திங்கள், மார்ச் 25, 2019

தேர்வு முறைகளை மாற்றியமைப்பதே நிரந்தரத் தீர்வு


தேர்வு முறைகளை மாற்றியமைப்பதே நிரந்தரத் தீர்வு


மு.சிவகுருநாதன்
        இன்று (25.03.2019) நடைபெற்ற பத்தாம் வகுப்புக் கணிதவியல் தேர்வுக் கடினமான இருந்தது என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. எனக்குக் கணிதப் பாடத்தில் அதிக ஈடுபாடு இல்லையென்பதால் நேரடியாக அதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. கணிதப் பாடநூல்கள் பற்றிக்கூட இதுவரையில் நான் கருத்துரைத்தது இல்லை. ஆசிரிய நண்பர்கள், மாணவர்கள் சிலரிடம் பேசியபோது கிடைத்த தகவல்களைக் கொண்டு சில முடிவுகளுக்கு வரமுடிகிறது. 


    வழக்கமான எதிர்பார்த்த வினாக்கள் இல்லை. பாடநூல் வினாக்கள் இல்லை. சரியான விடைகளைத் தேர்வு செய்வதற்கான விடைகள் மாற்றியளிக்கப்பட்டுள்ளன. எதிர்பார்த்த செய்முறை வடிவியல் கணக்கு வரவில்லை. 5 மதிப்பெண் வினா எண் 31 இல் பிழை உள்ளது. (தமிழ் வழியில்: இதற்கு மதிப்பெண்கள் வழங்கப்படலாம்.)

  
     கணிதம் என்ற ஒரு பாடத்திற்கில்லாமல் அனைத்துப் பாடங்களுக்கும் இந்நிலை பொதுவானது என்றே கருதுகிறேன். தேர்வுச் சீர்திருத்தம் பற்றிப் பேச இது உரிய தருணம் என்று நினைக்கிறேன். 10,     +1, +2 உள்ளிட்ட எந்த வகுப்பிற்கான அரசு பொதுத்தேர்வுகளும் மிக எளிமையாகவே இருக்க வேண்டும். பள்ளித்தேர்வுகள் வேறு; போட்டி மற்றும் நுழைவுத்தேர்வுகள் வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது. பின்னதிற்கு வடிகட்டும் நோக்கம் இருக்கலாம். முன்னதிற்கு அவ்வாறான நோக்கம் இருக்கக்கூடாது, இருக்கவும் வேண்டியதில்லை.


     மேலும் HOT (Higher Order Thinking) என்று குழந்தைகளைக் கசக்கிப் பிழிய வேண்டியதில்லை. 35 மதிப்பெண்கள் எடுப்பதற்காக பல்வேறு குறுக்குவழிகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கண்டுபிடித்தும் தரவேண்டாம். கட்டகங்கள் தயாரித்து அளிப்பதும் அதில் மட்டும்  பயிற்சியளிப்பதும் கல்வியல்லவே! குறிப்பாக கணிதப்பாடத்தில் 15 “சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக” வினாக்களுக்கு (அ) விடைகளை மட்டும் எழுதினால் கண்டிப்பாக 5 மதிப்பெண்கள் கிடைக்கும், செய்முறை வடிவியல், வரைபடத்தாள் வினா, வெண்படம் என்று 35 மதிப்பெண்களுக்கான சூத்திரங்கள் சில நேரங்களில் பலனளிக்காமல் போகிறது. அப்போதுதான் வினாத்தாள் கடினம் என்று பேசுகிறோம். எதிர்பார்த்த வினாக்கள் வந்த பிற நேரங்களில் வெறுமனே கடந்து விடுகிறோம்.  


   அடுத்த ஆண்டு புதிய பாடநூல் கூடுதல் சுமையுடன் இருக்கப் போகிறது. அதற்கும் நமது ஆசிரியர்கள் குறுக்குவழிகளைத் தேடிச் செல்வர். ஏன் அறத்தின் மீது நம்பிக்கை இழக்கிறோம். நேர்மையைப் பயன்படுத்த ஏன் மறுக்கிறோம்?  


   தேர்வுகள் அனைவரும் எழுதும், தேறும் வகையில் இருப்பது ஒன்றும் தேசத் துரோகமல்ல. இதைப் பற்றிப் பேசவேண்டிய தருணங்களில் நாம் வேறு ஒன்றைப் பேசிக் கொண்டுள்ளோம். 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி, ஒன்றுமே தெரியாமல் 9 ஆம் வகுப்பிற்கு வரும் மாணவர்கள், முப்பருவமுறை  ஆகிய காரணிகளை இன்னும் பிடித்துத் தொங்கிக் கொண்டுள்ளோம். இந்த கணித வினாத்தாள் கடினப் பிரச்சினையிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. அனைவரும் தேற வேண்டும் என்று விரும்பும் ஆசிரியர்கள் இந்த மனப்பாடத்தேர்வு முறையை கைகழுவ மனமில்லாதவர்களாக இருக்கின்றனர். எல்லாவற்றிலும் மாற்றங்களை விரும்பும் நாம் தேர்வு முறைகளை மட்டும் ஏன் மாற்ற விரும்புவதில்லை? 


    தேர்வுகள் மாணவர்களுக்கு எளிமையாக இருக்கிறதோ இல்லையோ, இது நமக்கு, கல்வித்துறைக்கு எளிதாக உள்ளது. எனவே இதைக் கைவிட மனமில்லாமல் தவிக்கிறோம். 50% இம்மதிப்பீட்டை வைத்துக்கொண்டு எஞ்சிய 50% வேறு வழிகளில் மதிப்பிட வேண்டும். அதற்கான மதிப்பீட்டு முறைகள், உத்திகளை வகுக்க வேண்டும்; ஆய்வுகள் செய்து சிறப்பான மதிப்பீட்டு வடிவங்களைக் கண்டடைய வேண்டும். பாடக்குறிப்புகள்  9 அல்லது 12 படிநிலையில் எழுதப்பட்டுள்ளதா என்பதைவிட நமக்கு வேறு ஆய்வுகள் தெரியுமா? 


    அந்தவகையில்தான் முப்பருவமுறை, அகம்மதிப்பீடு போன்றவை தேர்வு வன்கொடுமைகளிலிருந்து  குழந்தைகளை ஓரளவு பாதுகாக்கும் என்பதற்காகவே அவற்றை வரவேற்கிறோம். இருப்பினும் இதை சர்வரோக நிவாரணியாகக் கருத இயலாது. இன்னும் ஆய்வு செய்து மேம்படுத்தப்பட்ட முறைகளைக் கண்டடைதல் அவசியத் தேவை. இதனால் கல்வியே அழிந்துவிட்டது எனக் கூக்குரலிடுபவர்கள் கணித வினாத்தாள் கடினம் என்று சொல்வதை முரணாகப் பார்க்க வேண்டியுள்ளது. 

 
  முப்பருவமுறையை பெருந்தீங்காக மதிப்பிடுபவர்கள் அவ்வகுப்புகளில் 60 மதிப்பெண்கள் தேர்வுகள் உள்ளதையும் +1, +2 வகுப்புகளுக்கு அறிவியல் பாடங்களில் தற்போது 70 மதிப்பெண்கள் தேர்வு என்பதையும் மிக எளிதாக மறந்து விடுகின்றனர். 


    பிற்பகலில் மொழித்தேர்வுகளை நடத்துவது குழந்தைகளுக்கு உகந்தது என்று ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடும் ஆசிரியர்கள் +1, +2 வகுப்புகளுக்கு மொழிப்பாடம் ஒரு தாள் என்பதையும் அதற்கு 90 மதிப்பெண்கள் தேர்வு என்பதையும் கண்டுகொள்ள மறுக்கின்றனர். எனவே எல்லாத் தேர்வுகளையும் பிற்பகலில் நடத்த கோரிக்கை வைக்கலாமே! 10 ஆம் வகுப்பைத் தவிர வேறு எந்த அரசுப் பொது மற்றும்  போட்டித்தேர்வுகளும் பிற்பகலில் நடப்பதில்லை. 


    ஒவ்வொரு குழந்தையும் 10 ஆம் வகுப்பைக் கடந்துதான் +1, +2 வகுப்புகளுக்குச் செல்கிறது. இது ஏனோ கல்வித்துறைக்கும் அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவதில்லை. எல்லாப் பாடங்களுக்கும் அகமதிப்பீடு அளிக்க முடிவு செய்தபோது 10 ஆம் வகுப்பிற்கே முதலில் வழங்கயிருக்க வேண்டும். மேலும் +1, +2 வகுப்புகளுக்கு 10 என்றால் 10 ஆம் வகுப்பிற்கு 20 மதிப்பெண்கள் வழங்கலாம். 


    மொழிப்பாடத்திற்கு ஒரு தாள்தான் வேண்டும். இரு தாள்கள்தான் வேண்டும் என்று ஆசிரியர்கள் அடம்பிடிப்பதாக இருப்பின் அகமதிப்பீட்டுடன் ஒவ்வொரு தாளையும் தனித்தனி பாடமாகக் கருதுக.  ஒரு தாளில் தேர்ச்சி பெறாவிட்டால்  அந்தத் தாளை மட்டுமே எழுதவேண்டும். தேர்ச்சியடைந்த தாளை மீண்டும் எழுதச் சொல்வது வன்முறையல்லவா! 


      இன்றைய சூழல் இனி என்றும் தொடர்கதையாகும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே மாற்றுத் தேர்வுகள் உள்ளிட்ட மாற்று வழிமுறைகளைச் சற்றுத் தொலைநோக்குப் பார்வையோடும் திறந்த மனதோடும் சிந்திக்க வேண்டுகிறேன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக