வியாழன், மே 23, 2019

“அன்றாட வாழ்வின் செறிவான அம்சங்களை தேர்ந்தெடுத்து வாழும் இன்னொரு வாழ்க்கையே நாடகம்”


“அன்றாட வாழ்வின் செறிவான அம்சங்களை தேர்ந்தெடுத்து வாழும் இன்னொரு வாழ்க்கையே நாடகம்


முனைவர்  வேலு சரவணன் (நாடகக் கலைஞர்)


நேர்காணல்:  மு.சிவகுருநாதன்




     (வேலு மாமா எனக் குழந்தைகள் கொண்டாடும் நாடகக்கலைஞர் பேரா. வேலு சரவணன் அவர்களுடனான நேர்காணல் இது. கடல்பூதம், மீன்பல் போன்ற குழந்தைகளுக்கு உகந்த சொல்லாடல்களுடன் கோமாளியாக உருமாறி எப்போதும் குழந்தைகளிடம் ஒன்றிவிடுகிறார். நாடகத்தின் பார்வையாளர்களான குழந்தைகளை அந்நாடகத்தில் பங்கேற்கச் செய்யும் வித்தகர். தமிழில் குழந்தை நாடக முன்னோடிகளுள் ஒருவர். இளைஞர்களுக்கு நாடகம் போதிக்கும் பேராசிரியர். ‘ஐராபாசீ’ என்ற சிறார் நாவலாசிரியர். குழந்தைகளை நாடகம் நடத்தி மகிழ்விக்கும் வேலு மாமா பேசுவதை நீங்களே கேளுங்கள்!) 


கே: குழந்தைகளுக்காக, வேலு மாமாவைப் பற்றி, குழந்தைப் பருவத்திலிருந்து இன்று வரை, கொஞ்சம் சுருக்கமாக சொல்லலாமா?


       ஒப்பிலா உலகில், உப்புமணல் நடுவில், ஓர் சிற்றூரில், அன்பெனும் கூட்டில் நான் பிறந்தேன், தாத்தா, அம்மாயி, அப்பாயி, அத்தைகள், அம்மா, அப்பா, அக்கா தங்கைகள், அண்ணன், தம்பி, பெரியமாடு, சின்னமாடு, காரிக்காளை, மாக்காளை, ஆடுமாடுகள் என உடமரங்கிளைகளில் வசித்தேன். வெள்ளாட்டுமங்களம், ஓமக்கண்வயல், கம்பர் கோவில் என நான் பிறந்த ஊர் ஊரணிகளுக்கும், கண்மாய்களுக்கும் வரும் முக்குளிப்பான், உல்லான், கிரிட்டி முதலான எண்ணற்ற நீர்ப்பறவைகளுக்கும், எங்கள் நரசிங்கக் காவேரி ஆற்றில் நான் உறங்கும் மணல் முகடுகளில் வசித்துவரும் வெள்ளுவை மீன்களுக்கும், புரட்டாசி மாதம் சிறகு முளைக்கும் தவளை, பல வண்ணக்கூத்தாடியாகி காய்ச்சுள் குருவியாய் கடல் போகும் கார்த்திகை மாதக்காற்றுக்கும் என்னைத் தெரியும், மற்றபடி என்னைப் பற்றி கேட்காதீர்கள் எனக்கு அழுகை வரும்.  உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள ஐராபாசீ நாவலைப் படியுங்கள் அதுதான் இந்தச் சிறுவனின் கதை



கே: குழந்தைகளைக் கவரும் ஒன்று நாடகம்இதை எப்படிக் கண்டடைந்தீர்கள்? நாடக உலகை அதுவும் குழந்தைகள் நாடகத்தை நோக்கி உங்களை ஈர்த்தது எது?

      படிப்புக்காக என் ஊரைப் பிரிந்த போது எனக்கு 10,11 வயதிருக்கும். அந்த வயது மனிதனாகவே இப்போதும் இருக்கிறேன். நாடகம் படித்த போது வயதும் மனதும் அப்படி இருந்ததால், வேறு வழியில்லாமல் சின்னஞ்சிறுவர்களின் கூட்டாளியானேன். அரிச்சுவடி இல்லாமல் ஆடும் விளையாட்டாக இருந்ததால் சிறுவர் நாடகம் எனக்கு இதமாக இருந்தது.


கே: குழந்தைகளின் உலகின் fantasy தன்மையை எவ்வாறு உள்வாங்கி அதை நாடகத் தளத்திற்கு கடத்துகிறீர்கள்?

    Fantasy தான் குழந்தைகளின் இயற்கை என்று நினைக்கிறேன், அந்த இயற்கைக்குள் மறைந்திருக்கும் கற்பனைகளை நம்புவது தான் அறிவியலின் அடிப்படை.


கே: குழந்தைகள் நாடகம் புரியவில்லை என்ற பெரியவர்களின் வழக்கமானக் குற்றச்சாட்டுகள் பற்றி…?

     இந்தக்குற்றச்சாட்டுக்கும் கலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே தோன்றுகிறது. அதோடு பெரு முயற்சி செய்து புரிந்து கொள்ளும் அளவிற்கு நான் நடிக்கும் நாடகங்கள் இருப்பதாக நான் உணரவில்லை.

கே: கல்விகற்றல், கற்பித்தலில் நாடகம் பெரிய பங்களிப்பைச் செய்யமுடியும். அதற்கான வாய்ப்புகள் நமது சூழலில் எவ்வாறுள்ளது?

    அய்யகோ! இது மாயமில்லை! மந்திரமில்லை!! இது எல்லோருக்கும் தெரியும். இதைத் தவிற வேறு வழிதான் ஒருவருக்கும் தெரியாது.

கே: நிகழ்த்துவதற்கான நாடகங்களை விட படிப்பதற்கான நாடகங்களையே பாடநூல்கள் முதன்மைப்படுத்துகின்றன. இவற்றை எப்படி உணர்கிறீர்கள்?

    வல்லுநர்கள் மிகுந்த கல்வியுலகில் இந்த முடிவு தீர்மானிப்படுகிறது. படிப்பதும் நிகழ்த்துவதுமே கல்வி செய்யும் அதிசயம். இது அந்தந்த வாத்தியார் மாணவர்களைப் பொறுத்தது. சிறப்பாக செயல்படவே எல்லோரும் முயற்சிக்கிறார்கள்.



கே: குழந்தைகளின் பாடநூல்களில் பட்டிமன்றங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் நாடகங்களுக்கு இல்லை. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

     ஒருவேளை குழந்தைகளின் உரையாடல் மற்றும் மொழித்திறனை மேம்படுத்துவதற்காக பட்டிமன்றம் போன்ற வடிவங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கலாம். ஆனாலும் அந்நிகழ்வுகளில் நாடகத்தன்மையே விஞ்சி இருக்கும். மொழிப்பயிற்சிக்கான சிறந்த கலை வடிவம் நாடகம் என்பதே என் எண்ணம்.

கே: மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற அனைத்துப் பாடங்களிலும் நாடகப் பாங்கு நிலவுவதைத் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளீர்கள். தொடக்கக்கல்வி, வளரிளம் பருவக்கல்வியில் நாடகக்கலை உருவாக்கும் தாக்கம் பற்றி

     நாடகப் பாங்கு இயல்பானது. வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தது. அன்றாட வாழ்வின் செறிவான அம்சங்களை தேர்ந்தெடுத்து வாழும் இன்னொரு வாழ்க்கையே நாடகம். இது நாகரீக வளர்ச்சியின் கண்ணாடியாக, பல்கலைகளின் கூட்டுக்  கலை அறிவியலாக இருப்பதால் நாடகம் எந்தப் பாடத்தையும் எளிதாக்குகிறது. வளரிளம் பருவத்திற்கானகல்விக்கு எளிமையையும் எழிலையும் தருவதே சிறுவர் நாடகம்.

கே: நாடகக் கலை வடிவத்தை கல்வியில் பயன்படுத்தப் ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் இல்லை. இதன் மூலம் கற்றல் அடைவை மேம்படுத்தாவது இதற்கு முதன்மை அளிக்கலாமல்லவா! கல்வியின்பால் குழந்தைகளுக்கு ஈர்ப்பை அளிக்க நாடகத்தைப் பயன்படுத்துவது பற்றி...

     ஆசிரியர்களே மேம்பட்ட நாடகக் கலைஞர்தள்தான். பகல்நேர நடிகர்களாக வேடம் சூடிய ஆசிரியர்களுக்கான காலம் இது. இரவு நேர நாடகங்கள் அரிதாகி வரும் இந்நாளில் வாத்தியார்கள் புதுவேகம் கொண்டால் பள்ளிகள் நாடக மேடையாகவும் மாறலாம்.

கே: சிறார் நாவல்ஐராபாசீபோன்று எழுத்து முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுகிறீர்களா? உங்களது நாடக ஆக்கங்கள் இதுவரைத் தொகுக்கப் படவில்லை. நாடகங்கள் மேடையேற்ற மட்டுமே, வாசிக்க அல்ல, என்று கருதுகிறீர்களா

     இந்த அன்பான கேள்வியை கேட்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. மாலுமி (காவ்யா), தங்கராணி (வம்சி), அங்கா துங்கா (ஆழி குழந்தைகள் நாடகக்குழு), தேவலோக யானை (தமிழ்நாடு குழந்தைகள் நலவாரியம் மற்றும் மறுவாழ்வு சங்கம்) என சில புத்தகங்கள் வந்திருக்கின்றன, விரைவில் காலச்சுவடு வெளியிட இருக்கும்திபுலான் வாராதிக்காகக் காத்திருக்கிறேன். மீன்பல் சிறுவர்கள் கேட்ட அந்தக் கதைகளைப் படிக்க வேண்டும், அது எப்போது என்று அண்ணன் கண்ணனுக்குத்தான் தெரியும். பிறகு வாசிக்கும் நாடகங்களும் மனதுக்குள் மேடையேறுகின்றன என்றே நினைக்கிறேன்.
 
கே: தமிழில் குழந்தை இலக்கியத்திற்கு பெரும் பஞ்சம் இன்னும் நீடிக்கிறது. அதுபோலவே நாடகத்துறையும், 25 ஆண்டுகளுக்கு மேலாக இத்துறையில் இயங்கிவரும் தாங்கள் இவற்றில் வளர்ச்சிப் போக்கை அவதானிக்க முடிகிறதா

    உலகில் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் தாய்மொழியை இழந்து விட்ட நிலையில் இந்தப் பஞ்சம் தொடரும், அதை மாற்றும் அதிசயங்களும் நிகழும் என்பதே என் நம்பிக்கை. சிறுவர்களுக்காக மட்டுமே என்னால் நடிக்க முடியும் என்ற எண்ணம் வந்ததிலிருந்து இன்றும் தொடர்கிறது என் பயணம், 90களில் குழந்தைகளின் கலை இலக்கியங்கள் பற்றிய சிந்தனைகள் மிக அரிது, இன்று எல்லாப்பகுதிகளிளும் யாரோ சில அதிசய மனிதர்கள் இதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம் சிறுவர் நாடக நிகழ்வுகள் எவ்வளவு தூரம் பறந்து விரிகிறது என்பதிலேயே சிறுவர்களுக்கான கல்வி, கலை இலக்கிய வளர்ச்சி இருக்கிறது. ஏனென்றால் சிறுவர் நாடகங்கள்தான் அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு போன்ற கலை வடிவம்.

கே: முன்புநாடக வெளிபோன்ற சிற்றிதழ்கள், ‘இந்தியா டுடே இலக்கிய மலர்போன்றவற்றில் உங்களது நாடகங்களின் எழுத்து வடிவங்கள் வெளியாயின. அச்சு ஊடகங்கள் பெருத்துள்ள இன்றைய சூழலில் அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போவற்கான காரணங்கள் ஏன்? மின்னணு ஊடகங்கள் வழியே நாடகங்களை எடுத்துச் செல்லும் வாய்ப்புகள் பற்றி…?

    அதைப் பற்றிய எண்ணங்கள் எனக்கு இல்லை, அச்சு ஊடகம் எப்போதும் காலத்தின் தேவையைத்தான் முன்னிறுத்தும், நமக்கான காலமும் அதில் இருக்கிறது.  அது வரும் வரை இப்படியே இருக்கலாம்.

கே: உங்களது ஆசிரியர் இந்திரா பார்த்தசாரதி, “நாடக ஆசிரியர் எனினும் மேடைக்கூச்சம் இன்னும் போகவில்லை”, என்கிறார். பயிற்சி அளிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமல்லாது. பார்வையாளராக இருக்கும் குழந்தைகளையும் நாடகத்தில் இணைப்பதும், அவர்களது அக உலகுடன் திடீரென இணைய உங்களால் எப்படி முடிகிறது?

      என் ஆசிரியரின் கூச்சமே அவரது கலை. கலையின் சுவையை இதைவிட எப்படிச் சொல்வது. அவர் பேராசிரியர் என்பதால் புதிர் போட்டுத் தெளிவாக்குகிறார். நான் சிறுவர்களில் ஒருவன், அதனால் என் சுபாவம் சிறுவர்களுக்குப் பிடித்திருக்கலாம். என்னவென்று சொல்வது அவர்களின் அன்பைப் பெற என்னென்னவோவெல்லாம் செய்கிறேன்.

கே: நவீன நாடகங்களின் வளர்ச்சிப் போக்கில் சிறார் நாடக முயற்சிகள் பின்தங்கியிருக்கின்றவா? அப்படியென்றால் அதற்கான காரணம் என்ன? சிறார் நாடக முயற்சிகளில் ஈடுபடத் தடைகள் என்ன?

    யார் சொன்னது சிறுவர் நாடகங்கள் பின் தங்கி இருப்பதாக, இப்போதுதானே வளர்ந்து வருகிறது? சிறுவர் நாடகங்களே இந்நாளைய வெற்றிகரமான வடிவம். பார்வையாளர்கள் அதிகம் என்பதால் சிறுவர் நாடக முயற்சிகளுக்கு தடையேதும் இல்லை.

கே: கல்வியில் மற்றும் குழந்தைகளுக்கான நாடகம் குறித்த ஆர்வலர்களுக்கும் குழந்தைகளுக்கும் தாங்கள் சொல்ல விரும்புவது எது?

     குழந்தைகளின் அன்புக்குரியவர்களைப போற்றுகிறேன். இதை விட மிகச் சிறந்தது உலகில் இல்லை என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு சொல்ல என்னிடம் ஏதுமில்லை.


வெளியான நாள்: 11, மே, 2019

நன்றிகள்:      தோழர்கள் வேலு சரவணன்,  ஆர். பிரபு 

மற்றும்     www.panchumittai.com      சிறார் இதழ் / இணையதளம்.


 படங்கள்: நன்றி தோழர் செ.மணிமாறன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக