கடும் நெருக்கடியில் பத்தாம் வகுப்புக் குழந்தைகள்
(கல்வியில் ஜனநாயகத் தேவையை வலியுறுத்த வேண்டிய
பொதுத்தேர்வுகள் நேரம்.)
மு.சிவகுருநாதன்
கல்வியில் குழந்தைகளுக்கு உரிய
மதிப்பில்லை. கல்வி முறைகள் குழந்தைகளை இயந்திரங்களாக நினைக்கிறது, அதற்கேற்பவே
கல்வித்துறைகளில் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்கள் செயல்படுகிறார்கள். குழந்தைகளின்
குரலை யாரும் செவிமெடுப்பதில்லை. கல்வியாளர்கள் கூட இவற்றிற்கு முறையான
எதிர்வினையாற்றுவதில்லை.
இது அரசுப் பொதுத்தேர்வுகள் நேரம்.
அறநோக்கிலும் குழந்தைகள் நோக்கிலும் தேர்வுகள் என்பது குழந்தைகள் மீது
செலுத்தப்படும் கொடிய வன்முறைகளுள் ஒன்று.
எந்தத் தேர்வுகளும் இறுதியான ஒன்றாக இல்லாத நிலையில் மீண்டும் மீண்டும்
தேர்வுக்கான அழுத்தங்கள், சுமைகள், மன உளைச்சல்கள் அதிகரித்துக்கொண்டே செல்வது
நம்மையும் அயர்ச்சியடைய வைக்கிறது.
5, 8 வகுப்புகளுக்கு அரசுப் பொதுத்தேர்வு
மிரட்டல் சற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்பூதம் மீண்டும் கிளம்பும் வாய்ப்புகள் அப்படியேதான் இருக்கின்றது.
இருப்பினும் 10, +1 மற்றும் +2 ஆகிய வகுப்புகள் பொதுத்தேர்வு வன்முறையிலிருந்து
தப்ப வழியில்லை. ஆனால் இந்தத் தேர்வு வன்முறையைச் சற்று குறைக்கலாமல்லவா?
இதைப்பற்றிய சிந்தனைகள் கல்வியில் வந்திருப்பதும் +1, +2 தேர்வுகளில் செய்யப்பட்ட
மாற்றங்களில் சிலவும் வரவேற்கத்தக்கதாக உள்ளன.
200 மற்றும் 150 மதிப்பெண்களிலிருந்து 90
மற்றும் 70 மதிப்பெண் தேர்வுகளாக மாற்றம், தேர்வு நேரம் 3:15 மணியிலிருந்து 2:45 ஆக குறைப்பு, மொழிப்பாடங்களுக்கு ஒரு
தாள், கணிதவியல் மற்றும் கலைப்பாடங்களுக்கு 10 அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் என
வரவேற்கத்தக்க பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘நீட்’ நுழைவுத்தேர்வு போன்ற பல்வேறு
நெருக்கடிகள் இருப்பினும் பள்ளித் தேர்வுகளை கொஞ்சமாவது ஜனநாயகப்படுத்த இவை உதவும்
என்பதில் அய்யமில்லை. ஜனநாயகம் என்பது 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு
மட்டுமானதல்ல. குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய உரிமைகளுடன் ஜனநாயகச் செயல்பாடுகளை
முன்னெடுக்க கல்வி வழிவகைகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.
மேற்கண்ட சில மாற்றங்கள் சலுகைகள் ஏன்
பத்தாம் வகுப்பிற்கு இல்லை என்று குழந்தைகள் குரலெழுப்ப முடியாத அளவில்
வைக்கப்பட்டுள்ளனர். கல்விப்புலத்திலுள்ள ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இதற்கென
குரல் கொடுக்க எந்தத்தடையும் இல்லாத நிலையில் யாரும் கண்டுகொள்ள மறுப்பது ஏனென்று
விளங்கவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம்
வகுப்புத் தேர்வை காலை 09:15 க்குத் தொடங்கினார்கள். அப்போதும் யாரும் கேள்விகள்
கேட்கவில்லை. இப்போது தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடத்தேர்வுகளை பிற்பகல்
வேளையில் நடத்துகிறார்கள். 10 ஆம் வகுப்பில் 7 தேர்வுகளில் 4 பிற்பகலில்
நடைபெறப்போகிறது. 1970 களில் முற்பகல்,
பிற்பகல் என இரு வேளைகளும் தேர்வுகள்
நடைபெற்ற காலங்கள் உண்டு. அப்போது ஒரு பாடத்தில் தோல்வியடைந்தாலும்
அனைத்துப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும். இன்று சூழல் எவ்வளவோ
மாறியாகிவிட்டது. பிற்பகலில் அரசுப் பொதுத்தேர்வு என்பது மாணவர்கள் சந்திக்காத
ஒன்று. கொளுத்தும் வெயிலில் இவ்வாறு செய்வது சரியா? +1, +2 மாணவர்களுக்கு மட்டும்
முற்பகல் 10:00 மணித்தேர்வில் எவ்வித மாற்றமும் செய்யாமல் 10 ஆம் வகுப்பு மாணவர்களை
மட்டும் இவ்வாறு மாற்றித் துன்புறுத்துவது ஏன்? 1 முதல் 9 வகுப்புகள் முடிய உள்ள
வகுப்புகளுக்கு ஏப்ரல் 20, 2019 முடிய தேர்வுகள் இருக்கும்போது நாடாளுமன்றத்
தேர்தலைக் காரணம் சொல்வதும் சரியாக இருக்காது. மார்ச் 29, 2019 க்குள் அனைத்துத்
தேர்வை முடிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஒரு நாளுக்கு ஒரு தேர்வு வைக்காமல்
விடுமுறை அளிப்பதும் அதை ஈடுகட்ட பிற்பகலில் தேர்வு நடத்துவதும் கொடிய
வன்முறையன்றி வேறில்லை.
இன்னும் மொழிப்பாடத்திற்கு இரண்டு தாள்கள்.
இரு தாள்களும் தனித்தனியே மதிப்பீடு செய்யப்படுவதால் 34 மதிப்பெண்கள் பெற்றுத்
தேர்வில் தோல்வியடையும் நிலை உள்ளது. தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க மாணவர்களைக்
கசக்கி பிழிய மறைமுகமாக ஆணைகளிடும் கல்வித்துறையும் உயர் அலுவலர்களும் 10 ஆம்
வகுப்பிற்கும் ஒரு தாள், அகமதிப்பீடு
ஆகியவற்றிற்கு ஆதரவான நிலைப்பாட்டை ஏன் எடுக்கவில்லை? +1, +2 வகுப்புகளுக்கு இம்மாதிரி முடிவை
யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகவே எடுத்தனர். 10 ஆம் வகுப்பிற்கு மட்டும்
தமிழ் ஆசிரியர்கள் எதிர்க்கிறார்கள் என்பது போன்ற சாக்குப்போக்குச்
சொல்லக்கூடாதல்லவா?
அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் கிடையாது. அறிவியல்
தவிர இதர பாடங்களுக்கு 100 மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுதும் நிலையே உள்ளது. +1,
+2 மாணவர்கள் 25 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்ற நிலை இருக்கும்போது 10 ஆம்
வகுப்பில் மட்டும் 35 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என கட்டாயப்படுத்துவது சரியா? முதன்முதலில்
அரசுப் பொதுதேர்வு எழுதும் 10 ஆம் வகுப்புக் குழந்தைகளுக்குத்தான் நிறைய சலுகைகள்
வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது.
வளரிளம்பருவக் குழந்தைகளான இவர்களை மேலும்
உளவியல் சிக்கலுக்குத் தள்ளுவது அறமல்ல. தேர்வுகள் எப்படி வேண்டுமானாலும்
வைத்துக்கொள்ளுங்கள்! நூற்றுக்கு நூறு எடுப்பவர்கள் எடுக்கட்டும். எவரையும், “நீ
தேறாதவன்”, என்று கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளாதீர்கள். எல்லோரையும் தேர்ச்சியடைய
வைக்கும் அளவிலான ஒரு தேர்வை நடத்துங்கள். குழந்தைகளைக் கசக்கிப் பிழிந்து
தேர்ச்சியடைய வைக்க நெருக்கடிகளை யாருக்கும் தரவேண்டாம். தேர்ச்சியடையாதவர்கள்
ஒன்றும் இவ்வுலகில் வாழத் தகுதியற்றவர்கள் அல்ல; சமூக விரோதிகளும் அல்ல. அவர்களும்
இந்நாட்டுக் குடிமக்கள்தான். அகதிகளைப் போல அவர்களை நடத்தாதீர்கள்.
அகதிகளுக்குக்கூட சர்வதேச சட்டங்கள் உண்டு. (அவற்றை நாம் மதிப்பதில்லை.)
குழந்தைகளுக்கான சட்டங்கள் மீதும் அவர்கள் மீதும் எப்போதும் கைவைத்துக்
கொண்டிருக்க வேண்டாம்.
கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு
வந்ததன் மூலம் அச்சட்டம் பயனற்றதாக மாற்றப்பட்டுள்ளது. 9 மற்றும் 10 ஆம்
வகுப்புகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கல்விப்புலத்திலிருந்து அகற்றும்
இம்மாதிரியான நடவடிக்கைகள் சமூகத்தில் அமைதியின்மையையும் குழப்பத்தையும்
உண்டாக்கும். சமூக நீதிக்கான பயணத்தில் இதுவொரு தடைக்கல்லாகும்.
5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்றவுடன்
தனியார் பள்ளிகள் சங்கம் பொங்கியெழுந்து, “நீதிமன்றத்தை நாடுவோம்”, என்றது.
அரசுப்பள்ளி ஆசிரியர்களும் ஆசிரிய இயக்கங்களும் பெரும்பாலும் வாய்மூடி மவுனமாகவே
இருந்தனர். எனவே 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வித்துறையும் அரசும் ஏதும்
செய்யப்போவதாகத் தெரியவில்லை. கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களும் இது குறித்து
வாய் திறக்கப்போவதில்லை. இடதுசாரி மாணவர் அமைப்புகள், குழந்தைகளின் உரிமை வலியுறுத்தும்
இயக்கங்கள் போன்றவை களத்தில் இறங்கி குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வியில்
ஜனநாயகத்தைப் பெற்றுத்தரப் போராட முன்வரவேண்டும். வேறு வழியில்லை, கல்வியில்
ஜனநாயகக் குரல் ஒலிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக