வியாழன், ஆகஸ்ட் 08, 2019

‘சொல்லப்படும், கூறப்படும், நம்பப்படும்’ வெறுங்கதைகள் – நம்பிக்கைகள் - புனைவுகள் வரலாறாகுமா?


‘சொல்லப்படும், கூறப்படும், நம்பப்படும்’  வெறுங்கதைகள் – நம்பிக்கைகள் - புனைவுகள் வரலாறாகுமா? 

 மு.சிவகுருநாதன் 

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 37) 

 

      
ஏழாம் வகுப்பு வரலாற்றுப்பகுதியில் ‘வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்’ என்றொரு பாடம் உள்ளது. இதன் ‘அறிமுகத்தில்’ கீழ்க்கண்ட வரி உள்ளது.

“ராஜபுத்திரர்களின் வீரதீரம், அஞ்சாமை குறித்த  கதைகள் ஏராளம் உள்ளன”. (பக்.137)
  
    தொடர்ந்து பாடத்தில் காணப்படும் சில வரிகளையும் கண்டு களிக்க.

“மேலைநாட்டவரும் அராபியர்களும் சதுரங்க விளையாட்டை இந்தியர்களிடமிருந்தே கற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது” (பக். 145)

“கஜினி மாமூது இந்தியாவின் மீது  சூறையாடலை நோக்கமாகக் கொண்ட திடீர் படையெடுப்புகளைப் பதினேழு  முறை நடத்தியதாகக் கூறப்படுகிறது”.  (பக். 146)

“மாமூது  மிகவும் புகழ்பெற்ற சோமநாதபுரம் கோவிலைக்  கொள்ளையடித்து அங்கிருந்த கடவுள்  சிலையை உடைத்ததாகவும் சொல்லப்படுகிறது”. (பக். 146)

       இவ்வாறு, ‘சொல்லப்படும், கூறப்படும், நம்பப்படும்’ கதையாடல்களைக் கொண்டுக் கட்டமைக்கப்படும் வரலாறு எத்தகையதாக இருக்கும்? இந்த வரலாறுகளின் வழி விதைக்கப்படுவது வெறுப்பரசியலே. இவற்றின் ஊடாக மத நல்லிணக்கம் பேசுவது சாத்தியமற்றது.


    “பதினொன்று மற்றும் பனிரெண்டாம் நூற்றாண்டுகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் கூட ஒட்டு மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது, ராஜபுத்திரர்கள் ஒன்றும் மிக அதிகமாக இருக்கவில்லை. ராஜபுத்திரர்கள் போரை ஒரு விளையாட்டுப் போட்டி போலக் கருதினார்கள். இதற்காகவும் மற்றும் நிலத்திற்காகவும் கால்நடைகளுக்காகவும் நடத்திய போராட்டம் பல்வேறு ராஜபுத்திர அரசுகளுக்கிடையே தொடர்ச்சியான போர்களுக்கு இட்டுச் சென்றது. தசராத் திருவிழாவைக் கொண்டாடி முடித்த கையோடு அண்மை நாட்டின் எல்லை மீது படை எடுப்பவரே இலட்சிய முறையான ஆட்சியாளராகக் கருதப்பட்டார். இக்கொள்கையால் கிராம மற்றும் நகர மக்கள் அனைவருமே துன்பப்பட்டனர்”. (பக்.86, மத்திய கால இந்திய வரலாறு, சதீஷ் சந்திரா, பாரதி புத்தகாலய வெளியீடு)

     இவ்வாறு குறைவான மக்கள் தொகை கொண்ட ராஜபுத்திரர்களுக்கு பெரும்படை எவ்வாறு சாத்தியமாயிற்று என்கிற கேள்வி எழுவது இயல்பானது. ராஜபுத்திரர்கள் அல்லாத ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் (Kuvarna) இவர்களது படையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இருப்பினும் இவர்கள் பிராமணர்களுக்கு சலுகைகள் அளித்தும் வருண அமைப்பைக் கட்டிக் காத்தனர் என்பதும் உண்மையே. இவர்களது வெற்றிகள் வெறும் இனக்குழு வீரதீரத்தால் மட்டும் பெற்றதல்ல; இவற்றுக்குப் பின்னால் பெரும் அடித்தட்டு மக்கள் திரள்கள் இருந்தன.

      இப்பாடத்தின்  ‘உங்களுக்குத் தெரியுமா?’ பகுதி பின்வரும் கதையை உரைக்கிறது.

      “பிருதிவிராஜ்  சௌகானின்  மறைவுக்குப் பின்  சில நூற்றாண்டுகள் கழிந்த பின்பு சந்த் பார்தை எனும் கவிஞர் ‘‘பிருதிவிராஜ ராசோ’’ எனும்  பெயரில் ஒரு நீண்ட காவியத்தை இயற்றினார். காவியம் கூறும்  கதை பின்வருமாறு : கன்னோஜின்  அரசனுடைய மகளுக்குத் திருமணம்  செய்ய வேண்டும். அவள் தனது  கணவனைத் தேர்வு செய்வதற்கெனச்  சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது.  ஏற்கெனவே பிருதிவிராஜனிடம்  காதல் வயப்பட்டிருந்த இளவரசி  அவரையே மணந்துகொள்ள விரும்பினாள். ஆனால் பிருதிவிராஜ்  அவள் தந்தையின் எதிரியாவார்.  பிருதிவிராஜை அவமானப்படுத்தும்  நோக்கத்தில் கன்னோஜின் அரசர் அவருக்கு அழைப்பு அனுப்பவில்லை.  மேலும் பிருதிவிராஜ் சௌகானைப்  போன்று ஒரு சிலை செய்து  தனது அரச சபையின் வாயிலில்  வாயிற்காப்போனைப் போல நிறுத்தி  வைத்தார். கூடியிருந்தோரெல்லாம்  அதிர்ச்சி அடையும் வண்ணம் இளவரசி அங்கிருந்த இளவரசர்களை மறுத்து பிருதிவிராஜின் சிலைக்கு  மாலையிட்டுத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினாள். சற்று  தொலைவில் மறைந்திருந்த  பிருதிவிராஜ் இளவரசியை அழைத்துக்கொண்டு குதிரையில்  தப்பினார். பின்னர் இருவரும்  திருமணம் செய்து கொண்டனர்”. (பக். 141)

      இம்மாதிரியான இலக்கியப் புனைவுகளை வரலாற்றில் நுழைக்க வேண்டிய தேவையென்ன? முன்பு பாடத்தினுள் வைக்கப்பட்ட இப்பகுதி இன்று ‘தெரிந்து கொள்க’வில் இணைக்கப்படுகிறது. இவ்வாறு புனைவுகளின் ஊடாகவே வரலாற்றைக் கட்டமைக்கின்றன நமது பாடநூல்கள்!

     “ஜெயச்சந்திர மன்னரின் மகள் சன்யோகிதா (Sanyogita) என்ற சம்யுக்தாவின் மீது கொண்ட காதலால் அவளைச் சிறை எடுத்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படும் கர்ணபரம்பரைக் கதை பல வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கவிஞர் சந்த்பர்தாயினால் (Chand Bardai) ஒரு காதல் கதையாக, வெகுகாலத்துக்கு பின்னால் எழுதப்பட்டதால், கவிஞர் சரியற்ற பல நிகழ்ச்சிகளை உட்படுத்தி எழுதியுள்ளார். நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி இந்த இரண்டு அரசுகளுக்கும் இடையே, நீண்ட காலப் பகை பாக்கியிருந்ததால், ஜெயச்சந்திரர் தள்ளி நின்றது ஒன்றும் வியப்பில்லை”. (பக். 92, மத்திய கால இந்திய வரலாறு, சதீஷ் சந்திரா)       ரக்ஷாபந்தன் (ராக்கி) எனும் பண்பாட்டு மரபானது ராஜபுத்திரர்களுக்கு உரியதாகும்.  'ரக்ஷா' எனில் பாதுகாப்பு என்றும், 'பந்தன்' என்பது கட்டுதல் அல்லது உறவு என்னும்  பொருளாகும். இது சகோதரத்துவத்தையும், அன்பையும் கொண்டாடும் விழாவாகும். ஒரு  பெண் ஒர் ஆடவனின் மணிக்கட்டில் ராக்கியைக் கட்டிவிட்டால் அப்பெண் அந்த ஆடவனை  சகோதரனாகக் கருதுகிறாள் என்று பொருள். அப்படியான ஆடவர்கள் அப்பெண்களைப்  பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர். 

     1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள்  பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார். அவ்விழாவில் இந்து மற்றும் முஸ்லீம்  பெண்கள் அடுத்த சமூகத்தைச் சேர்ந்த ஆடவர் கைகளில் ராக்கியைக் கட்டி அவர்களைச் சகோதரர்களாக ஏற்கவைத்தார். இந்து, முஸ்லீம்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த  ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக இச்செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது. (பக். 144)      வெறுப்பரசியலை விதைக்கும் பாடநூல்கள் இவ்வாறு மத நல்லிணக்கம் பேசுவது நகைப்பிற்கிடமானது. ராஜபுத்திரர்கள் உள்ளிட்ட பல்வேறு இந்துப் பிரிவினரும் டெல்லி சுல்தானிய அரசிலும் பின்னால் வந்த முகலாய அரசில் பங்கேற்று இணைந்தே செயல்பட்டனர் என்பதே வரலாற்று உண்மை. வரிக்குவரி ‘இஸ்லாமிய அரசு’ என்று சொல்பவர்கள் மறந்துவிடும், மறைக்கும் சங்கதி இது.  ‘ரக்ஷா பந்தன்’ நிகழ்வுகளுக்குப் பின்னால் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. இதை எப்படி ராஜபுத்திரர்களுக்கு மட்டும் உரிய பண்பாட்டு மரபாகக் கருதமுடியும்? போருக்குச் செல்லும் சகோதரன் திரும்பி வருவதற்குக் கட்டப்படும் கயிறு ‘ராக்கி’ என்றும் சொல்லப்படுகிறது. அன்றைய போர்க் களத்திற்கு ராஜபுத்திரர்கள் மட்டுமே சென்றதாகக் கூறமுடியுமா?

    ‘சிந்துவை அராபியர் கைப்பற்றியதும் அதன் தாக்கமும்’ எனும் தலைப்பிலான பெட்டிச்செய்தி,

          “கி.பி.(பொ.ஆ) 712ஆம் ஆண்டு உமையது அரசின் படைத்தளபதியான முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்தார். சிந்துவின் அரசர் தாகீர், முகமது பின் காசிமால் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். சிந்துவின் தலைநகர் அரோர் கைப்பற்றப்பட்டது. காசிம்  முல்தானையும் கைப்பற்றினார். சிந்துவில் நிர்வாக ஏற்பாடுகளைச் செய்தார். சிந்துப்பகுதிவாழ் மக்களுக்குப் ‘‘பாதுகாக்கப்பட்ட மக்கள்’’ எனும் தகுதி வழங்கப்பட்டது. மக்களின்  வாழ்க்கையிலும் அவர்களின் மதங்களிலும் எவ்விதத் தலையீடும் செய்யப்படவில்லை.  ஆனால் காசிம் வெகுவிரைவில் கலீஃபாவால் திரும்ப அழைக்கப்பட்டார்.  அராபிய அறிஞர்கள் சிந்துவிற்கு வந்து பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர். வானியல்,  தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பாகச் சமஸ்கிருத மொழியிலிருந்த பல நூல்களை அவர்கள் அராபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர். 0 முதல் 9 வரையிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர் அதுவரையிலும் மேலைநாட்டினர் பூஜ்யத்தின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. ஐரோப்பியர்கள் கணிதம் தொடர்பான அதிக அறிவை அராபியர் வாயிலாகப் பெற்றனர். பூஜ்யத்தின் முக்கியத்துவத்தை அவர்கள்  இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர்.  மேலைநாட்டவரும் அராபியர்களும் சதுரங்க விளையாட்டை இந்தியர்களிடமிருந்தே கற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது”. (பக். 145)
 
     ‘கஜினி மாமூது (கி.பி. (பொ.ஆ) 997 – 1030)’ பற்றிப் பாடநூலில் உள்ள தகவல்கள். 

      “கஜினி மாமூது இந்தியாவின் மீது  சூறையாடலை நோக்கமாகக் கொண்ட திடீர் படையெடுப்புகளைப் பதினேழு  முறை நடத்தியதாகக் கூறப்படுகிறது.  அக்காலக்கட்டத்தில் வட இந்தியா பல  சிற்றரசுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றுள்  ஒன்றான ஷாகி அரசு பஞ்சாப் முதல் காபூல்  வரை பரவியிருந்தது. கன்னோஜ், குஜராத்,  காஷ்மீர், நேபாளம், மாளவம், பந்தேல்கண்டு  ஆகியன ஏனைய முக்கிய அரசுகளாகும்.  ஷாகி அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளில் அதன் அரசர் ஜெயபாலர் 1001 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டார்.  இத்தோல்வியைப் பெருத்த அவமானமாகக்  கருதிய ஜெயபாலர் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார். அவருக்குப்பின்  வந்த ஆனந்தபாலர் மாமூதுக்கு எதிராகப்  போரிட்டார். 1008 ஆம் ஆண்டு பெஷாவருக்கு  அருகேயுள்ள வைகிந்த் எனுமிடத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டார். வைகிந்தில் பெற்ற வெற்றியின் விளைவாக மாமூது பஞ்சாப் வரை தனது ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்தினார்.

      இதனைத் தொடர்ந்து இந்தியாவின்  மீது அவர் மேற்கொண்ட படையெடுப்புகள்  வட இந்தியாவின் செல்வச் செழிப்புமிக்க கோவில்களையும் நகரங்களையும்  கொள்ளையடிப்பதையே நோக்கமாகக்  கொண்டிருந்தன. 1011இல் பஞ்சாபிலுள்ள நாகர்கோட், டெல்லிக்கு அருகேயுள்ள தானேஸ்வர் ஆகிய நகரங்கள் அவரால்  சூறையாடப்பட்டன. 1018ஆம் ஆண்டில் மாமூது புனித நகரமான மதுராவைக் கொள்ளையடித்தார்.  கன்னோஜையும் அவர் தாக்கினார்.  கன்னோஜின் அரசர் ராஜ்யபாலர் கன்னோஜைக் கைவிட்டுவிட்டு வெளியேறி  பின்னர் இயற்கை எய்தினார். மாமூது  பெரும் செல்வத்துடன் ஊர் திரும்பினார். அவருடைய அடுத்தப் படையெடுப்பு குஜராத்தின்  மீதானதாகும். கி.பி. 1024 இல் மாமூது  முல்தானிலிருந்து புறப்பட்டு ராஜபுதனத்தின் குறுக்கே படையெடுத்து வந்து சோலங்கி  அரசர் முதலாம் பீமதேவரைத் தோற்கடித்து  அன்கில்வாட் நகரைச் சூறையாடினார். மாமூது  மிகவும் புகழ்பெற்ற சோமநாதபுரம் கோவிலைக்   கொள்ளையடித்து அங்கிருந்த கடவுள்  சிலையை உடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.  இதன் பின்னர் சிந்து பாலைவனத்தின் வழியாக  அவர் நாடு திரும்பினார். இப்படையெடுப்பே இந்தியாவின் மீதான அவரின் இறுதிப்  படையெடுப்பாகும். கி.பி. 1030 இல் மாமூது  மரணமடைந்தார். கஜானாவியப் பேரரசு  தோராயமாக பாரசீகம்,  ஆக்ஸஸுக்கு அப்பால் உள்ள பகுதிகள், ஆப்கானிஸ்தான்,  பஞ்சாப் ஆகியவற்றை  உள்ளடக்கியதாக இருந்தது”. (பக். 146)


    இரண்டு ‘தரெய்ன் போர்கள்’ (1191 – 1192) குறித்த பத்திகள் கீழேத் தரப்படுகின்றன.

       “தாங்கள் அகப்பட்டுக்கொண்ட ஆபத்தான சூழலைப் புரிந்துகொண்ட வடஇந்திய  இந்து அரசர்கள் பிருதிவிராஜ் செளகானின்  தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கினர். நெருக்கடி நிலையைச்  சமாளிக்கும் ஆற்றல் கொண்டவராகப்  பிருதிவிராஜ் சௌகான் 1191 இல் டெல்லிக்கு  அருகே தரெய்ன் எனுமிடத்தில் நடைபெற்ற போரில் முகமது கோரியைத் தோற்கடித்தார்.  இப்போர் முதலாம் தரெய்ன் போர் என்று அழைக்கப்படுகிறது. இத்தோல்விக்குப் பழி வாங்கும் பொருட்டு முகமது கோரி தீவிரமான ஏற்பாடுகளை மேற்கொண்டு பெரும்படையைத்  திரட்டினார். தன்னுடைய பெரும்படையோடு  பெஷாவர், முல்தான் வழியாக லாகூரை வந்தடைந்தார். தன்னுடைய மேலாதிக்கத்தை அங்கீகரிக்குமாறும் ஒரு முஸ்லீமாக  மாறும்படியும் அவர் பிருதிவிராஜ் சௌகானுக்குச்  செய்தியனுப்பினார். அதனை மறுத்த  பிருதிவிராஜ் போருக்குத் தயாரானார். பல  இந்து அரசர்களும் குறுநிலத் தலைவர்களும்  அவருடன் அணிவகுத்தனர் 1192 இல்  நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில்  பிருதிவிராஜின் படைகளை முற்றிலுமாகத்  தோற்கடித்த முகமதுகோரி அவரைக் கைது  செய்து கொன்றார். 

        இரண்டாம் தரெய்ன் போர் ராஜபுத்திரர்களுக்குப்  பேரிழப்பை ஏற்படுத்திய போராகும். அவர்களின்  அரசியல் கௌரவம் பெரும் பின்னடைவைச்  சந்தித்தது. சௌகான் அரசு அப்போது  படையெடுத்து வந்தவரின் காலடியில் கிடந்தது.  இவ்வாறு இந்தியாவில் ஆஜ்மீரில் முதல்  இஸ்லாமிய அரசு உறுதியாக நிறுவப்பட்டது.  இந்திய வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கியது.  இரண்டாம் தரெய்ன் போரில் வெற்றி பெற்ற பின்னர் தனது நாட்டின் கிழக்கெல்லையில்  அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய துருக்கியரையும்  மங்கோலியரையும் எதிர்கொள்வதற்காக  முகமது கோரி கஜினிக்குத் திரும்பினார். கி.பி.  (பொ.ஆ) 1206 இல் முகமதுகோரி இயற்கை எய்தவே இந்தியாவிலிருந்த அவருடைய  திறமை வாய்ந்த தளபதி குத்புதீன் ஐபக்  முகமது கோரிக்குச் சொந்தமாயிருந்த  இந்தியப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டின்  கீழ்க் கொண்டுவந்த பின்னர் தன்னை ‘‘டெல்லியின் முதல் சுல்தான்’’ எனப்  பிரகடனப்படுத்திக்கொண்டார்”. (பக்.147)

     “1192 இல்  நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில்  பிருதிவிராஜின் படைகளை முற்றிலுமாகத்  தோற்கடித்த முகமதுகோரி அவரைக் கைது  செய்து கொன்றார்”.  (பக்.147) என்று சொல்வது சரியா? தோல்விக்குப் பிறகு சிலகாலம் ஆஜ்மீரை ஆள பிரிதிவிராஜ் அனுமதிக்கப்பட்டதும், பின்னாளில் சதிக் குற்றஞ்சாட்டி கொன்றதும் நடந்தது. சதீஷ் சந்திராவின் கீழ்க்கண்ட வரிகள் இதனை உணர்த்தும்.

     “இந்திய வீரர்கள் ஏராளமாக உயிர்விட்டனர். பிரிதிவிராஜர் தப்பினாலும் சரஸ்வதிக்கு அருகே (Sirasa) பிடிக்கப்பட்டார். துருக்கிப் படைகள். ஹன்சி (Hansi) சரஸ்வதி மற்றும் சமனா (Samana) கோட்டைகளைக் கைப்பற்றின. அடுத்து அவர்கள் ஆஜ்மீரைத் தாக்கிக் கைப்பற்றினர். இறுதியில் பிரிதிவிராஜர் ஆஜ்மீரைச் சில காலம் ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டார் என்பதை அக்காலத்தில் வெளியிடப் பட்ட நாணயங்களில் ஆண்டு என்ன என்பதைக் காட்டுவதோடு, ஒரு பக்கத்தில் ‘பிரிதிவிராஜ தேவா’ (Prithivirajadeva) என்றும், மறுபக்கத்தில் ஶ்ரீ முமது சாம் (Sri Muhammad Sam) என்றும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. (பக். 93, மத்திய கால இந்திய வரலாறு, சதீஷ் சந்திரா)      மூலாதார நூற்கள் பட்டியலில் சதீஷ் சந்திராவின் ‘மத்திய கால இந்திய வரலாறு’ இடம் பெறுகிறது. இதிலிருந்து எந்தக்கருத்துகள் பாடநூலில் எடுத்தாளப்பட்டுள்ளன என்பது விளங்கவில்லை. வெறுமனே போடும் பட்டியலாக இது இருக்கிறது. மேலும் வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பரின் ‘முற்கால இந்தியா’ நூல் பட்டியலில் உள்ளது. ‘சோமநாதர் – வரலாற்றின் பல குரல்கள்’ எனும் ரொமிலா தாப்பரின் நூல் (Somanatha: The many voice of a History, Penguin Books 2004)  மிக முக்கியமானது. சோமநாதபுரம் படையெடுப்பு குறித்த விரிவான ஆய்வை நமக்குத் தரும் நூலிது. தோழர் கமலாலயனின் மொழிபெயர்ப்பில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக தமிழில் கிடைக்கிறது. இவ்வாறாக ஆய்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் முகம் கொடுக்காமல்   ‘சொல்லப்படும், கூறப்படும், நம்பப்படும்’ கருத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு வரலாறு எழுதி, குழந்தைகளின் உள்ளங்களில் வெறுப்பை விதைப்பது தடுக்கப்பட வேண்டும்.

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக