வெள்ளி, மே 17, 2019

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைக் கண்டிப்போம்!


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைக் கண்டிப்போம்!

மு.சிவகுருநாதன்      கல்வி மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாக்குதல், மொழிப் பாடத்திற்கு ஒரு தாள் ஆகிய பிரச்சினை குறித்து அடிப்படைப் புரிதலற்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

     மொழிப்பாடங்களுக்கும் பாடச்சுமைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை, மொழியாளுமை, இலக்கணம் ஆகியவற்றின் தரம் மேம்படவும் படைப்பாற்றல் திறன் மேம்படவும் இரு தாள்கள் இருப்பது அவசியம் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்குழு வெளியிட்ட அறிக்கை வலியுறுத்துகிறது. 

    இதைப் போலவே படைப்பாற்றல், மொழியாளுமை, இலக்கணம் ஆகியவற்றின் தரமேம்பாட்டிற்கும் இரு தாள்கள் தேர்வு வைப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை உணர மறுப்பது ஏன்?  

    மொழிப்பாடத்திற்கு ஒரு தாள் வேண்டும் என்பது நியாயமான, நீண்டநாள் கோரிக்கை. இது பாடச்சுமையைக் குறைப்பதோ, மொழித்திறன் பயிற்சிகளைக் குறைப்பதோ இம்முறையின் வேலையல்ல. மொழிப்பாடத்திற்கு ஒருதாள் என்பது தேர்வுச் சீர்திருத்தம் மட்டுமே. +1, +2 வகுப்புகளில் புதிய பாடநூலும் ஒரு தாள் முறை அமலாகியுள்ளது. இதில் பாடச்சுமை மற்றும் பாடத்திறன்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யாமல் பேசுவது நாகரிகமல்ல. 

    ஆனால் மொழிப்பாடங்களில் ஒன்றை மட்டும் விருப்பப் பாடமாக்குதல் என்பது கல்வி வியாபாரிகள் மற்றும் தமிழை ஓரங்கட்டும், ஒழிக்கும், இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் மத்திய இந்துத்துவா அரசு மற்றும் ‘நீட்’ விரும்பிகளின் ஆசை. இதை இங்கு நிறைவேற்ற வாய்ப்பேயில்லை.    

     பெரும்பான்மையான ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கையை வீழ்த்த விருப்பப் பாடம் என்கிற சதி செயல்பட்டுள்ளது. நியாயமான கோரிக்கை ஒன்றுடன் தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றிக்கொள்ள அதிகார வர்க்கம் செய்த முயற்சி அம்பலத்துக்கு வந்துள்ளது. 

   இவையிரண்டையும் ஒருங்கிணைத்துக் குட்டையைக் குழப்பும் வேலைகளைச் செய்தது யார்? என்பது குறித்துத் தீவிரமாக விசாரணை செய்து களையெடுக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவுகள், பாடத்திட்டங்கள், பாடநூல்கள் தயாரித்தல் போன்றவற்றில் தமிழகத்திற்கு எதிரான மனப்பான்மையுடையவர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை நீடிப்பதுதான் இதற்குக் காரணம். இவர்களது குயுக்தி உத்தியே இது. 

    முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பழைய இரு தாள் முறையில்  +1, +2 வகுப்புகளுக்கு முதல் தாளில் 100  மதிப்பெண்களும் இரண்டாம் தாளில் 80 மதிப்பெண்களும் வாய்மொழித் தேர்விற்கு 20 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. 20 மதிப்பெண்கள் பெரும்பாலும் முழுமையாக வழங்கப்படுகிற நிலையில் இரு தாள்களிலும் சேர்த்து 50 மதிப்பெண்கள் பெறுபவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவர். இது மிகவும் எளிமையானது. எனவே மேனிலை வகுப்புகளில் மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த மேனிலை வகுப்புகளுக்கு தற்போது இரண்டாண்டாக நடைமுறையிலுள்ள புதிய ஒரு தாள் முறையில் 90 மதிப்பெண்களும் 10 அகமதிப்பீடும் நடைமுறையில் உள்ளது. 

    பத்தாம் வகுப்பிற்கு வாய்மொழித் தேர்வோ, அகமதிப்பீடோ கிடையாது. இரு தாள்களுக்கும் சேர்த்து 200  மதிப்பெண்களுக்குத் தேர்வெழுதி இரு ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு, நூற்றுக்கு 35 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதாவது ஒரு தாளில் 40 –ம் மறுதாளில் 28 –ம் பெற்றிருந்தால் கூடுதல் 68; நூற்றுக்கு 34 என்பதால் இம்மாணவர் தேர்ச்சிபெறாமல் கல்விப்புலத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.  இந்த ஒரு மதிப்பெண்ணால் இவருக்கு மொழித்திறன், மொழியாளுமை இல்லாமற் போய்விடுகிறதா? 

    எந்தத் தாளில் 35 மதிப்பெண்ணுக்குக் குறைவாகப் பெற்றாரோ அதில் மட்டும் தேர்வு வைக்காமல் தேர்ச்சி பெற்ற தாளையும் மீண்டும் எழுத வைக்க வேண்டிய அவசியமென்ன? இரண்டென்ன, 20 தாள்கள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் தேர்ச்சி பெற்ற தாளை மீண்டும் எழுதச் சொல்வது அறமாகுமா? 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால் அனைத்துப் பாடங்களையும் திரும்ப எழுத வேண்டும் என்கிற நிலை மீண்டும் வர வேண்டுமா?

     10 ஆம் வகுப்பில் மொழிப்பாடங்களில் அதிகம் பேர் தோல்வியடைகின்றனர். இங்கு மொழித்திறன் குறைவு என பேசப்படுகிறது. மேனிலை வகுப்புகளில் தேர்ச்சி அதிகமிருப்பதால், அங்கு மொழித்திறன் எவ்வாறு மேம்பட்டது என்பதை ஆய்வு செய்து விளக்க வேண்டாமா? 

    முதன்முதலில் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு தாள், அகமதிப்பீடு போன்றவை முதலில் அறிமுகம் செய்திருக்க வேண்டும். இதுவே உண்மையான தேர்வுச் சீர்திருத்தம். கல்வியில் சீர்திருத்தங்கள் இவ்வாறுதான் தொடங்க வேண்டும். ஆனால் இவற்றில் கவனம் செலுத்தாமல் ‘நீட்’ தேர்வு ஒன்றை மட்டும் கவனத்தில் கொண்டு,  +1, +2 வகுப்புகளுக்கு ஒரு தாள் முறை கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஒரு மொழிப்பாடம் மட்டும் விருப்பப்பாடமாக இருந்தால் போதாதா என்று தமிழை ஒழித்துக்கட்டக் கிளம்பியுள்ளனர். முறைகேடாக இதை நியாயமான கோரிக்கையுடன் இணைத்ததால் உண்மையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

   பத்தாம் வகுப்பில் மொழிப்பாடத்திற்கு ஒரு தாள் என்பது நிறைவேற்றப்பட வேண்டிய நீண்டநாள் கோரிக்கை. இதற்கும் மொழித்திறன்களை குறைவதற்கும் யாதொரு தொடர்புமில்லை. இது தேர்வுச் சீர்திருத்தமே தவிர பாடங்கள் எவ்விதத்திலும் குறைக்கப் படுவதில்லை. இவற்றை மறுப்பதற்கும், தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் விருப்பப்பாடம் என்ற பெயரில் மறைமுகமாக இந்தியைப் புகுத்த இம்மாதிரியான குயுக்தி வழிமுறைகளில் இறங்கியுள்ளனர். மாநில அரசும் இதற்கு மறைமுகமாக ஒத்துழைக்கிறது. 

      இவற்றை உணராமல் மேம்போக்கான அறிக்கை வெளியிடும் தோழர்கள் உண்மை நிலவரத்தை அறிய முயற்சிக்க வேண்டும். கடந்த இரண்டாண்டுகளாக மேனிலை வகுப்புகளில் ஒரு தாள் முறை அமலாகிவரும் நிலையில், உண்மை நிலவரத்தை அறியாமல் ‘கவிப்பேரரசு’ வைரமுத்தைப் போல நீண்ட உறக்கத்திலிருந்துவிட்டு,  இரு தாள் வேண்டும் என்று அறிக்கை விடுவது பொறுப்புள்ள ஒரு இயக்கத்தின் செயலாக   இருக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக