மணிமேகலை வலியுறுத்தும்
பவுத்த அறங்களை மாற்றலும் திரித்தலும் தகுமா?
(மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 08)
மு.சிவகுருநாதன்
(ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)
“பவுத்தத்தின் திறன்சார்ந்த
வாழ்வில் வணக்கங்கள், சடங்குகள், தவம் அல்லது பக்தியின் மூலம் ஆதீத ஆற்றல்களைப்
பெறுதல், வருவதுரைத்தல் ஆகியவற்றுக்கும் இடமில்லை.” (அ. மார்க்ஸ், புத்தம் சரணம்
நூலில்.)
ஆறாம்வகுப்பில் ‘பசிப்பிணி போக்கிய பாவை’ (பக்.24)
என்ற நாடகமொன்று மணிமேகலைக் காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மணிமேகலை
– தீவதிலகை, மணிமேகலை – ஆதிரை, மணிமேகலை – சோழ மன்னர் – சிறைக்காவலர் என மூன்று காட்சிகள்
இதிலுண்டு.
“தீவதிலகை: நம் எதிரில் பூக்கள் நிறைந்து விளங்கும்
இந்தப் பொய்கையைப் பார். இதற்கு கோமுகி என்று பெயர். ‘கோ’ என்றால் பசு. முகி என்றால்
முகம். பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப்
பெற்றது”, (பக்.24)
“மணிமேகலை: வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த
நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை
எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். மேலும்
அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை
வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே என் வேண்டுகோள் மன்னா!”, (பக்.27)
நவீன இலக்கியத்திலிருந்து கவிதைகள், சிறுகதைகள்,
செவ்விகள் போன்றவற்றைப் பாடநூலில் பயன்படுத்தும் போது அவை தணிக்கைக்கு உள்ளாகின்றனர்.
தணிக்கை வாரியம் திரைப்படங்களை வெட்டுவதைப் போன்று படைப்புகளின் சில பகுதிகள் மற்றும் சொற்கள் வெட்டப்படுகின்றன.
இதற்கு அந்த ஆசிரியரிடம் (தற்காலப் படைப்பாளி எனில்.) அனுமதி பெறுகிறார்களா என்பதும்
தெரியவில்லை. இன்னொரு பக்கம் செவ்வியல் இலக்கியங்களையும் திரித்து எழுதவது சரியா என்பதை
ஆசிரியர்களும் பேராசிரியர் பெருமக்களும் உணரவேண்டும். ஏன், எதற்காக இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது
என்கிற விளக்கத்தை இவர்கள் அளிக்க வேண்டும். நாம் தொடர்ந்து வலியுறுத்துவது போல் ‘கிள்ளுக்கீரை’
மனநிலை மொழியை வளப்படுத்தாது; மாறாக மொழிக்கு எதிரானது.
நமது தமிழாசிரியர்கள் மற்றும் தமிழ்ப் பேராசிரியர்கள்
பெருமக்கள் பலரும் நவீன இலக்கியத்தில் ஈடுபாடு
இல்லாதவர்களாக இருக்கின்றனர். இதுபோக செவ்வியல் இலக்கியத்தை திரிக்கும் போக்கையும்
கைவிடமாட்டார்கள் போலிருக்கிறது. ‘குமுதம்’ எனும் இதழை அனைவரும் அறிந்திருப்பர். அந்த
நிறுவனம் சுமார் 15 ஆண்டுகளாக ‘தீராநதி’ என்னும் இலக்கிய இதழொன்றை நடத்தி வருவது இவர்களில்
எத்தனை பேருக்குத் தெரியும்? மாத இதழான இதை யாரும் வாசித்திருப்பார்களா என்றும் தெரியவில்லை.
சிற்றிதழ்கள் இவர்கள் கண்ணுக்குப் படப்போவதேயில்லை. குமுதம் தீராநதி, விகடன் தடம் போன்ற பெரிய நிறுவனங்களின் இதழைக் கூட இவர்கள் கண்ணில்
படுவதில்லை என்றால் எப்படி?
‘தீராநதி’ மாத இதழில் ‘நெஞ்சில் கனல் மணக்கும்
பூக்கள்’ எனும் தலைப்பில் பேரா. அ. மார்க்ஸ் ‘மணிமேகலை’ பற்றித் தொடர் எழுதிவருகிறார்.
இவர் தமிழ்ப் பேராசிரியரோ, தமிழாசிரியரோ அல்ல; எழுத்தாளர், மனித உரிமைப் போராளி, சமூக
ஆர்வலர், பணிநிறைவு இயற்பியல் பேராசிரியர்.
“சர் கோட்ஃப்ரே லூஷிங்டன் (1885-1895 காலகட்டத்தில்
இங்கிலாந்து உள்துறைச் செயலாளர்) என்ன இருந்தாலும்
ஒரு அதிகாரி. அவரது அறத் தன்னிலைக்கும் அதிகார இருப்பிற்கும் உள்ள முரணை அவரே உணர்ந்து
கொள்வதுதான் அவரது மேன்மை எனலாம். சிறைக்கைதிகள் இன்றைய சிறைச்சாலைகளின் ஊடாகக் கழிக்கும்
தண்டனை வாழ்வின் மூலம் திருந்துதவற்கு வாய்ப்பே இல்லை என்பதைச் சரியாகவே அடையாளம் காணும்
அவர் இந்தச் சிறை அமைப்பில் அது சாத்தியமில்லை எனப் பெருமூச்சு விடுகிறார். அதிகாரி,
அவரால் வேறென்ன செய்ய முடியும்?
ஆனால் நம் தமிழிலக்கியத்தில் வேறெங்கும் காணக்கிடைக்காத
ஒரு அற்புதம் நிகழ்கிறது. முற்றிலும் நாயகனே இல்லாத, ஒரு நாயகியை மட்டுமே தலைவியாய்க்
கொண்டு இயங்கும் மகா காவியமான மணிமேகலையில் காவிய நாயகியான அன்னை மணிமேகலை முற்றிலும்
புதுமையாய் ஒரு தீர்வைச் சொல்லுகிறாள். அவள் அதிகாரி அல்லள். குடும்பச் சிறையில் அகப்பட்ட
ஒரு சாதாரண மானுடப் பெண்ணும் அல்லள். அவள் புத்த நெறியை ஏற்ற ஒரு துறவி. எனவே அவளால்
அதைச் சொல்ல முடிகிறது.
அவளுக்கு புத்தபிரான் அருளால் யாருக்கும் வாய்க்காத
ஒரு பெரும்பேறு வாய்க்கிறது. அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி ஒன்று அவளுக்கு அளிக்கப்படுகிறது.
அதன் மூலம் மானுடரின் மிகப் பெரிய பிணியாகிய பசிப்பிணியை அகற்றும் பெரும்பேறுக்கு உரியவளாகிறாள்
அந்த இளம் பிராயத்தில் அன்னை மணிமேகலை. சிங்கள மொழியில் ‘பசி’க்கு இணையான சொல் ‘படகினி’.
அதன் பொருள் வயிற்றிலே தீ. அந்தத் தீயை அணைப்பதைத் தவிர பெரும்பேறு வேறு என்னவாக இருக்க
முடியும்?
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியின் ஊடாக வீதிதோறும்
அலைந்து பசித்தோர்க்கு அவள் உணவளித்து வரும் அந்தச் செய்தி சோழ மன்னருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அழைத்து வரச் சொல்கிறார். மன்னனுக்கும் மாதவி மகளுக்கும் இப்படி அமைகிறது உரையாடல்:
“மிக்க தவமுடையாய்! நீ யார்? கையிலேந்திய பாத்திரம்
எங்கே கிடைத்தது?”
“அரசே! நெடுங்காலம் வாழ்வாயாக; யான் விஞ்சை மகள்.
இந்நகரில் வேற்று வடிவங் கொண்டு திரிந்தேன். இது பிச்சைப் பாத்திரம்; இதனை அம்பலத்தேயுள்ள
தெய்வமொன்று எனக்கு அருளியது; இது தெய்வத்தன்மையோடு கூடியது. யானைப் பசியென்னும் தீராப்பசியைத்
தீர்த்தொழித்தது; பசியால் மெலிந்தவர்களுக்கு மிருதஞ்சீவினியாக உள்ளது”,
“மிக்க தவமுடையாய்! நான் செய்ய வேண்டியது என்ன?”
“சிறைச்சாலையை அறச்சாலையாகச் செய்ய வேண்டும்”.
அன்னையின் வாக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிறைச்சாலை
அழிக்கப்பட்டது. அது அறவோர்கள் தங்கும், அறச் செயல்களுக்கான இல்லமாக ஆக்கப்பட்டது”,
(சிறைக்கோட்டமும் அறக்கோட்டமும்: பவுத்தம் சொல்வதென்ன? - அ.மார்க்ஸ், ‘தீராநதி’ பிப்.2017)
பாடநூலைப்
படிக்கும்போது அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. நமது குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்?
என்பதே நம்முன் எழும் கேள்வி. புது விளக்கங்களும் தாங்கள் விரும்பும் அறத்தை மணிமேகலை
வழியே சொல்ல வைக்கும் அநீதியும் நிகழ்கிறது. முன்னதாக மணிமேகலைக் காப்பியத்தில் என்னதான்
சொல்லப்படுகிறது என்பதைப் பார்த்து விடுவோம்.
“யான்செயற்
பாலதென் இளங்கொடிக்கு? என்று
வேந்தன் கூற, மெல்லியல் உரைக்கும் -
“சிறையோர் கோட்டம் சீத்து,அருள் நெஞ்சத்து
அறவோர்க் காக்கும் அதுவா ழியர்”,என,
அருஞ்சிறை விட்டாங்கு ஆயிழை உரைத்த
பெருந்தவர் தம்மாற் பெரும்பொருள் எய்தக்,
கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க் காக்கினன், அரசாள் வேந்தென்”, (பக்.193, மணிமேகலை மூலமும்
உரையும் – புலியூர் கேசிகன், வெளியீடு: சாரதா பதிப்பகம்)
“இளங்கொடிக்கு
யான் செய்யக்கூடியது என்ன?” என்று வேந்தன் அருளோடு வினவினான்.
மெல்லியலான அவள், “சிறைச்சாலையினை அழித்துவிட்டு
அருள் உள்ளங்கொண்ட அறவோர்களுக்கு உரிய அறக்கோட்டமாக அமைத்தருள்க. அதுவே எனக்காகச் செய்யக்கூடியது.
நீ வாழ்க!” என்றனள்.
அரிய சிறையிலுள்ளாரை விடுவித்துவிட்டு, அவ்விடத்திலே,
ஆயிழையாள் உரைத்த பெருந்தவம் உடையோரால் பெரிதான ஞானச் செல்வத்தைப் புகார் நகரம் அடையுமாறு,
கறைப்பட்ட மாக்கள் இல்லாது, அறவோர் வாழும் இடமாக அமையுமாறு, அரசாளும் வேந்தனும் செய்வித்
தருளினான் என்க. (பெரும்பொருள் – ஞானச் செல்வம் மக்களிடத்தே அறவுணர்வு பெருகவேண்டும்.
அறவுணர்வு பெருகிய நாட்டிலே சிறைக்கூடமும் வேண்டிய தன்றாகும் என்பது உணர்க)”. (பக்.
193&194, மேலே குறிப்பிட்ட நூல்)
மணிமேகலையின்
கோரிக்கையை ஏற்று மன்னன் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுகிறான் என்பதே மணிமேகலைக்
காப்பியம் சொல்வது. இவர்கள் இந்த நாடகத்தில் அதை ஒரு கூர்நோக்கு இல்லமாக மாற்றுகிறார்கள்.
இவர்களுக்குத் தேவையான அறங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று மணிமேகலை கேட்டாளாம்!
என்ன விந்தை இது! பசிப்பிணி போக்குதல், பல்லுயிர் ஓம்புதல் என்கிற பவுத்த அறங்களை அனைத்தையும்
உள்ளடக்கியது. மனிதனுக்கு மட்டுமல்ல பிற உயிர்களையும் பேணுவது. பெற்றோர்கள், உறவினர்களைப்
பேணுதல் என்று திரிப்பது மோசமானது. ‘பெரியோரை
மதித்தல்’ என்பதன் மறுதலை சிறியோரை மதிக்காதிருத்தல் அல்லது இகழ்தல் என்பதே. இதற்கு அனைத்து உயிர்களையும் மதிக்கும்
பவுத்தம் போன்ற அவைதீக மரபுகளில் இடமில்லை.
அக்கால மன்னராட்சிகளில் கடுந்தண்டனைகள் அளிக்கப்பட்டதும்
மரண தண்டனைகள் உடனே நிறைவேற்றப்பட்டதும் சராசரி நிகழ்வுகள். முதல் முறையாக அசோகர் காலத்தில்தான்
மரண தண்டனைக் கைதிகளுக்கு கருணை காட்டும் நடைமுறைகளும் தம்ம மகா மாத்திரர்கள் மூலம்
சிறைக்கைதிகளுக்கு விடுதலையளிப்பதும் வழக்கத்திற்கு வந்தன. இவை பவுத்தத்தின் பாதிப்பால்
நிகழ்ந்தது என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மேலும் சிறையிருப்போர்
எப்படிப்பட்டவர்கள் என்பதையும் கீழ்க்கண்ட ‘மணிமேகலை’ வரிகள் உணர்த்தும்.
“அதிர்கழல் வேந்தன்
அடிபிழைத் தோரை
ஒறுக்கும் தண்டத் துறுசிறைக் கோட்டம்
விருப்போடும் புகுந்து வெய்துயிர்த்துப் புலம்பி
ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை
வாங்கு கையகம் வருந்தநின்று ஊட்டலும்” (பக்.185, மேலே குறிப்பிட்ட
நூல்)
“ஒலி முழக்கம் செய்கின்ற வீரக்கழலணிந்த சோழ அரசன்,
தன்னுடைய திருவடி பணியாதோரை ஒறுக்கும் தண்டனையாக அடைத்து வைத்துள்ள சிறைக்கோட்டம்”
என்றே சாத்தனார் குறிப்பிடுவதும் இங்கு கவனிக்கத்தக்கது. சிறையில் இருப்போர் அனைவரும்
அறநெறி பிறழ்ந்தவர்களும் அல்லர்.
‘கோமுகி’ப் பொய்கை பற்றிச் சொல்லப்படும் விளக்கம்
சரியானதுதானா? ‘கோ’ என்பதற்கு அரசன் என்றும் பொருள் உண்டே! பசுவின் முகத்தில் பொய்கை
இருக்கிறது என்பதைவிட, இப்பொய்கைக்கு நீர் வரும் தூம்பு (Drain Pipe) பசு வடிவத்தில்
இருக்கிறது என்று சொல்வது கொஞ்சமாவது பொருத்தமுடையதாக இருக்கும். பசு முக வடிவிலான
நீர் விழும் தூம்பு என்பது பொருத்தம். இதைப்போல ஆனைத்தூம்பும் உண்டு. இன்றும் கோயில்களில்
விலங்குகளின் வடிவத்தில் நீர் வெளியேறும் தூம்புகளை அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.
“ஈங்கி கப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது
மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழிநீர் இலஞ்சி,
இருதிள வேனிலில்; எரிகதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்,
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலை னோடு பொருந்தித் தோன்றும்
ஆபுத் திரன்கை அமுத சுரபியெனும்
மாபெரும் பாத்திரம், மடக்கொடி கேளாய்!”, (பக்.110, மேலே குறிப்பிட்ட
நூல்)
“தீவதிலகை: இப்பொய்கைக்கு வேறு ஒரு சிறப்பும்
உண்டு. வைகாசித் திங்கள் முழு நிலவு நாளில் இப்பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம்
தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும்”. (பக்.25)
என்று வெறுமனே சொல்லப்படுகிறதே! இங்கு ஏன் இவர்களது ‘பாஷ்யம்’ இல்லாமற்போனது? இளவேனில்
வைகாசித் திங்கள் முழுநிலவில் ‘அமுதசுரபி’ தோன்றக் காரணமென்ன? அதுதான் புத்தர் பெருமான்
பிறந்த நாளன்றோ! அதைச் சொல்வதற்குக்கூட உங்களுக்கு அறிவு வேலை செய்யவில்லை என்றால்
என்ன செய்வது? இல்லாததை ஏற்றிக் கூறுவதும் இருப்பதை விட்டுவிடுவதும் அறமாகுமா?
சுரம் என்பதற்கு இசைக்குறிப்பு, ஏழிசை, இசைவகை,
பாலை, காய்ச்சல், கள், எரிந்துபோன காடு, உப்பு, வழி, உயிரெழுத்து, குரல், நகத்தின்
அடி என பல பொருள்கள் உண்டு. ஆங்கிலத்தில்
burnt forest, desert, musical note, fever, salt, toddy என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது.
இங்கு ‘சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை’ (பக்.16)
என்று சொல்லப்படுகிறது. ‘சுரம்’ என்பது இங்கு பாலை என்னும் பொருளில் கையாளப்படுவதாகவேத்
தோன்றுகிறது. வறண்ட நிலம், மணல் சார்ந்த நிலம் என்பதைவிட நாநிலங்களும் தம் இயல்பில்
திரிவது என்பதே சரியாக இருக்கும். எனவே கீழ்க்கண்ட நூல் விளக்கம் இதற்கும் பொருந்தும்
எனக் கருதுகிறேன்.
எனது ‘கல்வி அறம்’ நூல் கட்டுரையிலிருந்து (பாரதி
புத்தகாலயம் – புக் ஃபார் சில்ரன் வெளியீடு) இது குறித்துச் சொல்லப்பட்ட சிறு குறிப்பை
இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
மணலும்
மணல் சார்ந்த பகுதி பாலை.
“குறிஞ்சியும் முல்லையும் தன் இயல்பில் திரிவது
பாலை, என்றுதான் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதை இவ்வாறு எளிமைப்படுத்துவது
பொருத்தமாக இருக்காது. தொல்காப்பியர், திருவள்ளுவர் போன்றவர்கள் சொல்லியிருந்தாலும்
அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. உலகின் வெப்ப மற்றும் குளிர் பாலைகள்
உள்ளன. ரஷ்யாவில் அமுதார்யா, சிர்தார்யா ஆகிய இரு நதிகளால் உருவான ஏரல் கடல் (ஏரி)
வறண்டு போயுள்ளது. அண்டார்ட்டிகாவின் பெரும்பகுதி பாலைவனமே. பாலையாதல்
(Desertification) இன்றுள்ள மிக முக்கிய சூழலியப் பிரச்சினை. குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல் ஆகிய நாநிலங்களும் பாலையாகும் வாய்ப்புண்டு”. (பக்.122&123, கல்வி அறம்,
பாரதி புத்தகாலயம் – புக் ஃபார் சில்ரன் வெளியீடு, டிச. 2018)
கடலூர் மாவட்டத்தினைக் கண்டுபிடிக்க 10 குறிப்புகள்
உள்ளன. அவற்றில் “இந்தியாவில் அதிகளவு பழுப்பு நிலக்கரி கிடைக்கும் சுரங்கம் உடைய ஊரைக்
கொண்ட மாவட்டம்”. “சுரபுன்னைக் காடுகளுடன் கூடிய ஏரி இம்மாவட்டத்தின் அழகான சுற்றுலாத்தலம்
ஆகும். (பக்.23)
பழுப்பு நிலக்கரிச்
சுரங்கம் திறந்த வெளிச் சுரங்கமாக உள்ளதால் இதை வேறு பெயரிட்டு அழைப்பது பொருத்தம்.
‘அகழி’ எனலாம் என்று பழைய ‘தினமணி’யில் ஐராவதம் மகாதேவன் கருத்துரைத்திருந்தார். ‘சுரபுன்னைக்
காடுகள்’ நல்ல சொல்லாக்கந்தான், இருப்பினும் சதுப்புநிலக் காடுகள், மாங்குரோவ் காடுகள்
என்று ஒவ்வொரு பாடங்களிலும் வெவ்வேறுச் சொற்களால் அழைப்பதில் மாணவர்களுக்கு ஏற்படும்
குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் வழிகள் நமது
பாடத்திட்டத்திலும் கல்வியமைப்பிலும் இல்லாதது பெருங்குறையாகும். இங்கு ‘சுரம்’ என்பது
உப்பு மற்றும் அப்பகுதிகளில் உள்ள மரத்தைக் குறிக்கும் பொருளில் வருகிறது.
‘தங்கைக்கு’ – மு.வரதராசன், ‘தம்பிக்கு’ – அறிஞர்
அண்ணா ஆகிய நூல்கள் குறிப்பிட்ட ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. ‘பெரியார் சிந்தனைகள்’ ஆனைமுத்து அவர்களால் தொகுக்கப்பட்ட பெரியாரின்
20 நூற்தொகுப்புகளைக் குறிக்கும். இதை ‘பெரியார் சிந்தனைகள் – ஆனைமுத்து’, (பக்.46) என்று எழுதுவது பொருத்தமானதா?
பத்தியைப் படித்து வினா எழுதுதலில் வ.உ.சிதம்பரனார்
பற்றிய பத்தியொன்றுள்ளது. அதில் ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்று குறிப்பிடப்படுகிறது.
(பக்.15) ‘Swadeshi Steam Navigation
Company’ (1906) என்று பதிவு செய்யப்பட்ட கம்பெனியை மொழிபெயர்ப்பது சாத்தியமா?
Coral Mill ஐ பவள ஆலை என்றும் Sun TV சூரியத் தொலைக்காட்சி என்றும் மொழிபெயர்ப்பது
சரியல்ல.
“இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர்
பங்கு”, (பக்.11) என்ற தலைப்பில் ஏன் ‘தமிழர்கள்’ என்கிற பன்மையடையாளம் இல்லை. முத்துராமலிங்கனாரின்
பங்கை மட்டும் உயர்த்திப் பிடிக்கும் மா.சு. அண்ணாமலையின் கட்டுரையைவிட நேதாஜியை, இந்திய
தேசிய ராணுவத்தை நடுநிலையுடன் அணுகும் வேறு கட்டுரைகளை வெளியிட்டிருக்கலாம்.
கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதா, வேண்டாமா
என்பதில் தெளிந்த சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாமல் ஓரிடத்தில் ஏற்பதும் பிறிதோரிடத்தில்
மறுப்பதும் பாடநூல்களின் பொதுப்புத்தியாக உள்ளது. இதைப் படிக்கும், எழுதும் குழந்தைகளுக்கு
ஏற்படும் தடுமாற்றங்கள் மற்றும் குழப்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டாமா?
“தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை
அழித்திடுவோம், என்றார் பாரதியார்”, (பக்.24) என்ற வரிகளில் ‘ஜெகத்தினை’
‘செகத்தினை’ என்று எழுதுபவர்கள் ஆசிய ஜோதி (பக்.42), ஜீவஜோதி, ஜீவன் ஜோதி (பக்.45),
புஷ்பாஞ்சலி, ஹிதேந்திரன் (பக்.52), கைலாஷ் சத்யார்த்தி (பக்.48) என்ற சொற்களில் ஏன்
கிரந்தத்தைக் காண்பதில்லை? தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன் (பக்.03) என்றும்
எஸ்.ராமகிருஷ்ணன் (பக்.31) எழுதலாமா? Khalil
Gibran என்பதை கலீல் கிப்ரான் (பக்.23) என்பதா கலீல் ஜிப்ரன் என்பதா? கிப்ரன்/ஜிப்ரன்
என்று நீட்டாமல் சொல்லத் தோன்றுகிறது. கிரந்த வெறுப்பில் செசல்ஸ் (ஷெஷல்ஸ்) என்று எழுதுகிறார்கள். ஆனால் ஜானகி, நேதாஜி, ஜான்சிராணி என்று எழுதும்போது
வேறு விதிகள் கடைபிடிக்கப்படுகின்றனவா?
இன்று 90% க்கு மேற்பட்டத் தமிழ்க்குழந்தைகள்
பெயர்களில் இந்த கிரந்த எழுத்துகள் இல்லாமல் இல்லை. அவற்றை என்ன செய்வது? வருகைப் பதிவேட்டில்
இம்மாதிரி மாற்றி எழுத முடியுமா? தமிழ்ப் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு
என்பது போல திட்டங்களைப் பரிந்துரைக்கலாமா? (அதிலுள்ள அரசியல் மற்றும் குளறுபடிகள்
வேறு கதை.) தமிழ் எழுத்துகளில் பெயரிடுதல், தனித்தமிழ் பெயரிடுதல் என்று ஒரு வகை உண்டு.
தனித்தமிழை வலியுறுத்தும் தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசியர்களும் கிரந்த எழுத்துடன்
பெயரிடுவது பற்றி மவுனம் சாதிக்கின்றனர். ஷேக்ஸ்பியரை ‘செகப்பிரியர்’ என்றும் ஜோதியை
‘சோதி’ என்றும் மாற்றினால் தமிழ் வளர்திடுமா, சிறந்திடுமா?
ஓரிடத்தில் உறுப்புத்தானம் (பக்.50), மற்றோரிடத்தில் உறுப்புதானம் (பக்.52). ஏன் வல்லினம் மிகுவதில்லை.
தானம் தமிழா? ‘உறுப்புக்கொடை’ என்று சொல்லக்கூடாதா? புதின ஆசிரியர் (பக்.23), நாவல்கள் (பக்.31) என்று சொல்லாமல் வழக்கிலுள்ள ‘நாவல்’ என்பதைப் பயன்படுத்தினால்
என்ன? ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கவா முடியும்? ‘கலைச்சொல்
அறிவோம்’ பகுதியில் ‘கட்டிலாக் கவிதை’ – Free verse (பக்.68) என்றுள்ளது. இது நன்றாகவா
இருக்கிறது? ‘புதுக்கவிதை’ என்றே சொன்னாலென்ன?
‘மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்’ என்ற வகையிலும்
இதே சிக்கல்தான்! இலங்கைத் தீவு, இலட்சத்தீவு, இராஜாஜி (பக்.05), இராமநாதபுரம் (பக்.09),
உரோம நாட்டுச் சிந்தனையாளர்கள் (பக்.51), இராணுவம், இராஜாமணி என்று ஒருபுறம் எழுதுவதும்
மறுபுறம் லட்சுமி, லோகநாதன் என்று எழுதுவதும் தொடர்கிறதே! ஏதேனும் ஒரு ஒழுங்கு வேண்டாமா?
‘
(இன்னும் வரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக