திங்கள், மே 27, 2019

தனியார் பாடநூல் சர்ச்சை: நாசா வியந்த திருநள்ளாறு – சில குறிப்புகள்


தனியார் பாடநூல் சர்ச்சை: நாசா வியந்த திருநள்ளாறு – சில குறிப்புகள்


மு.சிவகுருநாதன்


       விகாஸ் பப்ளிஷிங் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் குழுமத்தின் மதுபன் (MADHUBUN) எஜுகேஷன்ஸ் புக்ஸ் நான்காம் வகுப்பிற்கு ‘தமிழ் அருவி’ எனும் தமிழ்ப் பாடநூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். சிதம்பரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப்பள்ளியைச் சேர்ந்த செல்வி கோ.ஜீவிதா M.A., B.Ed., என்பவர் இந்நூலை எழுதியதாக முதல் பக்கம் சொல்கிறது. விமர்சனத்திற்குச் செல்லும்முன் இப்புத்தகத்தின் சர்ச்சைக்குரிய பாடமான (பாட எண்: 06) ‘நாசா வியந்த திருநள்ளாறு’ முழுமையாகப் பார்த்துவிடுவது நல்லது.  

நாசா வியந்த திருநள்ளாறு

       “நவக்கிரகங்களில் ஈஸ்வரர் பட்டம் பெற்ற சனிபகவான் காரைக்காலுக்கு அருகில், தர்ப்பைப் புல்லால் ஆன காட்டில், சுயம்பு லிங்கமாகத் தோன்றிய தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சிவனை வழிபட்டுப் பேறு பெற்றதால் சனீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

     மகாபாரத்தில் இடம்பெறும் நளமகராஜா கலிபுருடனின் அம்சமான சனி பகவானால் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகி இறுதியில் இக்கோவிலுக்கு வந்து, நளதீர்த்தத்தில் நீராடிய பின் கலி நீங்கிச் சகல செல்வங்களையும் பெற்றதால் திருநள்ளாறு எனப் பெயர்பெற்றது எனக் கூறப்படுகிறது..

     அப்போது சனிபகவான் நளனின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு வரமளித்தார். அது என்னவெனில் ஒருவர்க்குச் சனியின் ஆட்சி நடக்கும் காலத்தில் அவர் நளனின் வரலாற்றைக் கேட்டால் சனிபகவான் அவரை விடுவிக்க வேண்டும் என நளவெண்பாவின் கலிநீங்கு படலம் கூறுகிறது.

    இத்தகு புகழ் வாய்ந்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலைக் கண்டு வியந்தவர் பலர். அதில் நாசாவும் ஒன்று. திருநள்ளாறு கோவிலின் மீது சூரியக்குடும்பத்தில் உள்ள சனிக்கோளின் கதிர்கள் கருநீலமாக அதிக அடர்த்தியோடு விழுகிறது என்பதை அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்து வியந்து நின்றனர்.

     அதோடு மட்டுமல்லாமல் பூமியைச் சுற்றிவர நாசாவால் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திருநள்ளாறு வந்தவுடன் ஸ்தம்பித்தது. இதற்குக் காரணம் சனிக்கோளின்  நீலநிறக் கதிவீச்சுகள் நேரடியாகப் பாய்வதே என நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் தங்களது கோவில்களில் அறிவியலையும் புகுத்தியுள்ளார்கள். 

    இதேபோல் திருவண்ணாமலை ஏரிக்குப்பம் பகுதியில் சனீஸ்வரர் கோவில் உள்ளது. அக்கோயில் ஆயிரம் ஆண்டுப் பழைமையானது. அதில் லிங்க வடிவில் சனீஸ்வரர் சிலை உள்ளது. அந்தச் சிலையில் அறுங்கோணக் குறியீடு உள்ளது. தற்போது 2004 –இல் நாசாவால் அனுப்பப்பட்ட ‘கேசினி’ செயற்கைக்கோள் சனிக்கோளின் பார்க்கப்படாத பக்கத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்பியது. அதில் ஆச்சரியம் என்னவெனில் அந்த அறுங்கோணக் குறியீடு அப்படத்திலும் காணப்படுகிறது. அது மேகம் போன்ற தோற்றத்தில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. 

     எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத காலத்தில் அறிவியலையும் கோவில் வழிபாட்டோடு இணைத்த நம் முன்னோர்களின் வானியல் அறிவைக்கண்டு வியப்போம்”.

பாட இறுதியில் கீழ்க்கண்ட வினா ஒன்றும் இடம்பெறுகிறது. 

(அ) ஒன்பது கோள்களைப் பற்றி எழுதுக.           ‘YOUTURN’ இணைய காணொளித் தளத்தினர் பாடத்தை எழுதிய  செல்வி கோ.ஜீவிதாவிடம் தொடர்புகொண்டு பேசிய ஆடியோவின் பின்னணியில்  நூல் பக்கங்கள் காண்பிக்கப்படுகிறது. இவர்கள் ‘நாசா’ வை மட்டும் தவறு எனவும் அதைத் திருத்தம் செய்திடுவது எப்போது எனவும் வினவப்படுகிறது. 

    திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களின் பதிவில் திருநள்ளாறு கோயிலில் ‘நாசா’ செயற்கைக்கோள் செயலிழந்தது மற்றும் திருவண்ணாமலை சனி கோயில் அறுங்கோணக் குறியீடு பற்றியும் குறிப்பிட்டு பள்ளிக்கல்வித் துறையிடம் முறையிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். 

    சென்ற ஆண்டு திருப்பூர் ஜெயந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி விழாவில் முதன்மைக்கல்வி அலுவலர் திருநள்ளாறு கதையைக் கூறியதையும் அதே மேடையிலிருந்த முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ‘இஸ்ரோ’ சார்பாக 51 செயற்கைக்கொள்கள் மூலம் சோதனை செய்து இது உண்மையில்லை என்று அறிந்ததை தெரிவித்த தகவலை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த திரு ஆ.ஈசுவரன் வாட்ஸ் அப்பில் தெரிவித்திருந்தார். 

     இதேபோன்ற அநுபவம் எனக்கும் உண்டு. திருவாரூர் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றக்கூட்டத்தில் ‘அப்துல்கலாமின் வாரிசு’ எனப்புகழப்பட்ட மின்வேதியியலாளர் காந்திலெனின் என்பவர் ‘சிதம்பர ரகசியம்’ குறித்த அறிவியல் உண்மைகளை விண்டுரைத்தார். புவியின் ஈர்ப்பு சக்தி முழுமையும் குவிந்திருக்கும் சிதம்பரம் கோயில், நடராஜர் சிலை என்பதாக இவரது பேச்சுகள் இருந்தன. மேலும் மின்சாரத்தைக் கண்டறிந்தவர் அகத்தியர் என்றார்! ‘தொன்மையைத் தேடி… ‘ எனும் அக்கட்டுரை ‘கல்வி அறம்’ நூலில் உள்ளது. 

     இவர்கள் வாழும் உலகின் இருப்பது நமக்கு  பெருமை! இன்னும் எவ்வளவோ அறிவியல் தகவல்கள் உள்ளன! முடிந்தால் அதையும் இணைக்கலாம்! ‘சிதம்பர ரகசியம்’ போன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கொள்ளிக்காடு சனிபகவான் ரேடாரில் மறையக்கூடிய வலிமை பெற்றவர்! இது நமது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியும்! மோடிக்கு மட்டுமல்ல, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க பலருக்கும் இது தெரியும்! அடல் பிகாரி வாஜ்பேயி காலத்தில் இந்தியா கொடுத்த ராடாரிலிருந்து இந்த உண்மை அவர்களுக்குத் தெரிய வந்திருக்கலாம், அதனால் அவர்கள் இங்கு வருகிறாகள், என்று சொன்னாலும் நம்புவதற்கு நாட்டில் பலருண்டு. 

       மயில்சாமி அண்ணாதுரை ‘சன் டிவி’ நேர்காணலில் இந்த வதந்தி உண்மையில்லை என்று சொல்லும் காணொளியும் இணையத்தில் கிடைக்கிறது. இம்மாதிரிப் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘இஸ்ரோ’ நிறுவனம் ஏதேனும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டதாகத் தெரியவில்லை. இது மட்டுமல்ல; இதைபோன்று ஆயிரக்கணக்கான மூடநம்பிக்கைகள் கல்விப்புலத்திலும் படித்தவர்கள் மத்தியிலும் உண்டு. அறிவியல் மனப்பான்மையை வளர்க்காத கல்வி முறை இதற்கு முழுமுதற்காரணமாகும்.      ஆதம் பாலம் (ராமர் பாலம்), லெமூரியாக் கண்டம் போன்ற பலவற்றில் ‘நாசா’வைத் துணைக்கழைத்து புனைவுகள் உற்பத்தி செய்யப்பட்டு உலவவிடப்பட்டது. ஆதம் பாலம் வதந்திக்கு ‘நாசா’வே விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்தது. 

       இம்மாதிரியான வதந்திகள், புனைவுகள், மூடநம்பிக்கைகள் பாடநூல்கள், பொதுத்தளங்கள், ஊடகங்கள் என எவற்றில் உலவினாலும் பொறுப்பான அறிவியல் நிறுவனங்கள் உரிய விளக்கமளித்து அறிவியல் மனப்பான்மையை  வளர்க்க முயற்சிக்க வேண்டும்.

     சிந்துவெளி முத்திரைகளை கிராபிக்ஸ் செய்து வி.எஸ். ராஜாராம் என்ற NRI ஆய்வாளர் குதிரையாக்கியபோது இந்திய ஆய்வாளர்கள் கள்ள மவுனம் காத்தனர். ஹார்வார்ட் பல்கலைக்கழக சமஸ்கிருத அறிஞர் மிஷேல் விட்ஷல், இந்தியவியல் அறிஞர் ஸ்டீவ் ஃபார்மர் ஆகியோர் உடனடியாக எதிர்வினையாற்றினர். இந்த நேர்மையை ‘நம்ம’ ஆட்களிடம் காண முடியுமா? மேலும் திருப்பதிக்கும் ‘இஸ்ரோ’ வுக்கும்   நெருங்கிய தொடர்புண்டே! இந்திய செயற்கைக்கொள் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுப்பவர் பெருமாள்தானே! இவர்களிடம் அத்தகைய நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியுமா?  

      இவர்களே திருப்பதி, பழனி, திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, ஆலங்குடி, திங்களூர், சூரியனார்கோயில் என்று அலையும்போது நாடு எப்படியிருக்கும்?  சூரிய, சந்திர மறைப்புகள் போன்ற பல்வேறு வானியல் நிகழ்வுகள் குறித்துப் பரப்புரை செய்யும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்றவற்றின் பணிகள் இன்னும் கூடுதலாகத் தேவைப்படுகின்றன. இவற்றை கல்வி, முற்போக்கு, சமூக நல இயக்கங்களும் அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும்.

      ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை (plastic surgery), உயிரணுச் செல் (stem cell), விமானம் எதுவானாலும் புரானத்திலிருப்பதாகச் சொல்ல இந்துத்துவ ஆள்களும் போலி விஞ்ஞானிகளும் உலாவரும் காலமிது. இந்திய அறிவியல் அமைப்புகள் இவர்களால் சிரழிக்கப்படுகின்றன. இன்று ஆளும் அதிகார வர்க்கம் இதற்கு பேருதவி புரிகிறது. 

   இவற்றில் திருத்தம் கோருவது மிகவும் அபத்தம். ஏனெனில் இவற்றில் உள்ள முழுமையும் அறிவியலுக்குப் புறம்பான புராண அபத்தக் குப்பைகள். இவற்றில் எதைத் திருத்துவீர்கள்? திருநள்ளாறு, திருவண்ணாமலை ஆகியவற்றை நீக்கிவிட்டால் போதுமா? இப்பாடத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லும் உண்மைக்கும் அறிவியலுக்கும் மாறானவை. எஞ்சிய பாடங்கள் சிறப்பானவை என்று சொல்லமுடியுமா? இம்மாதிரியான தனியார் பாடநூல்கள் எனும் குப்பைகள் கல்விப்புலத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். 

        ‘தர்ப்பாராண்யேஸ்வரர், ஈஸ்வரர், சனீஸ்வரர், நளமகராஜா’ ஆகியவற்றை முறையே  ‘தர்ப்பாராண்யேசுவரர், ஈசுவரர், சனீசுவரர், நளமகராசா’  என்று கிரந்த எழுத்துகளை மாற்றினால் போதும். ‘நவக்கிரகங்கள்’ தமிழ்ச் சொல் இல்லையென்பதால் ‘ஒன்பது கோள்கள்’ என்று சொல்லலாம்; ‘ஸ்தம்பித்தது’ என்பதை ‘தடைபட்டது’ எனலாம் என்கிற ரீதியில் திருத்தங்கள் சொல்வாரும் உண்டு. தமிழ்ப் பாடநூலில் பிறமொழிச் சொற்கள் இருக்கலாமா?  என்கிற கண்ணோட்டத்தில் திருப்தி அடைவோர் உள்ளனர். 

    இம்மாதிரியான போலிப் பாடநூல்கள் தனியார் பள்ளிகள் பயன்படுத்தக் காரணம் என்ன? சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக சமச்சீர் கல்வித்திட்டம் (இது உண்மையான சமச்சீர் கல்வி அல்ல; ஒர் அடையாளமே.) அறிமுகமானபோது இனி ஒரே பாடநூல்கள், சீருடைகள், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயர்நீக்கம் போன்ற பலவற்றைச் சொன்னார்கள். தேர்தல் வந்துவிட்டதால் அவசரகோலத்தில் அமலாக்கினார்கள். அடுத்துவந்த ஜெயலலிதா அரசு சமச்சீர் கல்வியை நிறுத்தியது. உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி புதிய பாடத்திட்டம் அமலாக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா அரசு வெளியிட்ட ஆணைகள் சமச்சீர்கல்வியை நீர்த்துப்போகச் செய்தன. பலதரப்பட்ட தனியார் பாடநூல்களுக்கு அங்கீகாரமளித்த அரசாணையும் இதிலொன்று. அரசியல்வாதிகள் யாரும் உண்மையான சமச்சீர் கல்விக்கு ஆதரவாக இல்லையென்பதை இச்செயல்கள் உணர்த்தும்.

     அரசின் செயல்வழிக் கற்றல் நடைமுறை தொடக்கத்தில் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பைப் பெறவில்லை. வெறும் அட்டைகளைப் படிக்க எங்களது குழந்தைகள் கிளிப்பிள்ளைகளா என்று கேட்டு பலர் அரசுப்பள்ளியிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை மாற்றினர். அரசின் திட்டங்கள் சரியாக இருந்தாலும்கூட அதை அமலாக்கும் விதம், கல்வி அலுவலர்களின் செயல்பாடுகள்  ஆகியவை 

     இருப்பினும் தற்போது தனியார் சுயநிதிப்பள்ளிகளுக்கு அரசு தன்னுடைய பாடத்திட்ட நூல்களைக் கட்டாயமாகத் திணிக்கிறது. பெரும்பாலான பள்ளிகள் குழந்தைகளிடம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களைவிட அதிகளவு பணம் பெற்றுக்கொண்டு இதனுடன் கூடவே தனியார் பாடநூல்களை (X’SEED, MADHUBUN) குழந்தைகளின் முதுகில் சுமக்க வைக்கின்றன. சில தனியார் பள்ளிகள் மட்டுமே தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன. 

    1 முதல் எட்டு வகுப்புகளுக்கு இந்த இரட்டைச்சுமை குழந்தைகள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை என்பதை பல நேரங்களில் சுட்டிக்காட்டியுள்ளோம். 9 ஆம் வகுப்பிற்கு இந்த இரட்டைச்சுமை இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 9 ஆம் வகுப்பிற்கு எத்தனை பருவங்கள் அல்லது பெரிய பாடநூல்கள் இருந்தாலென்ன? அவர்கள் 10 ஆம் வகுப்புப் பாடங்களைத்தானே படிக்கப்போகிறார்கள்? இதையெல்லாம் கண்காணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை; 100 க்கு 100 தேர்ச்சி இலக்கில் அரசுப்பள்ளிகளும் இந்தப் புதைகுழிக்குள் விழுகின்றன.  

      அதிகம் படிப்பது அறிவு என்கிற பொதுப்புத்தி பெற்றோர்களை ஆட்டுவிக்கிறது. கல்வியாளர்களுக்கு இது குறித்த தெளிவான பார்வைகளில்லை. அரசின் பாடநூல்கள் குழந்தைகளுக்கு கூடுதல் சுமைதானே தவிர அவை கற்பிக்கப்படுவதோ, அவற்றில் தேர்வுகள் நடத்துவதோ இல்லை. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு முகவர்கள் போல் செயலாற்றுகிறது. தனியார் பள்ளி ‘லாபி’யைத் தாண்டி எதுவும் கல்விக்குள் நுழையமுடியாது. (எ.கா. +1 மதிபெண்கள் மேற்படிப்பிற்குத் தேவையில்லை, 9 ஆம் வகுப்பிற்கு முப்பருவமுறை நீக்கம்)

    தமிழ்நாடு பாடத்திட்டம், கேந்திரிய வித்யாலயா, CBSE, ICSE ஆகியவற்றைத் தவிர பிற தனியார் பாடத்திட்ட நூல்களுக்கு எவ்வாறு அங்கீகாரமளிக்கப்படுகிறது.  அவைப் பிழையின்றிச் சரியாக உள்ளதா NCF 2005 போன்ற அரசின் கல்விக்கொள்கைகளுக்கு உட்பட்டிருக்கிறது என்று யாராவது ஆய்வு செய்திருக்கிறார்களா? நாட்டில் கல்வியமைப்புகள் என்ன செய்துகொண்டுள்ளன?  எவ்வித ஆய்வுகளும் இல்லாமல் எப்படி அனுமதிக்கப்படுகிறது? 

       இதைப்போல அரசு தனது பாடநூல்களைத் தனியாரிடம் விற்றுவிட்டால் போதுமா? அவை அங்கு நடைமுறையில் உள்ளதா என்பதைக் கல்வித்துறை ஏன் கண்காணிப்பதில்லை? 10 மற்றும் +2 வகுப்புகளில் 100 க்கு 100 தேர்ச்சி போதும் வேறு எதுவும் தேவையில்லை என்கிற நிலைப்பாடு கல்வியை வணிகச் சரக்காக்கி, 9 மற்றும் +1 மாணவர்களை தேர்ச்சிபெற இயலாதவர்கள் என பள்ளியைவிட்டுத் துரத்தும் செயல்கள் அரங்கேறுகின்றன. 

    பாடத்திட்ட மாற்றங்கள் படிப்படியாக மூன்று நான்காண்டுகளில் நடைபெறுவதுதான் நல்லது. அடுத்த ஆண்டில் அமலாகும் புதிய பாடங்களும் அவசரக்கோலத்தில் இவ்வாண்டே நடைமுறைக்கு வருகின்றன. இதனாலும் பாடநூல்கள் தரமின்றிப் பிழையாக உள்ளன. இவற்றின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போக்கு மிகக்குறைவு. அச்சில் வந்துவிட்டாலே இங்கு அது வேதமாகிவிடுகிறது. சுட்டிக்காட்டப்ப்படும் பாடநூல் பிழைகளை ஏற்றுத் திருத்தும் மனநிலை பாடம் எழுதும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், SCERT, கல்வித்துறையினர் என எவருக்கும் இல்லை. நாங்கள் பாடுபட்டு உழைத்த உழைப்பை எப்படி பிழை என்று சொல்லலாம் என்ற மனப்போக்கு இருப்பது நல்லதல்ல. கொலைகாரனின் செயல்கூட உழைப்புதான்! அதற்காகக் குற்றமில்லை எனலாமா? 

    மாவட்டந்தோறும் பாடநூல் பிழைகளைத் திருத்த பணிமனைகள் நடத்தப்பட்டதாக அறிகிறோம். இதுவும் ஆசிரியர்களுக்கு அளிக்கும் பயிற்சி போன்ற ஒரு சடங்குதான்.  சிலர் கடினமுயற்சி செய்து திருத்தங்களை கோரினாலும் அவை ஏற்கப்படுமா என்பது அய்யமே. அரசுப்பள்ளிப் பாடநூல்களிலும் பல்வேறு மூடநம்பிக்கைச் சிந்தனைகள் உண்டு. (எ.கா. மநுநீதிச்சோழன், குடவோலை முறை மக்களாட்சி) அவற்றையும் உடனடியாகக் களையவேண்டும். இதற்காக வரும் ஆண்டு வரை காத்திருக்கத் தேவையில்லை. ஒரு சுற்றறிக்கை மூலமாகவே இதைச் செய்யமுடியும். 

     தனியார் பள்ளிகளில் படிக்கும் பெற்றோர்கள் பெரும்பாலும் ஓரளவு படித்தவர்கள். பணம் செலவளித்தால் அது தரமானது என்று கருதும் இவர்கள், ஓய்வு நேரத்தில் தங்களது குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என அறிந்துகொள்வது நல்லது. அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் முரட்டுத்தனமாகவும் குற்றச்செயலில் ஈடுபடுவராகவும் இருப்பர், என ஒரு தனியார் பாடநூல் சொன்னதல்லவா! தங்களது குழந்தைகள் என்ன படிக்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. இவற்றில் அரசை நம்பிப் பலனில்லை. கண்காணிப்பு பல தளங்களில் நிகழவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக