வெள்ளி, மே 10, 2019

கல்வி அரசியல்


கல்வி அரசியல்

மு.சிவகுருநாதன்

     வதந்தியா அல்லது வேண்டுமென்றே கசியவிடப்பட்ட செய்தியா என்ற அய்யத்திற்கிடமான வகையில் இன்றைய கல்வித்துறை அறிவிப்பு இருந்தது. தேர்தல் ஆணையம் மீதான புகார்கள், நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என பல்வேறு செய்திகளைப் பின்னுக்குத் தள்ளும் அல்லது திசை திருப்பும் உத்தியா என்ற அய்யமும் இருக்கிறது. 

    கடந்த இரு ஆண்டுகளாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள், அறிவிப்புகள் வந்த வண்ணமே உள்ளன. இவையனைத்தும் உத்தரவுகளாக இருந்ததே தவிர அரசுக்குக் கல்வித்துறையின் பரிந்துரைகளாக இல்லை. இந்நிலையில் +1, +2 வகுப்புகளில் மொழிப்பாடங்களில் (தமிழ், ஆங்கிலம்) ஒன்று மட்டுமே விருப்பப் பாடமாகவும் மொத்தம் ஐந்து பாடங்கள், 500 மதிப்பெண்கள் என்றளவில் இருக்கும் என்று பத்தாம் வகுப்பு மொழிப்பாட தாள்கள் ஒன்றாகவும் குறைக்கப்படலாம் என்ற பரிந்துரையை கல்வித்துறை அரசுக்கு அனுப்புயுள்ளதாக தகவல் ஊடகங்களில் வெளியாகி சில மணி நேரங்களில்  மறுக்கப்பட்டுள்ளது. 

     பெரும்பான்மைக்காக பல்வேறு குயுக்தி வேலைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசு தனது செயல்பாடுகளை விளம்பரம் செய்துகொள்ள கல்வித்துறையைத் தேர்தெடுத்துள்ளது. ‘நீட்’ தேர்வுக்காக மத்திய அரசுடன் மோத முடியாமல் அதற்கு மாற்றாகப் பல்வேறு விளம்பர மற்றும் குறுக்குவழி வேலைகளை முனைந்து செய்தது. இவற்றில் சில நல்ல காரியங்களும் இருந்ததை மறுக்க வேண்டியதில்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக மாற்றப்படாதப் பாடநூல்களை மாற்றுவது மற்றும் அது தொடர்பான பணிகளில் நாள்தோறும் அறிவிப்புகளை வெளியிடுவது வாடிக்கையானது. 

    இவர்களது கவனம் முழுவதும் ‘நீட்’ மட்டுமே. எனவே  +1, +2 வகுப்புகளின் பாடநூற்களை மத்தியக் கல்வி வாரியப் பாடத்திட்டத்திற்கு (CBSE) இணையாக மாற்றுவது, +1 பாடங்களிலிருந்தும் ‘நீட்’ வினாக்கள் இருப்பதால்  அவ்வகுப்புப் பாடங்களை படிக்க வசதியாக +1 வகுப்புப் பொதுத்தேர்வு, வகுப்பிற்கு 600 மதிப்பெண்களாகக் குறைப்பு போன்ற செயல்கள் நடந்தன. புதிய பாடத்திட்டச் சுமை அதிகரிக்கும் என்பதால் மொழிப்பாடங்களுக்கு ஒரு தாளும், மொழி மற்றும் கலைப் பாடங்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் (பாடத்திற்கு 10) என சில சலுகைகள் தரப்பட்டன. +1, +2 என்பது ஒருங்கிணைந்த படிப்பு. இவற்றில் ஓராண்டு மட்டும் பொதுத்தேர்வு நடத்தி 1200 மதிப்பெண்கள் கொண்ட சான்றிதழ் வழங்கும் மோசடி ஒருவாறு முடிவுக்கு வந்தது. உடனே +1 மதிபெண்கள் மேற்படிப்பிற்குத் தேவையில்லை என அடிபணியவும் செய்தது. இரண்டு மதிப்பெண்களின் சராசரியை மறுத்து மீண்டும் மோசடிக்குத் துணைபோனது. 

     ‘நீட்’டை மட்டும் கருத்தில் கொண்டதால் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லை. மொழிப்பாடங்களுக்கு ஒரு தாளும் அகமதிப்பீடு மதிப்பெண்களும் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்து எழுதியுள்ளோம். முன்னாள் கல்வித் துறைச் செயலாளரிடம் நேரிலும் வலியுறுத்தியுள்ளோம். இப்போது மொழிப்பாட ஆசிரியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது நிலைப்பாட்டிலும் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. 

    ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவத் தேர்வுகள் மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே 9, 10 மாணவர்கள் மிகவும் பாதிப்படையும் சூழலில் ‘நீட்’டை மட்டும் கவனத்தில் கொள்வதால் இம்மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய சலுகைகள் மறுக்கப்படுகின்றன. இன்று வந்த மறுப்பில் 10 ஆம் வகுப்பிற்கு வழக்கம்போல இரு தாள்கள் என்றே சொல்லப்படுகிறது. அகமதிப்பீடு பற்றிய பேச்சே இல்லை. எனவே வழக்கம் போல தமிழ் இரு தாள்களிலும் சேர்த்து 68 மதிப்பெண்கள் பெற்று நூற்றுக்கு 34 என்று தேர்ச்சியின்மைக்கு உள்ளாகும் அவலம் தொடரும். +1, +2 மாணவர்கள் 25 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் தவிர இதர பாடங்களில் 35 எடுத்தால் மட்டும் தேர்ச்சி என்ற அவல நிலையும் தொடரப்போகிறது. ஒரு தாளில் தேர்ச்சி பெற்றாலும் இரு தாள்களையும் மீண்டும் எழுத வேண்டும்.

    இரு தாள்களை ஒரு தாளாக்கக் கோரிக்கை வைத்ததால்தான் இன்றைய அறிவிப்பு வந்துவிட்டதென சிலர் புலம்பித் தீர்க்கின்றனர். நமக்கு மூடநம்பிக்கைகள் போன்று பல்வேறு கற்பிதங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் இருதாள் இருந்தால் மொழி வளர்ந்திடும் என்பது. ‘தமிழ் வாழ்க’ என்று இரவெல்லாம் ஒளிரவிடும் அலுவலகங்களின் நடைமுறைகள், அரசாணைகள் தமிழில் இல்லை; ஆனால் என்ன ஒளிர்கிறதே தமிழ் வளர்ந்துவிடாதா? பிறப்புச் சான்றிதழ் தமிழில் வழங்கப்படுவதில்லை. (எனது மகளுக்குத் தமிழில் பிறப்புச் சான்று வாங்க பெரும் போராட்டமே நடந்தினேன். அந்த அலுவலகமும்   ‘தமிழ் வாழ்க’ என இரவெல்லாம் ஒளிரவிடுகிறது,) 

    தொடக்க நிலையில்கூட தமிழ் வழிக்கல்வி நடைமுறையில் இல்லை. 90% தமிழ்க்குழந்தைகளில் பெயர்கள் தமிழ் எழுத்துகளில்லை. இருப்பினும் தமிழ் என் உயிர்முச்சு என்று முழக்கமிடுவதிலும், இவ்வாறு நிழல்போர் நடத்துவதிலும் எவ்விதக் குறைவுமில்லை. இன்று ‘கவிப்பேரரசு’ வைரமுத்து எதிர்த்து அறிக்கை விட்டுள்ளார். +1, +2 வகுப்புகளுக்கு ஒரு தாளாக்கி இரண்டு ஆண்டாகிறது. இப்போது விதை நெல் அது இது என்று அறிக்கை வந்துள்ளது. தமிழகத்தில் எந்த ஆட்சியிருந்தாலும் இவரது பாடல்கள் பாடநூலில் இடம்பிடித்துவிடும். 7 முறை விருது வாங்கிய இவரால்தான் தமிழ் வாழ்கிறது என்று பாடமும் எழுதுவார்கள். (தமிழ் படித்தால் இம்மாதிரி சீரழிவுப் படைப்பாளியாகலாம் என்பது தவறான வழிகாட்டும் குற்றச் செயலாகும்.) இவர்களைப் போன்ற சீரழிவுப் படைப்பாளிகளை ஒதுக்கிவைத்துவிட்டு உண்மையான படைப்பாளிகள் கவனம் பெறும்போது உண்மையில் தமிழ் வளரும். 

      மொழிப்பாடங்களுக்கு ஒரு தாள் கேட்கப்பட்டதே தவிர அவற்றை விருப்பப் பாடமாக்க யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இது வெறும் ஆழம் பார்க்கும் வேலையாக இருக்கலாமே தவிர, ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது. இளங்கலைப் படிப்புகளிலும் இரு மொழிப்பாடங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில்  +1, +2 வகுப்புகளுக்கு விருப்பப்பாடம் என்பதெல்லாம் கனவாகவே இருக்க முடியும். இச்செயலை யாரும் ஆதரிக்கவில்லை. இந்த சந்தடியில் 9, 10 மாணவர்கள் பழிவாங்கப்பட்டிருகின்றனர் என்பதே உண்மை. 

     +1, +2 வகுப்புகளைப் போலவே 9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் பாடச்சுமை உள்ளது. உதாரணமாக, 9, 10 சமூக அறிவியல் பாடநூல்கள் சுமார் 600 பக்கங்களைத் தொடுகிறது. பத்தாம் வகுப்பில் சமூக அறிவியல் இரு தொகுதியாக வெளியாகப் போகிறது. ஆனால் பாடவேளைகள் வாரத்திற்கு 5 மட்டுமே. எனவே பாடச்சுமையையொட்டி, +1, +2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் 9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். +1, +2 வகுப்புகளுக்குச் செய்த மாற்றங்கள் போதும்; இதை 9, 10 வகுப்புகளுக்கும் தரவேண்டும். 

     போட்டித் தேர்வுகளை நோக்கி மாணவர்களைத் தயார் செய்வதும், பாடநூல்கள் அதற்கேற்ற வகையில் தயாரிக்கப்படுவதும் ஒருபுறம் இருக்கட்டும். மீத்திறம் கொண்ட மாணவர்களுக்கு இது பயன்படட்டும். மறுபுறம் சராசரிக் குழந்தைகள் தேர்ச்சி மதிப்பெண்களை எட்டும் அளவில் தேர்வுகள் அமைய வேண்டும். அவர்களை தேர்ச்சியில்லை என்று பள்ளியை விட்டும் சமூகத்தை விட்டும் ஒதுக்கும் வேலையை  கல்வித்துறையும் அரசும்  செய்யக்கூடாது.  
  
      கல்வியில் இன்னும் நிறைய புரட்சிகள் நடைபெறவேண்டியுள்ளது. தங்களது அரசியல் நோக்கங்களுக்காக கல்வியில் விளையாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வோம். கல்வியில் நல்ல சூழல் நிலவுவது வருங்காலத்தை வளப்படுத்தும்; இல்லையேல் நிகழ்காலமும் சிக்கலுக்குள்ளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக