சனி, மார்ச் 30, 2019

கல்வித் துறையா, தணிக்கைத் துறையா?


கல்வித் துறையா, தணிக்கைத் துறையா? 


(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான ஒரு விமர்சன முன்னோட்டம் - 01) 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           
மு.சிவகுருநாதன்


(12 ஆம் வகுப்பு தமிழ்ப்  பாடநூல் பற்றிய சில கருத்துகள்.)



       வரும் கல்வியாண்டிற்கான பாடநூல்களின் ‘திருட்டுப் பிரதிகள்’ எங்கும் கிடைக்கின்றன. அதற்குரிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இவைகள் கிடைக்காது. திருட்டுகள் அம்பலமானபிறகு இப்போது இணையதளத்தில் பதிவேற்றத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. 12 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடநூலைப் பற்றிய சில கருத்துகளை மட்டும் முன்னோட்டமாகப் பகிர்ந்து கொள்கிறேன். 

   பூமணியின் ‘உரிமைத் தாகம்’ சிறுகதை வைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துவோம்; பாராட்டுவோம். 

     “உரிமைத்தாகம்’ என்னும் இச்சிறுகதை ‘பூமணி சிறுகதைகள்’ என்னும் தொகுப்பில் உள்ளது. பூமணி கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர். பூ.மாணிக்கவாசகர் என்ற தனது பெயரைச் சுருக்கிப் பூமணி என்ற பெயரில் எழுதி வருகிறார். (பக்.62) 

      டிச. 1996 இல் இரண்டாம் பதிப்பாக பூஞ்சோலைப் பதிப்பகம் வெளியிட்ட ‘நல்ல நாள்’ தொகுப்பில் 13 கதைகளில் ஐந்தாவது கதையாகவும் டிச. 2007 இல் பொன்னி வெளியிட்ட ‘அம்பாரம்’ தொகுப்பில் 24 இல் ஏழாவது கதையாகவும் ‘உரிமைத்தாகம்’ உள்ளது. நாளை வேறொரு தொகுப்பிலும் இடம்பெறலாம். 

     செவ்வியல் இலக்கியத் தொகுதிகளிலிருந்து ஒரு செய்யுளைப் பாடமாக வைக்கும்போது அந்தத் தொகுப்பின் பெயரை வைப்பதும், அதை வினாவாகக் கேட்பதும் பொருத்தமுடையதாக இருக்கும். நவீன இலக்கியத்திற்கு இது சாத்திமிவில்லை என்பது கூடவாத் தெரியவில்லை, தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசிரியப் பெருந்தகைகளுக்கும்?  புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, கம்பராமயாணம், சீறாப்புராணம், தேம்பாவணி போன்ற செவ்வியல் இலக்கியத் தொகுப்புகளை இனி யாரும் மாற்றியமைக்கப் போவதில்லை. ஆனால் நவீன இலக்கியத் தொகுப்புகள் இன்றுள்ள நவீன இலக்கிய உலகில் தொகுப்புகள் மாற்றங்களுடன் வருவது இயல்பு. அதே பாணியை இதிலும் பின்பற்றுவது இயலாது. பத்தாம் வகுப்பிலும் இதே நிலைதான். அதை அடுத்துப் பார்ப்போம்.

         பூ.மாணிக்கவாசகம் என்னும் பெயரை பூமணி எப்போது பூ.மாணிக்கவாசகர் என மாற்றிக்கொண்டார்? தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் ‘தினமணி’ நாளிதழ் ஆசிரியப் பொறுப்பில் இருக்கும்போது பிரேமதாசர், உபேந்திரர் என்று குறிப்பிடுவது தொடர்பாக சிறுமுகை ஜி. கதிரேசன் என்னும் வாசகர் கடிதத்திற்கு விளக்கமாக ‘தமிழில் ஒரு ‘மரபு’ப் பிரச்சினை’ எனும் தலைப்பில் ‘தமிழ்மணி’ இணைப்பில் (ஜூலை 14, 1990) கட்டுரையொன்று எழுதியிருந்தார். 

    அதில் வடமொழி வழக்கப்படி (ராம, கிருஷ்ண)  ‘அன்’, ‘அம்’ விகுதிகளின்றி உள்ள பெயர்ச்சொற்களை ராமா, கிருஷ்ணா என்று நீட்டியொலிப்பதைப் போலவே தமிழ்ச் சொற்களான சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் போன்றவையும் இதன் தாக்கத்தால் சேரா, சோழா, பாண்டியா, பல்லவா என்று மாறுவதையும் குறிப்பிட்டு புத்தர், அசோகர், ஹர்ஷர் எனச்சொல்வதைப் போல தமிழ் மரபிற்கேற்ப ‘தினமணி’ மாற்றியெழுத முயல்வதை விளக்கியுள்ளார். இதைப்போல் கர்நாடகம், கேரளம் ஆகியன கர்நாடகா, கேரளா எனத் திரிவதையும் சுட்டுகிறார். 

       தமிழில் புத்தர், மகாவீரர், வள்ளலார், அரவிந்தர், விவேகாநந்தர், காமராஜர் போன்ற மதிப்புறு ஆளுமைகளுக்கு இவ்வாறு ‘ஆர்’ விகுதி இணைக்கப்பட்டது. பிறகு சாதிப்பெயரின் பின்னொட்டை நீக்கி எழுதப் பயன்படுத்தினர். (எ.கா.) உ.வே.சாமிநாதர், ‘மனோன்மணியம்’ சுந்தரனார், வ.உ.சிதம்பரனார், அயோத்திதாசர். இது மேலும் பெயரின் முன் அடைமொழிகளுக்குக் கூடப் பயன்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. (எ.கா.) தளபதியார். 

    இதை சமகால எழுத்தாளர்களுக்கு அனைவருக்கும் பயன்படுத்த விரும்புகிறதா பாடநூலாசிரியர்கள் குழு?  ‘அன்’, ‘அள்’ விகுதிகளை மரியாதைக் குறைவானதாக்கி, ‘அர்’ விகுதியை இணைத்து மரியாதை கூட்டிய நிலையில் தற்போது ‘அம்’ விகுதியும் அவ்வாறே ஆகிவிட்டதோ? எனவே  பூ.மாணிக்கவாசகம், பூ.மாணிக்கவாசகனார் ஆகிறார், பா.செயபிரகாசம் ‘பா.செயபிரகாசனார்’ என்றும் ப. சிங்காரம்  ‘ப. சிங்காரனார்’ மாறுவார்களாக! நமது பாடநூல் குழுவினருக்கு உதவியாக நாம் சில பரிந்துரைகளை அளிப்போம். 


  • புதுமைப்பித்தன் - புதுமைப்பித்தனார்
  • பிரபஞ்சன் - பிரபஞ்சனார்
  • கி.ராஜநாராயணன் - கி.ராஜநாராயணனார்
  • வல்லிக்கண்ணன் - வல்லிக்கண்ணனார்
  • வண்ணதாசன்  -  வண்ணதாசனார்
  • வண்ணநிலவன்  -  வண்ணநிலவனார்
  • ஜெயமோகன் -  டாக்டர் ஜெயமோகனார் (தமிழக அரசின் கல்வித்துறையும் தேர்வுத்துறையும் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது!)
  • எஸ்.ராமகிருஷ்ணனர் - எஸ்.ராமகிருஷ்ணனர்
  • ஞானக்கூத்தன் - ஞானக்கூத்தனார்
  • வெங்கட் சுவாமிநாதன் - வெங்கட் சுவாமிநாதனார்
  • நாஞ்சில் நாடன் - நாஞ்சில் நாடனார்


  ‘அன்’, அள்’, அம்’ விகுதிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. சிலர் எங்களுக்கு மட்டும் இலக்கியப் பீடம் இல்லையா என்று சிலர் சினங்கொள்ளக்கூடும், வாரிசுகள்கூட வம்புக்கு வரலாம். அதனால் கீழ்க்கண்ட பெயர்களை அவ்வாறே மரியாதைப் படுத்திவிடுவது மிகவும் நல்லது. 


  • சுந்தர ராமசாமி - சுந்தர ராமசாமியார்
  • சுஜாதா – சுஜாதாயார் (இதைப் பிரித்தெழுதி குழப்பத்தை உண்டு பண்ண வேண்டாம்!)
  • கனிமொழி – கனிமொழியார்
  • தமிழச்சி – தமிழச்சியார்
  • கவிப்பேரரசு வைரமுத்தார் (‘me too’ வால் யாரும் தவறாகப் பொருள் கொள்ளக்கூடாதென்பதற்காக முன் அடைமொழியோடு இணைத்தல் காண்க.)   


  பிரமிள் என்ற பெண்பாலுக்குரிய பெயர் போல் தோன்றுகிறதே!  எனவே இது எப்படி மரியாதை ஆகும்? ஆகவே ‘பிரமிளார்’ என்க. நல்ல வேளை, தர்மு சிவராம் உயிருடன் இல்லை; சண்டை போட வரமாட்டார்!
   
       ‘கற்றது தமிழ், பெற்றது புகழ்’ எனும் தலைப்பில் தமிழால் புகழ்பெற்றோர் பட்டியல் இருக்கிறது. 7 முறை விருது பெற்ற திரைப்படப் பாடலாசிரியரின் பெருமையால் தமிழ் அடையும் புகழ் கொஞ்சநஞ்சமல்ல. (‘கொஞ்சம் நஞ்சு’ என்று நீங்கள் மாற்றிக் கொண்டால் அதற்கு  நான் பொறுப்பல்ல.) இம்மாதிரி விருதுகளை வாங்கிக் குவிப்போரும் பட்டிமன்ற, தொலைக்காட்சி வாயாளிகளும் தமிழைக் காப்பார்களாக! தமிழ்நாடு அரசே எழுத்தாளர்களுக்கு பெருமை செய்யாதபோது பாடநூல் என்ன செய்திடும்? இவ்வாறான குப்பைகளில் மின்சாரம் தயாரிக்க வருங்கால சமுதாயத்தை ஆற்றுப்படுத்துக! இவர்களால் தமிழுக்கு பெருமை எந்நாளும் இல்லை.

     பாடநூலில் பயிற்சிகளுக்கு ‘நம்மை அளப்போம்’ என்று பெயரிட்டுள்ளனர். நல்லது. பாட நூலாசிரியர்களும் பாடநூல் மேலாய்வாளர்களும் முதலில் ‘தம்மை அளந்தனரா’ என்பது தெரியவில்லை. பிறகுதான் பாட ஆசிரியர்களும் மாணவர்களும் அளக்கவேண்டும். ‘நம்மை அளப்போம்’ ‘பலவுள் தெரிக’ பகுதியில் பொருத்தமான விடையைத்  தேந்தெடுக்க’ எனும் வினாவில், 

(அ) உரிமைத்தாகம் -1. பாரசீகக் கவிஞர் (ஆ) அஞ்ஞாடி -2. பூமணி (இ) ஜலாலுத்தீன் ரூமி -3. பகதவச்சல பாரதி (ஈ) தமிழர் குடும்ப முறை -4. சாகித்திய அகாதெமி 

விடைகள்:   (அ)  2,4,3,1  (ஆ)  3,4,1,2  (இ)  2,4,1,3  (ஈ)  2,3,4,1

     ‘பொருத்துக’ வடிவிலான இவ்வினாவை கீழ்க்கண்டவாறுப் பிரித்து அச்சிடுவதே சரி. வரிசையாக அச்சிடும்போது இதைப் படித்துப் பார்த்து இணைப்பதே மிகக் கடினமாக இருக்கும். 

(அ) உரிமைத்தாகம் -       1. பாரசீகக் கவிஞர்
(ஆ) அஞ்ஞாடி   -           2. பூமணி
(இ) ஜலாலுத்தீன் ரூமி -     3. பகதவச்சல பாரதி
(ஈ) தமிழர் குடும்ப முறை -  4. சாகித்திய அகாதெமி 

    மேற்கண்ட வினாவிற்கு இவர்கள்   (இ)  2,4,1,3  என்பதை விடையாக எதிர்பார்க்கின்றனர். ‘உரிமைத்தாகம்’ சிறுகதையை எழுதிய பூமணிதான் ‘அஞ்ஞாடி’ எனும் நாவலையும் (புதினம் என்று சொல்லவேண்டுமாம்! இல்லாவிட்டால் அடிக்க வருவார்கள். நமக்கு தமிழ் வரமாட்டேன் என்கிறது, என்ன செய்வது?) எழுதியவர். ‘அஞ்ஞாடி’ நாவலுக்குத்தான் சாகித்திய அகாதெமி விருது 2014 இல் வழங்கப்பட்டது. எனவே இதை எப்படிப் பொருத்துவது என ‘நம்மை அளக்க’ நினைத்தோர், முதலில் ‘தம்மை அளந்து’த் தெளிந்திட வேண்டுகின்றேன். இவ்வாண்டு +1 பொதுத்தேர்வு தமிழ் வினாவில் ஏற்பட்ட குளறுபடி +2 தமிழ்ப் பாடநூலிலேயே தொடங்கிவிட்டது  நல்ல முன்னேற்றமே!

    பக்தவத்சல பாரதி (பக்.51) என்று  இருந்தது பயிற்சியில் எப்படி ‘பகதவச்சல பாரதி’யானது என்பதையும் உரியகோல் கொண்டு அளந்தறிக. மேலும் அவர் எழுதியுள்ள நூற்பட்டியலில் ‘தமிழர் உணவு’ உள்ளது. அது பக்தவத்சல பாரதி எழுதிய நூலல்ல; தொகுத்த நூல். எல்லாம் விக்கிபீடியா மயம்!

    படைப்புகளில் உள்ள சொற்களை ‘எடிட்’ செய்பவர்கள் தாங்களே எழுதும் முன்னுரையில் ‘சடப்பொருள்’ (பக்.57) என்று பயன்படுத்துவது ஏன்? ‘ஜடப்பொருளி’ன் கிரந்தத்தை நீக்கிவிட்டு ‘சடப்பொருள்’ என்று எழுதினால் அது தமிழாகிவிடுமா? ‘உயிரற்றப் பொருள்’ வழக்கில் வந்து எவ்வளவு காலம் ஆகின்றது? மீண்டும் ‘மணிபிரவாள நடை’க் காலத்திற்கு திரும்ப விருப்பமோ! 

     நெடுவினா ஒன்றில் “பண்பின் படிமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவுநிலையை பாடப்பகுதி வழி நிறுவுக”. (பக்.69) +2 மாணவர்கள் கூட சுயமாக சிந்திக்கக் கூடாதா? அவர்களே சிந்தித்து எழுதும் வகையிலான வினாக்களை விடுத்து வெறும் முன்முடிபுகளை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாதல்லவா! 

     “எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தின் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?”, (பக்.68) என்னும் குறுவினா மிகவும் முக்கியமானதாக்கும்! எனவே இருமுறை 3, 5 யிலும் கேட்கப்படுகிறது! 

    "உயிரெழுத்துகளில் தொடங்கும் சொற்களின் முன்னால் 'ஓர்' என்றும் மெய்யெழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் 'ஒரு' என்றும் எழுதவேண்டும் (ஓர் ஊர், ஒரு கிராமம்). (பக்.36, காலச்சுவடு 229, ஜனவரி 2019, பொன்.தனசேகரன், 'இதழியலில் புதுமை கண்டவர்' எனும் ஐராவதம் மகாதேவன் அஞ்சலிக் கட்டுரை யில் இவ்வாறு குறிப்பிடுகிறார். இதையே பாடநூல்களும் சொல்கின்றன. இதற்கான விதிகளை யாரும் சுட்டுவதில்லையே, ஏன்? 

   இக்கதை போடப்பட்ட ஓவியம் இக்கதையையோடு தொடர்பற்று வேறுகதையை நமக்குச் சொல்கிறது. இம்மாதிரி ஓவியங்களைப் பயன்படுத்தாமலிருப்பது மிகவும் நல்லது. ‘திருகையில் உட்கார்ந்திருப்பதாக’ கதை சொல்கிறது. திருகை என்பது சிறுதானியங்களை மாவாக்கும், உளுந்து போன்றவற்றை உடைக்கும் இயந்திரம். சில பகுதிகளில் இது எந்திரம் என்றே அழைக்கப்படும். ஓவியத்தில் உரலில் உட்கார்ந்திருப்பதுபோல் பதிவாகியுள்ளது. இது தவறு. உரல் வேறு; திருகை வேறு. 

     “ரெண்டு வீடுகளுக்கும் நடுவிலிருந்த குறுக்குச்சுவரை வெறித்திருந்தான் அவன்”, (பக்.56) என்று சிறுகதையில் வருகிறது. ஆனால் ஓவியத்தில் சுவர் இருக்கும் இடம் வெளியே. இது சுற்றுச்சுவராகிறது. பாகப் பிரிவினையில் வீட்டினுள் குறுக்கே சுவர் எழுப்புவது இங்கு மதில்சுவராக மாறிப்போகிறது. வெறுமனே வண்ண ஓவியங்கள் இடம் பெறுவது மட்டும் பலனில்லை. கதை எழுதப்பட்ட காலம், சூழல், இடம் போன்றவற்றையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

    மேலூர் என்பது ஒரு குறியீடு; அது மதுரை மேலூர் என்று  கருதிவிடக்கூடாது. கதைக்களம் கரிசல் பூமி. மேலூர் X கீழூர், மேற்கு X கிழக்கு, வடக்கு X தெற்கு, மேடு X பள்ளம் என்ற முரணெதிர்வுகளால் சூழப்பட்ட சமூக அவலத்தைக் காட்டும் குறியீட்டை வெறும் பங்காளி (அண்ணன் - தம்பி) ஒற்றுமையாகக் குறுக்குவதும் புரிந்துகொள்வதும் பிரதியின் ஒற்றைத் தன்மைக் கண்டு அதை மாணவர்களிடம் திணிப்பதும் மிகவும் ஆபத்தான கூறுகள். படைப்பை சிதைப்பதைப் போலவே அவற்றை வாசிக்கும் வாசகனின் பார்வையை குறுக்கீடு செய்வதாகும். 

   “கோட்டேர் போட்டு ரெண்டுசோடிக் கலைகளையும் பத்திக்கொண்டு போனான் வெள்ளைச்சாமி. முத்தையன் மூக்கம்மாளிடம் சொன்னான். 

    "ஏய் நான் போறென். கஞ்சியும் கூடையும் கொண்டுட்டு வா. கல்லுமுள்ள பெறக்கி போடணும். எலந்தச் செடிவேற மொளச்சிக்கெடக்குது. அருவாளவும் எடுத்துப் போட்டுக்கோ. சின்னப்பெய எங்க போயிட்டான். வெள்ளையோட மகன வச்சுக்கிட்டான்னா அவளும் காட்டுக்கு வருவா." 

   அவன் விதைப்பெட்டியையும் கூளத்தையும் தூக்கிக்கொண்டு கிளம்பினான். 

    மொட்டைத் தலையில் மயிர் முளைத்ததுபோல் மந்தையெங்கும் பல்பசுமை. எருமைகள் சொகமாக மேய்ந்தன. ஒரு கண்ணுக்குட்டி கிடங்குவாகறையில் தண்ணீரை உறிஞ்சிக்கொண்டிருந்தது. 

    காளைகள் நவாமரத்து வண்டிப்பாதையில் திரும்பி மேலக்காட்டை அடைந்தன. புஞ்சையின் நடுவில் பெரிய கருவமரம். 

   மரத்தடியில் சாமான்களை இறக்கிவிட்டு வந்தான் முத்தையன். வெள்ளைச்சாமி ஏர்க்காலை மாற்றிவைத்து கலப்பை கட்ட ஆரம்பித்தான்.

    புஞ்சையில் நிரக்க எலந்தசெடி முளைத்துகிடந்தது. வேர்தோண்டியடுக்க வேலை தீரவில்லை”.

       மேற்கண்ட பகுதிகள் ‘உரிமைத்தாகம்’ சிறுகதையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணம் தெரியவில்லை.. அதற்குக் காரணம் அப்பகுதிகளிலுள்ள வட்டார வழக்குச் சொற்கள் காரணமாகத் தெரியவில்லை. படைப்பாளியின் எழுத்துகளை சிதைக்காது அப்படியே பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இப்பகுதிகளை நீக்கியதற்கு 'மயிர்' எனும் சொற் பயன்பாடு காரணமாக இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். கதையின் முதல் பக்கத்தில் ‘தொடைமயிரில்’ என்னுஞ்சொல் இவர்களை அறியாமல் உள்நுழைந்துவிட்டது. 'மயிர்' உள்ள திருக்குறளை என்ன செய்வீர்கள்?

    மேலும் பெண்களின் வேளாண் பணிகள், குழந்தைகளின் கல்வி மறுப்பு பற்றியும் இதில் வருகிறது. “பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டிய குழந்தைகள் இல்லை”, என்று ஒவ்வோராண்டும் 'இன்மை' அறிக்கை தாக்கல் செய்யும் நாம் இத்தகைய சூழலை வெளிச்சம் போட்டுக் காட்ட முடியுமா, என்ன?
                             (தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக