வெள்ளி, மே 03, 2019

கல்வியில் அரசுகளின் பங்குதான் என்ன?


கல்வியில் அரசுகளின் பங்குதான் என்ன?

மு.சிவகுருநாதன்


     சில நாள்களுக்கு முன்பு எனது மாணவத் தோழர் செ.மணிமாறன் அவரது பள்ளியில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளைக் காண அழைத்துச் சென்றார். தோழர் செ.மணிமாறனுக்கு அறிமுகம் தேவையில்லை. அவர் நாடறிந்த கல்வியாளர் மற்றும் செயல்பாட்டாளர்; புதிய தலைமுறை விருதாளர், அரசின் கனவு ஆசிரியர்; திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூர்  நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுபவர். 



 
 
     ஆசிரியர் பணியைத்தாண்டி சூழலியல் மற்றும் சமூக ஆர்வலராகப் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். ‘கஜா’ புயல் நிவாரண நடவடிக்கைகளில் பொருள்கள் வழங்குதல், சேதமடைந்த வீடுகள் சீரமைப்பு, கல்வி உபகரணங்கள் வழங்குதல், 10, 12 வகுப்புக் குழந்தைகளுக்குக் குறிப்பேடுகள் வழங்குதல் என பல பணிகள் இவரால் ஒருங்கிணைக்கப்பட்டன.  குறிப்பேடுகள் வழங்க மட்டும் பல லட்சங்கள் நிதித் திரட்டியது குறிப்பிடத்தக்கது. அவற்றைக் காரில் ஏற்றிக்கொண்டு மூலை முடுக்குகளில் உள்ள பள்ளிக்களுக்குச் சென்று விநியோகித்தார். வியப்பூட்டும் வகையில் நிதியைத் திரட்டி அதன் பலன் உரியவருக்குக் கிடைக்குமாறு செய்வதில் வல்லவர்.


    வணிக நோக்கமின்றிக் குக்கிராமங்களில் செயல்படும் உதவிபெறும் பள்ளிகளின் நிலையறிந்து ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பல உதவிபெறும் பள்ளிகளுக்குப் பல்வேறு உதவிகள் தோழரால் பெற்று வழங்கப்பட்டன. எனது தந்தையாரல் 1952 இல் தொடங்கப்பட்ட (அரசு அங்கீகாரம்: 1954) நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், அண்ணாப்பேட்டை வ.உ.சி. உதவித் தொடக்கப் பள்ளிக்கு ரூ. 3.5 லட்சங்கள் செலவில் சமையற்கூடம் கட்டித் தரப்பட்டுள்ளது.  


     இவர் பணியாற்றும் பள்ளியில் 2005 இல் கட்டப்பட்ட கட்டிடம் விரிசலடைந்தது. அதைச் சீரமைத்து வண்ணமடித்தல், இதர கட்டடங்களின் பராமரிப்பு வேலைகள், சுற்றுச்சுவர் கட்டுதல், வண்ணமடித்தல் என சில லட்சங்கள் ஆகும் பணியை நன்கொடைகள் திரட்டியும் தம் சொந்தப்பணத்தைச் செலவிட்டும் கோடை விடுமுறைகளில் நாள்தோறும் பள்ளிக்குச் சென்று, இப்பணிகளை மேற்பார்வை செய்தும் வருகிறார். பள்ளிச் சுவர்களில் சித்திரங்கள், நிலவரைபடங்கள் வரையும் பணியும் நடைபெற்று வருகிறது. இத்தகைய பணிகளுக்காக இவரை வாழ்த்துவோம்! பாராட்டுவோம்!


     ஆனால் இதன் மறுபுறம் வேறு ஒன்றையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. அரசுப் பள்ளிகள் மிகவும் தரமற்ற வகையில் கட்டப்படுவதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அரசின் பிற துறை கட்டிடங்கள் இவ்வாறு இல்லை என்பதே உண்மை. மாவட்ட ஆட்சியர் – வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மாநகராட்சி – நகராட்சி – பேரூராட்சி அலுவலகங்கள் ஆகியன உரிய தரத்துடன் இருக்க ஏழைக் குழந்தைகள் கல்வி பயிலும் வருமானத்திற்கு அதிக சொத்து சேர்த்த ஆசிரியர்கள் (!?) பணியாற்றும் பள்ளிக்கட்டிடங்கள் மட்டும் ஏன் தரமற்றதாக உள்ளது? 


    கட்டிடம் கட்டிய சில ஆண்டுகளில் விரிசலடைவதும் 5 ஆண்டுகளுக்குள்ளாகப் பயன்படுத்த முடியாமல் போவதும் அவற்றை இடித்து அகற்ற குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் (அதற்கு முன்னதாக இடிக்க அனுமதி இல்லை; குழந்தைகள் தலையில் விழுந்தால்தான் உண்டு!) வேண்டுமென்பதால் பள்ளி வளாகத்தில் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் இவை நின்றுகொண்டுள்ள சூழல் பற்றி இந்தச் சமூகம் ஏன் கேள்வியெழுப்புவதில்லை? இதைக் கட்டிய ஒப்பந்தக்காரர்கள், அனுமதித்த அலுவலர்கள் ஏன் தண்டிக்கப்படுவதில்லை? 


    கும்பகோணம் போன்று பல நூறு உயிர்கள் போன பிறகுதான் அரசும் சமூகமும் விழித்துக்கொள்ளுமா? 92 உயிர்கள் என்றதும் அதிர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 9 பேர் பலியான கரியாப்பட்டினம் (நாகப்பட்டினம்) தேவி மெட்ரிக் பள்ளி மீது நடவடிக்கை இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசுப்பள்ளிக் கழிவறைகளைப் போல அரசு அலுவலங்களில் பார்த்ததுண்டா? இவற்றில் தண்ணீர் வசதியும் நிரந்தரத் துப்பரவாளர் பணியிடமும் ஏன் இல்லை? 


     பள்ளிச் சீரமைப்பு மாநாடு ஒன்று நடத்தி பள்ளிக்கு வேண்டிய பொருள்களைப் பெறும் வழக்கம் ஒன்று இருந்தது. அன்றைய நாளில் அரசுகளின் வருவாய் மிகவும் குறைவு; மேலும் கல்வி மாநிலப்பட்டியலில் இருந்தது. இன்று சரக்கு மற்றும் சேவை வரி, பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகள், தமிழக அரசின் டாஸ்மாக் வருவாய் போன்றவை விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளபோது, ஏன் பள்ளிகள் ‘தத்து’க் கொடுக்கப்படவேண்டும்? அரசு அலுவலங்களை ஏன் இம்மாதிரி தத்துக்கொடுக்க முன்வருவதில்லை? 

   கோத்தாரி கல்விக்குழு (1964-66) மொத்த தேசிய உற்பத்தில் 6% ஐ கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதை கட்டாய கல்வியுரிமைச் சட்டம் 2009 ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் கல்வி ஒதுக்கீடு 3% ஐ இன்னும் தாண்டவில்லை. ஆனால் இன்றுள்ள நிலையில் 10% ஒதுக்கப்படுதல் அவசியம்.  தனியார் – பொதுத்துறை ஒத்துழைப்பு (PPP - Private Public Partnership) என்ற பெயரில் தனியார்மயமாக்கும் நடைமுறையும் 25% மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை வழங்குதல் மூலம் கல்விப் பொதுநிதியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நடைமுறையும் மிக மோசமானவை. 

    மத்திய அரசின் கல்வித்திட்டங்கள் மூலம் ஒதுக்கப்படும் பெருந்தொகைகள் ஊழலால் உரிய முறைகளில் கல்விக்குப் பயன்படாமல் சீரழிகிறது. உதாரணமாக பள்ளி நூலகத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ. 10,000 மாவட்ட அளவில் பெரும் ஊழலுக்கு வழிவகுப்பதோடு, தரமற்ற நூல்களை வாங்கிக் குவிக்கும்  இடமாக பள்ளி நூலகத்தை மாற்றியிருக்கிறது. கல்வி அலுவலர்களால் இத்தகைய ஊழல்கள் வரைமுறையின்றி மேற்கொள்ளப்படுகின்றன. முற்றிலும் ஊழலில் திளைத்திருகின்ற அரசுகள் இவைகளை என்றும் கண்டுகொள்ளாது. இவற்றைக் கண்டுகொள்ள வேண்டிய மக்களாட்சியின் தூண்களுள் ஒன்றான நீதிமன்றங்கள் ஆசிரியர்கள் ஊழல் செய்து வருமானத்திற்கு அதிக சொத்து சேர்த்த அரிய உண்மைகளைக் கண்டுபிடிக்கின்றன! 

    அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்  போன்ற பல்வேறு இயக்கங்கள் அடித்தட்டு மக்களுக்குக் கல்வி சென்று சேர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றனர். மறுபுறம் சில கல்வி ஆர்வலர்கள் ‘கல்விச்சீர்’ என்னும் புதுப் பழக்கத்திற்கு அடிமையாகி கல்வியுரிமையை இன்று முட்டுச்சந்தில் நிறுத்துகின்றனர். 

    இன்று அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் பெற்றோர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்டிக் குழந்தைகளை படிக்க வாய்ப்பற்றோர். அதனால்தான் அவர்கள் அரசுப்பள்ளிகளை நாடுகின்றனர். அனைத்தும் விலையில்லாப் பொருள்கள் என்று சொல்லிவிட்டு, மறுபுறம் இவர்களிடம் பள்ளி வளர்ச்சி நிதி, பெற்றோர் ஆசிரியர் கழக ஆண்டு சந்தா, பள்ளித் தேர்வுகளுக்கான கட்டணம் என்றெல்லாம் வசூலிப்பது கொடுமை. 

    மேலும் இவர்களிடம் கல்விச்சீர் என்ற பெயரில் நன்கொடையும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கும் பசையுள்ள பெற்றோரிடமும் கையேந்தி நன்கொடை பெறுவது பள்ளிக் கல்வியை வளர்க்கும் செயலா? மாறாக இது அரசின் தனியார்மயச் செயல்பாட்டை ஊக்குவிக்கும் நடைமுறையாகும். இவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசும் கல்வித்துறையும் தங்களது முகவர்களாக மாற்றிவிடும் அபாயமும் உள்ளது. பிறகு கல்விக்காகக் குரல் கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள்? 

     இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெற்ற இச்செயல்பாட்டைச் மிகச் சரியாகக் கண்டுகொண்ட அரசு ‘தத்து’ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு வகையில் அரசுக்கு வெற்றி; கல்வி ஆர்வலர்களுக்கு தோல்வி என்பதை முதலில் உணரவேண்டும். கல்வி உரிமை முறையாக அமலாக்கப்பட, கல்வி ஒதுக்கீடு அதிகரிக்க இயக்கம் நடத்தப்பட வேண்டும். 

   சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதிகள் ஏன் முழுமையாகச் செலவிடப்படுவதில்லை. அதில் கல்விக்கான பங்கு என்ன என்று கேள்வி கேட்கும் இடத்தில் கல்விச் செயல்பாட்டாளர்கள் இருக்க வேண்டும். மாறாக அரசின் ஊதுகுழலாக, அரசு மற்றும் கல்வித்துறையின் ஊழல்களை மறைக்கும் அல்லது பாதுகாக்கும் செயல் பொதுக்கல்வியை முற்றாக அழித்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக