ஜெயமோகனுக்கு
டாக்டர் பட்டம்!
(பிழைகளுடன்
உரிய கவனமின்றி தயாரிக்கப்பட்ட +1 பொதுத்தேர்வு
தமிழ் வினாத்தாள் குறித்த பதிவு.)
சென்ற ஆண்டு ‘நீட்’ தேர்வில் தமிழ் வழி வினாத்தாள்
மொழிபெயர்ப்பு குளறுபடிகள், அது தொடர்பான வழக்குகள்
உங்களுக்கு நினைவிருக்கலாம். புதிய பாடநூல்கள்,
புதிய தேர்வு முறைகள், மொழிப்பாடங்களுக்கு ஒரு தாள், அகமதிப்பீடு மதிப்பெண்கள் என பல
புதிய கூறுகளுடன் +1 அரசுப் பொதுதேர்வு நேற்றுத் (மார்ச் 06, 2019) தொடங்கியுள்ளது.
+1 தமிழ் வினாத்தாளைப்
பார்க்கும்போது பாடநூலைப் போன்று பிழைகளுடன் கவனமின்றி உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
பாடநூல் ஓராண்டாக புழக்கத்தில் உள்ளது. அதிலுள்ள பிழைகளைக் களைந்திருந்தால் அப்பிழைகள்
பொதுத்தேர்வுகளில் தொடர்வதைத் தவிர்த்திருக்க முடியும். பாடநூல் பிழைகளைத் தொடர்ந்துச்
சுட்டிக்காட்டி வருகிறோம். அவற்றைக் களைவதில் கல்வித்துறையும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனமும் (SCERT) ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டன.
எந்த வகுப்பிற்கும் பிழைத்திருத்தம் செய்யப்பட்டதன் முந்தைய தவறான வடிவம் தேர்வில்
இடம்பெறுவது தொடர்கதைகள் ஆகிவிட்டன. இதனால் தேர்வின் தரம், நம்பகத்தன்மை குறித்த கேள்வி
எழுவது இயல்பானது.
பாடநூல்
எழுதுவதைக் காட்டிலும் வினாத்தாள் தயாரிப்பது இன்னும் சற்றுக் கூடுதல் கவனத்துடன் செய்யவேண்டிய
பணி. அதைச் சரிவர செய்யாத நிலையும் உரிய மேலாய்வின்மையும் கண்டிக்கத்தக்கன. எடுத்துக்காட்டாக
மேலோட்டமான பார்வையில் +1 தமிழ் கேள்வித்தாளில்
ஒரு மதிப்பெண் வினாக்களில் பல குறைபாடுகளைக்
காணமுடிகிறது. வினாத்தாளை முற்றிலும் ஆய்வு செய்யும்போது இன்னபிறவும் கிடைக்கலாம்.
பலவுள் தெரிக (பல்விடைத் தேர்வு / சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.) வகை வினாக்கள் தயாரிப்பதற்கான வரைவிலக்கணங்கள் உள்ளன. அவற்றை
வினாத்தாள் எடுத்தவர் முற்றாகப் புறக்கணித்திருக்கிறார்.
முதல் வினாவே குளறுபடியில் தொடங்குகிறது.
வினா எண்: 1
‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
(அ) மீரா (ஆ) இரா.மீனாட்சி
(இ) அப்துல் ரகுமான்
(ஈ) வரா
‘கவிதை நூல்’ என்ற
பிறகு அதை எழுதியவர் கவிஞர் என்பது உட்பொருள். நான்கு விடைகளும் கவிஞராக இருப்பது நலம்.
சரியான விடை ஒருபக்கமிருக்க நான்கு விடைகளின் பொருத்தமுடைமை கூர்ந்து அவதானிக்க வேண்டியது.
‘மீரா’ விற்கு எதுகையாக ‘வரா’ வந்தது புத்திசாலித்தனமாக ஒன்றல்ல. கவிஞர் மீ.ராஜேந்திரன்
தனது பெயரின் முன்னெழுத்துகளை இணைத்து ‘மீரா’ என்னும் பெயரால் அறியப்பட்டவர். வ.ரா.
என்றழைக்கப்படும் வ.ராமசாமி (அய்யங்கார்) எழுத்தாளர், நாவலாசிரியர், இதழாளர். சாதி
அடையாளங்களைக் கடந்து சமூக சீர்திருத்தத்திற்கு உரிய அழுத்தம் கொடுத்ததால் அண்ணா போன்றவர்களால்
பாராட்டப் பெற்றவர். ‘மணிக்கொடி’ இதழின் ஆசிரியர்; ஆனால் கவிஞரில்லை.
‘வ.ரா.’ என்று எழுதுவதுதானே
சரி! ‘மீரா’விற்கு எதுவகையாக ‘வரா’! ‘வரா’
என்றுப் புள்ளியின்றி எழுதி ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என இலக்கணக்குறிப்பு எழுதிவிடாதீர்கள்!
வினா எண்: 3
யாரோ உனைப்போல் அனுதினம் உழைப்போர்? – இது எவர் மொழி?
(அ) நடராசன் (ஆ) புல்
(இ) வாய்க்கால் (ஈ) நாங்கூழ்
வினா ‘எவர் மொழி’
என உயர்திணையைச் சுட்டுவதால் ‘நடராசன்’ என்னும்
விடை மட்டுமே பொருத்தமானது என உணரமுடியும். பிற மூன்று விடைக்குறிப்புகளும் அஃறிணைகள்.
இவ்வளவு வெளிப்படையாகவா வினாக் குறிப்பது?
வினா எண்: 8
ஆசிரியப்பாவிற்கு உரிய சீர்:
(அ) வெண்சீர் (ஆ) கனிச்சீர்
(இ) ஆசிரிய உரிச்சீர்
(ஈ) வஞ்சியுரிச்சீர்
“எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால்?”, போன்று
எளிமையாக வினா கேட்கவேண்டும், அதற்கேற்ப விடைக்குறிப்புகள் அமையவேண்டும் என்று வினாத்தாள்
எடுத்தவர் உறுதியேற்றிருப்பார் போலும்! என்ன செய்வது?
வினா எண்: 9
பொருந்தாதைக் கண்டறிக.
(அ) யானை டாக்டர் -
டாக்டர் ஜெயமோகன்
(ஆ) செவ்வி - நர்த்தகி நடராஜ்
(இ) பிம்பம் - பிரபஞ்சன்
(ஈ) வாடிவாசல் -
அ.முத்துலிங்கம்
நாவல், சிறுகதை எழுதும் எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா (உரையாடலாசிரியர்)
ஜெயமோகனுக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கிய வினாத்தாளுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்!
இருப்பினும் ‘யானை டாக்டர்’ எழுதியதால் கால்நடை மருத்துவரா அல்லது மனித மருத்துவரா
என்னும் குழப்பம் இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது! ‘யானை டாக்டரை’ ஒரு டாக்டர் தான்
எழுதமுடியும் என்கிற அசட்டுத்தனம் மற்றும் குருகுல மனப்பான்மையிலிருந்து கல்வி விடுவிக்கப்படுதல்
காலத்தின் கட்டாயம்.
நர்த்தகி நடராஜ் அவர்களின்
‘செவ்வி’ (நேர்காணல்) ஒன்று பாடநூலில் உள்ளது. அதனால் செவ்வி என்பதுடன் தொடர்புடைய
பெயர் அவர் மட்டுமே என்றாகுமா? ஜெயமோகன், பிரபஞ்சன், அ.முத்துலிங்கம் ஆகியோர் செவ்வி
அளித்ததில்லையா? இனியும் அளிக்கமட்டார்களா? (பிரபஞ்சன் காலமாகிவிட்டார்.) பிற மூவரும்
இன்னும் செவ்வி அளிக்க வாய்ப்புள்ளவர்களே! சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் குறுநாவலைப்
பற்றி அ.முத்துலிங்கம் எங்காவது எழுதியிருப்பார் எனில் தொலைந்தது! இக்கேள்விக்கு அனைத்து
விடைகளுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டியிருக்கும்.
வினா எண்: 14
சரியான நிறுத்தக் குறியுடைய சொற்றொடரைக் கண்டுபிடிக்கவும்.
(அ) வில்லிபாரதத்தில், சூரியனின் தோன்றல் என்று குறிப்பிடப்படுபவர்
யார்?
(ஆ) வில்லிபாரதத்தில், ‘சூரியனின் தோன்றல்’ என்று குறிப்பிடப்படுபவர்
யார்?
(இ) வில்லிபாரதத்தில், சூரியனின் தோன்றல் என்று குறிப்பிடப்படுபவர்
யார்?
(ஈ) வில்லிபாரதத்தில், “சூரியனின் தோன்றல்” என்று குறிப்பிடப்படுபவர்
யார்?
சொற்றொடரில் ஒற்றை
மற்றும் இரட்டை மேற்கோள்குறிகள் இடும் இடங்கள் பற்றிப் பாடநூலில் தெளிவில்லை. பாடநூலில்
(பக். 239) உள்ள பிழை வினாத்தாளில் எதிரொளிக்கின்றது. இரட்டை மேற்கோள் குறியுடன் பாடத்தில்
தவறாகச் சொல்லிவிட்டு இங்கு எவ்விடைக்கு மதிப்பெண் வழங்குவர்?
வினா எண்: 30
கலைச் சொல்லாக்கம் – பொருள்ணீ தருக.
அறநோக்கில் தேர்வு கொடியது. இம்மாதிரியான அச்சுப்பிழைகளைக்கூட
களையாமல், அதுவும் தமிழ் மொழி வினாத்தாளில் கொடுத்துத் தேர்வு நடத்துவது மிகக் கொடுங்செயல்.
வினா எண்: 38
பத்தியை வாசித்து வினா எழுதுதலில் மயிலை சீனி.வேங்கடசாமி பற்றிய
குறிப்பு உள்ளது. (‘மயிலை’ க்குப் பிறகு புள்ளி தேவையில்லை.)
இப்பகுதியில் ‘நகராட்சிப்
பள்ளி ஆசிரியர்’ என்று சொல்லப்படுகிறது. பத்தாம் வகிப்பிற்குப் பிறகு ஓவியக் கல்லூரியில்
படித்து, குடும்பச்சூழல் காரணமாக இடைநிலை ஆசிரியப் பயிற்சி முடித்து, இறுதிவரையில்
நகராட்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகவேப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் மறைவதற்கு
(08.05.1980) இரு மாதங்களுக்கு முன்புதான் மதுரைப் பல்கலைக் கழகம் கண்டுக்கொண்டது.
(மதுரைப் பல்கலைக் கழகம் அல்லது மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்) அவரது வாழ்காலத்தில்
ஆய்வுகளுக்கு உரிய மதிப்பைத் தரவில்லை என்பதுதான் உண்மை. 1961 இல் அவரது மணிவிழாவில்
அளிக்கப்பட்ட ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்னும் பட்டமே சிறப்பு. முறையான கல்விப்புலப்
படிப்புகள் இல்லையென அவரைப் பல்கலைக் கழகங்கள் ஒதுக்கின. இறுதிக்காலத்தில் அவையளித்த
பட்டங்களால் மயிலையாருக்கு ஒன்றும் மதிப்பு கூடிவிடப்போவதில்லை. இப்பத்தி ஒட்டிய விளக்கத்திற்கென
இது சொல்லப்படுகிறது.
இது போன்ற
பிழைகளை முதலில் ஒத்துக்கொள்ளும் மனநிலை வேண்டும். கல்வித்துறையில் பெரும்பாலானோருக்கு
அத்தகைய மனநிலை வாய்க்கவில்லை. அடுத்தகட்டமாக இவ்வினாக்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்படவேண்டும்.
இனி வருங்காலங்களில் இவை நிகழாமலிருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கல்வி மற்றும் தேர்வுத்துறைகள்
மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) ஆகியன வெளிப்படையாக
அறிவிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக