பாடக் கருத்துகளைத்
தொடர்பற்று வகுப்புகளுக்கு ஒன்றாக விளக்கமளிக்கலாமா?
(மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்:
ஒரு பார்வை - பகுதி: 11)
மு.சிவகுருநாதன்
(ஆறாம் வகுப்பு அறிவியல் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)
ஆறாம் வகுப்பு அறிவியலில் காந்தவியலில்
‘மேக்னஸின் அதிசயப்பாறை’ சித்திரக்கதை
(பக்.02), மின்காந்தத் தொடர் வண்டி (பக்.10) விளக்கப்படம் போன்றவற்றில் வாயிலாக
பாடக்கருத்துகளை விளக்குவது நன்று. ‘வேதியியலில்
ஒரு புரட்சி’ என்ற லெவாய்சியர் படக்கதையும் (பக்.28,29) நன்று. இம்மாதிரியான புதிய
முயற்சிகள் குழந்தைகளை ஈர்க்கும்.
“டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருள்களைப்
பயன்படுத்தாமல், நாம் மேலே குறிப்பிட்ட காந்த ஈர்ப்பு மற்றும் விலக்கு விசைகளைக்
கொண்டு இந்த அதிவேக தொடர்வண்டி இயங்குகிறது”.
(பக்.09)
தற்போது
மின்தொடர் வண்டிகள் இயக்கப்படுகின்றன. இது மின்காந்தத்தால் இயங்கும் தொடர் வண்டி
என்று எளிமையாக விளக்கலாம்.
“ஆசியாவின்
முக்கிய ஆறுகளில் பத்து பெரிய ஆறுகள் இமயமலையில் இருந்து தொடங்கிப் பாய்கின்றன”.
(பக்.23) இந்த 10 ஆறுகளைப் பட்டியலிட்டால்
நல்லது.
“சதுப்பு
நிலங்கள் என்பவை ஈரப்பதம் நிறைந்த காடுகள் ஆகும்”. (பக்.25)
“சிதம்பரத்தினை
அடுத்த பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள், முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகள்,
சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம்
சதுப்பு நிலம் ஆகியன தமிழ்நாட்டில் உள்ள சில சதுப்பு நிலங்களாகும்”. (பக்.25)
சதுப்பு நிலங்கள், சதுப்பு நிலக்காடுகள்
பற்றி வகுப்புக்கு ஒரு விளக்கமளிப்பது தொடர்கிறது. இது நல்லதல்ல. காடுகள் இல்லாத
சதுப்புநிலங்களும் உண்டு.
“இரண்டு வகையான சோப்புகளை நாம்
பயன்படுத்துகிறோம். ஒன்று குளியல் சோப்பு, மற்றொன்று சலவை சோப்பு.
அதுமட்டுமல்லாமல் அதிகளவு கறைகளையுடைய துணிகளை வெளுப்பதற்கு சலவைத்தூளைப்
பயன்படுத்துகிறோம்”. (பக்.38)
நாம் இப்போது சலவை சோப்புகளைப் பயன்படுத்துகிறோமா!
வியப்பாக உள்ளது. இவற்றின் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. நாம் தற்போது
பயன்படுத்தும் சலவை சோப்பும் சலவைத்தூளும் பெட்ரோலியத்திலிருந்து
தயாரிக்கப்படுபவை. இவை தொகுப்புத் தூய்மையாக்கிகள் (detergents) எனப்படுகின்றன.
“மண்ணில் இயற்கையாகக் கிடைக்கும்
கனிமப்பொருள்களைக் கொண்டு, தொழிற்சாலைகளில் வேதிமாற்றத்திற்குட்படுத்தி தயாரிக்கப்படும்
உரங்கள் கனிம உரங்கள் என
அழைக்கப்படுகின்றன. (எ.கா.) யூரியா, சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட்
மற்றும் பொட்டாசியம் நைட்ரேட்”. (பக்.41)
இவைகளை செயற்கை உரங்கள் அல்லது வேதியுரங்கள்
என்றுதானே சொல்லிக் கொடுத்துள்ளோம். இயற்கைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுபவை
என்று இழுக்கவேண்டிய தேவையென்ன? தொழிற்சாலைகளில் வேதிமாற்றத்திற்குட்பட்டால் அது
வேறு பொருள்தானே! இயற்கையுரப் பயன்பாடு, இயற்கை வேளாண்மை போன்றவை அதிகரித்துவரும்
நிலையில் வேதியுரங்களுக்குப் பாடநூல்கள் விளம்பரத்தில் ஈடுபடலாமா?
“வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது
பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப்
பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் ----------------“. (பக்.31)
(அ)
வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.
(ஆ)
அந்நீரை செடிகளுக்கு நீரூற்றப் பயன்படுத்தலாம்.
(இ)
வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.
(ஈ) அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால்
அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம். (பக்.31)
இந்த வினாவில் எத்தகைய நீர்ச் சுத்தகரிப்பு
என்கிற தெளிவில்லை. உவர்ப்பு நீர் என்பதால் எதிர் சவ்வூடு பரவல் என்று கருதுவோம்.
முதல் விடையே சரியெனக் கொண்டால் இந்த மிகையான உப்பை ஆழ்துளை கிணற்றருகே விட்டு
கசிய வைப்பது சாத்தியமா என்பதை வல்லுநர்கள் விளக்கவேண்டும்.
“காய்ச்சி வடித்த நீரையோ,
தூய்மையாக்கியிலிருந்து பெறப்பட்ட நீரையோ, மீள் சவ்வூடு பரவல் தூய்மையாக்கியில்
இருந்து பெறப்பட்ட நீரையோ இச்செயல்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டாம்”. (பக்.20)
எதிர் சவ்வூடு பரவலை (RO – Reverse Osmosis)
மீள் சவ்வூடு பரவல் என்று எப்படிச் சொல்லமுடியும்? தாவர செல் சவ்வுகளில் நடைபெறும் சவ்வூடு பரவலுக்கு எதிரான செயலே எதிர் சவ்வூடு பரவல்
என்பதாகும். உப்பு நீரை அதாவது கடல்நீரைக் குடிநீராக்கும் முறையிது.
“தொழிற்சாலையில் உருவாக்கப்படும் சில
நச்சுவாயுக்கள் மழைநீருடன் இணைந்து அம்மழையை, அதிக அமிலத் தன்மையுள்ள மழையாக
மாற்றுகின்றன. இதற்கு அமிலமழை என்று பெயர்”. (பக்.66)
“அமிலமழை
தாவரங்களைப் பாதிப்பதோடு, நிலத்தையும் மாசுபடுத்துகிறது. இந்த மழை, ஏரிகளிலும்,
குளங்களிலும் கலப்பதால், அந்த அமிலங்கள் அங்குள்ள மீன்களுக்கும் மற்ற
விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன”. (பக்.66)
அமில மழைக்கு வகுப்புக்கு ஒன்றாக விளக்கம்
சொல்வது முறைதானா? அதுவும் அறிவியலுக்கு ஒன்றாகவும் சமூக அறிவியலுக்கு ஒன்றாகவும்.
தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் நச்சு வாயுக்கள் (பசுமைக்குடில் வாயுக்கள்) என்று
சொல்வது ஏன்? வாகனப்புகை, காட்டுத்தீ, எரிமலை வெடிப்பு, பட்டாசுகள், நிலக்கரி,
பெட்ரோலியம் உள்ளிட்ட அனைத்து வகை எரிபொருள்களை எரிப்பதால் உண்டாகும் வாயுக்கள்
இதனுள் அடங்காதா?
காற்று, நீர், நிலம், ஒலி ஆகிய மாசுபாடுகள்
மட்டுமே விளக்கமாகச் சொல்லப்படுகின்றன.(பக்.65-68) நீரை மாசுபடுத்தும்
தொழிற்சாலைக் கழிவுகளில் எண்ணெய், கழிவு நீர், கதிரியக்கப் பொருள்கள் ஆகிய
பட்டியலிடப்படுகின்றன. அணுக் கதிரியக்கம், அணு உலை விபத்துகள் (செர்னோபிள்,
புகுஷிமா), அணு குண்டு வெடிப்பு, மருத்துவத் துறையில் கதிரியக்கப் பயன்பாட்டின்
விளைவுகள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. இது அனைத்து வகுப்புப் பாடநூல்களிலும்
மிகச்சரியாகக் கடைபிடிக்கப்படுகின்றன. இதைப் பாடத்திட்டக் கொள்கையாக வரையறுத்தது
யார்?
“தானியங்கள் என்பவை புல்வகைத் தாவரங்களில்
விளைவிக்கப்படும் உணவுப்பொருளாகும். (எ.கா.) நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு,
தினை.”. (பக்.76) ஒரு வித்திலைத் தாவரங்கள் என்பதையும் இங்கு சொல்வது அவசியம்.
கரும்பு, மூங்கில் போன்றவையும் இந்தப் புல்வகைதான் என்பதை உணர்த்துவதும் தேவை.
“அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களில்
உள்ள உண்ணக்கூடிய விதைகளே பருப்புகள் எனப்படுகின்றன. பருப்புகள் கனிஉறையுனுள்
வளர்கின்றன. (எ.கா.) கொண்டைக்கடலை, பச்சைப் பயறு”. (பக்.76,77)
இவை இரு வித்திலைத் தாவரங்கள் என்று
குறிப்பிடலாமே! விதைகள் இரண்டாக உடையும்போது அவை பருப்புகள் எனப்படும்.
“பருப்புகள் கனி உறையுனுள் வளர்கின்றன”, என்றால் தானியங்கள் (அரிசி, கோதுமை) எங்கு
வளர்கின்றன? விதை முளைக்கும்போது இரு விதையிலைகளாக வளரும். கருவுணவுதான் நமக்குப்
பருப்பாகப் பயன்படுவது.
“இந்தியாவில் மேற்கு வங்காளம், அஸ்ஸாம்,
ஒடிசா, பீகார், உத்திரப்பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய ஏழு மாநிலங்களில்
சணல் பயிரிடப்படுகிறது. மேற்கு வங்காளம் மட்டும் இந்திய சணல் உற்பத்தியில், 50
விழுக்காடு உற்பத்தி செய்கிறது”. (பக்.79)
7 மாநிலங்களில் மட்டும் சணல் பயிரப்படுவதாகக்
குறிப்பிடுவது தவறானதாகும். போன்ற சில மாநிலங்கள் என்று வேண்டுமானால்
குறிப்பிடலாம். தமிழ்நாட்டில் கூட சணல் பயிராகிறது.
“பீனால் என்பது கார்பாலிக் அமிலம் எனப்படும்
கரிம அமிலமாகும். இது வீரியம் குறைந்த அமிலமாகும். இது ஆவியாகும் தன்மையுள்ள,
வெண்மை நிறப் படிக திண்மமாகும்”. (பக்.44)
“குறைந்த அடர்வுடைய பீனால் கரைசல் வாய் கொப்பளிப்பானாகவும்,
கிருமிநாசினியாகவும் வீடுகளில் கழிவறையைச் சுத்தம் செய்யவும் பயன்படுகிறது”. (பக்.45)
இதன் குறைவான அமிலத்தன்மையால் (pH) வீரியம்
குறைவு என்று சொல்லப்படுகிறது போலும்! அரிக்கும், புண்ணாக்கும் தன்மையிருப்பதால்
எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ‘குறைந்த அடர்வு’, என்பதை ‘நீர்த்த’ என்றும், ‘வீரியம்
குறைந்த’, என்பதை ‘குறைவான அமிலத்தன்மை’ (pH), என்பதாகப் பொருள் கொள்ளலாமா! இதில்
தெளிவு அவசியம்.
“கழிவுகளை எரிக்கக் கூடாது, அப்படி எரித்தால்
அதில் உள்ள சாம்பல் நிலத்தில் கலக்கும்”. (பக்.67) காற்றும் மாசுபடுமே!
“நீலப்பச்சைப் பாசி, பாக்டீரியா சூடோமோனாஸ்
ஆகியவை வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைப்படுத்தி மண்வளத்தை அதிகரித்து,
விவசாயத்திற்கு உதவுகின்றன”. (பக்.82)
வளிமண்டலத்தில்
அதிக அளவுள்ள (78%) நைட்ரஜனை நைட்ரேட்டாக மாற்றும் செயலுக்கு நிலைப்படுத்துதல்
என்று பெயர். மண் வளம் அதிகரிக்கிறது என்றால் தாவரங்களுக்குத் தேவையான
ஊட்டச்சத்துகள் மண்ணில் மிகுகின்றன என்று பொருள். புவியியல் மற்றும் அறிவியலில்
தொடர்பற்றுச் சொல்லும் நிலைமாறி இவற்றை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம்
ஒருங்கிணைத்துச் சொல்ல வேண்டியது அவசியமானதாகும்.
(இன்னும்
வரும்…)
(அடுத்த
கட்டுரையுடன் இத்தொடர் நிறைவடையும்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக