புதன், மார்ச் 06, 2019

அனைத்திலும் அரசியல் இருக்கிறது!


அனைத்திலும் அரசியல் இருக்கிறது!


மு.சிவகுருநாதன்


(பெயர்களின் பின்னாலிருக்கும் அரசியல், பள்ளிக் கட்டடங்களின் அபாய நிலை, கல்விப்புல  முன்மாதிரிகள் என சில விவாதக் குறிப்புகள்...)




     திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் (மா.நெ.23) திருநெய்ப்பேர் என்னும் ஊரில் ஒரு அரசு மேனிலைப்பள்ளி உண்டு. ‘கஜா’ புயலுக்குப்பின் இதன் சுற்றுச் சுவரில் சில ஓவியங்கள் வரையப்பபட்டுள்ளது. முகம் தெரியாத உள்ளூர் சமூக ஆர்வலர்கள் இம்முயற்சியில் இறங்கியுள்ளனர். அவர்களுக்கு நமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிப்போம்.  வண்ணத்தில் நன்றாக காட்சியளிக்கிறது சுற்றுச்சுவர். ஆனால் பள்ளிக்கட்டடங்கள் தொல்லியல் சின்னம் போலவே இருக்கின்றன. பெரும்பாலான தமிழக அரசுப்பள்ளிகளின் நிலையும் இதுதான். 



       இந்த ஓவியங்களின் மீது விரைவில் சுவரொட்டிகள் ஒட்டப்படலாம். இங்கு நடைமுறை யதார்த்தம் அதுதானே! மேலும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வர இருப்பதால் வாக்குச்சாவடியாகிய இப்பள்ளிச் சுற்றுச்சுவரில் உள்ள தலைவர் படங்கள் குறிப்பாக அம்பேத்கர், காமராஜர் ஆகிய ஓவியங்கள் அழிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.  


   அரசுப்பள்ளிகள் கட்டிடங்களின் தரம் பற்றி நாம் அடிக்கடி எழுதிவருகிறோம். இது இந்தச் சமூகம் கண்டுகொள்ள மறுக்கும் ஏழைமக்களின் துயரம். அரசுப் பள்ளிக் கட்டடங்களை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டும்.  கும்பகோணம் விபத்து போன்ற பேரிடர்கள் நிகழும் வரை இதற்காகக்  காத்திருப்பது தேசிய அவமானம். 



   முன்பு கூரை மற்றும் ஓட்டுக் கட்டடங்கள் இருந்தன. அவை இப்போது இரண்டு அல்லது மூன்று மாடிக்கட்டடங்களாக மாறியுள்ளன. தரமற்ற இக்கட்டுமானங்களால் ஏற்படும் இழப்புகளை நினைத்தால் மனம் பதறுகிறது. 

   தமிழக அரசின் பொதுப்பணித்துறையால் கட்டப்படும் பாலங்கள், மேம்பாலங்கள், மாவட்ட அலுவலங்கள், வட்ட, ஒன்றிய அலுவலங்கங்கள் ஒப்பீட்டளவில் ஓரளவுத் தரமுடன் இருக்க அரசுப்பள்ளிக் கட்டடங்கள் மட்டும் ஏன் மிக மோசமான தரத்தில் இருக்கின்றன என்பது விடை தெரியாத வினாவாகவே இன்னமும் நீடிக்கிறது.

    தரமற்ற கட்டுமானங்கள் ஒருபுறம், ஆண்டுதோறும் எவ்வித பராமரிப்புமின்றி சீரழியும், விரிசலடையும் கட்டடங்கள் மறுபுறமும் என நிலைமை மிக மோசம்.  அரசுப்பள்ளிகளுக்கென்றே வண்ணங்கள், மின் சாதனங்கள் எங்கே தயாரிப்பார்களோ தெரியாது! சில நாள்களிலேயே அது காலியாகிவிடும்! தண்ணீர் வசதிகள் இல்லாத, கழிவு நீர்த்தொட்டி இல்லாத, மேற்கூரை இல்லாத (மாடிக் கட்டடங்கள் உள்ள நிலையில்…) நவீன கழிவறைகள் (?!) இப்பள்ளிகளை அணிசெய்வதும் நாம் பெற்ற பெரும்பேறுகள்!

    மத்திய, மாநில அரசுகள் இவ்வேலையைச் செய்ய முன்வராத நிலையில் தன்னார்வலர்கள் இப்பணிகள் சிலவற்றைச் செய்கின்றனர். சில இடங்களில்  மக்கள் பள்ளிக்குச்  சீர்வரிசை அளிப்பதும் அன்றாடச் செய்தியாகிறது.  பிறகு அரசுகள் அதற்கு என்ற கேள்விகள் தவிர்க்க முடியாதது. மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஒன்றிய அலுவலங்கள் எப்படி ஆண்டுதோறும் பராமரித்துப் பாதுகாக்கின்றனர்? இதற்கு நிதி ஒதுக்கும், செலவு செய்யும் அரசுகள் அரசுப்பள்ளிகளை மட்டும் ஏன் கண்டுகொள்வதில்லை. அரசுகள் செய்யும் அநியாய விளம்பரச் செலவுகளை நிறுத்தினால் கூட பள்ளிக் கட்டடங்களைச் சிறப்பாகப் பராமரிக்க முடியும்.

   இதர அரசு அலுவலகங்களும் வசதிகளில் கொழுத்துக்கிடக்க ஏழை மக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் இப்படி அலங்கோலமாகக் கிடப்பதேன்? இவற்றைக் கண்டுகொள்ளாத என்னமாதிரியான அழுத்தத்தை இந்தச் சமூகம் அளிக்கப்போகிறது? மேலும் இதைப்பற்றி யோசிக்கும்போது  வேறுசில எண்ணங்களும் இங்கு தோன்றாமலில்லை. 

     இந்த ஓவியப்பட்டியலில்  அன்னை தெரசா, தமிழக ஏவுகணை APJ அப்துல் கலாம், கர்மவீரர் கு.காமராஜர், சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், ஆசிரியர்களின் குரு எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  (ஓவியங்களில் இடம் பெற்றுள்ள முன்னொட்டுகள் இங்கு அப்படியே பயன்படுத்தப்படுகின்றன.)

     பீ.ஆர்.அம்பேத்கர் என்று அண்ணலில் பெயர் எழுதப்பட்டுள்ளது.  பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று பெயரை விரித்தெழுதி இதனுள்ளே இருக்கும் 'ராம்' ஐ வெளிப்படுத்த வேண்டும் இந்துத்துவவாதிகள் விரும்புகின்றனர். அதற்குரிய அரசாணைகளையும் வெளியிடுகின்றனர். "இந்துவாகப் பிறந்து சாதிக்கொடுமைகள் பலவற்றை அனுபவித்தேன். இனியும் இந்துவாக வாழ்ந்து, சாகமாட்டேன்",  என்று சொல்லி பவுத்த நெறிக்கு மாறியவர் அண்ணல் அம்பேத்கர். 

      முன்னெழுத்துகளை தமிழில் எழுதுவது  கடைபிடிக்க வேண்டிய ஒரு நல்ல நடைமுறை என்பதில் அய்யமில்லை. அப்படிப் பார்த்தால் பீ.ரா.அம்பேத்கர் என்று எழுதவேண்டும். பீ.ஆர். என்று எழுதுவது பொருத்தமுடையதல்ல. உலகறிந்த ஒரு தலைவரின் முன்னெழுத்துகளில்  ஒன்றை தமிழிலும் இன்னொன்றை ஆங்கிலத்திலும் எழுதுவது எப்படிச் சரியாகும்? மேலும் நன்கு அறிமுகமாகிவிட்ட பி.ஆர்.அம்பேத்கர் என்பதின் முன்னெழுத்துகளைத் தமிழில் மாற்றுவதும் சரியல்ல. தோழர்கள் இவற்றை உடனே மாற்றிட முனைய வேண்டும். தமிழ்நாட்டில் 99% முன்னெழுத்துகளை ஆங்கிலத்தில் எழுதும் பழக்கமே உள்ளது. தமிழில் சொன்னாலும் முன்னெழுத்தை மட்டும் ஆங்கிலத்திலேயே பதிவு செய்கின்றனர். இவற்றை மாற்ற இயக்கமே நடத்தவேண்டிய தேவை உள்ளது.

    அம்பேத்கர் என்னும் பெயரை அம்பேத்கார் என்று நீட்டி ஒலிக்கும், எழுதும் பழக்கம் இங்குண்டு. மேலும் இப்பெயர் அவருடைய பார்ப்பன ஆசிரியடையது என்கிறப் புனைவும் இங்கு நெடுங்காலமாக உலவி வருகிறது. இது அவருடைய தந்தையாரின் பெயரின் பின்னொட்டுதான் என்பதை "அம்பேத்கர் என்ற ஒரு பார்ப்பனருடையதா? - கழுவப்படும் பெயரழுக்கு", என்னும் யாக்கனின் நூல் உரிய ஆதாரங்களுடன் விவரிக்கிறது. (பக்.64, விலை: ரூ. 50, இரண்டாம் பதிப்பு: டிச. 2018, கலகம் வெளியீட்டகம், 1/7, அப்பாவு தெரு, எல்லீசு சாலை, சென்னை - 600002, பேச: 044-42663840)



      இந்த ஐந்தில் ஒன்றாக அம்பேத்கர் இடம்பெற்றதற்கு முதலில் பாராட்டு தெரிவிக்கலாம்.  குழந்தைகளிடம் யாரை முன்மாதிரியாக எப்படி அறிமுகம் செய்கிறோம் என்பது மிக முக்கியமான அரசியல் சங்கதி. 

       எஸ்.ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் போன்ற வகைமாதிரிகளையும் தாண்டி கல்விப்புலத்தில் பிறரையும்  கொண்டு வரவேண்டிய தேவையிருக்கிறது.  ஆனால் இது வெறும் இஸ்ரோ ஆட்கள் அல்லது இன்போசிஸ் நாராயண மூர்த்தி, நாதெள்ளா, சுந்தர்பிச்சை, இந்திரா நூயி, சந்தா கோச்சார்  போன்ற கார்ப்பரேட் சிஇஓ க்களை நோக்கி கல்விப்புலம் சென்றுகொண்டிருப்பது கவலையளிக்கக்கூடியது. இந்த வரிசையில் ‘அபிநந்தன்’களுக்கும் இடம் கிடைக்கலாம். எப்போதுமே ஆதிக்கங்களுக்கு ‘நந்தன்’கள் தேவைப்படுவார்கள்.

     கல்விப்புலத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கக்கூடியவர்கள் ஒரே வகைமாதிரிகளாக இருக்கத் தேவையில்லை. எஸ்.ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் போன்ற புள்ளிகள் இவற்றைத்தான் நமக்குச் சொல்கின்றன.  அவர்கள் ஆசிரியர்கள் அல்லது பேராசிரியர்களாக இருக்க வேண்டிய அவசியமுமில்லை.

   மகாவீரர், புத்தர், மற்கலி கோசலர், அசோகர், திருவள்ளுவர், வள்ளலார், ஸ்ரீ நாராயண குரு, அய்யன்காளி, வைகுண்டசாமி, மகாத்மா ஜோதிபா புலே, சாவித்திரிபா புலே, அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார், சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.என்.ராய், காந்தி, நேரு, நேதாஜி, பகத்சிங், தாகூர், எல்லைகாந்தி கான் அப்துல் கபார் கான், காயிதே மில்லத், அபுல் கலாம் ஆசாத், ஆச்சார்ய வினோபாவே, ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜே.சி.குமரப்பா, ஜீவானந்தம், பி.எஸ்.சீனிவாச ராவ், புதுமைப்பித்தன், ஜெயக்காந்தன், அமர்த்தியா சென்  போன்ற பெரும்பட்டியலில் இருந்து முன் மாதிரிகள் வரவேண்டும். ஆனால் மிகவும் வெளிப்படையாக ஒற்றைமையச் சொல்லாடல்களுக்குள் சுழல்வது நமக்குச் சுகமாக இருக்கிறது. (இப்பட்டியல் இறுதியானது அல்ல.)

   'பா' என்ற பின்னொட்டு அன்பைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.  (ஜோதிராவ் புலே தேர்வு செய்யப்பட்ட படைப்புகள், தொகுப்பு, அறிமுக உரை, விவரக்குறிப்புகள் - ஜி.பி. தேஷ்பாண்டே தமிழில்: பேரா.ச.கனிகா, பாரதி புத்தகாலயம் வெளியீடு) ஆனால் இதை 'பாய்' என்று சொல்வதுதானே இங்கு  கல்வித்துறையின் பணியாக இருக்கிறது?

     நாட்டுக்கு வெளியேயும் சில முன்மாதிரிகள் இருக்கலாம். அவற்றை மாணவர்களே கண்டடையும் வகையில் பாடத்திட்டங்களோ கல்வி அமைப்பில் இடமோ  இல்லை. இயேசு, நபிகள் நாயகம், ஜொராஸ்டர், கன்பூசியஸ், தாவோ, சாக்ரடீஸ், ஐன்ஸ்டீன், ஆப்ரகாம் லிங்கன், மால்கம் எக்ஸ், கார்ல் மார்ர்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், டால்ஸ்டாய், பாப்லோ நெருதா, பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, மாவோ, ஹோசிமின், நெல்சன் மண்டேலா என்கிற பெரும் குவியலுக்குள் தேடல் நிகழ்த்த வேண்டிய கல்விப்புலம் ஏதேனும் ஒன்றைப் பிடித்துத் தொங்குவது அறமாகுமா? (இப்பட்டியலும் இறுதியானது அல்ல.)

      எஸ்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களால்  கல்வியில் ஆகப்போவது ஒன்றுமில்லை. அவருடைய தத்துவயியல் ஆய்வுகள்  எந்த நோக்கில் இருந்தன, இதற்கு மாற்றாக  அவரது மாணவர் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் ஆய்வுகள் அமைந்ததைக் கொண்டும்   அறியலாம். இந்த வேறுபடும் புள்ளிகள்  நமக்கு  பல செய்திகளை  எடுத்துக்காட்டும். 

     இந்தியத் தத்துவத்தின் தனிச்சிறப்பு அதன் ஆன்மீக  உள்ளடக்கமே  என்றும்,  இந்தியப் பொருள்முதல்வாத சிந்தனையாகிய உலகாயதத்தை நிராகரித்தவர். அவருடைய கருத்துகளிலிருந்து மாறுபட்டு இந்திய சிந்தனை மரபை தனது ஆய்வு வெளிச்சத்திற்கு  கொண்டுவந்தவர் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா. இவரைப்பற்றி எஸ்.பாலச்சந்திரன் எழுதிய அறிமுகக்கட்டுரை இம்மாத (மார்ச்.2019) ‘விகடன் தடம்’ இதழில் உள்ளது. "தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா: இந்தியத் தத்துவ வரலாற்றில் ஒரு கீறல்", என்ற கட்டுரையை நண்பர்கள்  வாசிக்கப் பரிந்துரைக்கிறேன் .

    நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது இவற்றைத்தான். கல்விக்கூடம் தன்னுடைய புறக்கட்டுமானங்களையும் அகக்கட்டுமானங்களையும் மாற்றியே தீரவேண்டும். ஒன்றிற்கு அரசின் பொருளாதார உதவிகள் தேவை. ஆனால் பிறிதொன்றுக்கு நமது மனப்பான்மை மற்றும் அணுகுமுறை மாற்றம் போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக