வெள்ளி, ஆகஸ்ட் 02, 2019

அறிவியல் கருத்துகள் அந்தரத்தில் தொங்குவது ஏன்?


அறிவியல் கருத்துகள் அந்தரத்தில் தொங்குவது ஏன்?


 மு.சிவகுருநாதன்


  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 36)





        10 ஆம் வகுப்பு அறிவியல் பாடநூலில் அலகு 08, ‘தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு’ என்றொரு பாடம் உள்ளது. அதில் உலோகவியல் பேசப்படுகிறது. அப்பாடத்தில் கீழ்க்கண்ட சில உட்தலைப்புகள் உள்ளன. 

8.4  உலோகவியல்
8.4.1 உலோகவியலில் உள்ள கலைச் சொற்கள்.
8.4.2 தாதுக்களைப் பிரித்தெடுக்கும் முறைகள் அல்லது அடர்பிக்கும் முறைகள்

8.5 தமிழ்நாட்டில்  கிடைக்கும் தாதுக்கள்

8.6 உலோகத்தின் பண்புகள்
8.6.1 இயற்பண்புகள்
8.6.2 வேதியியல் பண்புகள்

8.7 அலுமினிய உலோகவியல்

8.8 தாமிரத்தின் உலோகவியல்

8.9 இரும்பின் உலோகவியல்

8.10 உலோகக்கலவைகள்
8.10.1 இரசக்கலவை
8.10.2 உலோகக்கலவைகளை உருவாக்கும் முறைகள்
8.10.3 உலோகக்கலவைகளின் வகைகள்

8.11 உலோக அரிமானம்
8.11.1 உலோக அரிமானத்தின் வகைகள்
(அ) உலர் அரிமானம் அல்லது வேதிமுறை அரிமானம்
(ஆ) ஈரநிலை அரிமானம் அல்லது மின்வேதியியல் நிலை அரிமானம்

8.11.2 அரிமானத்தைத் தடுக்கும் முறைகள்

1.உலோகக் கலவையாக்கல்

2.புறப்பரப்பைப் பூசுதல்
(அ) நாகமுலாம் பூசுதல்
(ஆ) மின்முலாம் பூசுதல்
(இ) ஆனோட்டாக்கல்
(ஈ) கேத்தோடு பாதுகாப்பு

8.12 பாம்பன் பாலம்

      “இராமேஸ்வரத்தின் பாம்பன் தீவையும்,  இந்தியாவின் பெரும் நிலப்பரப்பையும் இணைக்கும்  ரயில் பாலமே பாம்பன் பாலமாகும். 1914 ல்  இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் கடல்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு. 2010 ஆம் ஆண்டு  திறக்கப்பட்ட பந்த்ராவலி என்ற கடற்பாலம் நீளமானது.  இப்பாம்பன் பாலத்தில் ஏற்படும் உலோக அரிமானத்தை அறிவியலின் உதவியோடு,  அவ்வப்போது அளிக்கும் பராமரிப்பு பாதுகாப்பு பூச்சு  மூலம் தடுத்து, நம் வரலாற்றை நிலை நிறுத்தலாம்”. (பக்.117) என்று பாம்பன் பாலம் குறித்து பாடநூலில் உள்ளது.


    அரிமானத்தைத் தடுக்கும் முறைகள் முன்பகுதியில் சொல்லப்படுகின்றன. அதில் எதன் வாயிலாக பாம்பன் பாலம் பாதுகாக்கப்படுகிறது என்று சொல்லியிருக்க வேண்டும். பாம்பன் பாலம் ‘ஈரநிலை அரிமானம் அல்லது மின்வேதியியல் நிலை அரிமானம்’ எப்படித் தடுக்கப்படுகிறது என்ற விளக்கமின்றிப் பாடநூலில் ‘பாம்பன் பாலம்’ தனியே தொங்கிக்கொண்டுள்ளது. கடலுக்குள் எத்தகைய தொழில் நுட்பம் செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுவது அவசியமல்லவா!

    ‘வரலாற்றை நிலை நிறுத்துவது’ கிடக்கட்டும்! அறிவியலைச் செழுமைப்படுத்துவது, பாடக்கருத்துகளை உரிய வகைகளில் இணைப்பது முதன்மையானது. இங்கு வரலாறு, அறிவியல் என எதுவும் சரியாகச் சொல்லப்படவில்லை என்பதுதான் உண்மைநிலை. 


      பாந்திரா-வொர்லி கடற்பாலம்  (Bandra-Worli) பாந்திரா-வொர்லி துறைமுகத்தையும் மும்பை நாரிமன் முனையையும் இணைப்பது. எட்டுவழி கடற்பாலத்தின் நான்கு வழிகள் ஜூன் 30, 2009 லும் பிற நான்கு வழிகள் மார்ச் 24, 2010 லும்  திறக்கப்பட்டன. இதற்கு ராஜூவ்காந்தி கடற்பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்திற்கு இந்திரா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  
      அரிமானத்தைத் தடுக்கும் புறப்பரப்பைப் பூசுதல் முறைகளில் ஒன்றாக ‘ஆனோட்டாக்கல்’ என்று கூறப்பட்டுள்ளது. Anode + ஆக்கல் = ஆனோட்டாக்கல் என்று  இருமொழிப் (bi-lingual) பெயர்களை உருவாக்க வேண்டிய தேவையில்லை.  map + இயல் = மேப்பியல்; இதனடிப்படையில் மேப்பியலாளர்கள் என்று சென்ற பாடநூல் புவியியல் பகுதிகளில் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.

    ‘ஆனோட்டாக்கல்’ என்பதிற்குப் பதிலாக நேர்மின்வாயாக்கல் என்றோ ‘கேத்தோடு பாதுகாப்பு’ என்பதை எதிர்மின்வாய் பாதுகாப்பு என்றோ அல்லது வேறு நல்ல சொல்லாக்கங்களையோ நாடலாம். இனியாவது வரலாற்றுடன் கூடவே அறிவியலையும் நிலைநிறுத்த முயல்வோம்!


(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக