வியாழன், மே 09, 2019

பொதுத் தேர்வு இல்லை என்பதற்காக இவ்வளவையும் திணிக்க வேண்டுமா?


பொதுத் தேர்வு இல்லை என்பதற்காக இவ்வளவையும் திணிக்க வேண்டுமா? 


(மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 10)
                                                                                                                                                                                                                                                                                                                                                                           
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                
மு.சிவகுருநாதன்



(ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் -  வரலாற்றுப் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)



            ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்பகுதியில் உலகத்தைக் கையில் திணிப்பது ஏன்? அரசுப் பொதுத் தேர்வு இல்லை என்பதைவிட வேறு காரணங்கள் இருக்க முடியுமா? சென்ற கல்வியாண்டு மட்டுமே (2018-2019)  ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று பருவங்களிலும் அனைத்துப் பாடங்களையும் படித்தனர். பத்தாம் வகுப்புப் புதிய பாடங்கள் என்பதால் வேறு வழியின்றி முழுப்பாடங்களையும் மாணவர்களைப் படிக்கப் பள்ளிகள் அனுமதித்தன. இந்தக் கல்வியாண்டு (2019-2020) பத்தாம் வகுப்பிற்கு புதிய பாடநூல்கள் வெளியான நிலையில் இனி இரு வகுப்பிலும் ஒரே பாடங்களையும் படிக்கக் கட்டாயப் படுத்தப்படுவர். காலாண்டு வரை ஒரு சில மாதங்கள் பெயருக்கு நடத்திவிட்டு, பிறகு பொதுத் தேர்வுப் பாடங்களுக்குத் தாவிவிடுவர். 

    இதைக் கண்காணிக்க கல்வித்துறையிடம் எவ்வித ஏற்பாடும் இல்லை. மாறாக இதை மறைமுகமாக அங்கீகரிக்கும் நிலைதான் உள்ளது. ஒரு காலத்தில் தனியார் பள்ளிகளில் வளர்க்கப்பட்ட இந்தத் தொற்றுநோய் தற்போது அரசுப்பள்ளிகளிலும் பரவியுள்ளது. 

     இந்திய வரலாற்றை ஒன்பதாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்துவிட்டு பத்தாம் வகுப்பில் உலக வரலாற்றை வைப்பதுதானே முறை! தெரிந்தவற்றிலிருந்தானே தெரியாவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்! இதுதானே கல்வியின் அரிச்சுவடி! இதற்கு வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் என்பதைத்தவிர? 

    வரும் கல்வியாண்டில் (2019-2020) முப்பருவ முறை ஒழிக்கப்பட்டு 500 பக்கங்களைத் தாண்டும் சமூக அறிவியல் பாடச்சுமையை அக்குழந்தைகளைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். முப்பருவ முறையை ஒழித்தாலும் மூன்று தொகுதிகளாக (காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு) என பாடநூல் சுமையைவாவது குறைக்கலாம். குழந்தைகளை பொதி சுமக்கும் கழுதை, ஒட்டகங்களாக மாற்றுவது எவ்வளவு பெரிய வன்முறை என்று இந்தச் சமூகம் யோசிப்பது எந்நாளோ? (“இந்த வன்முறை வாழ்க்கைப் போராட்டத்தின் பல்வேறு சுமைகளைக் கடக்க முன்பயிற்சியாக இருக்கும்”,  என்ற எதிர்வினைக்காகக் காத்திருக்கிறேன்.) 

    “ஐரோப்பியர் அமெரிக்காவில் குடியேறுவதற்கு முன்பாகவே அம்மண்ணின் மைந்தர்களாக அமெரிக்காவைச் சொந்த நாடாகக் கொண்ட பூர்வ குடிகள் பொதுவாகச் செவ்விந்தியர் என அழைக்கப்பட்டவர்கள் (தற்போது அச்சொல் இழிவானதெனக் கருதப்படுவதால் வரலாற்று அறிஞர்கள் அச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை) அமெரிக்கா முழுவதும் பரவலாக வாழ்ந்துவந்தனர்”. (பக்.05)

    நல்லதுதான். ஆனால் இங்குள்ள இழிச்சொற்களைப் பயன்படுத்துவது பற்றி எவ்வித தயக்கமும் இல்லையே, ஏன்? ‘மேல், கீழ், உயர்சாதி, தாழ்ந்த சாதி’ என்றப் பயன்பாட்டிற்கு பாடநூலில் எவ்விதத் தடையுமில்லையே. ‘உயர்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட’ என்று மாற்றிச் சொல்வது குறித்த கரிசனமும் இல்லை. “தமிழ்மொழி பேசப்பட்ட பகுதிகளில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் கடன் வழங்குவதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர்”, (பக்.57) என்று சொல்வதற்குகூட கவலைப்படவில்லை. ‘நகரம்’ என்னும் வணிகக்குழுவினர் ‘நகரத்தார்’ என அழைக்கப்பட்டனர். இவர்களது தொழில்களுள் வட்டியும் ஒன்று. இவர்களுக்கு (நகரத்தார்) வேறு தொழில்கள் இல்லையா?
 
   “ரோபஸ்பியரின் வீழ்ச்சியுடன் பயங்கரவாத ஆட்சியும் முடிவுக்கு வந்தது. தேசியப் பேரவையின் சர்வாதிகாரியாகத் திகழ்ந்த ரோபஸ்பியர் நேர்மையானவராக, நாட்டுப்பற்றுடையவராக, நாணயமானவராக இருந்தபோதிலும் தன்னுடன் பணியாற்றிய பலரை கில்லட்டினுக்கு அனுப்பியதால் அவப்பெயரைப் பெற்றார்”, (பக்.20)

    பொதுவாகச் சர்வாதிகாரிகளைப் பற்றிக் குறிப்பிடும்பொது நேர்மை, நாணயம், நாட்டுப்பற்று ஆகியன இணைத்துப் பேசப்படுகிறது. ஹிட்லருக்கும் இதே போன்ற வருணனைகள் பழைய பாடநூலில் உண்டு. பாசிஸ்ட்களை வரலாறு நெடுகிலும் இவ்வாறு நியாயப்படுத்துவது நடக்கிறது. இன்றைய இந்திய உதாரணங்களும் இவற்றியே வெளிப்படுத்துகின்றன.  

    “கோடிட்ட இடங்களை நிரப்பவும்”, பயிற்சிப் பகுதியில் “-------------- இங்கிலாந்தில் ஆடவர்க்கு வாக்குரிமை கோரியது”, (பக்.42) என்றுள்ளது. ஆனால் “voting rights to every man over twenty - one years of age”, என்பதை “இருபத்தியோரு வயதான அனைவருக்கும் வாக்குரிமை”, ஆண்கள் என்பதை அனைவருக்கும் என்பதாக மொழிபெயர்த்துள்ளனர். அக்காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை என்ற பேச்சே எழவில்லை. பெண்களுக்கு உரிமையனைத்தும் மறுக்கப்பட்டிருந்தன. தெளிவைப் பெற ஆங்கில வழியின் கீழ்க்கண்ட பத்திகளை வாசிக்கவும். 

   “The Reform Bill of 1832 granted voting rights only to the propertied middle class. Frustrated by this, the working class in large gathering prepared a charter demands and obtained signatures from millions of fellow workers. The charter was presented to the House of Commons (the English Lower House in the Parliament, England). Known as Chartism, this working class movement was active between 1836 and 1848. The Chartists called for voting rights to every man over twenty - one years of age, secret ballot (voting), abolition of property qualification for members of the parliament, annual parliamentary elections and equal representation”. (page: 30)
 
    “1832 இல் சீர்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. சொந்தமாகச் சொத்து வைத்திருந்த நடுத்தர வர்க்கத்திற்கு மட்டுமே அச்சட்டம் வாக்குரிமை அளித்தது. இதனால் விரக்தியுற்ற உழைக்கும் வர்க்கம் லட்சக்கணக்கில் ஓரிடத்தில் கூடித் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய ஒரு சாசனத்தை உருவாக்கி பல லட்சம் சக தொழிலாளர்களின் கையொப்பம் பெற்றது. இந்த சாசனம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையான மக்கள் அவையில் (House of Commons) தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகளைத் தொழிலாளர் இயக்கம் வலியுறுத்தியதால் அது 'சாசன இயக்கம்'  எனவும் அதில் ஈடுபட்டவர்கள் சாசன இயக்கவாதிகள் எனவும் அழைக்கப்பட்டனர்.  இந்த இயக்கம் 1836 முதல் 1848 வரை உயிர்ப்போடு இயங்கியது. இருபத்தியோரு வயதான அனைவருக்கும் வாக்குரிமை, ரகசிய வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றத் தேர்தல், நாடாளுமன்ற உறுப்பினருக்கான தகுதியில் சொத்துரிமையை நீக்குதல், ஆண்டுதோறும் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல், சமமான பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகளை இவ்வியக்கத்தினர் வலியுறுத்தினர்”. (பக். 34)

   “Unable to reconcile the ideas of justice and natural law with colonial practice, especially the sovereignty of Europeans over non-Westerners, some political philosophers defended colonialism and imperialism arguing that their action was civilizing mission. The rationale was that a temporary period of political dependence or tutelage was necessary for "uncivilized" societies to advance to the point where they would be capable of sustaining liberal institutions and self - government. This is captured by the phrase, 'The White man's Burden' in a poem by Rudyard Kipling. However, many Enlightenment thinkers contested the idea of Europe's civilizing mission and condemned it as a justification for economic exploitation”. (page:42)
 
     “காலனியாதிக்க நடைமுறையில், குறிப்பாக மேற்கத்தியர் அல்லாதவர் மீது ஐரோப்பியர் ஆதிக்கம் செலுத்தியதை நீதி, இயற்கை விதி ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத சில அரசியல் தத்துவவாதிகள் காலனியாதிக்கத்தையும் ஏகாதிபத்தியத்தையும் அவற்றின் செயல்பாடுகளையும் அடிமை நாட்டு மக்களை நாகரிகம் மிக்கவர்களாக மாற்றும் முயற்சி என வாதிட்டு அவற்றை நியாயப்படுத்த முயன்றனர்.  "நாகரிகமற்ற சமூகங்கள் முன்னேறி தாராளவாத அரசியல் நிறுவனங்களைத் தாங்களே தொடர்ந்து நிர்வகித்துக் கொள்ளும் திறன்களைப் பெறுகிறவரை தற்காலிகமாக வேறொரு நாட்டைச் சார்ந்திருப்பது அல்லது பாதுகாப்பிலிருப்பது அச்சமூகங்களுக்கு அவசியம்" என்றும் கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது. ருட்யார்ட் கிப்ளிங்  எழுதிய பாடலொன்றில் இடம் பெற்றுள்ள, 'வெள்ளையரின் சுமை' எனும் சொற்றொடர் இதை விளம்புகிறது. இருந்தபோதிலும் பல அறிவொளிச் சிந்தனையாளர்கள் 'ஐரோப்பாவின் நாகரிகப்படுத்தும் கோட்பாட்டை' மறுத்தனர். மேலும் இது பொருளாதாரச் சுரண்டலை நியாயப்படுத்துவதற்காகச் சொல்லப்படுவதாகக் கண்டனம் தெரிவித்தனர்”. (பக். 47) 

    மேலே உள்ள பத்திகளில் குழப்பமூட்டும் கருத்துகள் உள்ளன. ஐரோப்பியர் ஆதிக்கத்தை நீதி, இயற்கை விதி ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஏற்றுக்கொள்ள இயலாத அரசியல் தத்துவவாதிகள் நியாயபடுத்தினர் எனில் அப்படி ஏற்றுக் கொள்பவர்கள் யார்? இரண்டிற்கும் எத்தகைய வேறுபாடுகள் உண்டு? இரண்டு தரப்பும் ஒன்றுபோல் தொனிக்கிறதே! இதை ஆசிரியர்களும் மாணவர்களும் எவ்விதம் விளங்கிக் கொள்வர்?

     “The invention of electric bulb by Thomas Alva Edison (1879) and telephone by Alexander Graham Bell (1885) changed the world beyond recognition”. (page:33)

    “தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கு கண்டுபிடித்தமை (1879), அலெக்சாண்டர் கிரஹாம்பெல் தொலைபேசி கண்டுபிடித்தமை (1885) ஆகிய நிகழ்வுகள் முழு உலகையும் அடையாளம் காணமுடியாத அளவிற்கு மாற்றின”. (பக். 38)

    “தாமஸ் ஆல்வா எடிசனின் மின்விளக்கும் (1879), அலெக்சாண்டர் கிரஹாம்பெல்லின் தொலைபேசியும் (1885) உலகைப் பெரிதும் மாற்றின”, என்று எளிமையாக மொழிபெயர்த்துச் சொன்னால் தமிழ் வழியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் அறிவு பெற்றுவிடுவார்கள் என்கிற ‘நல்லெண்ணமா’ உங்களை இப்படி மொழிபெயர்க்கத் தூண்டுகிறது! இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. பாடநூல் முழுமையும் மொழிபெயர்ப்பு இவ்வாறாகவே உள்ளது. இதற்கு நாம் பலமுறை வலியுறுத்தும் ஆங்கில மொழிநூல்களைப் படித்து, உள்வாங்கி அதை நேரடியாக தமிழில் எழுதக்கூடிய திறன் பெற்றோரால் பாடநூல்கள் தமிழில் எழுதப்படவேண்டும். இல்லாவிட்டால் இக்கொடுமைகளைத் தடுக்க முடியாது. தமிழ் எளிமையானது அல்ல என்கிற உணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்துவது அபாயகரமானது.

   “பியூரிட்டானியருக்கு முன்னரே பல குழுக்களைச் சேர்ந்தவர்கள் வட அமெரிக்கக் கிழக்குக் கடற்கரையின் ஏனைய பகுதிகளில் குடியேறினர். இவர்களைத் தொடர்ந்து மேலும் பலர் அமெரிக்கா சென்றனர். இவ்வாறு அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் வடக்கேயிருந்து தெற்காக அனைத்து இடங்களிலும் பல குடியேற்றங்கள் உருவாயின. இவற்றுள் சில கத்தோலிக்கக் குடியேற்றங்கள். சில குடியேற்றங்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த கவேலியர்கள் என அறியப்பட்ட இராணுவப் பாரம்பரியம் கொண்ட பிரபுக்களால் உருவாக்கப்பட்டவை. மற்றும் சில குவேக்கர் காலனிகளாகும்”. (பக். 03)

     “குவேக்கர்கள் இங்கிலாந்தில் ஜார்ஜ் பாக்ஸ் என்பவரால் நிறுவப்பட்ட நண்பர்கள் குழாம் என்னும் கிறித்தவ மதக் குழுவின் உறுப்பினர் ஆவர். புனித ஆவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த இவர்கள் சடங்குச் சம்பிரதாயங்களையும், சமயக் குருமார்   அமைப்பையும் எதிர்த்தனர். இவர்கள் போருக்கு எதிராகவும் அமைதிக்கு ஆதரவாகவும் மேற்கொண்ட பணிகளுக்காக நற்பெயர் பெற்றவர்களாவர்”. (பக்.03) 

   ‘புராட்டஸ்டண்ட்’ மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் குவேக்கர்கள் என்பது ஏனோ மேற்கண்ட பத்திகளில் மறைக்கப்படுகிறது.  அமெரிக்கப் பூர்வகுடிகளின் வரலாறு ஒரு பெட்டிச் செய்தியில் அடைக்கக் கூடியதல்ல. 

   “பஞ்சத்தைத் தொடர்ந்து வழக்கம் போல் பிளேக் (இறந்துபோன எலிகளால் பரவும் கொள்ளைநோய்), நீர்கோப்புடன் கூடிய கடுமையான காய்ச்சல் போன்ற பல தொற்றுநோய்கள் பரவி ஏற்கனவே பட்டினியால் பலவீனமடைந்த மக்களைத் தாக்கிக் கொன்றன”. (பக். 58)

   “These famines were typically followed by various infectious diseases such as bubonic plague (spread by dead rats) and influenza, which attacked and killed a population already weakened by starvation”. (page: 51)

   ‘இன்புளுயன்சா’ என்னும் வைரஸ் நோயை (இதில் பலவகை உண்டு.) “நீர்கோப்புடன் கூடிய கடுமையான காய்ச்சல்”, என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன? ‘பிளேக்’ ஐப் பயன்படுத்தும்போது ‘இன்புளுயன்சா’ வை அப்படியேப் பயன்படுத்துவதில் என்ன தடை இருக்க முடியும்?

 ‘Glossary’ (அருஞ்சொற்பொருள்)  ‘கலைக்களஞ்சியம்’  ஆவதெப்படி?

encyclopedia - a book containing a set of articles on many subjects and arranged alphabetically என்று விளக்கம் கொடுத்துவிட்டு, தலைப்பில்  ‘கலைக்களஞ்சியம்’  என்று போடும் அபத்தத்தை என்ன சொல்ல?

விசுவாசம் (loyalty),  சர்வாதீனக் கூட்டமைப்பு  (cartel), வர்த்தக ஸ்தலம் (emporium)  என்றெல்லாம் மொழியாக்கம் செய்து மீண்டும் மணிபிரவாளக் காலத்திற்கு திரும்பச் சொல்கின்றனரோ!

diaspora - persons dispersed from their homeland - புலம் பெயர்ந்தவர்கள்

migrants -  persons who moved from one place to another in search of livelihood or for settlement - புலம் பெயர்ந்தோர்

      என்று மொழிபெயர்க்கும் / குழப்பும் போக்கைக் கைவிட வேண்டும். போர் மற்றும் உள்நாட்டுப் பிரச்சினைகளில் நாட்டைவிட்டு அகதிகளாக விரட்டியடிக்கப்படுபவரும் வாழக்கை வசதிகளுக்காக இடம் பெயர்வோரும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? 

     முந்தைய பருவங்களில் ‘மெர்கண்டலிசம்’ என ஒலி பெயர்க்கப்பட்டது இம்முறை ‘வணிக முதலாளித்துவம்’  என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை வரவேற்கலாம்.  

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக