சனி, மே 18, 2019

அறிவியல் பாடநூல்களாவது சார்புத் தன்மையற்று, நடுநிலையுடன் இருக்க வேண்டாமா?


அறிவியல் பாடநூல்களாவது சார்புத் தன்மையற்று, நடுநிலையுடன் இருக்க வேண்டாமா?

 (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 12)
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           
மு.சிவகுருநாதன்


(ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)      ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவ அறிவியல் பாடநூலில் இயற்பியல் 3, வேதியியல் 2, உயிரியல் 3, கணினி அறிவியல் 1 என 9 பாடங்கள் உள்ளன. 

    “இதுவரை உருவாக்கப்பட்ட முக்கியமான இயந்திரங்களுள் ஒன்றான நீரியல் அழுத்தியின் அடிப்படையாக பாஸ்கல் அமைந்துள்ளது”, (பக். 13) மேற்கண்ட வரிகள் இந்தி தமிழாக்கத் தொடர்களை நினைவுபடுத்துகிறது. ஏன் இப்படிச் சுற்று வளைக்க வேண்டும்? 

   “நீரியல் அழுத்தி பாஸ்கல் விதியின் அடிப்படையில் இயங்குகிறது”, நேரடியாகச் சொன்னால் ஆகாதா? 

    ஒரே பக்கத்தில் ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கந்தக டை ஆக்சைடு, ஜெட் விமானம், நாதஸ்வரம் ஆகிய சொற்களில் இருக்கும் கிரந்த எழுத்துகளை அனுமதிக்கும் (பக். 32&33) பாடநூல் குழுவினர் ‘ஷெனாய்’ என்பதை மட்டும் ஏற்காமல்  ‘செனாய்’ என்று எழுதுவதன் காரணமென்ன? கந்தக டை ஆக்சைடு கந்த டை ஆக்சைடு ஆக சுருங்கியுள்ளது.  

    ரப்பர் (பக். 12) என்று சரியாகவும் இரப்பர் (பக். 33) இல் தவறாகவும் எழுதுவது தொடர்கிறது. இதைச் சரிசெய்ய யாரிடம் இரப்பது என்று தெரியவில்லை. 

  எண்ணெய்ப் பறவைகள் (பக்.36) பற்றி  முன்பே மாணவர்களுக்கு ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா? சில பறவைகள் வாலுக்கு அருகிலுள்ள எண்ணைய்ச் சுரப்பியிலிருந்து அங்கு சுரக்கும் எண்ணையை தன் அலகால் எடுத்துச் சிறகுகளைக் கோதிக் கொள்கின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை சிறகுகளை உதிர்த்து விடுவதும் உண்டு. இவற்றைத்தான் அவ்வாறு சொல்கிறார்கள் எனலாமா? 

   பிஸ்டன், சிரிஞ்ச், தெரபி (பக்.21) ஒலிபெயர்த்து எழுதுவதைத் தவிர்த்து அப்படியே ஆங்கிலத்தில் எழுதுவது குறித்து யோசிக்கலாம். சமூக அறிவியலில் உள்ளது போன்று ஆங்கிலச் சொல்லையும் வழங்கலாமே! 

   Hydraulic system போன்ற நீரியல் அமைப்புகளை, சொல்லடைவில் ‘நீர் புவியியல் அமைப்பு’ (நீர்மம் அல்லது வாயுக்களைப் பயன்படுத்தி வால்வுகளை இயக்கும் அமைப்பு) என்று விளக்கம் சொல்லப்படுகிறது. இதுப் பொருத்தமானதா? ‘புதைபடிவ நீர்’ ‘பாதுகாக்கப்பட்ட நீர்’ என்பதைவிட பாறைகளுக்கிடையே தேங்கிய நீர் என்பதே பொருத்தம். நீரில் மிதக்கக்கூடிய பெரிய பனிக்கட்டி பனிப்பாறையல்ல. இதை செயற்கையாகக் கூட உருவாக்க முடியுமே! பனியாற்றில் நகரும், மிதக்கும் பாறை எனலாமா? 

  விண்வெளி ஆய்வுகள் பற்றி நிறைய சொல்லப்படுகிறது. இதனால் விண்வெளி குப்பையாக்கப்படுதல் பற்றியும் பேசியாக வேண்டும். கடலில் கொட்டப்படும் குப்பைகளைப் பற்றிப் பேசும்போது விண்வெளிக் குப்பைகளையும் பேசியாக வேண்டுந்தானே! செயற்கைக்கோள்கள், விண்வெளி ஆய்வுகள் குறித்து பெருமைகளை மட்டும் பட்டியலிடாமல் இதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள், விண்வெளிக் குப்பைகள் பற்றியும் எடுத்துக்காட்டி சார்புத் தன்மையற்றுப் பாடநூல்கள் நடுநிலையுடன் இருப்பது அவசியம். பல இடங்களில் நன்மைகள், தீமைகள் இரண்டையும் எடுத்துக்காட்டும் நடுநிலை வழுவிப் பாடநூல் சார்புத் தன்மைகளோடு இயங்குகிறது. இது மிகவும் அபாயகரமான போக்கு. (எ.கா.) விண்வெளி  ஆய்வுகள், அணு சக்தி, கதிரியக்கம். 

   வைரம், கிராஃபைட் வேறுபாட்டில் (பக்.74) கிராஃபைட் வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது என்று குறிப்பிட்டுள்ளனர். கிராஃபைட் வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும். மூன்றாம் பருவம் முடிந்துவிட்டது. இது குறித்து கூட நமது ஆசிரியப் பெருந்தகைகளிடம் சிறு சலனம் கூட இல்லை. பொதுத்தேர்வு நடக்கும் வகுப்புகளை மட்டும் கவனிப்பதே கல்விப் பணியாகிவிட்டது போலும்!

       உழவன் (விவசாயி) (பக்.147) என்று விளக்கமளிப்பது ரொம்பவும் அபத்தம். விளக்கம் தேவைப்படும் இடத்தில் அளிக்காமல் இவ்வாறு செய்வது பக்கத்தை மட்டுமே கூட்டும். 

    ஹார்டிகல்சர், ஹைட்ரோபோனிக்ஸ், ஏரோபோனிக்ஸ், அக்வா போனிக்ஸ், பிசிகல்ச்சர் என்று அடைப்புக்குறிக்குள் ஒலிப்பெயர்ப்புச் செய்வதை கொஞ்சம் நிறுத்திவிட்டு ஆங்கிலத்தில் போட முயற்சி செய்யவேண்டும். H5N1 வைரசை அடைப்புக்குறிக்குள் எச்5 எண்1 என ஒலிபெயர்க்கும் அபாயம் தொடர்கிறது. 

     தடயவியல் வேதியியல் (பக்.116) ஏன்? தடய நச்சுயிரியல் (பக்.118) என்று எழுதும்போது தடய வேதியியல் எனச் சொல்வதில் என்ன சிக்கல்?

   நெகிழித் தடையின் அரசாணை எண் (பக்.85)  எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. இவை ‘குட்கா’ போல் எங்கும் அதிக விலைக்கு கிடைக்கின்றனவே! 

   தெர்மாகோல் (பக்.88) தெர்மிகோலாகிறது. வேதி மருத்துவம் (பக்.97) வேதி மருந்தும் எனவும் கதிரியக்க வேதியியல் கதிரிக்க, கரிதியக்க (பக்.107) என பல பரிமாணங்களைப் பெறுகிறது. கதிரியக்க என்றால் அதன் நன்மை, தீமையென இரு பக்கங்களையும் எடுத்துரைப்பதுதானே முறை. ஆனால் நமது பாடநூல்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையில் செவ்வனே ஈடுபடுகின்றன. அணு சக்தித்துறை, அணுமின் கழகம் கூட சில உண்மைகளைச் சொல்லிவிடும். நமது பாடநூல்கள் மவுனமாக ஒரு சார்பை மட்டும் பிடித்துத் தொங்கும். 

    இரசாயண உரங்கள் (பக்.113) என்று நீட்டுவதற்குப் பதிலாக (‘ன’,‘ண’ குழப்பமும் வேண்டாம்!) வேதியுரங்கள் என்று எழுதிவிட்டால் போதுமல்லவா!

    ஹென்னா (பக்.110) ‘மறுதோன்றி’ என்றெல்லாம் சொல்வது இருக்கட்டும். ‘மருதாணி’ என்றால் பாடநூல் தரத்தில் குறைந்துவிடுமோ? அலோ விரா என்றே சொல்லிக்கொடுங்கள். அறிவியல் பாடத்தில் கடல்கள் என்று எழுதினால் என்ன? ஆழிகள் (கடல்) என்று விளக்கமளிப்பது (பக்.129) தேவையா? பன்மைக்கு ஒருமை விளக்கம்! பயன்படுத்துதல்   (நுகர்வு செய்தல்) (பக்.131) என்று தெளிவுரை, பதவுரை எழுதிக்கொண்டே போனால் புத்தகம் தாங்காது. 

    ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை சாமுவேல் ஹன்மேன் என்று உள்ளது. (பக்.151) Samuel Hahnemann? சாமுவேல் ஹனிமன்?  

    பூச்சிக் கொல்லி தெளிக்கும் ஒருவரது படம் எவ்வித பாதுகாப்பு உபகரணமின்றி உள்ளது. (பக்.112)

      “போதுமான ஊட்டச்சத்துள்ள உணவை நிலையான வழியில் மக்களுக்கு வழங்கி நமது சுற்றுச்சூழல் மற்றும் சூழ்நிலை மண்டலத்தை பொறுப்புடன் காப்பதே இதன் நோக்கமாகும்”, (பக்.112) என்று வேளாண் வேதியியலில் நோக்கம் விளக்கப்படுகிறது. இன்று வேளாண்மையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்கள் இதற்கு எதிராக இருக்கின்றன என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

     இயற்கை உணவுப் பதப்படுத்திகளில் ஒன்றாக வினிகரும் (vinegar) சொல்லப்படுகிறது. (பக்.115) ‘காடி’ எனப்படும் இயற்கை வினிகரை விட செயற்கை முறைகளால் தயாரிக்கபட்ட வினிகரே இன்று சந்தையை ஆக்ரமித்துள்ளது. 

     பயிற்சிகளில் “ஆஸ்பிரின் ஒரு ----------------------- ஆகும்”, (பக்.120) என்று ஒரு வினா கேட்கப்படுகிறது. ‘வலி நிவாரணி’ எனும் பதிலை எதிர்பார்க்கின்றனர் போலும்! மருந்து, மாத்திரை, வேதிப்பொருள் எனப் பல்வேறு பதில்கள் வரக்கூடும். வினா எப்படி அமையக்கூடாது என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு. 

    “சாம்பல் நீரை பாசனத்திற்குப் பயன்படுத்தும்போது, தாவரங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, நச்சுத்தன்மையற்ற மற்றும் சோடியம் அளவு குறைந்த சோப்பு நீரைப் பயன்படுத்த வேண்டும்”, (பக்.137) குளியல்சோப்பு பயன்படுத்தப்பட்ட நீரை மட்டுமே தாவரங்களுக்குப் பயன்படுத்த முடியும். சலவை சோப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லை. அதற்கு மாறாக பெட்ரோலியத்திலிருந்து தயாரிக்கப்படும் தொகுப்புத் தூய்மையாக்கிகள் பயன்படுத்தப்பட்ட நீரை தாவரங்களுக்குப் பயன்படுத்த இயலாது. 

   ஆகாயத்தாமரைப் பெருக்கம் (மிகையூட்ட வளமுறுதல்) நன்மைகள், தீமைகள் இரண்டும் சொல்லப்படுகின்றன. ஆனால் பிற இடங்களில்?  மெத்தை, தலையணைகள் மட்டுமே அறைக்கலன்களா?  (பக்.130)

     ‘ராபிட் நாய்’ (பக்.207) ராபீஸ் நோய்த்தொற்றிய நாய் “இவர் காலாரா, ஆந்த்ராக்ஸ் மற்றும் பிற நோய்களுக்கு மருந்தை உருவாக்கினார்”, (பக்.207). அது என்ன பிற நோய்கள்? காலாரா என்று நீட்டவும் வேண்டாம்.

    நெல் வைக்கோல் (பக்.170) எல்லாத் தானியங்களிலும் வைக்கோல் உண்டல்லவா! ‘அரிசி உமி’யை தவிடு என்பர். தொழு உரம் போதாதா? ‘தொழுபண்ணை உரம்’தான் வேண்டுமா? (பக்.149)

     Nocturnal என்பதை ‘இரவில் இயங்கும்’ எந்திரம் போலக் கருதக்கூடாது. இரவு நேரப்பழக்கம் (பக்.132) போன்றவற்றிற்கும் புதிய சொற்களை கணக்கில் கொள்ளவேண்டும். ‘இரவாடிகள்’ எனுஞ்சொல் பயன்பாட்டில் உள்ளது. (பக். 225)  

   திலேப்பியா என்கிற மீன் வகையே சிலேபி மீன்கள் (பக்.161) எனப்படுகிறது. இது சூழலுக்குக் கேடு என்றும் சொல்கின்றனர். (பக்.164 இல் ஜிலேப்பி) 

     மீன், இறால் வளர்ப்பு பற்றி மிக விரிவாக விளக்கப்படுகிறது. ஆனால் இதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள், விளைநிலங்கள் பாழாதல் ஆகியன பற்றிப் பாடநூல்கள் கள்ள மவுனம் காப்பது ஏன்? இதைப்போல இறைச்சி, பால் உற்பத்திக்கு வீரிய ரகங்களை வளர்ப்பது, அவற்றை உண்பது மனிதக்கு உண்டாகும் நோய்கள், சூழலியல் பாதிப்பையும்  கணக்கில் கொள்வதில்லை. 

     உயிரிகள் பயன்பாட்டில் வந்துவிட்ட பிறகு ஏன் இத்தனை ஜீவிகள்? (அயல் ஜீவிகள் சுய ஜீவிகள் தன் ஜீவிகள்)

     Therapy சிகிச்சை (பக்.226) எனில் chemotherapy  வேதியச் சிகிச்சை (பக்.227) ‘முறை’ தேவையில்லைதானே! 

     Resin code ரெசின் (பிசின்) குறியீடு எனச் சொல்வதைவிட்டு ‘கோடு’ (code) ஏன்? 

     தேனீ வளர்பியல் (Apiculture), செயற்கை மீன் வளர்பியல் (pisciculture), நீர் உயிர் வளர்பியல் (Aquaculture) போன்றவற்றை ‘வளர்ப்பியல்’ எனக் கொள்க. 

    Vaccination க்கு வழக்கொழிந்த அம்மைக் குத்துதல் வேண்டாமே!

    Mulible bonds பலபிணைப்பாக இருக்கட்டும், பலப்பிணைப்பாக (சில இடங்களில் பலமற்றதாகக் கூட இருக்கலாமே!) வேண்டாம்! Polymer ஐ பலபடி என்றுதானே சொல்வோம். 

   ஒவ்வொரு பாட இறுதியிலும், பாடநூல் முடிவிலும் சொல்லடைவு கொடுக்கப் பட்டுள்ளது. இவற்றில் நிறையக் குளறுபடிகள்.

   Tetravalency ஐ நான்கு இணைத்திறன் (பக்.226) என்று அழுத்த வேண்டுமா என்ன?  கடத்தி முகவாண்மைகள் (பக்.225) என இருக்க வேண்டும். 

    “இந்த நோயானது (மலேரியா) பத்து நாள்களுக்குக் குறைவாக மட்டுமே வாழக்கூடிய, மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் பெண் கொசுவாகிய அனோபிலெஸ் கொசுவால் கடத்தப்படுகிறது”, (பக்.197) இப்படி அறிவியல் பாடம் எழுத நிறைய துணிச்சல் வேண்டும்! மனிதனைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும் அனோபிலெஸ் பெண் கொசுக்கள் வாழ்நாள் ஒரு மாதமாகும். சமீபத்திய ஆய்வுகள் ஏடிஸ் கொசுக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன. 

      “விரிவடைந்த பாலிஸ்டைரினின் வணிகவியல் பெயர் ------------“, (பக்.88) (தெர்மாகோல் ஆஸ்பெட்டாஸ் கூரைகளின் வெப்பத்தைக் குறைக்கவும் தாழ்கூரையாகவும் பயன்படும் இவை ஆஸ்பெட்டாஸ் போலவே புற்றுநோயை உண்டு பண்ணும். 

மருந்தின் சிறப்பியல்புகள் (பக்.96)


  • அது நச்சுத்தன்மை உள்ளதாக இருக்கக்கூடாது.
  • அது எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடாது.
  • அது உட்கொள்பவரின் திசுக்களைப் பாதிக்கக்கூடாது.
  • அது சாதாரண உடலியல் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடாது.அதன் செயல்பாட்டில் அது தீவிரமாக இருத்தல் வேண்டும்.

  எல்லாம் படிக்க நல்லாத்தான் இருக்கு. இன்று அலோபதி மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் வேதி மருந்துகளில் பக்க விளைவுகள் இல்லையென்று வரையறுக்க முடியுமா? 

    தாவர மருந்துகளின் பட்டியலில் (பக்.152) ரவுல்பியா செர்பன்டினா (Rauvolfia serpenatina) என்ற மருந்துத் தாவரம் ‘சிவன் அவல் பொறி’, என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. சர்ப்பகந்தி எனப்படும் தாவரமே இது. மத அடையாளப் பெயரைத் தேடிப்பிடித்து அறிவியல் பாடம் எழுதுவோரின் அறிவியல் மனப்பான்மை எப்படி இருக்கும்? 

      நெகிழிகளின் ரெசின் குறியீடுகளை முதன்மை தந்து விளக்கியிருப்பது நன்று. செயல்பாடுகள், உங்களுக்குத் தெரியுமா?, மேலும் அறிந்து கொள்வோம், தகவல் துளிகள், அறிவியலறிஞரை அறிந்துகொள்வோம், போன்றவற்றை அதிக எண்ணிக்கையில் அளித்திருப்பது இப்பாடநூலின் சிறப்பாகும்.


(முற்றும்…)

(இனி 2019 – 2020 ஆம் கல்வியாண்டுக்கான இதரப் புதியப் பாடநூல்களின் விமர்சனங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக