செவ்வாய், ஆகஸ்ட் 13, 2019

அரசியல் கட்சிகளைப் பற்றிப் புரிதலின்றி எழுதப்பட்ட பாடம்!


அரசியல் கட்சிகளைப் பற்றிப் புரிதலின்றி எழுதப்பட்ட பாடம்!

 மு.சிவகுருநாதன் 

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 38)   

    


     ஏழாம் வகுப்பு  சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் ‘அரசியல் கட்சிகள்’ என்ற பாடத்தில் சின்னங்கள், கட்சிகள் பற்றிய தவறுகளை முன்பு பார்த்தோம். (விமர்சனத் தோடர்: 29) அப்பாடம் பற்றிய இன்னும் சில குறிப்புகள்.

     அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் (Functions of the Political Parties) என்னும் தலைப்பில் விளக்கப்படமாக கொடுக்கப்பட்டவற்றை தமிழ் (பக்.229) மற்றும் ஆங்கில வழியில் உள்ளவற்றை இணைத்துக் காண்போம்.

வழங்குதல் (Provide)

 நேர்மையான எதிர்ப்பு, பொறுப்புடைமை, ஸ்தரத்தன்மை வழங்குதல் (loyal opposition , accountability & stability)

பரிந்துரைத்தல் (Nominate)

தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்திற்கு தனி நபரை பரிந்துரைத்தல் (Select and nominate individuals to elected office)

ஏற்பாடு செய்தல் (Organize)

அரசியல் பிரச்சாரம், பேரணி ஆகியவற்றை ஏற்பாடு செய்தல், தேர்தலில் வெற்றிபெற தேர்தல் அறிக்கை வெளியிடுதல்  (Organize political campaign, rallies and announcement of Manifesto to win  public office

ஊக்குவித்தல் (Inspire)

மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் முன்வைத்தல் (Put forward different  policies and programmes for the welfare of the people)

ஒருங்கிணைத்தல் (Co – ordinate)

சமுதாயத்தையும் அரசையும் இணைத்தல், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல் (Connect the society and the  state. co-ordinate among members elected to office)

ஆட்சி அமைத்தல் (Govern)

அரசாங்கத்தை ஏற்படுத்தி இயக்குதல், பொதுவான கொள்கைகளை உருவாக்குதல் (Form and run the government and  develop public policy)

     ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று ஆளும் கட்சியாகும்போது ஆட்சியமைத்து நிர்வாகத்தை நடத்துகிறது. பெரும்பான்மை பெறாமல் எதிர்க்கட்சியாகச் செயல்படும்போது மக்கள் நலன் சார்ந்து செயல்படுகிறது. இரண்டிலும் கட்சிகளுக்குப் பொறுப்புடைமை உண்டு. 

   தேர்தல்களில் தங்களது கட்சி சார்பாகப் போட்டியிடும் நபரை பரிந்துரைத்தல் என்று எளிமையாக சொல்லக்கூடாதா?   

     தேர்தல் அறிக்கை வெளியிடுவது அரசியல் கட்சிகளின் செயல்பாட்டில் ஒன்று. தேர்தல் அறிக்கை என்பது வெற்றிக்கான வழியல்ல; தேர்தலில் போட்டியிட தேர்தல் அறிக்கை வெளியிடுவது என்பதே சரி.

       ‘ஸ்தரத்தன்மை, பிரச்சாரம், ராஜினாமா, பிராந்தியம், அந்தஸ்து, அரசாங்கம்’ போன்ற சொற்களின் பயன்பாட்டைப் பார்க்கும்போது, இவற்றிற்கு முறையே, ‘நிலைத்தன்மை, பரப்புரை, பதவி விலகல், வட்டாரம், தகுதி, அரசு’ போன்ற சொற்களைப் பயன்பாட்டை அறியாத பாடமெழுதும், மொழிபெயர்க்கும்  இவர்கள் நாளிதழ்களை கூட (தினமணி, இந்து தமிழ் திசை) படிப்பதில்லை என்றே கருத வேண்டியுள்ளது. அவற்றில்கூட நல்ல சொற்கள் பயன்பாட்டிலுள்ளன.  

        ‘பெரும்பான்மைக் கட்சி’ (Majority Party) என்பதற்கு இவர்கள் அளிக்கும் விளக்கம் வியப்பாகவும் புரியாத புதிராகவும் உள்ளது. அதை கொஞ்சம் கவனிப்போம்.

      “தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை விட அதிக  எண்ணிக்கையில் தேர்வு பெற்று இருப்பின் அக்கட்சியானது பெரும்பான்மைக் கட்சி  என அழைக்கப்படுகிறது. பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்துகிறது. அக்கட்சி அரசு நிர்வாகத்தை நடத்த அமைச்சர்களை தேர்ந்தெடுத்து  நியமிக்கிறது. அது நாட்டிற்கு சட்டம்  இயற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது”.

    “The Political Party whose number of candidates  elected is more than the others is called the majority party. The Majority Party forms and runs the government. They select and appoint their ministers to run the government. They play a decisive role in making laws for the country”. (page:195)

     இது என்ன மாதிரியான விளக்கம் என்பது விளங்கவில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல் என்றால் மொத்த 234 சட்டமன்றத் தொகுதிகளில்  பாதியைவிட (50%) அதிக எண்ணிக்கையிலான (சுமார் 118 ச.ம.உறுப்பினர்கள்) பெற்ற கட்சியே பெரும்பான்மைக் கட்சியாகும். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எனில் 543 நாடாளுமன்றத்தொகுதிகளில் சுமார் 272 இல் வெற்றி பெறும் கட்சியே பெரும்பான்மைக் கட்சியாகும்.

   இவர்கள் சொல்கிறபடி பிற கட்சிகளைவிட அதிகம் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? தொங்கு நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் அமையும்போது இவ்வாறு நடக்கும். அப்போது அந்தக் கட்சி பெரும்பான்மைக் கட்சி எனச் சொல்வதில்லை.  அதிக இடங்களைப் பெற்ற தனிக்கட்சி (Single largest party)  என்றே சொல்வோம். இவை அரசமைக்க அழைக்கப் பட்டாலும் பிற கட்சிகளின் ஆதரவைப் பெற்றே தனது பெரும்பான்மையை நிருபிக்க முடியும்.

    ‘Minority Party’  என்பது பெரும்பான்மை பெறாத கட்சிகளைக் குறிக்கும். இவற்றை பாடநூல் ‘சிறிய கட்சி’ என்கிறது. இவற்றுள் ஆளும்கட்சிக்கு அடுத்த இடத்தில் வரும் கட்சி எதிர்க்கட்சிக்கான தகுதியைப் பெறும். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று சொல்வதை விடுத்து பெரிய கட்சி, சிறிய கட்சி என்றெல்லாம் சொல்வது அபத்தம்.

“சிறியக்கட்சி என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கையில் குறைவான எண்ணிக்கை கொண்ட கட்சி ஆகும்”. (பக்.232)

“Those with lesser number of elected candidates  are called the minority party”. (page:195)

   ‘எதிர்க்கட்சி’ (Opposition Party) என்பதை மட்டும் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

“தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட கட்சி எதிர்க்கட்சி என அழைக்கப்படுகிறது”. (பக்.232)

“The party which gets second largest number of seats next to the majority party in the 
election is called the Opposition party”. (page:196)

     “In 1950 India became a democratic country. A vibrant democracy needs a strong political party system. Party System is a modern phenomenon. In a democracy people are able to voice their opinions  on any subject”. (page:192)

     இப்பகுதியைத் தமிழாக்கும்போது, “Party System is a modern phenomenon”. என்பதை, “கட்சிமுறை என்பது நவீனகால தோன்றல் ஆகும்”, என மொழிபெயர்க்கின்றனர். இறுதியாக, ‘நினைவில் கொள்க’ பகுதியில்,


“நவீன காலம் என்பது பெரிய சமூகத்தையும் அதிக மக்கள் தொகையையும் கொண்டதாகும். கட்சி முறை என்பது நவீன காலத்தின் தோன்றல் ஆகும்”. (பக்.233)

“Modern age is an age of mass society and of large population and party system is a modern  phenomenon”. (page: 197)

  ‘phenomenon’ என்பதை ‘தோன்றல்’ என்பதைவிட நிகழ்வு, வடிவம் என்று சொல்லலாம்.

        தேசியக் கட்சிகளுக்கும்  பிராந்திய / மாநிலக் கட்சிகளுக்குமுள்ள வேறுபாடுகள் அட்டவணைப் படுத்தப்படுகின்றன. அதில்,

   “தேசியக் கட்சி என்பது இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சியாகும். தேசியக் கட்சி குறைந்த பட்சம் நான்கு மாநிலங்களில் வலிமை உடையதாக இருக்க வேண்டும். இது மாநில, தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களைத் தீர்த்து வைக்கிறது”. (பக்.233)


    “மாநிலக் கட்சிகள் என்பவை ஒரு மாநிலத்திற்குள் நடைபெறும் பல்வேறு  தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சியாகும். இது ஒன்று அல்லது இரண்டு  மாநிலங்களில் வலிமை கொண்டதாக  இருக்க வேண்டும். இது பிராந்திய மற்றும் மாநில  நலன்களை வலியுறுத்துகிறது”. (பக்.233)

      இந்தியா முழுவதும் போட்டியிடாமலேயே 4 மாநிலங்களில் வலிமையுடைய கட்சி தேசியக் கட்சியாக இருக்க முடியுந்தானே! மாநிலக் கட்சிகள் தான் உண்டே தவிர மண்டலக் கட்சிகள் (Regional Parties)  இல்லை தானே! ஆந்திராவில் இருக்கும் மாநிலக் கட்சிகள் பிரிக்கப்பட்ட தெலங்கனாவிலும் இருக்கின்றன. எனவே மாநிலக் கட்சிகளை மட்டும் சொன்னால் போதுமானது.
  
   மாநிலக் கட்சிகள் மாநில நலனை வலியுறுத்த (It promotes regional and state interest.) தேசியக் கட்சிகள் மட்டும்   “மாநில, தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களைத் தீர்த்து வைப்பது” எப்படி?  (It resolves State, National and International issues.) தேசியக் கட்சிகள் ஐ.நா. சபையானது எப்போது?

   “சுயேட்சை வேட்பாளர் என்பவர் எந்த கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நபர் ஆவார்”, (பக். 230) என விளக்கமளிக்கப்படுகிறது. இந்த இரண்டு தேர்தல்கள் தவிர்த்து பிற தேர்தல்களில் போட்டியிடும் கட்சி சாராத வேட்பாளர் எவ்வாறு அழைக்கப்படுவார்?  தேர்தல்களில் போட்டியிடும் கட்சி சாராதவர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் என்றழைக்கப்படுவர், என்று எளிமையாக ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குச் சொல்லக்கூடாது என உறுதி எடுத்துக்கொள்வது சரியா?

   

       முதல் பாடமான ‘சமத்துவத்தில்’ “பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு முயற்சிகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜா ராம்மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், தயானந்த சரஸ்வதி, மகாதேவ் கோவிந்த ரானடே, தாராபாய் ஷிண்டே, பேகம் ருகேயா சகாவத் உசேன் ஆகியோர் பெண்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு கடினமாக பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்”. (பக்.223) என்ற குறிப்பு வருகிறது. இதன் ஆங்கில வடிவம் கீழே.

          “Efforts were made by many social activists from the 19th century onwards. The noted champions of this cause were Raja Rammohan Roy, Ishwar chandra Vidyasagar Dayanand Saraswati, Mahadev Govind Ranade, Tarabai Shinde, Begum Rokeya Sakhawat Hussain. They worked  hard  to  get  equal  status  to the women.  Human dignity”. (page: 188)

     இப்படி ஒருதலைப் பட்சமாக பாடமெழுதுவது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தியாவில் சீர்திருத்தங்கள் வடக்கிலிருந்து தோன்றியவை என்பதும் மதச் சீர்திருத்தங்களை சமூகச் சீர்திருத்தங்களாகப் பாவனை செய்வதும் மிகவும் ஆபத்தானவை. மகாத்மா ஜோதிபா புலே, சாவித்திரிபா புலே போன்ற பெண் கல்விக்கான செயல்பாட்டாளர்கள் இல்லாமல் பெண்களுக்கு சம உரிமைகள் எப்படி வந்தது?

     வங்காளத்தில் சண்டாளர்கள் என்று இழிவு செய்யப்பட்டவர்கள் ‘நாமசூத்திரர்கள்’ என்ற இயக்கமாகத் திரண்டதும்,  வைகுண்ட சுவாமிகளின் அய்யாவழி, அய்யன்காளியின் சாது ஜன பரிபாலன சங்கம் ஆகியவை இல்லாமல் சீர்திருத்தங்கள் சாத்தியமாயிருக்குமா?

    எல்லாவற்றிற்கும் முன்னோடியாக இருந்த தமிழகத்தின் தனிப்பெரும் செயல்பாடுகள் சிறப்பானவை. சென்னை இலெளகிக சங்கத்தின் (Madras Secular Society) செயல்பாடுகள், அவர்கள் வெளியிட்ட ‘தத்துவ விவேசினி’ எனும் தமிழ் இதழ், ‘The Thinker’ என்ற ஆங்கில இதழ், அதில் வெளியான சிறப்பான கட்டுரைகள், இதன் துணை அமைப்பான மால்தூசியன் சங்கத்தில் பவுத்த அறிஞர் பொக்காலா லட்சுமி நரசு செயலாளராக இருந்துள்ளார். அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், ம.சிங்காரவேலர் போன்ற பலரது பங்களிப்பில் வங்காளத்தைவிட மேம்பட்ட பகுத்தறிவாத சிந்தனைக்கு சென்னை களமாக இருந்தது வரலாறு.

     இதன் தொடர்ச்சியாகவே ‘தென்னிந்திய நல உரிமை சங்கம் எனும் நீதிக்கட்சி’ மற்றும் அதன் பணிகள், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகள் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். மகாத்மா ஜோதிபா புலே, சாவித்திரிபா புலே, நீதிக்கட்சி, பெரியார் இல்லாமல் பெண்ணுரிமை எப்படி கிடைத்திருக்கும் என்பதை பாடநூல் குழுவினர் அறிவது அவசியம். இந்த வடபுலப் பாசிசப் பார்வையை அப்படியே காப்பியடிக்கும் முயற்சிகளிலிருந்து விடுபடுவது நல்லது.

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக