணபதி ஹோமம்’ எனப்படும் தீட்டுக் கழிக்கும் சடங்கு நிகழ்வுகளுக்குப் பின்னரே பயன்பாட்டுக்கு வருகின்றன. இந்தத் தீட்டைக் கழிக்க பசு மாட்டு முத்திரம் (கோமியம்), தீ, பட்டு, மந்திரங்கள் ஆகியனப் பயன்படுகின்றன. மனித மனங்களில் படிந்துள்ள அழுக்குகளை இவற்றால் நீக்க முடியுமா என்ன? 


   
   உ.வே.சாமிநாதர் (பக். 07), வ.உ.சிதம்பரனார் (பக்.15), விசயரகுநாத சொக்கலிங்கர் (பக்.21), நாமக்கல் கவிஞர், உ.வே.சா. (பக்.08), கவிமணி தேசிக விநாயகனார் (பக்.43, ஆறாம் வகுப்பு), பசும்பொன் முத்துராமலிங்கனார் (பக்.12, ஒன்பதாம் வகுப்பு)  போன்ற முறையில்  சாதியை மறைத்து எழுதுவது சிறப்பானதுதான். ஆனால் இவற்றை எல்லா இடங்களிலும் கடைபிடிப்பதில்லையே, ஏன்? மேலும் ‘திருத்தக்கத்தேவர்’ (பக்.06) ஐ என்ன செய்வது? ஓரிடத்தில்  ‘திருத்தக்கதேவர்’ (பக்.08) ஆகிறார். இங்கு வல்லினம் மிகுமா, மிகாதா? 


   காந்தி என்பதும் சாதிப்பெயர்தானே! அதை என்ன செய்வது?  மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியில் ‘காந்தி’ என்பது சாதிப்பெயரே! 1929 இல் தமிழ்நாட்டில் சாதிப்பெயரை நீக்குவதை சுயமரியாதை இயக்கம் முன்னெடுத்தது.  அதன் தாக்கமே இன்று தமிழ்நாட்டுப் பெயர்களில் பெருமளவு சாதிப்பட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது. பக்தவத்சலம், கு.காமராஜ், அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்ற முதலமைச்சர்கள் பட்டியலை வேறு எந்த மாநிலத்திலும் காணமுடியாது. இவர்களுக்கு சாதி இல்லை என்று சொல்லவரவில்லை. சாதிப்பெயரை தங்களது பெயருடன் தூக்கிச் சுமக்கும் வேலையையாவது தமிழர்கள் விடக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். காந்தி, மோடி, முகர்ஜி, பானர்ஜி, சட்டர்ஜி, பாட்டில்,  குப்தா, சென், யாதவ், சிங், சோலங்கி, மகாஜன், நாயர், நம்பூதிரி, ரெட்டி,  நாயுடு,  என்கிற அனைத்து பெயரடைகளும் சாதிப்பெயரைக் குறிப்பன. 


      ஆனால் நமது பாடநூல்கள் வாஞ்சி அய்யர் என்று இறுதிவரை கையெழுத்திட்டவரை வாஞ்சிநாதன் என்று எழுதுவதும் 1927 லேயே சாதிப்பெயர் துறந்து, அதை இயக்கமாக்கிய  ஈ.வெ.ராமசாமி என்று அறியப்பட்ட தந்தை பெரியாரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்றெழுதும் ஒருவித மனநோய்க்கு ஆட்பட்டுள்ளன. பாடநூலில் திருத்தம் செய்தாலும் வினாக்கள் பழையபடியே கேட்கும் நிலை இருப்பதை முன்பே குறிப்பிட்டுள்ளேன். டிசம்பர் 25, 1927 இல் குடியரசு இதழிலிருந்து பெரியாரின் சாதிப்பட்டம் நீக்கி அச்சிடப்படுகிறது. 1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் சாதிப்பட்டத்தைத் துறத்தலை இயக்கமாக சுயமரியாதை இயக்கம் முன்னெடுத்தது. 


   ஒன்பதாம் வகுப்பு வரலாறு மூன்றாம் பருவப் பாடநூலின் ‘ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்’ எனும் பாடத்தில் “வட்டிக்குக் கடன் வழங்குவதையேத் தொழிலாகக் கொண்டவர்கள் ஒரு குறிப்பிட்ட கடன் வழங்கும் முறையைப் பின்பற்றினர். கடன் வழங்குவோர் மகஜன், சௌக்கார், போரா போன்ற பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். தமிழ்மொழி பேசப்பட்ட பகுதிகளில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் கடன் வழங்குவதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர்”, (பக்.57) என்று தமிழ் வழியும், ஆங்கில வழியில் பின்வருமாறும் உள்ளது.  சென்னையில் சௌகார்பேட்டை உள்ளதை நினைவிற்கொள்க.


   “A system of money lending was followed by professional money-lenders who belonged to various communities such as mahajans, sahukars, and bohras. In the Tamil speaking areas there were Nattukottai Chettiyars”. (page:50) 


    “கோடிட்ட இடங்களை நிரப்பவும்”,  பயிற்சியில் 4 வது வினாவாக “தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளில் ………………………. வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் இருந்தனர். (விடை: நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்) (பக்.61)  பாடத்தில் இருக்கிறது என்று விட்டுவிடாமல் கேள்விகேட்டு சாதிப்பெயரை மீண்டும் எழுதவைக்கிறார்கள். 


   ஒன்பதாம் வகுப்பு வரலாறு இரண்டாம் பருவத்தில் வணிகம் பற்றிச் சொல்லும்போது “பதினான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் வணிகக் கூட்டு நிறுவனங்களே (வணிகர்களின் குழுக்கள் – Guild) பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. அவைகளில் இரண்டு நன்கறியப்பட்டவை. 


ஐநூற்றுவர். இவர்கள் ஐஹோலைத் தலைநகராகக் கொண்டவர்கள்.
மணிக்கிராமத்தார். இவ்வமைப்புகள் வல்வேறு வணிகக் குழுக்களையும் நகரம் என்ற அமைப்பைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களையும் உள்ளடக்கியதாகும்”, (பக்.49, 9 ஆம் வகுப்பு, இரண்டாம் பருவம், சமூக அறிவியல்)


     இங்கு ‘நகரம்’ என்னும் வணிகக்குழுவின் பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. இவர்களே ‘நகரத்தார்’ என அழைக்கப்பட்டனர். இவர்களது தொழில்களுள் வட்டியும் ஒன்று. சாதிப்பெயர் வேண்டாம் என்றால் ‘நகரத்தார்’ என்றே சொல்லியிருக்கலாம். திரும்பத் திரும்ப சாதிப்பெயரைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எனவே சாதிப்பெயரைப் பயன்படுத்துவது குறித்த தெளிவான பார்வைகளும் வரைமுறைகளும் இல்லை என்பது தெளிவாகிறது. 


      ஒன்பதாம் வகுப்புத் தமிழ் மூன்றாம் பருவப் பாடநூலில் ‘பழந்தமிழர்  சமூக வாழ்க்கை’ எனும் பாடத்தில், “தமிழரின் சமூக வாழ்க்கை தாமும் வாழ்ந்து, தம்மைச் சுற்றியிருக்கும் அனைவரையும் வாழவைக்கும் சிறப்புடையதாகத் திகழ்கிறது”, (பக்.02) 


“………… உலகப் பொதுமை போன்ற தன்னேரில்லாத பண்புகளோடு உயர்ந்திருந்தது நம் தமிழர் சமுதாயம்”,  (பக்.02)


“கல்வி ஒருவனுக்கு உயர்வளிக்கும் என உறுதியாக நம்பியதால் எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும் அக்குடியில் கற்றோரை மதித்தனர்”, (பக்.05)


     மேற்கண்ட வரிகளில் முரண்பாடுகள் உள்ளனவே! “தன்னேரில்லாத பண்புகளோடு உயர்ந்திருந்தது நம் தமிழர் சமுதாயம்”, குடிப்பிறப்பால் ஏற்றத்தாழ்வாக இருந்ததா? “எக்குடியில் பிறந்தாலும் கல்விகற்றவரை மதித்தனர்”, என்றால் பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டப்பட்டதா? வேத, வருணச் சமூகந்தான் தமிழ்ச் சமூகமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. 


    மேலும் “அக்காலத்தே கல்வி கற்கும் இடங்களாக மரத்தடியும் ஊர் மன்றமும் ஆசிரியர் வீடும் வீட்டுத் திண்ணைகளும் அமைந்திருந்தன. பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும் பழக்கம் இருந்தது”, (பக்.05) ஆசிரியர் வீடுகளில், வீட்டுத் திண்ணைகளில் படிக்கும் குருகுலக் கல்வி சங்ககால தமிழ்க் கல்வியா? சைவ, வைணவக் கோயில்கள், பவுத்த விகாரைகள், சமணப் பள்ளிகள்  எத்தகைய கல்விமுறைகள் இருந்தன? 


    “தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் சாதி சமயப் பிரிவுகள் மேலோங்கி இருந்தன. பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேறுபாடுகள் இருந்தன. சாதி என்னும் பெயரால் ஒருவரை ஒருவர் இழிவு செய்யும் கொடுமை இருந்தது”. (பக்.27)


  “பெரியார் வாழ்ந்த காலத்தில் சாதி, சமயப் பிரிவுகள் மேலோங்கி இருந்தன”,  எனில் தற்போதைய நிலவரம் என்ன? எல்லாம் சரியாகிவிட்டதா? பிறப்பின் அடிப்படையில் வேறுபாடுகள் சங்க காலத்திலும் பெரியார் வாழ்ந்த காலத்திலும் இருந்தது என்பது எதன் அடிப்படையில் சொல்லப்படுகிறது? சங்ககால தமிழ்ச் சமூகம் குடிப்பிறப்பு அடிப்படையிலான  வருணாசிரமச் சாதியச் சமூகமாக இருந்தது என்று சொல்ல வருவது ஏன்?


    பெரியார் தோற்றுவித்த இயக்கத்தில் சுயமரியாதை இயக்கம் (1925) மட்டுமே சுட்டப்படுகிறது. ‘சுயமரியாதை’ என்பதைத் ‘தன்மதிப்பு’ (பக்.26) என்று பெயர்த்தவர்கள் இயக்கத்தின் பெயரை பெயர்க்காமல் விட்டதற்குப் பாராட்டலாம், மகிழ்ச்சி அடையலாம். ரிவோல்ட் (ஆங்கில இதழ்) (பக்.30) என்று எழுதியிருப்பதை பாராட்டலாம். எனெனில் முந்தைய பாடநூல்கள் Young India, Coral Mill என்பனவற்றை முறையே பால பாரதம், பவள ஆலை என்று மொழிபெயர்ப்பு செய்தன. இம்மாற்றம் வரவேற்கத்தக்கது. 


    திராவிடர் கழகத்தை (1944) ஏன் மறைக்க வேண்டும்? நீதிக்கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்து திராவிடர் கழகம் பிறந்ததை ஏன் சொல்லக்கூடாது? இன்றைய முதல்வர் எடப்பாடியை பழனிசாமி மற்றும் ஆளும்கட்சியை இன்றைய திராவிடர் கழகத் தலைமை (கி.வீரமணி) ஆதரிக்கவில்லை என்பதற்காக பெரியாரால் தொடங்கப்பட்ட இயக்கத்தை மறைக்கலாமா? இதற்கு பெரியார் பாடம் வைப்பதற்குப் பதிலாக ஹெட்கேவர், கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாய, வி.டி.சாவர்க்கர் ஆகியோரைப் பற்றியும் சமகாலத்தில் தோன்றிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றியும் பாடம் வைத்துவிட்டுப் போகலாமே!  


    காந்தியம், பெரியாரியம் பற்றி இப்பாடப்பகுதிகள் பேசியுள்ளதால் எழுத்தாளர் பிரேம்  அவர்களின் ‘காந்தியைக் கடந்த காந்தியம்: ஒரு பின்நவீனத்துவ வாசிப்பு’ என்ற நூலிருந்து சில வரிகளுடன் நிறைவு செய்வோம். 

 
    “அஹிம்சை, சத்தியாகிரகம், சர்வோதயம் என்ற காந்திய மும்மைக் கோட்பாடுகளும் சமண, பௌத்தக் கோட்பாடுகள். இந்து சமயத்தில் இவற்றிற்கு இடமில்லை. எளிமை, உழைப்பு, கூட்டு வாழ்வு என்பனவற்றிற்கு வர்ணமுறையில் இடமில்லை. விடுதலை, போராட்டம், பணிவுமறுப்பு என்பனவற்றிகு பக்தி முறையில் இடமில்லை. ஆனாலும் காந்தியம் இவற்றைக் கொண்டே இயங்க முயல்கிறது. 

   சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதற்கு இந்தியப் பொது நம்பிக்கையில் இடமில்லை. ஆனால் மார்க்சியமும் பெரியாரியமும் அம்பேத்கரியமும் காந்தியமும் இவற்றைத்தான் வாழ்வு நெறியாக முன்வைக்கின்றன; வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு விளக்கங்களுடன்”. (பக்.284, காந்தியைக் கடந்த காந்தியம்: ஒரு பிநவீனத்துவ வாசிப்பு – பிரேம், காலச்சுவடு வெளியீடு)
                                       (இன்னும்வரும்…)                                                                                                                                                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக