திங்கள், மார்ச் 25, 2019

புதிய சிந்தனைகள் மற்றும் புதிய அணுகுமுறைகளின் தேவையை உணரவேண்டும்.

புதிய சிந்தனைகள் மற்றும் புதிய அணுகுமுறைகளின் தேவையை உணரவேண்டும். (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 07) 

 
மு.சிவகுருநாதன்


(ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் - புவியியல் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)      “ஆசியாவில் நாற்பத்து எட்டு நாடுகள் உள்ளன”, (பக்.159, 6, புவியியல்) என்று சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையால் அங்கரிக்கப்பட்ட (193) அல்லது அங்ககரிக்கப்படாத நாடுகளின் பட்டியலா?  எதிலிருந்து இவர்கள் என்ணிக்கையை முடிவு செய்கிறார்கள் என்பது விளங்கவில்லை. ஐ.நா. உறுப்பு நாடுகளின் பட்டியலிருந்து இது சொல்லப்படுவதாகத் தெரிகிறது. பாலஸ்தீனம், துருக்கிய சைப்ரஸ், தைவான் போன்ற ஐ.நா. உறுப்பல்லாத ஆசிய நாடுகள் இந்த எண்ணிக்கைகளில் வருவதில்லை. 


     மேலும் ஐரோப்பா கண்டத்திலுள்ள நாடுகளின் எண்ணிக்கை பாடநூலில் இல்லை. ஐரோப்பாக் கண்டத்திலிருந்து ஐ.நா. உறுப்பு நாடுகளாக சுமார் 40 க்கு மேற்பட்ட நாடுகள் உள்ளன.  அவை இங்கு குறிப்பிடப்படுவதில்லை. மாறாக “ஐரோப்பிய ஒன்றியம் என்பது 28 உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு குழுமமாகும்”, (பக்.171, உங்களுக்குத் தெரியுமா?) என்று மட்டும் குறிப்பிடப்படுகிறது. 2016 இல் பிரிட்டன் (ஐக்கியப் பேரரசு / UK / இங்கிலாந்து) இவ்வமைப்பிலிருந்து விலகியதால் இப்போது எண்ணிக்கை 27 தான்! ஜூன் 24, 2016 இல் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான புருசெல்ஸ் இல் செய்தியாளரைச் சந்தித்த  ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் 27 நாடுகளைக் கொண்டு இக்கூட்டமைப்பு தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார். 10 ஆம் வகுப்புச் சமூக அறிவியல்  பழைய பாடநூலின் குளறுபடிகள் இன்றும் தொடர்வது நமது கல்வியமைப்பின் அவலம் மட்டுமல்ல; வேதனையும்கூட. 


     ஐராவதி நதியின் பிறப்பிடம் “பனி படர்ந்த உயர்ந்த மலைகளில் தோன்றுகின்றன”, என்று பத்தியிலும் அட்டவணையில் வடக்கு மியான்மர் என்றும் (பக்.163) குறிப்பிடப்படுகிறது. இடம், மலை ஆகியவற்றில் எவற்றைச் சொல்வது என்கிற குழப்பம் ஏன்? வடக்கு மியான்மாரை இமயமலையின் தொடர்ச்சி என்று கூறலாமா, வேண்டாமா என்கிற குழப்பத்தில் பாடம் எழுதக்கூடாது. 


    ஆசிய வேளாண்மைப் பகுதியில், “மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இயற்கை ரப்பர் உற்பத்தியில் முதன்மையாக விளங்குகின்றன”, (பக்.167) என்று உள்ளது. செயற்கை ரப்பர் மரங்களும் உண்டோ! இவை எங்குள்ளன என்று சொன்னால் நல்லதுதானே! இங்கு வேளாண்மைதானே பேசப்படுகிறது! எனவே ரப்பர் போதுமே. தொழில்களைப் பற்றிச் சொல்லும்போது செயற்கை ரப்பரைச் சொல்லலாமல்லவா! 


       ‘பிரசித்தி’ (பக்.168) என்றெல்லாம் வழக்கொழிந்த மற்றும் மணிபிரவாள நடையில் பாடம் எழுதுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இவற்றையெல்லாம் தாண்டி மொழி எவ்வளவோ வளர்ந்துள்ளதை உணர வேண்டும். பாடநூலில் மொழிச்செழுமை இல்லையென்றால் பிறகெப்படி மொழி வளரும்?  


   “ஆசிய நெடுஞ்சாலை 43 (AH43) இந்தியாவிலுள்ள ஆக்ராவிலிருந்து இலங்கையிலுள்ள மதாரா வரை செல்கிறது (3024 கி.மீ.)”, என்று பாடநூல் சொல்கிறது (பக்.168). இந்தியாவில் 2481 கி.மீ., இலங்கை 543 கி.மீ. என்று இணையங்களில் கணக்கு சொல்கிறார்கள். இதன் மூலம் இந்தியாவையும் இலங்கையையும் கடலில் பாலம் வழியாக இணைத்தாகிவிட்டதா? உலகவங்கி போன்ற உலக நிதி அமைப்புகளிடம் கடன் பெறுவதற்காக இவை முன்கூட்டியே அறிவிக்கப்படுகின்றன. கடலில் பாலம் கட்டியபிறகே இந்த நெடுஞ்சாலை இறுதியாகும். அதுவரையில் வெறும் காகிதத்தில்தானே! அதுவரையில் விமானம் அல்லது கப்பலில்தான் செல்லமுடியும். பிறகு இதெப்படி நெடுஞ்சாலையாகும்? 


    கலைச் சொற்களில் (பக்.182) “பருவக்காற்று – குறிப்பிட்ட பருவத்தில் இந்தியப் பெருங்கடலில் வீசும் காற்று”, என்று விளக்கமளிக்கப்படுகிறது. உலகில் பிற இடங்களில் பருவக்காற்றுகளே இல்லை என்பதுதான் இதன் பொருளா? பசுபிக் பெருங்கடல்களிலும் பருவக்காற்றுகள் உண்டுதானே! 


   ஐரோப்பா “இவ்வுலகில் மிகுந்த வளர்ச்சியடைந்த கண்டமாக இது திகழ்கிறது”, (பக்.171) பிற கண்டங்கள் வளர்ச்சியடையாதவைகளா? இங்கு வளர்ச்சியின் அளவுகோல்கள் என்ன? “தொழில்துறையில் உலகிலேயே மிகவும் முன்னேற்றமடைந்த கண்டமாகத் திகழ்கிறது:, (பக்.182) என்றி ‘நினைவில் நிறுத்த’ப்படுகிறது. இன்று தொழில்துறை வளர்ச்சியில் ஜப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளும் முன்வரிசையிலிருக்க பழைய கதைகளை கொஞ்சமாவது மாற்றலாம். வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டையும் சூழலையும் பாதுகாக்க தொழில்களை வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்குக் கொண்டு வருகின்ற உலகமயச் சூழலும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். 


   “மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் (O3)  ஆன மூலக்கூறுகளைக் கொண்ட ஓசோன் ஒரு நச்சு வாயுவாகும்”, (பக்.79, ஒன்பதாம் வகுப்பு) என்று உண்மையைச் சொன்னதற்குப் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.


    “ஓசோன் படலம் உண்மையில் ஓர் வளிமண்டல அடுக்கு அல்ல. இது படுகையடுக்கில் (Stratosphere) 19 முதல் 30 கி.மீ. வரை பரவிக் காணப்படுகிறது”, (பக்.79)  எனவும் சொல்லித் தருவது ஓசோன் பற்றிய கற்பிதங்களையும் மூடநம்பிக்கைகளையும் அகற்றப் பயன்படும். 


  Fire என்பதை நெருப்பு (பக்.208,209, ஆறாம் வகுப்பு)  என மொழிபெயர்க்கலாமா? தமிழில் தீயும் நெருப்பும் ஒன்றா? தீ விபத்தை நெருப்பு விபத்து என்று சொல்லலாமா?  நல்லவேளை! ‘அக்னி’ என்று மொழிபெயர்க்காமல் விட்டார்களே!


   ‘சிந்திக்க’ எனும் தலைப்பில் “புகை நெருப்பைவிட அதிக ஆபத்தானது. ஏன்?”, (பக்.122, ஒன்பதாம் வகுப்பு) என்று வினவப்படுகிறது.

   இது ஆங்கில வழியில் ‘Think why’  எனும் தலைப்பில் “Smoke kills more than fire”.  (page: 104) என்றும் உள்ளது.

  மூங்கில் கம்பு ஐ மூங்கில் கொம்பு (பக்.211, ஆறாம் வகுப்பு) எனலாமா? குதிரைக்கொம்பைப் போன்று மூங்கில் கொம்பும் உண்டோ! 

 “வெள்ளப் பெருக்கின் போது செய்ய வேண்டியவை”களில் (பக்.212)
குடிநீரைக் காய்ச்சிக் குடித்தல் வேண்டும்”. (வடிகட்டிக் குடித்தல் நல்லது.)

“பினீச்சிங் பவுடர் கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்”. (பிளீச்சிங் பவுடர்)

“வயிற்றுப் போக்கு இருந்தால் அதிக அளவில் உணவு உண்ணக்கூடாது”. (உப்பு, சர்க்கரைக் கரைசல் கொடுத்து, நீரிழப்பைத் தடுக்கலாம்.)

செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் சமூக வைலத்தளங்கள் (வலைத்தளங்கள்) மேம்பட்ட தகவல்களைத் தருகின்றன”. (பக்.212, 6 ஆம் வகுப்பு)

    இன்று சமூக ஊடகங்கள் ஊதிப் பெருத்துள்ள நிலையில் அவைகள் மூலம் பெறப்படும் பயனுள்ள தகவல்களைவிட வதந்திகள், மின்னணுக் குப்பைகள் அதிகம். எனவே இவற்றை எச்சரிக்கையாக அணுக வேண்டியதை வலியுறுத்தவேண்டும். சமூக வலைத்தளங்கள் மேம்பட்ட தகவல்களைத் தருவதாக அனைத்தையும் நம்பிவிட முடியாதல்லவா! இதனால் வதந்திகள்தான் பலமடையும்.

    ‘Remote sensing’ என்பதை ‘தொலை நுண்ணுணர்வு’ என்று தொடந்து மொழிபெயர்ப்பது ஏன்? ‘தொலை உணர்வு’ என்று சொன்னால் போதாதா? ‘நுண்ணுணர்வு’ என்று நீட்டி முழக்குவது தேவையா? தமிழ் வழி என்றால் எளிமையாக இருக்கக் கூடாது என்பது பொது விதியா? அல்லது சதியா?  பழைய பாடநூல்களில் இதே மொழிபெயர்ப்புப் பயன்படுத்தப்பட்டது. அதனை அப்படியே காப்பியடிக்காமல் சற்று மேம்படுத்துவது கல்வியை, மொழியை மெருகூட்டும் என்பதை ஏனோ மறந்துவிடுகிறோம். இம்மாதிரியான மொழிபெயர்ப்புகளால் தமிழ் படிப்பதற்கு எளிமையானது அல்ல என்னும் மாயத்தோற்றத்தை உருவாக்கி விடுகிறோம்.

“புவியின் உண்மையான் வடிவம் ஜியாய்டு எனப்படுகிறது”, (பக்.99, 9 ஆம் வகுப்பு) ‘Geoid’ என்பதை ‘புவி வடிவம்’, என்று சொல்லலாமே! ஏன் ‘ஜியாய்டு’ என்று ஒலிபெயர்க்க வேண்டும்?

   ‘diapers’  ஐ அரையாப்பு (பக்.83, 9 ஆம் வகுப்பு) என்று மொழிபெயர்க்கிறார்கள். இவை போன்றவற்றை அடைக்குக்குறிக்குள் ஆங்கிலத்தில் அளிப்பது நலம்.  
    
       நாங்கள் படிக்கும்போது 7, 8 வகுப்புகளில் உயர் அழுத்த சமையல் கலன், வெப்பக் குடுவை என்றெல்லாம் படித்தோம். அவை என்னவென்று ஆசிரியர்களும் விளக்கிக் கூறியதில்லை. Pressure Cooker, Thermo Flask என்று அடைப்புக் குறிக்குள் எழுதப்படமில்லை. எதுவும் தெரியாமல் படித்துவிட்டு, பின்னாளில்தான் விளங்கிக் கொண்டோம். 

     இரசாயனம் – வேதி, வேதிப்பொருள், வேதியியல் என மாற்றம் பெறுவது  எந்நாளோ?  வறண்ட கழிவுகள் – dry waste (பக்.83) என்பதை திடக்கழிவுகள் (அ) திண்மக்கழிவுகள்  என மொழிபெயர்ப்பது நல்லது. Wet waste என்பதற்கு மாற்றாக இவ்வாறு மொழிபெயர்க்க வேண்டாம். 

     “உலக அமைவிட கண்டறியும் தொகுதியின் நன்மைகள்” (GPS) விளக்கப்படுவதைப் பாருங்கள்!

    “கைபேசிகள், கைக்கடிகாரங்கள், புல்டோசர்கள், கப்பல் கொள்கலன்கள் மற்றும் தானியிங்கி பணபரிமாற்ற கருவிகள் (ஏ.டி.எம்.) என அனைத்திலும் உலக அமைவிட கண்டறியும் தொகுதி தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுகிறது”. (பக்.108) ATM என்பது தானியங்கிப் பணம் வழங்கும் எந்திரம் மட்டுமே. ATM ஐ ‘தானியங்கிப் பண வழங்கி’ என்று மொழிபெயர்க்கலாம். இணையவழிப் பணப் பரிமாற்றக் கருவிகள் நிறைய உள்ளன. சென்ற பருவத்திலும் (பொருளியல்) இக்குழப்பம் இருந்தது; அது இன்றும் தொடர்கிறது. 

   “Advantages of GPS GPS technology has tremendous applications in everything from mobile phones, watches, bulldozers, shipping containers and ATMs”. (page:92)
    அமில மழை ( Acid Rain) பற்றி ஒன்பதாம் வகுப்பு புவியியல் பாடத்தில் சொல்லப்படுவதைப் பார்ப்போம்.  

    “மாசுப் பொருள்கள் நீராவியோடு சேர்ந்து சூரியஒளி மற்றும் உயிர்வளித் துணையோடு நீர்த்த கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இக்கலவை, மழை நீரில் கரைந்து மழையாகப் பெய்வதை அமிலமழை என்கிறோம்”, (பக்.79) 

   “When pollutants combine with water vapour in the presence of sunlight and oxygen, they form dilute sulphuric and nitric acids in the atmosphere. When this mixture precipitates from the atmosphere, it is called acid rain”. (page:69)

   கார்பன் டை ஆக்சைடு, நீருடன்  (CO2) கார்பானிக் (H2CO3) அமிலத்தைக் கொடுக்கும்.  இதுவே சோடாநீர் ஆகும்.  மீண்டும் கார்பன் டை ஆக்சைடு வெளியேறிவிடுவதால் இது ஒரு மீள்வினையாகும். கந்தக டை ஆக்சைடு (SO2)   நீராவியிடன் சேர்ந்து கந்தக டிரை ஆக்சைடாக (SO3)  மாறுகிறது.  SO3 மழைநீருடன் இணைகையில் மிக எளிதில் கந்தக அமிலமாக மாறுகிறது. தொடர் மழைப்பொழிவினால் நீர்த்த கந்தக அமிலமாகிறது. இதைப்போல  நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) நீர்த்த நைட்ரிக் அமிலத்தையும் (HNO3) உண்டுபண்ணும். 

    கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம் போன்று வேதிபெயரைச் சொல்லும்போது ஆக்சிஜன் (உயிர்வளி)  என்று சொல்வதில் என்ன சிக்கல் இருந்துவிடப்போகிறது? நீர்த்த கந்தக அமிலம் போன்று நீர்த்த நைட்ரிக் அமிலம் என்றுதானே சொல்லவேண்டும்? 
    
  “மின்னணுக் கழிவுகள் (e-waste) என்பவை பயன்படுத்த இயலாத எல்லா மின்னணுக் கருவிகளுமாகும். (எ.கா.) கணினிகள், தொலைக் காட்சிப் பெட்டிகள், கைப்பேசிகள் மற்றும் மின்னஞ்சல் கருவிகள்”. (பக்.83) 

“Electronic waste (e - waste): It can be defined as electrical goods, devices or components that you no longer want or have already thrown away. For example, computers, televisions, mobiles and fax machines”. (page: 72)

    இதில் இறுதியாக, ‘மின்னஞ்சல் கருவிகள்’ என்று எதைக் குறிப்பிடுகிறார்கள் என்று குழப்பம் ஏற்படுகிறது.  ஆங்கில வழிப் பாடநூலைப் பார்க்கும்போதுதான் தெளிவு பிறக்கிறது. ‘fax machines’ என்பதே மின்னஞ்சல் கருவிகள் என மொழியாக்கம் செய்யபடுகிறது. ‘fax’ என்பதற்கு ‘தொலைநகல்’ என்பது பாலபாடம். ஆனால் நமது பாடமெழுதிகளுக்கு இது எட்டாக்கனி! தொலைநகல் வேறு, மின்னஞ்சல் வேறு என்பதை யாராவது விளக்கிச் சொன்னால் தேவலாம்.

   7, 8, 10 பாடநூல்களில் ‘fax’ என்பதைப் ‘பிரதிகள்’ என்றே மொழிபெயர்த்தனர். அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொல்லைத் தரவுமில்லை. ‘தொலைநகல்’ என்பதை பலர் ஒத்துக்கொள்ளவில்லை. இது தகவல் தொடர்பு சாதனங்களில் இது இருப்பதால் ஆசிரியர்கள் பலர் ‘Xerox’ தான் அது என அடம்பிடித்தனர். இந்த ‘நகலெடுப்பான்’ மூலம் தகவல்களைப் பலருக்கு கொண்டு சேர்க்கமுடியுமே என்ற காரணத்தையும் விண்டுரைத்தனர். பாடநூலில் தவறாக எழுதுபவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அதற்கு ‘பாஷ்யம்’ மற்றும் ‘உரை’யெழுத இங்கு பெருங்கூட்டம் உள்ளது..

   இன்னும் மொழிபெயர்ப்புச் சுவைகளைப் பருக பாடநூலிலிருந்து  சில எடுத்துக்காட்டுகள்:

    “ஆகவே மின்னணுக் கழிவுகளைக் குவித்து வைக்காமல் அவற்றிலிருந்து மாற்றுப் பொருள்களை உற்பத்தி செய்து மீண்டும் பயன்படுத்தத்தக்க வகையில் சில பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றலாம்”, (பக். 83) 

“Instead of sending e-waste to the dump, components from electronics can be reused to make new products”. (page:72)

   முன்னதாக மறுசுழற்சிக் கழிவுகள் பற்றியும் பாடநூல் பேசுகிறது. மின்னணுக்கழிவுகளை, மின்கழிவுகள் (பக்.82) என்றும் தவறாகச் சொல்லப்படுகிறது. இறுதியில் மின்னணுக் கழிவுகளையும் மறுசுழற்சிக் கழிவாக மாற்றுகிறது. இவை எந்த வகையில் மறுசுழற்சி செய்யப்படுகிறது என்பதை விளக்கினால் நல்லது. பழைய இரும்புக்கடைகளில் மின்னணுக் கழிவுகளை யாரும் வாங்குவதில்லையே! காரணம் என்ன? 

    “மிக முக்கிய மூலப்பொருள் இட அமைப்பு ஆகும். வரைபடத்தில் நமக்கு அறிமுகமில்லாத ஓர் இடத்தை அறிந்துகொள்ள, அறிமுகமான ஒரு முகவரியிலிருந்து இணைப்பு பெற்று தகவல்களை ஒருங்கிணைக்கலாம். ஒரு பகுதியின் ஒவ்வொரு வகையின் தரவுகளும் ஒரு வரைபடத்தின் தனித்தனி தரவுகளும் ஒரு வரைபடத்தின் தனித்தனி அடுக்குகளாகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. GIS இல் அடுக்குகள் தேவையெனில் பயன்படுத்தவும் தேவை இல்லை எனில் அதை நீக்கவும் செய்யலாம். எடுத்துக்காட்டாக மருத்துவமனை, பள்ளிக்கூடம், நீர்நிலைகள், பூங்காக்கள் மற்றும் ஏடிஎம். தரவின் இணைப்பைப் பயன்படுத்தி கணினியால் ஒரு வரைபடத்தை உருவாக்க முடியும்”. (பக்.109) 

 “The key ingredient is location. We must have a coordinate, an address or a distance from a known point that helps us to link the information to a location on a map. Each type of data of an area is stored as a separate 'layer' of the map. In GIS, layers may be used some times and removed according to need. Examples are hospitals, schools, water bodies, parks and ATMs. The computers can create maps showing any combination of data”. (page:93)

   “எடுத்துக்காட்டாக மருத்துவமனைகள், பள்ளிகள், நீர்நிலைகள், பூங்காக்கள், தானியங்கிப் பண வழங்கிகள் (ATMs) ஆகியவற்றின் தரவுகளின் இணைப்பால் கணினியில் ஒரு வரைபடத்தை உருவாக்கலாம்”, என்பதுபோல எளிமையாக மொழிபெயர்க்க ஏன் முயலக்கூடாது? 

 “செயற்கைக்கோள்களான லேன்ட்சாட், கார்ட்டோ சாட், ஓசன்சாட் மற்றும் பிற செயற்கைக்கோள்களிலிருந்தும் தொடக்கநிலை தரவுகள் பெறப்படுகின்றன”, (பக்.107)  

  “The preliminary data is retrieved from satellites like LANDSAT, CARTOSAT, OCEANSAT, etc.” (page: 92)

“புவன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ‘புவி’ என்று பொருள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தினால் (ISRO) ஆகஸ்ட் 12 ம் நாள் 2009 ஆம் ஆண்டு, இலவச இணைய தளம் கணினி சார்ந்த பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது”. (பக்.109) 

“Bhuvan (Sanskrit for Earth) is a free internet based computer application launched by Indian Space Research Organization (ISRO) on August 12 th 2009”. (page: 93)

   மேலே கண்ட இரு பத்திகளும் தேவையற்றச் சொற்கள் மற்றும் சொற்றொடர்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளதால் தமிழ் வழியில் தேவையற்ற நீட்சியைக் கொடுக்கிறது. இது தேவையா? தமிழ் வழியில் படிப்போரைப் பழி தீர்க்கலாமா? குறளில் இரண்டடிகளில் உள்ள எளிமை, தெளிவு, சுருக்கம் ஆகியன தமிழுக்குப் பெருமையல்லவா! முதல் பத்தியில் இருமுறை ‘செயற்கைக்கோள்கள்’ வருவது தேவையற்றது. இரண்டாவது பத்தியில் ‘புவனின்’ பொருளுக்காக ஒரு சொற்றொடர் சேர்க்கப்படுவது வீண் வேலை. ஒலிபெயர்க்காமல் ஆங்கில எழுத்துகளை அப்படியே பயன்படுத்துவது குறித்தும் யோசிக்கலாம்.

  “காலனியரசு வேளாண்மையை வணிகமயமாக்கும் கொள்கையைப் பின்பற்றியது. வணிகப் பயிர்களான பருத்தி, சணல், வேர்க்கடலை, எண்ணெய் வித்துக்கள், கரும்பு, புகையிலை ஆகியன சந்தை நிலவரங்களுக்கு ஏற்றவாறு உணவு தானியங்களைக் காட்டிலும் லாபகரமான விலையைப் பெற்றுத்தந்தன. (பக்.57)

“The colonial state pursued a policy of 'commercialization of agriculture'. Commercial crops like cotton, jute, groundnuts, oilseeds, sugarcane, tobacco etc., depending on the market demands fetched better prices than food grains”. (page:50)

   ‘Groundnuts’,  தமிழில் ஏன் வேர்க்கடலை ஆகிறது? நிலக்கடலை என்று சொல்வதில் என்ன சிக்கல்? ‘வேர்க்கடலை’, காரணப்பெயரோ? நிலத்தடியில் இருப்பதெல்லாம் வேர் என்னும் மாயை!  (‘கல்விக் குழப்பங்களில்’ இதுகுறித்த கட்டுரை உள்ளது.)  நிலக்கடலையும் ஒரு வகையில் எண்ணெய் வித்துதானே! ‘அவுரி’ போன்ற சாயப்பயிர்களை மிகக் கவனமாகத் தவிர்த்திருப்பதன் அரசியல் என்னவென்று தெரியவில்லை. நிலவுரிமை யாரிடமிருந்தது? இதனால் லாபமடைந்தது யார்? மேலும் தேயிலை, காப்பி, ரப்பர் போன்ற தோட்டப்பயிர்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட சூழலியல் தாக்கம், அடிமைக்கூலிமுறைகள் உண்டானதும் எதனால் என்பதையும் உணரவேண்டும்.
  
  
   “இங்கு வாழும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் காகசாய்டு இனத்தவர் ஆவார்”, (பக்.179, ஆறாம் வகுப்பு)  ஆசியாவில் இனத்தைப் பற்றி ஏதும் பேசாமல் ஐரோப்பாவில் மட்டும் காகசாய்டு (Caucasoid) என்ற இந்தோ-ஐரோப்பிய இனம் பற்றி பேசுவதேன்? நீக்ராய்டு, , மங்கோலாய்டு போன்ற இனங்களின் அறிமுகம் தேவையில்லையா? மேலும் இன்றையச் சூழல் மற்றும் ஆய்வுகளின் பின்னணியில் இனத்தூய்மைவாதம் பேசவும் பாசிச அரசியலுக்குமே இவை பயன்படலாம். 

            
                   (இன்னும் வரும்…)            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக