புதன், மார்ச் 20, 2019

“எல்லாம் வேதத்திலும், வேதகாலத்திலும் இருக்கிறது!” என்று சொல்வதற்குப் பாடநூல்கள் தேவையா?


“எல்லாம் வேதத்திலும், வேதகாலத்திலும் இருக்கிறது!” என்று சொல்வதற்குப்  பாடநூல்கள் தேவையா? 


(மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 05) 

 
மு.சிவகுருநாதன்


(ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் -  புவியியல் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)




   “இந்தியாவின் நிலவரைபடத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் வேதகாலத்தின்போது உருவானது. மகாபாரதத்தில் தண்ணீரால் சூழப்பட்ட உலகம் சித்தரிக்கப்பட்டுள்ளது”. (பக்.95) 

  
   இன்னும் “மீண்டும் வேதங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள்!”, (GO Back to Vedas)  என்று சொல்ல வேண்டியதுதான் பாக்கி! விரைவில் அதையும் சொல்லிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். மகாபாரதத்தில் தண்ணீரால் சூழப்பட்ட உலகம் சித்தரிக்கப்பட்டுள்ளதாம்! ஏன் ராமாயணத்தில் இல்லையா? ராமாயணத்தில் ‘லங்கா’ என்று சித்தரிக்கப்படுவது இன்றைய இலங்கை அல்ல விந்திய - சாத்பூரா மலைகளுக்கு வடக்கேயுள்ள நீர் சூழ்ந்த பகுதிகளே ‘லங்கா’ எனவும் ராமாயணக் கதை நிகழுமிடம் வட இந்தியப் பகுதிகளே என்று ஆதாரங்களுடன் நிறுவும் பரமசிவ அய்யரின் ‘Ramayana and Lanka’ நூல் குறித்த அ.மார்க்ஸ் அவர்களின் அறிமுகக் கட்டுரையைக் காண்க. (சஞ்சாரம் மார்ச் 2008 இதழில் வெளியான கட்டுரை, இராமன் கடந்த தொலைவு – அ.மார்க்ஸ், உயிர்மை வெளியீடு)  நீர் சூழ்ந்த பகுதி எனில் அது உலகம் என்பது மிகையான கற்பனையன்றி வேறில்லை.


    “நில அளவைகள் மற்றும் நிலவரைபடம் தயாரித்தல் இடைக்காலத்தில் வருவாய் சேகரிப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக விளங்கின. எ.கா. ஷெர்ஷா சூரியின் வருவாய் நிலவரைபடங்கள் மற்றும் ராஜேந்திர சோழனின் நில அளவை தொழில்நுட்பங்கள். (பக்.95) 


    வரலாற்றில் காலக்கிரமம் உண்டல்லவா! ஷெர்ஷா சூரின் பதவிக்காலம் 1540 – 1545 ஆகும். முதலாம் ராஜேந்திர சோழனின் காலம் கி.பி. 1012 – கி.பி. 1044. மேலும் ராஜேந்திர சோழன் என்பது யாரைக் குறிக்கிறது? பிற்காலச் சோழர்கள் வரலாற்றில் மூன்று ராஜேந்திர சோழன்கள் உண்டே! முதலாம் ராஜேந்திர சோழன் என்றுக் குறிப்பிடுவது அவசியமில்லையா? அவருடைய ‘நில அளவை தொழில்நுட்பங்கள்’, என்னவென்று விளக்க வேண்டாமா? ஏன் போகிறபோக்கில் முதலாம் ராஜேந்திர சோழனையும் ஷெர்ஷா சூர் ஐயும் இணைக்க வேண்டும்? 


     பிற்காலச் சோழர்கள் காலத்தில் நில அளவை பற்றி வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதைச் சற்றுக் கவனிப்போம். 


    “இவ்வேந்தன் (முதலாம் ராஜராஜன்) ஆட்சியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளுள் சோழ இராச்சியம் முழுவதையும் அளந்தமை ஒன்றாகும். ஓர் அரசன் தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் எல்லாவற்றையும் அளந்து நிலங்களின் பரப்பை உள்ளவாறு உணர்ந்தாலன்றி நிலவரியை ஒழுங்குபடுத்திக் குடிகளிடமிருந்து வாங்குவது இயலாததாகும். ஆதலால் இவ்வேந்தன் ஆட்சியில் 16 ஆம் ஆண்டாகிய கி.பி. 1001 இல் சோழ இராச்சியம் முழுவதையும் அளக்குமாறு ஆணையிட்டனன். அவ்வேலையும், குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் தலைமையில் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் நிறைவேறியது. அவ்வதிகாரி இராச்சியம் முழுவதையும் அளந்த காரணம்பற்றி ‘உலகளந்தான்’ என்னுஞ் சிறப்புப்பெயர் பெற்றனன். அன்றியும் ‘இராசராச மாராயன்’ என்ற பட்டமும் அவனுக்கு இராசராச சோழனால் வழங்கப்பெற்றிருப்பது அறியத் தக்கது. நிலம் அளந்த கோல் பதினாறு சாண் நீளமுடையது. அதனை உலகளந்த கோல் என்றும் அந்நாளில் வழங்கினர்”, (பக்.137, பிற்காலச் சோழர் வரலாறு – பேரா. தி.வை.சதாசிவ பண்டாரத்தார்) 


    “சேனாதிபதி குரவன் உலகளந்தானான இராசராச மாராயன்,: இவன் இராசராச சோழன் படைத்தலைவருள் ஒருவன்; அரசன் ஆணையின்படி கி.பி. 1001 ஆம் ஆண்டில் சோழ இராச்சியம் முழுமையும் அளந்து எவ்வளவு நன்செய் புன்செய்களும் காடுகளும் உள்ளன என்பதைத் தெளிவாகப் புலப்படுத்தி அவற்றுள் விளைநிலங்களுக்கு மாத்திரம் வரி விதிக்குமாறு ஏற்பாடு செய்தவன். இவன் இராச்சியம் முழுமையும் அளந்தமைபற்றி இவனுக்கு  உலகளந்தான் இராசராச மாராயன் என்ற பட்டம் இராசராசனால் வழங்கப்பட்டிருத்தல் அறியத்தக்கது”, (பக்.145, 146, மேலே குறிப்பிட்ட நூல்) 


       “நிலங்களுக்கும் வீடுகளுக்கும்தான் முக்கியமாக வரி விதிக்கப்பட்டன. நிலவரி விதிப்பதற்கு வசதியாக நிலங்களெல்லாம் சீராக அளக்கப்பட்டு, அவைகளின் உரிமையாளரின் விவரங்களெல்லாம் மிகக் கவனத்துடன் அரசாங்கப் புத்தகங்களில் குறிக்கப்பட்டன. முதல் முறையாக மிக விரிவான அவகையில் நில அளவு, முதலாம் இராஜராஜனின் காலத்தில்தான் நடைபெற்றது”, (பக்.698, சோழர்கள் -2, பேரா. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி) 

 

     “சேனாதிபதி குரவன் உலகளந்தான் என்பவன் ஒருவன். இவன் ‘இராசராச மகாராசன்’ எனப்பட்டான். இவன் சோழப் பேரரசு முழுவதும் அளந்து வரி விதிக்க பொறுப்பாளியாக இருந்த பெரிய அரசியல் அறிஞன் ஆவன். உலகளவித்த திருவடிகள் சாத்தன் என்பவன் ஒருவன்,. இவனும் மேற்சொன்ன பணியில்  ஈடுபட்டிருந்தனன்”, (பக்.171, சோழர் வரலாறு, டாக்டர் மா.இராசமாணிக்கனார்)

     “இராசராசன் அரசியல் இன்றைய நாகரிக அரசியல் போன்றது. இவன் நாடு முழுதும் அளப்பித்தான்; இறையிலி நிலங்களைப் பிரித்தான்; பிற நிலங்கட்குத் தரம் வாரியாக வரிவிதிக்க ஏற்பாடு செய்தான். வரியை வசூலிக்கப் பல அதிகாரிகளை ஏற்படுத்தினான்”,  (பக்.172, மேலே குறிப்பிட்ட நூல்)
 
   பேரா. தி.வை.சதாசிவ பண்டாரத்தார், பேரா. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, டாக்டர் மா.இராசமாணிக்கனார் போன்ற வரலாற்றாசிரியர்கள் இவ்வாறு சொல்கிறார்கள். பாடநூலில் சொல்லப்பட்ட புதிய ஆய்வு யாரால் செய்யப்பட்டது என்பதைச் சொன்னால் அனைவருக்கும் பலனளிக்கும். நிலத்தை அளக்கப் பயன்பட்ட ‘உலகளந்த கோலின்’ அளவு இடத்திற்கு இடம் மாறுபட்டதாக இருந்திருக்கிறது. குழி, மா, வேலி போன்ற நில அளவைகள் புழக்கத்தில் இருந்தன. நூறு குழிகள் ஒரு மா; இருபது மா ஒரு வேலி எனக் கணக்கிடப்பட்டன. நிலத்தை அளந்து நடுகற்கள் (புள்ளடிக் கற்கள்) பதிப்பதும் புலத்தின் நான்கெல்லைகளை வரையறுப்பதும் கடைபிடிக்கப்பட்டன. 
 


      பொதுநிலங்கள் அரசுக்குச் சொந்தமாக இருந்தன. பிற நிலங்களை மூன்று வகையாகப் பிரிப்பர். முதன் வகை விவசாயத்தொழில் செய்யும் வேளாண்குடிகளின் அனுபவித்து வரும் ‘வெள்ளான் வகை’ எனப்படுவது. இரண்டாவது கோயில் சார்ந்த பணி புரிவோருக்கு (அர்ச்சகர், ஓதுவார், கோயில் காவலர் போன்றோர்) சீவிதம், போகம், காணி, விருத்தி என்ர பெயர்களில் மானியமாக அளிக்கப்படவை. மூன்றாவது பிரம்மதேயம், தேவதானம், சாலாபோகம் என்று தானமளிக்கப்பட்ட நிலங்கள். வரி இறைவனுக்காக அல்லது மன்னனுக்காக வசூலிக்கப்பட்டதால் ‘இறை’ என்னும் பெயரைப் பெற்றது. வரிவிலக்கு பெற்ற தானமளிக்கப்பட்ட நிலங்கள் ‘இறையிலி’ என்றழைக்கப்பட்டன. 


     ஷெர்ஷாவின் தந்தை ஒரு ஜாகிர்தார். எனவே இவருக்கு மேலாண்மைப் பயிற்சி இருந்தது. பயிடப்படும் நிலத்தை அளந்து  வரிவிதிக்கும் முறையை இவர் அமுல்படுத்தினார். உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு வரியாக இருந்தது. 


    “நிலங்கள் நல்லது மோசமானது மற்றும் நடுத்தரமானது என்று பிரிக்கப்பட்டன. பின்னர் அவற்றின் சராசரி உற்பத்தி கணக்கிடப்பட்டு அதில் மூன்றில் ஒரு பங்கு அரசாங்கத்தின் பங்காக ஆனது. அரசாங்கம் ரொக்கத்தையே பெற விரும்பியபோதிலும், விவசாயிகள் ரொக்கம் அல்லது அதற்கு ஈடானதைத் தர அனுமதிக்கப்பட்டார்கள்”,


    “விதைக்கப்பட்ட பரப்பு, பயிரின் வகை மற்றும் ஒவ்வொரு விவசாயியும் செலுத்த வெண்டிய அளவு ஆகியவை பட்டா என்று சொல்லப்பட்ட காகிதத்தில் குறிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு விவசாயிக்கும் இவை சம்மந்தமான விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. விவசாயிகளிடம் இருந்து யாரும் எதையும் கூடுதலாகப் பெற அனுமதிக்கப்படவில்லை. இப்படி அளக்கும் குழுவினர் தங்களுடைய பணிக்காகப் பெற வேண்டிய கூலி கூட வரையறுக்கப்பட்டது. பஞ்சம் மற்றும் இயற்கை இடர் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க, பிகா (Bigha) ஒன்றுக்கு இரண்டரை சீர்கள் (Seers) என்ற விகிதத்தில் தீர்வையும் கூட பெறப்பட்டது”,   (பக்.284, மத்திய கால இந்திய வரலாறு – சதிஷ் சந்திரா)


     இந்திய அறிவியல் கழகத்தின் 106 வது மாநாடு இவ்வாண்டு ஜனவரியில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ‘எதிர்கால இந்தியா: அறிவியல் – தொழில்நுட்பம்’, என்ற தலைப்பில் நடைபெற்றது. நாட்டில் அறிவியல் சிந்தனையை வளர்ப்பதற்காக 1914 இல் தொடங்கப்பட்ட அமைப்பு இது. கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு ஒவ்வோராண்டும் சர்.சி.வி.ராமனின் கண்டுபிடிப்பு (ராமன் விளைவு) நாளான பிப்ரவரி 28 (தேசிய அறிவியல் நாள்) இம்மாநாட்டை நடத்துகிறது. மோடியின் அரசு பதவியேற்றது முதல் இம்மாநாடு ‘சர்க்கஸ்’ ஆக மாற்றப்பட்டுள்ளது. இதைக் கண்டு வெளிப்படுத்தியவர் நோபல் விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.


     இம்மாநாட்டில் பேசிய ஆந்திரப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நாகேஸ்வரராவ் மகாபாரதக் கவுரவர்கள் ஸ்டெம் செல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பிறந்த சோதனைக்குழாய் குழந்தைகள் என்றார். அதே மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மின்னணுவியல் பொறியாளர் கண்ணன் ஜகத்தல கிருஷ்ணன் என்பவர் நியூட்டன், ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கின்ஸ்  ஆகியோரது இயற்பியல் கோட்பாடுகள் தவறானவை என்றும் புவியீர்ப்பு அலைகளுக்கு நரேந்திர மோடி அலைகள் எனப் பெயரிடப்படும் என்றார். மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனையும் மிக நன்றாக ‘குளிப்பாட்டினார்’. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனைவிட  சிறந்த அறிவியலாளர் யாருமில்லை என்பதால்  புவியீர்ப்பு ஒளி விளைவுகளுக்கு ஹர்ஷ்வர்தன் விளைவு என்றும் பெயரிடப்படும் என்றும் சொன்னார். வேதாத்ரி மகரிஷியின் ஆசிரமத்தில் ஆய்வு செய்யும் இவருக்கு மத்திய அரசு பெருந்தொகை ஒதுக்கியுள்ளது. நன்றிக்கடன் வேண்டாமா?


      டைனோசர்கள் பற்றி ஆய்வு செய்யும் பஞ்சாப் பல்கலைக் கழக புவியியல் ஆய்வாளர் (!?) இந்த பிரபஞ்சத்தின் முதல் விஞ்ஞானி பிரம்மாதான். அவருக்கு டைனோசர்கள் பற்றித் தெரிந்திருந்தது. விலங்குண்ணி டைனோசர்கள் வேதங்களில் இது பற்றிய தகவல் உள்ளது, ஒரு டைனோசரின் பெயர் ‘ராஜ அசூரா’ என்றும் சொன்னார். 


     இன்னும் சில புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளையும் (!?) கண்டு மகிழுங்கள்! டார்வினின் பரிணாமக் கோட்பாட்டிற்கு முன்னதாகவே விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்தார்!  ராவணன் 24 வகையான விமானங்களைப் பயன்படுத்தினார்!  சிவன்தான் ஆதி சூழலியல்வாதி! ராமன் எதிரிகளைத் தாக்கிவிட்டுத் திரும்பும் அஸ்திரங்களை வைத்திருந்தால் அவன் ஏவுகணைத் தொழிநுட்பத்தை அறிந்திருந்தான்! 


    2015 இல் பெங்களூரூவில் நடைபெற்ற 102 வது இந்திய தேசிய அறிவியல் மாநாட்டின் பிதற்றல்களைக் கண்ட நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் இனி இம்மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று மனம் வெதும்பிக் கூறிச்சென்றார். அன்றிலிருந்து இன்றுவரை இந்துத்துவ பா.ஜ.க. அரசு இம்மாநாட்டை இவ்வாறுதான் நடத்துகிறது. மேலும் தன்னாட்சி பெற்ற உயர்கல்வி நிறுவனங்களைச் சிதைக்கும் வேலைகளையும்  அவற்றின் செயல்பாடுகளை முடக்கும் வேலைகளையும் திட்டமிட்டுச் செய்கிறது. 


    ஒரு நீதிபதி ஆண்மயில் பிரம்மச்சாரி என்றார். பிரதமர் மோடி பிள்ளையாரை பிளாஸ்டிக் சர்ஜரி என்றார். ஆனால் இதுவரையில் சங்கிகள் இவ்வாறான உளறல்களைப் பொதுவெளியில் கொட்டினர். இப்போது அறிவியல் ஆய்வாளர்கள் என்ற போர்வையில் இந்தத் திரித்தல் வேலைகள் நடைபெறுகின்றன. 2020 இல் நடைபெறும்  அறிவியல் மாநாடாவது புராணங்கள், புனைவுகள், மதங்கள் இல்லாத மக்களுக்குப் பயன்படும் அறிவியல் நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. 


    புராணங்கள், ஆன்மீகத் தேடல்கள், வேதங்கள், இதிகாசங்கள், நம்பிக்கைகள் போன்ற மதக் கொள்கைகளைப் பாடநூல்களில் இணைப்பது கண்டிக்கத்தக்கது. பாடநூல்களும் அவற்றை உருவாக்குவோரும்  இம்மாதிரியான கருத்தோட்டங்களுக்கு முதன்மை தராமல் அறிவின் அடிப்படையில் இயங்குவதை நாம் உறுதி செய்தாக வேண்டும். கல்வி என்பது அறியாமை மற்றும் மூடத்தனங்களை அகற்றுவது, மாறாக அவற்றை ஏதோதொரு வகையில் மீள் உற்பத்தி செய்வதல்ல. 

   
   ‘Common Era’  என்பது பொதுக் காலமா? பொது ஆண்டா? 


      வரலாற்றுப் பகுதிகளில் கூட கி.மு., கி.பி. ‘ஒவ்வாமை’ இல்லை. ஆனால் புவியியல் பகுதிகளில் இந்த ‘ஒவ்வாமை’ தொடர்கிறது. “கி.பி.(பொ.ஆ.) 1960ல் 500 மில்லியனாக இருந்த மக்கள்தொகை கி.பி.(பொ.ஆ.) 1850ல் 1000 மில்லியனாக இருமடங்கு வளர்ச்சி கண்டது. இது கி.பி.(பொ.ஆ.) 2025 மற்றும் கி.பி.(பொ.ஆ.) 2050ல் முறையே 8 பில்லியன் மற்றும் 9 பில்லியனாக வளர்ச்சியடையும் என அனுமானிக்கப்பட்டுள்ளது. (பக்.69) (“எத்தனை! போட்டாச்சு! போட்டாச்சு!” என வடிவேலு ஏற்ற இறக்கத்துடன் சொல்லிப் பார்க்கவும்!) 

 “கி.பி. (பொ.ஆ.) 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையால், பாக் வளைகுடாவில் உள்ள மாங்குரோவ்காடுகள் பேரழிவைச் சந்தித்தன”. (பக்.87) 

 “கி.பி. (பொ.ஆ.) 1972-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் மாநாட்டில் ‘மனிதன் சுற்றுச்சூழலை உருவாக்கி வடிவமைக்கிறான்’ என அறிவிக்கப்பட்டது”, (பக்.68)

“பாபிலோனில் கி.மு.(பொ.மு.) 3800ல் உலகின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது”. (பக்.70)

“இந்தியாவில் கி.பி.(பொ.ஆ.)1872 ஆம் ஆண்டில் முதன்முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது”. (பக்.70)

“கி.பி.(பொ.ஆ.) 2016 ஆம் ஆண்டின் யுனெஸ்கோவின் UNESCO-வின்  (Mercer) தகவலின்படி மக்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்று வாழ்ந்து வருவதில் வியன்னா முதலிடமும் சூரிச் இரண்டாம் இடமும் பெற்றுள்ளன”. (பக்.76) (UNESCO வை அடைப்புக்குறிக்குள் கொண்டுவரவேண்டும்.) 


     கி.மு., கி.பி. இல் மத அடையாளம் இருப்பினும் சிக்கல் இல்லை.  கி.மு., கி.பி. என்று ஆண்டுகளைக் குறிக்கும் வழக்கம் பல்லாண்டு கால நடைமுறை. இதை விரித்தெழுதும்போது கிருஸ்து பிறப்புக்கு முன், கிறிஸ்து பிறப்பிற்கு பின் என வருவதால் அது ஒரு மத அடையாளத்துடன் இருப்பதாகக் கருதும் சிலர் Common Era என்று எழுதத்தொடங்கினர்.


      இந்த மதநீக்கச் செயல்பாடு அனைத்துக் களங்களிலும் நடைபெற்றால் அது வரவேற்கத்தக்கது. மேலும் அது மத ஆதிக்கத்தை அல்லது மேலாண்மையை நிறுவதாக இருப்பின்  உடனடியாக மாற்றுவது நல்லது.  வரலாற்றில் இம்மாதிரியான அடையாளங்கள் நிறைய உண்டு. இதன்மூலம் பிற மதங்களை இழிவுசெய்யும் அல்லது குறைத்து மதிப்பிடும் தன்மை  இருப்பின் அதை அனுமதிக்க வேண்டியதில்லை. ஆனால் இங்கு அப்படி ஒன்றுமில்லை. 



     மேலும் கிரிகோரியன் காலண்டரைப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லப் போகிறார்களா என்பது விளங்கவில்லை.  இங்கு தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படும் 60 களில் ஒன்றுகூட தமிழாக இல்லை.  எண்கணிதம் என்று சொல்லி ஏமாற்றும் கூட்டத்தார் குழந்தைகளுக்குப் பெயரிடப் பரிந்துரைக்கும் பெயர்களில் மருந்துக்குக்கூட தமிழ் இல்லை.  தமிழகப் பெற்றோர்கள் பெரும்பாலும் இவ்வகையில்தான் பெயரிடுகின்றனர். 


    அரசு விழாக்கள் மற்றும் விழாக்களில் குத்துவிளக்கேற்றுதல் என்னும் சடங்கு உண்டு. இது முற்றிலும் மதரீதியானது.  மதச்சார்பற்ற அரசுகளின் செயல்பாட்டில் மதம் குறுக்கிடுவதை நமது அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்பது வேறு கதை.


       இங்கு பேசப்போகும் செய்தி வேறுவிதமானது. பொதுவாக தீக்குச்சியைப் பயன்படுத்தி விளக்கேற்றுவதில் சிரமங்கள் உள்ளதால் மெழுகுவர்த்தியைக் கொண்டு விளக்கேற்றுவது ஒரு நடைமுறை. மத்திய இந்துத்துவ அரசுகளும் அதைத் தொழுது வாழும் மாநில அரசுகளும்  மெழுகுவர்த்தியின் மத அடையாளத்தைக் கண்டறிந்து அதை அகற்றியுள்ளன. ஒரு சிறு விளக்கைக் கொண்டுக் குத்துவிளக்கேற்றும் நிகழ்வை நீங்கள் தொலைக்காட்சிகளில் கண்டிருக்கக்கூடும்.  மெழுகுவர்த்தியின் மத அடையாளத்தைக் காணும் இவர்கள் குத்துவிளக்கின் மத அடையாளத்தைப் பொதுமைப்படுத்த முயல்வதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.



     இந்தக் கல்வியாண்டின் (2018-2019) தொடக்கத்தில் முதல் பருவப் பாடநூல்களில் கி.மு., கி.பி. ஆகியன முறையே  பொ.ஆ.மு., பொ.ஆ. என  மாற்றி எழுதப்பட்டன. பாடநூல்கள் வெளியான பிறகு ஏற்பட்ட சர்ச்சையில் கல்வியமைச்சர் செங்கோட்டையனிடம் இது குறித்து வினவப்பட்டபோது இனி கி.மு., கி.பி. என்றே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தார். ஆனால் அடுத்த பருவத்திலிருந்து  கி.மு. (பொ.ஆ.மு.), கி.பி. (பொ.ஆ.) என்று இரண்டையும் சேர்த்து எழுதத்தொடங்கிவிட்டனர். இது மாணவர்களுக்கு கூடுதல் சுமையாகும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய பாடம் ஏழாம் வகுப்பில்  இடம்பெறும் என்றும் கல்வியமைச்சர் சொல்லியிருக்கிறார். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


      மேலும் ‘Common Era’ என்பதைப் 'பொது ஆண்டு' என்று மொழிபெயர்ப்பதும் சரியாகப் படவில்லை. பொதுக்காலமா? அல்லது பொது ஆண்டா? இவற்றில் எது சரி? ‘காலம்’ எப்படி ‘ஆண்டு’ ஆகும்?. காலத்திற்கும் ஆண்டிற்கும் வேறுபாடு உண்டல்லவா! (வானிலை, காலநிலை போல.)


     கல்வியாண்டு, நிதியாண்டு போன்றவை ஒவ்வொரு நாடும் அதன் விருப்பத்திற்கேற்ப மாற்றி வைத்துக்கொள்கின்றன. நிதியாண்டை காலண்டர் ஆண்டாக மாற்றவும் இந்தியாவில் முயற்சி நடப்பதாகப் பேச்சு அடிபடுகிறது. ஆனால் கல்வியாண்டை மாற்றுவது சிரமம். பெரும்பாலான பகுதிகளில் மே மாதம் கடுங்கோடை ஆதலால் அப்போதுதான் கோடை விடுமுறை விடமுடியும். உலக அளவிலான காலண்டர், நேரம் போன்றவற்றை நாம் கடைபிடித்தாக வேண்டும். ஆங்கிலத்தில்  பெயர் வைக்கக்கூடாது என்று நிதி ஆயோக், சமக்ரா சிக்‌ஷா என்றெல்லாம்  செய்வது அபத்துக் கூத்தின்றி வேறில்லை. இந்த இந்தித் திணிப்பு வேலைகளை யாரும் கண்டுகொள்ளாத நிலை நீடிக்கிறது. 

  
    பாடநூல் எழுதும்போது இவற்றிற்கெல்லாம் நியதிகள் வகுக்கப்படவேண்டும். கி.மு., கி.பி. போன்றவை எளிமையாகவும் பழக்கப்பட்டதாக இருப்பதால் இவற்றை மாற்றத் தேவையில்லை; மாற்ற வேண்டிய அவசியமுமில்லை. இதைப் போன்று மொழியாக்கம், கலைச்சொல்லாக்கம் போன்றவற்றிலும் உரிய நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.


(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக