மத அடையாளங்கள், குறியீடுகளைப்
பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம் கல்வியாண்டின்
புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 04)
12 ஆம் வகுப்பின்
புதிய பொதுத்தமிழ் பாடநூலின் அட்டை வடிவமைப்பு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இதை வெறும்
மேலோட்டமான பார்வையுடன் கடந்துவிட முடியும் என்று தோன்றவில்லை. இங்கு வண்ணங்கள் வெறும்
நிறங்களாக இல்லை. அவை சாதிகளாக, மதங்களாகப் பிரிந்து கிடக்கும் நிலையில் கோட்டோவியம்,
படம், ஓவியம், நிறம் ஆகிய எவற்றையும் மிகக் கவனத்துடன் கையாள்வதும், பயன்படுத்துவதும்
முக்கியம்.
எழுத்தாளர்
சுந்தரராமசாமி (சு.ரா.) ‘இந்திய டுடே’ இலக்கிய மலர் ஒன்றில் எழுதிய ‘மேல்பார்வை’ எனும்
சிறுகதையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இதில் கூடைப்பந்தாட்ட அணிகளை சிவப்பு, பச்சை,
நீலம், கருப்பு என்ற வண்ணத்தில் குறிப்பிட்டு அவற்றைக் குறியீடாகக் கொண்டு அந்த அணிகளின்
இயல்புகளின் ஊடாக மேல்தட்டுப் பார்வை வழியே விளையாட்டு அல்லாமல் அந்தந்த சமூகங்கள்
மீதான ஆதிக்க சாதி விமர்சனங்களைப் பதிவு செய்திருப்பார்.
குறியியல் (Semiotics / Semiology) அறிஞரான ஃபெர்டினாண்ட்
டி சசூர் குறியை (sign) குறிப்பான் (signifier), குறிப்பீடு (signified) என இரண்டாகப் பிரிப்பார். உதாரணமாக சிவப்பு நிறம்
வெறும் வண்ணமே. ஆனால் கம்யூனிஸ்ட்களைக் குறிப்பிடும்போது சிவப்பு ‘குறிப்பான்’ ஆகிறது.
சிவப்பால் விளக்கப்படும் பொருளான ‘கம்யூனிஸ்ட்’ ‘குறிப்பீடு’ ஆகிறது. நீலம், பச்சை,
கருப்பு ஆகிய வண்ணங்களும் குறியீட்டுத்தன்மை உடையவைதான்! மேலே சொன்ன சிறுகதையைக் கட்டுடைத்து
வாசிக்கும்போது இங்கு சாதீய மேலாண்மை, உயர்த்தப்பட்ட சாதித் தன்னிலையின் ஆதிக்க மனப்போக்கு
ஆகியன வெளிப்படுவதை மிக எளிதாக உணர முடியும்.
பாரதியின் முண்டாசு அடையாளமே கேள்விக்குரியது. நமக்குக்
கிடைத்திருக்கின்ற சில படங்களில் முண்டாசு இருப்பதால் அவரது தினசரி உடை முண்டாசுதான்
என்ற கற்பிதத்திற்கு வர இயலாது. மேலும் அதற்குக் காவிச்சாயம் பூசுவது, வே.மதிமாறன்
போன்றோர் பாரதியை ஒரு இந்துத்துவவாதியாக மதிப்பிடும் தன்மைகளுடன் ஒத்துப்போக முடியாது.
இவற்றை பலர் ஏற்பதில்லை என்பதே உண்மை. அவரது படைப்பின் ஒன்றிரண்டு வரிகளைக் கொண்டு
இம்மாதிரியான முடிவுக்கு வராமல், ஒட்டுமொத்தப் படைப்பையும் கொண்டே மதிப்பிடவேண்டும்.
பாரதியின் ஒட்டுமொத்த படைப்புலகத்தைக் காணும்போது இம்மாதிரியான முடிவுக்கு வர முடியாது.
இந்நிலையில் பாடநூல் பாரதியின் முண்டாசுக்குக்
காவி வண்ணம் பூசுவது ஏன்? என்பது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கேள்வியாகும். இந்தக்
காவி மட்டுமல்லாது அந்த கலவையோவியங்களைப் பலகோணங்களில்
பார்க்கும்போதும் சிக்கல் எழவேச் செய்கிறது.
இவை திட்டமிட்டுச் செய்யப்பட்டதா, தன்னியல்பாக
வரையப்பட்டதா என்பதில் முரண்கள் இருப்பினும் குறியீடுகளின் அரசியல், சமூகப் பின்னணி,
தாக்கம் ஆகியவற்றை உணர்வது அவசியம். அனைவருக்கும் பொதுவான ஒன்றை உருவாக்கும்போது மிக
எச்சரிக்கையாகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது.
இந்திய
வரைபடம் மற்றும் தேசியக்கொடிகளின் வண்ணங்கள் பின்னணியில் ஒரு ஓவியத்தை ஒவியர் கற்பனை
செய்திருப்பார் என்று அனுமானிக்கலாம். பொதுப்புத்தியில் படிய வைக்கப்பட்டிருக்கும்
மூவண்ணக்கொடியை இதை வடிவமைத்தவரும் பிரதிபளித்துள்ளார் என்றே தோன்றுகிறது. உண்மையில்
நமது தேசியக்கொடி நால் வண்ணக்கொடியல்லவா! (எச்சரிக்கை: நால் வர்ணக்கொடி அல்ல.) புத்த
தம்மச் சக்கரம் உள்ள ‘கடல்’ நீலத்தை நாம் கொடியின் நிறமாக ஏன் கருதுவதில்லை? ‘கடல்’நீலம்
மயிலாட்டாக் காரரின் ஆடையில் சிறிதாக உள்ளது. இந்த நான்கு நிறங்களைத் தாண்டி கருப்பு,
சிவப்பு போன்ற நிறங்களும் பயன் படுத்தியிருப்பதால் மூண்டாசுக்குக் காவியைத் தவிர்த்திருக்கலாம்
என்று எண்ணத் தோன்றுகிறது. இந்திய தேசியக் கொடிக்கு இந்துத்துவா விளக்கமளிக்கும் போக்கும்
உள்ளதையும் அவதானிக்கலாம்.
எதற்கெடுத்தாலும் நாடு, மொழி என்று பேசுவதும்
வணிகம் என்றால் மட்டும் உலகமயத்தை ஆதரிப்பதும் இங்குள்ள அவலம். ஈழப்பிரச்சினை இன்று
தமிழர்களை ஆறு கண்டங்களிலும் வாழக்கூடியவர்களாக மாற்றியிருக்கிறது. எனவே ‘உலக அளவிலான
மொழி தமிழ்’, என்ற கருத்துடன் கூடிய இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கலாம். அப்படி வரைந்திருந்தால்
இந்தச் சிக்கல் வந்திருக்காது என்று நினைக்கிறேன்.
நாடு, மொழி என்கிறபோது பல்வேறு குறுகிய பார்வைகள் இணைந்துகொண்டு விடுகின்றன.
இந்திய
மற்றும் தமிழ்க் கலைகளின் கோட்டோவியங்கள் இந்த ஓவியத்தில் இடம் பெறுவது சிறப்புதான்.
ஆயினும் அவை இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பன்மைத்தன்மையை விளக்குவதாக இல்லை. கூத்து,
பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் போன்றவை கீழும், பரத நாட்டியம் மேற்பகுதியில்
உயர்வாய் சித்தரிக்கப்படுகிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ‘சதிராட்டம்’ எனப்பட்ட
இக்கலை எவ்வாறாக இருந்தது? தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பிறகு உயர்த்தப்பட்ட சாதியினர்
கைப்பற்றிக்கொண்ட கலையல்லவா இது! அதுவரையில் தங்களது வாழ்வைக் கொடுத்து, இழிவைத் தாங்கியல்லவா
ஒரு சமூகத்துப் பெண்கள் இக்கலையைக் காப்பாற்றினர்? அன்று இழிவாக இருந்தது இன்று மேட்டிமையாகி
விட்டது. இதைப் போன்று களவுப் பட்டியலில் மருத்துவம் உள்பட நிறைய உண்டு.
ஓவியத்தில்
இருக்கின்ற கோயில் கோபுரங்கள் அனைத்தையும் சைவ, வைணவ கோயில்களை நினைவூட்டுகின்றன. இவையும்
முண்டாசும் காவி நிறத்தில் இருக்கின்றன. தமிழ் என்றதும் பக்தி இலக்கியத்தை மட்டும்
எடுத்துக்கொண்டு சைவ, வைணவப் பிரிவுகளுடன் தமிழை அடையாளப்படுத்தும் முயற்சி நெடுங்காலமாக
இங்குள்ளது. சமண, பவுத்த, கிருத்தவ, இஸ்லாமிய சமயங்களில் பங்கு தமிழில் இல்லையா? தமிழ்
அடையாளமாக முன்னிறுத்தப்படும் திருக்குறளை எங்கு வைப்பீர்கள்? தமிழ் என்கிற பெயரில் சைவ, வைணவத் தமிழே முன்னிலைப்படுத்தப்படுகிறது.
அவைதீகத் தமிழ் (சமணம், பவுத்தம், ஆசீவகம்) தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.
குறியீடுகளின் அரசியல் பல இடங்களிலும் நீக்கமற
நிறைந்துள்ளது. தமிழில் சங்ககாலப் புலவர்களின் ஓவியங்கள் வரையப்பட்டும் சிலை வைக்கும்
வழக்கமும் இங்கு அதிகம். இந்து மதக் கடவுளர்களின் உருவங்களே இதற்கு அடிப்படையாக உள்ளது.
ஓவியர் வேணுகோபால் சர்மாவின் முகலாய ஓவியம் இன்று திருவள்ளுவர் படம், சிலையாக மாற்றப்படும்
குறியீட்டு அரசியல் நடந்துள்ளது. (பார்க்க: ஜன.13, 1990, தினமணி-தமிழ்மணியில் ‘வள்ளுவராய்
மாறிய முகலாய ஓவியம்’ – எனும் பட்டுக்கோட்டை இராசேந்திரனின் கட்டுரை.) திருக்குறளை
எழுதியவர் ஒரு சமணமுனிவர் என்பதும் சமண, பவுத்த கருத்துகள் நிறைந்திருப்பதால்தான் அது
பொதுமறையாக உள்ளது. வைதீக இந்து மதத் தத்துவத்தில்
சமத்துவமேது? பவுத்தத் துறவிலும் (பிக்குணிகள்)
சங்கத்திலும் பெண்களுக்கு உரிய இடமிருந்தது. பொது வாழ்விற்கு வந்ததால் யாரும் கிழவியாக்கப்
படவில்லை.
அவ்வை எனும் தமிழ்க் கவிதாயினி ஏன் நரைகிழவியாக்கப்பட
வேண்டும்? வைதீக பெண்ணடிமைக் கருத்துகளுக்கேற்ப அவ்வை பற்றிய புனைவுகளும் உருவங்களும்
மறுஉற்பத்தி செய்யப்பட்டன. செய்யுள் இயற்றுதல், மன்னர்களிடையே தூதுபோதல், நட்பு கொள்ளல்,
கள்ளுண்ணல் போன்ற அவ்வையின் செயல்பாடுகளை வைதீகம் ஏற்குமா? எனவேதான் அவ்வைக் கிழவி
எனும் புனைவு உற்பத்தியானது.
‘தமிழன்னை
சிலை’ என்று ஒன்றை வடிவமைத்திருக்கிறார்கள். கருணாநிதி திருவள்ளுவருக்கு குமரிமுனையில்
சிலை வைத்ததும் ஜெயலலிதா தமிழன்னை சிலையை கையிலெடுத்தார். இந்துப் பெண்ணுருவம் ஒன்றை
‘தமிழன்னை’ என உருவகப்படுத்தும்போது அது வெளிப்படுத்தும் குறிப்பீடு என்னவாக இருக்கும்
என்பதை விளக்க வேண்டியதில்லை. பேருரு அரசியல் இத்தகையக் குறியீடுகளால்தான் நிரப்பப்படுகிறது.
அப்துல்கலாமிற்கு சிலை வைப்பதும், கையில் பகவத்
கீதையைத் திணிப்பதும் இவ்வகையான அரசியலே. குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலை,
வன்முறை வெறியாட்டங்களுக்குப் பிறகு ‘நல்ல
முஸ்லீமாக’ அடையாளம் காணப்பட்டு, அதற்கான ‘திரு உரு’வாக வளர்த்தெடுக்கப்பட்டதன்
பின்னணியும் இதுவே. இந்தக் குறியீடுகள் வளர்க்கப்படுதலும் பொதுப்புத்திகளில் பதிய வைக்கப்படுவதும்
ஆதிக்க அரசியலின் செயல்பாடாக உள்ளது. வரலாறு நெடுகிலும் இதற்கான ஆதாரங்கள் உண்டு.
‘மநு’ நீதியைப் பரப்ப மநுநீதிச்சோழன் என்கிற தொன்மம் இங்கு வரலாறாக புனையப்பட்டதும்
அறியவேண்டிய செய்தி.
இந்திய
வைதீக மதங்கள் பெரும்பாலும் உருவ வழிபாட்டை வலியுறுத்துபவை. இதற்கு மாற்றாக அவைதீக
மதங்கள் உருவ வழிபாட்டை எதிர்க்கும் பொதுத் தன்மை மிக்கவை. இவை பெரும்பாலும் கடவுள்
மறுப்புக் கொள்கையுடையவை. கடவுளே இல்லை என்கிற உருவ/சிலை வழிபாட்டிற்கு இடமில்லை. காலப்போக்கில்
இவை சிதைவுற்று மகாவீரர், புத்தர், அய்யனார் போன்ற வழிபாட்டில் இறங்கின. அவைதீகத்தை
உள்வாங்கி செரித்தது வைதீக இந்து மதம். இவற்றை
அழித்தொழிக்க வைதீக இந்து மதம் பலவாறான செயல்களிலும் ஈடுபட்டது. (எ.கா.) மகாயான பவுத்தம்.
அவைதீக (சமணம், பவுத்தம், ஆசீவகம்) பாரம்பரியத் தாக்கம் அதிகமுள்ள தமிழ் மொழியை இந்துத்துவச்
சிமிழுக்குள் அடைக்க பல தளங்களில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதைப் பாடநூல் உருவாக்குபவர்கள்
உணர்ந்திருக்க வேண்டும்.
உலகளவில்
இஸ்லாம் உருவ வழிபாட்டிற்கு எதிரான கொள்கையுடைய தத்துவம். அதைப் போன்ற இந்திய, தமிழ்
மரபுகள் உண்டு. அவற்றை நாமும் பாடநூலும் கண்டுகொள்வதில்லை. ‘முருகு’ எனும் அழகை, இயற்கையை
வழிபடுதல் முருகன் வழிபாடாக தோற்றம் கொண்டு, சிலைவழிபாட்டை நோக்கிச் சென்றுவிட்டது.
சமணத்தின் திகம்பரம், ஸ்வேதம்பரம் என்ற இரு பிரிவுகளை மட்டுமே பாடநூல்கள் சொல்லித்
தரும். சமணத்தின் மூன்றாவது பிரிவில் ஸ்தானகவாசிகள்
என்னும் உருவ வழிபாட்டு எதிர்ப்பாளர்களும் உண்டு. அவர்கள் சமண மறைகளை மட்டுமே வணங்குபவர்கள்;
சிலை வணக்கம் செய்வதில்லை.
இத்தகையக் குறியீட்டு அடையாளங்கள் கல்வியில் ஒருவித
சட்ட ஒழுங்குடன் வேறுவகையில் சொன்னால் காலனித்துவ ஒழுங்கில் கடைபிடிக்கப்படுகின்றன.
முண்டாசு, முறுக்கு மீசை இல்லாமல் பாரதி வேடமில்லை; கையில் கோல், தலையில் நரையின்றி
அவ்வை இல்லை. “மழித்தலும் நீட்டலும் வேண்டாம்”, என்ற திருவள்ளுவர் சடைமுடி, தாடியுடனே
காட்சியளிப்பார். தென்னாப்பிரிக்காவில் காந்தி அரையாடை உடுத்தவில்லை.
கைலி
கட்டினால், தொப்பி வைத்தால் முஸ்லீம்; கையில்
சிலுவை இருந்தால் கிருத்தவர்; பூணுல், குடுமியுடன் இருந்தால் இந்து என்பதான பாவனைத்
தோற்றங்கள் பள்ளிகளில் அடிக்கடி அரங்கேற்றப்படும். இந்திய ஒருமைப்பாட்டை இவ்விதக் குறியீடுகளுடன்
நிறுவும் நாடகம் கேலிக்கூத்தான ஒன்று. பெரியார் கைலியுடன் பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற
ஒரு தலைவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தகுந்தது. இருசக்கர வாகனங்களில் கைலிகட்டிச்
செல்பவர்கள் உடனே காவலர்களால் மடக்கப்படுவர். நாட்டில் கைலிக்கு அவ்வளவு மரியாதை!
‘நைட்டி’யைவிட கைலி இழிவானதாகப் பார்க்கப்படுவதற்கு, இஸ்லாம் என்ற மத அடையாளமே காரணமாக
உள்ளது. தோள்பை (ஜோல்னாபை) வைத்திருப்பவர் அறிவுஜீவி என்கிற அடையாளம் இருந்ததல்லவா!
எனவே உடைகளும் அடையாளக் குறியீடுகளாக தோற்றம்
கொள்பவை.
எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) என்றொரு
நடிகர் இருந்தார். அவர் அரசியலுக்கு வந்தபோது காஷ்மீர் தொப்பி அடையாளத்துடன் வலம் வந்தார்.
தொப்பியில்லையென்றால் அவரை எம்.ஜி.ஆர். என்று நம்பாத நிலை இருந்தது. முதல்வரானதும்
அவ்வடையாளம் நிரந்தரமானது. உடல்நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் இருக்கும்போது
தொப்பி இல்லாத சில படங்கள் வெளியானது. பாரதி போன்றவர்கள் அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு ஆளுமைகளுக்குச் சாயம் பூசுவது, ஒளிவட்டம் பாய்ச்சுவது, மத அடையாளத்தைச் சேர்ப்பது
ஆகியன மிகவும் அபாயகரமானது. மதச்சார்பற்ற நாட்டில் மதத்தை ஏதோ ஒருவகையில் வெளிக்காட்டும் இவ்வகைக் குறியீடுகளை அகற்றியாக
வேண்டும். இவற்றைப் பாடநூல் தயாரிப்பவர்கள் உணர்வதும் பலமுறை ஆய்வுசெய்வதும் முடிந்தவரையில்
தவிப்பதும் குழந்தைகளிடம் அடையாள வெறுப்பரசியல்
அணுகாமல் தடுப்பதும் கல்வியின் கடமையாகும்.
(இன்னும் வரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக